நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 நவம்பர், 2019

காணாமல் போன தேசங்கள் - நிர்மல்

நிர்மல் அவர்களின் ‘ காணாமல் போன தேசங்கள்’ புத்தகம் குறித்து...

"இனக்குழுக்கள் உலகெங்கும் எல்லா சமூகங்களிலும் இருப்பதுதான். அதனால் இனக்குழு என்பது பிரச்சனை அல்ல. அரசியல் அதிகாரத்தின் மூலம் சில குறிப்பிட்ட இனக்குழுக்களுக்கு காட்டும் தனி முக்கியத்துவமும் மற்றவர்களை ஓரம் கட்டுவதுமே முக்கிய பிரச்சனை. அதிகாரத்தை வைத்து நில வளங்கள் மற்றும் வேலை வாய்ப்பை தங்களுக்குள் வைத்துக் கொண்டு சிலரை ஒதுக்குவதே இனக்குழு பிரச்சனையின் மூலம். இதுதான் பகை உணர்வுகளும் வன்முறைகளும் உருவாவதற்கு காரணங்கள்."
Geopolitics - politics, especially international relations, as influenced by geographical factors. புவியியல் காரணிகள் , சர்வதேச அளவில் பிற நாடுகளோடான உறவு, இவை சார்ந்த அரசியலே - புவியரசியல்.

‘காணாமல் போன தேசங்கள்’ -தலைப்பே விவரிப்பது போல, கால ஓட்டத்தில் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போன நாடுகள் குறித்தும் அந்தந்த நாடுகளின் அரசியல், மொழி, கலாச்சாரம், இனக்குழுக்கள் (Ethnic groups) , வாழ்வியல், சந்தித்த பிரச்சனைகள், பிற நாடுகளின் தலையீடுகள் குறித்தும் மிக விரிவாக பேசியிருக்கிறார்.

யூகோஸ்லாவியா தொடங்கி ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யா வரை காணாமல் போன இந்த தேசங்களின் வரலாறுகளை உற்று நோக்கினால் இனம், மொழி, மதம், அரசியல், கலாச்சாரம் என பல வேறுபாடுகளைக் கொண்டிருக்கிற நாடுகள், மொழியின் அடிப்படையிலோ மதத்தின் அடிப்படையிலோ, ஏதோவொரு ஒரு ஒற்றை அடையாளத்தின் கீழ் மக்களைத் திணிக்க முயல்வதே புரட்சியும் வன்முறையுமாய் சிதறிப் போக காரணமாக இருந்திருக்கிறது.

ஒவ்வொரு நாடுகளின் இடர்பாடுகள் உள்நாட்டுக் குழப்பங்கள் குறித்து வாசிக்கும்போதும் நம் நாட்டில் அதே மாதிரியான ஒரு நிகழ்வோடு அதனை ஒப்புநோக்கத் தோன்றுவதை தவிர்க்கவே முடியவில்லை. ஈழம், காஷ்மிர் என பலவற்றை நிர்மல் அவரே விரிவாக ஒப்பிட்டு பேசியிருக்கிறார். காலம் காலமாக நாம் சமூக அறிவியல் புத்தகங்களில் படித்துவந்த இந்திய நாட்டின் ’Unity in diversity - வேற்றுமையில் ஒற்றுமை’ என்கிற கோட்பாட்டின் நடைமுறைச் சாத்தியக் கூறுகள் குறித்தும் உண்மையான நிலை குறித்தும் நமக்கொரு தெளிவான புரிதல் கிடைக்கிறது. நிலவுடைமை, நிலப்பிரபுத்துவம், பண்ணை அடிமை முறை,தேசியவாதம், தனிப்பட்ட மனிதர்களின் அதிகார வெறியால் பாதிக்கப்பட்ட நாடுகள், இயற்கை வளங்களின் மேலாண்மை, மூன்றாம் உலக நாடுகளில் வல்லரசுகளின் சூழ்ச்சி விளையாட்டுகள், என அவ்வளவு தகவல்கள் புத்தகம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன.
For every Nationalism there will be a counter Nationalism. ஏனென்றால் தேசிய உணர்வு என்பது மிக எளிதில் மக்களை ஒன்றுபடுத்தக் கூடிய உணர்வு. அது மிக எளிதாக முன் பின் தெரியாத நபர்களை இணைக்கும், போராட வைக்கும்.... அந்த இணைப்பு சிலரையோ, பலரையோ தனிமைபடுத்தக் கூடும்.
திராவிட சித்தாந்தம் முன்வைக்கிற மாநில சுயாட்சி (State Autonomy), இறையாண்மை (Sovereign state) ஆகிய கொள்கைகளின் முக்கியத்துவம் பற்றி பேசுகிற அதே வேளையில் தேசியம் (Nationalism), இன அடையாளங்களை (Ethnic identity) பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பேசப்படுகிறது.
இறுதியாக ஒரு தேசம் அதன் மக்களிடையேயான இன/மத/மொழி/கலாச்சார வேறுபாடுகளுக்கு மதிப்பளித்து சுதந்திரமாக தன்னாட்சி செய்வதால் விளைகிற நன்மைகளையும் அதற்கு உதாரணமாக சுவிட்சர்லாந்தின் ஆட்சிமுறை/அரசியலமைப்பை சொல்வதோடு முடிகிறது.

