நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

செவ்வாய், 13 டிசம்பர், 2022

நெருநல் உளனொருவன் இன்றில்லை - Eulogy Hymn


 
என் நண்பர்கள் இறக்கிறார்கள்
வரிசையாக
கண்ணாடி சவப்பெட்டிகள் முன்
தலை கவிழ்ந்து நிற்பது
வழக்கமான கடமையாகிவிட்டது
 
நான் இப்போதெல்லாம்
சாவுக்கு அவ்வளவு சகஜமாகிவிட்டேன்
சாவு ஒரு சிறுபூனைபோல
என் நெஞ்சில் படுத்து
கதகதப்பாக உறங்குகிறது
அதன் களங்கமற்ற கண்களைக்காண
என் கண்களில் நீர் தளும்புகிறது
 
- நெஞ்சில் தூங்கும் மரணம், மனுஷ்ய புத்திரன்

 பேரன்பின் ராஜாவுக்கு,

 நீ எங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் பிரியாவிடை பெற்று இன்றுடன் நூற்றி சொச்சம் நாட்கள் கடந்து விட்டன. நீயில்லாத உலகில் தனக்கும் இடமில்லையென உன் அம்மாவும் புறப்பட்டுவிட்டார்கள்

இயல்பு வாழ்வென ஒன்று இருப்பதால்,  உன் இழப்பிலிருந்தும் நினைப்பிலிருந்தும் மீண்டு விட்டதாக என்னை நானே தேற்றிக் கொண்டு மற்ற அனைத்திலும் கவனம் செலுத்த முயன்று கொண்டேயிருக்கேன். விழாக்களிலும் கொண்டாட்டங்களிலும் பங்கெடுத்துக் கொள்ளுகிறேன். பசிக்கு மீறி உண்டு திணறுகிறேன். புத்தகங்கள், திரைப்படங்கள், பாடல்கள், அலுவல்கள், கடமைகள், நண்பர்கள், பயணங்களென முற்றாய் என் உடலும் உள்ளமும் களைத்துப் போகுமளவு எல்லாவற்றிலும் எல்லாரிடமும் என்னை ஒப்புக்கொடுத்துக் கொண்டேயிருக்கிறேன். 

ஆனாலும் உன் இன்மை, ஒரு நிழல் போல . கருமேகம் போல, ஒரு பூனையைப்போல என்னைத் தொடர்ந்து வந்தபடியே இருக்கின்றது. நானும் என்னைப் போல் உன் மீது அன்பு கொண்ட, நீ வாழ்ந்து தொலைத்திருக்கலாம் என்று திட்டித்தீர்க்கிற ஏனையோரும் என்ன செய்திருந்தால் உன்னைப் பிடித்து வைத்திருக்கலாமென யோசித்துக் களைத்து , இப்போதாவது அவன் விரும்பிய அமைதியை அவன் அடைந்துவிட்டிருப்பானென சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். குற்ற உணர்விலிருந்தும் கையறு நிலையிலிருந்தும் எங்களை விடுவித்துக் கொள்ள வேறென்ன செய்துவிட முடியும் ?

நீ சிக்கிக் கொண்டிருந்த சுழலிருந்து மேலேறி வர, உன்னை மீட்கும் பொருட்டு நீண்ட ஆயிரம் கரங்களில் ஒன்றையேனும் நீ பற்றிகொண்டிருக்கலாம் ராஜா. 

 ஆனால் உன் விருப்பம் வேறாக இருந்திருக்கிறது. எப்போதும் மனிதர்கள் சூழ இருந்தவன் நீ. உன்னுடைய விருப்பத்தை விடவும் சுற்றத்தாரின் விருப்பத்துக்கும் மகிழ்ச்சிக்கும் முன்னுரிமை தந்து அவர்களைக் கொண்டாடித் தீர்த்தவன் நீ . எல்லா கொண்டாட்ட பொழுதுகளிலும் உன்னை எளிதாக பொருத்திக் கொள்வாய். உன் வட்டத்து நண்பர்களின் வாழ்வில் அவர்களுடைய நன்னாட்கள் அத்தனையிலும் நீ உடனிருந்திருக்கிறாய். நான் உட்பட; ஆனாலும் எங்கள் யாருக்கும் உன்னோடு நிற்கும் அந்த நல்வாய்ப்பைத் தர மறுத்துவிட்டாய்.என் வருத்தமெல்லாம் இத்தனை பேருக்கு மத்தியிலும் நீ தனியனாய் உணர நேர்ந்ததைப் பற்றித்தான்.

 நீ முற்றிலுமாய் உனது இருப்பை அழித்துக் கொள்வதற்கு முன் எல்லோரிடமிருந்தும் உன்னை விலக்கிக் கொண்டாய். நீ ஒரு கடும் பிடிவாதக்காரனாக உன்னை வரித்துக் கொண்டது உன் விலகலை விடவும் வேதனையானது . ஒரு பயணியானவன் தான் நிழலுக்காய் அமர்ந்த மரங்களை எப்போதும் காயப்படுத்தில்லை. உன் மீதான அன்பை மறக்கச்செய்யுமளவு கடுமையான கோபத்துடனேயே இருந்தேன் நான். இப்போதும் ஏதெனும் ஒரு வசை சொல்லி அவ்வப்போது உன்னை வாய்விட்டு திட்டிவிடுகிறேன். 

