சனி, 21 ஜனவரி, 2012

Warrior (2011) - ஹாலிவுட் திரைப்படம் - உயிர்வாழ்வதற்கான சண்டை




2012-இல் நான் பார்த்த முதல் ஆங்கிலத் திரைப்படம் ‘Warrior’. IMDB - இல் வழக்கம்போல துழாவிக்கொண்டிருந்தபோது இந்த திரைப்படத்தின் பெயர் கண்ணில் பட்டது.எப்போதும் பார்க்கவேண்டிய ஹாலிவுட் திரைப்படங்களை அதன் இயக்குனரை வைத்தோ அல்லது அதில் நடித்த நடிகர் – நடிகைகளை வைத்தோ தான் தேர்வு செய்வது வழக்கம்.ஆனால் போஸ்டரையும் படத்தின் பெயரையும் பார்த்துவிட்டு எதோ பாக்சிங்/ஆக்‌ஷன் கதை போல என நினைத்து தான் தரவிரக்கினேன். சத்தியமாக இப்படி ஒரு அருமையான அனுபவத்தை இந்த படம் தரப் போகின்றது என நான் நினைக்கவில்லை.

 ஒரு முதியவர் சர்ச்சிலிருந்து வெளிவந்து தன்னுடைய காரில் ஏறுவதில் தொடங்குகின்றது படம். முதியவர் காரில் தன் வீட்டு வாசலில் வந்து இறங்கும்போது அங்கு அவருக்காக ஒரு இளைஞன் காத்துக்கொண்டு இருக்கின்றான். முதியவர் அவ்விளைஞனின் வருகையைக் கண்டு ஆச்சரியம் அடைகின்றார். அதன் பின் அவர்கள் இருவரிடையே நிகழ்கின்ற உரையாடலின் வாயிலாக அந்த முதியவரின் பெயர் பேடி கான்லான் (Paddy Conlon) எனவும் வந்திருக்கும் இளைஞன் டாமி (Tommy Conlon) அவரது மகன் எனவும் நீண்ட நாட்களுக்குப் பின் அவன் தன் தந்தையை சந்திக்க வந்திருப்பதும் நமக்கு புரிகின்றது.

அந்த பகுதியில் உள்ள ஒரு உடற்பயிற்சிக்கூடத்திற்குச் செல்லும் டாமி அங்கு ஸ்பார்ட்டா’ (Sparta) எனப்படும் ஒரு மிகப்பெரிய மிக்சட் மார்ஷியல் ஆர்ட்ஸ்( Mixed Martial Arts - MMA) குத்துச்சண்டை போட்டிக்காக பயிற்சி செய்யும் ‘மேட் டாக்’ (Mad Dog) என்ற மிடில் வெயிட் சாம்பியனோடு பயிற்சிக்காக சண்டையிட நேர்கின்றது. டாமி 'மேட் டாக்' – ஐ சில நிமிடங்களில் அடித்து துவைத்துவிட, மேட் டாக் நிலைகுலைந்து சரிகின்றான். இதைக் கண்டு மேட் டாக்கின் பயிற்சியாளரும், ஜிம்மில் இருக்கும் மற்றவர்களும் திகைத்து போகின்றார்கள்.அடுத்த நாள் டாமி ஜிம்முக்கு செல்கையில் மேட் டாக்கின் பயிசியாளன் டாமியின் பெயரை ஸ்பார்டா போட்டியாளர்கள் பட்டியலில் சேர்த்து விட்டதாகச் சொல்கின்றான்.டாமி தன் தந்தையிடம் சென்று தான் ஸ்பார்ட்டாவில் கலந்து கொள்ளப் போவதாக சொல்லி அவரை தனக்கு பயிற்சியளிக்குமாறு வேண்டுகிறான்.இதை சாக்காக வைத்து தந்தை-மகன் உறவை புதுப்பிக்கலாமென எண்ணிக்கொள்ள வேண்டாமெனவும் தன் தந்தையை எச்சரிக்கின்றான்.(இந்த கடுப்புக்கு பின்னால் தனி கதை உண்டு)
 

   இதற்கிடையில் ஃபிலடெல்பியாவில் பள்ளி இயற்பியல் ஆசிரியராகப் பணிபுரிகின்ற பேடி கான்லானின் மூத்த மகனும் டாமியின் அண்ணனுமாகிய பிரெண்டன் கான்லான் (Brendon Conlon) தன் மனைவி டெஸ் (Tess) மற்றும் இரு பெண் குழந்தைகளோடு வசித்து வருகின்றான்.தன் மகளின் இருதயக் கோளாறு காரணமாக ஏற்பட்ட செலவுகளாலும், வங்கி கடனாலும் மூன்று மாதங்களில் தனது வீடு வங்கியால் ஜப்தி செய்யப்படுமென்ற நிலைக்கு ஆளாகின்றான்.

