நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

நீஸெவின் வேர்க்கனி - மயிலன் ஜி சின்னப்பன் - சால்ட் பதிப்பகம்


இந்த ஆண்டு படித்து முடித்த முதல் நாவல் (குறுநாவல் ?!) மயிலன் ஜி சின்னப்பன் எழுதியிருக்கும் நீஸேவின் வேர்க்கனி. நூற்றியிருபது பக்கங்களுக்குள் என்பதால் எளிமையாகப் படித்து முடித்து விடலாம் என்கிற முன்முடிவுடன் தொடங்கினேன். எதிர்பார்ப்பிற்கு மாறாக மயிலனின் வழக்கமான மொழிநடையிலிருந்து மாறுபட்டு அதிகம் கவனக்குவிப்பைக் கோருகிற ஒரு நாவலாக அமைந்திருந்தது ‘நீஸேவின் வேர்க்கனி’. 

பதினேழாம் நூற்றாண்டில் நடைபெறும் கதையானது டானிஷ் நிலப்பிரபுக்களான விர்கஸ், நேதா இருவரின் கலை சார்ந்த ஓர் அற்புதமான உரையாடலுடன் துவங்குகிறது. அதன் பின் நாவல் முழுவம் உரையாடல்கள் குறைந்து போய் பெரும்பகுதி விவரணைகளாலேயே நிரம்பியிருக்கின்றது. அதீத விருப்பம் , எல்லை, துன்பம் எனப் பொருள்படும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் நாவல் , எனக்கு துயரங்களின் தொகுப்பாகவே தொன்றியது.

மன்னரின் ஆசியுடன் டானிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவி இந்தியாவில் வாணிபத்தை விரிவாக்கிடும் பொருட்டு டச்சுக்காரர்களையும் கூட்டு சேர்த்துக் கொண்டு கீழைத்திசையில் இரு கப்பல்களில் பயணப்படும் விர்கஸும் நேதாவும் இந்தப் பெரும்பயணத்தில் இழந்தவையும் பெற்றவையுமே இந்த நாவல். தொடக்கத்தில் காலனியாதிக்கவாதிகளின் பாடுகளை அவர்களின் பார்வையில் தெரிந்து கொள்வதில் எனக்கு என்ன கிட்டும் என்கிற மேலோட்டமான நெருடலுடனே வாசிக்கத்துவங்கி ஒரு கட்டத்தில் கதையின் ஓட்டத்தில் கதைப்பாத்திரங்களோடும் அவர்தம் வாழ்வினோடும் ஒன்றிவிட்டு, பின்பு அதே நெருடலுடன் ’உங்களுக்கு வேணும்டா; என சிறுபிள்ளைத்தனமாக என்னை விலக்கிக் கொள்ள முயன்றதும் நடந்தது.
முதல் அத்தியாயத்தின் கலை குறித்த பின்வரும் உரையாடல்கள் உண்டு 

 // “நற்கலை எப்போதும் பெருவலியிருந்தும் உளப்பிணியிலிருந்தும் வருத்தும் ஏழ்மையிலிருந்துமே பிறக்கமுடியும்”
“கேளிக்கை மனத்திலிருந்து கலையுருவாக்கம் நிகழமுடியாது என்று நான் சொல்வதை கலை என்பதையே வலியின் வெளிப்பாடாகத் திரிக்கிறேன் என எடுத்துக்கொள்ள சாத்தியமுண்டு. வெளிப்பாட்டுத் தளத்திலல்லாமல் , உள்ளீடு சார்ந்தவொன்றை நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.கலை நிர்ப்பந்திக்கும் அக்கறையும் சிரத்தையும் மிதவை மனங்களால் எட்டமுடியாதது. உத்தேசிக்கும் வெளியீடு, காதலாகவோ களிப்புணர்வாகவோ கொண்டாட்டமாகவோ இருந்தாலும் அதற்கான அழுத்தமான, பிரத்தியேகமான ஊன்றல் வேண்டும்.செல்வச்செழுமை அந்த ஊன்றலை அனுமதிக்காது” //

மேற்கண்ட உரையாடல்களே இந்த நாவலின் மொத்த சாரத்தையும், வாசிக்கிறவர்கள் இந்த படைப்பிலிருந்து பெறுவதென்ன எனபதையும் சுட்டுவதாகக் கொள்ளலாம்.

