நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

வெள்ளி, 17 ஜூன், 2016

Underdog கழுகு


Underdog: 

-a competitor thought to have little chance of winning a fight or contest.

-a person or group of people with less power, money, etc. than the rest of society

இப்படித்தான் அர்த்தம் வருது  இந்த வார்த்தைக்கு..!!

பொதுவா “இவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான் மச்சி..” அப்டின்னு மத்தவங்க மட்டம் தட்ற ஆள Underdogனு சொல்லலாம்.

விளையாட்டு, சினிமா, அரசியல் எல்லாத்துலையும் நீங்க இந்த மாதிரி ஆளுங்கள பாக்கலாம், அவங்ககிட்ட நெஜம்மாவே திறமை இருந்து சுத்தி இருக்குறவங்க மட்டம் தட்றதுனாலேயோ அல்லது சரியான வாய்ப்பு கிடைக்காததுனாலேயோ அவங்க அந்த விஷயத்த சரியா பண்ணாம இருக்கலாம்.ஆனா என்ன பிரச்சனைன்னா போராடி ஜெயிச்சு தன்னை  நிரூபிக்குறவரைக்கும் சுத்தி இருக்கிறவங்க யாருமே நம்பவும் மாட்டாங்க மதிக்கவும் மாட்டாங்க.இந்த மாதிரியானவர்களுக்கு கண்டிப்பா ஒரு நோக்கம் இருக்கும்.அதை அடியுறதுக்கான பாதை எப்படிப்பட்டது... யார் என்ன சொல்லுவாங்க... நாம சரியான திசைலதான் போறோமான்னு எந்தக் கேள்விக்கும் பதில் தெரியாது. அதப்பத்தின கவலையும் இருக்காது.

 எனக்கு இப்படியான underdogs மேல ஒரு தனிப்பாசம் உண்டு. ஸ்கூல் படிக்கும்போது நானும் என்ன ஒரு underdogஆ நெனச்சுகிட்டது ஒரு காரணமா இருக்கலாம்.Physically ரொம்ப வீக்கான பையன். மூக்குக் கண்ணாடி வேற (1000+ பசங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஒருத்தன்மட்டும் தான் கண்ணாடி.. அப்போ எங்க ஊர்ல இதான் நெலம) So பசங்க எந்த விளையாட்டுலயும் சேத்துக்க மாட்டாங்க. சேத்தாலும் ஒப்புக்கு சப்பானி இல்லேன்னா umpire தான். இவனுங்க என்ன விளையாண்டாலும் நான் அம்ப்பயர் தான். கடுப்பா இருக்கும். திடீர்னு டெய்லியும் க்ரவுண்ட்ல ஓடலாம்னு ஆரம்பிப்பேன். ஒரு ரவுண்டு ஓடி முடிக்கிறதுக்கு முன்னாடியே மூச்சு இரைக்கும். அப்படியே மண்ல படுத்துகிட்டு அந்த ஆசைய விட்ருவேன். Kho kho டீம்ல போய் சான்ஸ் கேப்பேன். பி.டி வாத்தியார் கண்ணாடி..போடான்னு விரட்டி விட்ருவாரு. பசங்க விளையாடும்போது கூடப் போயி ஓடி விழுந்து வாரி முட்டிய தேச்சுட்டு வருவேன். 


லாங் ஜம்ப் தாண்டுறேன்னு தாண்டி   கண்ணா பின்னானு லேண்ட் ஆகி உள்ளங்கால் கிழிஞ்சு வருவேன். ஸ்கூல் க்ரவ்ண்ட் ஓரத்துல கெடக்குற டபுள் பார்ல தெனமும் போய் தலைகீழா தொங்கிகிட்டு பல்டி அடிச்சுட்டு கெடப்பேன். கையெல்லாம் தேய்ஞ்சு போவும். ஒரு கட்டத்துல கடுப்பாகி இது எதுவுமே நமக்கு வராதுன்னு முடிவு பண்ணி இலக்கிய மன்ற போட்டிகள்னு எங்க ஸ்கூல்ல நடக்குற எல்லா போட்டியிலயும் பேர் குடுத்து கலந்துக்க ஆரம்பிச்சேன். கதை, கட்டுரை, ஓவியம், பாட்டு, பேச்சு,  வினாடி-வினா, பக்தி இலக்கியங்கள் ஒப்புவித்தல், பாவேந்தர் கவிதைகள் ஒப்புவித்தல், அது இதுன்னு ஒன்னு விடாம கலந்துக்கவும் செஞ்சேன். பத்துல கலந்துகிட்டா எட்டு போட்டில கண்டிப்பா பரிசு அடிப்பேன். ரெண்டுலேர்ந்து மூனு முதல் பரிசாவது வரும். ஆண்டு விழால நம்ம பேர படிச்சு நாம ஸ்டேஜ் ஏறி பரிசு வாங்குறது இருக்கே அது ஒரு தனி சுகம். அன்னைக்கு பெத்தவங்க மத்தவங்க எல்லார் முன்னாடியும் நாம தான் ஹீரோ. அப்புறம் வருஷா வருஷம் அந்த obsession அதிகமாகி ஒரு கட்டத்துல படிப்ப விட இந்த காம்படிஷன் தான் முக்கியம்னு யோசிச்சு பன்னெண்டாவதுல புட்டுக்குற வரைக்கும் அடங்கல.

யாருக்கு எதை நிருபிக்குறதுக்காக இதப் பண்ணோம்னு யோசிச்சா இப்பவும் தெரியல. இப்ப யோசிச்சாலும் கல்லூரி, வேலை, வாழ்க்கைன்னு எந்த இடத்துலயும் என்னோட இந்த கேரக்டர் மாறவே இல்ல. எப்பவும் ஏதாவதொரு வகைல எதையோ competitive பண்ணி அதுல ஜெயிக்கிற அந்த சந்தோஷத்த அனுபவிச்சபடி போய்க்கிட்டே இருக்கேன். அது எனக்கு வெற்றியா இல்லையாங்குறதப்பத்தி மத்தவங்க என்ன யோசிக்கிறாங்கன்னு கருத்துல எடுத்துக்காம விட்ருவேன்


 ரைட்டு எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போய்ட்டேன். எதையாவது பாத்தா படிச்சா உடனே நம்மள அந்த எடத்து வெச்சுப் பாக்குறதுதான நம்ம புத்தி. பொதுவா biopicனாலே மொக்கையா (சில விதிவிலக்குகள் தவிர்த்து) தான் இருக்கும். அதுவும் விளையாட்டு வீரர்னா கேக்கவே வேணாம். இந்த மாதிரி underdog sports teams and sports people பத்தி ஹாலிவுட்ல நூற்றுக்கணக்கான படங்கள் வந்துருக்கு. பெரும்பாலும் ஒரே டெம்ப்ளேட் தான்.அப்படியான ஒரு படமா நெனச்சு தான் இந்த படத்த டவுன்லோட் பண்ணேன்.

