நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

ஞாயிறு, 8 ஜூலை, 2012

War Of The Ring - மின்புத்தகம் - விஸ்வரூபம்...!!!


 பொதுவாக  ஃபாண்டஸி (fantasy) எனப்படும் கற்பனைக் கதைகள் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. நிஜ உலகில் சாத்தியப்படாத நிகழ வாய்ப்பே இல்லாத... பல விஷயங்கள்,கற்பனையான பல வகை மனிதர்கள்,விலங்கினங்கள்.கடவுள்கள்,தேவதைகள்,பூதங்கள்... இப்படி எல்லையே இல்லாமல் பறந்து விரிந்து கிடப்பது இந்த கற்பனை/மாய உலகங்கள்... இவ்வாறான உலகங்களையும் மக்களையும் பற்றிய விந்தை கதைகளை முதலில் நமக்கு வரலாறுகளும்..புராணக்கதைகளும் சொல்லி வந்தன.. பின் காலமாற்றத்தில்.. நாம் கதைகளில் படித்து கற்பனை செய்தவற்றையெல்லாம் தொழில்நுட்பத்தின் உதவியோடு திரையில் உயிர் கொடுத்து உலவ விட ஆரம்பித்தனர்..!! ஆங்கிலத் திரைப்படங்களைப் பொறுத்தவரையில் அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களில் பல உயரங்களைத் தொட்டவர்கள் ஆதலால் மிகச் சிறந்த  ஃபாண்டஸி திரைப்படங்களை இந்த உலகுக்கு அவர்களால் தர முடிந்தது...!! 

ஸ்டார் வார்ஸ் தொடங்கி லார்ட் ஆப் த ரிங்க்ஸ், நார்னியா, ஹாரி பாட்டர்,பேட்மேன்,சூப்பர் மேன்,ஸ்பைடர் மேன், அவதார் வரை உச்சபட்ச தொழில்நுட்பத்தின் துணையோடு ஹாக்வார்ட்ஸ்,பண்டோரா,மிடில் எர்த் என பலவேறு மாய/கற்பனை உலகங்களையும்...அவற்றின் அதிசய உயிரினங்களையும்...அந்த உலகத்து நாயகர்களின் சாகசங்களையும் திரைப்படங்களில் பார்த்து மகிழ்ந்து வந்திருக்கின்றோம். திரைப்படங்களின் உருவாக்கத்திற்குப் பின்னாலுள்ள அறிவியல் புரியாத வயதில் அவற்றைப் பார்த்து ஏற்பட்ட பிரமிப்பை விட பல மடங்கு அதிகமான ஆச்சரியமும் பிரமிப்பும் அந்த திரைப்படங்களின் உருவாக்கத்திற்கு பின்னணியில் உள்ள உழைப்பையும் கஷ்டங்களையும் அறிந்துகொள்ளும்போது ஏற்பட்டது. 

இப்படியான ஒரு  ஃபாண்டஸி திரைப்பட தொடரை எடுத்துக்கொண்டு அந்த திரைப்படத்திற்கான கதை முதன் முதலில் புத்தகமாக உருவானது தொடங்கி, அதிலுள்ள பாத்திரங்கள், கதை நிகழ்கின்ற உலகம், காலம், அந்த கற்பனை உலகின் மக்கள் பேசுகின்ற மொழி, அவர்களுக்கு இடையேயான உள்நாட்டு பிரச்சனைகள்,அந்தந்த நாடுகளின் வரலாறுகள், இத்தனையையும் சொல்லி இவையெல்லாவற்றையும் மூன்று பாகங்கள் கொண்ட ஒரு திரைப்படத்தினுள் அடக்கி திரையில் கொண்டு வர படக்குழுவினர் பட்ட கஷ்டங்கள் ,படத்துக்காக அமைக்கப்பட்ட செட்கள்,  புதுமையான கேமரா டெக்னிக்ஸ், ஸ்பெஷல் எபெக்ட்கள், படப் பிடிப்பின்போது படக்குழுவினர் எதிர்கொண்ட சவால்கள், எடிட்டிங் உத்திகள்,ஆடையலங்கார வடிவமைப்புகள்,நடிகர்களைத் தேர்வு செய்த விதம்,பின்னணி இசையின் உருவாக்கம்..இப்படி ஆதி முதல் அந்தம்  வரை அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்து ஒரு புத்தகம் வந்தால் எப்படி இருக்கும்...?? 