விலகிச் செல்கிற தேவதைகளின் முன்பு உள்ளங்கைகளில் மெழுகுவர்த்தியுடன் நீ மண்டியிட்டு பிரார்த்தித்திருக்க வேண்டாம் ராஜா. 

இன்னும் கொஞ்சம்... கொஞ்சமே கொஞ்சம் பொறுமை காத்திருக்கலாமோ எனத் தோன்றிக் கொண்டேயிருக்கிறது.நீ வசித்த தெருவை கடந்து போகும்போதெல்லாம், நீ எப்போதும் செல்கிற டீக்கடையை தாண்டும்போதெல்லாம், நீ அடிக்கடி திரிகிற மாலுக்கும் திரையங்கிற்கும் செல்லும்போதெல்லாம், உனக்கு விருப்பமான நடிகனின் திரைப்படத்தை பார்க்கும்போதெல்லாம்,  நண்பர்களின் திருமண நிகழ்வுகளில் நீ ஆடிக்களைத்த பாடல்களை கேட்கும் போதெல்லாம், உனது இருப்பை இந்த உலகம் எனக்கு நினைவூட்டியபடியே இருக்கின்றது.

அழ வேண்டியதெல்லாம் அழுது முடித்தாயிற்று. கேட்க வேண்டிய அத்தனையும் கேட்டு முடித்தாயிற்று. எந்த முடிவுக்கும் வர வேண்டிய நிர்பந்தமோ, காரணம் தேடும் கட்டாயமோ இல்லை. உன்னையும் உனது நினைவுகளையும்
இந்த உலகம் நிதானமாக ஆனால் நிச்சயமாக கடந்து சென்றுவிடும்.எங்கள் மனதில் உனது இன்மை அல்லது உன் இருப்பின் வெற்றிடம் வேறு பல மனிதர்களாலும் அவர்தம் கதைகளாலும் நினைவுகளாலும் நிரப்பப்பட்டுவிடும். உன்னைப் பற்றி மற்ற யாரிடத்திலும் இனி பேசுவேனா தெரியாது ராஜா.

இந்தக் கடிதத்துக்காக எந்த விதமான பதிலையும் நான் எதிர்பார்க்கவில்லை . என் மனச்சுமையை இறக்கிவைக்கும் பொருட்டு சுயநலமாகத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன் ராஜா . இன்னும் ஓரிரு வாரங்களில் உனது பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் கிருஸ்மஸ் விடுமுறையில் தொடங்கி ஏதேனும் ஒரு  ஊருக்கு பயணப்பட்டு, உன் பிறந்தநாளைக் கொண்டாடி முடித்து விட்டு புத்தாண்டுக்கு ஊர் திரும்புவாய். எப்போதும் உனது பிறந்தநாளின் போது நீ ஊரில் இருந்ததேயில்லை.இப்போதும் அப்படித்தான் என எண்ணிக்கொள்கிறேன். இம்முறை நீ வெகு தொலைவில் ஓரிடத்துக்கு பயணப்பட்டிருக்கிறாய். நீ விரும்பிய யாவும் அங்காவது உனக்கு கிடைக்க வேண்டுமென இந்த பிரபஞ்சத்திடம் உன் சார்பில் கோரிக்கை வைக்கிறேன் ராஜா. 

Advanced birthday wishes...Long may you live in our hearts Raja...! :'( :'( :'(

என்றென்றும் அன்புடன்,

நான்


 

 



வியாழன், 8 டிசம்பர், 2022

 Dall-Eம் ChatGPTம் பின்னே நானும்




சில பல மாதங்களுக்கு முன் செயற்கை நுண்ணறிவின் (AI - Artificial Intelligence) அடிப்படையில் இயங்கும் Dall-E என்ற வலைத்தளம் பேசுபொருளானது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், நீங்கள் சொற்களாக எழுதும் குறிப்புகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல டிஜிட்டல் ஓவியமோ நிழற்படமோ உருவாக்கித் தரும்.

உதாரணத்துக்கு a digital art with Superman sitting in a library wearing spectacles and reading books amidst stack of books என்று குறிப்பெழுதினால் இணைப்பில உள்ளதைப் போன்ற படம் கிடைக்கும். இந்தக் குறிப்பையே வேறு சில சொற்களுடன் உங்கள் கற்பனைத் திறனுக்கு ஏற்றார் போல் மாற்ற, படத்தில் மாற்றங்கள் செய்து டாலி உங்களுக்குத் தரும்.