Michael Edwards. இங்கிலாந்துல சாதாரண குடும்பத்துல பொறந்த சாதாரணமான பையன் தான். ஒலிம்பிக்ல கலந்துகிட்டு நாட்டுக்காக மெடல் வாங்கனும்ங்குறது தான் கனவு. ஒரு கட்டத்துல அப்படி இப்படி மனசு மாறி Ski-jumping தான் தனக்கான sportனு முடிவு பண்றாரு. அப்பா அம்மா வழக்கம்போல பையன நெனச்சு ரொம்ப வருத்தப்படுறாங்க. சுத்தி இருக்குறவங்களுடைய கேலி கிண்டலுக்கு நடுவுல குளிர்கால ஒலிப்பிக் போட்டில ski-jumping தகுதி அடைய என்ன பண்ணனும்னு யோசிச்சு ரொம்ப வருஷமா இங்கிலாந்துலேர்ந்து யாருமே ski-jumping ல கலந்துக்காம இருக்குறதுனால விதிமுறைகள் மாறாம இருக்குங்குறத தெரிஞ்சுக்கிட்டு அந்த தூரத்த தாண்டிடுறாரு. ஆனாலும் இங்கிலாந்து ஒலிம்பிக் கமிட்டி இவரு ஒலிம்பிக் போகக் கூடாதுன்னு முடிவு பண்ணி தகுதிக்கான தூரத்த இன்னும் அதிகப்படுத்திடுறாங்க. மனச விடாம தானே பயிற்சி எடுத்து கண்டபடி விழுந்து அடிபட்டு வேறொரு வாழ்ந்து கெட்ட பயிற்சியாளர் (நம்ம வுல்வரின் புகழ் Hugh Jackman) ஒருத்தரோட உதவியால ஒரு வழியா அந்த குறிப்பிட்ட தூரத்த தாண்டி ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதியடைஞ்சு 1988ஆம் வருஷம் கனடாவுல நடந்த போட்டியில கலந்துக்குறாரு.
அவரு ஜெயிச்சாரா இல்லையா... அட்லீஸ்ட் அடிபடாம வந்து சேர்ந்தாரா... 70 மீட்டர் தாண்டுறதுக்காக பயிற்சி எடுத்துட்டு 90 மீட்டர் உயரத்தையும் தாண்டனும்னு ஆசைப்பட்டா என்னாகும்..?? அவ்வளவு கஷ்டத்துக்கப்புறம் ஒலிம்பிக் போட்டியில கலந்துகிட்டதுக்கு ஏதும் பிரயோஜனம் இருக்கா இல்லையா...?
Courtesy: historyvshollywood.com

இதையெல்லாம் படத்த பாத்து தெரிஞ்சுக்கங்க...!!

கடைசில நீங்களே ஏதோ பெருசா சாதிச்ச மாதிரி ஒரு சந்தோஷம் வரும். கொஞ்சம் எமோஷனல் பார்ட்டியா இருந்து கண்ல ரெண்டு சொட்டு தண்ணி கூட வரலாம்...!!

Eddie the eagle..!!  ட்ரெய்லர் இங்க...!!



ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

புல்லட் டைரி - அடைமழை... ஆகும்பே... ஆபத்து - 3.1


ஆகும்பே ரைடுக்கு அப்புறம் ப்லாக்ல புல்லட் டைரிஸ் பத்தி பெருசா எதுவும் எழுதமுடியல. கொல்லிமலை, நெல்லையம்பதி, கூர்க்னு மூனு ட்ரிப் போய்ட்டு வந்தாச்சு அதுக்கப்புறம்.ஆனாலும் ஆகும்பே ட்ரிப் பார்ட் 2 எழுதும்போது திரும்ப வரும்போது நடந்த ஒரு விபத்து பத்தி எழுத முடியாம தான் ஒரு மாதிரி அப்டியே மூளை block ஆகி எழுதமுடியாமப் போச்சு.விட்ட எடத்துலேர்ந்து எழுதும்போது பேச்சு வழக்குலேயே தொடர்ந்து எழுதிட்டேன்.. இனி...

======================================================================


நாங்கள் தங்கியிருந்த ரிசார்ட் ஆகும்பேவுக்கு சற்று முன்பு ஊருக்கு வெளியே ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருந்தது.ரொம்பவும் அமைதியான இடம்.நன்றாகத் தூங்கியெழுந்த பின் காலை (மதியம்..??!!) உணவுக்குத் தயாரானோம். குறைந்தது அருகிலுள்ள இடங்களையாவது சுற்றிப் பார்த்துவிட வேண்டுமெனக் கிளம்பினோம். இதற்குள் கொஞ்சம் நண்பர்கள் நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு அருகிலேயே இருந்த 'Cave walk' என்றழைக்கபடுகிற இடத்துக்குச் சென்று திரும்பியிருந்தார்கள். துபாய் சுரேஷ் அண்ணனும் அருணும் தொப்பல்லபுராவிலிருந்து 250 சொச்சம் கிலோமீட்டர்கள் நான்ஸ்டாப்பாக வந்து காலையில் எங்களோடு சேர்ந்தார்கள்.
துபாய் சுரேஷ் அண்ணன், அருண்


