//எல்லா வேட்டைகளின் முடிவையும் காடுதான் தீர்மானிக்கிறது -லஷ்மி சரவணகுமார், பன்றி வேட்டை//
//A peculiar virtue in wildlife ethics is that the hunter ordinarily has no gallery to applaud or disapprove of his conduct. Whatever his acts, they are dictated by his own conscience, rather than by a mob of onlookers. It is difficult to exaggerate the importance of this fact." - Aldo Leopold//
வேட்டை எனும் சொல், காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்றவாறு முற்றிலும் வேறுவேறான பொருளைத் தரக்கூடியது. ஒரு வேட்டையில் கொல்லும் விலங்கு ஒன்றும் இரையாகும் விலங்கு ஒன்றுமாக இருக்கலாம். ஒரு வேட்டைக்காரனும் ஒரு கொல்லும் விலங்கும் இருக்கலாம். ஒரு வேட்டைக்காரனும் ஒரு இரையாகும் விலங்கும் இருக்கலாம். அந்த வேட்டைக்கான காரணமும் அதில் பங்கெடுத்துக் கொள்கிறவற்றின் / வர்களின் தேவைக்கேற்ப மாறுபடலாம். ஆனால் அந்த வேட்டையின் முடிவென்பதை காடே தீர்மானிக்கிறது.
லஷ்மி சரவணகுமாரின் பன்றி வேட்டை நாவலும் அப்படியொரு வேட்டையைச் சுற்றி பின்னப்பட்ட கதைதான். 1970களில் மதுரையைச் சுற்றி அமைந்திருக்கிற மேற்குத்தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகளில், நூறாண்டுகளாக அதிகாரம் செலுத்தி வரும் ஒரு ஜமீன் குடும்பத்தினரால் தங்கள் வாழ்வையும் அமைதியையும், தெய்வத்தையும் (!) இழந்து தவிக்கும் பளியர் இன மலைவாழ் பழங்குடி மக்களின் போராட்டமே இந்த நாவல். எப்பேற்பட்ட கரடியையும், யானையையும் தன் துப்பாக்கியால் வேட்டையாடிய ஜமீன்தார் ஒரு காட்டுபன்றியை வேட்டையாட நினைக்கும் போது காயப்பட்டுப் போகிறார்.
உடலில் பட்ட காயம் தாண்டி அவருடைய மனமும் ,ஆணவமும் காயப்பட்டுவிட ,உடல்நிலை சரியானதும் இன்னும் உக்கிரமாக அதே வேட்டையினை வெற்றிகரமாக முடித்துவிட முயற்சி செய்கிறார். உண்மையில் அவரால் அந்த வேட்டையை தான் நினைத்தபடி முடிக்க முடிந்ததா என்பதே மீதிக்கதை.
லஷ்மியின் முந்தைய படைப்புகளில் காணப்படும் தந்தை-மகனுக்கு இடையேயான அகங்கார மோதல் இந்த நாவலிலும் உண்டு. இந்தக் கதையில் வேட்டைத்துப்பாக்கியே அதிகாரத்தின் சின்னமாகத் தோன்றுகிறது. அப்பாவின் துப்பாக்கிக்கு மகன் ஆசைப்பட, மகனாகவே இருந்தாலும் “அந்தத் துப்பாக்கியைத் தொட உனக்குத் தகுதி இல்லை” என நிராகரிக்கிற வீரணன். அந்த இடத்தில் தொடங்கி ஜமீன்தார் வீரணனுக்கும் அவருடைய மகன் கண்ணனுக்கும் இடையில் தொடரும் அந்த மோதல் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. மேலும் காடு சார்ந்த வர்ணனைகளும், வேட்டை முறை பற்றிய, பளியர் இன மக்களில் வாழ்வியல், வழிபாடுகள் குறித்தான வர்ணனைகளுமே சிலிர்ப்பூட்டுபவையாக இருந்தன.
