நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

பாழ்மனம்

Courtesy: http://drawingschool.net
பாழ்மனம்
மனம் எந்த நொடியில் உடைந்துபோகுமோ
எனத் தெரியாத ஒரு கனத்தில் தான்
ஏதொவொரு பாடல்வரியோ
யாரோ ஒருத்தியின் புன்னைகையோ
எந்தப் பித்தனின் கவிதையோ
ஒரு பழைய புத்தகத்தின் தலைப்போ
காலில் மிதிபடுகிற பூவின் நிறமோ
வெகுதூரத்தில் தென்படும் மலைச்சிகரமோ, மொழிதெரியா ஊர்வழி செல்கிற சாலையோ
ஒரு பழைய மாநகரப் பேருந்தோ
கோவில் வாசலில் குவிந்து கிடக்கிற செருப்புகளில் ஒரு ஜோடி சிகப்பு செருப்புகளோ
ஓர் நிறம் மங்கிய கைக்குட்டையோ
சாலையோர மரத்தில் செதுக்கப்பட்ட ஏதோவொரு பெயரோ
நாடோடியொருவன் விற்றுச்செல்கிற மரவளையல்களோ
’பேரன்பின்’ எனத்தொடங்கி எழுதாமல் விட்ட கடிதம் தாங்கிய கசங்கிய தாளோ
நினைவுகளைச் சுண்டிவிடுகிற ஓர் நறுமணமோ
நுரைத்த காப்பியோடான ஓர் பீங்கான் கோப்பையோ
நிலவில்லாத முழுமையான ஓர் இரவோ
ஒழுங்கற்று கலைந்துகிடக்கிற பொருட்களோடான மேஜையோ
ஏதோவொன்று...
இவைகளில் ஏதோவொன்று

அல்லது புதிதாய் ஏதோவொன்று
நினைவெச்சங்களை சுமந்தபடி வந்து
முழுமையாய்க் கலைத்துப் போட்டு விடுகிறதென்னை...!

முழுதாய்த் தேர.. இன்னும் எத்தனை இரவுகள் தீருமோ..!

சனி, 18 மார்ச், 2017

பதிலற்ற கேள்விகள் - Exhortation

நான் பேசித்தீர்க்கிற வார்த்தைகளை
கேட்க யாருமற்ற பொழுதுகளே
கடிதமெழுத உந்தித்தள்ளி
உறக்கமற்ற இரவுகளைப் பரிசளிக்கின்றன.
https://in.pinterest.com/pin/523965737873453107/

பேரன்பின் பார்ட்னருக்கு,


மீண்டும் ஓர் கடிதமெழுத வாய்த்ததை எண்ணி மகிழ்வதா அன்றி வருந்துவதாவெனத் தெரியாத நிலையில் எழுதத் தொடங்குகிறேன் பார்ட்னர்.புத்தகங்களுள் மூழ்கிவிடமுடியாத, பாடல்களில் கரைந்துவிடமுடியாத, திரைப்படங்களில் தொலைந்துவிட முடியாத இரவுகள் மிகக் கொடுமையானவை . ஒரு பக்கம் மனம் முழுக்க மகிழ்ச்சியில் நிறைந்திருந்தாலும் மறுபக்கம் ஈடுசெய்யமுடியாத இருன்மையும் தனிமையும் சூழ்ந்தழுத்தித் திணறடிக்கின்றன. நான் ஓடிக்கொண்டிருக்கிற பாதையில் இலக்கென நான் நினைக்கிற இலக்குகளையும், வெற்றி என நான் நினைக்கிற வெற்றிகளையும், சாதாரணர்கள் தங்கள் அளவுகோல்களால் அளந்து ஒதுக்கி உதாசீனப்படுத்திவிடுகின்றார்கள். அன்னோரின் அறுவை சிகிச்சைக் கேள்விகளுக்கு அருஞ்சொற்பொருள் சொல்லும் நிலையில் நான் இல்லை பார்ட்னர். ”அதென்னடா.. விளக்கங்களுக்கும் பதில்களுக்கும் அப்பாற்பட்டு நிற்கிற ஆணவமுனக்கு ? கடவுளா நீ ?” எனக் கேட்பாயானால் வெறுமையாகச் சிரித்தபடி ”அற்பன்” என்பேன் பார்ட்னர்.

