நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

இரவும் யட்சியும்




எத்தனை அழகான பெண்ணாக இருந்தாலும் வாழ்வின் ஒரு பருவத்தில் மட்டும்தான் அழகாக இருக்கமுடியும். அப்பருவத்தில் கூட சில தருணங்களில்தான் அவள் அழகு முழுமையாக வெளிப்படும். அத்தருணத்தில் கூட சில கோணங்களில் சில அசைவுகளில்தான் அவள் அழகின் உச்சம் நிகழ்கிறது. ஒவ்வொரு அழகிக்கும் அவள் ஒரு உச்சமுனையைத் தொடும் ஒரு கணம் வாழ்வில் உண்டு. ஒரே ஒரு கணம். அவ்வளவுதான். அந்தக்கணங்களையே நீட்டிக் காலமாக்கினால் அதில் வாழ்பவள் யட்சி – அம்மா சொன்னாள்.

-யட்சி சிறுகதை - ஜெயமோகன்

யட்சிகளைப் போலத்தான் இரவுகளும். ஒருவனுக்கு அழகு. மற்றொருவனுக்குப் புதிர். வேறொருவனுக்கு திகில். தனியனுக்குத் துணை. ஆரவாரத்தின் முடிவு. அடங்கல்..! துலக்கம்..! 

சாதாரணமான வார்த்தைகள்ல அந்த உணர்வை கடத்திட முடியுமான்னு தெரியல. ஆனாலும் வார்த்தைகள் சாதாரணமானவை இல்லையே. நண்பர்களுடனான ஒரு சந்திப்புல விடிய விடிய ஏதேதோ பேசிட்டிருந்தோம். பிடிச்ச எழுத்தாளார். பிடிச்ச புத்தகம். அப்படி இப்படி...எதோ..! ஜெயமோகன் பத்தி பேச்சு வந்துது. அந்த கூட்டத்துல மூனு பேரு ஆசான் பக்தர்கள்ங்குறாதுனால வழக்கம்போல தரிசனம், மரபு, அது இதுன்னு ரசிச்சுப் பேச ஆரம்பிச்சாங்க. என்கிட்ட வந்து ஜெ.மோ படிச்சுருக்கியான்னாங்க. இல்லங்க ஆனா ‘விசும்பு’ தொகுப்புல வந்த கதைகளும் வெண்முரசுல சில பல அத்தியாயங்களும் நண்பர்களோட பரிந்துரையின் பேர்ல படிச்சிருக்கேன்னேன். அட..அதுமட்டுமில்லப்பா அவரு. நீ மொதல்ல ‘இரவு’ படி. அப்புறம் பேசுவோம்னாங்க. அன்னைக்கு மனசுல விழுந்த எண்ணம். பல மாசங்களுக்கு அப்புறம் தேடிப் பிடிச்சு இரவு வாங்குனேன். கொஞ்சம் கொஞ்சமா படிக்கவும் ஆரம்பிச்சேன். 

எதப்பத்தின நாவல்னு கேட்டா பொதுவா விலங்குகள்ல nocturnalனு சொல்லப்பட்ற இரவுலாவிகள் மாதிரி மனுஷங்கள்லயும் ஒரு கூட்டம் இருக்கு. இரவுகள்ல வாழ்ற சமூகம். அவங்களப் பத்தின நாவல்னு மேலோட்டமா பதில் சொல்லிடலாம். ஆனா நாவலுடைய உள்ளடக்கம் இதையும் தாண்டுனது. 

சமீபத்துல ”உரைநடை உலகத்தின் சர்வவிரோதி, இந்தக் கவிதைத் தமிழ்தான்"னு கி.ரா ஒரு பேட்டியில சொல்லியிருந்தாரு. கவித்துவமான வர்ணனைகள் உரைநடையுடைய தீவிரத்தைக் குறைச்சுடும்ங்குறது அவருடைய கருத்து. ஆனா சமயத்துல தான் அனுபவிச்ச ஒரு விஷயத்த அல்ல உணர்ந்த ஒரு விஷயத்த வேற ஒருத்தருக்கோ இல்ல பல பேருக்கோ கடத்தனும்னா அதுக்கு இந்த மாதிரியான வர்ணனைகள் தவிர வேற வழியே இல்லையோன்னு தோணும் எனக்கு. எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு தனித்துவமான கதை சொல்லும் பாணியும் வர்ணிக்கிற தொனியும் இருக்கும். “வெயில் விரிந்த சாலை ஒரு கறுத்து நீண்ட சர்ப்பம் போல..” ன்னு படிச்சாலே உங்க கண்ணு முன்னாடி எஸ்.ரா வராருல்ல ? அதான் அந்த signature..! அப்படி ஜெயமோகனுடைய signature பிடிபட்டது ’இரவு’ படிச்சப்ப தான்.ஒருத்தர் கதை சொல்லும்போது அந்த கதையைவிட அவர் சொல்லுகிற மொழி நடையும் கதை பேசியபடி நாம கடந்து போகிற பாதையும் ரொம்ப அழகா மனசுல பதிஞ்ச மாதிரி இருக்கு.


