நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

புதன், 5 மே, 2021

அரசியல் - சமூக அறிவியல் - புரிதல் ?

இதுவரைக்கும் இல்லாத வகைல இந்த சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தான் என் வட்டத்தில் உள்ள பலரிடமும் நேரடியாக அதிகளவில் அரசியல் பேசியிருக்கிறேன்.. கேள்விகள் கேட்டிருக்கிறேன்... விவாதித்திருக்கிறேன்.. சண்டையிட்டு முரண்பட்டிருக்கிறேன். இந்த வட்டம் என்பதில் சொந்த ஊர் பள்ளி/கல்லூரி நண்பர்கள், உறவினர்கள் , பணியிட/வாழிட நண்பர்கள் ஆகியோர் அடக்கம்...(முழுக்க முழுக்க என்னுடைய உரையாடல்/ புரிதல் அடிப்படையிலான அனுமானம் தான்...தரவுகளின் அடிப்படையிலான சர்வே அல்ல) 

இதுல தெள்ளத்தெளிவா புரிஞ்ச விஷயம் வயது, பாலினம், கல்வி, சமுகப் பொருளாதரப் பின்னணி... எந்த வேறுபாடுமில்லாம பலருக்கும் அரசியல் பற்றிய புரிதலும் தெளிவும் ரொம்ப ரொம்ப குறைவா இருக்கு...சட்டமன்றம்னா என்ன? ஒரு சட்டமன்ற உறுப்பினருடைய வேலை என்ன ? உள்ளாட்சித் தேர்தல்னா என்ன ? அதுக்கும் சட்டமன்றத்துக்கும் என்ன தொடர்பு ? எத்தனை சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு பாராளுமன்ற தொகுதி ? பாரளுமன்ற உறுப்பினருடைய பணி என்ன ? மக்களவைக்கும் மாநிலங்களவைக்குமான வேறுபாடு என்ன ? ஒரு சட்டத்திருத்தம் எப்படி நிறைவேற்றப் படுது ? மசோதான்னா என்ன ? சட்டமன்ற ஓட்டெடுப்பு எப்படி நடக்கும் ? ஆட்சி அதிகாரம் எப்படி பகிர்ந்தளிக்கப்படுது ? அமைச்சர்கள் துறை சார்ந்து எப்படி நிதி ஒதுக்கீடு செய்யப்படுது ? மாநில பட்ஜெட்..மத்திய பட்ஜெட்... தொகுப்பு நிதி.. இட ஒதுக்கீடு மாதிரி சமூக நீதி சார்ந்த விஷய்ங்கள்... இன்னும் சுத்தம்....! இந்த மாதிரி பல விஷயங்கள் அரசியல் பேசுகிறவர்கள், சமூக வலைத்தள பரிச்சயம் உள்ளவர்கள், TNPSC மாதிரியான அரசுத் தேர்வுகளுக்கு தயாராகிறவர்கள் தவிர்த்து பொது நீரோட்டத்தில் உள்ளவர்களுக்கு பெரிய பரிச்சயம் இல்ல.

 இன்னொரு வியப்பூட்டும் விஷயம் இதுல பெரும்பாலானவர்கள் இருபதுகளின்/முப்பதுகளின் தொடக்கத்தில் இருக்கிறவர்கள் என்பது தான். வயதில் பெரியவர்கள் (40+ ) தோராயமாகவாவது புரிந்து வைத்திருக்கிறார்கள் (20 வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக செய்தித்தாள் வாசிக்கிற பெரிய கூட்டம் ஒன்னு இருக்கு ...!! )

 இதெல்லாம் தெரிஞ்சுக்கிறது அத்தியாவசியமா.. ஓட்டு மட்டும் போட்டா பத்தாதான்னு கேட்டீங்கன்னா நிச்சயமா பத்தாது. 

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பத்திக் கேள்விப்பட்டிருப்பீங்க தானே. எனக்கு தனிப்பட்ட முறைல பள்ளி பாடப்புத்தகங்கள் தாண்டி அறிவியலின் மீது ஒரு மிகப்பெரிய ஈர்ப்பு ஏற்படக்காரணம் த.நா.அ.இ தான். தமிழ் வழிப்பள்ளிகளுக்காக துளி விநாடி வினா, ஆங்கில வழி பள்ளிகளுக்காக ஜந்தர் மந்தர் விநாடி வினா என தமிழகத்தோட சந்து பொந்துல இருக்கிற பள்ளி மாணவர்களிடமும் அடிப்படை அறிவியலை கொண்டு சேர்த்த பெருமை இந்த இயக்கத்துக்கு உண்டு . 