அவ்வப்போது நிறைகிற காரணமில்லாத கண்ணீருக்கே இன்னும் பதிலறியாதவன் நான். ஒரு கட்டத்துக்கு மேல் வாழ்க்கையாலும் சுற்றத்தாலும் ’வளர’ நிர்ப்பந்திக்கப் படுகிற கனவுலாவிகளால் நிஜங்களின் வெம்மையை கொஞ்சமும் தாங்கமுடியாது பார்ட்னர். நான் எப்போதும் பதிலளிக்கத் தயாராயிருக்கிற கேள்விகளை உன்னையன்றி யாரும் கேட்டதில்லை... கேட்பதில்லை...அல்லவா ? எப்போதும் தனிமையையும் துயரத்தையுமே உன்னோடு பகிர்கிறேனென நினைக்காதே. மனங்கொள்ளா மகிழ்ச்சியான ஓர் கனத்தில்  அருகே நீயில்லாமல் தவித்துப் போனேன் பார்ட்னர். ’சலங்கை ஒலி’ திரைப்படம் பார்த்திருப்பாயென நினைக்கிறேன். தனக்கான முதல் வாய்ப்பு கிடைத்துவிட்டதை அறிந்த அக்கனத்தில் அந்த மகா கலைஞன் தன் அருகிலிருக்கிற தேவதையின் கைகளைப் பற்றி முகம் புதைத்து குலுங்கியழுவான். அப்படியொரு நிகழ்வு நீயிருந்திருந்தால் நடந்தேறியிருக்கக் கூடும் பார்ட்னர்.

போகட்டும்; நடக்கவிருக்கிற நல்லவைகளுக்கு இஃதோர் தொடக்கமென மனந்தேற்றிக் கொள்ளுகிறேன். பதில்களையும் விளக்கங்களையும் குறித்த என்னுடைய நிலைப்பாட்டையே நான் உன்னிடத்திலும் கொண்டிருக்கின்றேன் பார்ட்னர். எவ்வகையிலும் நீயெனக்கு மறுமொழி சொல்லவேண்டிய நிர்ப்பந்தமில்லை. கதை கேட்க சற்றே நீ மனந்தந்தால் போதுமெனக்கு. உன் வானத்து நிலவொளியை நான் மறைக்க விருப்பமில்லை. உன் வானம் உனக்கு. என் வானம் எனக்கு, பொதுவாய் இரவின் கீழ் கதை கேள் அது போதும்.

பூஞ்சையான மனங்கொண்ட மனிதர்கள் எடுக்கிற அதிதீவிர முடிவுகளைக் குறித்தான அச்சமும் ஆச்சர்யமும் எப்போதும் எனக்கு உண்டு. அம்மென்மனங்களை அந்நிலைக்குள்ளாக்குமளவு என்ன துயரம் இருந்துவிடப்போகிறதென யோசித்தவனுக்கு இப்போதுதான் சாமான்யர்களின் உலகத்து நியதிகள் விளங்க ஆரம்பிக்கின்றன பார்ட்னர். காலவோட்டத்தின் ஓவ்வொரு சுழற்சியிலும் எனக்காக நான் செய்கிறவையன்றி இந்த உலகுக்கு நான் என்னை நிரூபித்துக்கொள்ளும்பொருட்டு செய்யப் பணிக்கப்படுகிறவற்றை எல்லாம் முற்றிலும் வெறுக்கிறேன். ” உங்கள் சில்லறை உலகில் நான் இல்லை. விட்டுவிடுங்கள்” என ஏதோவோர் கவிஞன் மன்றாடியதாய் நினைவு. நமக்கான கனவை எப்போதும் யாரும் காணவே முடியாது பார்ட்னர்.
எழுத்தாளர்களின், குறிப்பாய் கவிஞர்களின் பிறழ்வுநிலை குறித்து சமீபத்தில் நிறைய அறியநேர்ந்தது. பெரும் கவிஞர்களும் கனவுவாதிகளும் தங்களை புற உலகத்தினின்று விலக்கியே வைத்திருந்ததன் காரணம் விளங்கத் தொடங்குகின்றது பார்ட்னர். நானும் என்னை ஓர் கண்ணாடிக் கூண்டுக்குள் அடைத்துகொண்டு புற உலக சப்தங்களினின்று விடுபட்டு நடமாட விரும்புகின்றேன்.நானொன்றும் மகா படைப்பாளியென என்னைச் சொல்லிகொள்ளவில்லை. என் கனவுகளை நான் வாழும் பொருட்டே என்னைச் சார்ந்தோரின் கனவுகளையும் கொஞ்சம் வாழ்ந்துகொண்டிருக்கிற ஒரு அற்ப கனவுவாதி.  நானொரு அற்ப கனவுவாதி பார்ட்னர். அவ்வளவே..!!