சரவணனோடு சேர்ந்து நாமும் இரவை ரசிக்கத் தொடங்குறோம். இரவுக்குக் கண்கள் பழகிப் போகுது. பகலை அருவருக்கிறோம். யட்சிகள் பத்தின வர்ணனைகளும், நிசாகந்திப் பூவின் வாசமும், கரிய நெடும் இரவின் பேரழகுமாய் நீலிமா என்னும் யட்சிமேல பைத்தியமா சுத்துறோம். வார்த்தைகள்ல தொடுதலும் நெருக்கமும் உணர்ந்து அவளுடைய அப்பட்டமான அழகைத் தாங்க முடியாம நாமளும் மனப்போராட்டத்துக்கு உள்ளாகுறோம். என்ன ஒரு உலகம்யா...! என்ன ஒரு ரசிப்பு. சர்வ நிச்சயமா சொம்ப அழகான காட்சியமைப்புகள் உங்கள் கண் முன்னே விரியும்.காயல் ஓடுகிற சத்தமும், கேரளத்து ஈரக்காத்தும், பசுமையும் , பரந்து விரிந்த இரவும், கவித்துமான மனிதர்களுமாக உங்களைச் சூழக்கூடும். 

நாவல்ல எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்ச சில பகுதிகளை மட்டு கீழ எடுத்துப் போட்டுருக்கேன். 

என் சொற்களை நான் கண்டுகொண்டேன். ”மனுஷனுக்கு பெரிய விஷயங்கள் வேண்டாம். அதான் அவன் மனசோட இயல்பு. ஒரு நூறுகோடி ரூபாய இல்லாட்டி நாலுகைப்பிடி வைரத்தை மனுஷன் கையிலே குடுத்தா பதறிப்போயிடுவான். பயத்திலே சாவான். அதுமாதிரித்தான். இந்த உலகம் வேற மாதிரி இருக்கு. இங்க எல்லாமே தீயா எரியற மாதிரி, உருகி வழியற மாதிரி இருக்கு. ஒரு சாதாரண கண்ணாடி டம்ளரைப்பாத்தாக்கூட அழகிலே மனசு மலைச்சுபோயிடுது. இது ஒரு கனவு…இந்தக் கனவிலேயே வாழமுடியுமான்னு தோணிட்டுது… கனவிலே இருந்து முழிச்சுக்கலேன்னா ஆபத்து. திரும்பி வரவே முடியாதுன்னு பட்டுது…வெல்…ஆக்சுவலி..”நான் என் வேகத்தை இழந்தேன் ”அதாவது, எனக்கு பைத்தியம் பிடிச்சிடுமோன்னு பயந்துட்டேன்”

அவள் கோணலாகப் புன்னகைசெய்தபடி ”ஏன் புடிச்சாத்தான் என்ன?”என்றாள் ”பைத்தியம்னா என்ன? மூளையிலே ஒரு நாலு ஜன்னலை கூடவே தெறந்து போடறது. இன்னும்கொஞ்சம் காற்றும் வெளிச்சமும் உள்ள வர்ரது. பைத்தியத்துக்கான சான்ஸ் இல்லாத யாருமே இல்லை. உள்ளூர பைத்தியமாகணும்னு கொஞ்சமாவது ஆசைப்படாதவங்களும் இல்லை. ஏன்னா எல்லா உச்சகட்ட அனுபவங்களிலேயும் நாம கொஞ்சம் பைத்தியங்களாத்தான் இருக்கோம்…” நான் மெல்ல மனம் அதிரப்பெற்றேன். அதை நானே உணர்ந்திருந்தேன். ”தேர் இஸ் நோ ஹாப்பினஸ் வென் யூ ஆர் ஸோபர்” என்றாள் அவள். நான் எழுந்து செல்ல விரும்பினேன். ஆனால் என் உடல் அங்கேயே இருந்தது



தாமஸ் மேஜைமேல் தாளமிட்டபடியே என்னைப் பார்த்தார். ”உன் குழப்பம் என்ன என்று எனக்கு தெரியவில்லை” என்றார். ”நீ அந்தப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள போவதாக விஜயன் சொன்னார். நல்ல விஷயம் என்று எனக்கும் பட்டது. இப்போது நீ அவளைப் பயப்படுகிறாய். ஒரு பெண் ஆணுக்கு முன் போடக்கூடிய வழக்கமான வேஷங்களை எல்லாம் அவளும் போடுவாளா என்று சந்தேகப்படுகிறாய். அந்தமாதிரி வேடம்போடாத பெண்ணுடன் எப்படி ஒரு ஆண் குடும்பத்தில் வாழமுடியும் என்று நினைக்கிறாய். அந்த வாழ்க்கை சாத்தியமல்ல என்பதனால் திருப்பி பகலுக்கே ஓடிவிடலாம் என்று திட்டமிடுகிறாய்…அதுதானே?”

