நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

சனி, 26 அக்டோபர், 2013

Gravity (2013) – விட்டு விலகிச் செல்லாதே



பெயர் : ரயன் ஸ்டோன் (Ryan Stone)

தொழில் : மெடிக்கல் இஞ்சினியர்

விண்வெளி பயண அனுபவம்: இதுவே முதல் விண்வெளிப் பயணம். ஆறு மாத ஆயத்த பயிற்சியைத் தவிர வேறு அனுபவம் ஏதுமில்லை. அடிப்படையில் ஒரு ஆராய்ச்சியாளர்.


பெயர் : மாட் கோவால்ஸ்கி (Matthew Kowalski)

தொழில் : விண்வெளி வீரர்

விண்வெளி பயண அனுபவம் : அனுபவஸ்தர். ரஷ்ய விண்வெளி வீரர் அனடோலியின் 82 மணி நேர (மொத்தமாக விண்வெளியில் கடத்திய காலம்) சாதனையை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டவர். அதனைக் கடக்க பெரிதும் விரும்புபவரும் கூட.செம்ம ஜாலி பார்ட்டி..!


பயணத்தின் நோக்கம் : ஹப்பிள் ஸ்பேஸ் (Hubble Space Telescope) விண்-தொலைநோக்கியை பழுது நீக்கும் பொருட்டு.

விண்கலம் : எக்ஸ்ப்ளோரர்

ஆபத்து: அழிக்கும் பொருட்டு ஏவுகனையால் தாக்கப்பட்ட பழுதான ரஷ்ய செயற்கைக்கோளின் வெடித்து சிதறிய பாகங்கள் (சிதை(ந்த)பொருட்கள் – debris) அதிவேகமாய் இவர்கள் (ரயான், மாட்) பணிபுரிந்து கொண்டிருக்கின்ற சுற்றுப்பாதையில் (orbit) இவர்களை நோக்கி வருவது.

என்ன நடந்தது : சிதைபொருட்கள் அதிவேகமாய் தாக்கியதில் எக்ஸ்ப்ளோரர் விண்கலம் சேதமடைகின்றது. சக வீரர் ஷெரிஃப் உயிரிழக்கின்றார். இருவரும் அந்தரத்தில் மிதக்க (!!) நேரிடுகின்றது .

உயிர்பிழைக்க வழி: உடையில் இருக்கிற கொஞ்சம் ஆக்ஸிஜனையும், விண்வெளியில் நகர உதவும் கருவியிலுள்ள கொஞ்சம் வாயுவையும் (விண்வெளி வெற்றிடத்தை கனமான வாயுவால் உந்தி நகர்தல் – moving in space by using thrust) வைத்துக்கொண்டு ISS-ஐ (International Space Station – சர்வதேச விண்வெளி மையம்) அடைதல்.அங்கிருந்து வேறு கலங்களில் தப்பி பூமி திரும்புவது

முடிவு : மாட், ரயான் இருவரும் தப்பித்தார்களா..?? இல்லையா…??



கண்களுக்கு விருந்துன்னு சொல்லப்படுற வார்த்தை இப்போ ரொம்ப க்ளிஷேவானது. பொதுவாவே ஆங்கிலப்படங்கள்ல தொழில்நுட்ப விஷயங்களிலும் ஒளிப்பதிவு மற்றும் சி.ஜியிலும் பட்டைய கெளப்புவாங்க. ஆனாலும் ‘செம்ம விஷுவல் ட்ரீட்’-னு நான் வாயைப் பொளந்து பாத்த படங்கள் 

1. அவதார்-2009 (12 வருட உழைப்பை வாங்கிய அசுரத்தனமான டெக்னாலஜி. 3டி-ல பாத்தவங்க கொடுத்து வெச்சவங்க)

2. லைஃப் ஆஃப் பை -2013 (கொஞ்சம் போரடிக்கும் திரைக்கதையானாலும் கடல் பரப்பு அட்டகாசமான அழகு)

3. பஸிஃபிக் ரிம் - 2013 (அந்த படத்துலயே வர வசனம் – 2500 tonnes of awesome. செம்ம விஷுவல்ஸ். 3டி/ஐமேக்ஸ் –ல பாக்க முடியலையேன்னு ரொம்ப வருத்தப்பட்ட படம் )