முன்னாள் (U.F.C) குத்துச்சண்டை வீரனாகிய பிரெண்டன், பண முடையை சமாளிப்பதற்காக இரவு நேரங்களில் அமெச்சூர் வீரர்களோடு சின்ன சின்ன போட்டிகளில் சண்டையிடுகின்றான்.இந்த செய்தி எப்படியோ பிரெண்டனின் மாணவர்களிடையே பரவி பள்ளி நிர்வாகத்தின் காதுகளையும் எட்டுகின்றது. பள்ளி மாணவர்களுக்கு இது ஒரு தவறான உதாரணம் என்று ஒழுக்கத்தை காரணம் காட்டி பிரெண்டன் பள்ளி நிர்வாகத்தினால் பணி இடைநீக்கம் செய்யப்படுகின்றான். கிடைத்துக்கொண்டிருந்த ஒரு வருமானமும் நின்று போக வேறு வழியின்றி முழு நேரமாக தன் பழைய தொழிலான குத்துச் சண்டையில் ஈடுபட முடிவெடுக்கின்றான்.

தன் முன்னாள் நண்பன் ஃப்ராங்க் கம்பானா(Frank Campana)-வை சந்தித்து அவனிடம் பயிற்சி பெறத் தொடங்குகின்றான். ஸ்பார்ட்டா போட்டியில் சண்டையிடுவதற்காகத் தயாராகி வந்த ஃப்ராங்கின் மாணவனுக்கு பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக காலில் அடிபட்டு விட அவனால் ஸ்பார்டனில் பங்கு பெறமுடியாத நிலைமை ஏற்படுகின்றது.அவனுக்கு பதிலாக ஸ்பார்ட்டனில் பங்குபெற பிரெண்டன் முன்வருகின்றான்.ஃப்ராங்கும் தன் நண்பன் மீது நம்பிக்கை வைத்து போட்டிக்காக அவனை ஆயத்தப் படுத்துகின்றான்.

ஐந்து மில்லியன் டாலரை பரிசுத்தொகையாகக் கொண்ட ‘ஸ்பார்டாவில் டாமி கட்டுக்கடங்காத காட்டு மிருகம்போல எதிரிகளோடு வெறிகொண்டு சண்டையிட்டு அவர்களை தோற்கடித்து இறுதி போட்டியை நோக்கி முன்னேறுகின்றான். இன்னொரு பக்கம் சில சுற்றுகள் கூட தாக்குப்பிடிக்க மாட்டான் என எல்லோரும் குறைத்து மதிப்பிட்ட பிரெண்டன் யாருமே எதிர்பாராவண்ணம் எதிரிகளோடு திறமையாக சண்டையிட்டு இறுதி போட்டிக்கு முன்னேறுகின்றான்.


இரண்டு பேருக்குமே இது வாழ்வா...சாவா... பிரச்சனை.டாமிக்கும் பரிசுத்தொகை தேவை... பிரெண்டனுக்கும் பரிசுத்தொகை தேவை...அண்ணனும் தம்பியும் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலை உண்டாகிறது.இறுதிப் போட்டியில் யார் வென்றது...?முன்னாள் ராணுவ வீரனாகிய டாமி கான்லான் ஏன் தன் பெயரை டாமி ரியொர்டன் என மாற்றிகொள்கிறான்? இந்த பெருந்தொகையை யாருக்கு தருவதற்காக டாமி போட்டியிட்டான்...?பிரெண்டன் தனது வீட்டைக் காப்பாற்றினானா...?
சொன்னா சஸ்பென்ஸ் போயிடும் பாஸு....படம் பாத்து தெரிஞ்சுக்கோங்க... J