மற்றோரின் கேள்விகட்கு பதிலில்லையே அன்றி எனக்கென கேள்விகள் இல்லாமலில்லை.உறவுகளைக் குறித்தும், பிரிவுகளைக் குறித்தும், மனிதர்களின் எண்ணவோட்டம் குறித்தும், கனவுகளைக் குறித்தும் ஏகப்பட்ட கேள்விகள் தொடர்ந்து எந்தன் தூக்கம் கெடுக்கின்றன. ஒர் உறவின் மென்னிழை எப்போது பின்னப்படுகிறதென்றும் எப்போது அறுந்துபோகிறதென்றும் யாராலும் சொல்லவே முடியாது பார்ட்னர். ஒரு கட்டத்துக்குமேல் எல்லா உறவுகளின் மேலான பிடிப்பும் அற்றுப்போய்விடுகின்றதல்லவா. என்னைப் பற்றிக் கொள்ள நீளாத கைகளை நானெதற்கு பற்றித்திரிய வேண்டும். கூடச் சிரிக்கவும், கூடிச் சிரிக்கவும், தேடி அழவும், தேவதைகள் வாய்க்கப்பெற்றவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள் பார்ட்னர்.

எப்போதோ... யாராரோ... யாராருக்காகவோ... எழுதிய கடிதங்களிலிருந்து எனக்கான வார்த்தைகளை பொறுக்கி சேர்த்துவைத்துக் கொள்கிறேன் நான். முகந்தெரியாதவர்களால் முகந்தெரியாதவர்களுக்காக எழுதப்பட்ட பிரியமும் கோபமும் சோகமும் காதலும் வாதையும் நிரம்பிய வார்த்தைகளே வலியிலுழலும் இந்த வெற்றுத் தனியனுக்கு பேராறுதல் பார்ட்னர். நில்லாத இசையாலும் நீளமான கடிதங்களாலும் சூழப்பட்டு  நெடிந்து நீள்கிற சாலையின் மேலே நான் மிதந்துகொண்டேயிருக்கிற கனவொன்றில் மூழ்க விரும்புகிறேன் பார்ட்னர்.உறக்கமே வாய்க்காதவனுக்கு கனவேது ?

நூற்றி சொச்சம் ஆண்டுகளுக்கு முன்பு பெரும் எழுத்தாளன் ஒருவன் இளங்கவி ஒருவனுக்கு சொன்ன வார்த்தைகளை  இங்கே சொல்ல விரும்புகிறேன் பார்ட்னர்.

”You must not let yourself be diverted out of your solitude by the fact that something in you wants to escape from it. Precisely this desire, if you use it calmly and judiciously as a kind of tool, will help you to extend your solitude over a greater expanse of ground."

"We know little, but that we must hold fast to what is difficult is a certainty that will never forsake us. It is good to be alone, for solitude is difficult; that something is difficult should be one more reason to do it. To love is also good, for love is hard" 

Letters to a Young Poet - Rainer Maria Rilke

இவற்றை எனக்கான வார்த்தைகளாய் எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறேன் பார்ட்னர். சாதாரணர்களற்ற என் தனிமை வெளியில் எனக்கான தீர்வை நானே முயன்று கொண்டிருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன் உனக்கு. எவ்வகையிலும் உன்னிடமிருந்து ஒரு பதிலை நான் எதிர்நோக்கவில்லை பார்ட்னர்.

என் வானம் எனக்கு. உன் வானம் உனக்கு.

மகிழ்ந்திரு..!!