நான், ரத்னா அண்ணன், பேய் சுரேஷ் (இது காரணப் பெயர் :) ),மணிப்பூர் சஞ்சீப், கார்த்தி,சதீஷ் அண்ணன், அஷ்வின் மட்டும் அருகிலிருந்த ‘ஜோகிகுந்தி’ அருவிக்குக் கிளம்பினோம், எங்களோடு வழிகாட்டுவதற்காக ரிஸார்ட்டிலிருந்தே ஒரு பெரியவரை கூட அனுப்பியிருந்தார்கள், அவரையும் கூட்டிக் கொண்டு மொத்தம் நாலு வண்டிகளில் பறந்தோம். மெலிதான மழை அப்போதும் நிற்காமல் தூறிக்கொண்டிருந்தது. சாலையிலிருந்து வலது பக்கம் திரும்பி கொஞ்சம் கரடு முரடான பாதையில் போய் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி நடந்தோம். அட்டகாசமான அருவி..! கொஞ்ச நேரம் நின்று படமெடுத்துக்கொண்டு அடுத்த அருவிக்குக் கிளம்பினோம். ’கட்டின மடிகே’ என்று அழைக்கப்படும் அந்த இடத்துக்கு போகும் வழியே செம்ம Off-road ஆக இருந்தது. சாலையின் குறுக்கே ஓடிய ஒரு சிற்றோடையையும் கடந்து இன்னும் கொஞ்ச தூரம் போய்ச்சேர்ந்தோம். அதற்கு மேல் மழை தாறுமாறாக கொட்ட ஆரம்பித்தது.. மண் சாலை சகதியானது மட்டுமல்லாம.. பயங்கர மேடாகவும் இருந்ததால் திரும்பிவிட முடிவு செய்தோம். மழை வலுக்கும் முன்பு ரிஸார்ட்டுக்கு வந்து சேர்ந்தோம்.


அஷ்வின், பேய் சுரேஷ், சஞ்சீப்

போபண்ணாவின் மஞ்சள் குதிரை 
மழையில் கொஞ்ச நேரம் வாலிபால் ஆடிவிட்டு குளியல் போட்டு தூங்கியெழுந்து அடுத்து ஆரவாரமாய் இரவு உணவையும் முடித்து ஆட்டம் போட்டு அடுத்தநாள் அதிகாலை கிளம்பத் தயாரானோம்.மலைப் பாதைகளில் பகலில் இறங்குவது தனி சுகம். அதுவும் ஓரளவு வண்டியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கற்றுக்கொண்ட பின் மிகவும் ரசித்து ஓட்டமுடியும். மதியம்போல சக்லேஷ்பூரில் ஒரு கரடு முரடான off-roadஐ கடந்து மாலை கிட்டத்தட்ட பெங்களூருக்கு முந்தைய நெடுஞ்சாலையை அடைந்தோம்.கொஞ்சம் கொஞ்சமாய் உடல் சோர்வுறத்தொடங்கியது.




பெங்களூர் ட்ராஃபிக்ல நாங்க ஒரு அஞ்சு பேரு மட்டும் மத்தவங்கள விட்டு பிரிஞ்சுட்டோம். மழை வேற செம்ம டார்ச்சரா இருந்துச்சு. பெங்களூரு ஹோசுர் ரூட்ல நெடுஞ்சாலைலேர்ந்து ஊருக்குள்ள போறதுக்கு இடது பக்கம் ஒரு சரிவான சின்ன பாதை அங்கங்க இருக்கும். அது நெடுஞ்சாலைலேர்ந்து ஊருக்குள்ள சர்வீஸ் ரோட்ல இறங்குறதுக்கு மட்டும் தான். ஊர்களுக்கு உள்ளேர்ந்து நெடுஞ்சாலைக்கு வரவங்களுக்கு வேற மாதிரியான, சிக்னலோட இணைப்பு சாலைகள் இருக்கும்.

ஆங்... என்ன சொல்லவந்தேன்னா... இந்த மாதிரி ஊருக்குள்ள இறங்குற சின்ன ரோடு இருக்குல்ல... அதுலேர்ந்து முழுவேகத்துல ஒரு வண்டி ராங் ரூட்ல பறந்துகிட்டு வந்துச்சு.. எனக்கு ஒரு நிமிஷம் என்ன பண்றதுன்னே புரியாம டக்குனு லெஃப்ட்ல வண்டிய சாய்ச்சு கட் பண்ணேன்.கட்டுப்பாட்ட இழந்து வந்த வேகத்துல என் வலது ஹாண்டில்பார்ல இடிச்ச அந்தாளு அப்டியே எனக்கு பக்கத்துல வந்த தீனோட வண்டி இடது ஹாண்டில்பார்ல ஒரு இடி இடிச்சாரு.. தீன் அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குங்குறதனால அவரும் சுதாரிச்சு ரைட்ல ஒரு ஷார்ப் கட் பண்ணி தப்பிச்சாரு. மூனாவது இம்பாக்ட் எங்க ரெண்டு பேருக்கு பின்னாடி வந்த அருண் வண்டில. 1 2 3ன்னு ஒரு zig zag மூவ்மெண்ட்ல.. அருண் சுதாரிக்கல. அருணுடைய இடது கை மணிக்கட்டுல மோதி அந்த ஆள் தனியா அவரோட ஸ்டார் சிட்டி வண்டி தனியா போய் விழுந்தாங்க.


