நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

புதன், 30 மே, 2018

மரணம் - Closure - மறத்தலும் கடத்தலும்



பொதுவாகவே யாருடைய மரணமும் அதீதமான பாதிப்பை ஏற்படுத்தும் எனக்கு. பைக் பயணம் தொடங்கிய நாள் முதல் சாலை விபத்துகளில் உயிரழந்தோர் குறித்தான செய்திகள் மிகையாய் பாதிக்கும்.சாலையில் உயிரிழந்தவர்களை அதுவும் இருசக்கர வாகனமென்றால் ரொம்பவே நெருக்கமாய் உணர்வேன். எந்த வண்டி ? யாருடைய தவறு ? எந்த சாலை ? விபத்தின் காரணிகள் என ? இந்த விபத்து எப்படி நிகழ்ந்திருக்கக் கூடும் ? எப்படித் தவர்த்திருக்கலாம் ? எனப் பலவாறாக யோசித்து மனம் ஒரு முடிவுக்கு வந்து ஆற்றுப்படும் வரையில் சிந்தனையும் செயலும் அளவுக்கதிகமாய் உழலும்.

எதிலும் கவனம் செலுத்த முடியாது. போலவே தற்கொலைகள் குறித்த செய்திகளும், உயிரிழந்தவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தையும் பதிவுகளைக் காண நேர்தலும் ஒரு துன்பியல் அனுபவம். இந்தப் புகைப்படத்தைப் பதிவிடும்போது தன் உயிரை மாய்த்துக் கொள்கிற எண்ணம் இவருக்கு இருந்திருக்குமா ? கடைசியாக யாரோடு பேச வேண்டுமென நினைத்திருப்பார் ? தன்னைச் சார்ந்தவர்கள் குறித்தான கவலை இருந்திருக்குமா ? எல்லா நம்பிக்கைகளுமே அற்றுப்போய் உயிரை மாய்த்துக் கொள்ளமுடிவு செய்யுமளவுக்கு என்ன பிரச்சனை இருந்திருக்க முடியும் ? நம் வாழ்க்கையில் ஏதோவொரு வகையில் குறுக்கிட்டிருந்து பேச நேர்ந்திருந்தால் என்னவென்று கேட்டறிந்திருக்கலாமோ ? இப்படி கேள்விச் சுழல் தொடரும்.

பொதுப் பிரச்சனைகள்; அரசியல் காரணங்கள்: சாதியின் பெயரால் நிகழ்த்தப்படுகிற வன்முறையால் உயிரிழந்தவர்கள்; இந்த ஒட்டுமொத்த அமைப்பின் குறைபாடுகளால் மரணத்தைத் தேர்ந்தெடுக்கிறவர்கள்;இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படியான மரணங்களும் துயரிலாழ்த்தி குற்றவுணர்ச்சியில் தள்ளும். I'll mourn with guilt over the grief of the lives lost even though I absolutely don't have any control over what has happened to the corresponding indivduals.

அனிதாவின் மரணச்செய்தியை அறிந்தபோது குடும்பத்தோடு குற்றாலத்திலிருந்தோம். தம்பி வெளிநாட்டிலிருந்து வந்திருந்ததால் திட்டமிட்ட பயணம் அது. அறையைவிட்டு அருவியில் இறங்க கொஞ்சமும் மனம் ஒப்பவில்லை. அதற்கு முந்தைய நாள்வரை குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களைக் கூட எங்கும் பகிரவில்லை. Guilt, helplesness and incapability..! எவ்வளவு தேடியும் சரியான காரணம் இன்னதென முடிவுக்குவர முடியவில்லை. அந்த closure கிடைக்கவேயில்லை. மறதியும் மற்ற வேலைகளின் ஊடாகவும் மட்டுமே அந்த மரணத்தை என்னால் கடக்க முடிந்தது.

