நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

நண்பன் – The Best Friend


நேற்று காலை 7.30 மணிக்காட்சி சங்கம் திரையரங்கில் வேட்டை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பி காசி திரையரங்கம் வந்து 11.30 மணி காட்சியில் நண்பனும் பார்த்தாகிவிட்டது.


முன்குறிப்பு: கதை தெரிந்த கதையாக இருந்தாலும் காட்சிகளை விவரித்தால் சுவாரசியம் குறைந்து விடுமென்பதால் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கின்றேன்.

ஷங்கர் இயக்கம்,ஏற்கனவே இந்திய அளவில் சூப்பர் ஹிட்டான 3 இடியட்ஸின் ரீமேக்,ஆரவாரமில்லா ரிலீஸ், ஃப்ரெஷ்ஷான விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா என பெரிய ஸ்டார்காஸ்ட், இப்படி எதிர்பார்ப்பைத்தூண்டும் விஷயங்கள் ரொம்பவே அதிகம்.எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே ஈடு செய்திருக்கின்றார்கள்.

கதை எல்லோருக்குமே தெரிந்த விஷயமாக இருந்தாலும் படத்தின்மேல் பெரிதாய் ஆர்வம் வரக் காரணம் ஷங்கர்.அவரின் முதல் ரீமேக் இது.முதன் முதலில் 3 இடியட்ஸ் பார்த்தபோது இந்த படத்தைத் தமிழில் எடுத்தால் எப்படி திரைக்கதை அமைப்பார்கள்...யாரெல்லாம் நடிப்பார்கள்..என நிறைய யோசித்திருக்கிறேன்.ஷங்கர் இயக்கம் என்றவுடன் மகிழ்ந்த மனது அமீர்கான் கேரக்டரில் விஜய் என்றறிந்தவுடன் பகீரென்றது...குத்து பாட்டு...பறந்தடிக்கிற ஃபைட் என மசாலா கலந்து பஞ்சர் ஆக்கிவிடுவார்களோ என பயந்தேன்.நல்ல வேலை அப்படி எதுவும் நடக்கவில்லை.

பஞ்சவன் பாரிவேந்தனாக விஜய்... என்ன சொல்வது இவரை... சச்சின்,காவலனுக்குப் பிறகு இப்படி ஒரு Soft, Subtle  பெர்ஃபார்மன்ஸில் விஜய்யை பார்ப்பதே ஆச்சரியமான,ஆறுதலான விஷயமாக இருந்தது.மனிதர் அப்படி பிய்த்து உதறியிருக்கின்றார் நடிப்பில்... சின்ன சின்ன ரியாக்‌ஷன்ஸ், பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி என அத்தனையிலும் மொத்தமாய் ஸ்கோர் செய்கின்றார் விஜய்.
சேவற்கொடி செந்திலாக ஷர்மான் ஜோஷி கேரக்டரில் ஜீவா, தான் இந்த பாத்திரத்திற்கான மிகச்சரியான தேர்வு என நிரூபித்திருக்கின்றார்.முதலில் பாரியோடு பழகுவதில் தயக்கம் காட்டுவதாகட்டும், மாடியிலிருந்து குதித்து அடிபட்டு பின் தேறி வந்து தன்னம்பிக்கையொடு இண்டர்வியூவில் பேசும் காட்சிகளாகட்டும்...Jeeva at his best… என்றுதான் சொல்லவேண்டும்.வெங்கடச மாதவன் ரோலில் ஸ்ரீகாந்த், அதிகம் ஸ்கோப் இல்லாவிட்டாலும் தனக்கான காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக சிறப்பாகவே செய்திருக்கின்றார்.இலியானா கேடிக்குப் பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.செம்ம கியூட்.. ;) J நம்ம ஊருக்கு பரிச்சயமில்லாத சைஸ் ஜீரோ..ஸ்லிம் பியூட்டியாக...அழகாய் இருக்கின்றார்... பாடல்களில் ஷகிரா ஸ்டைல் ஹிப் டான்ஸ் சூப்பர்... J  