அவர் மிக எளிமைப்படுத்துகிறார் என்று எனக்குப் பட்டது. ஆனால் அங்கிருந்தே அவர் பேச ஆரம்பிக்கலாமே என்று நினைத்து தலையசைத்தேன். ”அவள் ஒன்றும் அசாதாரணமான பெண் அல்ல. மிக சர்வசாதாரணமான பெண் மட்டும்தான். வெளியே பகலில் வாழும் எந்த ஒருபெண்ணையும் இரவில் கொண்டுவந்து வைத்தால் இப்படித்தான் இருப்பாள். ..” ”யட்சியாகவா?” ”ஆமாம். யட்சியை பகலில் கொண்டுவந்து வைத்தால் வீட்டுவேலை செய்ய வைக்கலாம்…” நான் தலையசைத்தேன்.

”இதோபார் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது சதவீதம் ஆண்கள் பெண்களை கவனிப்பதே இல்லை. இளமையில் அவர்களின் அழகு அவர்களின் பார்வையை திசை திருப்புகிறது. முதுமையில் அவர்களின் அழகின்மை திசை திருப்புகிறது. கவனித்துப் பார்த்த எந்த ஒரு ஆணும் வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் யட்சியைக் கண்டிருப்பான். தப்பவே முடியாது…” ”அவள் என்னை அருவருப்பதாகச் சொன்னாள்…” ”ஆமாம். ஆண்கள் வேறு பாலினம் என்பதற்காகவே பெண்கள் அவர்களை வெறுக்கிறார்கள். ஆண்கள் வேறு பாலினம் என்பதனாலேயே பெண்கள் அவர்களை விரும்பவும் செய்கிறார்கள்..”


இந்தப் புத்தகத்தைப் பத்தின முறையான அறிமுகமா இது இருக்கனும்னோ, அல்லது அலசி ஆராய்ஞ்சு காரணம் கற்பிக்கிற ஆய்வுக் கட்டுரையா இருக்கனும்னோ நான் இதப் பத்தி எழுதல. மொத்தமா படிச்சு முடிச்சப்புறம் அந்த உன்மத்தத்தையும் உணர்வுகளையும் கலவையா வார்த்தைகளா கொட்டிப் பேசுனா எப்புடி இருக்குமோ அப்புடி தான் எழுதியும் இருக்கேன்.

முறையான அறிமுகம் வேணும்னா இங்க படிச்சு தெரிஞ்சுக்கங்க.

’இரவு’ நாவலுடைய எல்லா அத்தியாங்களையும் அவரோட தளத்துலயே இங்க போய் படிச்சுக்கங்க.

கண்டிப்பா படிச்சுடுங்க...! ஒரு வாட்டியாவது,,! 


செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

இந்தியாவைச் சுற்றிவர 80 ரயில்கள்


80trains.tmblr.com
கொஞ்ச நாள் முன்னாடி தான் 'Around India in 80 trains'ங்குற புத்தகத்த படிச்சு முடிச்சேன். ஒரு நாள் தூக்கமில்லாம கண்டபடி ஏதேதோ பயணக்கட்டுரைகள எல்லாம் தேடித் தேடி படிச்சுட்டு இருந்தப்ப இந்த புத்தகம் பத்தி ஒரு ப்லாக்ல எழுதியிருந்தாங்க. உடனே ஆர்டர் பண்ணிட்டேன் . இங்கிலாந்துல இருந்து மோனிஷா (journalist) அவங்க வேலைய விட்டுட்டு இந்தியா முழுக்க ட்ரெய்ன்ல சுத்திப் பாக்கனும்னு முடிவு பண்ணி துணைக்கு ஒரு ஃபோட்டோக்ராஃபர் நண்பனையும் கூட்டிகிட்டு வராங்க. Jules verne எழுதுன 'Around the world in 80 days'ஓட தாக்கத்துல இந்தியா முழுக்க 80 ட்ரெய்ன்கள்ல சுத்தனும்னு முடிவு பண்ணி அதுக்கான திட்டத்தோட பயணத்த தொடங்குறாங்க. 

இந்திய ரயில்வே பத்தி அவ்வளவு தகவல்கள். படிக்கப் படிக்க மலைப்பா இருக்கு.கண்டிப்பா நம்ம நாட்டோட உள்கட்டமைப்புக்கும் வளர்ச்சிக்கும் மக்களோட வாழ்க்கைநிலை முன்னேற்றத்துக்கும் ரயில்வே ஒரு மிகப்பெரிய காரணியா இருந்துருக்குன்னு தோணுது.
'Palace on wheels'னு அழைக்கப்படுற கிட்டத்தட்ட ஃபைவ்ஸ்டார் ஹோட்டல் மாதிரியான மகாராஜா எக்ஸ்ப்ரஸ் தொடங்கி , ஊட்டி-டார்ஜீலிங் ஆகிய இடங்கள்ல இருக்குற 'toy trains',கூட்டம் நெருக்கித் தள்ளுற மும்பை மெட்ரோ ரயில், இந்தியாவுலேயே ரொம்ப அழகான பயணப்பாதையைக் கொண்ட ரயிலான 'Mandovi express' , நடமாடும் மருத்துவமனையான 'Lifeline express'னு எவ்வளவோ விதமான ரயில்கள்...!! ரயிலை தங்களோட வாழ்க்கையின் ஒரு பகுதியா மாத்திக்கிட்ட லட்சக்கணக்கான கோடிக்கணக்கான பயணிகள்..!!
http://images.catchnews.com/