த்ரில்லர் வகைக் கதைகளும்,திரைப்படத்தின் சுருக்கமான வடிவிலான கதைகளும், காதல் கதைகளுமாய் நிறைந்து கிடக்கிற இந்த #PenToPublish போட்டியில் இத்தனை தீவிரத்தன்மை வாய்ந்த ’புவியரசியல்’ (Geopolitics) பேசுகிற கட்டுரைத் தொகுப்பை எழுத முடிவு செய்ததற்கே தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்கள். புத்தகத்தின் கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும் reference புத்தகங்களின் பட்டியல் மட்டும் நான்கு பக்கங்களுக்கு நீள்கிறது. அத்தனை அசுரத்தனமான உழைப்பு & விவரணை. So far, this has been the most sincere effort which has been made for 2019 #PenToPublish contest.

தமிழ் இலக்கியப் பரப்பில் புனைவல்லாத படைப்புகளுக்கான இடம் பயணக் கட்டுரைகள், இலக்கியவாதிகளின் அனுபவக் கட்டுரைகள் என்கிற அளவில் பெரும்பான்மையாகவும்,  மாநில/தேசிய அரசியல், வரலாறு, அறிவியல் பேசுகிற புத்தகங்கள் ஓரளவும் புழக்கத்தில் இருக்கின்றன. அபுனைவின் முக்கியமான சிக்கல் அவற்றில் பெரும்பாலானவை கொண்டிருக்கிற ஆய்வுக்கட்டுரை மாதிரியான கடுமையான மொழியே. வளர்-இளம் பருவத்தினருக்கான (Teen & Young adults) எளிமையான மொழியைக் கொண்ட அபுனைவுகள் இல்லாத குறையை  , இந்தப் புத்தகம் போக்கும் என நிச்சயம் நம்புவோம்.மீண்டுமொரு முறை மனம்நிறைந்த  வாழ்த்துக்கள் நிர்மல்.வாய்ப்பும் நேரமும் அமைந்தால் தொடர்ந்து எழுதவும்...!

புத்தகம் ஆன்லைனில் வாங்க: இங்கு

புதன், 30 மே, 2018

மரணம் - Closure - மறத்தலும் கடத்தலும்



பொதுவாகவே யாருடைய மரணமும் அதீதமான பாதிப்பை ஏற்படுத்தும் எனக்கு. பைக் பயணம் தொடங்கிய நாள் முதல் சாலை விபத்துகளில் உயிரழந்தோர் குறித்தான செய்திகள் மிகையாய் பாதிக்கும்.சாலையில் உயிரிழந்தவர்களை அதுவும் இருசக்கர வாகனமென்றால் ரொம்பவே நெருக்கமாய் உணர்வேன். எந்த வண்டி ? யாருடைய தவறு ? எந்த சாலை ? விபத்தின் காரணிகள் என ? இந்த விபத்து எப்படி நிகழ்ந்திருக்கக் கூடும் ? எப்படித் தவர்த்திருக்கலாம் ? எனப் பலவாறாக யோசித்து மனம் ஒரு முடிவுக்கு வந்து ஆற்றுப்படும் வரையில் சிந்தனையும் செயலும் அளவுக்கதிகமாய் உழலும்.