அந்த Cast & Crew வோடு மொத்தமாக பயணித்த ஒரு உணர்வைத் தருமல்லவா...??

அப்படித்தான் இருந்தது எனக்கு நண்பர் கருந்தேள் ராஜேஷ் எழுதி ஹாலிவுட் பாலா மற்றும் கொழந்த கணேஷ் அவர்களின் வடிவமைப்பில் வெளிவந்திருக்கின்ற  வார் ஆப் த ரிங் (War of the Ring) மின்புத்தகத்தை படித்தபோது.ராஜேஷ் முதன் முதலில் தமிழில் பதிவெழுத ஆரம்பித்தலிருந்து அவரது தளத்தின் அத்தனை கட்டுரைகளையும் படித்து வந்திருக்கின்றேன்.சின்னதாய் ஒரு விஷயம் சொன்னாலும் அதற்கு பின்னால் ஒரு உழைப்பும், ஹோம்வொர்க்கும் கட்டாயம்  இருக்கும்.ஹாலிவுட் பாலா வின் fx மற்றும் பிக்ஸார் ஸ்டோரி படித்தவர்களுக்கு அவரைப்பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.  LOTR சீரிஸ் பற்றி ராஜேஷ் எழுதத் தொடங்கியபோது  அந்த சீரிஸின் ஒரு திரைப்படத்தையும் நான் பார்த்திருக்கவில்லை...படத்தைப் பற்றியும் எதுவும் தெரியாது..!!நான் ஹாரி பாட்டர் விரும்பி ஆதலால் LOTR சீரிசை தொடர்ந்து படிக்கவுமில்லை. ஆனால் LOTR மின்புத்தகம் பற்றிய ராஜேஷின் அப்டேட்டுகள் ஆர்வத்தைத் தூண்ட ஆரம்பித்தன. ஒரு வழியாக மின்புத்தகம் நிறைவடைந்து வெளிவந்த பொழுது ஒரு பெரிய நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதற்கு ஈடான ஆர்வத்தோடு படிக்கத்தொடங்கினேன். முழுமையாக படித்து முடிக்க எனக்கு 15 நாட்கள் தேவைப்பட்டன. 

பின்னே... லார்ட் ஆப் த ரிங்க்ஸ் புத்தகங்களை எழுதியவரான டோல்கீன் (Sir.JRR.Tolkien) மற்றும் LOTR திரைத் தொடரின் இயக்குனர் பீட்டர் ஜாக்சன் (Peter Jackson)ஆகியோர் அளித்த நூறு சதவீத உழைப்பில் ராஜேஷும், பாலா,கொழந்த குழுவினரும் ஐம்பது சதவிகித உழைப்பை இந்த மின் புத்தகத்திற்கான உருவாக்கத்திலும் தகவல் சேகரிப்பிலும் அளித்திரும்போது அந்த புத்தகத்தை படிக்கும் நான் ஒரு ஐந்து சதவிகித உழைப்பையாவது தருவது தான் இவர்களுக்கு நான் தரக் கூடிய மரியாதையாக இருக்கும். LOTR சீரிஸின் மூன்று திரைப்படங்களின் எக்ஸ்டெண்டட் வெர்ஷன்களையும் தரவிறக்கி பார்த்துவிட்டு, பின்னணி இசைக் கோர்ப்புகளை முழுவதும் கேட்டுவிட்டு மின்புத்தகத்தை மீண்டுமொரு முறை மேய்ந்துவிட்டே இந்த பதிவினை எழுதிக்கொண்டிருக்கின்றேன். 
'War of The Ring' மின்புத்தகத்தை  உருவாக்கியவர்கள்

