வெள்ளி, 30 டிசம்பர், 2022
விட்னஸ் - Witness - 2022
செவ்வாய், 13 டிசம்பர், 2022
நெருநல் உளனொருவன் இன்றில்லை - Eulogy Hymn
பேரன்பின் ராஜாவுக்கு,
நீ எங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் பிரியாவிடை பெற்று இன்றுடன் நூற்றி சொச்சம் நாட்கள் கடந்து விட்டன. நீயில்லாத உலகில் தனக்கும் இடமில்லையென உன் அம்மாவும் புறப்பட்டுவிட்டார்கள்
இயல்பு வாழ்வென ஒன்று இருப்பதால், உன் இழப்பிலிருந்தும் நினைப்பிலிருந்தும் மீண்டு விட்டதாக என்னை நானே தேற்றிக் கொண்டு மற்ற அனைத்திலும் கவனம் செலுத்த முயன்று கொண்டேயிருக்கேன். விழாக்களிலும் கொண்டாட்டங்களிலும் பங்கெடுத்துக் கொள்ளுகிறேன். பசிக்கு மீறி உண்டு திணறுகிறேன். புத்தகங்கள், திரைப்படங்கள், பாடல்கள், அலுவல்கள், கடமைகள், நண்பர்கள், பயணங்களென முற்றாய் என் உடலும் உள்ளமும் களைத்துப் போகுமளவு எல்லாவற்றிலும் எல்லாரிடமும் என்னை ஒப்புக்கொடுத்துக் கொண்டேயிருக்கிறேன்.
ஆனாலும் உன் இன்மை, ஒரு நிழல் போல . கருமேகம் போல, ஒரு பூனையைப்போல என்னைத் தொடர்ந்து வந்தபடியே இருக்கின்றது. நானும் என்னைப் போல் உன் மீது அன்பு கொண்ட, நீ வாழ்ந்து தொலைத்திருக்கலாம் என்று திட்டித்தீர்க்கிற ஏனையோரும் என்ன செய்திருந்தால் உன்னைப் பிடித்து வைத்திருக்கலாமென யோசித்துக் களைத்து , இப்போதாவது அவன் விரும்பிய அமைதியை அவன் அடைந்துவிட்டிருப்பானென சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். குற்ற உணர்விலிருந்தும் கையறு நிலையிலிருந்தும் எங்களை விடுவித்துக் கொள்ள வேறென்ன செய்துவிட முடியும் ?
நீ சிக்கிக் கொண்டிருந்த சுழலிருந்து மேலேறி வர, உன்னை மீட்கும் பொருட்டு நீண்ட ஆயிரம் கரங்களில் ஒன்றையேனும் நீ பற்றிகொண்டிருக்கலாம் ராஜா.
ஆனால் உன் விருப்பம் வேறாக இருந்திருக்கிறது. எப்போதும் மனிதர்கள் சூழ இருந்தவன் நீ. உன்னுடைய விருப்பத்தை விடவும் சுற்றத்தாரின் விருப்பத்துக்கும் மகிழ்ச்சிக்கும் முன்னுரிமை தந்து அவர்களைக் கொண்டாடித் தீர்த்தவன் நீ . எல்லா கொண்டாட்ட பொழுதுகளிலும் உன்னை எளிதாக பொருத்திக் கொள்வாய். உன் வட்டத்து நண்பர்களின் வாழ்வில் அவர்களுடைய நன்னாட்கள் அத்தனையிலும் நீ உடனிருந்திருக்கிறாய். நான் உட்பட; ஆனாலும் எங்கள் யாருக்கும் உன்னோடு நிற்கும் அந்த நல்வாய்ப்பைத் தர மறுத்துவிட்டாய்.என் வருத்தமெல்லாம் இத்தனை பேருக்கு மத்தியிலும் நீ தனியனாய் உணர நேர்ந்ததைப் பற்றித்தான்.
நீ முற்றிலுமாய் உனது இருப்பை அழித்துக் கொள்வதற்கு முன் எல்லோரிடமிருந்தும் உன்னை விலக்கிக் கொண்டாய். நீ ஒரு கடும் பிடிவாதக்காரனாக உன்னை வரித்துக் கொண்டது உன் விலகலை விடவும் வேதனையானது . ஒரு பயணியானவன் தான் நிழலுக்காய் அமர்ந்த மரங்களை எப்போதும் காயப்படுத்தில்லை. உன் மீதான அன்பை மறக்கச்செய்யுமளவு கடுமையான கோபத்துடனேயே இருந்தேன் நான். இப்போதும் ஏதெனும் ஒரு வசை சொல்லி அவ்வப்போது உன்னை வாய்விட்டு திட்டிவிடுகிறேன்.
விலகிச் செல்கிற தேவதைகளின் முன்பு உள்ளங்கைகளில் மெழுகுவர்த்தியுடன் நீ மண்டியிட்டு பிரார்த்தித்திருக்க வேண்டாம் ராஜா.
இன்னும் கொஞ்சம்... கொஞ்சமே கொஞ்சம் பொறுமை காத்திருக்கலாமோ எனத் தோன்றிக் கொண்டேயிருக்கிறது.நீ வசித்த தெருவை கடந்து போகும்போதெல்லாம், நீ எப்போதும் செல்கிற டீக்கடையை தாண்டும்போதெல்லாம், நீ அடிக்கடி திரிகிற மாலுக்கும் திரையங்கிற்கும் செல்லும்போதெல்லாம், உனக்கு விருப்பமான நடிகனின் திரைப்படத்தை பார்க்கும்போதெல்லாம், நண்பர்களின் திருமண நிகழ்வுகளில் நீ ஆடிக்களைத்த பாடல்களை கேட்கும் போதெல்லாம், உனது இருப்பை இந்த உலகம் எனக்கு நினைவூட்டியபடியே இருக்கின்றது.
அழ வேண்டியதெல்லாம் அழுது முடித்தாயிற்று. கேட்க வேண்டிய அத்தனையும் கேட்டு முடித்தாயிற்று. எந்த முடிவுக்கும் வர வேண்டிய நிர்பந்தமோ, காரணம் தேடும் கட்டாயமோ இல்லை. உன்னையும் உனது நினைவுகளையும்
இந்த உலகம் நிதானமாக ஆனால் நிச்சயமாக கடந்து சென்றுவிடும்.எங்கள் மனதில் உனது இன்மை அல்லது உன் இருப்பின் வெற்றிடம் வேறு பல மனிதர்களாலும் அவர்தம் கதைகளாலும் நினைவுகளாலும் நிரப்பப்பட்டுவிடும். உன்னைப் பற்றி மற்ற யாரிடத்திலும் இனி பேசுவேனா தெரியாது ராஜா.
இந்தக் கடிதத்துக்காக எந்த விதமான பதிலையும் நான் எதிர்பார்க்கவில்லை . என் மனச்சுமையை இறக்கிவைக்கும் பொருட்டு சுயநலமாகத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன் ராஜா . இன்னும் ஓரிரு வாரங்களில் உனது பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் கிருஸ்மஸ் விடுமுறையில் தொடங்கி ஏதேனும் ஒரு ஊருக்கு பயணப்பட்டு, உன் பிறந்தநாளைக் கொண்டாடி முடித்து விட்டு புத்தாண்டுக்கு ஊர் திரும்புவாய். எப்போதும் உனது பிறந்தநாளின் போது நீ ஊரில் இருந்ததேயில்லை.இப்போதும் அப்படித்தான் என எண்ணிக்கொள்கிறேன். இம்முறை நீ வெகு தொலைவில் ஓரிடத்துக்கு பயணப்பட்டிருக்கிறாய். நீ விரும்பிய யாவும் அங்காவது உனக்கு கிடைக்க வேண்டுமென இந்த பிரபஞ்சத்திடம் உன் சார்பில் கோரிக்கை வைக்கிறேன் ராஜா.
Advanced birthday wishes...Long may you live in our hearts Raja...! :'( :'( :'(
என்றென்றும் அன்புடன்,
நான்
வியாழன், 8 டிசம்பர், 2022
Dall-Eம் ChatGPTம் பின்னே நானும்
சில பல மாதங்களுக்கு முன் செயற்கை நுண்ணறிவின் (AI - Artificial Intelligence) அடிப்படையில் இயங்கும் Dall-E என்ற வலைத்தளம் பேசுபொருளானது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், நீங்கள் சொற்களாக எழுதும் குறிப்புகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல டிஜிட்டல் ஓவியமோ நிழற்படமோ உருவாக்கித் தரும்.
உதாரணத்துக்கு a digital art with Superman sitting in a library wearing spectacles and reading books amidst stack of books என்று குறிப்பெழுதினால் இணைப்பில உள்ளதைப் போன்ற படம் கிடைக்கும். இந்தக் குறிப்பையே வேறு சில சொற்களுடன் உங்கள் கற்பனைத் திறனுக்கு ஏற்றார் போல் மாற்ற, படத்தில் மாற்றங்கள் செய்து டாலி உங்களுக்குத் தரும்.
A van gogh style painting of Superman sitting in a library wearing spectacles and reading books amidst stack of books என்று ஒரு சில சொற்களைச் சேர்த்தால் வான்காவின் பாணியில் வரையப்பட்ட ஓவியமாக உங்கள் கற்பனைக்கு உருவம் கிடைத்துவிடும்.
இந்த டாலி, OpenAI என்னும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் ஆக்கம். அதே நிறுவனத்தின் மற்றுமோர் புரட்சிகரமான தொழில்நுட்ப ஆக்கம் தான் ChatGPT எனப்படும் செயலி . உலகம் முழுக்க பல நிறுவனங்கள் தங்களுடைய வலைத்தளங்களில் வாடிக்கையாளர்களுக்கு பதிலளிக்கவும் அவர்களுக்கு வேண்டிய தகவல்களைத் தரவும் Chatbot என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றன. மனிதர்களின் உள்ளீடு இல்லாமல் செய்ய தாமாகவேசெயல்பட்டு ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யக்கூடியவை இந்த பாட்கள். ChatGptம் இதே மாதிரியான ஒரு பாட் தான். ஆனால் அதீத திறன்வாய்ந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட chat bot.
எந்தளவுக்கு திறன் வாய்ந்ததென்றால் ஒரு கணினி நிரலின் பகுதியைக் (code snippet) கொடுத்து சந்தேகம் கேட்டால் அதனைத் தீர்த்து வைப்பதோடல்லாமல் மாற்று வழிகளையும் தரும்.
ஒரு சில சொற்களையோ அல்லது சொற்றொடரையோ தந்து கதையெழுதச் சொன்னால் எழுதும்.
ஒரு சிக்கலான சமூகப் பிரச்சினை குறித்த கட்டுரை எழுதித்தரச் சொன்னால், கருத்துக் கேட்டால் தெள்ளத் தெளிவாகத் தரும்.
ஒரு சிறிய கணினி நிரலையோ (code/program), செயலியையோ உருவாக்கித் தர குறிப்புகள் தந்தால் அதையும் செய்யும்.
சமையல் குறிப்புகள், ஜோக்குகள், கவிதை எனத் துவங்கி உங்கள் ரெஸ்யூமில் செய்ய வேண்டிய மாற்றங்கள் வரை என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்.
கூகுள் அடிப்படையில் ஒரு தேடுபொறி. இது இங்கே இருக்கிறது; இதற்கான தீர்வு இங்கே கிடைக்கலாம்: அதற்கான பதில் அங்கே கிடைக்கும் என சரியான திசைக்கு நம்மைச் செலுத்தும் வழிகாட்டி போல என வைத்துக்கொண்டால் ChatGpt அதன் அடுத்தகட்டமாக நமக்கு வேண்டியதைச் செய்துதருகிற விளக்கு பூதம் போல எனச் சொல்லலாம்.
உண்மையில் இது ஒரு புரட்சிகரமான தொழில்நுட்பம். கற்பனைத் திறனின் உச்சமும் தொழில்நுட்பமும் சந்திப்பது குறித்து எனக்கு பல கனவுகளும் எதிர்பார்ப்புகளும் உண்டு. இப்போதைக்கு ஆங்கிலம் மட்டும் புரிந்துகொள்ளும் டாலி, தமிழ் உட்பட உலக மொழிகள் அனைத்தையும் புரிந்துகொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை. ChatGPT இப்போதே அதையும் செய்கிறது. தமிழ் உட்பட பல மொழிகளிலும் உள்ளீட்டைப் புரிந்துகொள்கிறது.
டாலியின் துணை கொண்டு நான் உருவாக்கிய படங்களையும், ChatGPTன் தற்போதைய பயன்பாடுகளின் பட்டியலையும் (usecases/applications) இணைத்திருக்கிறேன். அந்த தளங்களின் இணைப்பு கமெண்ட்டில். இலவச சேவைகளாக வழங்கப்படும் இவையிரண்டும் விரைவிலேயே கட்டணச் சேவைகளாக மாறக்கூடும்
ஏற்கனவே விகடன் மாதிரியான சில பத்திரிகைகள் அவர்கள் வெளியிடும் கவிதைகளுக்கான ஓவியத்தை டாலியின் துணை கொண்டு வரையத் துவங்கியிருக்கின்றார்கள். எதிர்காலத்தில் fillers எனப்படும் பகுதிகள் அத்தனையும் ChatGPTன் துணை கொண்டு எழுதப்படலாம். இன்னும் இதன் முழுமையான சாத்தியக் கூறுகள் போகப் போகப் புலப்படலாம். நிறுவனங்கள் முழுநேரப் பணியாளர்களை நியமிப்பதற்கு பதிலாக OpenAI மாதிரியான தளங்களில் credits வாங்கி வைத்துக் கொண்டு நுண்ணறிவு செயலிகளை முழுமையாகப் பயன்படுத்தத் துவங்கலாம்.
இந்த தொழில்நுட்ப முன்னேற்றம் எந்தளவுக்கு வியப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறதோ அதே அளவு கொஞ்சம் அச்சத்தையும் மெலிதான கலக்கத்தையும் ஏற்படுத்தத்தான் செய்கிறது. எதிர்காலம் நமக்காக மேலும் என்னவெல்லாம் வைத்திருக்கிறதோ?! பார்க்கலாம்.
#DallE2art #ChatGPT
https://openai.com/dall-e-2/
https://openai.com/blog/chatgpt/
திங்கள், 10 அக்டோபர், 2022
பொன்னியின் செல்வன் - பாகம் 1 - திரையனுபவம்
பொன்னியின் செல்வன் was a delightful watch for me...!
சனி, 24 செப்டம்பர், 2022
அம்பரம் - போர்கண்ட நெஞ்சம்
மனிதன் தன் நிலத்தின் வழியாகவே அடையாளம் காணப்படுகிறான். பருவகாலங்களுக்குத் தக்கபடி நிலம் தன்னை மாற்றிக் கொண்டு முன்னகர்த்திச் செல்லும்போதெல்லாம் மனிதன் அச்சம் கொள்கிறான். மற்றங்களைப் புரிந்து கொண்டு வாழப்பழகாமல் நிலம் தன்னைக் கைவிட்டுவிட்டதான அச்சத்தில் ஓடத்துவங்கும் போது இடம்பெயர்தல் நிகழ்கிறது.
- அம்பரம்/ ரமா சுரேஷ்
***********************************************************************************
உண்மையில் ஒரு தனி மனிதனின் அடையாளம் என்பது என்ன ? அவனுடைய நாடா ? அவன் பேசும் மொழியா ? அவன் கடைபிடிக்கும் மதமா ? அவனுடைய தொழிலா ? அவனுடைய பெற்றோரும் சுற்றத்தாருமா ? ஒரே இடத்தில் பிறந்து , வளர்ந்து, அங்கே புழக்கத்தில் இருக்கிற மொழியைப் பேசி, வாழ்ந்து, பின்பு மரித்துப் போகிறவர்களுக்கு வேண்டுமானால் மேற்கண்டபடி நிலையான அடையாளமாய் சொல்லிக் கொள்ள ஏதேனும் இருக்கலாம். ஆனால், உயிரையும் உடைமைகளையும் , குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ளவும், உயிர்பிழைத்துக் கிடக்கவும் புலம் பெயர்கிறவர்களுக்கு அப்படியான நிலையான அடையாளமென்று ஏதுமிருப்பதில்லை. அவர்கள் செல்லும் எந்த நாடும், வாழும் எந்த ஊரும் , பேசும் எந்த மொழியும், அவர்களுக்கான நிலையான அடையாளமாக இருந்ததில்லை. அப்படி நிலையான அடையாளங்களை அவர்கள் கைக்கொள்வதையும் ஏனையோர் விரும்பியதில்லை. மனதில் நினைவுகளைச் சுமந்து கொண்டு என்றாவது ஓர் நாள் ஊர்திரும்பிவேண்டுமென அன்றாடம் ஓடிக்கொண்டேயிருக்கிற அல்லது தங்களது வேர்களை வேறிடத்தில் பதியம் போட்டுக்கொள்ளத் துடிக்கிற ஒருவனின் கதையைத் தான் அம்பரம் நாவல் பேசியிருக்கின்றது.
ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் மோக்லி பதிப்பகம் வெளியிடும் நாவல்; அதுவும் பர்மாவை கதைக்களமாகக் கொண்ட நாவல் என்பதே போதுமானதாக இருந்தது ‘அம்பரம்’ நாவலை வாசிப்பதற்கு. 1824ல் பர்மாவில் துவங்குகிறது கதை. முதல் ஆங்கிலோ-பர்மிய போர்க்கால பின்னணியில், ஸ்வெடகன் பகோடா என்னும் பழமையான பெளத்த ஆலயத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த ‘சிண்ட் கூ’ எனும் பெரிய மணியையும் எடுத்துச் செல்ல ப்ரிட்டிஷாரின் முயற்சிகளும் அதனைத் தடுக்க முயலும் பெளத்த பிக்குகளின் முயற்சிகளுமாக காட்சிகள் விரிகின்றன. முதல் பதினைந்து பக்கங்களைப் படிக்கையில் ஒருவேளை இந்த நாவல் ஒரு முழு வரலாற்று நாவலாக இருக்குமோ என யோசிக்க வைத்தாலும், பின்பு கதை வேறு திசையில் வேறு கோணத்தில் பல்வேறு பாத்திரங்களினூடாகவும் அவர்தம் வாழ்வினூடாகவும் நகர்கின்றது.
பர்மியனான ’மெளன் போ’வைக் காதலித்துக் கரம்பிடித்து, பின்னாட்களில் அவன் தன் தன்னையும் தன் மகனையும் விட்டு எங்கோ சென்றுவிடுகையில் மகனின் கைபிடித்து கணவனைத்தேடி புறப்படும் ஆயிஷாவின் கதை; எங்கோ மன்னார்குடியில் பிறந்து நாகப்பட்டிணத்தில் வளர்ந்து, பிழைப்புத் தேடி கப்பலில் சிங்கப்பூருக்கு செல்வதாக எண்ணிக்கொண்டு பர்மாவில் செட்டியார்கடைக்கு பெட்டிப்பையனாக வந்து சேர்ந்து தனக்கென ஒரு குடும்பத்தையும் சமூக அந்தஸ்த்தையும் வளர்த்துக் கொண்டு பர்மாவில் காலூன்றும் சிவராமனின் கதை: ஆயிஷா பெற்ற மகனாக இருந்து பின்பு சிவராமனின் வளர்ப்பு மகனாய் மாறுகிற நாவலின் மையப்புள்ளியான முகமக யூசுப்பின் கதை. இம்மூவரைத் தவிர்த்து மற்ற பாத்திரங்களும் அவர்களின் வாழ்வும் இம்மூவரைச் சுற்றியே எழுதப்பட்டுள்ளது.
யூசுப் ஆயிஷாவிடமிருந்து சிவராமனிடம் வந்து சேர்தல், அதன் பின் பர்மாவில் ஒரு குத்துசண்டை வீரனாக தன்னை வளர்த்தெடுத்துக் கொண்ட விதம் ,காஜியாவுடனான அவனுடைய காதல், பாஹிர் உடனான அவனது நட்பு என பர்மாவிலும் சிங்கப்பூரிலுமாக யூசுப்பின் வாழ்வில் நடப்பவையே ’அம்பரம்’ நாவலின் மீதிக்கதை. குத்துச்சண்டை குறித்த வர்ணணைகள் எழுதப்பட்டிருந்த விதம் ரசிக்கும்படி இருந்தது. போலவே சிட்-போ வுக்கும் யூசுப்பிற்குமான நட்பை எழுதியிருந்த விதமும் புதியதாய் இருந்தது. போட்டி மனப்பாங்கு கொண்ட இரண்டு முரட்டுத்தனமான குத்துச்சண்டை வீரர்களுக்கிடையேயான நட்பை (almost bromance !?) இத்தனை மென் உணர்வுகளுடனான ஒன்றாக எழுதமுடியுமா என யோசிக்க வைத்திருக்கிறார் ரமா சுரேஷ் . முகமது யூசுப்பின் பாத்திரப்படைப்பு என அமெரிக்க குத்துச்சண்டை வீரர் முகமது அலியை நினைவூட்டியது. காரணம் என்னவென நாவலை வாசிக்கையில் உணர்ந்து கொள்வீர்கள். இங்கு குறிப்பிடப்படாத மேலும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் கதைகளும் நாவலில் இடம்பெற்றிருக்கின்றன.
இரண்டாம் உலகப்போர் பின்னணியில் அமைந்த நாவல் என்று ஒற்றை வார்த்தையில் அடக்கி விட முடியாதபடி, பர்மாவின் வரலாறு, ப்ரித்தானிய காலனியாதிக்கம், பெளத்த மத தத்துவங்கள், ஷின்பியு உள்ளிட்ட பல பர்மிய கலாச்சார நிகழ்வுகள் , அங்குள்ள இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறை, இந்தியா-பர்மா-சிங்கப்பூர்-சீனா-ஜப்பான் உள்ளிட்ட உலகநாடுகளின் இரண்டாம் உலகப்போர் காலத்து சர்வதேச புவியரசியல் நிகழ்வுகள், என அத்தனையையும் 400 பக்கங்களுக்குள் சொல்லிவிட முயன்றிருக்கிறார். 1930ஆம் ஆண்டில் பர்மாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், Prince of Wale, Repulse உள்ளிட்ட பிரித்தானிய போர்க்கப்பல்கள் ஜப்பானால் சிங்கப்பூர் படையெடுப்பின் போது மூழ்கடிக்கப்பட்ட நிகழ்வு, ஜப்பானியர்கள் சிங்கப்பூரிலும் பர்மாவிலும் இந்திய சீன போர்க்கைதிகளை நடத்திய விதம், சீனாவின் மீதான ஜப்பானிய படையெடுப்பின் போது சீனாவுக்கு உதவும் பொருட்டு ப்ரிட்டிஷ் உதவியுடன் அமைக்கப்பட்ட லெடோ சாலை (Ledo road), INA வின் தோற்றமும் மலேயாவிலும், பர்மாவிலும் சிங்கப்பூரிலும் தோட்டத் தொழிலாளர்களாக இருந்த தமிழர்கள் பெருமளவில் INAவில் சேர்ந்ததற்கான காரணமும், என பல உண்மை நிகழ்வுகளையும் துல்லியத்தன்மையுடன் நாவலின் போக்கில் இணைத்து சிறப்பாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் ரமா சுரேஷ் அவர்கள்.
இந்த அதீதமான வரலாற்றுத் தகவல்களும் , நிலவியலை விளக்க துல்லியத்தன்மைக்காக குறிப்பிடப்படும் அளவீடுகளும் எண்களுமே ( 4000 சதுர கிலோ மிட்டர் பரப்பளவு, 300 அடி உயரம் , இங்கிருந்து கிழக்கே அங்கிருந்து வடமேற்கில்.. மாதிரியான அளவீடுகள் தொடர்ந்து வருவது) கதையை விட்டு நம்மை கொஞ்சம் வெளித்தள்ளிவிடுகின்றன. போலவே கதைக்களம் சூழல் பற்றி விவரணைகளுக்கும், கதைப் பாத்திரங்கள் அவர்களுடைய உணர்வுகள் பற்றி விவரணைகளுக்குமான சமநிலை சரியாக அமையாதது போலவும் தோன்றியது.மேலும் ‘அம்பரம்’ நாவலில் அந்தந்த நாடுகளைச் சார்ந்த நிறைய கலாச்சார கலைசொற்களும், நிலவியல் குறிச்சொகளும் இடம்பெற்றிருக்கின்றன.
எ.கா:
தணக்கா (Thanaka) - பர்மியர்கள் முகத்தில் அழகுக்காக பூசிக்கொள்ளும் ஒருவகை மாவு
ஏ கலா - பர்மியர்கள் தமிழர்களைக் குறிப்பிடும் விளி
சுவெ மொடா பயாச்சி (Shwehmawdaw Pagoda) - பர்மாவின் பெகு நகரில் அமைந்துள்ள ஒரு பெளத்தமடாலயம்
இம்மாதிரியான சொற்களுக்கு எந்தவகையான அடிக்குறிப்போ (footnote) இணையான ஆங்கில உச்சரிப்போ குறிப்பிடப்படவில்லை. நாவலில் சொல்லியிருக்கிற தகவல்கள் பற்றி மேலும் படித்துத் தெரிந்துகொள்ள இணையத்தை நாடுவதிலும் சிரமமிருந்தது.
அம்பரம் என்ற சொல்லுக்கு ஆடை, கடல், உயர்ந்த வெளி, வானம், என பல பொருள் சொல்லுகிறது இணைய அகராதி. நாவல் புலம்பெயர்ந்தோரின் நிலம் சார்ந்த அடையாளம் குறித்தது என்பதால் நிலத்தைக் கடலாகவும், அடையாளத்தை ஆடையாகவும் உருவகித்துக் கொண்டால் இரண்டுக்கும் ‘அம்பரம்’ எனும் தலைப்பு பொருந்திப் போகின்றது
இறுதியாக, தன்னுடைய முதல் நாவலுக்கு இத்தனை பெரிய கதைக்களத்தை எடுத்துக் கொண்டு அதன் வழியே தத்துவம், மதம், சர்வதேசிய அரசியல், போரினால் சாமனியர்களின் வாழ்வில் ஏற்படும் தாக்கம், புலம்பெயர்வோரின் அடையாளச்சிக்கல்கள் ,தனி மனிதர்களின் உணர்வுப்போராட்டகளென அத்தனையையும் மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார் எழுத்தாளர். அவருடைய முன்னுரையிலிருந்து இந்த நாவலுக்காக மூன்றாண்டுகளுக்கு மேல் கடுமையாக உழைத்திருப்பதையும், பர்மா உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடியாகப் பயணித்து ஆய்வு மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அந்த உழைப்பு வீண்போகவில்லை. நாவலின் இறுதிவடிவம் சிறப்பாக அமைந்ததற்கு அந்தக் கடுமையான உழைப்பே காரணமென நினைக்கிறேன்.
ரமா சுரேஷ் அவர்களுக்கும், பதிப்பாளர் லஷ்மி சரவணகுமார் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும் <3
அம்பரம் | ரமா சுரேஷ் | மோக்லி பதிப்பகம் | 400 பக்கங்கள் | விலை ரூ. 350
புத்தகம் வாங்க: இணைப்பு இங்கே
References:
https://en.wikipedia.org/wiki/First_Anglo-Burmese_War
https://en.wikipedia.org/wiki/Shinbyu
https://en.wikipedia.org/wiki/1930_Bago_earthquake
https://en.wikipedia.org/wiki/Ledo_Road
https://en.wikipedia.org/wiki/Second_United_Front
https://en.wikipedia.org/wiki/Thanaka
https://en.wikipedia.org/wiki/Shwemawdaw_Pagoda
https://www.bbc.com/news/world-asia-28832296
புதன், 3 ஆகஸ்ட், 2022
லகுடு - அதிர்ஷ்டத்தின் சூதாட்டம்
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.குறள் 932 - அதிகாரம்: சூது
பொருள்: ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது?
நாம் தற்செயல் என்றோ அதிர்ஷ்ட்டம் என்றோ நினைக்கிற விஷயங்கள் உண்மையில் தற்செயலானவை தானா ? நிகழ்தகவுகளைக் கொண்டு எண்களோடு விளையாடி பெரும்பாலான களங்களில் வெற்றிக்கும் தோல்விக்குமான எல்லா வாய்ப்புகளையும் கணித்து விட முடிந்தாலும், உண்மையில் நிகழக்கூடியவை நமது தனிப்பட்ட அனுமானங்கள் எல்லாவற்றையும் மிஞ்சியவையாக இருந்தால் என்ன செய்வது ? காரண காரியங்களை ஆராய்ந்து கேள்விகளுடன் துறத்தி , சூட்சுமங்களை அறிந்துகொண்டு எல்லா முடிச்சுகளையும் அவிழ்த்துவிட முடியுமா ? ஒரு தனிமனிதன் செய்யக் கூடியவையா இவையெல்லாம் ?
கால்பதித்து நடப்பதற்கு சரியான பாதையோ, கையால் பற்றிக்கொண்டு மேலெறி விட கொடிகளோ எதுவுமற்ற பள்ளத்தாக்கில் இருந்துகொண்டு மலையுச்சியையும் தாண்டி பறக்கத் துடிக்கிறவனின் கதை தான் லகுடு. ’லகுடு’ என்பது ஒரு வகைக் கழுகின் பெயர்; கிட்டத்தட்ட அதற்கு இரையாகிவிடக் கூடிய ஒரு சிற்றுயிரைப் போன்றவன், வேட்டைப் பறவையாக உணவுச் சங்கிலியின் மேலேயிருக்கிற லகுடாக தன்னை வறித்துக்கொள்கிறான். அவன் மனதளவில் எப்போதுமே உயரங்களை விரும்புகிற உயரப்பறத்தலை விரும்புகிற ஒரு வேட்டைப் பறவையாகவே தன்னை உருவகப்படுத்திக் கொள்ளுகிறான்.
காலில் கட்டியிருக்கிற சிறுநூலை வெட்டி அறுத்துவிட்டு எப்போது பறப்பது ? எது உயரமென எப்போது தெரியும்? எனக்குக் கற்றுக் கொடுக்க ஆளில்லையா ?
’லகுடு’- சரவணன் சந்திரன்
சூதின் வேறொரு பெரு வடிவமான லாட்டரிச்சீட்டுகளின் உலகம் தான் கதைக்களம், அந்தச் சங்கிலியின் கடைசிக் கண்ணியாக, தெருத்தெருவாய் லாட்டரிச் சீட்டு விற்கிற அப்பாவுக்கு மகனாகப் பிறந்துவிட்டு ஏதேனும் ஒரு இழையைப் பிடித்து மேலேறிவிடத் துடிக்கிறவன் லகுடு. அடுத்த வேளைச் சோற்றுக்கு வழியில்லாவிட்டாலும் செய்கிற சில்லறைத் தொழிலில் நியாயமும் நேர்மையும் வேண்டுமென நினைக்கிறவர் அப்பா. அதிர்ஷ்டத்தை தற்செயல் என எண்ணிக்கொண்டு அதை எதிர்நோக்கி காத்திருக்கிற இடத்தில் இருந்து தான் நினைக்கிற நேரத்தில் விரும்புகிற ஆளுக்கு அந்த அதிர்ஷ்டத்தை பெற்றுத் தரக் கூடிய இடத்திற்கு நகர்கிறான் கதைசொல்லி. ஒவ்வொரு கட்டத்திலும் அந்தத் தொழிலின் நெளிவுசுளிவுகளை அறிந்து கொண்டு யாராவது ஒருவரின் கைபிடித்து மேலேறிவிடத் துடித்தவன் கடைசியில் என்னவானான் என்பது மீதிக்கதை
உள்ளூரில் துணை நிற்கிற கதிர்வேலு, அடுத்தகட்டத்துக்கு இழுக்கிற பாலக்காடு ஜோசப் என்கிற செல்வம், லகுடை நம்பி தொழிலில் இறங்கிய அந்தப் பெயரில்லாத முதலீட்டாளர், காசு பணம் பார்த்தாலும் நிதர்சனம் பேசுகிற நண்பன் சோலைச்சாமி, வேளொரு தளத்தில் கூட நிற்கிற நண்பன் மாணிக்கவாசகம், காலைத்தாங்கி நடந்து தேய்ந்தாலும் நேர்மை பேசும் அப்பா, அம்மா விட்டுப் போன மாதா சிலைய, கடைசியாக நிலாப் பெண் அர்ச்சனா என அத்தனை பாத்திரங்களும் மனதில் நிற்கின்றார்கள்.
உண்மையில் லாட்டரிச்சீட்டுகள் பற்றியும் அது எத்தனை பெரிய வலைப்பின்னல், எத்தனை கைகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன, அதிர்ஷ்டம் யாரால் யாருக்காக நிர்ணயிக்கப்படுகிறது என்கிற விவரங்களையும் படிக்கையில் வியப்பும் ஆயாசமுமே ஒருசேர மிஞ்சுகிறது. சரவணன்சந்திரன் அவருடைய வழக்கமான எழுத்துப் பாணியினால் நம்மை இந்த உலகிற்குள் இழுத்துக்கொள்கிறார்.ஒரு காலத்தில் அதிர்ஷ்டத்தின் பெயரால் எத்தனையோ உழைக்கும் மக்கள் தங்களுடைய் வருமானத்தையும் வாழ்வாதரத்தையும் லாட்டரிச்சீட்டுகளில் இழந்திருக்கிறார்கள் என்று நினைக்கையில், இன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டுமாவது லாட்டரிச்சீட்டுகளை அரசு முழுமையாக தடை செய்திருப்பதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ளமுடிகிறது.
’லகுடு’ நாவலில் தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்தமான விஷயம் எதுவென்றால், அடிமட்டத்தில் இருக்கிற ஒருவன் கடைத்தேற்றம் பெறுவான் என்கிற முகக்குறி தெரிந்தால் சுற்றியிருப்பவர்கள அவனை தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பார்கள். அவன் பாதை மாறி போவது தெரிந்தால் ‘தம்பி இது தப்புடா, ஒதுங்கிப்போ’ என எச்சரிப்பார்கள். மனம் நிறைய நம்பிக்கையை மட்டும் சுமந்துகொண்டு வெறும் கையோடு நிற்கிறவனுக்கு தைரியம் சொல்லி சரியான நேரத்தில் கைதூக்கி விடாவிட்டாலும் வழியாவது காட்டிவிடுவார்கள். இந்த நாவல் முழுக்கவும் அந்த மாதிரி நிகழ்வுகளும் மனிதர்களும் உண்டு. என்னுடைய வாழ்விலும் வெவ்வேறு தருணங்களில் அப்படியானவர்களைக் கடந்து வந்திருக்கிறேன். அவர்களுக்கு என்றென்றைக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
சரியான தருணத்தில் படிக்க வேண்டுமென இரண்டாண்டுகளாய் காத்திருந்துவிட்டு, ஒரு வழியாக 7800 அடி உயர மலைமேல் தேயிலைத்தோட்டத்தின் குளிர் சாரலில் அமர்ந்து கொண்டு, ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். படித்து முடிக்கையில் ஒரு லகுடாக பறந்து கொண்டிருந்தேன். இதுவரை அவருடைய ‘அஜ்வா’ நாவலை எனக்கானதாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். இனி அந்த இடம் ‘லகுடு’க்கு தான். சுபிட்ச முருகனிலும், அத்தாரோவிலும் எனக்கு பிடிபடாதது லகுடுவில் பிடிபட்டதாக உணர்கிறேன்.
வாழ்த்துகளும் நன்றியும் அண்ணே..! <3
லகுடு - சரவணன் சந்திரன்
கிழக்கு பதிப்பகம் | விலை ரூ. 200 | 183 பக்கங்கள்
புதன், 22 ஜூன், 2022
நட்சத்திரத்தைக் கைகளில் ஏந்துதல்
சனி, 11 ஜூன், 2022
விக்ரம் - 2022 - There lived a ghost
புதன், 8 ஜூன், 2022
இறவான் - பா.ராகவன் | இசையிற் பெருந்தக்க யாவுள ?
” ஒரு மேதையின் பெரும் சிக்கலே அவன் ஒரு மேதையாக இருப்பதும் அதை அவன் அறிந்திருப்பதும் தான்.இது விவரிக்க முடியாத பாடு. சராசரிகளுக்குப் புரியாது. ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்களும் சராசரிகளின் உலகில் தான் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. தன் குழந்தையின் சந்தோஷத்துக்காக மண்டி போட்டு யானை போல நடந்துகாட்டும் தந்தைகளைப் போலத்தான் அவர்கள் வாழ்கிறார்கள். தந்தைகள் சில நிமிடங்களில் விளையாட்டை முடித்துக் கொண்டு எழுந்துவிடுகிறார்கள். மேதைகள் இறக்கும்வரை மண்டிபோட்டே நடக்கவேண்டியதாகிவிடுகிறது”
-இறவான் (பா.ராகவன்)
சிறிதொரு இடைவெளிக்குப் பின் ஒரு புனைவு நூலைக் கையிலெடுக்கலாமென முடிவு செய்ததும் வாசிக்கத் தேர்ந்தெடுத்த புத்தகம் ’இறவான்’. மேற்கண்ட பத்தி நாவலின் ஒரு பகுதியில் இடம்பெற்றிருக்கிறது. உண்மையில் மேதைகள் என்போர் யார் ? மேதைமை எனும் பண்பு ஒரு தனி மனிதருக்கு பிறவியிலேயே அமையப்பெற்ற ஒன்றா ? அல்லது கடுமையான பயிற்சியினால் அடையப் பெறுவதா ? போலவே ஒருவரின் மேதைமையைக் கண்டுணர எல்லோராலும் முடியுமா ? அல்லது சக பேரறிவாளர்கள் மட்டுமே கண்டு காமுறுவரா ? எத்தனை எத்தனைக் கேள்விகள்...!
இந்தப் புத்தகம் அப்படியொரு இசைமேதையான ஆப்ரஹாம் ஹராரி என்கிற எட்வின் ஜோசப் என்கிற சந்தானப்ரியனைப் பற்றியது. எட்வினின் சிறுவயதில் ஓர் நாள், அப்பா வாங்கித் தந்த 5 ரூபாய் புல்லாங்குழலில் அற்புதமான திரைப்பாடலை பிசிறின்றி வாசிக்க அவனது பெற்றோர் வியந்து திகைத்துப் போகிறார்கள். முறையாக எந்த வகை இசைப் பயிற்சியையும் அதுவரை மேற்கொண்டிராத எட்வின் அந்த தருணத்திலிருந்து 'Prodigy' ஆகிறான். எந்த இசைக்கருவியிலும் எந்த இசையையும் வாசிக்கக்கூடிய மகா மேதையாகிறான்.
இசை மேதைமை அவனை தேடிக் கண்டடைந்த அதே நேரத்தில் மனப் பிறழ்வும் அவனை ஆட்கொள்கிறது. தனது பெயர் ‘ஆப்ரஹாம் ஹராரி’ எனவும் தான் ஒரு யூதன் எனவும், இஸ்ரேலுக்கு செல்ல விரும்புவதாகவும் சொல்லத் துவங்குகின்றான்.சிறுவயதில் எங்கோ கேட்ட ஒரு பெண்குரலின் பாடலை மனதில் வரித்துக் கொண்டு அவளை, அவளது குரலை தேடியலைவதில் தொடங்கி, இசைக்குழு அமைத்து நண்பர்களுடன் பாடிக்கொண்டு திரிவதிலிருந்து, திரைப்படத்திற்கு இசையமைப்பது, அதுவரையில் உலகம் கேட்டிடாத ஒரு சிம்பொனியை எழுதி பெர்லினில் அரங்கேற்ற விழைவது, இசையைத் தேடி நாடோடியாய் போதையில் அலைவது, தன்னை ஒரு யூதனாக அடையாளப் படுத்திக் கொண்டு இஸ்ரேலுக்கு செல்ல வேண்டுமென நினைப்பது, என ஒரு இலக்கேயில்லாமல் காற்றிலலையும் இலையாய் திரிகிற எட்வின் என்கிற ஆப்ரஹாம் என்கிற சந்தானப் ப்ரியனுக்கு என்ன ஆனதென்பது மீதிக்கதை.
எட்வினின் இசைக்குழுவில் ட்ரம்மராக வரும் ஜானவியின் பாத்திரப்படைப்பு தொடக்கத்தில் தெளிவான ரகளையான ஒன்றாக இருந்தது. ஆனாலும் தேய்வழக்காக இசையைத் தவிர ஏதுமறியா மேதையை விழுந்து விழுந்து காதலிக்கிற, அவனுக்காக எதையும் செய்யத் துணிகிற, முற்றிலும் சரணடைந்து விடுகிற ஒரு பாத்திரமாக மாறிவிடுகிறது.ஆனால் காதல் பற்றிய திருமணம் அவளுடைய புரிதலும் தெளிவாகவே இருக்கிறது. அதை அவள் எட்வினிடம் எடுத்துச் சொல்லும் விதமும் அட்டகாசம்.
//”காதல் வண்ணமயமானதில்லை. அது ஒற்றை வண்ணம் கொண்டது. கருஞ்சாம்பல் வண்ணம் . ஆனால் சரணாகதி வண்ணமற்றது. நீரைப் போன்றது. தாகத்துக்கோ கு*டி கழுவவோ மிகவும் உபயோகமானது”
-இறவான் (பா.ராகவன்)//
மெண்டல்ஷானையும் , இளையராஜாவையும், மொசார்ட்டையும், அவர்களின் இசையை தரம்பிரித்து ஆராய்ந்து இது சரி இது தவறு என மதிப்பீடு செய்கிற ஒரு ஏதிலியை , அவன் உண்மையான மேதையாகவே இருந்தாலும் இந்த உலகம் ஏற்றுக்கொள்ளவோ, அவன் சொல்வதை ஒப்புக் கொள்ளவோ தயாராக இல்லை என்கிற எதார்த்தத்தை இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர்.
//நூறு நூறு வருடங்களாக உலகம் ஏற்றுக்கொண்டு பீடத்தில் ஏற்றி அமர வைத்து சிலையாக்கிவிட்ட சில மேதைகளை இந்த அற்பன் மட்டம் தட்டுகிறான் என்று தோன்றும். அப்படித்தோன்றினால் அதில் மூன்றில் இரண்டு பங்கு பிழையில்லை.அவர்கள் மேதைகள் என்பதும் உண்மை. நான் அற்பன் என்பதும் உண்மை. மட்டம் தட்டுவதாகத் தோன்றுவது மட்டும் பிழை. ஒரு தராசுக்குரிய மரியாதையை இச்சமூகம் தருவதில்லை
-இறவான் (பா.ராகவன்) //
இசைக்கருவிகளை வாசித்தல் குறித்தும், இசை குறித்தும், ஒரு மேதையின் சிந்தனைப் பாட்டை சாமானியர்கள் (அலட்சியமாக) எதிர்கொள்கிற விதம் குறித்தும், மனப்பிறழ்வு கொண்டவனான எட்வினின் குரலாக பேசும் அத்தனையுமே தனித்தனியாக பொன்மொழியாகக் கொண்டாடப்பட வேண்டியவை. உண்மையில் இசைகுறித்த கூர்நோக்கும், உணர்வுகள் பற்றிய ஆழமான சிந்தனையும் இல்லாமல் ஒரு புனைவில் கூட இந்த மாதிரியான சொற்றொடர்களை எழுதிவிட முடியாதென தோன்றுகிறது.
// எனக்கென்னவோ கலைமனம் என்று ஒன்று இருந்துவிட்டால் கருவிகள் ஒரு பொருட்டில்லை என்று திரும்பத் திரும்ப தோன்றிக் கொண்டிருந்தது.மனத்துக்குள் இசை நிரம்பியிருந்தால் போதும் குறிப்பிட்ட கருவியின் அடிப்படை சூட்சுமம் குறித்த அறிவு இருந்தால் போதும். சில் தடுமாற்றங்களுக்குப் பிறகு யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் வாசிக்கத் தொடங்கிவிட முடியும் என்றே நினைத்தேன்.
-இறவான் (பா.ராகவன்) //
இறுதி அத்தியாயத்தை வாசிக்கையில் பா.ரா நிகழ்த்தியிருக்கிற சொல் விளையாட்டுகளை முதலில் அச்சுப்பிழை என்றே கருதியிருந்தேன். பின்பு தான் கதையின் போக்குடன் இணைத்து அதனைப் புரிந்து கொள்ள முடிந்தது. Brilliance...! நாவலின் துவக்கத்தில் கதை தொடங்குகிற நிகழ்கிற சூழல் தெளிவாகத் தெரிந்த பின்பும் கதையின் ஓட்டத்தில் அதனை முற்றிலுமாக மறந்துவிட்டு இறுதி அத்தியாயத்தில் நமக்கு திடீரென மூளையில் உதிக்கிற போது எல்லாமும் முடிந்து விடுகிறது.
ஒரு பாடலையோ அல்லது இசைத்துணுக்கையோ நேரடியாகக் கேட்டால் நாம் உணர்ந்து கொள்ளுவதை , வெறுமனே அந்த உணர்வைப் பற்றி எழுதுவதன் மூலம் கடத்திவிட முடியுமா என்ன ? இந்த நாவல் முழுக்கவும் விரவிக் கிடக்கிற வெவ்வேறு பாடல்களையும், இசை துணுக்குகளையும் , எட்வின் வெவ்வேறு இசைக்கருவிகளில் வாசிக்கிற அத்தனையையும் தனது எழுத்தின் வழியே நமக்கு கடத்திவிடுகிறார் எழுத்தாளர் பா.ராகவன். ஒருவேளை இன்னாரைப் பற்றிய கதையாக இருக்குமோ, அல்லது அவராக இருப்பாரோ என நாம் யாரை நினைத்தாலும் அவர்களையும் கதையினூடாகவே உலவவிட்டு எட்வின் என்னும் மேதை இவர்களினின்று மாறுபட்டு தனித்து நிற்பவன் என நிறுவிவிடுகின்றார்.இதுவரையில் பா.ரா அவர்களின் எழுத்தில் புனைவல்லாதவையையே வாசித்திருந்த எனக்கு, அவருடைய வழக்கமான எழுத்துப் பாணியிருந்து முற்றிலும் மாறுபட்ட நடையில் அமைந்திருந்தது இறவான் நாவல்.
இறவான் - இசையைத் தேடி <3
இறவான் - பா.ராகவன் | எழுத்து பிரசுரம்| 329 பக்கங்கள் | ரூ.350/-
இறவான் நாவலில் இடம்பெற்ற பாடல்களை யூட்யூப் ப்ளேலிஸ்ட்டாகத் தொகுத்தளித்திருக்கும் சிவராமன் கணேசன் அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றி <3.
இணைப்பு இங்கே - https://www.youtube.com/playlist?list=PLeuoo_Cwzt0BtcnE6lsFD3CyLYnkv3m1T
வெள்ளி, 22 ஏப்ரல், 2022
காலங்களில் அது வசந்தம் - இளம்பரிதி கல்யாணகுமார்
ரசனை என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியானது. ரசனை என்கிற வடமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லாக சுவையுணர்ச்சி அல்லது சுவையுணர்தல் எனச் சொல்லலாமா தெரியவில்லை. இசை, மொழி, உணவு, இலக்கியம், கலை என அத்தனையிலும் தனக்கு ஏற்ற ஒன்றையோ அல்லது தன்னால் புரிந்துகொள்ள முடிகிற ஒன்றையோ கண்டுணர்வது, மெச்சுவது, அதனை தனக்கானதாகக் கருதுவது; இவையனைத்தையுமே ரசனை என்கிற வரையறையின் கீழ் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு திரைப் பாடலையோ அல்லது திரைப்படக் காட்சியையோ நாம் ரசிப்பதற்கு, பல காரணங்கள் இருக்கலாம்.ஏதோ ஓர் நினைவுடன் அவை பிணைந்திருப்பதாலோ, நமது வாழ்வின் முக்கியமானதொரு கட்டத்தில் அந்தப் பாடலை நாம் கேட்டதாலோ, மனதுக்கு நெருக்கமான யாரோ ஒருவருக்கு அது விருப்பமான பாடல்/படம் என்பதாலோ , கடந்த காலத்தை மனதில் மீட்டுருவாக்கம் செய்வதாலோ, ஒரு பாடல் அல்லது திரைப்படம் நமக்கு முக்கியமானதாகி விடுகின்றது. நமக்கு விருப்பமான , முக்கியமான அந்தப் பாடல் வேறொருவருக்கு வேறு மாதிரியான உணர்வையும் நினைவுகளையும் தந்திருக்கலாம். அந்தப் பாடலுக்கான களமும், காட்சியும், பாத்திரங்களும் அவர்களின் மனதில் முற்றிலும் வேறொன்றாக இருக்கலாம். பாடல் ஒன்றே; பார்வைகளோ பல்லாயிரம்.
அப்படி, ஒரு தலைமுறைக்கே பல நினைவுகளையும், உணர்வுகளையும் அள்ளித்தந்த பாடல்களுள் ஒரு நூறு பாடல்கள் பற்றிய புத்தகமே ‘காலங்களில் அது வசந்தம்’. உண்மையில் பொதுமக்களின் ரசனையென்பது கால/சமூக மாற்றங்களுக்கேற்ப பத்தாண்டுகளுக்கொரு முறை மாறிக் கொண்டேயிருக்கும் (அல்லது நான் அப்படி நினைக்கிறேன்). அவ்வகையில் கையில் இருக்கிறவற்றை ரசிக்கும் அதே வேளையில், கடந்த காலத்தில் கொண்டாடப்பட்டவற்றின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதும் அவசியமாகும்.
அதனாலேயே நண்பர் இளம்பரிதி அவரது முந்தைய புத்தகமான ‘மடை திறந்து’ போல பாடல்வரிகள் (சொல் நயம், சந்தம்) பற்றி மட்டும் எழுதாமல் இந்நூலில் ’இடம் சுட்டி பொருள் விளக்கம்’ சொன்னாற்போல் பாடல்கள் எழுதப்பட்ட சூழல், பாடல் இடம்பெற்ற திரைப்பட உருவாக்கம் குறித்த தகவல்கள், பாடலாசிரியர்களின் அனுபவங்கள், இயக்குநருக்கும் பாடலாசிரியருக்கும் இசையமைப்பாளருக்கும் இடையேயான உறவு பற்றி, பாடல் படமாக்கப் பட்ட விதம், பாடல்வரிகள் கதையுடன் பொருந்திபோகும் விதம் என இத்தனையையும் தன்னுடைய ரசனையின் பார்வையில் அழகாக எழுதியிருக்கிறார். வெறுமனே சொல்லக்கேள்வியாக இல்லாமல், சொல்லியிருக்கிற தகவல்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்கவும் கடுமையாக உழைத்திருக்கின்றார்.
உங்களுக்கு பழைய பாடல்கள் விருப்பமானவை என்றால், அப்பாவும் அம்மாவும், தாத்தாவும் மனமுருகி ரசித்த பாடல்களைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால், தமிழ்த் திரையிசையின் மேல் காதல் கொண்டவரென்றால், உறுதியாக வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
காலங்களில் அது வசந்தம் - திரையிசையின் நினைவோடையில் ஒரு அழகிய படகுப் பயணம் <3 <3 <3 நன்றியும் வாழ்த்துகளும் இளா..!
பி.கு:
புத்தகத்தில் எனக்கு சிக்கலாகப் பட்ட விஷயங்களைப் பற்றி சொன்னபோது திறந்த மனதுடன் செவிசாய்த்த இளாவுக்கு என் அன்பு <3 உருவாக்கத்திலும், அச்சுக்கோர்ப்பிலும் திருத்தம் தேவைப்படும் இடங்களையும் பதிப்பாளர்களிடம் நேரடியாகவே சொல்லியிருக்கிறேன். அவர்களுக்கும் எனது நன்றி <3
’காலங்களில் அது வசந்தம்’
இளம்பரிதி கல்யாணகுமார்
377 பக்கங்கள் - விலை ரூ:420.00
வாசகசாலை பதிப்பகம்
புத்தகம் வாங்க - தொடர்புக்கு: 9942633833, 9790443979
ஆன்லைனில் வாங்க: https://www.commonfolks.in/books/d/kaalangalil-athu-vasantham
சனி, 8 ஜனவரி, 2022
என்னுடைய 2021 – ஒரு பார்வை
#My2021 #my2021recap #sudharsanh