டாமி கான்லானாக 'டாம் ஹார்டி', பிரெண்டன் கான்லானாக 'ஜோயல் எட்கர்டன்', இவர்களின் தந்தை பேடி கான்லானாக 'நிக் நோல்டே' ஆகியோர் நடித்திருக்கின்றனர்.இயக்குனர் 'கேவின் ஓ கானர்'. இவர்களில் டாம் ஹார்டியை மட்டும் இன்செப்ஷனில் ஒரு காட்சியில் பார்த்ததாக நியாபகம்.மற்றவர்கள் அனைவரும் எனக்கு புதியவர்களே.. J J

வழக்கமாக இந்த மாதிரி ஆக்சன்/தற்காப்புக் கலை திரைப்படம் என்றாலே அதில் அழுத்தமான கதை/திரைக்கதை இருக்காது.ஆனால் அந்த குறையை போக்கிவிட்டது இந்தப் படம். உணர்வுப்பூர்வமான ஒரு கதை கொஞ்சம் நான்-லீனியர் மாதிரி பின்னப்பட்ட திரைக்கதை,ரியலிஸ்டிக் ஒளிப்பதிவு என அத்தனை அம்சங்களுமே என்னை ஈர்த்தன.Never Back Down க்குப் பிறகு நான் ரொம்பவும் ரசித்த Mixed Martial Arts திரைப்படம் இதுதான்.

டிஸ்கி: படத்தின் கதையை வரி வரியாக விளக்கவில்லை.பல நல்ல காட்சிகளை ஸ்கிப் செய்து மேலோட்டமாகவே கூறியிருக்கின்றேன் (நீங்கள் பார்க்கும்போது ஏற்படும் சுவாரசியக் குறைவை தவிர்க்கும் பொருட்டு).

Warrior - Inspirational fight for life...!!!


பிடித்திருந்தால் 'லைக்'கவும் .உங்கள் கருத்துகளைத் தெரிவித்தால் மகிழ்வேன்...!!

புதன், 18 ஜனவரி, 2012

சென்னை 35-வது புத்தகக் கண்காட்சி - நான் வாங்கிய புத்தகங்கள்


இந்த ஆண்டு புத்தகக் காட்சிக்கு நான் சிறிது தாமதமாகவே செல்ல நேர்ந்தது.வார நாட்களில்  அலுவலகப் பணிகளும் போரூர் டிராபிக்கும் போக விடாமல் தடுத்தன என்றால், வாரயிறுதியில் நண்பர்களுடனான ஊர்சுற்றல் காரணமாக இருந்தது.ஒருவழியாக நேரம் ஒதுக்கி கடந்த 12 -ஆம் தேதி அலுவலக நட்பு ஒருவருடன் சென்று வந்தாயிற்று.முதலில் உயிர்மை, கிழக்கு, விகடன், டிஸ்கவரி புக் பேலஸ் ஆகிய ஸ்டால்களை நோட்டம் விட்டுவிட்டு மற்ற ஸ்டால்களை நுனிப்புல் மேய்ந்துவிட்டு...திரும்ப புத்தகங்கள் வாங்க வரும்போது மணி ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது. 9 .00  மணிக்கு ஸ்டால்களை மூடிவிடுவார்களே என்பதை சுத்தமாக மறந்துவிட்டிருந்தேன்.தலயிலடித்துக்கொண்டு தோழியும் நானும் வேக வேகமாக புத்தகங்களை வாங்க ஆரம்பித்தோம்.

நான் வாங்கிய புத்தகங்கள்:
அணிலாடும் முன்றில் - நா.முத்துக்குமார்
மூங்கில் மூச்சு - சுகா
கலகம் காதல் இசை - சாரு நிவேதிதா
வண்ணத்துப் பூச்சி வேட்டை - சுஜாதா
நானோ டெக்னாலஜி - சுஜாதா
விபரீதக் கோட்பாடு - சுஜாதா
குருபிரசாதின் கடைசி தினம் - சுஜாதா
தப்பித்தால் தப்பில்லை - சுஜாதா
ஜோதி - சுஜாதா
தெர்மக்கோல் தேவதைகள் - கேபிள் சங்கர்
அழிக்கப் பிறந்தவன் - யுவகிருஷ்ணா

நட்பு வாங்கியவை:
தாயார் சன்னதி - சுகா
எப்போதும் பெண் - சுஜாதா
அணிலாடும் முன்றில் - நா.முத்துக்குமார்
வாழ்வது எப்படி - சாரு நிவேதிதா
ஜீரோ டிகிரி - சாரு நிவேதிதா
தெர்மக்கோல் தேவதைகள் - கேபிள் சங்கர்
பூனைகள் இல்லாத வீடு - சந்திரா

இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும் என நினைத்து நேரமின்மையால் தவற விட்டேன்.சுஜாதாவின் சிறுகதை தொகுப்புகள், விஞ்ஞான சிறுகதைகள் ஆகியவை இந்த மாத இறுதியில் வாங்கவிருப்பதால் வாத்தியாரின் சிறுகதைகள் வேறெதுவும் வாங்கவில்லை.படிக்காத குறுநாவல்கள் மட்டுமே வாங்கியிருக்கின்றேன். நான் தவறவிட்ட சில பல புத்தகங்களை இன்று டிஸ்கவரி புக் பேலஸில் சென்று அள்ளிக்கொள்வேன்.

சென்ற ஆண்டு புத்தகக் காட்சியில் வாங்கியவை:
வாழ்வது எப்படி - சாரு நிவேதிதா
கடவுளும் நானும் - சாரு நிவேதிதா
கற்பனைக்கு அப்பால் - சுஜாதா
உயிரின் ரகசியம் - சுஜாதா
கற்றதும் பெற்றதும் - 3 - சுஜாதா
ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க - 'நீயா நானா' கோபிநாத்
வருங்காலத் தொழில்நுட்பம் - அண்டன் பிரகாஷ்

இந்தாண்டு தவறவிட்டவைகளில் மிகப்பெரிதாக நான் கருதுவது எஸ்.ரா -வின் இலக்கியப் பேருரைகள் டி.வி.டி யும், இன்னு சில எஸ்.ரா வின் புத்தகங்களும் தான்.எப்படியும் இந்த மாதத்திற்குள் அவற்றையும் வாங்கி விடுவேன்.தற்போது 'நானோ டெக்னாலஜி'-யும், 'அணிலாடும் முன்றிலு'ம்  படித்துக்கொண்டிருக்கின்றேன்.ஒவ்வொரு புத்தகமாகப் படித்து முடித்துவிட்டு அவற்றை பற்றி எழுதுகிறேன்.பார்க்கலாம்....!!

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

நண்பன் – The Best Friend


நேற்று காலை 7.30 மணிக்காட்சி சங்கம் திரையரங்கில் வேட்டை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பி காசி திரையரங்கம் வந்து 11.30 மணி காட்சியில் நண்பனும் பார்த்தாகிவிட்டது.


முன்குறிப்பு: கதை தெரிந்த கதையாக இருந்தாலும் காட்சிகளை விவரித்தால் சுவாரசியம் குறைந்து விடுமென்பதால் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கின்றேன்.

ஷங்கர் இயக்கம்,ஏற்கனவே இந்திய அளவில் சூப்பர் ஹிட்டான 3 இடியட்ஸின் ரீமேக்,ஆரவாரமில்லா ரிலீஸ், ஃப்ரெஷ்ஷான விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா என பெரிய ஸ்டார்காஸ்ட், இப்படி எதிர்பார்ப்பைத்தூண்டும் விஷயங்கள் ரொம்பவே அதிகம்.எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே ஈடு செய்திருக்கின்றார்கள்.

கதை எல்லோருக்குமே தெரிந்த விஷயமாக இருந்தாலும் படத்தின்மேல் பெரிதாய் ஆர்வம் வரக் காரணம் ஷங்கர்.அவரின் முதல் ரீமேக் இது.முதன் முதலில் 3 இடியட்ஸ் பார்த்தபோது இந்த படத்தைத் தமிழில் எடுத்தால் எப்படி திரைக்கதை அமைப்பார்கள்...யாரெல்லாம் நடிப்பார்கள்..என நிறைய யோசித்திருக்கிறேன்.ஷங்கர் இயக்கம் என்றவுடன் மகிழ்ந்த மனது அமீர்கான் கேரக்டரில் விஜய் என்றறிந்தவுடன் பகீரென்றது...குத்து பாட்டு...பறந்தடிக்கிற ஃபைட் என மசாலா கலந்து பஞ்சர் ஆக்கிவிடுவார்களோ என பயந்தேன்.நல்ல வேலை அப்படி எதுவும் நடக்கவில்லை.

