நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

திங்கள், 11 பிப்ரவரி, 2013

Into the wild (2007) - அடையாளங்களைத் துறத்தல்



"Two years he walks the earth. No phone, no pool, no pets, no cigarettes. Ultimate freedom. An extremist. An aesthetic voyager whose home is the road. Escaped from Atlanta. Thou shalt not return, 'cause "the West is the best." And now after two rambling years comes the final and greatest adventure. The climactic battle to kill the false being within and victoriously conclude the spiritual pilgrimage. Ten days and nights of freight trains and hitchhiking bring him to the Great White North. No longer to be poisoned by civilization he flees, and walks alone upon the land to become lost in the wild. - Alexander Supertramp May 1992 " 


நீங்கள் யார் ? 

இந்த கேள்விக்கு எத்தனை பதில்கள் இருக்க முடியும். 

என் பெயர் இன்னது… நான் இந்த ஊரைச் சேர்ந்தவன்… இன்னார் என் பெற்றோர்… இந்த இடத்தில் படித்தவன்… இவரின் நண்பன்… இந்த இடத்தில் பணிபுரிகின்றேன்… இந்த படிப்பு படித்திருக்கின்றேன்… 

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் மேற்கண்ட எதுவுமே ‘நீங்கள் யார்?’ என்ற கேள்விக்கான விடையே அல்ல.நமது பிறப்பு, வளர்ப்பு, பெற்றோர், ஊர், தெரு, கல்வி, பதவி, பணியிடம் என பல காரணிகளால் நமக்கு ஏற்பட்ட/ஏற்படுத்தப்பட்ட அடையாளாங்கள்.உண்மையில் சொல்லப் போனால் இந்த கேள்விக்கு நம்மால் பதிலளிக்கவே முடியாது.தத்துவரீதியான விளக்கங்கள் இருக்கலாம்.தர்க்கரீதியான விளக்கங்கள் அளிப்பது கடினம்.

இந்த அடையாளங்கள் எல்லாமே ஒரு வகையில் உங்களை அன்றாட வாழ்வில் இணைத்து வைத்திருக்கும் பிணைப்புகள் (Commitments) என்று சொல்லலாம். திடீரென ஒரு நாள் உங்களை கட்டிவைத்திருக்கின்ற அடையாளங்கள் அனைத்தையும் உதறித்தள்ளிவிட்டு இலக்கில்லாத ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கின்றதா?



இந்த எண்ணம் துள்ளலும் துடிப்புமான இருபத்தியோரு வயது இளைஞனுக்கு ஏற்படுகின்றது.அப்படி ஒரு பயணத்தை அவன் நிஜமாகவே மேற்கொள்கின்றான். க்ரிஸ்டோஃபர் ஜான்சன் மெக்கேண்ட்லஸ் (Christopher Johnson McCandles) எமரி பல்கலைக் கழகத்தில் தன்னுடைய பட்டமளிப்பு விழா முடிந்து வந்த அன்று முடிவு செய்கின்றான் இப்படியொரு பயணத்தை தான் மேற்கொள்ள வேண்டுமென்று.வங்கியில் எஞ்சியிருந்த சேமிப்பு மொத்தமும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு எழுதி கொடுத்தாயிற்று. தான் அந்த நாட்டின் குடிமகன் என்பதற்கான அத்தனை அடையாளங்களையும், கையில் உள்ள பணத்தையும் தீயிட்டுக் கொளுத்திவிட்டு… விரும்பிப் படிக்கும் சில புத்தகங்களையும் இயற்கையோடு இணைந்த வாழ்வில் உயிர்பிழைத்து வாழ தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு தன்னுடைய பழைய காரில் கிளம்புகின்றான். தனக்குத்தானே புதிய பெயரை (Alexander Supertramp) சூட்டிக்கொள்கின்றான்.