அருண் வண்டி டெஸர்ட் ஸ்டார்ம் 500, so அவன் இருந்த எடத்துலேர்ந்து ஒரு அடி அசையல. ஆனா இடது கை சுண்டு விரல் மூட்டு ஒடஞ்சு ரெண்டு இன்ச் உள்ள போய்டுச்சுன்னு அவனுக்கு தெளிவா தெரிஞ்சுச்சு. ஒரு நிமிஷம் எங்களுக்கு என்ன பண்றதுன்னே புரியல. இருட்டு.. மழை.. ஹைவே வேற... வண்டிய அப்டியே ஸ்டாண்ட் போட்டுட்டு கீழ விழுந்த அந்த ஆள தூக்க கிட்ட போனோம். கைலி கட்டியிருந்ததனால ரெண்டு கால் முட்டியிலயும் சிராய்ப்பு.. செம்ம போதை.. தள்ளாடி தள்ளாடி எழுந்தவன தூக்குனது மணிப்பூர் பையன் சஞ்சீப் தான். அந்தாளு செம்ம குடிச்சிருக்கான்னு தெரிஞ்சதும் சஞ்ஜீப்புக்கு செம்ம கோவம். This fucker is full drunk. Tell me fucker.. Are you drunk..are you drunk னு கேட்டுகிட்டே ரெண்டு அறை விட்டான். நான் என்ன பண்றதுன்னு புரியாம அருண எப்டி கூட்டிட்டு போறதுன்னு தெரியாம பேயறஞ்ச மாதிரி நின்னுட்டு இருந்தேன். அதுக்குள்ள அந்த ஆள் “ டேய் ...**@@யாப் பசங்களா என்ன அடிச்சுட்டீங்கள்ள..இருங்கடா வரேன்னு எறங்கி ஊருக்குள்ள நடக்க ஆரம்பிச்சான். சஞ்சீப் உடனே guys..lets get the fuck outta here.. on the bikes.. come on ன்னு கத்துனான்... அதுக்குள்ள எங்களுக்காக கிருஷ்ணாகிரிக்கு முன்னாடி ஒரு பெட்ரோல் பங்க்ல காத்துகிட்டிருந்த மத்தவங்களுக்கு ஃபோன பண்ணி தீன் விஷயத்த சொல்லியிருந்தாரு. எல்லாரும் அவங்கவங்க வண்டில ஏறுனோம்... என் வண்டி ஸ்டார்ட் ஆகல பேட்டரி டவுன். செல்ஃப் எடுக்கல.. கிக்கரும் வேல செய்யல...நான் காலை உந்தி உந்தி வண்டிய தள்றேன்.. தீன் வண்டி ஸ்டார்ட் ஆகலன்னு கத்துறேன்...


சஞ்சீப் இன்னொரு வண்டி பில்லியன்லேர்ந்து எறங்கி man... put it on second gear and release the clutch.. I'll pushனு கத்திகிட்டே வண்டிய வேகமா தள்ளுனான். தீன் ஒருபக்கம் டோ பண்ற மாதிரி காலால தள்ளிகிட்டே வந்தாரு ஒரு வழிய வண்டி ஸ்டார்ட் ஆகி எல்லாரும் 6கிலோமீட்டருக்கு அடுத்து எங்களுக்காக காத்திருந்த ரைடர்ஸோட வந்து சேர்ந்தோம். அருண் ஒடஞ்ச விரலோடவே வண்டியோட்டிட்டு வந்திருந்தான். ரொம்ப பதட்டமா இருந்தான்.அவன் backup support கார்ல ஏத்திவிட்டுட்டு வேற ஒரு டெக்னீஷியன் அருண் வண்டிய ஓட்டிட்டு வந்தாரு. எல்லாருமே பதட்டத்துல தான் இருந்தாங்க. மழை..குளிர்..பயம்...எல்லாம் சேர்ந்து எனக்கு உடல் நடுங்க ஆரம்பிச்சுது ஆக்ஸிலேட்டரை முறுக்க முடியல.. ஹரி நான் ஸ்வீப் பண்றேன்னு சொல்லிட்டு கடைசில வந்தாரு. ஹெல்மெட் வைசர் வேற condensationனால கண்ண மறைக்க ஆரம்பிச்சுது நான் வைசர தொறந்துட்டு முகத்த தொடச்சபடி பொறுமை ஓட்டிகிட்டே வந்தேன். ஒரு எடத்துல ஹரி வண்டிய ஓரம்கட்டி நிறுத்த சொன்னாரு. நான், ஹரி, ரிஷி மூனு பேரும் மட்டும் ஓரமா நின்னுட்டோம் மத்தவங்க எல்லாம் முன்னாடி போய்ட்டு இருந்தாங்க. ஹரி என் ஹெல்மெட்ட வாங்கி வைசர க்ளீன் பண்ணி மாட்டிக் குடுத்தாரு. உங்களால ஓட்ட முடியுமா சுதர்சன்.. இல்ல கார்ல வரீங்களான்னு கேட்டாரு. ரிஷியும் என்னாச்சு மச்சி முடியலையான்னு கேட்டான். இல்ல.. மழை வேற நான் பொறுமையாவே வரேன்னு சொன்னேன். ரிஷி உடனே ஹரி கிட்ட “நான் இவன கூட்டிட்டு வரேன் நீங்க முன்னாடி போங்கன்னு” ஹரிய அனுப்பி வெச்சான். என்கிட்ட வந்து ”மச்சான்..ஒன்னும் பயப்படாத ஒன்னும் இல்ல.. வண்டிலாம் ஸ்லிப் ஆகாது... காத்து கொஞ்சம் கொறஞ்சு இருக்கும்..அதனால friction கெடைக்கும். நீ என் டெயில் லாம்ப்ப மட்டும் பாத்து ஃபாலோ பண்ணிட்டு வா.. நான் பொறுமையாவே போறேன்”னு சொன்னான்.

நானும் சரின்னு ஒத்துகிட்டு அவன ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன். ஒரு 10-15 கிலோமீட்டர் வரைக்கும் 70கிமீ தாண்டல.அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வேகத்த அதிகரிக்க ஆரம்பிச்சான்.என்னாலையும் அத உணர முடிஞ்சுது. 80..85..90..95..100..ன்னு ஒரு வழியா வேகம் பிடிச்சுது என் வண்டி. மழை கொட்ட ஆரம்பிச்சுது. ரிஷி பின்னாடி வந்து எனக்குப் பக்கத்துல கட்டி விரலை உயர்த்துனான்.அப்டியே கைய காமிச்சு இன்னும் போ மச்சான்..இப்டியே போ..விட்றாதன்னு கத்தி சொன்னான்... முறுக்குனேன் நான் 100..110..115... மழையும் தெரியல ஒன்னும் தெரியல... ஒவ்வொரு வண்டியா 16+ வண்டிகளையும் தாண்டித் தாண்டி லீட் கிட்டவே போய்ட்டேன் ரிஷியும்..ஹரியும் கூடவே வந்து எனக்கு கைய உயர்த்தி செம்மன்னு சிக்னல் காட்னாங்க. மூட் மாறி சிரிப்பு வந்துச்சு. மறுபடியும் ஆக்ஸிலேட்டர ஒரு முறுக்கு மேல்மருவத்தூர் வரைக்கும் அதே formல வந்து சேர்ந்தேன்.