பஞ்சவன் பாரிவேந்தனாக விஜய்... என்ன சொல்வது இவரை... சச்சின்,காவலனுக்குப் பிறகு இப்படி ஒரு Soft, Subtle  பெர்ஃபார்மன்ஸில் விஜய்யை பார்ப்பதே ஆச்சரியமான,ஆறுதலான விஷயமாக இருந்தது.மனிதர் அப்படி பிய்த்து உதறியிருக்கின்றார் நடிப்பில்... சின்ன சின்ன ரியாக்‌ஷன்ஸ், பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி என அத்தனையிலும் மொத்தமாய் ஸ்கோர் செய்கின்றார் விஜய்.
சேவற்கொடி செந்திலாக ஷர்மான் ஜோஷி கேரக்டரில் ஜீவா, தான் இந்த பாத்திரத்திற்கான மிகச்சரியான தேர்வு என நிரூபித்திருக்கின்றார்.முதலில் பாரியோடு பழகுவதில் தயக்கம் காட்டுவதாகட்டும், மாடியிலிருந்து குதித்து அடிபட்டு பின் தேறி வந்து தன்னம்பிக்கையொடு இண்டர்வியூவில் பேசும் காட்சிகளாகட்டும்...Jeeva at his best… என்றுதான் சொல்லவேண்டும்.வெங்கடச மாதவன் ரோலில் ஸ்ரீகாந்த், அதிகம் ஸ்கோப் இல்லாவிட்டாலும் தனக்கான காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக சிறப்பாகவே செய்திருக்கின்றார்.இலியானா கேடிக்குப் பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.செம்ம கியூட்.. ;) J நம்ம ஊருக்கு பரிச்சயமில்லாத சைஸ் ஜீரோ..ஸ்லிம் பியூட்டியாக...அழகாய் இருக்கின்றார்... பாடல்களில் ஷகிரா ஸ்டைல் ஹிப் டான்ஸ் சூப்பர்... J  

திரைப்படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ரெண்டு பேர் சதுர் பாத்திரத்தில் ஸ்ரீவத்ஸனாக வரும் சத்யனும், பிரின்சிபால் விருமாண்டி சந்தானமாக கலக்கியிருக்கும் சத்யராஜும் தான்.கொஞ்சமே கொஞ்சம் நாடகத்தனமாய் இருந்தாலும் ரெண்டு பேருமே அவரவர்கள் பாத்திரங்களில் பட்டைய கிளப்பிருக்கின்றார்கள்..!!

பாடல்களிலும் சரி..பின்னணி இசையிலும் சரி... ஹாரிஸ் ஜெயராஜிடம் நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் ஷங்கர்.ஹாரிஸும் தனது வழக்கமான டெம்ப்ளேட் ட்யூன்களை விட்டுவிட்டு கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கின்றார். இவ்வளவு கலர்ஃபுல்லாகவும்..யூத்ஃபுல்லாகவும் இருக்கின்ற ஒரு கல்லூரி சார்ந்த கதைக்கு
மனோஜ் பரமஹம்ஸாவின் ஒளிப்பதிவு மிகப் பெரிய பலம்.சுஜாதா இல்லாத குறையை கார்க்கி தீர்த்துவைத்திருக்கின்றார்.அவ்வளவு அருமையான ஷார்ப்பான வசனங்கள்...

மொத்தத்தில் 2012ல் முதல் படமே விஜய்க்கு மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமையுமென்பதில் சந்தேகமே இல்லை...!!!

நண்பன் – ஆல்ல்ல்ல்ல்ல் இஸ்ஸ்ஸ்ஸ் வெல்ல்ல்ல்...!!!!

பின்குறிப்பு : வேட்டை விமர்சனம் அடுத்த பதிவில்...!!

புதன், 11 ஜனவரி, 2012

நீ நான் மற்றும் நம் நினைவுகள்...!!!


அழகான பூந்தோட்டங்களின் ஊடே

கை கோர்த்தபடி

மகிழ்ச்சியாக

சுற்றித் திரிகின்றோம் நாம்..



பூக்களை நுகர்ந்தபடி

சிரித்து சிரித்து

என்னவோ

பேசிக்கொண்டேயிருக்கின்றாய் நீ...

தலையசைத்தபடியே உன் முகத்தை

பார்த்துகொண்டு நடக்கின்றேன் நான்..



ஏதோவொரு பாடலை

முணுமுணுக்கிறாய் நீ..

உலகின் மிக

இனிமையான பாடலாக

அது இருந்திருக்கவேண்டும்

என்பதுபோல்

ரசிக்கத் தொடங்குகிறேன் நான்...



வசந்த காலத்தின் வாசம்

நம்மைச் சுற்றிலும்...

பின்பு கடற்கரை

மணல்வெளியில்

கால்தடம் பதிக்கத் தொடங்கிறோம்....

நம்மை பிடிக்க முயன்ற

அலைகளோடு விளையாடி நகர்கிறோம்..



திடீரென்று கையை உதறிவிட்டு..

முடிவில்லா கடலின் நடுவே

ஓட ஆரம்பித்தாய் நீ...



என்னென்னவோ

அழுது அரற்றியபடி

பின் தொடர்ந்து

ஓடிவருகின்றேன்  நான்...



ஓடி ஓடி..

சிறு புள்ளியாய்.. ஒளிக்கீற்றாய்..

தேய்ந்து மறைந்தாய் நீ..!!



அழுது சோர்ந்த

கண்களோடு..

அயர்ச்சியில்

விழித்தெழுகின்றேன் நான்...!!

கனவுகளின்

மிச்சமாய் எச்சமாய்

சிதறிக்கிடந்த உன் நினைவுகளை

அசைபோட்டபடி...

திங்கள், 9 ஜனவரி, 2012

அழிக்கப் பிறந்தவன் - Survival of the Fittest


முன்பே மூன்று புத்தகங்கள் எழுதியிருந்தாலும் இது யுவகிருஷ்ணா அண்ணனின் முதல் புதினம் என்பதால் மிகுந்த ஆவலோடு காத்திருந்தேன் 'அழிக்கப் பிறந்தவனு'க்காக.வலைப்பூவில் வெளியிட்டிருந்த அத்தியாயங்கள் வேறு ஏகத்துக்கும் ஆர்வத்தைக் கிளப்பிவிட்டபடியால்... வெளியிட்ட அன்றே வாங்கியாயிற்று இந்த புத்தகத்தையும்... அன்றிரவே படித்தும் முடித்தாயிற்று.


ஒரு கொலை,ஒரு போலிஸ் கம்ப்ளைன்ட், இதனைத் தொடர்ந்து கோர்வையாக நடக்கும் விசாரணைகளும்,தொடர் கொலைகளும் விறுவிறுப்பை அதிகமாக்குகின்றன.பர்மா பஜார் பெருந்தலை காதர் பாய், அவரின் சிஷ்யன் மாரி, அவனுடைய நண்பன்...இப்படி வரிசையாக அறிமுகமாகும் ஒவ்வொரு கேரக்டரும் கதையை அடுத்தடுத்த  கட்டத்துக்கு கொண்டு செல்கின்றன.

தட தடவென எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் போல அப்படியொரு வேகமான நடை கதையிலே... கதாபத்திரங்களின் படைப்பு, அவர்களின் பின்னணி, அவர்கள் புழங்கும் இடங்கள்...அத்தனையிலும் அப்படி ஒரு டீட்டெய்லிங் ().பர்மா பஜார் வியாபாரம்,திருட்டு வி.சி.டி கும்பல், கடல் வழி கடத்தல்,சினிமா விநியோக உரிமை, என கொடுத்திருக்கும் ஒவ்வொரு டீட்டெய்லுக்கும் ரொம்பவே உழைத்திருப்பது தெரிகின்றது..

ஹாலிவுட் இயக்குனர்களான மார்ட்டின் ஸ்கார்சீஸ், கை ரிட்சி, படங்களில் பார்ப்பது போல ஒரு இருள்/நிழல் உலகத்தை நம் கண் முன்னே மிகத் துல்லியமாகக கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றார். ஒருவரின் நிழலில் இன்னொருவர் உருவாவதும்... வளர்ந்தபின் வளர்த்தவர் மேலேயே பாய்வதும் ஆகிய நிழல் உலகின் 'Survival of the Fittest ' கொள்கைகளை மிக சிறப்பாகவே சொல்லியிருக்கின்றார்.மாரியின் காதல் எபிசோடை கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கலாம் என்பது என் வருத்தம்.. :) :)

ஒரு கமர்ஷியல் த்ரில்லர் சினிமாவுக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் கொண்டிருக்கின்றான் இந்த 'அழிக்கப் பிறந்தவன்'.
யுவா அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்...!!!
அடுத்த நாவலை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்...!!