A van gogh style painting of Superman sitting in a library wearing spectacles and reading books amidst stack of books என்று ஒரு சில சொற்களைச் சேர்த்தால் வான்காவின் பாணியில் வரையப்பட்ட ஓவியமாக உங்கள் கற்பனைக்கு உருவம் கிடைத்துவிடும்.

 





இந்த டாலி, OpenAI என்னும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் ஆக்கம். அதே நிறுவனத்தின் மற்றுமோர் புரட்சிகரமான தொழில்நுட்ப ஆக்கம் தான் ChatGPT எனப்படும் செயலி . உலகம் முழுக்க பல நிறுவனங்கள் தங்களுடைய வலைத்தளங்களில் வாடிக்கையாளர்களுக்கு பதிலளிக்கவும் அவர்களுக்கு வேண்டிய தகவல்களைத் தரவும் Chatbot என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றன. மனிதர்களின் உள்ளீடு இல்லாமல் செய்ய தாமாகவேசெயல்பட்டு ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யக்கூடியவை இந்த பாட்கள். ChatGptம் இதே மாதிரியான ஒரு பாட் தான். ஆனால் அதீத திறன்வாய்ந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட chat bot.

எந்தளவுக்கு திறன் வாய்ந்ததென்றால் ஒரு கணினி நிரலின் பகுதியைக் (code snippet) கொடுத்து சந்தேகம் கேட்டால் அதனைத் தீர்த்து வைப்பதோடல்லாமல் மாற்று வழிகளையும் தரும்.

ஒரு சில சொற்களையோ அல்லது சொற்றொடரையோ தந்து கதையெழுதச் சொன்னால் எழுதும்.

ஒரு சிக்கலான சமூகப் பிரச்சினை குறித்த கட்டுரை எழுதித்தரச் சொன்னால், கருத்துக் கேட்டால் தெள்ளத் தெளிவாகத் தரும்.

ஒரு சிறிய கணினி நிரலையோ (code/program), செயலியையோ உருவாக்கித் தர குறிப்புகள் தந்தால் அதையும் செய்யும்.

சமையல் குறிப்புகள், ஜோக்குகள், கவிதை எனத் துவங்கி உங்கள் ரெஸ்யூமில் செய்ய வேண்டிய மாற்றங்கள் வரை என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்.

கூகுள் அடிப்படையில் ஒரு தேடுபொறி. இது இங்கே இருக்கிறது; இதற்கான தீர்வு இங்கே கிடைக்கலாம்: அதற்கான பதில் அங்கே கிடைக்கும் என சரியான திசைக்கு நம்மைச் செலுத்தும் வழிகாட்டி போல என வைத்துக்கொண்டால் ChatGpt அதன் அடுத்தகட்டமாக நமக்கு வேண்டியதைச் செய்துதருகிற விளக்கு பூதம் போல எனச் சொல்லலாம்.

உண்மையில் இது ஒரு புரட்சிகரமான தொழில்நுட்பம். கற்பனைத் திறனின் உச்சமும் தொழில்நுட்பமும் சந்திப்பது குறித்து எனக்கு பல கனவுகளும் எதிர்பார்ப்புகளும் உண்டு. இப்போதைக்கு ஆங்கிலம் மட்டும் புரிந்துகொள்ளும் டாலி, தமிழ் உட்பட உலக மொழிகள் அனைத்தையும் புரிந்துகொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை. ChatGPT இப்போதே அதையும் செய்கிறது. தமிழ் உட்பட பல மொழிகளிலும் உள்ளீட்டைப் புரிந்துகொள்கிறது.

டாலியின் துணை கொண்டு நான் உருவாக்கிய படங்களையும், ChatGPTன் தற்போதைய பயன்பாடுகளின் பட்டியலையும் (usecases/applications) இணைத்திருக்கிறேன். அந்த தளங்களின் இணைப்பு கமெண்ட்டில். இலவச சேவைகளாக வழங்கப்படும் இவையிரண்டும் விரைவிலேயே கட்டணச் சேவைகளாக மாறக்கூடும்

ஏற்கனவே விகடன் மாதிரியான சில பத்திரிகைகள் அவர்கள் வெளியிடும் கவிதைகளுக்கான ஓவியத்தை டாலியின் துணை கொண்டு வரையத் துவங்கியிருக்கின்றார்கள். எதிர்காலத்தில் fillers எனப்படும் பகுதிகள் அத்தனையும் ChatGPTன் துணை கொண்டு எழுதப்படலாம். இன்னும் இதன் முழுமையான சாத்தியக் கூறுகள் போகப் போகப் புலப்படலாம். நிறுவனங்கள் முழுநேரப் பணியாளர்களை நியமிப்பதற்கு பதிலாக OpenAI மாதிரியான தளங்களில் credits வாங்கி வைத்துக் கொண்டு நுண்ணறிவு செயலிகளை முழுமையாகப் பயன்படுத்தத் துவங்கலாம்.