ரிஷி...!!
இந்த எடத்துல ரிஷி பத்தி சொல்லியே ஆகனும்.அவன் ஒரு horse trainer.அதிகம்
பேச மாட்டான்.லாரி ஸ்டியரிங் மாதிரியா ஒரு பெரிய ஹேண்டில்பார் வெச்ச Thunderbird 500 தவிர ஒரு Yamaha R1 (R15 அல்ல..இது 1000cc)ம் வெச்சுருக்கான். ட்ராக் ஓட்ற ப்ரொஃபஷனல் ரேசர்/ரைடர்.எனக்கு மலைப்பாதைகள் மேல இருக்குற பயத்தைப் போக்குனது தொடங்கி..wet road riding... வண்டிய கட்டுப்பாட்டுக்குள்ள வெச்சுருக்குறது... bends போடுறதுன்னு பல விஷயங்கள்ல எனக்கு குரு இவன் தான். ரைட் அப்போ.. பேய் சுரேஷ் தோனின்னா...இவன் சச்சின்... செம்ம classy rider. இந்த ட்ரிப்புக்கு அப்புறம் தான் ரிஷி இன்னும் நெருக்கமானான்.


மழை விட்டுருந்ததனால எல்லாரும் அவங்கவங்க ஈர ஆடைகள மாத்திகிட்டு காஃபி..டீ குடிச்சபடி உக்காந்திருந்தோம். கடைசி 100 சொச்சம் கிலோ மீட்டர்கள். ஒரு வழியா அதிகாலை மூனு மணி வாக்குல சென்னை வந்து சேர்ந்தோம். வழக்கம்போல ஸ்ரீபெரும்புதூர் டோல் கேட்ல எல்லாரும் ஃபோட்டொ எடுத்துகிட்டு ஒவ்வொருத்தரும் அடுத்த ரைட்ல சந்திப்போம்னு ஹக் பண்ணிட்டு தனித்தனியா பிரிஞ்சு கெளம்புனோம். 4.00 மணி வாக்குல கே.கே நகர் வந்து சேர்ந்தேன் நான்,.. மனசு நடந்தத எல்லாம் அசை போட்டபடி இருந்துச்சு..செம்ம களைப்போட அடுத்த ரைட எதிர்பார்த்தபடி தூங்கிப்போனேன் நான்.


செவ்வாய், 6 அக்டோபர், 2015

புல்லட் டைரி - அடைமழை... ஆகும்பே... அட்டகாசம் - 3



V11 குழும நண்பர்கள் அடுத்த நெடுந்தூரப் பயணம் போக இடம் முடிவு செய்தபோது நாம் பரிந்துரைத்தது இரண்டு இடங்கள். ஒன்று கூர்க்.. மற்றது ஆகும்பே. ஆகும்பே கர்நாடக மாநிலத்தின் ஷிமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி அருகே உள்ள ஒரு மழைக்காடுகள் நிறைந்த மலைப் பகுதி. Land of King Cobras எனவும் Cherapunji of south என்றும் அழைக்கப்படுகிற இடம். பெங்களூரிலிருந்து கிட்டத்தட்ட 360 கிலோ மீட்டர்கள். நாங்கள் தேர்ந்தெடுத்த பாதையே கொஞ்சம் சுத்தலான வழிதான். ரத்தினா அண்ணன், பிரபாகரன், துபாய் சுரேஷ் அண்ணன், அருண்,போபண்ணா சார் ஆகியோர் மட்டும் முதல் நாளே கிளம்பி பெங்களூரு சென்று தங்களுடைய சொந்த வேலைகளை முடித்துக் கொண்டு எங்களுக்காக தொப்பல்லபுராவில் காத்திருந்தார்கள்.

ஆகஸ்ட் 14ஆம் தேதி அதிகாலை 3.30க்கு விருகம்பாக்கம் V11 ஷோரூமிலிருந்து புறப்படுவதாக இருந்தது.முதல் நாள் இரவிலிருந்து எல்லாவற்றையும் தயார் செய்வதிலேயே நேரம் கடந்து விட்ட படியால் சுத்தமாக தூக்கமில்லை 2.30க்கெல்லாம் வண்டியில் saddle bagஐ கட்டிவிட்டு எப்படா விடியுமெனக் காத்திருந்தேன்.இந்த ரைடுக்கு ஹரி தான் லீட் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. அவரும் முன்னதாகவே எந்தெந்த ஊர்கள் வழியாக போகப் போகிறோம் ; எந்த வழியாக திரும்ப வரப்போகிறோம்; என பட்டியல் போட்டு ரூட் மேப்போடு அனுப்பிவைத்திருந்தார். கிட்டத்தட்ட 750 சொச்சம் கிலோமீட்டர்களை கடக்க வேண்டி இருந்ததால் நிறைய திட்டமிடல் அவசியமாக இருந்தது.


ஒருவழியாக எல்லோரும் வந்து சேர்ந்து கிளம்பும்போது மணி 4.30ஐத் தொட்டிருந்தது.குடியாத்தம், சித்தூர் தாண்டி வந்து காலை உணவுக்காக விஜயபுரா வந்து சேர்ந்தோம். காலை உணவை முடித்துவிட்டு கோலார் வழியாக தொட்டபெல்லபுரா தாண்டி தெபஸ்பேட் வந்து சேரும்போது மணி மதியம் 12.00.முந்திய நாள் கிளம்பி வந்த ஐவர் அணி தங்கியிருந்த ஹோட்டல் முன்பு எல்லோருடைய வண்டிகளையும் பார்க் செய்து விட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தோம். அப்போது தான் ஒரு பெரிய ஆப்பு வந்து எங்கள் பயணவேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டது. அருணுடைய desert storm 500ன் இஞ்சின் சிலிண்டரில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. அதற்கான உதிரி பாகங்கள் வந்து வண்டி சரியாகிற நேரத்தில் எல்லோரும் மதிய உணவை அங்கேயே முடித்து விடலாமென திட்டமிட்டோம்.சாப்பிட்டு முடித்து கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டுக் கிளம்பத் தயாராகும்போதும் அருணுடைய வண்டி பிரச்சனை சரியாகாததால் அருணும் சுரேஷ் அண்ணனும் மட்டும் அடுத்த நாள் அதிகாலை கிளம்பிவருவதாக சொன்னார்கள்.மற்றவர்கள் அங்கிருந்து கிளம்பினோம்.