நான் பல வருஷம் பல போட்டிகள்ல கலந்துட்டு இருக்கேன். இது போக இளம் அறிவியலாளர் மாநாடு மாதிரியான (National Children Science Congress/ Young Scientist ) மாதிரி பல செயல்பாடுகளை பல வருடங்களா தொடர்ந்து நடத்திட்டு வர்ராங்க. மாணவர்கள் கிட்ட அரசியலைக் கொண்டு போன அதே அளவுக்கு (SFI/DYFI) அறிவியலையும் கொண்டு சேர்த்ததுல இடதுசாரி இயக்கங்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கு,

இளைஞர்களுள், அரசியல்வயப்படாதவர்களை / அரசியல்படுத்தப்படாதவர்களை மற்றவர்கள் எளிதாக ஏமாற்றிவிடுகிறார்கள் என குறை மட்டும் சொல்லி ஒரு பயனும் இல்லை. தேர்தல் அரசியலுக்கு முன்பே சமூக அறிவியலை, பாடப்புத்தகம் தாண்டி எளிமையாக ஆழமாக கொண்டு சேர்க்க, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாதிரியான ஒரு இயக்கம் கட்டாயம் வேண்டும் என்பது என் எண்ணம். இதனை கட்சிகள் தான் செய்ய வேண்டும் என்பதல்ல.... ஓரளவு தெளிவான கொள்கைப்பிடிப்புள்ள சமூக இயக்கம் (எ.கா: திராவிட இயக்கத் தமிழர் பேரவை) இதனை முன்னின்று நடத்தினால் கட்சிகளின் network/infrastructure/financial support இதனை மாநிலம் முழுவதும் பரவலாக கொண்டு செல்ல பெரிதும் உதவும். 

 உங்க கருத்து என்ன ? உங்களுடைய வட்டத்துல ஒரு கட்சி சார்ந்து அல்லது ஒரு கட்சியை எதிர்த்து பேசிய அனுபவம் எப்படி இருந்தது ? இந்த Social science awareness பற்றிய உங்கள் கருத்து என்ன ? சொல்லுங்க பேசுவோம்...!

புதன், 21 ஏப்ரல், 2021

Nomadland (2021) by Chloe Zhao - நாடோடித் தடம்...!


https://www.hulu.com/static/hitch/s3/attachments/ckkxbv2mj0lxw1u85b0nm280p-nomadland-licenseplate-grey.jpg
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் ஒரு ஜிப்சம் தொழிற்சாலை மூடப்பட்டுவிட, அதைச் சுற்றி அந்த ஊரில் வாழ்ந்த அனைவரும் வேலையையும் வாழ்வாதாரத்தையும் இழந்துவிடுகிறார்கள். அவர்களில் Fernம் ஒருவர். ஏற்கனவே கணவனும் இறந்துவிட்டபடியால் தனக்குச் சொந்தமான அத்தனையையும் விற்று விட்டு ஒரு vanஐயே தனது வசிப்பிடமாக மாற்றிக் கொண்டு நாடோடி வாழ்க்கை வாழத் தொடங்குகிறார் Fern.

ஃபெர்ன் சந்திக்கிற மனிதர்கள், பழகும் நண்பர்கள், பார்க்கும் இடங்கள் என, கிட்டத்தட்ட ஒரு Docu-fiction ஆகத் தான் செல்கிறது திரைப்படம். ஆனாலும் ஒட்டுமொத்தமாக இந்தத் திரைப்படமும், காட்சிகளும், இசையும் தந்த உணர்வுகளை என்னால் நிச்சயமாக விளக்கிச் சொல்ல முடியாது. பல வருடங்களுக்கு முன்பு Ship of Theseus திரைப்படம் பார்த்தபோது ஏற்பட்ட வெறுமையும் நிறைவும் கலந்த உணர்வு.