திரைப்படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ரெண்டு பேர் சதுர் பாத்திரத்தில் ஸ்ரீவத்ஸனாக வரும் சத்யனும், பிரின்சிபால் விருமாண்டி சந்தானமாக கலக்கியிருக்கும் சத்யராஜும் தான்.கொஞ்சமே கொஞ்சம் நாடகத்தனமாய் இருந்தாலும் ரெண்டு பேருமே அவரவர்கள் பாத்திரங்களில் பட்டைய கிளப்பிருக்கின்றார்கள்..!!

பாடல்களிலும் சரி..பின்னணி இசையிலும் சரி... ஹாரிஸ் ஜெயராஜிடம் நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் ஷங்கர்.ஹாரிஸும் தனது வழக்கமான டெம்ப்ளேட் ட்யூன்களை விட்டுவிட்டு கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கின்றார். இவ்வளவு கலர்ஃபுல்லாகவும்..யூத்ஃபுல்லாகவும் இருக்கின்ற ஒரு கல்லூரி சார்ந்த கதைக்கு
மனோஜ் பரமஹம்ஸாவின் ஒளிப்பதிவு மிகப் பெரிய பலம்.சுஜாதா இல்லாத குறையை கார்க்கி தீர்த்துவைத்திருக்கின்றார்.அவ்வளவு அருமையான ஷார்ப்பான வசனங்கள்...

மொத்தத்தில் 2012ல் முதல் படமே விஜய்க்கு மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமையுமென்பதில் சந்தேகமே இல்லை...!!!

நண்பன் – ஆல்ல்ல்ல்ல்ல் இஸ்ஸ்ஸ்ஸ் வெல்ல்ல்ல்...!!!!

பின்குறிப்பு : வேட்டை விமர்சனம் அடுத்த பதிவில்...!!

புதன், 11 ஜனவரி, 2012

நீ நான் மற்றும் நம் நினைவுகள்...!!!


அழகான பூந்தோட்டங்களின் ஊடே

கை கோர்த்தபடி

மகிழ்ச்சியாக

சுற்றித் திரிகின்றோம் நாம்..



பூக்களை நுகர்ந்தபடி

சிரித்து சிரித்து

என்னவோ

பேசிக்கொண்டேயிருக்கின்றாய் நீ...

தலையசைத்தபடியே உன் முகத்தை

பார்த்துகொண்டு நடக்கின்றேன் நான்..



ஏதோவொரு பாடலை

முணுமுணுக்கிறாய் நீ..

உலகின் மிக

இனிமையான பாடலாக

அது இருந்திருக்கவேண்டும்

என்பதுபோல்

ரசிக்கத் தொடங்குகிறேன் நான்...



வசந்த காலத்தின் வாசம்

நம்மைச் சுற்றிலும்...

பின்பு கடற்கரை

மணல்வெளியில்

கால்தடம் பதிக்கத் தொடங்கிறோம்....

நம்மை பிடிக்க முயன்ற

அலைகளோடு விளையாடி நகர்கிறோம்..



திடீரென்று கையை உதறிவிட்டு..

முடிவில்லா கடலின் நடுவே

ஓட ஆரம்பித்தாய் நீ...



என்னென்னவோ

அழுது அரற்றியபடி

பின் தொடர்ந்து

ஓடிவருகின்றேன்  நான்...



ஓடி ஓடி..

சிறு புள்ளியாய்.. ஒளிக்கீற்றாய்..

தேய்ந்து மறைந்தாய் நீ..!!



அழுது சோர்ந்த

கண்களோடு..

அயர்ச்சியில்

விழித்தெழுகின்றேன் நான்...!!

கனவுகளின்

மிச்சமாய் எச்சமாய்

சிதறிக்கிடந்த உன் நினைவுகளை

அசைபோட்டபடி...