எந்த திட்டமிடலும் இல்லாத… எந்த கட்டுப்பாடுகளுமில்லாத… தன் வேகத்தையும் பாதையையும் தானே தேர்ந்தெடுக்கும் காட்டாற்று வெள்ளம் போல… நதி போல.. காற்றை போல ஒரு பயணம்…!! எத்தனை ஆச்சர்யங்கள்… எத்தனை சாகசங்கள் நிறைந்ததாக இருக்கும் இப்படி ஒரு பயணம்..??!! அலெக்ஸின் இறுதி குறிக்கோள் அலாஸ்கா செல்வது. காட்டின் நடுவே வாழ்வது.

ஜார்ஜியாவிலிருந்து கிளம்பும் அலெக்ஸ் அரிசோனா மாகாணத்தை அடையும்போது ஒரு திடீர் ஆற்று வெள்ளத்தில் அவனது கார் அடித்துச் செல்லப்பட்டுவிட அதன்பின் கிடைக்கும் வழிகளில்/வாகனங்களில் தனது பயணத்தை தொடர்கின்றான்.அவனுடைய பயணத்தில் அலெக்ஸ் முதலில் சந்திப்பது ஹிப்பி தம்பதிகளான ஜேன் புர்ரே (Jan Burres), ரெய்னி (Rainey) ஆகியோரை.அவர்கள் இருவரிடையேயான உறவுச் சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் அலெக்ஸை அவர்கள் இருவருமே பெரிதும் விரும்புகின்றார்கள். அவர்களோடு கொஞ்சம் நேரம் செலவழித்தபின் மீண்டும் தன் பயணத்தை தொடரும் அலெக்ஸ் பின் தெற்கு டக்கோடா (South Dacota) மாகாணம் வந்தடைகின்றான்.அங்கு வெய்ன் (Wayne) என்ற விவசாயியுடைய வயலில் கொஞ்ச நாள் வேலை செய்கின்றான். வேறொரு குற்றத்திற்காக காவல் துறையினால் அலெக்ஸின் நண்பர் வெய்ன் கைது செய்யப்பட்டுவிட வேறு வழியின்றி மீண்டும் தன் பயணத்தைத் தொடர்கின்றான்.



ஆற்றைக் கடக்க சிறு படகில் பயணம், பின் சரக்கு ரயில் என பலவாறாக பயணிக்கும் அலெக்ஸ் மீண்டும் அந்த ஹிப்பி தம்பதிகளை சந்திக்க நேர்கின்றது.அவர்களுடன் சில மாதங்களை கழிக்கும் அலெக்ஸ், தன் மீது காதல் கொண்டு தடுமாறும் ஹிப்பி கூட்டத்து பதின்பருவ பெண், யாருமில்லாமில்லாமல் தனிமையில் வாழ்கின்ற: அலெக்ஸின் மீது மிகுந்த பாசம் கொண்ட ஒரு முதியவர் என பலரையும் தன் பயணத்தில் சந்தித்து கடந்துவரும் அலெக்ஸ் இறுதியாக தனது வாழ்நாள் இலட்சியமாக கொண்டிருக்கும் அலாஸ்கா வந்தடைகின்றான்.

அங்கு ஒரு உடைந்து போன பேருந்தை அவனது வாழ்விடமாக மாற்றிக் கொண்டு அவன் நினைத்தபடி இயற்கையோடு இணைந்து வாழ்கின்றான். சிறிது காலத்துக்குப் பின் இயற்கையோடான அவனது போராட்டம் துவங்குகின்றது.மோசமான வானிலை காரணமாக அலெக்ஸுக்கு உணவு கிடைக்காமல் போகின்றது. கையிருப்பாக இருந்தவையும் தீர்ந்து போக அவனது உடல் வலிமை கொஞ்சம் கொஞ்சமாய் குன்றத் தொடங்குகின்றது.பசியை அடக்க ஒரு தாவரவியல் புத்தகத்தைப் பார்த்து ஒரு காட்டுச் செடியைப் பறித்து உண்கின்றான்.பசி மயக்கத்தில் தான் பறித்தது விஷச் செடி என அறியாமல் அதை உண்டுவிடும் அலெக்ஸ் பின் புத்தகத்தைப் பார்த்தபின்பே அதனை உணர்கின்றான்.அழுது புலம்பும் அலெக்ஸ் கிட்டத்தட்ட அந்த காட்டிற்குள்ளே உடைந்த பேருந்தினுள் தான் சிறை பட்டு போனதாக உணர்கின்றான்.அந்த செடி Slow Poison போல அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக கொல்ல ஆரம்பிக்கின்றது.மகிழ்ச்சி என்பது பிறரோடு பகிர்ந்து கொள்ளும்போது தான் முழுமையடைகின்றது என்பதனை உணர்கின்றான்.


அலெக்ஸ் பிழைத்தானா இல்லையா என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.க்ரிஸ்டோஃபர் மெக்கேண்ட்லஸ் என்ற இளைஞரின் வாழ்க்கையை/உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஜான் க்ராகர் (Jon krakauer) என்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட ‘Into the wild’ என்ற புத்தகமே பின்னாளில் I am Sam புகழ் ஷான் பென் (Sean Penn) திரைக்கதைஅமைத்து இயக்கி 2007ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த திரைப்படம்.படத்தின் ஒளிப்பதிவும் Non-Linear ஆக பயணிக்கின்ற திரைக்கதையும் நிச்சயமாக ஒரு மறக்கவியலா அனுபவத்தை நமக்கு தரும்.படத்தொகுப்பிற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் இது.வசனங்கள் குறிப்பிட்டு சொல்லப்படவேண்டியவை.ஒவ்வொரு வசனமும் ஒரு Quote போலவே மிகுந்த ஆழமான வார்த்தைகளைக் கொண்டிருக்கும். படத்தில் நிஜ க்ரிஸ்ஸாகவே வாழ்ந்திருக்கும் எமைல் ஹிர்ஷ் (Emile Hirsch) பற்றிக் குறிப்பிடாமல் இருக்கவே முடியாது.அத்தனை உணர்வுப் பூர்வமான நடிப்பு...!

இது நிஜம்

இது நிழல்

மொத்தத்தில்

Into the wild – அடையாளங்களைத் துறந்து அலைதலின் அழகியல்

படம் பார்க்காதவர்கள் கட்டாயம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லவும். 

Photos Courtesy: Original Uploaders

திங்கள், 4 பிப்ரவரி, 2013

Gran Torino (2008)

                  பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்ட ஹாலிவுட் ஆக்‌ஷன் திரைப்படங்களையும், Adam Sandler வகையறா நகைச்சுவை படங்களையே நான் விரும்பி பார்த்தாலும் அவ்வப்போது நண்பர்களின் பரிந்துரையின் பேரில் சில நல்ல படங்களையும் பார்த்துவிடுவதுண்டு.அப்படியொரு படமாக நான் கருதுவது தான் முரட்டு தாத்தா Clint Eastwood இயக்கி நடித்த ‘Gran Torino’.

    வால்ட் கோவால்ஸ்கி ஒரு முன்னாள் ராணுவ வீரர். போரின் போது செய்த கொலைகளுக்காக உள்ளூர குற்ற உணர்ச்சியோடும்வெளியில் வீராப்பும் வீம்புமாய் தன் வேலைகள் எல்லாவற்றையும் தானே ராணுவ ஒழுங்கோடு செய்துகொள்கின்ற வயதான ‘Korean War’ Veteran. சமீபத்தில் தனது மனைவியின் மறைவிற்குப்பின்  தனிமையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றவர். தன் இரு மகன்களோடும் அவ்வளவாக ஒட்டுதல் இல்லை. அவருடைய கார் தான் படத்தின் பெயரான ‘Gran Torino’. அமெரிக்கர்களின் ‘Muscle’ கார்கள் மீதான மோகம் ஒரு தனிக்கதை. உதாரணம் சொல்வதானால் நம் ஊரில் வெறித்தனமான புல்லட் (Bullet) ரசிகர்களை நீங்கள் கண்டிருக்கக்கூடும் கிட்டத்தட்ட அந்த மாதிரியான ஒரு craze தான் இது.