Rajesh and JRR.Tolkien
Hollywood Bala and Peter Jackson
என்ன சொல்ல...!! எந்தவொரு வணிக நோக்கமுமில்லாமல் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு கிட்டத்தட்ட Lord Of The Rings-க்கான ஒரு தமிழ் என்சைக்ளோபீடியாவை உருவாக்கியிருக்கின்றார்கள்...!! ஒரு முழுமையான Making of LOTR வீடியோ பார்த்த திருப்தியை அளித்தது இந்த வார் ஆப் த ரிங்ஸ் மின்புத்தகம்...!! ராஜேஷ் மற்றும் பாலா அண்ட் கோவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்...!! :) :)

வார் ஆப் த ரிங்  (War of the Ring) மின்-புத்தகத்தை தரவிறக்க  இங்கே கிளிக்கவும்..!!   
கருந்தேள் ராஜேஷ் அவர்களின் தளம் இங்கு..!!

Image Courtesy: Original Uploaders

ஞாயிறு, 6 மே, 2012

வழக்கு எண் 18/9 - யதார்த்தம்


முந்தைய படத்திற்கும் அடுத்த படத்திற்கும் இடைவெளி கொஞ்சம் அதிகமாக விட்டிருந்தாலும் கதையையும்,தமிழ் ரசிகர்களையும் நம்பி ஒரு அற்புதமான படைப்பை கையிலெடுத்து திரும்ப வந்திருக்கின்றார் பாலாஜி சக்திவேல். நிச்சயம் அவரது முயற்சியில் வென்றிருக்கின்றார் என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழ் சினிமாவில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்கையை பற்றி படங்களைத் தந்தவர்கள் வெகு சிலர் பாலா, வசந்த பாலன் (அங்காடித்தெரு).'காதல்' திரைப்படத்தின் மூலம் அந்த வெகு சிலரில் ஒருவரான பாலாஜி சக்திவேல் 'வழக்கு எண் 18/9 ' மூலம் தனக்கான இடத்தை உறுதி செய்திருக்கின்றார். 



வீட்டு வேலை செய்யும் ஜோதி என்ற இளம்பெண் முகத்தில் திராவகம் வீசப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவதில் கதை தொடங்குகின்றது.அதன் பின் காவல்துறையின் விசாரணையில்... நடைபாதைக் கடையில் வேலை செய்யும் வேலு அவன் பிழைப்பு தேடி வந்த கதையையும்,ஜோதியைக் காதலித்த கதையையும் இன்ஸ்பெக்டரிடம் சொல்வதோடு முதல் பாதி முடிகின்றது.திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் ஜோதி வேலை செய்த வீட்டாரின் மகள் ஆர்த்தி இன்ஸ்பெக்டரிடம் தனக்கு இன்னொருவன் மேல் சந்தேகம் இருப்பதையும் அதற்கான காரணத்தையும் தயங்கித்தயங்கி சொன்னபின் கதை கொஞ்சம் வேகமெடுக்கின்றது.. உண்மைக் குற்றவாளி யார்... ஜோதியின் நிலை என்னவானது... இந்த வழக்கு எண் 18/9 -இன் தீர்ப்பு என்னவானது என்பதெல்லாம் மீதிப்படம்.

 யதார்த்த சினிமாவென்றால் என்னவென்று இளம் இயக்குனர்களுக்கு டியுஷன் எடுத்திருக்கின்றார் பாலாஜி சக்திவேல்.பாத்திரத்தேர்வு , கதை சூழல், திரைக்கதையில் பாத்திரங்களின் Perspective-ல் பயணிக்கின்ற Non-linear உத்தி..அத்தனையும் பிரமாதம் . வேலுவாகவே வாழ்ந்திருக்கின்றார்  ஸ்ரீ...அத்துணை எதார்த்தமான நடிப்பு .கனா காணும் காலங்களில் இவரை பார்த்ததாக ஞாபகம். 