எதிலும் கவனம் செலுத்த முடியாது. போலவே தற்கொலைகள் குறித்த செய்திகளும், உயிரிழந்தவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தையும் பதிவுகளைக் காண நேர்தலும் ஒரு துன்பியல் அனுபவம். இந்தப் புகைப்படத்தைப் பதிவிடும்போது தன் உயிரை மாய்த்துக் கொள்கிற எண்ணம் இவருக்கு இருந்திருக்குமா ? கடைசியாக யாரோடு பேச வேண்டுமென நினைத்திருப்பார் ? தன்னைச் சார்ந்தவர்கள் குறித்தான கவலை இருந்திருக்குமா ? எல்லா நம்பிக்கைகளுமே அற்றுப்போய் உயிரை மாய்த்துக் கொள்ளமுடிவு செய்யுமளவுக்கு என்ன பிரச்சனை இருந்திருக்க முடியும் ? நம் வாழ்க்கையில் ஏதோவொரு வகையில் குறுக்கிட்டிருந்து பேச நேர்ந்திருந்தால் என்னவென்று கேட்டறிந்திருக்கலாமோ ? இப்படி கேள்விச் சுழல் தொடரும்.

பொதுப் பிரச்சனைகள்; அரசியல் காரணங்கள்: சாதியின் பெயரால் நிகழ்த்தப்படுகிற வன்முறையால் உயிரிழந்தவர்கள்; இந்த ஒட்டுமொத்த அமைப்பின் குறைபாடுகளால் மரணத்தைத் தேர்ந்தெடுக்கிறவர்கள்;இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படியான மரணங்களும் துயரிலாழ்த்தி குற்றவுணர்ச்சியில் தள்ளும். I'll mourn with guilt over the grief of the lives lost even though I absolutely don't have any control over what has happened to the corresponding indivduals.

அனிதாவின் மரணச்செய்தியை அறிந்தபோது குடும்பத்தோடு குற்றாலத்திலிருந்தோம். தம்பி வெளிநாட்டிலிருந்து வந்திருந்ததால் திட்டமிட்ட பயணம் அது. அறையைவிட்டு அருவியில் இறங்க கொஞ்சமும் மனம் ஒப்பவில்லை. அதற்கு முந்தைய நாள்வரை குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களைக் கூட எங்கும் பகிரவில்லை. Guilt, helplesness and incapability..! எவ்வளவு தேடியும் சரியான காரணம் இன்னதென முடிவுக்குவர முடியவில்லை. அந்த closure கிடைக்கவேயில்லை. மறதியும் மற்ற வேலைகளின் ஊடாகவும் மட்டுமே அந்த மரணத்தை என்னால் கடக்க முடிந்தது.

தேனி தீவிபத்தின் போது மரணித்தவர்களில் ஒருவர் கூட நேரடியான அறிமுகம் இல்லை. ஆனாலும் அத்தனை மன அழுத்தத்தில் தள்ளியது அந்த மரணம். மீண்டும் அதே கேள்விகள். தேடல். ஒவ்வொருவரின் பெயரும் அவர்கள் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் (புது மணத்தம்பதிகள் etc), அவர்கள் பயணித்த பாதை; காட்டுத்தீ பரவியிருக்கக் கூடிய சாத்தியங்கள்; அது இதுவென மனம் ஆற்றுப்பட ஏதோவொரு காரணத்தை தொடர்ந்து தேடிக்கொண்டேயிருந்தது. பழிசுமத்தவும், கைகாட்டவும், ஏதோவொன்றைத் தேடிப் பற்றி பாரமிரக்கிவிட்டு தப்பித்தோடுகிறது பாழ்மனம். ஓஹ் இதனாலதான் இப்படியாச்சு..இல்லன்னா கண்டிப்பா தப்பிச்சுருக்கலாம் என பொய்யாகவேனும் உச்சுக்கொட்டி மறந்துதான்..மறைத்துதான் கடக்கவேண்டியிருந்தது.