அடுத்தது க்ராவிட்டி தான். படம் பத்தி படிச்சு பாத்தப்போ இயக்குனர் அல்ஃபோன்ஸோ க்வாரோன் (Alfonso Cuarón) ஏகப்பட்ட உழைப்பைக் கொட்டியிருப்பதாகத் தெரிந்தது. கிட்டத்தட்ட நாலு வருடங்களுக்கு மே லான மேக்கிங்கில் திட்டமிடலுக்காகவும் டெக்னிக்கல் பெர்ஃபெக்க்ஷனுக்காகவும் ரொம்பவே மெனக்கெட்டிருக்கின்றார்கள். திரையரங்கில் பார்த்தவர்கள் நிச்சயம் இந்த பெர்ஃபெக்‌ஷனை உணர்ந்திருக்கலாம்.படத்தில் நிறைய ‘பாயிண்ட் ஆஃப் வியூ’ ஷாட்கள்… படத்தோடு ஒன்றிவிட்டபின் நாமே விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. சப்தங்கள் ஏதுமில்லாத விண்வெளி வெற்றிடத்தை நிச்சயமாய் நம்மால் உணர முடிகின்றது.


சாண்ட்ரா புல்லக், ஜார்ஜ் க்ளூனி ஆகியோரின் நடிப்பைப் பற்றி புதிதாகச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இருவருமே ____________________________ கள் (வழக்கமான பாராட்டு வரி எதையாவது இட்டு நிரப்பிக் கொள்ளவும்). ஆனாலும் Sandra steals the show...!! இந்த மாதிரியான ’யாருமற்ற தனிமையில் தப்பிப்பிழைத்து உயிர்வாழ்தல் -survival’ வகையறா கதைகளில் நிச்சயம் கொஞ்சம் தத்துவார்த்தமான வசனங்களும் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் இருக்கும் (உ.தா : Life of Pi) க்ராவிட்டியிலும் அந்த மாதிரி நிறைய உண்டு (you have to learn to let go, try to detach yourself, க்ளைமாக்ஸில் அனிங்கான்க் உடன் ரயான் ரேடியோவில் பேசுகிற காட்சி ).


மொத்தமே 90 நிமிடப் படம் தான் .இந்த 90 நிமிட கால அவகாசத்துக்குப் பின்னால் ஒரு சுவையான ட்ரிவியா உள்ளது. சர்வதேச விண்வெளி மையம் (ISS) மணிக்கு 17,500 மைல் வேகத்தில் பூமியை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நேரம்… எக்ஸாக்ட்லி 90 நிமிடங்கள்..!!! செம்மை இல்ல..!!? 


படத்தை தியேட்டர்களிலிருந்து தூக்குறதுக்கு முன்னாடி கண்டிப்பா பாத்துடுங்க…!! என்னதான் டவுன்லோட் பண்ணி பாத்தாலும் அந்த அனுபவம் கண்டிப்பா கெடைக்காது…!!


இந்த படம் தொடர்பான அறிவியல் ரீதியான கேள்விகளுக்கும் / சந்தேகங்களுக்கும் :

http://en.wikipedia.org/wiki/Space_debris

http://www.nasa.gov/audience/forstudents/k-4/stories/what-is-a-spacewalk-k4.html#.UmuZp3BHI4M

http://www.physicsclassroom.com/class/newtlaws/u2l1a.cfm


படத்தின் ஏனைய triviaக்கள் :

http://www.imdb.com/title/tt1454468/trivia?ref_=tt_trv_trv

புதன், 23 அக்டோபர், 2013

18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்



வெகு நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்ட ஒரு தொலைக்காட்சித் தொடரை நீங்கள் இடையில் திடீரென பார்க்கத் தொடங்குகிறீர்கள். கதை புரிய கொஞ்சம் நாளானாலும் ஓரளவு புரிந்தபின் கதையோடும் கதைமாந்தரோடும் ஒன்றிவிடுகின்றீர்கள். பின் அந்தத் தொடர் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கின்ற தருணத்தில் அதனைப் பார்ப்பதை நிறுத்திவிடுகின்றீர்கள். கிட்டத்தட்ட இந்த மாதிரியான ஒரு உணர்வையே எனக்குத் தந்தது அசோகமித்திரன் அவர்களின் ‘பதினெட்டாவது அட்சக்கோடு’ நாவல்.