ஜோதியாக நடித்திருக்கும் ஊர்மிளா, ஹைக்ளால் ஸ்கூல் பெண் ஆரத்தியாக வரும் மனிஷா, பணக்கார பொறுக்கி விடலையாக வரும் மிதுன்....இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் முத்துராமன்... இப்படி முக்கிய பாத்திரங்களான அனைவருமே தங்கள் பங்கை வெகு சிறப்பாகச் செய்திருக்கின்றார்கள். திரைப்படத்தின் முடிவு நெஞ்சை உலுக்குவதாக இருக்கின்றது. கண்ணீர் விட வைத்து விட்டார் பாலாஜி சக்திவேல். ராஜன் அண்ணன் சொன்னது போல்," கலையின் உச்சபட்ச வடிவம் அந்த ஒரு துளி கண்ணீர் தானே...!!"



துணைப் பாத்திரங்களைப் பற்றி சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம்.. பாலியல் தொழிலாளி ரோசி, இட்லிக்கடை முதலாளி, கூத்துக்கார சின்னச்சாமி ,ஜோதியின் அம்மா...ஒவ்வொருவரும் ஆப்ட்டான தேர்வு. விஜய் மில்டனின் ஒளிப்பதிவு படத்தின் மிகப் பெரிய பலம். 

கூர்மையான வசனங்கள், உறுத்தாத பின்னணி இசை...கார்த்திக்கின் குரலில் இசையில்லாமல் வரும் ஒரு குரல் கேட்குது பெண்ணே,தண்டபாணி எழுதி பாடிய 'வானத்தையே எட்டிப் பிடிப்பேன்' தவிர தனிப்பாடல்கள் எதுவுமில்லை. படம் நெடுக ஒலிக்கும் 'வானத்தையே ' பாடலைக் கேட்கும்போதெல்லாம் ஒரு மாதிரி நெகிழ வைக்கின்றது. 

மொத்தத்தில் வழக்கு எண் 18/9 ஒரு அருமையான திரையனுபவம்....!!!இந்த மாதிரி படங்களை திரையரங்கில் சென்று பார்த்து வெற்றி பெற வைப்பது தான் படைப்பாளிகளுக்கு நாம் கொடுக்கும் மரியாதை.
கண்டிப்பாக பாருங்கள்..!! 


பின்னூட்டங்களில் உங்கள் கருத்துகளை மறக்காமல் தெரிவியுங்கள்...!!!
Image courtesy: Indiaglitz

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

சொல்லாததும் உண்மை - சுடும் உண்மைகள்





உண்மை...!!!
எத்தனை எத்தனை வார்த்தைகளையும் அர்த்தங்களையும் உள்ளடக்கிய சொல் இது...!!


எல்லாருக்குமே வாழ்க்கையில சில கோட்பாடுகள்..நெறிமுறைகள் இருக்கும்.. யாரையும் கஷ்டப்படுத்தகூடாது...பொய் பேசக்கூடாது...கடன் வாங்கக்கூடாது... சாகிற வரைக்கும் சொந்தக்கால்ல நிக்கணும்... யாரையும் நம்பி வாழக்கூடாது....இப்படி எத்தனையோ தனி மனித கொள்கைகள்.
இவற்றில் பெரும்பாலானவை இன்றைய வாழ்க்கைச் சூழலில் எட்டாக்கனியாக இருப்பினும்...இருப்பதிலேயே கடினமான கொள்கையாக நான் கருதுவது உண்மையாக இருத்தல் என்பதைத்தான்.எப்போதும் உண்மையாக இருப்பதென்பது சாத்தியமில்லாத ஒன்றும் கூட.

இப்படியிருக்கையில் ஒரு மனிதன் தன வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை... தனக்கு நேர்ந்த அனுபவங்களை... கடந்து சென்ற பெண்களை.. உலுக்கிப்போட்ட மரணத்தை... வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடங்களை.. செவிட்டிலறையும் உண்மைகளாகச் சொல்வது தான் இந்த 'சொல்லாததும் உண்மை'...!!வெகு சமீபத்தில் படித்து முடித்த புத்தகம்.  