தேனி தீவிபத்தின் போது மரணித்தவர்களில் ஒருவர் கூட நேரடியான அறிமுகம் இல்லை. ஆனாலும் அத்தனை மன அழுத்தத்தில் தள்ளியது அந்த மரணம். மீண்டும் அதே கேள்விகள். தேடல். ஒவ்வொருவரின் பெயரும் அவர்கள் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் (புது மணத்தம்பதிகள் etc), அவர்கள் பயணித்த பாதை; காட்டுத்தீ பரவியிருக்கக் கூடிய சாத்தியங்கள்; அது இதுவென மனம் ஆற்றுப்பட ஏதோவொரு காரணத்தை தொடர்ந்து தேடிக்கொண்டேயிருந்தது. பழிசுமத்தவும், கைகாட்டவும், ஏதோவொன்றைத் தேடிப் பற்றி பாரமிரக்கிவிட்டு தப்பித்தோடுகிறது பாழ்மனம். ஓஹ் இதனாலதான் இப்படியாச்சு..இல்லன்னா கண்டிப்பா தப்பிச்சுருக்கலாம் என பொய்யாகவேனும் உச்சுக்கொட்டி மறந்துதான்..மறைத்துதான் கடக்கவேண்டியிருந்தது.

இப்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொலைச்சம்பவம்...! அதில் கொல்லப்பட்டவர்கள். அவர்களின் பெயர்கள்; புகைப்படங்கள்; குடும்பத்தாரின் அரற்றல்கள்; அரசாங்கத்தை நோக்கி அவர்கள் எழுப்புகிற கேள்விகள். இன்னும் முழுதாக அதிலிருந்து மீளவில்லை. இறந்தவர்களின் எண்ணிக்கை நமக்குச் சொல்லப்படுகின்றது; இந்த கொலைச்சம்பவத்தின் பின்னணியிலிருந்தவர்கள் பற்றிய விவாதங்கள் நிகழ்கின்றன. எல்லா திசையிலிருந்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

அரசாங்கம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அறிவிக்கின்றது. நான் உட்பட எல்லோருக்குமே ஒரு தற்காலிக closure கிடைத்துவிடுகின்றது. ஐபிஎல்’லோ,அடுத்து வெளிவரும் திரைப்படமோ, ஏதோவொன்று மொத்தமாய் கவனம் திருப்பி நம்மை மடைமாற்றிவிடக்கூடும்.
ஆனால்...தொக்கி நிற்கிற மரணங்களையும் பறிக்கப்பட்ட உயிர்களுக்கான நியாயத்தையும் யார் கேட்பார்கள் ? என்னவாகும் அந்த உயிர்கள் ? What is the least I could do ? Forget and Move on ?

எப்போதுமே மேற்சொன்ன மாதிரியான எந்தவொரு நிகழ்வின் போதும் உடனடியாக அதைப் பற்றிய செய்திகளையோ என்னுடைய கருத்தையோ பகிராமல் பேசாமல் கடக்க முயல்வேன். உடனடி எதிர்வினை பெரும்பாலும் emotional outburstஆக மட்டுமே இருக்குமென்பதாலும், உணர்ச்சிவயப்பட்ட மனநிலையில் அடிப்படை அறவுணர்வு மறையக்கூடுமென்பதாலுமே அந்த அழுத்தமான மெளனம். முடிந்தவரையில் அறத்தோடு தர்க்கம் பேசி பிரச்சனை குறித்து எழுதப்படுகிற, என் அலைவரிசைக்கு ஒத்துப் போகிற கருத்துகளை பகிர்வதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாய் மன அழுத்தத்திலிருந்து தப்பித்துக்கொள்ளக் கூடும்.

எதுவும் கையாலாகாதபோது இப்படி மனம்போனபடி எழுதித் தப்பித்துக்கொள்ளலாம். இந்த எல்லா பிரச்சனைகளைக் குறித்தும் தர்க்க நியாயங்களோட எழுதப்படுகிற கட்டுரைகளைப் படித்தும், என் அன்றாட வேலைகளில் எல்லாவற்றையும் மறந்தும் கடந்து போகலாம்.

ஆனாலும்... 


ஹேராம் திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு. சாகேத் ராம் தன்னுடைய இரண்டாவது திருமணத்துக்குப் பின் மறுபடியும் கல்கத்தா வருவான். தான் அபர்ணாவோடு வாழ்ந்த வீட்டைப் பார்த்துவிட்டு அங்கிருந்து அவள் வரைந்த காளி ஓவியத்தை எடுத்துக்கொண்டு கையில் வைத்தபடி சாலையில் நடந்து வருவான். அப்போது ஒரு கூட்டம் சுரவர்த்தி (அப்போதைய கல்கத்தா ப்ரீமியர்/கவர்னர்) ஒழிக என்று கோஷம் போட்டபடி நகரும். சாகேத்ராமையும் தங்களோடு இழுத்துக் கொண்டு ஒரு கட்டடத்தின் முன் சென்று நிற்பார்கள். மாடியிலிருந்து ஜன்னல் கதவைத் திறந்து கொண்டு மகாத்மா காந்தி தோன்றுவார்; கூடவே கவர்னர் சுஹ்ராவர்த்தியும். கவர்னரைக் கண்டதும் சாகேத்ராம் வெகுண்டெழுந்து அவரை நோக்கி “ Were you not responsible for the killings in Calcutta and Bengal last year ?" என்று கேள்வியெழுப்ப, "We all are responsible",என மழுப்பலாக பதில் சொல்லுவார். 