இந்த தொழில்நுட்ப முன்னேற்றம் எந்தளவுக்கு வியப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறதோ அதே அளவு கொஞ்சம் அச்சத்தையும் மெலிதான கலக்கத்தையும் ஏற்படுத்தத்தான் செய்கிறது. எதிர்காலம் நமக்காக மேலும் என்னவெல்லாம் வைத்திருக்கிறதோ?! பார்க்கலாம்.

#DallE2art #ChatGPT


 https://openai.com/dall-e-2/  

https://openai.com/blog/chatgpt/

திங்கள், 10 அக்டோபர், 2022

பொன்னியின் செல்வன் - பாகம் 1 - திரையனுபவம்

 


பொன்னியின் செல்வன் was a delightful watch for me...! 

 
முதல் நாள் காலையிலேயே அடித்துப் பிடித்துப் போய் படத்தைப் பார்த்துவிட்டாலும், நேற்றிலிருந்து இன்றுவரை அந்த அனுபவத்தை நினைத்து அசைபோட்டபடியே இருக்கிறேன்.
 
பல வருடங்களுக்கு முன்பு பொ.செ நாவலை வாசித்திருந்தாலும் இப்போது திரையில் பொன்னியின் செல்வனைக் காணும் பொருட்டு மறுவாசிப்பு ஏதும் செய்யாமல் , கதையையும் பாத்திரங்களும் மேலோட்டமாக நினைவில் வைத்திருந்தபடியே போனேன். பெரும்பாலும் எதிர்பார்ப்புகள் எதையுமே பொய்யாக்காமல் பொ.செ சிறப்பானதொரு அனுபவமாக அமைந்தது. 
 
குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது இயக்குநர் மணிரத்னம் இப்படி ஒரு பெருங்கதையை (2000+ பக்கங்கள் !) எடுத்துக் கொண்டு , படத்தில் இடம்பெறவேண்டிய முக்கிய நிகழ்வுகள், அதற்குப் பொருத்தமான பாத்திரங்கள் எனத் தேர்வுசெய்து ஒட்டுமொத்தமாய் திரையாக்கம் செய்திருக்கும் விதம், மிகச்சிறப்பு. Well crafted and presented ! ❤ 
 
அடிப்படைக் கதையையும் கதை நகரும் போக்கையும் முடிவெடுப்பதில் அவருக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருந்திருக்கும். ஆனால் அதுவே சரியான விதத்தில் திரைக்கதை அமைக்கவும் உதவியிருக்கலாம். நடிகர்களின் பங்களிப்பைப் பற்றியும் , ரஹ்மானின் இசை எந்தளவுக்கு திரையனுபவத்தை உயர்த்தியிருக்கின்றது என்பதையும் அனைவருமே பேசிவிட்டனர்.
 
ஒரு வரலாற்றுப் புதினம் படமாக்கப் படுகிறது என்றாலே அனைவரின் மனதிலும் முதலில் தோன்றும் over dramatic, larger than life, heroic , visual grandeur காட்சிகள் அத்தனையையும் மிக இயல்பாகவும் சாகசத்தன்மை இன்றியும் காட்சிப்படுத்திருப்பது (சண்டைக் காட்சிகள் உட்பட). பெரிய ஏற்ற இறக்கங்களோ, திருப்பங்களோ, ரசிகர்களை மயிர்கூச்செறிய வைக்கும் cinematic தருணங்களோ இல்லை.இதுவே திரைப்படத்துக்கு பின்னடைவாகவும் அமையலாம். (Pan India angle might not work ?! )
 
போலவே கதையில் குறைவான கதாபாத்திரங்கள் இருந்தால் அவர்களை மனதில் பதியவைக்க போதுமான திரைநேரம் (screen time) இருந்திருக்கும். ஆனால் பொன்னியின் செல்வனைப் பொருத்தவரை அதற்கு வாய்ப்பே இல்லை. ஏகப்பட்ட பாத்திரங்கள் உண்டு; அத்தனையும் முக்கியமான பாத்திரங்கள் வேறு. நாவல் அளவுக்கு பாத்திரங்களை நிறுவுவதற்கான நேரம் எடுத்து கொள்ள முடியாதபடியால் பரபரவென கதை ஒவ்வொரு பாத்திரத்தையும் அறிமுகப் படுத்தியபடி நகர்ந்து கொண்டே இருக்கிறது. 
 
இறுதியில் நமக்கு கிடைத்திருக்கவேண்டிய திரை அனுபவம் almost there என்றே முடிந்தாலும் (எனக்கு), இரண்டாம் பாகம் நம் அனைவரின் எதிர்பார்ப்புக்குத் தீனி போடும் வகையில் சிறப்பான ஒன்றாக அமையுமென நினைக்கிறேன். மேலும் இத்தனை ஆண்டுகளாக மணிரத்னம் தனக்கென வைத்திருந்த பல கட்டுப்பாடுகளையும் மீறி, எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தக்கூடிய ஒரு திரைப்படத்தை எடுத்து , அதனை வெற்றிப்படமாகவும் தந்திருக்கிறார். 
 