எத்தனையோ ரயில்கள் பத்தின தகவல்கள் இருந்தாலும், இந்த லைஃப்லைன் எக்ஸ்ப்ரஸ் உருவான விதம் ரொம்ப ரொம்ப நெகிழ வெச்சுது. இந்த ரயிலோட கதை 1981ல, வருஷம் ஐக்கிய நாடுகள் சபை அந்த வருஷத்த சர்வதேச மாற்றுத்திறனாளர்கள் வருஷமா அறிவிக்கும்போது தொடங்குது. அப்போ எல்லா நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர்களும் ஒன்னு கூடிப் பேசுறாங்க. கிட்டத்தட்ட உலகம் முழுக்க 50 கோடி மாற்றுத்திறனாளிகள் இருக்காங்கன்னும் இதுல பாதி பேருக்கு மேல சரியான சிகிச்சை மூலமா குணப்படுத்தக் கூடியவங்கதான்னும் முடிவுக்கு வராங்க.
சரியா கவனிக்காம விட்டா இந்த 50 கோடி 2000ஆம் வருஷத்தப்ப 100 கோடியா மாறும்னு பயப்படுறாங்க. அதனால அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள் தனியார் நிறுவனங்களோட கூட்டு சேர்ந்து இதுக்கு ஒரு தீர்வு கொண்டு வரணும்னு முடிவாகுது

வளரும் நாடுகளில் கண்பார்வையின்மையை தடுக்குறதுக்காக பல வழிகள்ல உதவிகள் செஞ்சுட்டு இருந்த சர்.ஜான் வில்சன் கிட்ட இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்படுது. பிலிப்பைன்ஸுக்கு பயணமாக இருந்த அவர இந்தியாவுக்கு வரச்சொல்லி அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி கேக்குறாங்க. இந்தியாவுக்கு வந்த அவரு இங்க டாட்டா குழுமத்தோட கலந்து பேசி 'Impact India' ங்குற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்குறது.

சில வருஷங்களுக்கு அப்புறம்... இந்த Impact India உடைய அப்போதைய தலைவரான செல்மா லசாரஸ் (Zelma Lazarus) அவங்க நிறுவனத்துக்கு நன்கொடையா வழங்கப்பட்ட ஒரு நவீன மருத்துவ வசதிகள் கொண்ட பேருந்தை வாங்கிக்குறதுக்காக இந்தியா வராங்க. விமானத்துல அவங்க கூட பயணம் பண்ற டாக்டர். பேட்ரிக் ரொசாரியோ, அவரு வழக்கமா மலையேற்றத்துக்காக இமாலயா வரும்போது அங்க இருக்குற கிராமவாசிகள் கிட்ட அடுத்த முறை வரும்போது அவங்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள செய்றேன்னு வாக்குக் கொடுத்த விஷயத்த சொல்றாரு. அதக் கேட்ட செல்மா , அவங்களோட அந்த நடமாடும் மருத்துவமனை பேருந்த அவரைய எடுத்துக்க சொல்றாங்க. அதுமட்டுமில்லாம தானும் அவங்க கூட வர்ரதா சொல்றாங்க.

அடுத்த நாள் காலைலேர்ந்து கிராம மக்களுக்கு மருத்துவ சேவைகள் செஞ்சு முடிச்சு களைச்சுப்போயி கேம்ப் ஃபயர சுத்தி ஓய்வெடுத்துகிட்டு இருக்கும்போது , செத்துப் போனதா சொல்லி ஒரு சின்னப் பையன தூக்கிட்டு பதறியடிச்சுட்டு வராங்க ஊர் மக்கள். அந்தப் பையன பரிசோதனை பண்ண மருத்துவர்கள் அவன் சாகலைன்னும் அவனுடைய வயித்துல குடல்வால் (appendix) வெடிச்சிருக்குன்னும் கண்டுபிடிக்குறாங்க. பல மணி நேர போராட்டதுக்கு அப்புறம் அந்தப் பையனுக்கு சிகிச்சை குடுத்து பொழைக்க வைக்குறாங்க. மறுபடியும் எல்லாரும் களைச்சுப் போய் கேம்ப் ஃபயர சுத்தி உக்காந்திருக்கும் போது தூரத்துல மலை ரயிலோட சத்தம் செல்மாவுக்கு கேக்குது.