வால்ட் வசிக்கின்ற பகுதி (Neighborhood) பெரும்பங்கு தெற்காசிய நாடுகளிலிருந்து குடியேறியவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டுவிட அவர்களின் கலாச்சாரம் பிடிக்காமல் அவர்களோடு ஒட்டவும் முடியாமல் ஒதுங்கவும் முடியாமல் வேறு வழியின்றி வசித்துவருகின்றார். வால்ட்-ன் பக்கத்து வீட்டில் ஹ்மாங் (Hmong) என்ற இனத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வாழ்கின்றார்கள். அந்த வீட்டின் பதின்பருவ விடலை  சிறுவன் டாவ்(Tao) அவனைத் தூண்டிவிட்ட  லோக்கல் கேங்க்ஸ்டர் நண்பர்களிடம் தன்னை நிரூபிக்கும் பொருட்டு வால்ட்-ன் காரை திருட முயற்சி செய்ய சத்தம் கேட்டு துப்பாக்கியோடு வருகின்றார் வால்ட். அவரைக் கண்டவுடன் பயந்து ஓடிவிடுகின்றான்.

இப்படியாக வால்ட்-க்கு டாவ்-வின் மீதான ஒரு தவறான பிம்பம் தோன்றுகின்றது. மற்றொரு சந்தர்ப்பத்தில் டாவ்-வின் சகோதரியை ஒரு ரவுடி கும்பலிடமிருந்து காப்பாற்றி தன்னுடைய ட்ரக்கில் அழைத்துவருகின்றார் வால்ட். அந்த பெண்ணின் பெயர் ஸ்யூ (Sue). அவளின் துடுக்குத்தனமான பேச்சால் கவரப்படும் வால்ட் அவளிடன் டாவ் பற்றி கேட்க, அவன் மிக நல்லவன் ஆனால் சரியான வழிகாட்ட யாருமில்லை எனச் சொல்கின்றாள். அவனும் அவர்களின் இனத்தைச் சார்ந்த மற்ற இளைஞர்கள்போல தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து விடுவானோ என தான் அஞ்சுவதாகவும் கூறுகின்றாள்.

அதன்பின் டாவ்-வுக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும் பொறுப்பை தான் ஏற்றுகொள்ளுகின்றார் வால்ட். டாவ்-க்கும் வால்ட்டுக்கும் இடையேயான பழக்கம்… இருவரிடமும் ஏற்படும் மனமாற்றம்…லோக்கல் ரவுடிகும்பலால் டாவ்-வின் குடும்பத்திற்கு ஏற்படும் இடைஞ்சல்கள்…எல்லா பிரச்சனைகளையும் முடிவுக்கு கொண்டுவர வால்ட் எடுக்கும் இறுதி முடிவு என்னானது…?? இவையே படத்தின் மீதிக்கதை. படம் கொஞ்சம் மெதுவாகவே நகர்ந்தாலும் நம்மை உணர்வுப்பூர்வமாக இறுதியில் ஒன்றவைப்பது உறுதி. எனக்கு படம் ரொம்பவும் பிடித்திருந்தது.

படம் பார்த்தவர்கள் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்…! பார்க்காதவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்..! 
Review சுட்டி: http://www.guardian.co.uk/film/2009/feb/20/gran-torino-film-review-clint-eastwood
Images Courtesy: Original Uploader

வெள்ளி, 25 ஜனவரி, 2013

சென்னை புத்தகக் கண்காட்சி - 2013 - நான் வாங்கிய புத்தகங்கள்

2013ல் நான் எழுதும் முதல் வலைப்பதிவு இது.அதுவும் புத்தகங்கள் பற்றியே என்பதில் மெத்த மகிழ்ச்சி. அலுவலகத்தின் இடம்/ப்ராஜெக்ட் மாற்றம் காரணமாக நேரமெடுத்து எழுதுவதென்பதே குதிரைக் கொம்பாகிவிட்டது.அது போகட்டும்.சென்ற வருடங்களில் வாங்கிய புத்தகங்கள் ரொம்பக் குறைவு. அவையும் பெரும்பாலும் குறுநாவல்களாகவும், புனைவுகளாகவும் (Fiction) அமைந்துவிட்டபடியால் அவற்றை பற்றி பெரிதாய் எழுத விருப்பமில்லை. இருந்தும் என்னை ரொம்பவே கவர்ந்த மூங்கில் மூச்சுசொல்லாததும் உண்மை என ஒன்றிரண்டு புத்தகங்கள் பற்றி மட்டுமே எழுதியிருந்தேன். திரைப்படங்கள் ரொம்ப நிறையவே பார்த்துவிட்டாலும் ஒன்றும் எழுத நேரமில்லை.