திங்கள், 9 ஜனவரி, 2012

அழிக்கப் பிறந்தவன் - Survival of the Fittest


முன்பே மூன்று புத்தகங்கள் எழுதியிருந்தாலும் இது யுவகிருஷ்ணா அண்ணனின் முதல் புதினம் என்பதால் மிகுந்த ஆவலோடு காத்திருந்தேன் 'அழிக்கப் பிறந்தவனு'க்காக.வலைப்பூவில் வெளியிட்டிருந்த அத்தியாயங்கள் வேறு ஏகத்துக்கும் ஆர்வத்தைக் கிளப்பிவிட்டபடியால்... வெளியிட்ட அன்றே வாங்கியாயிற்று இந்த புத்தகத்தையும்... அன்றிரவே படித்தும் முடித்தாயிற்று.


ஒரு கொலை,ஒரு போலிஸ் கம்ப்ளைன்ட், இதனைத் தொடர்ந்து கோர்வையாக நடக்கும் விசாரணைகளும்,தொடர் கொலைகளும் விறுவிறுப்பை அதிகமாக்குகின்றன.பர்மா பஜார் பெருந்தலை காதர் பாய், அவரின் சிஷ்யன் மாரி, அவனுடைய நண்பன்...இப்படி வரிசையாக அறிமுகமாகும் ஒவ்வொரு கேரக்டரும் கதையை அடுத்தடுத்த  கட்டத்துக்கு கொண்டு செல்கின்றன.

தட தடவென எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் போல அப்படியொரு வேகமான நடை கதையிலே... கதாபத்திரங்களின் படைப்பு, அவர்களின் பின்னணி, அவர்கள் புழங்கும் இடங்கள்...அத்தனையிலும் அப்படி ஒரு டீட்டெய்லிங் ().பர்மா பஜார் வியாபாரம்,திருட்டு வி.சி.டி கும்பல், கடல் வழி கடத்தல்,சினிமா விநியோக உரிமை, என கொடுத்திருக்கும் ஒவ்வொரு டீட்டெய்லுக்கும் ரொம்பவே உழைத்திருப்பது தெரிகின்றது..

ஹாலிவுட் இயக்குனர்களான மார்ட்டின் ஸ்கார்சீஸ், கை ரிட்சி, படங்களில் பார்ப்பது போல ஒரு இருள்/நிழல் உலகத்தை நம் கண் முன்னே மிகத் துல்லியமாகக கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றார். ஒருவரின் நிழலில் இன்னொருவர் உருவாவதும்... வளர்ந்தபின் வளர்த்தவர் மேலேயே பாய்வதும் ஆகிய நிழல் உலகின் 'Survival of the Fittest ' கொள்கைகளை மிக சிறப்பாகவே சொல்லியிருக்கின்றார்.மாரியின் காதல் எபிசோடை கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கலாம் என்பது என் வருத்தம்.. :) :)

ஒரு கமர்ஷியல் த்ரில்லர் சினிமாவுக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் கொண்டிருக்கின்றான் இந்த 'அழிக்கப் பிறந்தவன்'.
யுவா அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்...!!!
அடுத்த நாவலை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்...!!

டிஸ்கி: 


நான் ஒன்றும் பெரிய இலக்கிய அப்பாடக்கர் இல்லையாகையால் இதை விமர்சனமாக எடுத்துக் கொள்ளாமல் சராசரி ரசிகனின் புரிதலாக / புரிதலின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்... :) :)







ஞாயிறு, 8 ஜனவரி, 2012

’தெர்மக்கோல் தேவதைகள்’ - உணர்வுகளின் தொகுப்பு


கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப்பின் இப்போது தான் இந்த பக்கம் வருகின்றேன்.
So... I'm back..!! :) :) :)


லெமன் ட்ரீ, கொத்து பரோட்டா, மீண்டும் ஒரு காதல் கதை... ஆகிய புத்தகங்களைத் தொடர்ந்து அண்ணன் கேபிள் சங்கர் அவர்களின் சமீபத்திய (4/01/2012) ரிலீஸ் தான் ‘உபதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் தெர்மக்கோல் தேவதைகள் சிறுகதைத் தொகுப்பு.