அந்த மனிதர் 'பிரகாஷ்ராஜ்'...!!தென்னிந்தியாவின் ஆகச்சிறந்த நடிப்பாளுமைகளில் ஒருவரான பிரகாஷ்ராஜ் இத்தனை இத்தனை வாழ்வியல் அனுபவங்களையும்... கதைகளையும் தன்னகத்தே கொண்டிருப்பார் என இந்த புத்தகத்தை படிக்கத் தொடுங்குகையில் சத்தியமாக நான் எண்ணியிருக்கவில்லை. விகடனில் தொடராக வெளிவந்தபோது பெரிதாக என்ன இருந்து விடபோகிறதென இந்த அத்தியாயங்களை படிக்காமல் கடந்திருக்கின்றேன்.

ஆனால் இப்போது படிக்க நேர்கையில்  இந்த புத்தகம் என்னுள் ஏற்படுத்திய தாக்கம்...நிச்சயமாக மிகவும் ஆழமானது.வாழ்க்கையை சற்றே கடுமையான படிக்கட்டுகளின் வழி கடந்தவர்களுக்கு/கடந்துகொண்டிருப்பகளுக்கு  இதே தாக்கம் ஏற்படுமென்பது உறுதி.நிச்சயமாக ஒரு தவற விடக்கூடாத புத்தகம் இது...!!!





புத்தகத்தில் என்னை கவர்ந்த/ரொம்பவும் பாதித்த/யோசிக்கவைத்த  வரிகள் சில:


"எல்லாரும் உண்மை தன் பக்கம் இருக்கனும்னு விரும்புவாங்க.நான் உண்மையின் பக்கம் இருக்கனும்னு யோசிச்சதால நிறைய இழப்புகள்.ஆனா பெற்ற அனுபவங்கள் அதிகம்.சொன்ன உண்மைகளின் அளவு கையளவு மழை.சொல்லாத உண்மைகளின் அளவு ஆகாய நட்சத்திரங்கள்."

"நிகழ்காலத்துக்கான வாழ்க்கையைப் பற்றி யோசிச்சு நாம் செய்யும் தவறுகளைத் திருத்திக்க முடியும்.நாளைக்கான பயத்தின் அடிப்படையில் செய்கிற பாவங்கள் பெரும்பாலும் திருத்த முடியாதவை."

"நடிகனுக்கு கிளிசரின் போடாமல் கண்ணீர் வழிகிற தருணம் இருக்கே...அது ரொம்ப துயரமானது.ஏன்னா, அது உண்மையான கண்ணீரான்னு ஒரு சந்தேகம் எல்லார் மனசுலேயும் ஒரு செகன்ட் எட்டிப்பாத்துட்டு போகும்."

"வாழ்க்கையில் நமக்கு அம்மாவோ,அப்பாவோ,காதலனோ,காதலியோ,நண்பர்களோ...யாரோ ஒருத்தர் எப்படி வாழறதுன்னு அவங்க வாழ்க்கை மூலமா சொல்லிக்கொடுக்கிறவங்களா இருந்துட்டா, அந்த வாழ்க்கை உண்மையிலேயே வரம் தான்."

"சில விஷயங்களை வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாது, மரணம் மாதிரி.காதல், காமம் எல்லாமே வாழறதுக்கான காரணங்கள் தான். வாழ்கிற கொஞ்ச நாட்கள்ல கிடைக்கிற எல்லா வலிகளுமே தாங்கிக்கவும், தாண்டவும் வேண்டியவை தான்.அம்மாவுக்கு வலி கொடுத்துட்டு பிறக்கிறவன் தானே ஒவ்வொரு மனுஷனும்.அப்புறம் வன் மட்டும் பலியை எதிர்கொள்ள மாட்டேன்னு தற்கொலைக்குத் தயாராவது நியாயமா? வலி இல்லாம எப்படி வாழ்க்கை?"