என்னுடைய வருத்தம் கதையின் ஒரு பகுதியாக இது மிகச்சிறப்பாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக ரொம்பவும் மேலோட்டமாக எழுதப்பட்டிருப்பதாகவே தோன்றியது. கிட்டத்தட்ட இதே மாதிரியான களத்தில் எழுதப்பட்ட கானகன் நாவலுடன் தன்னியல்பாக என் மனம் நிகழ்த்தும் ஒப்பீடு காரணமாக இருக்கலாம். அல்லது முதலில் திரைக்கதையாக எழுதப்பட்டு பின்பு நாவலாக மாற்றப்பட்டதாக ஆசிரியரே குறிப்பிட்டிருப்பதால் இந்த வடிவம் வந்திருக்கலாம் என்றும் தோன்றியது. உண்மையில் இந்நாவல் வலைத்தொடராகவோ திரைப்படமாகவோ உருப்பெற்றால் காந்தாரா போலவோ அல்லது ’ஏகம்’ போலவோ காட்சிகளால் நம்மைக் கட்டிப்போடலாம்.
ஒரு ஜமீன்தார் கதையென்றால் தேய்வழக்காக என்னவெல்லாம் இருக்கும் என நீங்கள் நினைப்பீர்களோ அத்தனையும் உண்டு. ஊர்மக்களுக்கு கொடுமை இழைத்தல், அதிகார வெறி, பெண்களை மானபங்கப் படுத்துதல், செல்வத்தின் மீதான நிலத்தின் மீதான பேராசை, ஒரு சாபம், பெண் மோகத்தால் அழிதல், அடிமைப்படுத்தப்பட்டவர்கள் வெகுண்டெழுந்து புரட்சி செய்தல் என அத்தனையும் உண்டு. இதில் பெரும்பாலான திருப்பங்கள் யூகித்துவிடக் கூடியதாக இருப்பதால் சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது.
கானகன் நாவல் வாசித்தபோதே படித்திருந்தாலும் இப்போது இந்த நாவல் குறித்து எழுதும்பொருட்டு பளியர் இன மக்களைப் பற்றி தேடிப் படிக்கையில் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. உண்மையில் மலைவாழ் பழங்குடியின மக்களான பளியர் இனத்தாரின் வாழ்வு மிகத் துயரமானது . காலம்காலமாக மலைகளையும் காடுகளையும் தங்களின் வாழ்வாதரத்துக்காக நம்பியிருந்த மக்கள், அரசால் சமவெளிகளுக்குத் தள்ளப்பட்டு அவர்களுக்கு பரிச்சயமில்லாத புதியதொரு வாழ்வினை வாழப் பணிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த நாவல் 60 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்கிற கதையென்றாலும் இப்போதும் அவர்களின் வாழ்வில் பெரிய மாற்றங்களில்லை. பொடவு எனப்படும் மலை இடுக்குகளிலும் குகைகளிலும் வாழ்ந்த இவர்களுக்கு அரசாங்கம் குடியிருப்பு வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தந்திருந்தாலும் நிரந்தரமாக அவர்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தக்கூடிய கல்வியையும், பணி வாய்ப்பையும் கூட ஏற்படுத்தித் தரும் என நம்புவோம்
பளியர் இன வாழ்வியலையும் , வழக்கங்களையும், இயற்கைக்கும் அவர்களுக்குமான பிணைப்பினையும் பதிவு செய்த வகையில் ‘பன்றி வேட்டை’ நாவலை வாசிக்க வேண்டிய படைப்பாகக் கருதலாம். போலவே லஷ்மியின் முந்தைய படைப்புகளை வாசித்திராத புதிய வாசகர்களுக்கு ‘ரூஹ்’ நாவலும், ‘பன்றி வேட்டை’யும் நல்லதொரு தொடக்கப் புள்ளியாக இருக்கும்.
பன்றி வேட்டை , எழுத்து பிரசுரம் , 170 பக்கங்கள், ரூ.220

கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக