சமீபத்தில் நாம் அனைவருமே மிக அதிகம் கேட்ட/ கேள்விப்படுகிற வார்த்தைகள் இவை. சரியான திட்டமிடலும் முறையான வழிமுறைகளும் இல்லாமல் தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல் முடிவெடுக்கிற ஒரு தலைமையைக் கொண்டிருக்கும் அரசாங்கத்தால் நாடுமுழுக்க சாமானியர்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள் என பார்த்துக் கொண்டிருக்கிறோம். 86% சதவிகிதம் புழக்கத்தில் இருந்த 500-1000 ரூபாய் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்தன. ATMகளிலும் வங்கிகளிலும் தங்கள் பணத்தை எடுப்பதற்கே மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. சில்லறை வர்த்தகம் செய்பவர்கள், சிறுவணிகர்கள், நேரடியான பாதிப்புக்குள்ளானார்கள்.ரிசர்வ் வங்கியும் பிரதமரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி கைகாட்டி குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 150 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்
What went wrong ? பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆரம்பத்தில் வரவேற்றவர்கள் கூட பின்னாட்களின் பொதுமக்களுக்கு ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களாலும், implementation சொதப்பல்களாலும் மிக மோசமாக விமர்சிக்கத் தொடங்கினார்கள். முதலில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கையாகச் சொல்லப்பட்டு, பின்பு cashless economyக்கான தொடக்கம் என்று அரசாங்கத்தால் சப்பைக்கட்டு கட்டப்படுகிற இந்தத் திட்டத்தின் அசலான நோக்கம் தான் என்ன ? இந்தியாவின் பொருளாதார வளார்ச்சிக்கும் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் இது எந்த அளவில் பயன்படும் ? கறுப்புப் பணம் மொத்தத்தையும் பதுக்கியவர்கள் ரூபாய் நோட்டுகளாகவே வைத்திருப்பார்கள் என நம்பும் அளவுக்கு அரசாங்கம் அப்பாவியா ? சுற்றி சுழல்கின்றன கேள்விகள். நமக்குத் தெரியவேண்டியது என்ன ?
இனி கறுப்புக் குதிரை புத்தகத்தில்...
கறுப்புப் பணம் என்றால் என்ன? உலகம் முழுகம் முழுதும் எந்தெந்த வழிகளில் எல்லா கறுப்புப் பணம் உண்டாகிறது என்பதில் தொடங்கி, ஸ்விஸ் வங்கிக் கணாக்குகள், ஹவாலா மோசடி, வங்கிகள் வழியாகவும் காப்பீட்டு நிறுவனங்கள் வழியாகவும் கறுப்புப் பணத்தை வெளுப்பாக்குகிற (laundering) வேலை, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் கட்டற்ற வர்த்தக மண்டலங்கள் வழியாக செய்யப்படுகிற laundering, பங்குச் சந்தைப் பரிமாற்றங்கள் வழியாக நிகழ்கிற தில்லாலங்கடி வேலைகள் என கறுப்புப் பணம் உருவாகிற/வெளுப்பாக்கப்படுகிற அத்தனை வழிமுறைகளையும் தரவுகளோடு விளக்கிச் சொல்கிறார் நரேன்.
அதன் பின் நவம்பர் 8 நிகழ்த்தப்பட்ட Demonetization என்கிற பொருளாதார பேரழிவு குறித்து விளக்கிவிட்டு அதன் விளைவுகளையும், நாடுமுழுவதும் ஏற்பட்ட பாதிப்புகளையும் தற்போதைய நிலையையும் விளக்கிச் சொல்கிறார். ரொக்கமில்லாப் பொருளாதாரத்துக்கான எந்தவிதமான உள்கட்டமைப்பும் வசதிகளில் முழுமையாக இல்லாத நம் நாட்டில் இது எந்த அளவு சாத்தியம் என்கிற கேள்வி நம் முன் வைக்கப்படுகின்றது. நீ உன் பணத்தை இப்படித் தான் செலவளிக்க வேண்டும், இவ்வளவு தான் கையாள வேண்டும் என்று அரசாங்கம் தனிமனிதர்களுடைய உரிமைகளில் தலையிடுவது பற்றியும் கேள்வி எழுப்பப்படுகின்றது. இன்னும் ஏகப்பட்ட தகவல்கள். இத்தனையும் 20 தலைப்புகளில் 136 பக்களுக்குள் சொல்லிவிடும் முயற்சியே பாராட்டுக்குரியது.
பொருளாதாரம் குறித்த அறிவும், உலகளாவிய பார்வையும் நாலைந்து டேப்லாய்ட் கட்டுரைகளை நுனிப்புல் மேய்வதால் மட்டும் வருவதில்லை. தீவிரமான ஆய்வும் ,பெரும் உழைப்பைக் கோருகிற வாசிப்பும், பல வருட கூர்நோக்கும் மட்டுமே பொருளாதாரம் குறித்த ஒரு தெளிவான பார்வையையும் உருவாக்கும். அப்படிப்பட்ட தெளிவுடைய ஒருவர், தான் புரிந்துகொண்ட விஷயங்களை மிக மிக எளிமையாகவும் வாசிக்கிற எல்லா தரப்பு மக்களுக்கு புரியும் வகையில் கொண்டு வந்திருக்கிற இந்தப் புத்தகம் நிச்சயம் தமிழுக்கு ரொம்ப புதிய முயற்சி, Wall street journal, Bloomberg மாதிரியான தளங்களில் வெளியாகிற கட்டுரைகளின் தரத்தோடும்/தரவுகளோடும் வாரப்பத்திரிக்கை வாசகர்களுக்கும் புரியக்கூடிய எளிமையான எழுத்துநடையோடும் வெளிவந்திருக்கிற ‘கறுப்புக் குதிரை’ ஒரு Must Read...!!
வாழ்த்துகள் நரேன் அண்ணா..!! :)
‘கறுப்புக் குதிரை’ - நரேன் ராஜகோபாலன்
நவி பதிப்பகம் - ரூ.150/-