டிஸ்கி: 


நான் ஒன்றும் பெரிய இலக்கிய அப்பாடக்கர் இல்லையாகையால் இதை விமர்சனமாக எடுத்துக் கொள்ளாமல் சராசரி ரசிகனின் புரிதலாக / புரிதலின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்... :) :)







ஞாயிறு, 8 ஜனவரி, 2012

’தெர்மக்கோல் தேவதைகள்’ - உணர்வுகளின் தொகுப்பு


கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப்பின் இப்போது தான் இந்த பக்கம் வருகின்றேன்.
So... I'm back..!! :) :) :)


லெமன் ட்ரீ, கொத்து பரோட்டா, மீண்டும் ஒரு காதல் கதை... ஆகிய புத்தகங்களைத் தொடர்ந்து அண்ணன் கேபிள் சங்கர் அவர்களின் சமீபத்திய (4/01/2012) ரிலீஸ் தான் ‘உபதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் தெர்மக்கோல் தேவதைகள் சிறுகதைத் தொகுப்பு.

கேபிள் அண்ணனின் நேரேஷன் ஸ்டைல்தான் எனக்கு அவரிடம் மிகப் பிடித்த விஷயம்.உணர்வுகளை அப்படியே வார்த்தைகளில் கடத்துவதில் வல்லவர்.
செவிட்டில் அறையும் நிதர்சனங்களையும், மெல்லிய உணர்வுகளையும் அவரது சிறுகதைகள் எப்போதும் பிரபலிக்கத் தவறியதில்லை.

அப்படி நெஞ்சைத்தொட்ட நிதர்சனக் கதைகளின் தொகுப்பு தான் இந்த் தெர்மக்கோல் தேவதைகள். ஜூஸ் கடைகளில் ஃபலூடா என்று ஒரு மிக்ஸ் உண்டு.ஜிகர்தண்டாவின் காஸ்ட்லி வெர்ஷன். தனித்தன்மையும், தனிச்சுவையும் கொண்ட பல லேயர்களை அடுக்கியிருப்பார்கள்.அவைகளை கலந்து ஒன்றாக சாப்பிடுவது ஒரு அலாதியான இன்பம்.
இந்த சிறுகதைத் தொகுப்பும் அந்த மாதிரி தான்.ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு அனுபவத்தைத் தருகின்றன நமக்கு.

சில பாத்திரங்கள் உங்களுக்கு வாழ்க்கையை உணர்த்தலாம், சில பாத்திரங்கள் உங்களை காதலிக்கத் தூண்டலாம், சில உங்களை அழ வைக்கலாம்... இப்படி உணர்வுகளின் குவியலாகவே இருக்கின்றார்கள் கதை மாந்தர்கள்...

எனக்கு எப்போதுமே கேபிள் அண்ணன் கதைகளில் உலவும் பெண் பாத்திரங்கள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு... 80 வயது சேச்சுப் பாட்டியாகட்டும், இருபதுகளில் உலவும் ஜெயா,ராஜியாகட்டும் அப்படி ஒரு கேரக்டரைசேஷன்... அழகுப் பெண்களைப் பற்றிய வர்ணனைகளில் சில க்ளிஷேக்கள் இருந்தாலும் (உ.தா இரானியச் சிவப்பு, செர்ரி உதடு) JJ
கேரக்டரைசேஷனிலும்,மெல் உணர்வுகளைச் சொல்வதிலும் கேபிள் அண்ணன் ஒரு குட்டி சேத்தன் பகத்.. J J

என்னுடைய ஃபேவரைட்ஸ்:
1.வன்மம்
2.பிரியாணி
3.ஜன்னல்
4..காளிதாஸ்
5.ராஜலட்சுமி
6.ஜெயா

கேபிள் அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்...!!!


டிஸ்கி:

நான் ஒன்றும் பெரிய இலக்கிய அப்பாடக்கர் இல்லையாகையால் இதை விமர்சனமாக எடுத்துக் கொள்ளாமல் சராசரி ரசிகனின் புரிதலாக / புரிதலின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்... J J J

டிஸ்கி 2:

தெர்மக்கோல் தேவதைகள் வாங்கிய அன்றே யுவகிருஷ்ணா அண்ணனின் ‘அழிக்கப் பிறந்தவனையும் வாங்கிவிட்டேன்... இரண்டு புத்தகங்களையும் விடிய விடிய அன்றே படித்தும் முடித்தாயிற்று. சோ அடுத்த பதிவில் ‘அழிக்கப் பிறந்தவனோடுசந்திக்கிறேன்.