A well adapted historical fiction from Tamil film industry...! ❤ Thank you Ponniyin Selvan team...! ❤ 
*********************************************************************************
 
இத்துடன் மூன்றாவது முறையாக பொன்னியின் செல்வன் பார்த்தாயிற்று. உட்லண்ட்ஸ், தி.நகர் கிருஷ்ணவேணி, கேசினோ....இவற்றுள் மிகச்சிறந்த ஒளி/ஒலி அனுபவம் வாய்க்கப்பெற்றது தி.நகர் கிருஷ்ணவேணி திரையரங்கில் தான் (பரிந்துரைத்த ஷ்ருதி டிவி கபிலன் அண்ணனுக்கு நன்றி ❤️)
எனக்குப் படம் இன்னும் அலுக்கவேயில்லை. திரையிலும், பின்னணி இசையிலும் சின்னச்சின்னதாய் பல புதிய விஷயங்களை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. 
 
அருண்மொழி - வந்தியத்தேவன் முதல் மோதலின் போதான பின்னணி இசை ஒரு மாதிரியான Doo wop + a capella கலவையாக இருந்தது. அந்த சண்டைக்காட்சியில் வேகம் கூடக்கூட பின்னணியும் ராட்டினமாய் சுற்றத்தொடங்குகிறது.
'சாய சஞ்சரே' என்கிற நந்தினியும் குந்தவையும் சந்திக்கிறபோது ஒலிக்கிற சேர்ந்திசைப் பின்னணிப் பாடல்,
 
நந்தினிக்காக மட்டும் அவ்வப்போது ஒலிக்கிற; துயரத்தையும் வஞ்சத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தும் அந்தக்குரலிசை,
வந்தியத்தேவன் கோட்டையிலிருந்து தப்பி ஓடும்போது ஒலிக்கிற இசைக்கோர்ப்பு,
 
போர்க்காட்சிகளுக்கான முழக்கங்களும் பின்னணி இசையும், இறுதிக்காட்சிக்குப் பிறகு ஒலிக்கிற அந்த சோகப்பாடல் என அத்தனையுமே தனித்தனியாக ரசிக்கும்படியான இசைத் துணுக்குகள். ரஹ்மான் பொன்னியின் செல்வன் பின்னணி இசைக் கோர்ப்பை வெளியிடப்போகும் நாளுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.
 
கதை, வரலாறு, புனைவு, அரசியல் என இந்த திரைப்படத்தைச் சுற்றி இருக்கிற எல்லாவற்றையும் தாண்டி திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளும், வசனங்களும் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. மூன்று முறையும் அந்தக் காட்சிகளின் போது சிலிர்த்துப் போனது எனக்கு.
 
(mild spoilers ahead) 
 
இலங்கைக்கான மணிமுடியை மறுக்கும் அருண்மொழி வர்மனிடம், மண் வரைப் பணிபவன் வான் வரை உயர்வான் என பெளத்த பிக்கு சொல்லி வாழ்த்துகிற காட்சி;
 
தங்களை பாண்டிய ஆபத்துதவிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்றிய ஊமைராணி பற்றி வந்தியத்தேவனிடமும் ஆழ்வார்கடியானிடமும் அருண்மொழிவர்மன் சொல்லும் போது 'யார் இந்தத் தாய். எதற்காக ஒரு காவல் தெய்வம் போல என்னைப் பின் தொடர்ந்து காக்கிறாள்?' எனக் கேட்குமிடம்;
 
குந்தவை ஆதித்த கரிகாலனை சந்திக்கிறபோது அவர்களுக்குள் நிகழ்கிற உரையாடலின் இறுதியில் நந்தினியைப் பற்றிப் பேச்சு வர.. 'அவள் எப்படி என்னை மறந்தாள்?' என ஆதித்த கரிகாலன் கேட்குமிடம்.
 
(spoiler ends)
 
ரசிக்கும்படியான காட்சிகளைப்போலவே கொஞ்சம் எள்ளலுக்குரிய காட்சிகளும் உண்டு 😝 எ. கா. சோழ தேசத்து அரசர்கள் அனைவரின் உடை அமைப்பும் , சிகையலங்காரமும் கொஞ்சமாய் ஜப்பானிய சாமுராய்களைப்போலவே இருந்தது; அதுவும் silhouette காட்சிகளில் அந்த சாயல் அப்பட்டமாகவே தெரிந்தது.
 
போலவே நாகத்தீவு (இலங்கை) தொடர்பான காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டிருக்கின்றன எனத் தெரிகிறது. மரக்கலம்/படகுகள் வந்து நிற்கிற அந்தக் கரைப்பகுதி பிரபலமான சுற்றுலாத்தலம் என நினைக்கிறேன் ( புக்கெட்டின் ஜேம்ஸ்பாண்ட் தீவு?) இலங்கையின் தம்பள்ளையில் நடக்கிற காட்சிகளில் துணைநடிகர்கள் கூட்டத்தினரில் பெரும்பலானோர் கிழக்காசிய முகங்களாக இருந்தது, கதை நிகழும் இடம் குறித்த குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். இப்படி இன்னும் நிறைய 😊
ஒவ்வொன்றாக ரசித்து மனதில் அசைபோடவும் கேள்வி கேட்கவும் படத்தில் பல காட்சிகள் உண்டு.
 