நாவலின் தலைப்பான நீஸே குறித்து முதல் அத்தியாத்தில் ஒரு குறிப்பு உண்டு. நேதாவும் விர்கஸும் கலைமனம் குறித்தான விவாதத்தின் முடிவில் நேதா உருவாக்கிக்கொண்டிருக்கிற நீஸேவின் மரச்சிற்பத்தை விர்கஸிடம் காட்டுவான். நீஸே (Nisse) என்பது டானிஷிய தொன்மங்களிலும் நாட்டார்வழக்கிலும் சொல்லப்படுகிற ஒரு வகை நல்லாவி. உருவத்தில் சிறியவையான இவை வயதில் முதிய தோற்றத்துடன் வீட்டிற்குள் இருந்தபடி அன்றாட வேலைகளைச் செய்கிற பணியாள் போன்றவை. ஆனால் தொன்மங்களில் சொல்லப்பட்டது போலன்றி இளமையான அழகான உருவத்தில் நீஸேவை வடித்திருப்பான் நேதா. நீஸேவின் வேர்க்கனி என்கிற தலைப்பிற்கும் இதற்குமான தொடர்பை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

காலம்காலமாக வழக்கத்திலிருக்கும் ஒன்றை நம்முடைய பார்வையில் முற்றிலும் வேரொன்றாக உருவகித்து மீட்டுருவாக்குவது(ம்) தான் கலைமனம் செய்யக்கூடியதென நேதா முயன்றான் எனில் மயிலன் இந்த நாவலின் வழி செய்ய முயன்றிருப்பதுவும் அது தானா? 

நாவல் டென்மார்க்கின் கோப்பன்ஹேகனில் தொடங்கி, இலங்கை, திரிகோணமலை, போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ரகுநாத நாயக்கர் என அத்தனையையும் தொட்டு தரங்கம்பாடியின் டன்ஸ்பர்க் கோட்டையில் முடிகிறது. கப்பல் பயணத்தின் பிற நிகழ்வுகளைக் குறிப்பிட்டால் வாசிக்கிறவர்களுக்கு எதுவும் மிஞ்சாது என்பதால் அதனை புத்தகம் படித்துத் தெரிந்து கொள்ளவும் . Well written and very demanding work of fiction. வாழ்த்துகள் மயிலன்...! <3

சால்ட் பதிப்பகம் அவர்களுடைய வழக்கமான அழகியலுடன் மிகச் சிறப்பாக புத்தகத்தை வடிவமைத்திருக்கிறார்கள். வடிவமைப்பாளரும் ஓவியருமான பழனிவேலன் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்

வெள்ளி, 22 நவம்பர், 2024

தரூக் - கார்த்திக் பாலசுப்ரமணியன்

 

"நீயே கவனி. நடைபெற சாத்தியம் குறைவாக இருக்கும் ஒன்றைப் பற்றி யோசித்து பயந்து இப்போதிருக்கும் இத்தனை அழகான பொழுதை வீணடிக்கிறாய். எப்போதும் உன் மனம் எதையாவது பற்றி எச்சரித்துக்கொண்டே இருக்கிறது. உன்னை நீயே மறைத்துக்கொள்கிறாய். மனத்தைத் திறந்து பேசக்கூட அஞ்சுகிறாய். எதிரே இருப்பவரை விடுத்து எங்கோ இருப்பவரை நினைத்துப்பயப்படுகிறாய். இந்த வாழ்க்கையை ஒரு சின்ன சிராய்ப்புகூட படாமல் வாழ்ந்து முடித்துவிட வேண்டும் என்று விரும்புகிறாய். ஆனால், அதன்பொருட்டே உன்னை நீயே வருத்திக்கொள்கிறாய். பக்கத்தில் பார் அந்தக் குழந்தையை! எவ்வளவு சந்தோசம் அதன் முகத்தில், நம்மால் அப்படி இருக்க முடியாதுதான். அதைப் பார்த்துப் போலியாக நகல் செய்வதுகூட தப்பில்லை என்று தோன்றுகிறது எனக்கு.”

பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்திலிருந்து 1400 குற்றவாளிகளை ஏற்றிக்கொண்டு கேப்டன் ஆர்தர் ஃபிலிப் தலைமையில் ஆஸ்த்ரேலியாவின் சவுத் வேல்ஸ் பகுதிக்கு வந்தடைகின்றன ‘கான்விக்ட் கார்கோ’ (convict cargo) என்றழைக்கப்பட்ட அந்த பதினோரு கப்பல்கள். இதற்கு சரியாக பதினெட்டு  ஆண்டுகளுக்கு முன்பே ஆஸ்த்திரேலியாவின் இதே இடத்துக்கு பயணப்பட்டு அங்கிருக்கிற பூர்வகுடியினர் பற்றியும் வனவாழ் உயிர்கள் பற்றியும் விரிவான குறிப்புகளை பதிவுசெய்துவைத்தவர் கேப்டன் ஜேம்ஸ் . இவர்கள் இருவருமே உண்மையிலேயே இவ்வுலகில் வாழ்ந்தவர்கள். இதில் கேப்டன் ஆர்தர் ஃபிலிப் ஆஸ்த்ரேலியாவுக்கு வந்திறங்குகிற நிகழ்வில் தான் துவங்குகிறது ’தரூக்’ நாவல்.