சுதந்திரத்திற்குப் பின்னான ஆனால் இந்திய நாட்டுடன் இணையாத - நிஜாம்களால் ஆளப்பட்ட - ஹைதராபாத் – செகந்திராபாத் இரட்டை நகரங்கள் தாம் கதைக்களம். கிரிக்கெட் விளையாட்டில் பேரார்வம் உடைய வெறெதற்கும் துணிய தைரியமில்லாத… குடும்பத்தாரின் பேச்சைக் கேட்டு நடக்கிற எளிதில் உணர்ச்சிவயப்படுகிற ஒரு சராசரியான பதின்பருவப் பையன் சந்திரசேகரின் பார்வையில் தான் (பெரும்பாலும்) கதை சொல்லப் படுகின்றது.
நகரின் குறுகலான வீதிகளைப் பற்றி, நிஜாமின் ஆட்சியிலிருந்த குறை நிறைகளைப் பற்றி, கிரிக்கெட் விளையாட்டு தொடர்பாக, அந்த காலத்தைய அரசியல் சூழல் பற்றி… அந்த ஊர்களிள் குடியிருந்த மக்களைப் பற்றி.. என அத்தனை வர்ணனைகள்..தனித்தனியாய்…!! ஒன்றோடொன்று உரசாமல் கதையினை நகர்த்திச் செல்கின்றன.

பெரும் பிரச்சனை நடந்துகொண்டிருக்கின்ற ஒரு ஊரில் திடீரென கிளம்பிச் சென்று தங்கிவிட்டு.. கொஞ்சநாள் அங்கேயே வாழ்ந்துவிட்டு அந்த பிரச்சனைக்கான தீர்வை அடையும் முன்னரே அந்த ஊரிலிருந்து திரும்பிவிட்ட உணர்வு எத்தகையதோ இந்த புத்தகம் தந்த உணர்வும் அத்தகையதே.

மின்னல் வேகமாய் ஓடப்பழகிக் கொண்ட நமக்கு சாவகாசமான ஒரு நடைபயணம் கொஞ்சம் அலுப்புத்தட்டவே செய்யும். அசோகமித்திரன் அவர்களின் கதை நடை அப்படியானது…! ஒரு தாத்தாவோடு பேசிக்கொண்டே பொறுமையாக அவரோடு நடந்து செல்கிற மாதிரியான ஒரு எழுத்துநடை…!!



நிச்சயமாகப் படிக்கவேண்டிய நாவல்..!!

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இங்கு செல்லவும்


சனி, 21 செப்டம்பர், 2013

வட்டியும் முதலும் - ராஜு முருகன்

 

  இது ஒன்றும் தமிழ் வெகுஜன வாசகர்களுக்கு பரிச்சயமில்லாத பெயரல்ல. ஆனந்தவிகடனில் கிட்டத்தட்ட நூறு அத்தியாயங்களுக்கு தொடராக வெளிவந்து வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ‘ராஜுமுருகன்’ அவர்கள் எழுதிய வட்டியும் முதலும் தொடர் அனைவரும் அறிந்ததே. அந்த தொடரின் தொகுப்பாக விகடனில் வெளிவந்த புத்தகமே இது.பொதுவாகவே கொஞ்சம் உணர்வுப்பூர்வமான, நாடகத்தன்மை கலந்த, எழுத்து உட்பட எல்லாமே பகடிக்குள்ளாக்கப் படுகிற இந்த யுகத்திலும் இப்படி ஒரு எமோஷனல் தொடர் பெருவெற்றி பெற்றது சாதனை தான். ஆனாலும் நம்ம ‘டுட்டர்’ மக்கள் #TweetLikeRajuMurugan னு ஒரு ஹாஷ்டேக் போட்டு தாளிக்கத் தவறவில்லை.