இப்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொலைச்சம்பவம்...! அதில் கொல்லப்பட்டவர்கள். அவர்களின் பெயர்கள்; புகைப்படங்கள்; குடும்பத்தாரின் அரற்றல்கள்; அரசாங்கத்தை நோக்கி அவர்கள் எழுப்புகிற கேள்விகள். இன்னும் முழுதாக அதிலிருந்து மீளவில்லை. இறந்தவர்களின் எண்ணிக்கை நமக்குச் சொல்லப்படுகின்றது; இந்த கொலைச்சம்பவத்தின் பின்னணியிலிருந்தவர்கள் பற்றிய விவாதங்கள் நிகழ்கின்றன. எல்லா திசையிலிருந்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

அரசாங்கம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அறிவிக்கின்றது. நான் உட்பட எல்லோருக்குமே ஒரு தற்காலிக closure கிடைத்துவிடுகின்றது. ஐபிஎல்’லோ,அடுத்து வெளிவரும் திரைப்படமோ, ஏதோவொன்று மொத்தமாய் கவனம் திருப்பி நம்மை மடைமாற்றிவிடக்கூடும்.
ஆனால்...தொக்கி நிற்கிற மரணங்களையும் பறிக்கப்பட்ட உயிர்களுக்கான நியாயத்தையும் யார் கேட்பார்கள் ? என்னவாகும் அந்த உயிர்கள் ? What is the least I could do ? Forget and Move on ?

எப்போதுமே மேற்சொன்ன மாதிரியான எந்தவொரு நிகழ்வின் போதும் உடனடியாக அதைப் பற்றிய செய்திகளையோ என்னுடைய கருத்தையோ பகிராமல் பேசாமல் கடக்க முயல்வேன். உடனடி எதிர்வினை பெரும்பாலும் emotional outburstஆக மட்டுமே இருக்குமென்பதாலும், உணர்ச்சிவயப்பட்ட மனநிலையில் அடிப்படை அறவுணர்வு மறையக்கூடுமென்பதாலுமே அந்த அழுத்தமான மெளனம். முடிந்தவரையில் அறத்தோடு தர்க்கம் பேசி பிரச்சனை குறித்து எழுதப்படுகிற, என் அலைவரிசைக்கு ஒத்துப் போகிற கருத்துகளை பகிர்வதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாய் மன அழுத்தத்திலிருந்து தப்பித்துக்கொள்ளக் கூடும்.

எதுவும் கையாலாகாதபோது இப்படி மனம்போனபடி எழுதித் தப்பித்துக்கொள்ளலாம். இந்த எல்லா பிரச்சனைகளைக் குறித்தும் தர்க்க நியாயங்களோட எழுதப்படுகிற கட்டுரைகளைப் படித்தும், என் அன்றாட வேலைகளில் எல்லாவற்றையும் மறந்தும் கடந்து போகலாம்.

ஆனாலும்... 


ஹேராம் திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு. சாகேத் ராம் தன்னுடைய இரண்டாவது திருமணத்துக்குப் பின் மறுபடியும் கல்கத்தா வருவான். தான் அபர்ணாவோடு வாழ்ந்த வீட்டைப் பார்த்துவிட்டு அங்கிருந்து அவள் வரைந்த காளி ஓவியத்தை எடுத்துக்கொண்டு கையில் வைத்தபடி சாலையில் நடந்து வருவான். அப்போது ஒரு கூட்டம் சுரவர்த்தி (அப்போதைய கல்கத்தா ப்ரீமியர்/கவர்னர்) ஒழிக என்று கோஷம் போட்டபடி நகரும். சாகேத்ராமையும் தங்களோடு இழுத்துக் கொண்டு ஒரு கட்டடத்தின் முன் சென்று நிற்பார்கள். மாடியிலிருந்து ஜன்னல் கதவைத் திறந்து கொண்டு மகாத்மா காந்தி தோன்றுவார்; கூடவே கவர்னர் சுஹ்ராவர்த்தியும். கவர்னரைக் கண்டதும் சாகேத்ராம் வெகுண்டெழுந்து அவரை நோக்கி “ Were you not responsible for the killings in Calcutta and Bengal last year ?" என்று கேள்வியெழுப்ப, "We all are responsible",என மழுப்பலாக பதில் சொல்லுவார். 