மேற்கொண்டு அவங்க வார்த்தைகள்லையே படிங்க.
"Suddenly, I said, 'How wonderful it would be if a train could come to these children.All night the idea thundered in my head. A train. A train that goes around India. A train that goes where it is needed. A train that prevents children from being crippled by polio. A train that prevents people from losing their sight to cataracts. A train...!!"

யோசிச்சவங்க அதோட நிக்காம உடனே டெல்லிக்குக் கெளம்பிப் போறாங்க. அப்போதைய ரயில்வே அமைச்சரான ஜார்ஜ் ஃபெர்னண்டஸ் இவங்களை சந்திக்க அஞ்சு நிமிஷம் அப்பாயின்மெண்ட் குடுக்குறாரு. செல்மா தன்னுடைய திட்டத்தை சொல்லி இதுக்கு ஒரு புது ட்ரெயின் வேணும்னு கேக்க, அதேல்லாம் முடியாது மூனு கேரேஜ் மட்டும் தான் இப்ப அப்ரூவ் பண்ண முடியும்னு சொல்றாரு.அதப் போய் பாத்துட்டு திரும்பி வாங்கன்னு சொல்லி அனுப்பி வைக்கிறாங்க. சரின்னு ஒத்துக்கிட்டு செல்மா அந்த கேரேஜ்களை பாக்க வராங்க. அவங்க கால் வெச்சு உள்ள ஏறும்போதே ஒடச்சுகிட்டு உள்ள போகுது. விதியை நொந்தபடி திரும்ப அமைச்சர பாக்க வராங்க.

“கேரேஜ்களைப் பாத்தீங்களா..?”

“பாத்தேன்.”

”சரி பண்ண எவ்வளவு செலவாகும்னு தெரியுமா ?”

“தெரியாது”

“ஒரு கோடி ஆகும். உங்ககிட்ட அவ்வளவு பணம் இருக்கா ?”

”இல்ல. ஆனா அதையெல்லாம் நான் பாத்துக்குறேன். நீங்க இந்த கேரேஜ்களை எடுத்துட்டு போறதுக்கு மட்டும் அனுமதி கொடுங்க போதும்.”

“சரி அப்புறம் உங்க இஷ்டம்”

செல்மா அடுத்து மும்பைக்குக் கெளம்பிப் போறாங்க. அங்க ரோட்டரி சங்கத்துல இருந்த அவங்களுடைய மருத்துவ நண்பர்கள் சில பேர்கிட்ட உதவி கேக்குறாங்க. மருத்துவர்கள் தங்களுடைய தொடர்புகளைப் பயன்படுத்தி மருத்துவ உபகரணங்கள் தர்ர நிறுவனங்கள் கிட்டப் பேசி இந்த மாதிரி ஒரு நோக்கத்துக்காக சில உபகரணங்கள் தேவைப்படுது, கொஞ்சம் சலுகை விலைல தரமுடியுமான்னு கேட்க அந்த நிறுவனங்கள் ஒத்துகிட்டு தேவைப்படுற எல்லா கருவிகளையும் அனுப்பி வைக்கிறாங்க.

இலவசமாகவே...!!!

https://www.tkbsen.in/wp-content/uploads/2016/07/Lifeline-Express-16072016.jpg


ஒரு வழியா லைப்லைன் எக்ஸ்பிரஸ் 1991ஆம் வருஷம் தன்னுடைய பயணத்தைத் தொடங்குது.  Cleft lipsனு சொல்லப் படுற அன்னப்பிளவுக்கான அறுவை சிகிச்சை, கண்புரை அறுவை சிகிச்சை, போலியொமைலெட்டிஸ்னு சொல்லப்பட்ற போலியாவால பாதிக்கப் பட்டவங்களுக்கான அறுவை சிகிச்சைன்னு இதுவரைக்கும் லட்சக்கணக்கான அறுவை சிகிச்சைகள் இந்த ட்ரெயின் மூலமா செய்யப்பட்டிருக்கு. இன்னைய தேதி வரைக்கும் கிட்டத்தட்ட 10லட்சம் இந்தியர்களுக்கு மேல பயனடைஞ்சிருக்காங்க. 25 வருஷங்களா தன்னுடைய பயணத்தை இந்தியாவின் குக்கிராமங்களுக்குக் கூட தன்னுடைய சேவையை வழங்கிட்டு வர்ர இந்த ட்ரெயினுக்கு இன்னொரு பேர் இருக்கு,,,!!

ஜீவன் ரேகா - தமிழ்ல உயிர் நாடி...!! எவ்வளவு பொருத்தமான பெயர் இல்ல..!!