மாலை வெயில் மின்ன ஹிரியூர், சிரா வழியாக நெடுஞ்சாலைகள் அல்லாத அழகான பாதைகளின் ஊடே பயணிக்கத் தொடங்கினோம்.அங்கங்கே நிறுத்தி தேனீர் மட்டும் அருந்திவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். இருட்டுகிற வேலையில் ஹோசதுர்கா தாண்டி பத்ராவதி வந்து சேர்ந்தோம். செக்போஸ்ட்டில் எண்ட்ரி போட்டுவிட்டு ஒரு நீண்ட நெடும் மலைப் பாதை வழியான பயணத்தை எதிர்நோக்கியபடி இஞ்சின்கள் உறும ஆரம்பித்தன

மெலிதாக மழை தூற ஆரம்பித்தவுடனேயே அத்தனை பேரும் ரெயின் கோட்டும் saddle bagக்கான ரெயின் கவரையும் அணிவித்து/அணிந்துகொண்டு கிளம்பினோம். இதற்கு மேல் நிறைய மலைப்பாதைகளை வேறு எதிர்நோக்கியிருந்தோம்.மழை, இருட்டு, மலைப்பாதை அத்தனையும் சேர்ந்து உள்ளுக்குள் மெலிதாக திகிலைக் கிளப்பியிருந்தது எனக்கு. முந்தைய நாள் தூங்காமல் போனதன் விளைவை உடல் காட்ட ஆரம்பித்தது. கண்ணிமைகள் கனக்கத் தொடங்கின.தங்குமிடம் போய்ச் சேர்ந்தால் போதுமென வெறுப்போடு வண்டியோட்ட ஆரம்பித்தேன். பிற ரைடர்களை முன்னே போகவிட்டு நான் வேகம் குறைக்க ஆரம்பித்தேன்.கடைசியாக நான், ரத்தினா அண்ணன், பிரபா, தீன், ஆனந்த் நாயர் ஆகியோர் மட்டும் தான் பின்னே சென்று கொண்டிருந்தோம் . அவ்வப்போது முன் செல்லும் லாரிக்காரர்களிடும் ஹெட்லைட்டில் கெஞ்சி வழி கேட்டு முன்னேற வேண்டியிருந்தது ஒரு கட்டத்தில் எனக்கு முன்னே பின்னே யார் இருக்கிறார்கள் என்றே தெரியாமல் போனது . கழுத்துக் கயிற்றில் இருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொள்ளும் கன்றுக் குட்டிபோல என் வண்டி எனது கட்டுப்பாட்டிலிருந்து மிக மெதுவாகத் தன்னை விடுவித்துக் கொண்டு ஒரு வளைவில் தார்ச்சாலையை விட்டுக் கீழே இடதுபக்க மண்பாதையில் இறங்கியது. நான் அரைமயக்கத்துல் காலூன்றி செய்வதறியாது அப்படியே நின்றேன். பின்னே வந்து கொண்டிருந்த ரத்னாவும் பிரபாவும் பதறியடித்து வண்டியை நிறுத்திவிட்டு என்னை பிடித்தார்கள். வண்டியை சாலையில் ஏற்றிவிட்டு .ஒரு கேன் முழு Redbullஐ அருந்தவைத்தார்கள்.

”தம்பி..வண்டிய திருவாத.. என் டெயில் லேம்ப்ப மட்டும் அப்படியே ஃபாலோ பண்ணி வா. பொறுமையாவே போவோம். பசங்க எங்க இருக்காங்களோ அங்க வண்டிய வேற ஆள்ட்ட மாத்திவிட்டுட்டு நீ வேற வண்டியில பில்லியனா வரலாம்.. “ ரத்னா அண்ணன் சொன்னது எங்கோ தொலைவில் கேட்டது எனக்கு. பொறுமையாய் உருட்ட ஆரம்பித்தேன் கிட்டத்தட்ட 18 மணி நேரத்துக்குமேல் வண்டியோட்டிருந்தோம் எல்லோருமே. ஒரு இடத்தில் முன்னே சென்ற நண்பர்கள் எங்களுக்காக காத்திருந்தார்கள்.மணிப்பூர் பையன் சஞ்ஜீப்பிடம் என் பைக்கைக் கொடுத்துவிட்டு நான் சதீஷ் அண்ணன் வண்டியில் பில்லியன் ஏகினேன். என்னைத்தவிர பிரபாவும் சதீஸ் அண்ணனும் மட்டுமே எலெக்ட்ரா வாசிகள். மற்ற எல்லோருமே தண்டர்பேர்ட்/க்ளாசிக் தான். நான் அவர் தோளைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தேன். இன்னும் 20 சொச்சம் கிலோமீட்டர்கள் போக வேண்டுமென பேசிக் கொண்டார்கள்.


எக்சாக்ட்லி இந்தக் காட்சி தான். இந்த இடத்திலிருந்து பாருங்கள்

என் ஹெல்மெட் வைசர் மூடியபடியே இருந்தது. கண்டென்சேஷனால் வைசரின் உட்பக்கம் ஆவி படர்ந்தது. வெளியே மழை.எனக்கு அரைத்தூக்கம். சதீஷ் அண்ணன் வண்டியைக் கிளப்பியதும் சாலையின் மின்விளக்குகளின் ஒளி மட்டும் மங்கலாக பின்செல்ல ஆரம்பித்தது.இஞ்சின் சத்தம் தவிர்த்து வேறெதுவும் காதில் விழவில்லை.ஒவ்வொரு வளைவிலும் வண்டி சாய்ந்து திரும்புவதை உணர முடிந்தது. இண்டர்ஸ்டெல்லார் படத்தில் கூப்பர் தன் விண்கலதோடு கருந்துளைக்குள் புகுந்து தன்னை விடுவித்துக் கொள்வாரில்லையா.. கிட்டத்தட்ட அதே காட்சியை என்னால் உணர முடிந்தது.வண்ணங்கள்.. வெளிச்சம்.. இருட்டு.. மழை.. இஞ்சின் சப்தம்.. சாலையின் வளைவுகள்..அரை மயக்கம்.. வேறெதுவுமில்லை. அந்த 18 கிலோமீட்டர்கள் ஏதோ கருந்துளைக்குள் நுழைந்த யுகப்பயணம் போலத் தோன்றியது.ஒருவழியாக ரிஸார்ட் வந்து சேர்ந்தோம்.