அந்த பதிலில் சமாதானமடையாமல் சாகேத்ராமன் , “ No please, please answer the question. Were you not responsible as the premier of this state ? Were you not directly responsible for making murderers out of ordinary men ?" என குரல் உரக்க, கூட்டமும் அவனோடு சேர்ந்து கொண்டு சுஹ்ராவர்த்தியை பதில் சொல்ல வற்புறுத்தும். கவர்னர் கொஞ்சம் திகைத்து, “Yes. It was my responsibility. And... I was responsible" என தன் தோல்வியை ஒப்புக்கொண்டு தலைகுனிய, உடனே சமாதானமடைகிற கூட்டம் கைதட்டி வாழ்க கோஷம் போட்டு ஆர்ப்பரிக்கத் தொடங்குகிறது. இப்போது சாகேத்ராம் இந்தக் கூட்டம் இவ்வளவு எளிதாக புத்தியை மாற்றிக்கொள்வதைக் கண்டு திகைத்துப் போய் கோபமாக வெளியேறுவான். 

சாகேத்ராம் திரும்பும் வழியில் நீண்டகாலத்துக்குப் பின் எதிர்பாராதவிதமாக எதிர்படும்  நண்பன் அப்யங்கர் மக்களின் இந்த மனப்போக்கைக் குறித்து காந்தியின் மீதான நம்பிக்கை குறித்தும் பேசும்போது சொல்லுவான், "இந்த ஜனங்களுக்கு ஞாபகசக்தியே கெடையாது. உனக்கும் எனக்கும் மட்டுந்தான்”

கிட்டத்தட்ட சாகேத்ராமனின் அப்போதைய மனநிலைதான் எனக்கும்.

I didn't get my closure yet or I'm still feeling guilty about the loss of lives. மறுபடியும் கேட்கிறேன்.

What is the least I could do? Forget and Move on?

ஞாயிறு, 8 ஜூலை, 2012

War Of The Ring - மின்புத்தகம் - விஸ்வரூபம்...!!!


 பொதுவாக  ஃபாண்டஸி (fantasy) எனப்படும் கற்பனைக் கதைகள் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. நிஜ உலகில் சாத்தியப்படாத நிகழ வாய்ப்பே இல்லாத... பல விஷயங்கள்,கற்பனையான பல வகை மனிதர்கள்,விலங்கினங்கள்.கடவுள்கள்,தேவதைகள்,பூதங்கள்... இப்படி எல்லையே இல்லாமல் பறந்து விரிந்து கிடப்பது இந்த கற்பனை/மாய உலகங்கள்... இவ்வாறான உலகங்களையும் மக்களையும் பற்றிய விந்தை கதைகளை முதலில் நமக்கு வரலாறுகளும்..புராணக்கதைகளும் சொல்லி வந்தன.. பின் காலமாற்றத்தில்.. நாம் கதைகளில் படித்து கற்பனை செய்தவற்றையெல்லாம் தொழில்நுட்பத்தின் உதவியோடு திரையில் உயிர் கொடுத்து உலவ விட ஆரம்பித்தனர்..!! ஆங்கிலத் திரைப்படங்களைப் பொறுத்தவரையில் அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களில் பல உயரங்களைத் தொட்டவர்கள் ஆதலால் மிகச் சிறந்த  ஃபாண்டஸி திரைப்படங்களை இந்த உலகுக்கு அவர்களால் தர முடிந்தது...!! 