தேடித் திரியுமொரு தனியனாய்,
நான்.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

யட்சியின் காதல் - Tête-à-Tête

Cortesy: http://cdn.pcwallart.com/images/abstract-painting-wallpaper-2.jpg
கனவில் வந்து கைப்பிடித்து அழைத்துச் சென்ற யட்சிக்கு,

எதிர்பாராத தருணத்தில் கிடைக்கிற அன்பைவிடவும், விரல்கோர்த்து நடக்கிறபோது உள்ளங்கைகளுக்கிடையே உருவாகிற கதகதப்பைவிடவும் ஒரு உன்னதத்தை, ஒரு வெற்றுத்தனியன் அனுபவித்திடக் கூடுமா என்ன ?

மேல் தளங்களில் காடுகளைக் கொண்டிருந்த விநோதக் கட்டடங்களின் பல நூறு படிக்கட்டுகளில் ஏறி இறங்கினோம் நாம். அடர்வனத்தின் அரசிபோல அடர் பச்சை உடையணிந்திருந்த நீ, ஒரு யானையின் சங்கிலியைப் பிடித்திழுத்துச் செல்கிற குழந்தைபோல என் கரம் பற்றியிழுத்துப் போனாய். எத்தனை தூரம் நடந்திருப்போம்; எத்தனைக் காடுகள் கண்டிருப்போம்..! எதுவும் பதியவில்லை எனக்கு. வலியை ரசித்து அனுபவித்துப் பழகியவனாகையால் இன்பத்தை உணரமுடியாது திணறிக்கொண்டிருந்தேன் நான்.  தேவதைகளையும் சாத்தான்களையும் போலல்லாது யாருடைய வரையறைக்கும் உட்படாதவர்கள் யட்சிகள். யட்சியின் அன்பை ஒரு எளியவன் பெறுவது அத்தனை சுளுவா ? வரங்களைப்போலவும், சாபங்களைப்போலவும் வழங்கிவிடமுடியாதது உன் அன்பு. தேடித்தேர்ந்து கூடச்சேர்ந்து மூழ்கித் திளைக்கும் ஒரு பெருங்கடலின் பேரலை நீ. உன்னில் தஞ்சமடைந்த, உடைந்த ஒற்றை மூங்கில் நான்.

கொம்பு தேடாத காட்டுக் கொடி போல,
யுகங்களுக்கொருமுறை பூக்கிற ஒற்றைப் பூ போல,
ஒன்றைப் போல மற்றொரு இறகைக் கொண்டிருக்காத தொலைதேசத்துப் பறவை போல,
மழைக்குப் பின்னான பனி சூழ் பிற்பகலின் மென் வெப்பம் போல,
மனிதத்தடம் இல்லாப் பெருவனத்தின் சுனை நீர் போல,
வார்த்தைகளில் அடங்காத பாடல்போல,
யாழின் நரம்புகளால் மீட்ட முடியாத நாதம்போல,
எல்லாவற்றையும் இழுத்துக் கொண்டு சுழித்தோடுகிற காட்டாறு போல,
ஒற்றைக் கண்ணீர்த் துளியுடன் அரும்புகிற புன்னகை போல,
மலைச்சிகரங்களின் பாறைவெடிப்புகளில் விழுந்தோடுகிற கோடை மழை போல,
பகுத்துக் கூற முடியாத வண்ணத்தின் ஒளிக் கீற்று போல,
எந்த வரைமுறைக்குள்ளும் வர்ணனைக்குள்ளும் அடக்கமுடியாத யட்சி நீ.

எனக்கான நிழலை உன் ஒற்றைத் தொடுகையில் உணர்வேனென நினைந்தேனில்லை. எதிர்பாரா முதல் முத்தத்தின் தருணத்தில் சுற்றம் மறக்கிற பேதைக் காதலன்போல உன் முகம் பார்த்து அந்த அடர்கானகத்தில் உருகித் தொலைந்துகொண்டிருந்தேன் நான். இதயம் படபடக்க, உடல் விதிர்த்து, நரம்புகள் அதிர்கிற அந்த ஒற்றைக் கணமே, கனவுலகுக்கும் நினைவுக்குமான சுவற்றை உடைக்கிற நொடி. யட்சியின் அருகாமை வேறென்ன செய்யும் என்னை?