இந்த லைஃப்லைன் எக்ஸ்பிரஸ் பத்தின BBCயுடைய டாக்குமெண்டரி கீழே




மோனிஷா ராஜேஷின் புத்தகத்தை வாங்க: http://goo.gl/57l2s2

லைஃப்லைன் எக்ஸ்ப்ரஸின் ப்ராஜக்டுகளுக்கு நீங்க ஏதும் பங்களிக்கனும்னு நெனச்சா : https://www.impactindia.org/make-an-impact.php


புதன், 29 ஜூன், 2016

தேவதைமொழிச் சாபம் - Soliloquy

உரையாடல்களுக்கு உடனிருக்காமல்
நினைவுகளை மட்டும் துணையிருத்தி
பறந்து போதல்
தேவதைமொழிச் சாபம்...!!

http://mangaworkshop.net/images/art/7235/27821.jpg
அன்பின் பார்ட்னர்,

நலமாகவே இருப்பாயென நம்புகிறேன். இடத்தைப் பழக்கிக் கொள்ளலும் மனிதர்களை அறிந்து கொள்ளலும் அத்தனை கடினமில்லையுனக்கு. எங்காயினும் யாராயினும் பறந்து திரிவாய் நீ... சிறகில்லாப் பட்சி...! நான் சாதாரணனல்லவோ.  நாட்களைக் கடத்தியபடி முடிவில்லாச் சாலைகளையும், எதிர்காற்றையும், இஞ்சின் உறுமலையும் உணர்ந்தபடி என்னைப் புதுப்பித்துக் கொள்கிற எனது நெடும்பயணங்களுக்காய் காத்திருக்கிறேன். காப்பி உறிஞ்சுவதை நிறுத்தவில்லை. உன் முன்னால் கொட்டிவிடும் பொருட்டு காலநேரம் பாராது சேர்த்துவைத்த கதைகளின் பாரம் தலைமேல் கனக்கிறது.ஆதலால் புத்தகங்கள் படிப்பதை தற்போதைக்கு நிறுத்தி வைத்திருக்கிறேன். உனக்குச் சொல்லும் பொருட்டு மூளையில் கோர்வையாக்கிய தனி நிகழ்வுகளை உதிர்த்துவிடாமல் அப்படியே காய்ந்துபோகவிட்டிருக்கிறேன்

உனக்கான மாலைநேரமாய் இருந்ததை நானும் எனது ஒரு கோப்பை காப்பியும் வலிந்திழுத்துத் தனியாய்ப் பழ(க்)க முயன்றுகொண்டிருக்கிறோம்.
நான் நல்ல கதைசொல்லியா எனத் தெரியாது. ஆனால் உன்னைக் காட்டிலும் பொறுமையாய்க் கதை கேட்கும் வேறெவளையும் எனக்குத்தெரியாது. இன்னமும் புத்தகங்கள் படிக்கிறாயா ? வாசனைகளை வியக்கிறாயா ?
மனிதப் பதர்களின் மன முரண்களை ஒற்றைப் புன்னகையில் கடந்துவிடுகிறாயா ? உனக்கான பிரத்யேகப் புன்முறுவலை யார் முகத்திலும் தேட விருப்பமில்லையெனக்கு. கிடக்கட்டும்...யாவும். அரற்றுதல் பொருட்டாய் விழுகிற வார்த்தைகளைக் கண்டுகொள்ளாதே. இந்த பொறுப்புத் துறத்தல் உன்னிடத்தில் தேவையில்லையெனத் தெரியுமெனக்கு.

அப்புறம், வார்த்தைகளின் பாரம் குறித்துச் சொன்னேனல்லவா ? அதற்காகத்தான் இந்தக் கடிதம். தாள்மடித்து உரையிலிட்டு முகவரி எழுதியனுப்புகிற மரபுக்கடிதமல்ல. கண் இமையில் ஒரு முடி உதிர்ந்தால்...பருத்தி வெடித்து பறந்த விதை கையில் அகப்பட்டால்.. கண்மூடி வேண்டியதைச் சொல்லி ஊதிப்பறக்க விடுவதுபோல் ஒன்று.
ஒப்படைப்பு, அரற்றல், ஓதல், உதறல், சிதறல்..... உளறல்..கோரிக்கை  ஏதோவொன்றெனக்கொள்..!

எனக்கான உனது வார்த்தைகளை எங்கே கொட்டிக் குவிக்கிறாய் ? கேட்பாருண்டா ? பின்னே... சிறப்பாய்ச் சொல்லிக் கொள்ளும்படி உன் இன்மை அன்றி வேறேதுமில்லை இங்கே. நான் முன்பொருமுறை உன்னிடத்தில் சொன்னது போல், நீயில்லாத வெற்றிடத்தை அற்றவைகளால் இட்டுநிரப்புதல் கூடுமா என்ன ? சக பைத்தியத்தைக் கண்டடைதல் சாதாரணமல்லவே.

போகட்டும்..!பின்னொரு யாருமற்ற பின்னிரவில் எழுதுகிறேன் உனக்கு. மகிழ்ந்திரு..! It was great running into you..!!

தேடித்திரியுமொரு தனியனாய்,
நான். 

வெள்ளி, 17 ஜூன், 2016

Underdog கழுகு


Underdog: 

-a competitor thought to have little chance of winning a fight or contest.