அந்த பதிலில் சமாதானமடையாமல் சாகேத்ராமன் , “ No please, please answer the question. Were you not responsible as the premier of this state ? Were you not directly responsible for making murderers out of ordinary men ?" என குரல் உரக்க, கூட்டமும் அவனோடு சேர்ந்து கொண்டு சுஹ்ராவர்த்தியை பதில் சொல்ல வற்புறுத்தும். கவர்னர் கொஞ்சம் திகைத்து, “Yes. It was my responsibility. And... I was responsible" என தன் தோல்வியை ஒப்புக்கொண்டு தலைகுனிய, உடனே சமாதானமடைகிற கூட்டம் கைதட்டி வாழ்க கோஷம் போட்டு ஆர்ப்பரிக்கத் தொடங்குகிறது. இப்போது சாகேத்ராம் இந்தக் கூட்டம் இவ்வளவு எளிதாக புத்தியை மாற்றிக்கொள்வதைக் கண்டு திகைத்துப் போய் கோபமாக வெளியேறுவான். 

சாகேத்ராம் திரும்பும் வழியில் நீண்டகாலத்துக்குப் பின் எதிர்பாராதவிதமாக எதிர்படும்  நண்பன் அப்யங்கர் மக்களின் இந்த மனப்போக்கைக் குறித்து காந்தியின் மீதான நம்பிக்கை குறித்தும் பேசும்போது சொல்லுவான், "இந்த ஜனங்களுக்கு ஞாபகசக்தியே கெடையாது. உனக்கும் எனக்கும் மட்டுந்தான்”

கிட்டத்தட்ட சாகேத்ராமனின் அப்போதைய மனநிலைதான் எனக்கும்.

I didn't get my closure yet or I'm still feeling guilty about the loss of lives. மறுபடியும் கேட்கிறேன்.

What is the least I could do? Forget and Move on?

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் - தமிழ்மகன்


உங்களுக்கு 70 களில் பதின்பருவத்திலிருந்த ஒரு தாய்மாமன் இருந்திருந்தால் இந்தப் புத்தகத்தில் வருகிற பெரும்பாலான கதைகளையும் நிகழ்வுகளையும் கட்டாயமாய்க் கேட்டிருக்கக் கூடும். இந்த நாவலின் எழுத்தாளர் தமிழ்மகன் செய்திருப்பதும் அம்மாதிரியான ஒரு முயற்சியே.

மனித நாகரிகத்தின் தோற்றம், வளர்ச்சி, தமிழின் தோற்றம்/வரலாறு, தமிழ் மன்னர்களின் கடல்பயணங்கள், கூடவே 60/70 களின் தமிழக அரசியல் சூழல், இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், காங்கிரஸ் மற்றும் ராஜீவ் கொலை பற்றிய தகவல்கள், விடுதலைப்,புலிகள் குறித்த தகவல்கள், தமிழகத்திலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் கல்வெட்டுகள் பற்றிய குறிப்புகள் ...

ஆரிய திராவிட சித்தாந்தங்கள், அவர்களின் வாழ்வியல் குறித்த விளாக்கங்கள், திரமிடா கீழூர் மேலூர் மாதுறை ஆகிய ஊர்கள் பற்றிய விளக்கங்கள், உலகெங்கிலுமுள்ள பிற நாடுகளின் ஊர்களின் தமிழ் பெயர்கள், தமிழ் வார்த்தைகளோட ஒத்துப் போகிற பிற உலக/இந்திய மொழிகள் குறித்த தகவல்கள் என ஆச்சரியமூட்டுகிற சுவாரசியமான விஷயனங்கள் நிறைய உண்டு. மொழி மற்றும் கலாச்சாரம் குறித்த ஒரு நல்ல தேடலுக்கான தொடக்கமாக இந்த நாவல் அமையலாம்.

