நானும் என் உலகும்
ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021
கர்ணன் - கிடாக்குழி மாரியம்மாள் - கண்டா வரச்சொல்லுங்க
வியாழன், 21 ஜனவரி, 2021
பட்டக்காடு - அமல்ராஜ் பிரான்சிஸ்
”மனிதர்கள் தங்களாகக் கட்டமைத்து வைத்திருக்கும் அத்தனை பிரிவினைகளையும் கடல் போக்கிவிடுகிறது.அத்தனை அல்பத்தனங்களையும் அடித்து நொறுக்கிவிடுகிறது. அத்தனை மனிதர்களையும் ஒரே தட்டில் வைத்துப் பரிவோடு ஆட்டுகிறது. கடல் கொடுக்கும் உயிர்ப் பயம் அத்தனை மனிதர்களுக்கும் பொதுவானதுதாம். தன் சினத்திற்கு முன்னால் இந்துவும் ஒன்றுதான், கிறிஸ்தவனும் ஒன்றுதான் என்கிறது கடல்”
- பட்டக்காடு, அமல்ராஜ் பிரான்சிஸ்
பட்டக்காட்டைச் சேர்ந்த ஜோசஃப் கணக்குப் பிள்ளையின் அறிமுகத்தோடு தொடங்குகிறது முதல் அத்தியாயம். அதன் பின் அவருடைய மகனும் கதையின் நாயகனுமான மதன் குறித்த அறிமுகம். ஓரிரு அத்தியாயங்களில் கயல் என்ற பாத்திரத்தின் அறிமுகமும் அதனைத் தொடர்ந்த வர்ணனைகளும் வந்தபோது, இலங்கைப் பின்னணியில் ஒரு தேய்வழக்காகிப்போன காதல் கதையாக இந்த நாவல் இருந்துவிடுமோ என ஐயப்பட்டேன். நல்லவேளை அப்படியெதுவும் ஆகவில்லை.
மதன் என்னும் மீன்பிடி கிராமத்து இளைஞன், அவனுடைய சுற்றம், நட்பு, காதல், அன்றாட வாழ்க்கை, போராட்டங்கள் என மதனைச் சுற்றித்தான் மொத்த நாவலும். அவருடைய பார்வையிலேதான் நமக்கு கதை சொல்லப்படுகிறது. மீன்பிடித்தொழிலுக்கு இணையாக விவசாயமும் செழித்த இடமாகவும், கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் அதிகம் வாழ்ந்த ஊராகவும் பட்டக்காடு நமக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது. இலங்கையில் இயக்கக் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப்பகுதி ஊர்களைப் போலல்லாது பட்டக்காடு இலங்கை அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி என்றும் அறிந்துகொள்கிறோம்.
ஆரம்பத்தில் மதன் தன் நண்பர்களுடன் மீன் பிடிக்க கடலுக்குள் செல்கையில் கொண்டாட்டத்துடனும் சாகச மனநிலையுடனும் தொடங்கி, பின் படிப்படியாக கதையோட்டத்தின் தீவிரத்தன்மை கூடிக்கொண்டே போகிறது. தொடக்க அத்தியாயங்களில் கதையினூடாகவே பட்டக்காட்டு மீன்வாடிகள், சம்மாட்டிகளின் தொழில்முறை, கட்டுவலைக்கும் சுருக்கு வலைக்குமான வேறுபாடுகள், கடல்பரப்பின் காற்றோட்டம், கட்டாக் கருவாடு, ரோலர் படகுகளால் பாதிக்கப்படும் சிறு மீனவர்களின் வாழ்வாதரம் என பலவற்றைப் பற்றி பேசியிருக்கிறார் அமல்ராஜ் . அது போக குணம் பரியாரி, பர்னாந்து மாமா,’வட்டி’ தேவா சம்மாட்டி என பல சுவாரஸ்யமான பாத்திரங்களைக் குறித்த உபக்தைகளும் உண்டு.
இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில், போர் உச்சம் பெற்ற நிலையில் எதிர்பாராத ஒரு நிகழ்வின் காரணமாக மதன் அவனுக்கு பரிச்சயமில்லாத புதிய ஊரில், சொந்த ஊருக்குத் திரும்பவோ குடும்பத்தினரைக் காணவோ வழியில்லாமல், முற்றிலும் வேறுமாதிரியான ஒரு வாழ்வை வாழ நேர்கிறது. போரினால் நேரடியாக பாதிப்படையாவிட்டாலும் அரசுக்கட்டுப்பாட்டு பகுதிகளில் வாழ்ந்த மக்களும் மறைமுகமாக நிறைய துன்பங்களுக்குள்ளாவதை, மதனின் குரலில் சொல்லியிருக்கிறார்அமல். மதன் பாதிக்கப்பட்டவர்களின் குரலாக, ஒரு சாமானிய குடும்பப் பின்னணி கொண்ட இளைஞனாக இலங்கை அரசையும் இராணுவத்தையும் விமர்சிக்கும் அதே அளவு, இயக்கச் செயல்பாடுகளையும் விமர்சிக்கிறான்.