-a person or group of people with less power, money, etc. than the rest of society

இப்படித்தான் அர்த்தம் வருது  இந்த வார்த்தைக்கு..!!

பொதுவா “இவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான் மச்சி..” அப்டின்னு மத்தவங்க மட்டம் தட்ற ஆள Underdogனு சொல்லலாம்.

விளையாட்டு, சினிமா, அரசியல் எல்லாத்துலையும் நீங்க இந்த மாதிரி ஆளுங்கள பாக்கலாம், அவங்ககிட்ட நெஜம்மாவே திறமை இருந்து சுத்தி இருக்குறவங்க மட்டம் தட்றதுனாலேயோ அல்லது சரியான வாய்ப்பு கிடைக்காததுனாலேயோ அவங்க அந்த விஷயத்த சரியா பண்ணாம இருக்கலாம்.ஆனா என்ன பிரச்சனைன்னா போராடி ஜெயிச்சு தன்னை  நிரூபிக்குறவரைக்கும் சுத்தி இருக்கிறவங்க யாருமே நம்பவும் மாட்டாங்க மதிக்கவும் மாட்டாங்க.இந்த மாதிரியானவர்களுக்கு கண்டிப்பா ஒரு நோக்கம் இருக்கும்.அதை அடியுறதுக்கான பாதை எப்படிப்பட்டது... யார் என்ன சொல்லுவாங்க... நாம சரியான திசைலதான் போறோமான்னு எந்தக் கேள்விக்கும் பதில் தெரியாது. அதப்பத்தின கவலையும் இருக்காது.

 எனக்கு இப்படியான underdogs மேல ஒரு தனிப்பாசம் உண்டு. ஸ்கூல் படிக்கும்போது நானும் என்ன ஒரு underdogஆ நெனச்சுகிட்டது ஒரு காரணமா இருக்கலாம்.Physically ரொம்ப வீக்கான பையன். மூக்குக் கண்ணாடி வேற (1000+ பசங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஒருத்தன்மட்டும் தான் கண்ணாடி.. அப்போ எங்க ஊர்ல இதான் நெலம) So பசங்க எந்த விளையாட்டுலயும் சேத்துக்க மாட்டாங்க. சேத்தாலும் ஒப்புக்கு சப்பானி இல்லேன்னா umpire தான். இவனுங்க என்ன விளையாண்டாலும் நான் அம்ப்பயர் தான். கடுப்பா இருக்கும். திடீர்னு டெய்லியும் க்ரவுண்ட்ல ஓடலாம்னு ஆரம்பிப்பேன். ஒரு ரவுண்டு ஓடி முடிக்கிறதுக்கு முன்னாடியே மூச்சு இரைக்கும். அப்படியே மண்ல படுத்துகிட்டு அந்த ஆசைய விட்ருவேன். Kho kho டீம்ல போய் சான்ஸ் கேப்பேன். பி.டி வாத்தியார் கண்ணாடி..போடான்னு விரட்டி விட்ருவாரு. பசங்க விளையாடும்போது கூடப் போயி ஓடி விழுந்து வாரி முட்டிய தேச்சுட்டு வருவேன். 


லாங் ஜம்ப் தாண்டுறேன்னு தாண்டி   கண்ணா பின்னானு லேண்ட் ஆகி உள்ளங்கால் கிழிஞ்சு வருவேன். ஸ்கூல் க்ரவ்ண்ட் ஓரத்துல கெடக்குற டபுள் பார்ல தெனமும் போய் தலைகீழா தொங்கிகிட்டு பல்டி அடிச்சுட்டு கெடப்பேன். கையெல்லாம் தேய்ஞ்சு போவும். ஒரு கட்டத்துல கடுப்பாகி இது எதுவுமே நமக்கு வராதுன்னு முடிவு பண்ணி இலக்கிய மன்ற போட்டிகள்னு எங்க ஸ்கூல்ல நடக்குற எல்லா போட்டியிலயும் பேர் குடுத்து கலந்துக்க ஆரம்பிச்சேன். கதை, கட்டுரை, ஓவியம், பாட்டு, பேச்சு,  வினாடி-வினா, பக்தி இலக்கியங்கள் ஒப்புவித்தல், பாவேந்தர் கவிதைகள் ஒப்புவித்தல், அது இதுன்னு ஒன்னு விடாம கலந்துக்கவும் செஞ்சேன். பத்துல கலந்துகிட்டா எட்டு போட்டில கண்டிப்பா பரிசு அடிப்பேன். ரெண்டுலேர்ந்து மூனு முதல் பரிசாவது வரும். ஆண்டு விழால நம்ம பேர படிச்சு நாம ஸ்டேஜ் ஏறி பரிசு வாங்குறது இருக்கே அது ஒரு தனி சுகம். அன்னைக்கு பெத்தவங்க மத்தவங்க எல்லார் முன்னாடியும் நாம தான் ஹீரோ. அப்புறம் வருஷா வருஷம் அந்த obsession அதிகமாகி ஒரு கட்டத்துல படிப்ப விட இந்த காம்படிஷன் தான் முக்கியம்னு யோசிச்சு பன்னெண்டாவதுல புட்டுக்குற வரைக்கும் அடங்கல.