"வெற்றிங்கிறது அரண்மனை.அங்கே பாதுகாப்பா இருக்கலாம்.ஆனா,எதையும் கத்துக்க முடியாது.அடர்ந்து விரிந்திருக்கிற காடுகளில்தான் அனுபவங்கள் பசுமையா பூத்திருக்கு."

"ஒருவருக்குள் ஒருவர் தொலையாமல், ஒருவருக்குள் ஒருவர் தேடாமல்,ஒருவரை ஒருவர் அடையணும்னு நினைக்கும்போதுதான் அசிங்கமாகிடுறோம்."

"உண்மை எப்பவுமே எளிமையாதான் இருக்கும்.ஆன, எளிமை தான் எல்லாவற்றையும்விட அழகு...!!"

"இன்னொரு வலுவான நம்பிக்கையைத் தர முடியும்கிற உறுதி இருந்தால்தான், மத்தவங்க நம்பிக்கை மேல் கைவைக்கணும்.இல்லேன்னா அவங்கவங்களும் தங்களோட நம்பிக்கையோட வாழ்ந்துட்டுப் போகட்டும்.அதனால லாபம் இல்லாம இருக்கலாம்.நிச்சயமா நஷ்டம் இருக்காது."

"காதல் என்பது பெறுவது இல்லை;தருவது இல்லை;அடைவதும் இல்லை.அது... நிகழ்வது...!!"

"நம்பிக்கை இல்லாம ஒரு விஷயத்துல வேஷம் போடுறதைவிட,உண்மையா இருக்கிறதைத்தான் கடவுளும் விரும்புவார்.. ஒருவேளை அப்படின்னு ஒருத்தர் இருந்தா..!!"

"வார்த்தையில் வாழ்க்கையைத் தொலைத்த மனிதர்களின் எண்ணிக்கை இருக்கே..அது வானத்து நட்சத்திரங்கள் மாதிரி எண்ணி முடிக்க முடியாததோ..!!"

"பிரச்சனையைப் பேசாமல்,தீர்வையே தேடாமல்..கோபத்தையும்,அது பெத்தெடுத்த குழந்தையான மௌனத்தையும் தோளில் சுமந்துட்டு வாழ்க்கையைத் தொலைக்கலாமா..?"

"எல்லோரும் எல்லோரையும் எல்லா நேரத்திலும் தேடுவதில்லை.ஒவ்வொருத்தருக்கு உள்ளேயும் ஓர் உலகம் இருக்கும்.பெரும்பாலும் தேவைகள் வரும்போதுதான் நட்பு, காதல், உறவு, உணர்வு... எல்லாமே அர்த்தமுள்ளதா இருக்கும்."



------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: 'சொல்லாததும் உண்மை'
ஆசிரியர்: பிரகாஷ்ராஜ் 
எழுத்தாக்கம்: த.செ.ஞானவேல்
வெளியீடு: விகடன் பிரசுரம்
விலை: ரூ.115 
------------------------------------------------------------------------------------------------------------





வெள்ளி, 20 ஏப்ரல், 2012

நெஞ்சக் குளத்தில் நீ கல்லை எறிந்தாய்…!!



பக்கங்கள் படபடத்தபடி

திறந்து கிடக்கும்
புத்தகங்கள்….
தன்னிலை மாறி
ஒழுங்கற்று
கலைந்து கிடக்கும்
துணிகள்..
பாதி பக்கங்கள்
மட்டும் நிரம்பிய
பழைய டைரி..
நில்லாமல் இயங்கும்
கணினி…
நினைவுக் குளத்தில்
கல்லெறிந்தபடி
ஒலிக்கும்
பழைய பாடல்கள்…
முற்று பெற
முரண்டுபிடிக்கும்
வாக்கியங்கள்….
காற்றை சலனப்படுத்தும்
கண்ணீர்த்துளிகள்…
என் அறை முழுதும்…
சிந்திச்சிதறி…
நிரம்பி வழிகிறது…
நீ தவறவிட்ட
உனக்கான என் காதல்…!!!
Related Posts Plugin for WordPress, Blogger...