நான் ராஜுமுருகனின் எழுத்தால் ஈர்க்கப்பட்டதற்கு நிறைய காரணங்கள் இருந்தன என்னிடம்.சினிமா தொடங்கி எழுத்துலகு வரை ‘என்னா பங்காளி… அம்ம பயலுக இப்புடி பண்ணிபுட்டாய்ங்க…? ...க்காலி போட்றா’ வகையறா மதுரை மொழி வட்டார வழக்கே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காலகட்டத்தில் ‘என்ன மாப்ள.. நம்ம பயலோ.. என்னா சொல்றானோ… கம்னாட்டி செவுட்ட பேத்துபுடுவேன்னு சொல்றா..’ மாதிரியான தஞ்சை வட்டார வழக்கு தமிழை கண்குளிர எழுத்தில் படித்ததே பெரிய ஆனந்தம். அப்புறம் திருவாரூர் தொடங்கி நீடாமங்கலம், அபிவிருத்தீஸ்வரம், வெட்டாத்துப்பாலம், கொரடாச்சேரி, குடவாசல், செல்லூர், ஓகை, மூலங்குடி, கூத்தாநல்லூர், ஒளிமதி, என ராஜுமுருகன் விவரிக்கிற எல்லா சிற்றூர்களும் இடங்களும் திருவாரூர்காரனான  எனக்கு பள்ளி-கல்லூரி காலத்திலிருந்தே ரொம்பவும் பரிச்சயம். ஆக ஒவ்வொரு அத்தியாயத்தையும் சும்மா அனுபவிச்சு ரசிச்சேன்.

சரி அப்புடி என்னத்ததான் எழுதிருக்காருன்னு கேட்டீங்கன்னா… நம்ம ஒவ்வொருத்தருக்கும் ஒரு வகையான ஃப்ளாஷ்பேக் இருக்கும். அது மறக்கவே  முடியாத மகிழ்ச்சியைத் தந்த இளமைக்காலமா இருக்கலாம். அல்லது சொல்ல முடியாத துயரங்களைக் கடந்து இழப்புகளைத் தாண்டி வந்த பதின்பருவமா இருக்கலாம். முட்டி மோதி எல்லா தடைகளையும் உடைத்தெறிந்து சாதித்துக்காட்டிய இருபதுகளின் இறுதியா இருக்கலாம். இப்படியான காலங்களில் அந்தந்த சூழ்நிலைகளில் நாம் எத்தனையோ மனிதர்களைக் கடந்து வந்திருப்போம். மூன்றாம் வகுப்பு பள்ளித்தோழி, பக்கத்து வீட்டு ட்யூஷன் அக்கா, பள்ளிகூட வாசல் ஐஸ்வண்டி அண்ணன், பிள்ளையார் கோவில் பிச்சைக்காரன்,  திருவிழா கடையில் துப்பாக்கி பொம்மை வாங்கித் தந்த மாமா, கிராமத்து கிணற்றில் நீச்சல் கற்றுத்தந்த தாத்தா, ப்ரூஸ்லீ கதை சொன்ன கடைசி பென்ச் நண்பன், வேலை தேடியலைந்த காலத்தில் சோறு போட்ட நண்பன், திருமணப் பத்திரிக்கை அனுப்பிவிட்டு வரவை எதிர்நோக்காத காதலி, பத்து மணி நேர ரயில் பயணத்தில் பல வருட சொந்தம்போல் பழகிவிட்ட குடும்பம், தினமும் ஒரே சிக்னலில் கண்களில் பசியோடு நம்மைக் கடந்து போகிற சிறுமி... இப்படி எத்தனையோ பேரைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இது மாதிரி தன் வாழ்க்கையில் கடந்து வந்த அத்தனை பேரையும் அந்த மனிதர்கள் தந்த மறக்கமுடியாத அனுபவங்களையும் ஒட்டு மொத்தமாக நினைத்துப் பார்த்து உருப்போடுகிற, பொருள் தேடும் பொருட்டு சிற்றூர்களிலிருந்து பெருநகரங்களுக்கு குடிபெயர்ந்த, நம்மோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளக்கூடிய, ஒரு சராசரி முதல் தலைமுறை மத்தியவர்க்க இளைஞனின் ’நாஸ்டால்ஜியா’ நிறைந்த பதிவு தான் இந்த ‘வட்டியும் முதலும்’.