அதிகாலைக்கு கொஞ்சம் முந்திய மூன்று மணி இருள்.வண்டியை பார்க் செய்துவிட்டு ரைடிங் கியர்களைக் களைந்து ட்ராக்ஸ் ஷார்ட்ஸுக்கு மாறி அவரவர்க்கு பிடித்து உணவுப் பதார்த்தங்களோடு காரிடரில் அமர்ந்தோம். கடகடவென உண்டு முடித்து அறைகளில் கட்டிலில் விழும்போது மணி 4.30க்கு கொஞ்சம் அதிகம்.முதுகும் தோள்களும் ”என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா” எனக் கதறின.. ஒருவழியாய் உறங்கினேன்.


திரும்பிவந்ததே தனி கதை - அதனால 3.1ல தொடரும்...

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

Whiplash - 2014 - நான் ஆணையிட்டால்

  



Question: But some reviewers describe him (Fletcher) as a monster, and some as a cruel but necessary teacher, citing what Andrew accomplishes under his watch. Did you intend for Fletcher to be ambiguous?

Chazelle (Director of Whiplash): Yeah, because I think that’s the question posed by a lot of these tyrannical teachers, tyrannical band leaders, tyrannical directors. To what extent is it the tyranny pushing people, and to what extent is it other stuff? I personally think fear is a motivator, and we shouldn’t deny that. Someone like Fletcher preys on fear. I think there’s a reason his methodology sometimes works, both in real life and on the screen. Fletcher’s methodology is like if there was an ant on this table, and I wanted to kill it, so I used a bulldozer. Yeah, you kill the ant, but you also do a lot of other damage. And in Fletcher’s mindset, that’s actually fine. Fletcher’s mindset is, “If I have 100 students, and 99 of them are, because of my teaching, ultimately discouraged and crushed from ever pushing this art form, but one of them becomes Charlie Parker, it was all worth it.” That’s not a mentality I share, but in many ways, that’s the story of the movie. He potentially finds his Charlie Parker, but he causes a lot of wreckage in that pursuit.

1937 ஆம் வருடம். அமெரிக்காவின் கான்ஸாஸ் மாகாணத்தில் 'ரெனோ’ க்ளப்பில் அன்றைய இசை நிகழ்ச்சிக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார் 16 வயது சாக்ஸபோன் கலைஞர் சார்லி பார்க்கர். மேடையில் அவரோடு ட்ரம்ஸ் வாசிக்கப்போவது ‘ஜோ ஜோன்ஸ்’ என்கிற மகா ஜித்தர். அவருடைய முறை வந்ததும் வாசிக்கத் தொடங்கிய சார்லி பார்க்கர் ஏதோ கொஞ்சம் சொதப்ப, கடுப்பான டிரம்மர் ஜோ அவருடைய ட்ரம் கிட்டின் சிம்பலை (பெரிய உலோகத்தட்டு போல.. பார்த்திருப்பீர்கள் தானே) சார்லியை நோக்கி விட்டெறிகிறார். பறந்து வந்து சார்லியின் காலில் விழ, அரங்கம் மொத்தமும் அதிர்ந்து சிரித்து ஆரவாரக் கூச்சலிட அவமானப்பட்டு மேடையை விட்டு இறங்குகிறான் இளாம் சார்லி.எங்கோ ஊருக்கு வெளிய ஒரு விடுதியில் தன்னை அடைத்துக் கொண்டு ஒரு வருடம் ராட்சசத்தனமான பயிற்சியில் ஈடுபடுகிறான்.அடுத்த வருடமே ஊர் உலகம் அதிசயிக்கிற மாதிரியான ஒரு solo பெர்ஃபாமன்ஸ் அளிக்கிறான்.அதுமட்டுமல்லாது, தன்னுடைய போதைப் பழக்கத்தால் 34 வயதில் மரணமடைந்த ’சார்லி பார்க்கர்’ aka ’The Bird', தேய்வழக்கில் சொல்வதானால் இன்றுவரை ஜாஸ் இசை உலகின் முடிசூடாமன்னராக விளங்குகிறார். ஒருவேளை 16 வயதில் , மேடை மேல் அந்த அவமானத்தை எதிர் கொள்ளாமல் போயிருந்தால்...அவர் அத்தனை பெரிய மேதையாக உருவாகியிருப்பாரா...??

பிறக்கும்போதே அதீத திறமையுடன் பிறக்கின்ற Prodigyகள் தவிர்த்து பல்வேறு துறைகளில் லெஜண்டுகள் பலரும் எண்ணிலா அவமானங்களையும் தூற்றல்களையும் தடைகளையும் தாண்டி தான் மேலே வந்திருக்கின்றார்கள். தமிழ்த் திரையுலகத்தில் ஒரு பிரபலமான உதாரணம் சொல்வதானால் ‘பராசக்தியில்’ நடிக்க வந்த சிவாஜிகனேசனுக்குக் கிடைத்த ‘குதிரை மூஞ்சி’ப் பட்டம். இசைக்கலைஞரோ, விளையாட்டு வீரரோ, நடிகரோ, கட்டிடப் பொறியாளரோ, அரசியல்வாதியோ.. யாராக இருந்தாலும் தத்தமது துறைகளில் அவர்கள் அடைகிற உயரங்களுக்கு அவமானங்கள் தான் உரமா..அல்லது வேறெப்படியாகிலும் அவர்கள் அந்த நிலையை அடைந்துவிடுவார்களா...??

கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிகிறவர்களுக்கு இந்த ‘tapping the potential..', 'pushing beyond limits' ஆகிய சொற்றொடர்கள் பரிச்சயமானவையாக இருக்கலாம். அதாவது அதீத திறமை இருப்பதாக அடையாளம் காணப்படும் ஒருவனை, அவன் உடைந்துபோகிற அளவு உச்சகட்ட சுமையை ஏற்றி எதிர்ப்பார்புகளையும் வளார்த்துக் கொள்(ல்)வது. அந்த உச்சகட்ட சுமையில் மன அழுத்தம் தாங்காமல் உடைந்து போகிறவர்களே பெரும்பாலானவர்கள். Mediocres...!! மாறாக அத்தனை அழுத்தத்தையும் தாங்கிக் கொண்டு எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றி வெற்றிக் கோட்டை எட்டுகிற லெஜண்டுகள்/ஜீனியஸ்கள் வெகு சொற்பமே. Whiplash திரப்படத்தின் அடிநாதமே இதுதான்...!