இந்தாண்டு புத்தகத் திருவிழாவில் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகமே புத்தகங்கள் வாங்கினேன்.புனைவல்லாத புத்தகங்கள் மட்டுமே அதிகளாவில் வாங்கவேண்டுமென முடிவுசெய்துவிட்டபடியால் நிதானமாய் தேர்ந்தெடுத்து நினைத்தபடி வாங்க முடிந்தது.பட்டியல் கீழே

1. வட்டியும் முதலும் - ராஜூ முருகன் - விகடன் பதிப்பகம் - 215
2. விகடன் சுஜாதா மலர் - தொகுப்பு - விகடன் பதிப்பகம் - 165

3. கடவுள் - சுஜாதா - உயிர்மை பதிப்பகம் - 200
4. கிமு-கிபி - மதன் - கிழக்கு பதிப்பகம் - 130
5. ஓடும் நதி - கலாப்ரியா - அந்திமழை பதிப்பகம் - 135
6. மனுஷா மனுஷா - வண்ணதாசன் - சந்தியா பதிப்பகம் - 85
7. பல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி - உயிர்மை பதிப்பகம் - 110
8. ஜாலியா தமிழ் இலக்கணம் - இலவசக் கொத்தனார் - கிழக்கு பதிப்பகம் - 75

9. 60 அமெரிக்க நாட்கள் - சுஜாதா -  உயிர்மை பதிப்பகம் - 50
10. இன்னும் சில சிந்தனைகள் - சுஜாதா - உயிர்மை பதிப்பகம் - 85
11. உங்கள் உடல் பேசுகிறேன் - கீதா - புதிய தலைமுறை - 80
12. கண்டோம் கடவுள் துகளை - த.வி.வெங்கடேஸ்வரன் - அறிவியல் வெளியீடு - 40
13. அறிவாளியா? முட்டாளா? -  த.வி.வெங்கடேஸ்வரன் - பாரதி புத்தகாலயம் - 10
14. ஆயிஷா - இரா.நடராசன் - பாரதி புத்தகாலயம் - 15
15. கை - சுஜாதா குறுநாவல் வரிசை - உயிர்மை பதிப்பகம் - 40
16. மனைவி கிடைத்தாள் - சுஜாதா குறுநாவல் வரிசை - உயிர்மை பதிப்பகம் - 40
17. ஒரு சிக்கல் இல்லாத காதல் கதை சுஜாதா குறுநாவல் வரிசை - உயிர்மை - 25
18. விளிம்பு - சுஜாதா குறுநாவல் வரிசை - உயிர்மை பதிப்பகம் - 25


என்னடா ஒரே ‘சுஜாதா’ மயமாக இருக்கிறது என யாவரும் நினைக்கலாம். என்ன செய்வது இலக்கியத்தைப் பொறுத்தவரை நான் ஒரு கத்துக்குட்டியாதலால் வாத்தியாரைத் தவிர மற்ற எவரையும் பெரிதாக வாசித்து பழகவில்லை.புரியாததும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் :) கூடிய விரைவில் அடுத்த நிலைக்கு முன்னேறி தீவிர இலக்கிய வெறியனாகவும், கவிதை பித்தனாகவும் மாற என்னை ஆசிர்வதிப்பீர்களாக.