இத்தனையையும் ஒரு futurology (இணையான தமிழ் வார்த்தை இல்லை) கதையில் புகுத்தி 90களில் பிறந்த தமிழ் young-adultsக்கு (தமிழ் இளையோர் ?!) கதை சொல்ல முயன்றிருக்கிறார். என்ன ஒன்று இந்த அதீதமான தகவல் திணிப்பின் காரணமாக அவ்வப்போது கதையின் போக்கே மறந்து போய் தகவல்களில் மூழ்கி விடுகிறோம் நாம். ‘மிளிர்கல்’ நாவலிலும் எனக்கு இதே பிரச்சனை இருந்தது. ஆனாலும் ஒரு 70s/80s refresher போல நிச்சயம் படிக்கலாம்.

எதிர்காலத்தில் நிகழ்கிற கதையில் வரும் கருவிகளும் சூழலும் நிறையவே சுஜாதாவை ஞாபகப்படுத்தின.
On a whole, this book is like தொ.ப meets சுஜாதா meets சுப.வீ :) :)
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க - இங்கே க்ளிக்கவும்

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

எங்கேயோ கேட்ட குரல்...!!

பிசிறடிக்கிற பெண் குரலுக்கென ஒரு தனித்தன்மை வாய்ந்த வசீகரம் இருப்பதாய் உணர்கிறேன். வழமைபோல மென்மையாகவோ, கீச்சுக் குரலாகவோ, கணீர் வெண்கலக்குரலாகவோ, மொத்தமாய் மிரட்டுகிற முரட்டுக் கடுமையாகவோ அல்லாமல் கொஞ்சம் அங்கும் இங்குமாய் எத்தன்மைக்கும் மையமாய் ஒலிக்கிற குரல்.
முகங்களின் சாயல் தேடுகிற மனிதர்கள் பற்றியோ அல்லது முகங்களின் சாயல் பற்றியோ, வாசனைகளை அடையாளம் காணுபவர்கள் பற்றியோ, கட்டாயமாக மனுஷ்யபுத்திரன் போல யாரேனும் கவிதைகளாகவும், ஜி.ஆர்.சுரேந்திரநாத் போல யாரேனும் கதைகளாகவும், ராஜ சுந்தர்ராஜன் போல யாரேனும் கட்டுரைகளும், எங்கேனும் எப்போதேனும்  எழுதியிருக்கக் கூடும்.
இம்மாதிரி குரல் சாயல் தேடுதல் கொஞ்சம் வித்தியாசம். காலங்காலமாய்க் காதறிந்த பாடகிகளின் குரல் சாயலல்ல நான் சொல்வது. பாட்டுப்பாட வாகில்லாத குரல் பதம் அது. என் நினைவில் நிற்கிற சற்று பிசிறடிக்கிற குரல் கொண்ட தேவதைகள் பெரும்பாலும் பாட்டுப் பாட விரும்பாத அல்லது பாடப் பிடிக்காதவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.நிறையவும் பேசப் பிடித்தவர்களாய் இருந்திருக்கலாம். கவிதைகளையோ அல்லது பாடல்வரிகளையோ உரக்க வாசித்துக்க விரும்புபவர்களாய் இருந்திருக்கலாம். குரல்கள் நினைவிருக்குமளவு முகங்களோ குணங்களோ நினைவிலில்லை.
ஆட்டோக்ராஃப் படத்தில் மலையாளத்தில் கொஞ்சுகிற கோபிகாவின் குரல் இந்த வகையறா. அந்தக் குரலுக்காகவே அந்தப் படத்தை நிறைய பார்த்திருக்கிறேன்/கேட்டிருக்கிறேன். பிற்காலத்தில் இதற்கிணையாய் காதுகளில் ஒலித்த பெரும்பான்மை மலையாளக் குரல்களென்பது தற்செயலா தெரியவில்லை.
அதற்கு முன்பு இதே ஒலிச்சாயலில் கேட்டது ஹேராம் திரைப்படத்தில் பெங்காலிக் கவிதை சொல்லும் ராணி முகர்ஜியின் குரல். இப்போதும் ’நீ பார்த்த பார்வை’ பாடல் தொடங்கி நாற்பத்தி ஒன்பதாவது நொடியில் ஜிபோனந்த தாஸின் ஆகாஷ் ஜ்யோத்ஸ்னா கவிதையை ராணி தன் பிசிறடிக்கிற குரலில் பியானோ பின்னிசையோடு உச்சரிக்கத் தொடங்குகையில் சர்வநிச்சயமாய் நமக்குப் பைத்தியம் பிடிக்கும்.
இன்று மாலை காஃபிக் கோப்பையோடு அலுவலகம் அமைந்திருக்கிற பெருவளாகத்தில் வெயில்வாங்கி நடந்து கடக்கையில் தூரத்தில் யாரோ ஒரு பெண் ஒருமாதிரி உடைந்த உத்தரப்பிரதேசத்து இந்தியில் செல்ஃபோனில் கெஞ்சிக் கொஞ்சி பேசியபடி என்னை தாண்டிச் சென்றாள்.
அதே...கொஞ்சமாய்ப் பிசிறடிக்கிற மென்குரல்...!