கனவில் நிகழ்கிற நம் உரையாடல்கள் பெரும்பாலும் குரலற்றவைகள்தான். ஆனாலும் காடதிர நீ சிரிக்கிற ஓசையை உணர்ந்துகொள்ளமுடிகிறது. பிரிவும் பிரிவின் நிமித்தமுமாய்க் கடந்து கொண்டிருந்தவனின் நெடும்பயணத்தில் நினைத்துப் பார்த்துச் சிரித்துக் கொள்கிற நொடிப் பொழுதுகளை கனவாய்ப் பெற்றவன் எத்தனை அதிர்ஷ்டசாலி தெரியுமா ? ஒரு பிறவி நீச்சலுக்கிடையேயான இளைப்பாறல் அது. ஈரக்கூந்தலோடு, கண்கள் சிரிக்க, காதுமடல் சிவக்கப் பேசுகிறவளின் முன்பு வார்த்தைகளா தோன்றுமெனக்கு ?
உன் முன் முழந்தாளிட்டு உன் பாதத்திலல்லவா முத்தமிடத் தோன்றும்.
என் கண்ணீரும் புன்னகையும் ஒன்றாய்ச் சந்திக்கிற அற்புதக் கணமது.

யட்சிகளைக் குறித்த வர்ணனைகளைக்காட்டிலும் வசீகரமானவள் நிஜ நீ. சிரித்துச் சிவந்த உன்னையன்றி,  சினந்துச் சிவந்தவளைக் கண்டேனில்லை. பறக்க சிறகு வாய்த்தவள் என்னை நடத்தி அழைத்துச் சென்றதேனாம்? அடுத்த கனவிலேனும் என்னைச் சுமந்து பறந்து சென்றுவிடேன். 

கவிஞர்களுக்கும் காவியங்களுக்கும் நடுவே  கடிதத்தில் பேசவிரும்புகிறவனுக்கு, யட்சியின் காதலைவிடவும் எழுத உவப்பானது வேறேது...!! இப்போது உணர்கிற நிறைவு என்றென்றைக்குமான முழுமையா எனத் தெரியாவிட்டாலும், வெறுமையை சற்றேனும் இல்லாமல் ஆக்கிய யட்சிக்கு...

முத்தங்கள்...!!

தேடித் திரிந்தாலும்... 
இன்று தீராக் காதலனாய், 

நான்...!
Courtesy: wallarthd.com

ஞாயிறு, 15 ஜனவரி, 2017

கறுப்புக் குதிரை - Demonetization


Demonetization, பணமதிப்பிழப்பு, கறுப்புப் பணம், Cashless Economy..!!

சமீபத்தில் நாம் அனைவருமே மிக அதிகம் கேட்ட/ கேள்விப்படுகிற வார்த்தைகள் இவை. சரியான திட்டமிடலும் முறையான வழிமுறைகளும் இல்லாமல் தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல் முடிவெடுக்கிற ஒரு தலைமையைக் கொண்டிருக்கும் அரசாங்கத்தால்  நாடுமுழுக்க சாமானியர்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள் என பார்த்துக் கொண்டிருக்கிறோம். 86% சதவிகிதம் புழக்கத்தில் இருந்த 500-1000 ரூபாய் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்தன. ATMகளிலும் வங்கிகளிலும் தங்கள் பணத்தை எடுப்பதற்கே மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. சில்லறை வர்த்தகம் செய்பவர்கள், சிறுவணிகர்கள், நேரடியான பாதிப்புக்குள்ளானார்கள்.ரிசர்வ் வங்கியும் பிரதமரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி கைகாட்டி குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 150 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்

What went wrong ? பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆரம்பத்தில் வரவேற்றவர்கள் கூட பின்னாட்களின் பொதுமக்களுக்கு ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களாலும், implementation சொதப்பல்களாலும் மிக மோசமாக விமர்சிக்கத் தொடங்கினார்கள். முதலில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கையாகச் சொல்லப்பட்டு, பின்பு cashless economyக்கான தொடக்கம் என்று அரசாங்கத்தால் சப்பைக்கட்டு கட்டப்படுகிற இந்தத் திட்டத்தின் அசலான நோக்கம் தான் என்ன ? இந்தியாவின் பொருளாதார வளார்ச்சிக்கும் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் இது எந்த அளவில் பயன்படும் ? கறுப்புப் பணம் மொத்தத்தையும் பதுக்கியவர்கள் ரூபாய் நோட்டுகளாகவே வைத்திருப்பார்கள் என நம்பும் அளவுக்கு அரசாங்கம் அப்பாவியா ? சுற்றி சுழல்கின்றன கேள்விகள். நமக்குத் தெரியவேண்டியது என்ன ? 