ஸ்டார் வார்ஸ் தொடங்கி லார்ட் ஆப் த ரிங்க்ஸ், நார்னியா, ஹாரி பாட்டர்,பேட்மேன்,சூப்பர் மேன்,ஸ்பைடர் மேன், அவதார் வரை உச்சபட்ச தொழில்நுட்பத்தின் துணையோடு ஹாக்வார்ட்ஸ்,பண்டோரா,மிடில் எர்த் என பலவேறு மாய/கற்பனை உலகங்களையும்...அவற்றின் அதிசய உயிரினங்களையும்...அந்த உலகத்து நாயகர்களின் சாகசங்களையும் திரைப்படங்களில் பார்த்து மகிழ்ந்து வந்திருக்கின்றோம். திரைப்படங்களின் உருவாக்கத்திற்குப் பின்னாலுள்ள அறிவியல் புரியாத வயதில் அவற்றைப் பார்த்து ஏற்பட்ட பிரமிப்பை விட பல மடங்கு அதிகமான ஆச்சரியமும் பிரமிப்பும் அந்த திரைப்படங்களின் உருவாக்கத்திற்கு பின்னணியில் உள்ள உழைப்பையும் கஷ்டங்களையும் அறிந்துகொள்ளும்போது ஏற்பட்டது. 

இப்படியான ஒரு  ஃபாண்டஸி திரைப்பட தொடரை எடுத்துக்கொண்டு அந்த திரைப்படத்திற்கான கதை முதன் முதலில் புத்தகமாக உருவானது தொடங்கி, அதிலுள்ள பாத்திரங்கள், கதை நிகழ்கின்ற உலகம், காலம், அந்த கற்பனை உலகின் மக்கள் பேசுகின்ற மொழி, அவர்களுக்கு இடையேயான உள்நாட்டு பிரச்சனைகள்,அந்தந்த நாடுகளின் வரலாறுகள், இத்தனையையும் சொல்லி இவையெல்லாவற்றையும் மூன்று பாகங்கள் கொண்ட ஒரு திரைப்படத்தினுள் அடக்கி திரையில் கொண்டு வர படக்குழுவினர் பட்ட கஷ்டங்கள் ,படத்துக்காக அமைக்கப்பட்ட செட்கள்,  புதுமையான கேமரா டெக்னிக்ஸ், ஸ்பெஷல் எபெக்ட்கள், படப் பிடிப்பின்போது படக்குழுவினர் எதிர்கொண்ட சவால்கள், எடிட்டிங் உத்திகள்,ஆடையலங்கார வடிவமைப்புகள்,நடிகர்களைத் தேர்வு செய்த விதம்,பின்னணி இசையின் உருவாக்கம்..இப்படி ஆதி முதல் அந்தம்  வரை அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்து ஒரு புத்தகம் வந்தால் எப்படி இருக்கும்...?? 

அந்த Cast & Crew வோடு மொத்தமாக பயணித்த ஒரு உணர்வைத் தருமல்லவா...??

அப்படித்தான் இருந்தது எனக்கு நண்பர் கருந்தேள் ராஜேஷ் எழுதி ஹாலிவுட் பாலா மற்றும் கொழந்த கணேஷ் அவர்களின் வடிவமைப்பில் வெளிவந்திருக்கின்ற  வார் ஆப் த ரிங் (War of the Ring) மின்புத்தகத்தை படித்தபோது.ராஜேஷ் முதன் முதலில் தமிழில் பதிவெழுத ஆரம்பித்தலிருந்து அவரது தளத்தின் அத்தனை கட்டுரைகளையும் படித்து வந்திருக்கின்றேன்.சின்னதாய் ஒரு விஷயம் சொன்னாலும் அதற்கு பின்னால் ஒரு உழைப்பும், ஹோம்வொர்க்கும் கட்டாயம்  இருக்கும்.ஹாலிவுட் பாலா வின் fx மற்றும் பிக்ஸார் ஸ்டோரி படித்தவர்களுக்கு அவரைப்பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.  LOTR சீரிஸ் பற்றி ராஜேஷ் எழுதத் தொடங்கியபோது  அந்த சீரிஸின் ஒரு திரைப்படத்தையும் நான் பார்த்திருக்கவில்லை...படத்தைப் பற்றியும் எதுவும் தெரியாது..!!நான் ஹாரி பாட்டர் விரும்பி ஆதலால் LOTR சீரிசை தொடர்ந்து படிக்கவுமில்லை. ஆனால் LOTR மின்புத்தகம் பற்றிய ராஜேஷின் அப்டேட்டுகள் ஆர்வத்தைத் தூண்ட ஆரம்பித்தன. ஒரு வழியாக மின்புத்தகம் நிறைவடைந்து வெளிவந்த பொழுது ஒரு பெரிய நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதற்கு ஈடான ஆர்வத்தோடு படிக்கத்தொடங்கினேன். முழுமையாக படித்து முடிக்க எனக்கு 15 நாட்கள் தேவைப்பட்டன. 