Nomadlands திரைப்படத்தின் இயக்குநர் Chloe Zhao பற்றி தேடிப் படித்துத் தெரிந்து கொண்டேன். இயக்குநர் Richard Linklater போல, க்ளோவும் தனது முந்தைய திரைப்படங்களில் பல experimentகளை முயன்றிருக்கிறார். இந்தப் படத்தில் ஃபெர்னாக நடித்திருக்கும் ஃப்ரான்சிஸ் மெக்டார்மண்ட் தவிர்த்து க்ளோவின் முந்தைய இரு படங்களிலும் முதன்மைப் பாத்திரங்களாக நடித்தவர்கள் தொழில்முறை நடிகர்கள் அல்ல. தங்கள் சொந்த வாழ்க்கை அனுபவத்தையே திரைப்பாத்திரமாக ஏற்று நடிக்க முன்வந்த சாதாரணர்கள் !! Incredible isn't it..?!

அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்குப்பின்பு தங்கள் உடைமைகளை விற்றுவிட்டு நாடோடி வாழ்வைத் தேர்ந்தெடுத்த மக்களைப் பற்றியும், அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் ஜெஸ்ஸிகா ப்ரூடர் எழுதிய ’Nomadland' புத்தகத்தை அடிப்படையாக வைத்தே இத்திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் க்ளோ.

இந்த wanderers, nomads, gypsies, wanderlust.. மாதிரியான சொற்களை பலரும் பலவிதமாகப் பயன்படுத்திப் பார்த்திருப்போம். உண்மையில் travelers, touristsக்கும் மேலே சொன்னமாதிரியான Nomadsக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

Charlie மாதிரியான திரைப்படங்களில் பார்த்து இந்த மாதிரியான் nomads கவர்ச்சிகரமாக, மனதை ஈர்க்கும்விதமாக இருப்பார்களெனபலரும் நினைத்திருக்கலாம்... நானும் கூட அப்படித்தான் நினைத்திருந்தேன்..ஆனால் உண்மை முற்றிலும் வேறானது..

எந்த அடையாளத்தோடும் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பாத, எதையுமே தங்களை பிடித்து வைப்பதை விரும்பாத, நினைத்த நேரத்தில் நினைத்த இடங்களுக்கு பயணித்து, கிடைப்பதை உண்டு ,கிடைத்த வேலையைச் செய்து.. வாழ்கிற நாடோடிகளின் (nomads) வாழ்க்கை மிக மிகக் கடுமையானது.

என்னுடைய பயணங்களில் இது மாதிரியான ஒரு சிலரைச் சந்தித்திருக்கிறேன். நம் மனதில் அவர்களைப் போன்றவர்களைப் பற்றி கட்டிவைத்திருக்கிற அத்தனை பிம்பங்களையும் நொறுக்கிவிடக்கூடியவர்கள். அப்படியொரு தீவிரமான விடுதலை உணர்வையும் , பிடிப்பற்ற தன்மையையும் எப்படி எதிர்கொள்வதென சத்தியமாய் நமக்குப் புரியாது. நம்மால் முடியாது. Too true, too raw and too naked...!

நாம் இருக்கிற, வாழ்கிற, கொஞ்சங்கூட விட்டு விலகிவிட முடியாத பாதுகாப்பான சொகுசான வட்டம் என்னவென்று உண்மையில் ஒரு நாடோடியை எதிர்கொள்ளும்போது தான் விளங்கிக் கொள்ள முடியும்...!

Amazon Prime (US), Google Play/Youtube (US) தவிர வேற எங்கேயும் ஸ்ட்ரீம் ஆகல...ஆனாலும் தேடிப்புடிச்சு பாத்துடுங்க.

The music tracks of Nomadland definitely needs a special mention. I learned about the composer Ludovico Einaudi only now and was amazed listening to his compositions. <3

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

கர்ணன் - கிடாக்குழி மாரியம்மாள் - கண்டா வரச்சொல்லுங்க

இந்தப் பாட்டப் பத்தி ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரி தங்களுடைய கருத்துகளை சொல்லிட்டு இருக்காங்க. சிலருக்கு இது அடி மனசத் தொட்டு பல நினைவுகள கிளறி விடுது..சிலருக்கு தெக்கம்பட்டி சுந்தர்ராஜன் அவர்களுடைய ஐயப்பன் பாட்டத் தாண்டி வர முடியல.. இன்னும் சிலருக்கு ரொம்ப சாதாரணமான பாட்டா தோணலாம்.. நேத்து இன்னொரு நண்பர் ஒருத்தர் Black Panther படத்துல வர்ர Baaba Maal பாடுன Wakanda theme இசைய ஞாபகப்படுத்துதுன்னு எழுதிருந்தாரு...! (what a fantastic comparison this one is) ஆக ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான தாக்கம் இருந்துருக்கு....! 