யாருக்கு எதை நிருபிக்குறதுக்காக இதப் பண்ணோம்னு யோசிச்சா இப்பவும் தெரியல. இப்ப யோசிச்சாலும் கல்லூரி, வேலை, வாழ்க்கைன்னு எந்த இடத்துலயும் என்னோட இந்த கேரக்டர் மாறவே இல்ல. எப்பவும் ஏதாவதொரு வகைல எதையோ competitive பண்ணி அதுல ஜெயிக்கிற அந்த சந்தோஷத்த அனுபவிச்சபடி போய்க்கிட்டே இருக்கேன். அது எனக்கு வெற்றியா இல்லையாங்குறதப்பத்தி மத்தவங்க என்ன யோசிக்கிறாங்கன்னு கருத்துல எடுத்துக்காம விட்ருவேன்


 ரைட்டு எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போய்ட்டேன். எதையாவது பாத்தா படிச்சா உடனே நம்மள அந்த எடத்து வெச்சுப் பாக்குறதுதான நம்ம புத்தி. பொதுவா biopicனாலே மொக்கையா (சில விதிவிலக்குகள் தவிர்த்து) தான் இருக்கும். அதுவும் விளையாட்டு வீரர்னா கேக்கவே வேணாம். இந்த மாதிரி underdog sports teams and sports people பத்தி ஹாலிவுட்ல நூற்றுக்கணக்கான படங்கள் வந்துருக்கு. பெரும்பாலும் ஒரே டெம்ப்ளேட் தான்.அப்படியான ஒரு படமா நெனச்சு தான் இந்த படத்த டவுன்லோட் பண்ணேன்.

Michael Edwards. இங்கிலாந்துல சாதாரண குடும்பத்துல பொறந்த சாதாரணமான பையன் தான். ஒலிம்பிக்ல கலந்துகிட்டு நாட்டுக்காக மெடல் வாங்கனும்ங்குறது தான் கனவு. ஒரு கட்டத்துல அப்படி இப்படி மனசு மாறி Ski-jumping தான் தனக்கான sportனு முடிவு பண்றாரு. அப்பா அம்மா வழக்கம்போல பையன நெனச்சு ரொம்ப வருத்தப்படுறாங்க. சுத்தி இருக்குறவங்களுடைய கேலி கிண்டலுக்கு நடுவுல குளிர்கால ஒலிப்பிக் போட்டில ski-jumping தகுதி அடைய என்ன பண்ணனும்னு யோசிச்சு ரொம்ப வருஷமா இங்கிலாந்துலேர்ந்து யாருமே ski-jumping ல கலந்துக்காம இருக்குறதுனால விதிமுறைகள் மாறாம இருக்குங்குறத தெரிஞ்சுக்கிட்டு அந்த தூரத்த தாண்டிடுறாரு. ஆனாலும் இங்கிலாந்து ஒலிம்பிக் கமிட்டி இவரு ஒலிம்பிக் போகக் கூடாதுன்னு முடிவு பண்ணி தகுதிக்கான தூரத்த இன்னும் அதிகப்படுத்திடுறாங்க. மனச விடாம தானே பயிற்சி எடுத்து கண்டபடி விழுந்து அடிபட்டு வேறொரு வாழ்ந்து கெட்ட பயிற்சியாளர் (நம்ம வுல்வரின் புகழ் Hugh Jackman) ஒருத்தரோட உதவியால ஒரு வழியா அந்த குறிப்பிட்ட தூரத்த தாண்டி ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதியடைஞ்சு 1988ஆம் வருஷம் கனடாவுல நடந்த போட்டியில கலந்துக்குறாரு.
அவரு ஜெயிச்சாரா இல்லையா... அட்லீஸ்ட் அடிபடாம வந்து சேர்ந்தாரா... 70 மீட்டர் தாண்டுறதுக்காக பயிற்சி எடுத்துட்டு 90 மீட்டர் உயரத்தையும் தாண்டனும்னு ஆசைப்பட்டா என்னாகும்..?? அவ்வளவு கஷ்டத்துக்கப்புறம் ஒலிம்பிக் போட்டியில கலந்துகிட்டதுக்கு ஏதும் பிரயோஜனம் இருக்கா இல்லையா...?
Courtesy: historyvshollywood.com

இதையெல்லாம் படத்த பாத்து தெரிஞ்சுக்கங்க...!!

கடைசில நீங்களே ஏதோ பெருசா சாதிச்ச மாதிரி ஒரு சந்தோஷம் வரும். கொஞ்சம் எமோஷனல் பார்ட்டியா இருந்து கண்ல ரெண்டு சொட்டு தண்ணி கூட வரலாம்...!!

Eddie the eagle..!!  ட்ரெய்லர் இங்க...!!



Related Posts Plugin for WordPress, Blogger...