பின்னே... லார்ட் ஆப் த ரிங்க்ஸ் புத்தகங்களை எழுதியவரான டோல்கீன் (Sir.JRR.Tolkien) மற்றும் LOTR திரைத் தொடரின் இயக்குனர் பீட்டர் ஜாக்சன் (Peter Jackson)ஆகியோர் அளித்த நூறு சதவீத உழைப்பில் ராஜேஷும், பாலா,கொழந்த குழுவினரும் ஐம்பது சதவிகித உழைப்பை இந்த மின் புத்தகத்திற்கான உருவாக்கத்திலும் தகவல் சேகரிப்பிலும் அளித்திரும்போது அந்த புத்தகத்தை படிக்கும் நான் ஒரு ஐந்து சதவிகித உழைப்பையாவது தருவது தான் இவர்களுக்கு நான் தரக் கூடிய மரியாதையாக இருக்கும். LOTR சீரிஸின் மூன்று திரைப்படங்களின் எக்ஸ்டெண்டட் வெர்ஷன்களையும் தரவிறக்கி பார்த்துவிட்டு, பின்னணி இசைக் கோர்ப்புகளை முழுவதும் கேட்டுவிட்டு மின்புத்தகத்தை மீண்டுமொரு முறை மேய்ந்துவிட்டே இந்த பதிவினை எழுதிக்கொண்டிருக்கின்றேன். 
'War of The Ring' மின்புத்தகத்தை  உருவாக்கியவர்கள்

Rajesh and JRR.Tolkien
Hollywood Bala and Peter Jackson
என்ன சொல்ல...!! எந்தவொரு வணிக நோக்கமுமில்லாமல் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு கிட்டத்தட்ட Lord Of The Rings-க்கான ஒரு தமிழ் என்சைக்ளோபீடியாவை உருவாக்கியிருக்கின்றார்கள்...!! ஒரு முழுமையான Making of LOTR வீடியோ பார்த்த திருப்தியை அளித்தது இந்த வார் ஆப் த ரிங்ஸ் மின்புத்தகம்...!! ராஜேஷ் மற்றும் பாலா அண்ட் கோவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்...!! :) :)

வார் ஆப் த ரிங்  (War of the Ring) மின்-புத்தகத்தை தரவிறக்க  இங்கே கிளிக்கவும்..!!   
கருந்தேள் ராஜேஷ் அவர்களின் தளம் இங்கு..!!

Image Courtesy: Original Uploaders

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

மருத்துவக்காப்பீடு - இந்தியாவுக்கு சரி வருமா


சமீபத்தில் எனது பணி நிமித்தமாக அமெரிக்க மருத்துவக்காப்பீட்டுத் திட்டங்கள் பற்றியும், தனி நபர் மருத்துவக்காப்பீட்டின் செயல்பாடுகளையும், அது தொடர்பான
அமெரிக்க அரசின் சட்டங்களையும் பற்றி படிக்க நேர்ந்தது....

  ஒவ்வொரு குடிமகனும் ஏதேனும் ஒரு மருத்துவக்காப்பீட்டுத்  திட்டத்தின் கீழ் காப்பீடு  செய்யப்பட்டிருக்கின்றார்கள்.ஆக நாட்டின் ஒட்டுமொத்த மருத்துவத்துறையும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களை சார்ந்தே இருக்கின்றது.அங்கு அவர்கள் மருத்துவர்களை அணுகும் முறையும் வித்தியாசமானது.