இப்போதைய internet eraவுக்கு முன்னாடி நாட்டுப்புறப் பாடல்கள்/பாடகர்கள்னு தமிழ்நாடு முழுக்க பரவலா அறியப்பட்ட முகங்கள் ஒரு சிலர் தான். விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் தம்பதியர், புஷ்பவனம் குப்புசாமி மாதிரியானவர்களைத் தவிர்த்து ஒரு பெரிய கூட்டமே வெளிய தெரியாம இயங்கிட்டுதான் இருந்துருக்கு.

மதுரை சந்திரன், ஆந்தக்குடி இளையராஜா, கிடாக்குழி மாரியம்மாள் , சின்னபொண்ணு, இப்படி இவங்களோட பாடல்கள் ஊர் பக்கம் ரொம்ப பிரபலம். கேசட்டுகளாகட்டும், அல்லது திருவிழா பாட்டுக் கச்சேரிகளாகட்டும். எல்லா இடத்திலும் இவர்களுடைய பாடல்கள் உண்டு. எல்லாருக்கும் இவர்களைத் தெரியும். சின்னப்பொண்ணு அவர்கள் பாடி பிரபலமான ‘அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு’ பாட்டை நீங்க கண்டிப்பா எங்கேயாவது கேட்டிருக்கவும் யூட்யூப்ல பாத்திருக்கவும் வாய்ப்பிருக்கு. அத எழுதுனது கவிஞர் திருவுடையான், ஆனா மதுரை சந்திரன் பாடி அவரோட கேசட்ல தான் நான் அந்தப் பாட்ட முதன்முதல்ல கேட்டது. விடுதியில தங்கிப்படிக்கிற ஏழ்மையான சிறுமி அவங்க அம்மாவ நலம் விசாரிச்சு எழுதுற மாதிரி இருக்க அந்தப் பாட்டை எப்போ யார் பாடிக் கேட்டாலும் கண்டிப்பா அழுகை வரும்.

அதே மாதிரி இன்னொரு பாட்டு உண்டு. நான் அந்தப் பாட்டை முதன்முதல்ல கேட்டது பல கல்லூரிகள் கலந்துகிட்ட பல்கலைக்கழக அளவிலான ஒரு போட்டியிலதான். ‘அப்படா என் மகனே என் அருணாசல கண்மணியே’ ன்னு தொடங்குற அந்தப் பாடல், மகனைப் படிக்க வைக்க ஆசைப்பட்ட அம்மா. குடும்பக் கஷ்டத்துக்காக அத வேண்டாம்னு சொல்லிட்டு வேலைக்கு போற பையன், போன இடத்துல அவனுக்கு ஏதோ ஆகிடும். அதப்பத்தி அந்த அம்மா புலம்பி பாடுற மாதிரியான பாட்டு. அன்னைக்கு அந்தப்பாட்டப் பாடுனது ஒரு பையன். வாத்தியம் தப்புல ஒரே ஒரு ஒத்தக்கொட்டு தான்..அவன் பாடி முடிக்கிற வரை மயான அமைதி. அவன் முடிச்ச அடுத்த நொடி அந்த அரங்கமே ரெண்டாகுற மாதிரி கைத்தட்டலும் விசிலும் கேட்டுச்சு. எனக்கெல்லாம் கண்ணு கலங்கி அருவியா அழுதுட்டு இருந்தேன். 