இனி கறுப்புக் குதிரை புத்தகத்தில்...

கறுப்புப் பணம் என்றால் என்ன? உலகம் முழுகம் முழுதும் எந்தெந்த வழிகளில் எல்லா கறுப்புப் பணம் உண்டாகிறது என்பதில் தொடங்கி, ஸ்விஸ் வங்கிக் கணாக்குகள், ஹவாலா மோசடி, வங்கிகள் வழியாகவும் காப்பீட்டு நிறுவனங்கள் வழியாகவும் கறுப்புப் பணத்தை வெளுப்பாக்குகிற (laundering) வேலை, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் கட்டற்ற வர்த்தக மண்டலங்கள் வழியாக செய்யப்படுகிற laundering, பங்குச் சந்தைப் பரிமாற்றங்கள் வழியாக நிகழ்கிற தில்லாலங்கடி வேலைகள் என கறுப்புப் பணம் உருவாகிற/வெளுப்பாக்கப்படுகிற அத்தனை வழிமுறைகளையும் தரவுகளோடு விளக்கிச் சொல்கிறார் நரேன். 

அதன் பின் நவம்பர் 8 நிகழ்த்தப்பட்ட Demonetization என்கிற பொருளாதார பேரழிவு குறித்து விளக்கிவிட்டு அதன் விளைவுகளையும், நாடுமுழுவதும் ஏற்பட்ட பாதிப்புகளையும் தற்போதைய நிலையையும் விளக்கிச் சொல்கிறார். ரொக்கமில்லாப் பொருளாதாரத்துக்கான எந்தவிதமான உள்கட்டமைப்பும் வசதிகளில் முழுமையாக இல்லாத நம் நாட்டில் இது எந்த அளவு சாத்தியம் என்கிற கேள்வி நம் முன் வைக்கப்படுகின்றது. நீ உன் பணத்தை இப்படித் தான் செலவளிக்க வேண்டும், இவ்வளவு தான் கையாள வேண்டும் என்று அரசாங்கம் தனிமனிதர்களுடைய உரிமைகளில் தலையிடுவது பற்றியும் கேள்வி எழுப்பப்படுகின்றது. இன்னும் ஏகப்பட்ட தகவல்கள். இத்தனையும் 20 தலைப்புகளில் 136 பக்களுக்குள் சொல்லிவிடும் முயற்சியே பாராட்டுக்குரியது.

பொருளாதாரம் குறித்த அறிவும், உலகளாவிய பார்வையும் நாலைந்து டேப்லாய்ட் கட்டுரைகளை நுனிப்புல் மேய்வதால் மட்டும் வருவதில்லை. தீவிரமான ஆய்வும் ,பெரும் உழைப்பைக் கோருகிற வாசிப்பும், பல வருட கூர்நோக்கும் மட்டுமே பொருளாதாரம் குறித்த ஒரு தெளிவான பார்வையையும் உருவாக்கும். அப்படிப்பட்ட தெளிவுடைய ஒருவர், தான் புரிந்துகொண்ட விஷயங்களை மிக மிக எளிமையாகவும் வாசிக்கிற எல்லா தரப்பு மக்களுக்கு புரியும் வகையில் கொண்டு வந்திருக்கிற இந்தப் புத்தகம் நிச்சயம் தமிழுக்கு ரொம்ப புதிய முயற்சி, Wall street journal, Bloomberg  மாதிரியான தளங்களில் வெளியாகிற கட்டுரைகளின் தரத்தோடும்/தரவுகளோடும் வாரப்பத்திரிக்கை வாசகர்களுக்கும் புரியக்கூடிய எளிமையான எழுத்துநடையோடும் வெளிவந்திருக்கிற ‘கறுப்புக் குதிரை’ ஒரு Must Read...!! 
வாழ்த்துகள் நரேன் அண்ணா..!! :) 

‘கறுப்புக் குதிரை’ - நரேன் ராஜகோபாலன்
நவி பதிப்பகம் - ரூ.150/-

ஆன்லைனில் வாங்க - இங்கு  க்ளிக்கவும்
அல்லது ‘அரவிந்தன்’ அவர்களை 770 847 9380 ல் அழைக்கவும்
Related Posts Plugin for WordPress, Blogger...