 நம் நாட்டைப்போல் உடல் நிலை சரி இல்லை  என்றால் நேரடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற முடியாது. PCP (Primary Care Physician) எனப்படும் முதன்மை மருத்துவ ஆலோசகரிடம் சென்று தங்கள் தற்போதைய உடல் கோளாறை பரிசோதித்து, அவரின் பரிந்துரையின்படியே மேற்கொண்டு சிறப்பு மருத்துவ நிபுணர்களிடம் செல்வதா அல்லது நேரடியாக சிகிச்சை பெற்றால் மட்டும் போதுமா என முடிவு செய்யப்படுகிறது.

இதில் முதலில் நோயாளி சந்திக்கின்ற PCP - இடம்  மட்டும் ஒரு பொதுவான Consulting Fees ஐ செலுத்துகின்றார்கள். மேற்கொண்டு செய்யப்படும் சிகிச்சைக்கு ஆகும் செலவினை இவர்கள் காப்பீடு  செய்திருக்கின்ற திட்டத்தின் கீழ் (நிபந்தனைகளுக்கு உட்பட்டு) காப்பீட்டு நிறுவனம் ஏற்கிறது.இப்போது சிகிச்சை அளிக்கும் மருத்துவர் எப்படி முழு சிகிச்சைக்கு ஆகும் செலவினை பெறுவார். நோயாளிக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிகிச்சைக்கான முழு ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திடம் செலுத்தி செலவான தொகையை திரும்பப்பெறுகிறார் (Re-Imbursement)

. இந்த முறைக்கு ஏகப்பட்ட சட்டதிட்டங்களும், அரசு நிபந்தனைகளும் உள்ளன.அவற்றுள் முக்கியமானது HIPAA எனப்படும் Health Insurance Portability and Accountability Act. சாதாரண குடிமக்கள் அன்றி ஆதரவற்றோர், முதியோர்,பெற்றோரில்லாத பன்னிரண்டு வயதிற்குட்பட்ட சிறார்கள் ஆகிய சிலருக்கான  மாத தவணைத்தொகையை (Premium) அரசாங்கம் செலுத்துகின்றது.இந்த முழு இயக்கத்தையும் படித்த பிறகு என்னுள்ளே நிறைய கேள்விகள் எழுந்தன.நம் நாட்டில் இப்போதுதான் ஓரளவு செயல்படுத்த ஆரம்பித்திருக்கும் திட்டம் எந்தளவுக்கு வெற்றி பெறும்.(இன்னொரு சந்தேகம் தமிழ் நாட்டில் செயல்படத்தொடங்கியிருக்கும் கலைஞர் காப்பீட்டுத்திட்டம் மத்திய அரசுடையதா அல்லது மாநில அரசின் திட்டமா..? தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தவும்)

 அப்படி நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் ஏதேனும் ஒரு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டால் வறுமைக்கோட்டிற்கு கீழ் (சராசரி ஆண்டு வருமானம் ஐம்பதாயிரத்திற்கும் குறைவாக உள்ள) மக்களுக்கான தவணைத்தொகையை அரசாங்கம் செலுத்துமா? அவர்கள் இலவச மருத்துவ உதவி பெறுவதற்கான வழி செய்யுமா? ஒருவேளை அவ்வாறு நாட்டின் மொத்த மக்கள் தொகையும் தனியார் நிறுவனங்களினால் காப்பீடு செய்யப்படுவதால் ஒட்டுமொத்த அரசாங்கமும், நாட்டின் பொருளாதாரமும் தனியார் நிறுவனகளின் பிடிக்குள் போய் விடாதா? இப்படி அரசாங்கத்துடன் இணைந்து பொதுமக்களுக்கான மருத்துவக்காப்பீட்டுத் திட்டங்கள் வழங்குவதன்மூலம் தனியார் நிறுவனங்கள் அடையும் ஆதாயங்கள் என்னென்ன...? இனி பதிவுலக விவாதங்களில் இந்த கேள்விகளுக்கான விடை கிடைக்குமென நம்புகின்றேன்...

மறக்காமல் உங்கள் கருத்துகளை பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்...
நன்றி
Related Posts Plugin for WordPress, Blogger...