விகடன் பதிப்பகத்தை பொருத்தவரையில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு புத்தகம் நமது எதிர்பார்ப்பைத் தூண்டும். சென்றாண்டு சுகா அவர்களின் ‘மூங்கில் மூச்சு’, அதற்கு முந்தைய ஆண்டு அண்டன் பிரகாஷ் அவர்களின் ‘வருங்கால தொழில்நுட்பம்’. அவ்வகையில் இந்த வருடம் மிகுந்த எதிர் பார்ப்புடன் வாங்கிய புத்தகம் விகடனில் தொடராக வெளிவந்த ராஜு முருகன் அவர்களின் ’வட்டியும் முதலும்’. வ.மு பற்றி நான் அதிகம் சொல்லத் தேவையில்லை விகடன் படித்தவர்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும்... :) :)

இவைகளில் ‘விகடன் சுஜாதா மலர்’ படித்து முடித்தாயிற்று. இந்த புத்தகம் பற்றி சுருக்கமாகச் சொன்னால் ‘விகடனில் சுஜாதாவின் பல பரிமாணங்கள் வெளிப்பட்டிருக்கின்றன... இலக்கியம், ஆன்மிகம், அறிவியல், கட்டுரைகள், சிறுகதைகள் இப்படி எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம்.பின் ‘சுஜாதா’ அவர்கள் பற்றி மற்றவர்கள் எழுதிய கட்டுரைகள் ஆகியவற்றின் கலவை. என்னை மாதிரியான அன்னாரின் வெறித்தனமான ரசிகர்கள் கட்டாயம் வாங்கிப்படிக்கலாம். :) :) இப்புத்தகம் பற்றி விரிவாகப் பின்னாளில் எழுதுகின்றேன்.இப்போது ‘கடவுள்’ படித்துக் கொண்டிருக்கின்றேன்.

புத்தகக் கண்காட்சிக்கு மூன்று நாட்கள் சென்று வந்ததில் மனதில் தோன்றிய சில எண்ணங்கள் :) :)

  • தமிழ்நாட்டின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் ‘நீயா நானா’ கோபிநாத், இறையன்பு IAS, சுகி சிவம் அவர்கள், (அவங்க புக் மட்டும் தான் நெறைய விக்குது)
  • சென்னையின் பெரும்பாலான குழந்தைகள் தமிழ் புத்தகங்களே படிப்பதில்லை .தமிழே தெரியாதது காரணமாக இருக்கலாம் ( எல்லா பிள்ளைக கையிலேயும் Only English.. அதுசரி அவுக அப்பாம்மா வாங்கி குடுத்தா தான)
  • ரொம்ப தரமான இலக்கிய புத்தகங்கள் யாவும் குறைந்தபட்சம் 150 ரூபாயாவது இருக்கும் (காலக்கொடும... எல்லாம் Hardboundதேன் கொஞ்சம் கூட கட்டுபடியாகல)
  • பதின்பருவத்திலுள்ள 50 சதவிகித மாணவர்கள் IAS ஆக விரும்புகின்றார்கள். மீதமுள்ள 50 சதவிகிதத்தினர் எல்லா போட்டித் தேர்வுகளிலும், மேற்படிப்பிற்கான தேர்வுகளிலும்  வெற்றி பெற விரும்புகின்றார்கள். (நான் பார்த்தவரை TOEFL, IELTS, GRE, UPSC Prep materials ஜாஸ்தி)
  • புத்தகங்களைவிட சாப்பாட்டு கவுண்டர்களில் விற்பனை பெருமளவு அதிகமாக இருந்திருக்கும். (எவ்வளவு வெரைட்டி... என்னா தீனி)
  • இன்னும் பத்து வருஷமானாலும் சரி... ‘சுஜாதா’ அப்டிங்குற எழுத்தாளரை யாராலும் ஒன்னியும் அசைச்சுக்க முடியாது. வாத்தியார் வாத்தியார் தான்...!! :) :) :)


சனி, 20 அக்டோபர், 2012

பீட்சா - Don't Miss It...!!


’பீட்சா’....