ஆறேழு வரிகளில் பத்து விதமான மனிதர்களையும் அவர்கள் வாழும் சூழலையும் தட தடவென ஸ்டாப் ப்ளாக்கில் வாசிப்பவர்களுக்குக் காட்டிவிடக் கூடிய வசீகர எழுத்துக்குச் சொந்தக்காரர் ராஜுமுருகன். தஞ்சை மண்ணுக்கே உரித்தான கிண்டலுக்கும் கேலிக்கும் கொஞ்சமும் குறைவல்ல. 500 பக்கங்களானாலும் அலுக்காமல் விறுவிறுப்பாகப் படித்து முடிக்க அதுவே காரணம்.ராஜுமுருகனின் எழுத்து பேசாதவைகளையெல்லாம் ஹாசிஃப்கானின் சித்திரங்கள் பேசிவிடுகின்றன. அவ்வளவு உயிரோட்டமான பொருத்தமான ஓவியங்கள். 

மொத்தமாய்ப் படித்து முடித்த பின்னர்… சொல்லாமல் விட்ட நன்றிகளையும், கேட்காமல் விட்ட மன்னிப்பையும், மறந்து போகவே முடியாத முகங்களையும், சிலிர்த்துப்போன தருணங்களையும், இழந்துவிட்ட உறவுகளையும், வெளிப்படுத்தாத காதலையும், தொடர்பு விட்டுப்போன நட்புகளையும், நெகிழ்ந்துபோன நிகழ்வுகளையும், இன்னும் வார்த்தைகளில் அடைக்கமுடியாத எத்தனையோ உணர்வுகளையும் அப்படியே நம் கண்முன்னே கொண்டுவந்து போட்டு நினைவுகளில் மூழ்கடித்துவிட்டுப் போவதே…  ராஜுமுருகனின் எழுத்துக்குக் கிட்டிய ஆகச்சிறந்த அங்கீகாரமாய் / வெற்றியாய்க் கருதுகின்றேன்.   
ராஜுமுருகன்
’வட்டியும் முதலும்’-இல் இருந்து என்னைக் கவர்ந்த வரிகள்....

”அறியாமையைவிடவும் பெரிய சந்தோஷம் எதுவும் இல்லை. இந்த வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவிக்க, அறிவுதானே பெரிய தடையாக இருக்கிறது? கொஞ்சம் யோசித்துப்பார்த்தால், ஜோதி மாதிரி நிம்மதியான வாழ்க்கையை வாழவிடாமல் என்னைத் துரத்தி அடிப்பது இந்த அறிவு முகமூடிதான் எனத் தோன்றுகிறது. எதையேனும் அடையத் துடிக்கிற மனம்தான் இந்த வாழ்வின் சாபம் என நினைக்கிறேன்”

”நிஜமாகவே நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கத்து சாமான்யர்கள் ஹீரோவாகிற தருணங்கள் மிக மிகச் சொற்பம்தான். அதுவும் அதிக நேரம் நீடிப்பது இல்லை. 'நான் கமல்ஹாசன்... நான் கமல்ஹாசன்...’ என நாம் கத்திக்கொண்டு திரிந்தாலும், சமூகம் நம்மைச் 'சப்பாணி... சப்பாணி...’ என்றுதான் பேசுகிறது. வில்லனாக டெரர் முகம் காட்டும்போது, 'ஏய்! மயில்சாமிக்குக் கோவத்தப் பாரு...’ எனக் கைகொட்டிச் சிரிக்கிறது. இந்தச் சமூகத்தில் காமெடியனாக இருக்கும்போதுகூட, நம்மால் கவுண்டமணியாக இருக்க முடிவது இல்லை... செந்திலாகத்தான் இருக்க முடிகிறது”

“பகிர முடியாத விருப்பங்களை, தாளாத உணர்வுகளை, அழுத்தும் சுமைகளைச் சொல்லிவிட சொற்கள் மட்டுமே போதுமா? அந்தச் சொற்களையும் ஏந்திக்கொள்ள இதயங்கள் வேண்டும் இல்லையா? "

“அற்பத்துக்கும் சொற்பத்துக்கும் அரசியல் என்ற பெயரை எதற்குப் பயன் படுத்துகிறோம்...?அவரவரது வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் பெயர்தான் பாலிடிக்ஸ் என்றாகிவிட்டது இந்த தேசத்தில்.”