ரொம்ப தேடித்தான் அந்தப் பாட்டு இருந்த கேசட்ட கண்டுபுடிச்சேன். இன்னேரம் கணிச்சுருப்பீங்க யாரு பாடிருந்தாங்கன்னு… ஆமா ‘கர்ணன்’ல கண்டா வரச்சொல்லுங்க பாடுன அதே கிடாக்குழி மாரியம்மாள் தான்….! இன்னைக்கு இத்தன வருஷம் கழிச்சு அதே குரல கேக்கும்போது, பாட்டோட தொடக்கத்துல வர்ர அந்த ஓலமும் பின்னாடி சேர்ர தப்பும் ஒன்னா சேர்ந்து தர்ர உணர்வெழுச்சி இருக்கே..அதெல்லாம் சத்தியமா என்னால வார்த்தைகள்ல சொல்ல முடியாது. கடைசியா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சில செந்தில் கணேஷ் ‘அங்கே இடி முழங்குது’ பாடி நவநீதகிருஷ்ணன் ஐயா எழுந்து ஆடுனப்போ இதே மாதிரி சிலிர்த்துப்போனேன். 

 படத்தோட கதை என்ன , என்ன contextல இந்தப் பாட்டு வரப்போகுது, காட்சிப்படுத்தல் எப்புடி இருக்கும்..எதையுமே நான் யோசிக்கல… இந்த நொடி இந்தப் பாட்டக்கேட்டா மனசு ஒரு மாதிரி விறுவிறுங்குதுல்ல…சிலிர்த்துப் போகுதுல்ல… இத மாறாம, முழுசா அனுபவிச்சா மட்டும் போதும்.<3சந்தோஷ் நாராயணுக்கும், மாரி செல்வராஜுக்கும், தனுஷுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்...! <3 🙏

வியாழன், 21 ஜனவரி, 2021

பட்டக்காடு - அமல்ராஜ் பிரான்சிஸ்

 ”மனிதர்கள் தங்களாகக் கட்டமைத்து வைத்திருக்கும் அத்தனை பிரிவினைகளையும்  கடல் போக்கிவிடுகிறது.அத்தனை அல்பத்தனங்களையும் அடித்து நொறுக்கிவிடுகிறது. அத்தனை மனிதர்களையும் ஒரே தட்டில் வைத்துப் பரிவோடு ஆட்டுகிறது. கடல் கொடுக்கும் உயிர்ப் பயம் அத்தனை மனிதர்களுக்கும் பொதுவானதுதாம். தன் சினத்திற்கு முன்னால் இந்துவும் ஒன்றுதான், கிறிஸ்தவனும் ஒன்றுதான் என்கிறது கடல்”

- பட்டக்காடு, அமல்ராஜ் பிரான்சிஸ்

பட்டக்காட்டைச் சேர்ந்த ஜோசஃப் கணக்குப் பிள்ளையின் அறிமுகத்தோடு தொடங்குகிறது முதல் அத்தியாயம். அதன் பின் அவருடைய மகனும் கதையின் நாயகனுமான மதன் குறித்த அறிமுகம். ஓரிரு அத்தியாயங்களில் கயல் என்ற பாத்திரத்தின் அறிமுகமும் அதனைத் தொடர்ந்த வர்ணனைகளும் வந்தபோது, இலங்கைப் பின்னணியில் ஒரு தேய்வழக்காகிப்போன காதல் கதையாக இந்த நாவல் இருந்துவிடுமோ என ஐயப்பட்டேன். நல்லவேளை அப்படியெதுவும் ஆகவில்லை.

மதன் என்னும் மீன்பிடி கிராமத்து இளைஞன், அவனுடைய சுற்றம், நட்பு, காதல், அன்றாட வாழ்க்கை, போராட்டங்கள் என மதனைச் சுற்றித்தான் மொத்த நாவலும். அவருடைய பார்வையிலேதான் நமக்கு கதை சொல்லப்படுகிறது. மீன்பிடித்தொழிலுக்கு இணையாக விவசாயமும் செழித்த இடமாகவும், கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் அதிகம் வாழ்ந்த ஊராகவும் பட்டக்காடு நமக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது. இலங்கையில் இயக்கக் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப்பகுதி ஊர்களைப் போலல்லாது பட்டக்காடு இலங்கை அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி என்றும் அறிந்துகொள்கிறோம்.