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

கொமோரா - வெறுப்பின் ஆதி ஊற்று




நானூற்று சொச்சம் பக்கங்களைக் கொண்ட நாவல், ஊதாப் பூக்களின் நீலப் புத்தகமாகவும், ரத்தப் பூக்களின் சிவப்புப் புத்தகமாகவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. “சுண்ணாம்புக் குழிக்குள்ள குதிக்கிறவனத் தான் கட்டிப்பேன்” எனச் சொல்கிற சிறுமியின் பேச்சைக் கேட்டு கொதிக்கிற சுண்ணாம்புக் குழிக்குள் குதிக்கிற அளவுக்கு அதீத குறும்புத்தனமும் வெகுளித்தனமும் கொண்ட சிறுவன் கதிரின் கதையில் தொடங்குகிறது நீலப்புத்தகம். அவனுடைய பால்யமும், குறும்புத்தனங்களும். விடுதி வாழ்க்கையும், விவிலிய வாசகங்களும், அவன் மீது நிகழ்த்தப்படுகிற பாலியல் வன்முறைகளுமாய்த் தொடர்கிற கதை, பொருள் தேடும் பொருட்டு நாடோடியாய் வேவ்வேறு தொழில்கள் செய்து அலைந்தபடி வாழ்கிற கதிர், ஒரு கட்டத்தில் இந்த சமூகத்தால் கீழ்மையாகக் கருதப்படுகிற அத்தனைக் குற்றங்களையும் செய்யத்தொடங்குகிறான். 

கம்போடியாவின் தலைநகர் நோம்ப்பென்-ல் (Phnom Penh) நிகழ்கிற கோவிந்தசாமியின் கதை. இந்தக் கதையினூடாக ஒரு மிகப் பெரிய இனப்படுகொலையின் காட்சிகளும் விவரணைகளும் நம் கண் முன்னே விரிகின்றன. க்மெர் ரோஜ் (Khmer Rouge) என்கிற புரட்சிப்படையும் கம்போடிய ராணுவமும் போரின் பெயரால் செய்த கொடுமைகளும் கொலைகளும் மனிதத்தின் மீதான நமது நம்பிக்கையையே அசைத்துப் பார்க்கக்கூடியவை. இந்த குழப்பங்களுக்கும் வன்முறைக்கும் இடையே சிக்கி அவதிப்படுகிற கோவிந்தசாமியின் குடும்பத்தினர்; இதிலிருந்து எப்படியோ தப்பித்து ஊர்வந்து சேர்கிறான் அவருடைய மகன் அழகர்சாமி.

சிறுவயதில் தன் கண் முன்னே நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களால் மனதளவில் பாதிக்கப்பட்டு, இரக்கமென்றால் என்னவென்றே தெரியாத குரூரமும் சுயநலமும் மிகுந்தவனாக மாறிவிட்ட அழகர்சாமி, கதிரின் தந்தை. செய்த குற்றச்செயல்களுக்காக பல காலம் சிறைச்சாலையில் கடத்துகிறவர். அவர் சார்ந்த கதைப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ள மனிதர்களும், அவர்களின் கதைகளும், அதிகாரத்தின் பெயரால் நடக்கிற அவலங்களும் அரசியலும் நமக்குச் சொல்லப்படுகின்றன. 