எப்படியும் இன்னொரு முறை Imaxஇலும் பார்த்து விடுவேனென நினைக்கிறேன் 🙈☺️ பிறகு மறுபடியும் எழுதுவோம். இரண்டாம் பாகம் வருவதற்குள் நாவலை மீண்டுமொரு வாசித்து விட்டு, இந்த புனைவுலகில் முழுமையாக மூழ்கிவிடுவேனென நினைக்கிறேன் 🤣😅

சனி, 24 செப்டம்பர், 2022

அம்பரம் - போர்கண்ட நெஞ்சம்

ambaram-book-cover

 

மனிதன் தன் நிலத்தின் வழியாகவே அடையாளம் காணப்படுகிறான். பருவகாலங்களுக்குத் தக்கபடி நிலம் தன்னை மாற்றிக் கொண்டு முன்னகர்த்திச் செல்லும்போதெல்லாம் மனிதன் அச்சம் கொள்கிறான். மற்றங்களைப் புரிந்து கொண்டு வாழப்பழகாமல் நிலம் தன்னைக் கைவிட்டுவிட்டதான அச்சத்தில் ஓடத்துவங்கும் போது இடம்பெயர்தல் நிகழ்கிறது.

- அம்பரம்/ ரமா சுரேஷ்

 ***********************************************************************************

  உண்மையில் ஒரு தனி மனிதனின் அடையாளம் என்பது என்ன ?   அவனுடைய நாடா ? அவன் பேசும் மொழியா ? அவன் கடைபிடிக்கும் மதமா ? அவனுடைய தொழிலா ? அவனுடைய பெற்றோரும் சுற்றத்தாருமா ? ஒரே இடத்தில் பிறந்து , வளர்ந்து, அங்கே புழக்கத்தில் இருக்கிற மொழியைப் பேசி, வாழ்ந்து, பின்பு மரித்துப் போகிறவர்களுக்கு வேண்டுமானால் மேற்கண்டபடி நிலையான அடையாளமாய் சொல்லிக் கொள்ள ஏதேனும் இருக்கலாம். ஆனால், உயிரையும் உடைமைகளையும் , குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ளவும், உயிர்பிழைத்துக் கிடக்கவும் புலம் பெயர்கிறவர்களுக்கு அப்படியான நிலையான அடையாளமென்று ஏதுமிருப்பதில்லை. அவர்கள் செல்லும் எந்த நாடும், வாழும் எந்த ஊரும் , பேசும்  எந்த மொழியும், அவர்களுக்கான  நிலையான அடையாளமாக இருந்ததில்லை. அப்படி நிலையான அடையாளங்களை அவர்கள் கைக்கொள்வதையும் ஏனையோர் விரும்பியதில்லை. மனதில் நினைவுகளைச் சுமந்து கொண்டு என்றாவது ஓர் நாள் ஊர்திரும்பிவேண்டுமென அன்றாடம் ஓடிக்கொண்டேயிருக்கிற அல்லது தங்களது வேர்களை வேறிடத்தில் பதியம் போட்டுக்கொள்ளத் துடிக்கிற ஒருவனின் கதையைத் தான் அம்பரம் நாவல் பேசியிருக்கின்றது.

 ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் மோக்லி பதிப்பகம் வெளியிடும் நாவல்; அதுவும் பர்மாவை கதைக்களமாகக் கொண்ட நாவல் என்பதே போதுமானதாக இருந்தது ‘அம்பரம்’ நாவலை வாசிப்பதற்கு. 1824ல் பர்மாவில் துவங்குகிறது கதை. முதல் ஆங்கிலோ-பர்மிய போர்க்கால பின்னணியில்,  ஸ்வெடகன் பகோடா என்னும் பழமையான பெளத்த ஆலயத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த ‘சிண்ட் கூ’ எனும் பெரிய மணியையும் எடுத்துச் செல்ல ப்ரிட்டிஷாரின் முயற்சிகளும் அதனைத் தடுக்க முயலும் பெளத்த பிக்குகளின் முயற்சிகளுமாக காட்சிகள் விரிகின்றன. முதல் பதினைந்து பக்கங்களைப் படிக்கையில் ஒருவேளை இந்த நாவல் ஒரு முழு வரலாற்று நாவலாக இருக்குமோ என யோசிக்க வைத்தாலும், பின்பு கதை வேறு திசையில் வேறு கோணத்தில் பல்வேறு பாத்திரங்களினூடாகவும் அவர்தம் வாழ்வினூடாகவும் நகர்கின்றது.