ஆண்ட்ரூ நெய்மன் (Miles Teller), 19 வயது ட்ரம்மர். உலகின் மிகச்சிறந்த ட்ரம்மர்களில் ஒருவனாக ஆக வேண்டுமென்ற கனவோடு ஷேஃபர் இசைப்பள்ளியில் சேர்கிறான். ஒரு இரவு ஆண்ட்ரூ தன் அறையில் ட்ரம்ஸ் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது அந்த வழியே நடந்து செல்கிற பயிற்சியாளர் ஃப்ளெட்சர் (J.K.Simmons), ஆண்ட்ரூவை தன்னை அடுத்த நாள் வந்து சந்திக்கும்படி சொல்கிறார். சில பல இசைத்துணுக்குகளை வாசிக்கச் செய்து ஆண்ட்ரூவைச் சோதித்த பின்னர் அடுத்த நாள் முதல் தன்னுடைய் இசைக்குழுவில் வந்து சேர்ந்து கொள்ளச் சொல்கிறார். தனது திறமை அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாக முதலில் மகிழும் ஆண்ட்ரூ அடுத்தடுத்த நாட்களில் தன் வாழ்நாளின் மோசமான பகுதிகளைக் கடக்க நேரிடுகிறது. காரணம், ஆசிரியர் ஃப்ளெட்சர், அவருடைய முரட்டுத்தனமான அணுகுமுறையும் மாணவர்களை மிக மிக மோசமாகத் திட்டியும் நடத்தியும்,  மன அழுத்தத்தை உண்டாக்கியும் அவர்களை perfectionistகளாக மாற்ற முயலும் தன்மையும் ஆண்ட்ரூவைக் கலங்கடிக்கின்றன.அவருடைய ஏச்சுகளைத் தாங்க முடியாமல் கண்ணீர் சிந்தும் ஆண்ட்ரூ, கை கிழிந்து ரத்தம் வருமளவு பயிற்சியில் ஈடுபடுகின்றான். பெரும் மன அழுத்தத்துக்குளாகிறான். ஆனாலும் ஃப்ளெட்சருடைய எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுமளவு ஒரு போட்டியில் அட்டகாசமாக வாசிக்கவும் செய்கிறான். ஒவ்வொருமுறை ஆண்ட்ரூ தன் திறமையை நிறுவ முயலும்போதெல்லாம் ஃப்ளெட்சர் தன் எதிர்பார்ப்புகளின் உச்சவரம்பை அதிகரித்தபடியே செல்கிறார்.

பின்பு மற்றுமொரு சந்தர்ப்பத்தில் ஒரு மேடையில் வாசிக்கவேண்டிய நேரத்தில் காலதாமதமாக வந்து கார் விபத்தில் சிக்கி ரத்தம் ஒழுக மேடையேறும் ஆண்ட்ரூ சொதப்ப, ஃப்ளெட்சர் கோபத்தில் மேடையிலேயே அவனைத் திட்ட; ஆண்ட்ரூ வெறி பிடித்தாற்போல் அவர் மீது பாய்கிறான். விளைவாக, இசைப்பள்ளியிலிருந்து நீக்கப்படும் ஆண்ட்ரூ தன் தந்தையின் உதவியோடு ஃப்ளெட்சர் மீது வழக்குத் தொடுக்க, அவருக்கும் வேலை பறிபோகிறது.தனது ‘உலகின் மிகச் சிறந்த ட்ரம்மர்’ ஆகும் கனவைக் குப்பைத்தொட்டியில் போடுகிறான். சில நாட்களுக்குப் பின் எங்கோ ஒரு ஜாஸ் நிகழ்ச்சியில் ஃப்ளெட்சர் மேடையில் வாசிப்பதைப் பார்க்கிறான் ஆண்ட்ரூ. அவரும் நிகழ்ச்சி முடிந்த பின் இறங்கிவந்து தனக்கு வேலை போய்விட்டதையும் அதனால் இது போல் வெளி நிகழ்ச்சிகளில் வாசித்துவருவதாகவும் சொல்கிறார், தன்னுடைய வேலை இசைமேதைகளை உருவாவுக்குதான் என்றும், அதற்காக தான் கையாளுகின்ற பயிற்சிமுறையே சிறந்ததென்றும் கூறுகிறார். முதல் பத்தியில் இருக்கிற சார்லி பார்க்கர் உதாரணாத்தைச் சொல்லி ‘A genius can not be made without humiliations' என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். மேலும் தனக்கு சரியான ட்ரம்மர் யாரும் அமையவில்லை எனவும் இசைப்பள்ளியில் பழக்கப்பட்ட ட்யூன்கள் தான் என்பதால் ஆண்ட்ரூ தனது இசைக்குழுவுக்காக ட்ரம்ஸ் வாசிக்க முடியுமாவென கேட்கிறார்.

 ஆண்ட்ரூ ஃப்ளெட்சருடைய இசைக்குழுவுக்காக வாசித்தானா....? அவனது ஆசைப்படி உலகின் மிகச் சிறந்த ட்ரம்மர் ஆனானா ??. இசைமேதையை உருவாக்கும் ஃப்ளெட்சரின் கனவு பலித்ததா...?? படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இயக்குநர் - டேமியன் சஸ்ஸேல்
இந்த திரைப்படத்தின் இயக்குநர் டேமியனின் சுவாரஸ்யமான ஒரு நேர்காணல் - இங்கே

படத்தில் ஆண்ட்ரூ முதல் நாள் ஃப்ளெட்சரின் இசைக்குழுவுக்காக வாசிக்கிற காட்சி. டைமிங்கை தவறவிட்டதற்காக ஃப்ளெட்சர் சொல்கிற ‘Not quite my tempo' என்கிற புகழ்பெற்ற வசனம் இடம்பெறுகிற காட்சியும் இதுவே.எப்படி வறுத்தெடுக்கிறாரென பாருங்கள்..!!


உங்கள் கருத்துகளையும் மறக்காமல் தெரிவியுங்கள்...!
Related Posts Plugin for WordPress, Blogger...