தன் தந்தை அழகர்சாமியின் மீது கதிர் கொண்டிருக்கிற அதீத வெறுப்பும், கொலைவெறியும், அதற்கான காரணமும், கதிரின் நோக்கமுமே மீதிக்கதை.
இரத்தம் தெறிக்கிற ஒரு கொலையைக் காட்சிப்படுத்துவதினூடாக மானுட மேன்மையையும் அன்பையும் பேசிச் செல்கிற கொரியப்படங்களுக்கு இணையான கதை சொல்லல் என்பேன். குறிப்பாக ’சாத்தானின் மனவெளிக் குறிப்புகள்’ என்கிற பதினைந்துபக்க அத்தியாயத்தில் அதிகாரங்களாகவும் சிறு சிறு பத்திகளாகவும் எழுதப்பட்டிருக்கிற கதையின் பகுதிகளும் கருத்துகளும் நிச்சமாக ஒரு மாறுபட்ட வாசிப்பனுவத்தை நமக்கு வழங்குகின்றன

”இங்கே எல்லாம் சரியாய் இருக்கிறதென்கிற மாயைகளை, அன்பின் வழியாகத்தான் உலகம் இயங்குகிறதென்கிற பொய் நம்பிக்கைகளை உடைத்து, துரோகமும் சூதும்தான் மனித பரிணாம வளர்ச்சியின் ஆதாரம் என்பதை ஜப்பானின் ஆதி காவியமான கெஞ்சிக் கதை துவங்கி இலியட், மஹாபாரதமென எல்லாப் பெருங்காவியங்களும் குறுங்காவியங்களும் வலியுறுத்துகின்றன. நமக்குள்ளிருக்கும் சக மனிதர்களின் மீதான வெறுப்பைச் சுமந்துகொண்டு அலையக் காரணமாகிவிடுகிறது. அன்பைப் போலவே வெறுப்பையும் வெளிப்படுத்தித்தான் ஆக வேண்டும், அதன் பொருட்டு நாம் எத்தனை இழிவானவர்களாகப் பார்க்கப்பட்டாலும். எல்லோரையும் நேசிக்கச் சொல்லித்தான் கற்றுக்கொடுக்கிறார்கள். நம்மால் அப்படி இருக்க முடிவதில்லை என்பதுதான் வெறுப்பின் தனித்துவம்." 
-லஷ்மி சரவணகுமார் 
முன்னுரையில் இப்படிச் சொல்லித்தான் துவங்குகிறார் எழுத்தாளர். கொமோரா நாவலின் மொத்த அடித்தளமும் இதுதானென இங்கேயே நமக்கு முன்னறிவிக்கப்படுகின்றது.’கொமொரா’ என்பது பைபிளில் சொல்லப்படுகிற ஒரு நகரத்தின் பெயர். அங்கே வாழ்கிற மக்களின் பாவங்களுக்கான கடவுளின் தண்டனையாக முழுமையாய் தீக்கிரையான இரு நகரங்கள் சோதோம் (Sodom) மற்றும் கொமோரா (Gomorrah) ஆகியவை. 

இந்தப் பெயரை நாவலுக்கு வைத்ததன் மூலம் நமக்குச் சொல்லப்படும் செய்தி, இது பொதுவான தேவதைகளின் உலகில் அன்பு ஊற்றெடுக்க நிகழ்கிற நல்லவர்களின் கதை அல்ல என்பதே. இங்கே இவர்களெல்லோரும் நல்லவர்கள்; எங்கிருந்தோ வருகிற ஒரு தீயவன்; அவன் செய்த தீமை; இறுதியில் அன்பால் தீமை தோற்று நன்மை வெல்லுகிற தேய்வழக்கு; இது மாதிரியான பொய்த்தோரணங்கள் எதுவும் எல்லை. நன்மை தீமையை தட்டையாக ஒற்றைப்படையாக அணுகுகிற கதையும் இதுவல்ல. 

வன்முறையும், வஞ்சமும், கோபமும், துரோகமும், பயமும், இரத்தமும், காமமும் நிறைந்து கிடக்கிற மனிதர்களும், அவர்களின் கதைகளின் ஊடாக அவரவர்கள் கண்டடைகிற உண்மைகள் அல்லது ஒளிக்கீற்றுகள் அல்லது நம்பிக்கைகளையும் பற்றிப் பேசுகிற நாவல் இது. 

ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்
Related Posts Plugin for WordPress, Blogger...