கேப்டன் ஃபிலிப்பின் கப்பலில் கூட வரும் வில்லியம், காபா உள்ளிட்டோரின் பின்புலமும் இவர்கள் ஆஸ்திரேலியாவில் நுழைந்து வேரூன்ற முனையும் கதையும் ஒரு புறம். தமிழ்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த மென்பொறியாளன் காசிம், அவனுடைய மனைவி ஃபர்ஸானா இவர்களின் சமகால வாழ்வும் கதையும் மற்றொரு புறமும் என நாவல் நகற்கிறது. கார்த்திக்கின் முதல் நாவலான நட்சத்திரவாசிகள் போல எளிமையான ஒரு நேர்கோட்டுக் கதையாக இல்லாமல், வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கிற கதைகளுடன் கூடவே பல்வேறு பாத்திரங்களின் கிளைக்கதைகளையும் இணைத்து பல அடுக்குகளுடன் கூடிய ஒரு முழுமையான நாவலாக அமைந்திருக்கிறது தரூக். 

கடந்தகாலக் கதையிலும் சரி நிகழ்காலக் கதையிலும் சரி , இடம்பெறுகிற முக்கியப் பாத்திரங்கள் அனைவருக்கும் தங்கள் அடையாளம் சார்ந்த ஒரு பின்கதையும், அதனைத் தொடர்ந்த தேடலும் இருந்துகொண்டேயிருகிறது.

கடந்த காலக்கதையில்

தென் ஆஃப்ரிக்காவின் கலஹரி பாலைவனத்தின் பழங்குடியான காபா, ஐரோப்பியர்களின் காலணியாதிக்கத்தால் பாதிக்கபட்டு தன் நிலத்தையும், அடையாளத்தையும் இழந்து கொத்தடிமையாக்கப் பட்டு அங்கிருந்து தப்பிக்க கிடைக்கும் வேலைகளைச் செய்து எங்கெங்கோ ஓடிக்கொண்டேயிருக்கிறவன்.

கலோடன் போருக்குப் பிறகு ஸ்காட்லாந்திலிருந்து இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தபின்னும் மனதில் தன் கிராமத்தையும் ஹாக்மனே எனும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் நினைவுகளையும் சுமந்துகொண்டேயிருந்தவர் வில்லியமின் தாய். வில்லியம் ப்ரித்தானிய அரசுக்காக பணிபுரிந்தாலும் அவர்களால் எப்போதும் ஒரு வேற்றாளாகவே பார்க்கப்படுபவன். அம்மை நோய்க்கு தாயைப் பறிகொடுக்கும் வில்லியம் காலத்துக்கும் அவருடைய நினைவுடனேயே வாழ்கிறான்.

 போர்ட்ஸ்மவுத் தங்கும் விடுதியில் பணிப்பெண்ணாக அறிமுகமாகி பின்பு வில்லியமின் காதலியாகும் ரெபெக்கா , ஓவியங்களில் வழியே தன் தாயின் சாயலில் தன்னைத் தேடிக்கொண்டிருக்கிற ஒரு பெண். ஃப்ரான்ஸ் நாட்டிலிருந்து வந்து பெரும் செல்வந்தனை மணந்து ரெபேக்காவைப் பெற்றெடுத்து பின்பு கணவருடனான மனவருத்தத்தில் அவரைப் பிரிந்து படுத்த படுக்கையாகக் கிடக்கும் தாயை நன்றாக கவனித்துக் கொள்ளும் பொருட்டு உழைத்துக் கொண்டிருப்பவள் ரெபேக்கா.

தற்காலக் கதையில்

தன்னை சுற்றியிருக்கிற அனைத்திலும் சுத்தத்தையும் ஒழுங்கையும் எதிர்பார்க்கிற ,அதிகம் பேசாத ஒருவனான காசிம் ஃபர்ஸானாவின் கட்டாயத்தால் சொந்தநாட்டை விட்டு ஆஸ்திரேலியா வந்தாலும் எங்கும் ஒட்டி ஒன்றி ஒத்துப்போகமுடியாமல் மன அமைதியின்றி அடையாளச் சிக்கலுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறவன். ஒரு மாதிரி உள்ளுக்குள் பதற்றத்துடனும் அமைதியில்லாமல் குழப்பத்துடனேயே அத்தனையையும் எதிர்கொள்கிறவன்.