 பர்மியனான ’மெளன் போ’வைக் காதலித்துக் கரம்பிடித்து, பின்னாட்களில் அவன் தன் தன்னையும் தன் மகனையும் விட்டு எங்கோ சென்றுவிடுகையில் மகனின் கைபிடித்து கணவனைத்தேடி புறப்படும் ஆயிஷாவின் கதை; எங்கோ மன்னார்குடியில் பிறந்து நாகப்பட்டிணத்தில் வளர்ந்து, பிழைப்புத் தேடி கப்பலில் சிங்கப்பூருக்கு செல்வதாக எண்ணிக்கொண்டு பர்மாவில் செட்டியார்கடைக்கு பெட்டிப்பையனாக வந்து சேர்ந்து தனக்கென ஒரு குடும்பத்தையும் சமூக அந்தஸ்த்தையும் வளர்த்துக் கொண்டு பர்மாவில் காலூன்றும் சிவராமனின் கதை: ஆயிஷா பெற்ற மகனாக இருந்து பின்பு சிவராமனின் வளர்ப்பு மகனாய் மாறுகிற நாவலின் மையப்புள்ளியான முகமக யூசுப்பின் கதை. இம்மூவரைத் தவிர்த்து மற்ற பாத்திரங்களும் அவர்களின் வாழ்வும் இம்மூவரைச் சுற்றியே எழுதப்பட்டுள்ளது.

யூசுப் ஆயிஷாவிடமிருந்து சிவராமனிடம் வந்து சேர்தல், அதன் பின் பர்மாவில் ஒரு குத்துசண்டை வீரனாக தன்னை வளர்த்தெடுத்துக் கொண்ட விதம் ,காஜியாவுடனான அவனுடைய காதல்,  பாஹிர் உடனான அவனது நட்பு என பர்மாவிலும் சிங்கப்பூரிலுமாக யூசுப்பின் வாழ்வில் நடப்பவையே ’அம்பரம்’ நாவலின்  மீதிக்கதை. குத்துச்சண்டை குறித்த வர்ணணைகள் எழுதப்பட்டிருந்த விதம் ரசிக்கும்படி இருந்தது. போலவே சிட்-போ வுக்கும்  யூசுப்பிற்குமான நட்பை எழுதியிருந்த விதமும் புதியதாய் இருந்தது. போட்டி மனப்பாங்கு கொண்ட இரண்டு முரட்டுத்தனமான குத்துச்சண்டை வீரர்களுக்கிடையேயான நட்பை  (almost bromance !?)  இத்தனை மென் உணர்வுகளுடனான ஒன்றாக எழுதமுடியுமா என யோசிக்க வைத்திருக்கிறார் ரமா சுரேஷ் . முகமது யூசுப்பின் பாத்திரப்படைப்பு என அமெரிக்க குத்துச்சண்டை வீரர் முகமது அலியை நினைவூட்டியது. காரணம் என்னவென நாவலை வாசிக்கையில் உணர்ந்து கொள்வீர்கள். இங்கு குறிப்பிடப்படாத மேலும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் கதைகளும் நாவலில் இடம்பெற்றிருக்கின்றன.

இரண்டாம் உலகப்போர் பின்னணியில் அமைந்த நாவல் என்று ஒற்றை வார்த்தையில் அடக்கி விட முடியாதபடி, பர்மாவின் வரலாறு, ப்ரித்தானிய காலனியாதிக்கம், பெளத்த மத தத்துவங்கள், ஷின்பியு உள்ளிட்ட பல பர்மிய கலாச்சார நிகழ்வுகள் , அங்குள்ள இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறை, இந்தியா-பர்மா-சிங்கப்பூர்-சீனா-ஜப்பான் உள்ளிட்ட உலகநாடுகளின் இரண்டாம் உலகப்போர் காலத்து சர்வதேச புவியரசியல் நிகழ்வுகள்,  என அத்தனையையும் 400 பக்கங்களுக்குள் சொல்லிவிட முயன்றிருக்கிறார். 1930ஆம் ஆண்டில் பர்மாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், Prince of Wale, Repulse உள்ளிட்ட பிரித்தானிய போர்க்கப்பல்கள் ஜப்பானால் சிங்கப்பூர் படையெடுப்பின் போது மூழ்கடிக்கப்பட்ட நிகழ்வு, ஜப்பானியர்கள் சிங்கப்பூரிலும் பர்மாவிலும் இந்திய சீன போர்க்கைதிகளை நடத்திய விதம், சீனாவின் மீதான ஜப்பானிய படையெடுப்பின் போது சீனாவுக்கு உதவும் பொருட்டு ப்ரிட்டிஷ் உதவியுடன் அமைக்கப்பட்ட  லெடோ சாலை (Ledo road),  INA வின் தோற்றமும் மலேயாவிலும், பர்மாவிலும் சிங்கப்பூரிலும் தோட்டத் தொழிலாளர்களாக இருந்த தமிழர்கள் பெருமளவில் INAவில் சேர்ந்ததற்கான காரணமும், என பல உண்மை நிகழ்வுகளையும் துல்லியத்தன்மையுடன் நாவலின் போக்கில் இணைத்து சிறப்பாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் ரமா சுரேஷ் அவர்கள்.