கேபிள் அண்ணனின் நேரேஷன் ஸ்டைல்தான் எனக்கு அவரிடம் மிகப் பிடித்த விஷயம்.உணர்வுகளை அப்படியே வார்த்தைகளில் கடத்துவதில் வல்லவர்.
செவிட்டில் அறையும் நிதர்சனங்களையும், மெல்லிய உணர்வுகளையும் அவரது சிறுகதைகள் எப்போதும் பிரபலிக்கத் தவறியதில்லை.

அப்படி நெஞ்சைத்தொட்ட நிதர்சனக் கதைகளின் தொகுப்பு தான் இந்த் தெர்மக்கோல் தேவதைகள். ஜூஸ் கடைகளில் ஃபலூடா என்று ஒரு மிக்ஸ் உண்டு.ஜிகர்தண்டாவின் காஸ்ட்லி வெர்ஷன். தனித்தன்மையும், தனிச்சுவையும் கொண்ட பல லேயர்களை அடுக்கியிருப்பார்கள்.அவைகளை கலந்து ஒன்றாக சாப்பிடுவது ஒரு அலாதியான இன்பம்.
இந்த சிறுகதைத் தொகுப்பும் அந்த மாதிரி தான்.ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு அனுபவத்தைத் தருகின்றன நமக்கு.

சில பாத்திரங்கள் உங்களுக்கு வாழ்க்கையை உணர்த்தலாம், சில பாத்திரங்கள் உங்களை காதலிக்கத் தூண்டலாம், சில உங்களை அழ வைக்கலாம்... இப்படி உணர்வுகளின் குவியலாகவே இருக்கின்றார்கள் கதை மாந்தர்கள்...

எனக்கு எப்போதுமே கேபிள் அண்ணன் கதைகளில் உலவும் பெண் பாத்திரங்கள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு... 80 வயது சேச்சுப் பாட்டியாகட்டும், இருபதுகளில் உலவும் ஜெயா,ராஜியாகட்டும் அப்படி ஒரு கேரக்டரைசேஷன்... அழகுப் பெண்களைப் பற்றிய வர்ணனைகளில் சில க்ளிஷேக்கள் இருந்தாலும் (உ.தா இரானியச் சிவப்பு, செர்ரி உதடு) JJ
கேரக்டரைசேஷனிலும்,மெல் உணர்வுகளைச் சொல்வதிலும் கேபிள் அண்ணன் ஒரு குட்டி சேத்தன் பகத்.. J J

என்னுடைய ஃபேவரைட்ஸ்:
1.வன்மம்
2.பிரியாணி
3.ஜன்னல்
4..காளிதாஸ்
5.ராஜலட்சுமி
6.ஜெயா

கேபிள் அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்...!!!


டிஸ்கி:

நான் ஒன்றும் பெரிய இலக்கிய அப்பாடக்கர் இல்லையாகையால் இதை விமர்சனமாக எடுத்துக் கொள்ளாமல் சராசரி ரசிகனின் புரிதலாக / புரிதலின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்... J J J

டிஸ்கி 2:

தெர்மக்கோல் தேவதைகள் வாங்கிய அன்றே யுவகிருஷ்ணா அண்ணனின் ‘அழிக்கப் பிறந்தவனையும் வாங்கிவிட்டேன்... இரண்டு புத்தகங்களையும் விடிய விடிய அன்றே படித்தும் முடித்தாயிற்று. சோ அடுத்த பதிவில் ‘அழிக்கப் பிறந்தவனோடுசந்திக்கிறேன்.




Related Posts Plugin for WordPress, Blogger...