“பசி… காலத்தையும் கோலத்தையும் அரித்துக்கொண்டு, அழுகைக்கும் சிரிப்புக்கும் நடுவே ஊர்ந்துகொண்டே இருக்கும் நிதர்சனக் கரையான்! பசி என்றால்… வெறும் வயிற்றுப் பசி மட்டும்தானா? இல்லை. பசி உருவாக்கும் புன்னகையும், துயரமும், நன்றியும், துரோகமும் காற்றைப்போல எங்கெங்கும் நிறைந்துகிடக்கின்றன!”

”பசியின் மொழி கண்ணீர் என்பதை உலகுக்கு அறிவித்தபடிதான் பிறக்கின்றன ஒவ்வோர் உயிரும். “உனது பசியை நான் உண்ர்ந்துகொள்கிறேன்” என்ற தாய்மையின் கருணையில்தான் தொடங்குகிறது ஒவ்வொருவருக்குமான உலகம். ஆனாலும், ஏன் பிறர் பசியை பலர் உணர மறுக்கிறோம்? பசி ஏற்படுத்தும் அவமானத்தையும் வலியையும்விட வலியது வேறு இல்லை. பசியைத் தீர்ப்பது ஒரே ஒரு கனிதான்… ஆனால், அதற்காக நாம் கடப்பது ஒரு வனம்!”

”யுகங்களின் காத்திருப்பை ஒரு நொடியின் தரிசனம் துடைத்தெறிவது மனித வாழ்வில் தான் நடக்கும்! காத்திருப்பின் வலியை சுகமாக்கும் உயிர்கள் தான் பிரபஞ்சத்தின் பெருங்கொடை இல்லையா..?”

”கனவு , லட்சியம் , வேட்கை எனத் துரத்தும் வாழ்வில் எங்கேதான் போய் நிற்கப்போகிறோம்?பாழாய்ப்போன மனசு எப்போதும் அடைவதற்கான ஆவேசங்களிலோ, விடுபடுவதற்கான விமோசனங்களிலோதான் இருக்கிறது.அன்புக்கு ஏங்குகிறது. வன்மம் இல்லாத உலகுக்குத் தவிக்கிறது. தளைகள் அற்ற சந்தோஷத்திற்கு காத்திருக்கிறது.. மாடிப்படியின் கீழ் இரவெல்லாம் கத்தும், குட்டிகள் ஈன்ற பூனையைப்போல எப்போதும் பரிசுத்தமான காதலுக்காக பரிதவிக்கிறது”

”ஏதோ நினைவு, பாடல், வருத்தம்.. நமது இரவுக்குள் நம்மை கேட்காமல் நுழைந்து விடுகிறது ! வீட்டுக்கு கொடுக்க முடியாத பணம், அடைய முடியாமல் தவிக்கவைக்கும் இலக்கு, அணையாமல் எரியும் ஓர் அவமானம், பிரிவின் வெக்கை, அன்பின் அவஸ்தை, ஈழம், கூடங்குளம், நெஞ்சறுக்கும் செய்திகள், செரிக்கமுடியாத மனிதர்கள்... ஏதாவது வந்துவிடுகிறது உறக்கத்தைக் கலைத்துப் போட…”

”பறவைகள் தடயங்களே இல்லாமல் போய்விடுகின்றன.. அவற்றின் எச்சங்கள் மரங்கள் ஆவதைப் போலதான் இந்த இசையும் பாடல்களும்.”

”இயலாமை ஒரு கரையிலும் அன்பு மறு கரையிலுமாக ஓடிக்கொண்டே இருக்கிறது காதல் நதி. பிரிவை விடவும் பெரிய பரிசு காதலில் இருக்கிறதா என்ன..??”

”பால்யம் என்ற திரும்பி வாராத பேராற்றின் கரையில் சந்திக்கும் போது,
நினைவுகளின் ருசியும் நிகழ்வுகளின் வலியும் கைகுலுக்கிக்கொள்கின்றன.
விளையாடுவதை நாம் நிறுத்தும் போது, நம்மை வைத்து இந்த உலகம் 
விளையாட ஆரம்பிக்கிறது.”

”வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பது மாதிரி, முகத்தால்... குரலால்... செயல்களால்... சாயல்களால்தான் நம் பிரியங்களையும் பிரிவுகளையும் நிரப்பிக்கொண்டே இருக்கிறோம்! யாராவது வந்து யாருடைய இடத்தையேனும் தங்கள் சாயல்களால் இட்டு நிரப்பிக் கொண்டே இருக்கிறார்கள்!”

_________________________________________________________________________________
வட்டியும் முதலும்
விகடன் பதிப்பகம்
விலை: 215
ஆன்லைனில் வாங்க: http://goo.gl/VU8Jes




வியாழன், 18 ஜூலை, 2013

சிங்கம் 2 - டிட் பிட்ஸ்


சிங்கம்-2 பாத்துட்டு வரேன் இப்போதான்.

1. கதையே இல்லாம ஒரு படம் பண்ண முடியும்னு ஹரி மறுபடியும் நிரூபிச்சுட்டாரு.

2. பாட்டே இல்லாம எடுத்திருக்கலாம் இந்த படத்த... முடியல... DSP சூர மொக்க. ஃபர்ஸ்ட் பார்ட்ல இருந்த பாட்டையே போட்டுருந்தாகூட ஒன்னும் கொறஞ்சுருக்காது. அதுக்குமேல ஃப்ரேமுக்கு ஃப்ரேம் கத்திக் கத்தியே நம்ம உசுர வாங்கிட்டானுக.

3. ஹைக்ளாஸ் போலீஸான அன்புச்செல்வன், இராகவனை விட நம்ம மக்களுக்கு அதிரடி போலீசான ஆறுச்சாமியையும், துரைசிங்கத்தையும் தான் ரொம்ப பிடிக்குது.Hence proved


4.கண்ண உருட்டி..கைய முறுக்கி... பாய்ஞ்சு பாய்ஞ்சு அடிச்சு...ஓடி ஓடி புடிச்சு... சூர்யா குடுத்த காசுக்கு அதிகமாவே முரட்டு சிங்கமா மாறி டெரர் காட்டி பட்டைய கெளப்புறாரு. என்ன ஒன்னு... திடீர்னு கோட் சூட் மாட்டிட்டு வரும்போது.. “வெல்கம் பேக் டு நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி”ன்னோ அல்லது “என்கிட்ட பேசனும்னா ஏர்செல் வாங்குக”ன்னோ சொல்லிடுவாரோன்னு பயத்தோடயே பாத்துட்டு இருந்தேன். டிவில பாத்து அவ்ளோ அலுத்துப் போச்சு அவர் மூஞ்சு.

5.Out of form விவேக் + அல்ரெடி போரிங் சந்தானம் = வேலைக்காகல

6.முதல் பாதி மச மசன்னு போனாலும்... துரைசிங்கம் டி.எஸ்.பி யா போஸ்டிங் எடுத்ததுக்கப்புறம் சும்மா பர பர தான். லாஜிக் எதைப்பத்தியும் யோசிக்கவே விடல...யொசிச்சு முடிக்குறதுக்குள்ள படம் முடிஞ்சு போயிடுது.

7.அஞ்சலி ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக்கும் அனுஷ்கா ரசிகர்களுக்கு ஆனந்தக்கண்ணீரும் வரலாம் :) ;) :P

8. என்னதான் நமக்கு திருப்தி இல்லன்னாலும்....கொஞ்சம் நொள்ளை சொன்னாலும்... படம் ஷ்யூர் ஹிட்டு :)

***கடைசியா...ஒன்னு.. பல மொழி படங்கள்ல கண்டபடி சுட்டு கதை உருவாக்கி படம் பன்ற அப்பாடக்கர் டைரக்டர்களவிட... கதையே இல்லாம பாட்டு...ஃபைட்டு....சேஸிங்...செண்டிமெண்ட்னு டெம்ப்ளேட்ல வெறும் பொழுதுபோக்குக்கு மட்டும் படம் எடுக்குற ஹரி மாதிரியான இயக்குனர்கள் Least dangerous and Harmless
Photos Courtesy: Original Uploaders
Related Posts Plugin for WordPress, Blogger...