இந்த அதீதமான வரலாற்றுத் தகவல்களும் , நிலவியலை விளக்க துல்லியத்தன்மைக்காக குறிப்பிடப்படும் அளவீடுகளும் எண்களுமே ( 4000 சதுர கிலோ மிட்டர் பரப்பளவு, 300 அடி உயரம் , இங்கிருந்து கிழக்கே அங்கிருந்து வடமேற்கில்.. மாதிரியான அளவீடுகள் தொடர்ந்து வருவது) கதையை விட்டு நம்மை கொஞ்சம் வெளித்தள்ளிவிடுகின்றன. போலவே கதைக்களம் சூழல் பற்றி விவரணைகளுக்கும், கதைப் பாத்திரங்கள் அவர்களுடைய உணர்வுகள் பற்றி விவரணைகளுக்குமான சமநிலை சரியாக அமையாதது போலவும் தோன்றியது.மேலும் ‘அம்பரம்’ நாவலில் அந்தந்த  நாடுகளைச் சார்ந்த நிறைய கலாச்சார கலைசொற்களும், நிலவியல் குறிச்சொகளும் இடம்பெற்றிருக்கின்றன.  

எ.கா: 

தணக்கா (Thanaka) - பர்மியர்கள் முகத்தில் அழகுக்காக பூசிக்கொள்ளும் ஒருவகை மாவு

ஏ கலா - பர்மியர்கள் தமிழர்களைக் குறிப்பிடும் விளி

சுவெ மொடா பயாச்சி (Shwehmawdaw Pagoda) - பர்மாவின் பெகு நகரில் அமைந்துள்ள ஒரு பெளத்தமடாலயம்

இம்மாதிரியான சொற்களுக்கு எந்தவகையான அடிக்குறிப்போ (footnote)  இணையான ஆங்கில உச்சரிப்போ குறிப்பிடப்படவில்லை. நாவலில் சொல்லியிருக்கிற தகவல்கள் பற்றி மேலும் படித்துத் தெரிந்துகொள்ள இணையத்தை நாடுவதிலும் சிரமமிருந்தது. 

அம்பரம் என்ற சொல்லுக்கு ஆடை, கடல், உயர்ந்த வெளி, வானம், என பல பொருள் சொல்லுகிறது இணைய அகராதி. நாவல் புலம்பெயர்ந்தோரின் நிலம் சார்ந்த அடையாளம் குறித்தது என்பதால் நிலத்தைக் கடலாகவும், அடையாளத்தை ஆடையாகவும் உருவகித்துக் கொண்டால் இரண்டுக்கும் ‘அம்பரம்’ எனும் தலைப்பு பொருந்திப் போகின்றது

இறுதியாக, தன்னுடைய முதல் நாவலுக்கு இத்தனை பெரிய கதைக்களத்தை எடுத்துக் கொண்டு அதன் வழியே தத்துவம், மதம், சர்வதேசிய அரசியல், போரினால் சாமனியர்களின் வாழ்வில் ஏற்படும் தாக்கம், புலம்பெயர்வோரின் அடையாளச்சிக்கல்கள் ,தனி மனிதர்களின் உணர்வுப்போராட்டகளென அத்தனையையும் மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார் எழுத்தாளர். அவருடைய முன்னுரையிலிருந்து இந்த நாவலுக்காக மூன்றாண்டுகளுக்கு மேல் கடுமையாக உழைத்திருப்பதையும், பர்மா உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடியாகப் பயணித்து ஆய்வு மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அந்த உழைப்பு வீண்போகவில்லை. நாவலின் இறுதிவடிவம் சிறப்பாக அமைந்ததற்கு அந்தக் கடுமையான உழைப்பே காரணமென நினைக்கிறேன்.

 ரமா சுரேஷ் அவர்களுக்கும், பதிப்பாளர் லஷ்மி சரவணகுமார் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும் <3 

அம்பரம் | ரமா சுரேஷ் | மோக்லி பதிப்பகம் | 400 பக்கங்கள் | விலை ரூ. 350

புத்தகம் வாங்க: இணைப்பு இங்கே

References:

https://en.wikipedia.org/wiki/First_Anglo-Burmese_War

https://en.wikipedia.org/wiki/Shinbyu

https://en.wikipedia.org/wiki/1930_Bago_earthquake

https://en.wikipedia.org/wiki/Ledo_Road

https://en.wikipedia.org/wiki/Second_United_Front

https://en.wikipedia.org/wiki/Thanaka

https://en.wikipedia.org/wiki/Shwemawdaw_Pagoda

https://www.bbc.com/news/world-asia-28832296


Related Posts Plugin for WordPress, Blogger...