 ஆரம்பத்தில் மதன் தன் நண்பர்களுடன் மீன் பிடிக்க கடலுக்குள் செல்கையில் கொண்டாட்டத்துடனும் சாகச மனநிலையுடனும் தொடங்கி, பின் படிப்படியாக கதையோட்டத்தின் தீவிரத்தன்மை கூடிக்கொண்டே போகிறது. தொடக்க அத்தியாயங்களில் கதையினூடாகவே பட்டக்காட்டு மீன்வாடிகள், சம்மாட்டிகளின் தொழில்முறை, கட்டுவலைக்கும் சுருக்கு வலைக்குமான வேறுபாடுகள், கடல்பரப்பின் காற்றோட்டம், கட்டாக் கருவாடு, ரோலர் படகுகளால் பாதிக்கப்படும் சிறு மீனவர்களின் வாழ்வாதரம் என பலவற்றைப் பற்றி பேசியிருக்கிறார் அமல்ராஜ் . அது போக குணம் பரியாரி, பர்னாந்து மாமா,’வட்டி’ தேவா சம்மாட்டி என பல சுவாரஸ்யமான பாத்திரங்களைக் குறித்த உபக்தைகளும் உண்டு.

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில், போர் உச்சம் பெற்ற நிலையில் எதிர்பாராத ஒரு நிகழ்வின் காரணமாக மதன் அவனுக்கு பரிச்சயமில்லாத புதிய ஊரில், சொந்த ஊருக்குத் திரும்பவோ குடும்பத்தினரைக் காணவோ வழியில்லாமல், முற்றிலும் வேறுமாதிரியான ஒரு வாழ்வை வாழ நேர்கிறது.    போரினால் நேரடியாக பாதிப்படையாவிட்டாலும் அரசுக்கட்டுப்பாட்டு பகுதிகளில் வாழ்ந்த மக்களும் மறைமுகமாக நிறைய துன்பங்களுக்குள்ளாவதை, மதனின் குரலில் சொல்லியிருக்கிறார்அமல். மதன் பாதிக்கப்பட்டவர்களின் குரலாக, ஒரு சாமானிய  குடும்பப் பின்னணி கொண்ட இளைஞனாக இலங்கை அரசையும் இராணுவத்தையும் விமர்சிக்கும் அதே அளவு, இயக்கச் செயல்பாடுகளையும் விமர்சிக்கிறான்.

நாவலின் பிற்பகுதி அத்தியாயங்களைக் குறித்தும்,  இடங்களைக் குறித்தும் என்ன சொன்னாலும் கதையை வெளிப்படுத்துவது போலாகிவிடும் என்பதால், மீதிக் கதையை  புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளவும். :) கிட்டத்தட்ட 500 பக்கங்களை கொண்ட நாவலாக இருந்தாலும், அமல்ராஜின் எளிமையான மொழிநடையினால் கொஞ்சமும் ஆர்வம் குறையாமல் படித்து விட முடிகிறது. தொடக்க அத்தியாயங்களில் இளமையும் எள்ளலும் கிண்டலுமாய் கதை நகரும்போதும் சரி , தீவிரத்தன்மையுடன் போருக்குப் பிந்தைய விஷயங்களைப் பற்றி விவரிக்கும்போதும் சரி ஒரே மாதிரியான தெளிவான மொழிநடையைக் கையாண்டிருக்கிறார்.

இலங்கையை பின்னணியாகக் கொண்டு தமிழில் இதுவரையிலும் பல படைப்புகள் வெளிவந்திருக்கின்றன.  ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் சார்ந்த கதைக்களங்கள், இயக்கக் கட்டுப்பாட்டு பகுதிகளில் வாழ்ந்தவர்களின்அனுபவங்கள், போரினால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வலிகளையும் பேசிய கதைகள் என அத்தனையையும் படித்திருப்போம். ஆனால்,  இதுவரையிலும் அதிகம் பேசப்படாத மன்னார் பகுதியை கதைக்களமாக எடுத்துக் கொண்டு பட்டக்காடு என்னும் மீனவ கிராமத்தைச் சுற்றி ஒரு நல்ல நாவலை எழுதியிருக்கின்றார் அமல்ராஜ் பிரான்சிஸ். இது அவருடைய முதல் நாவலும் கூட. வாழ்த்துகள் அமல்ராஜ்...!

பட்டக்காடு -  அமல்ராஜ் பிரான்சிஸ்

எழுத்து பிரசுரம் - புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இணைப்பு இங்கே

Related Posts Plugin for WordPress, Blogger...