காசிமின் மனைவி ஃபர்ஸானா.இந்த நாவலில் இடம்பெற்ற பாத்திரங்களிலேயே மிகத்தெளிவான மனம் கொண்ட பெண். ஊரார் உறவினர் முன்பு காசிமுடன் இன்னும் பெரிதாக வாழ்ந்து காட்டிவிட வேண்டுமென வைராக்கியத்துடன் அவனை ஆஸ்த்ரேலியாவுக்கு கட்டாயப்படுத்தி அழைத்து வந்தவளும் அவள்தான். இந்தியாவில் சொந்த ஊரில் புர்கா அணிந்து கொள்ள மறுக்கவும், வெளிநாட்டில் கட்டாயம் புர்கா அணிந்துகொள்ளவும் தெரிந்த அளவுக்கு மனத்தெளிவு கொண்டவள்.

தனது கடந்த காலத்தையும் தான் பிறந்த  பூர்வகுடியினரின் வரலாற்றை தேடிப்பதிவு செய்யும் வேட்கையுடன் அலைகிற பெண் ஜெட்டா.தனது குடும்ப உறவுகள், தன் பிறப்பின் அடையாளம் சார்ந்த குழப்பங்கள் என சிக்கலான மனவார்ப்பைக் கொண்டவள்.  காசிம் உடனான அவளுடைய உறவு தொடங்கும் விதமும் வளர்ந்து முடியும் விதமும் அதற்குச் சான்று. 

வில்லியம் ரெபெக்கா, காசிம் - ஜெட்டா என இருவரிடமும் இரண்டு காலகட்டத்திலும் இடம்பெறுகிற பிரியத்தின் கல், வில்லியம் முதன்முதலில் குடை ஓவியங்களை காணுமிடம்,  பூமராங்-நிலவு தொடர்பான பழங்குடிகளின் கதை, காபாவின் மதிப்பீடுகளும் அவன் உலகை அணுகும் விதமும், கடந்த காலத்தில் ஐரோப்பிய ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகளின் கொடூரமான ஆக்கிரமிப்பு மனநிலை ,அதன் பொருட்டு அவர்கள் செய்யும் மனிதத்தன்மையற்ற செயல்கள், சமகாலத்தில் குழந்தைப்பருவத்திலேயே அவர்கள் மனதில் மற்ற நாட்டவரைப் பற்றி விதைக்கப்பட்டு வெளிப்படுகிற வெறுப்பு என நுணுக்கமாய் அத்தனை விஷயங்கள் நாவல் முழுக்க நிறைந்து கிடக்கின்றன. இன்னும் இங்கே குறிப்பிடாத பல விஷயங்கள் நாவலில் இடம்பெற்றிருக்கின்றன. நாவலை படித்து முடிக்க எடுத்துக் கொண்ட காலம் தாண்டி அதனை திரும்ப அசைபோடவும் மீள்வாசிப்பு செய்யவும் அதிகம் நேரம் தேவைப்பட்டது. 

நாவல் முழுவதும் கார்த்திக்கின் எழுத்துநடை ஒரு மொழிபெயர்ப்பு நாவலுக்குரியதைப் போலவே தோன்றியது. கார்த்திக்கின் கடுமையான உழைப்பும் வரலாற்றுத் தரவுகளை கதையுடன் இணைக்க எடுத்துக்கொண்ட  முயற்சியும் சிறப்பான பலனைத் தந்திருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஏற்றவாறு சிறப்பான கோட்டோவியங்களை வரைந்திருக்கிறார் ஓவியர் சுரேஷ் குமார் ராமர். காசிமின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தாலும் எதிர்பாராத ஒன்றாக இல்லை என்பது கதை சொல்லலின் வெற்றி எனக்கொள்ளலாம். 

 ஒரு நிலத்தின் பூர்வீக ஆதிக்குடியினருக்கும் (natives) , அந்நிலத்தின் வளங்களின் பொருட்டும் ஏனைய காரணங்களுக்காகவும் நிலத்தையும் மக்களையும் அடக்கியாள நினைக்கிற ஆதிக்கவாதிகளுக்கும் (colonizers), பிழைப்புத் தேடியோ அல்லது சூழலின் காரணமாகவோ வலசைப் பறவைகள் போல குடியேறும் புலம்பெயர்ந்தோருக்குமான (immigrants) போராட்டம் என்பது நூற்றாண்டுகளாக வெவ்வேறு வடிவங்களில் இப்போது வரையிலும் தொடரும் ஒரு நிகழ்வு. கார்த்திக் பாலசுப்ரமணியனின்’தரூக்’ நாவலில் இதே மாதிரியான போரட்டங்களின் காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட இரண்டு வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மனிதர்களின் கதைகளும் கிளைக்கதைகளுமாக சொல்லப்பட்டிருக்கிறது.

A well written, well edited novel . Must read. And Karthik has arrived ...! <3  வாழ்த்துகள் கார்த்திக் !!!

தரூக், கார்த்திக் பாலசுப்ரமணியன், காலச்சுவடு பதிப்பகம், 311 பக்கங்கள், விலை ரூ. 350

https://www.panuval.com/4539/taruuk-10025445

Related Posts Plugin for WordPress, Blogger...