ஏற்கனவே ’நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில பார்த்த இந்த படத்தின் இயக்குனருடைய குறும்படங்கள்...அப்புறம் இந்த படத்துடைய பாடல்களும் ட்ரைலரும் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்புல தான் முதல் நாளே இந்த படத்த பாத்துடனும்னு போனேன்.சும்மா சொல்லக்கூடாது..இயக்குனர் ‘கார்த்திக் சுப்பாராஜ்’ கொஞ்சம் கூட ஏமாத்தல... படம் சும்மா அட்டகாசமா இருக்கு..!
எவ்வளவு நாளாச்சு இப்டி பர பரன்னு ஒரு த்ரில்லர் பார்த்து.படத்தோட கதை என்னான்னா....

வெயிட்...அத சொன்னா படம் பாக்குற ஆர்வம் போயிடும்.அதனால படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. :):) 

ஹீரோ ‘விஜய் சேதுபதி’யை பொருத்தவரையில் இது அவருக்கு கெடைச்ச ஒரு செம்ம ப்ரேக்.அவரும் பெர்ஃபார்மன்ஸ்ல குறை வைக்காம பட்டைய கெளப்பிருக்காரு.குறிப்பா அந்த பேய் பங்களா சீக்வன்ஸ்...வாய்ப்பே இல்ல..ஒளிப்பதிவாளர் ’கோபி அமர்நாத்’ அவரோட முழுத்திறனுக்கும் அந்த ஒரு காட்சித்தொடரே போதும்...Extraordinary..!! 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பத்தியும் சொல்லியே ஆகனும்.’அட்டகத்தி’ல கலக்குனவரு தான் இவரு. இந்த மாதிரி ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்துல படம், பாக்குறவங்களை அப்படியே கட்டி போடுறதுதான் முக்கியம்.அந்த வேலையை திரைக்கதையே பாதி செஞ்சுடும்னாலும் ஒளிப்பதிவும் இசையும் தான்  அதை முழுமையாக்கும். அந்த பின்னணி இசையிலும் சரி... அங்கங்கு ஒலிக்கும் பாடல்களும் சரி...சும்மா அதகளம்.’மோகத்திரை’ பாட்டு மட்டும் தான் படத்துல முழுசா வருது.’ரம்யா நம்பீசன்’ படம் முழுக்க கொஞ்சம் காட்சிகளில் வந்தாலும் அழகா இம்ப்ரெஸ் பண்ணிட்டு போறாங்க.'மோகத்திரை’ பாட்டோட விஷ்வல்ஸ் செம்ம க்யூட். 

மற்ற நடிகர்கள் ஏற்கனவே குறும்படங்கள்ல நமக்கு அறிமுகமான முகங்கள் தான். SS Music பூஜா ஒரு ரோல் பண்ணிருக்காங்க.குறும்படம் எடுத்து அப்புறம் வெள்ளித்திரைக்கு வந்ததுல இந்த பட இயக்குனருக்கு முன்னோடி ‘காதலில் சொதப்புவது எப்படி?’ புகழ் பாலாஜி மோகன்.அந்த படத்துலேயும் பூஜா ஒரு சின்ன ரோல்ல நடிச்சிருப்பாங்க.இது செண்டிமெண்டா..என்னன்னு தெரியலை.. :) :)

படத்துலே ஏதும் குறையிருக்கா அப்டின்னெல்லாம் நீங்க யோசிக்குறதுக்கு இயக்குனர் நேரமே குடுக்கல.ரோலர் கோஸ்டர் ரைட் மாதிரி தட தடன்னு தொடங்கி அதே வேகத்துல படம் முடிஞ்சுடுது.குடுக்குற காசுக்கு படம் ஒர்த்து.
நல்ல Sound System உள்ள தியேட்டர்ல போய் பாருங்க.நல்ல அனுபவமா இருக்கும்.

சப்போர்ட்டிங்கான டெக்னிக்கல் விஷயங்கள் + ஒரு பிரமாதமான திரைக்கதை ரெண்டும் இருந்தா ஒரு கலக்கலான படத்தை தர முடியும்னு நிரூபிச்ச ‘பீட்சா’ படக் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

பீட்சா- Don't miss to get your slice..!!
Photos Courtesy: Original Uploaders
Related Posts Plugin for WordPress, Blogger...