நாவலின் பிற்பகுதி அத்தியாயங்களைக் குறித்தும், இடங்களைக் குறித்தும் என்ன சொன்னாலும் கதையை வெளிப்படுத்துவது போலாகிவிடும் என்பதால், மீதிக் கதையை புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளவும். :) கிட்டத்தட்ட 500 பக்கங்களை கொண்ட நாவலாக இருந்தாலும், அமல்ராஜின் எளிமையான மொழிநடையினால் கொஞ்சமும் ஆர்வம் குறையாமல் படித்து விட முடிகிறது. தொடக்க அத்தியாயங்களில் இளமையும் எள்ளலும் கிண்டலுமாய் கதை நகரும்போதும் சரி , தீவிரத்தன்மையுடன் போருக்குப் பிந்தைய விஷயங்களைப் பற்றி விவரிக்கும்போதும் சரி ஒரே மாதிரியான தெளிவான மொழிநடையைக் கையாண்டிருக்கிறார்.
இலங்கையை பின்னணியாகக் கொண்டு தமிழில் இதுவரையிலும் பல படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் சார்ந்த
கதைக்களங்கள், இயக்கக் கட்டுப்பாட்டு பகுதிகளில் வாழ்ந்தவர்களின்அனுபவங்கள், போரினால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வலிகளையும் பேசிய கதைகள்
என அத்தனையையும் படித்திருப்போம். ஆனால், இதுவரையிலும் அதிகம் பேசப்படாத
மன்னார் பகுதியை கதைக்களமாக எடுத்துக் கொண்டு பட்டக்காடு என்னும் மீனவ
கிராமத்தைச் சுற்றி ஒரு நல்ல நாவலை எழுதியிருக்கின்றார் அமல்ராஜ் பிரான்சிஸ். இது அவருடைய முதல் நாவலும் கூட. வாழ்த்துகள் அமல்ராஜ்...!
பட்டக்காடு - அமல்ராஜ் பிரான்சிஸ்
எழுத்து பிரசுரம் - புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இணைப்பு இங்கே
வியாழன், 24 டிசம்பர், 2020
அத்தாரோ - சரவணன் சந்திரன்
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் அமைந்துள்ள ‘Christ the redeemer' சிலையை நிச்சயமாக நீங்கள் ஏதோவொரு செய்தித்தாளிலோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியிலோ பார்த்திருக்கலாம். கிட்டத்தட்ட அந்த சிலையின் அமைந்திருக்கிற மலை கிராமத்தின் அதே மாதிரியான ஒரு புவியியல் அமைப்பைக் கொண்ட ‘அத்தாரோ’ எனும் மலைத் தீவு தான் கதைக்களம். மேலே மலையும் காடுமாகவும், கீழே அடிவாரத்தைச் சுற்றிலும் கடலுமாய் இருக்கிற இடம்.
ஏடன் என்னும் மூப்பனைப் பற்றிய அறிமுகம் நமக்குச் சொல்லப்படுகிறது. அந்த காடும் மலையும் கடலும் அவனுக்கு எவ்வளவு பழக்கப்பட்டவை என அறிந்து கொள்கிறோம்.சரவணன் சந்திரனின் பிற கதைகளைப்போலவே கதைசொல்லியின் பெயர் நமக்குச் சொல்லப்படுவதில்லை. கதைசொல்லி வேறெங்கோ ஒரு தூர தேசத்திலிருந்து அத்தாரோ மலையை வந்தடைந்த விதத்தை சொல்கிறான். அதன்பின் அந்த காட்டுக்கு அவனை ஏடன் பழக்கப்படுத்துவதும், அவன் என்னவாக மாறி எதைக் கற்றுக் கொண்டான் என்பதையுமே மீதிக்கதை எனக் கொள்ளலாம்.
”காடுகளுக்கு பகலும் இரவும் ஒன்றுதான். காடு எப்போதும் தனித்தே இருக்கிறது. அதுதான் காட்டின் இயல்பும். பகலும் இரவும்தான் மாறி மாரி வருகின்றன.ஒவ்வொன்றின் அடிப்படையையும் புரிந்து கொண்டால், அச்சத்திற்கு இடமேயில்லை”
”எல்லைகளை மட்டும் மறுபடி நினைவூட்டுகிறேன்.இதைச் சத்திய வாக்காகக் கொள். முதலில் உன் எல்லை எது என உணர்ந்து கொள்”
ஏடன் காடுகளைப் பற்றியும் எல்லைகளைப் பற்றியும் இப்படித்தான் முதலில் சொல்கிறான். கதைசொல்லிக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறான். பின்பு கதைசொல்லியிடம் விலங்குகளைப் பற்றிப் பேசிவிட்டு, “நீ வேட்டை விலங்கா ? சார்பு விலங்கா ?” எனக் கேட்குமிடத்தில் கிட்டத்தட்ட நாம் இதுதான் கதையின் மையமென முடிவு செய்துகொள்ளலாம்.
ஆனால் நிறைய கிளைக்கதைகளையும் வர்ணனைகளையும் என்னால் பொருத்திக் கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ முடியவில்லை. இது கதைசொல்லியின் transformation பற்றிப் பேசும் நாவலா ? அல்லது அவனுடைய survival பற்றிப் பேசும் நாவலா ? அல்லது காடு-மலை-கடல் கொண்ட ஒரு தீவின் கதையா ? இந்தக் கேள்விகளுக்கான விடை தெரியவில்லை. ஒரு கட்டத்தில் ஏடனும் கதைசொல்லியும் மனிதர்களா அல்லது இரு புலிகளின் கதைகளைத் தான் கேட்டுக் கொண்டிருக்கிறோமா என்ற சந்தேகம் கூட எழுந்தது. மேலும் முள்ளங்கிக்காரிகளைப் பற்றிய வர்ணனைகளும், அந்தக் காட்டில் உலவித் திரியும் புலியும், நாய் போல மாற சாபம் வாங்கிய மூதாட்டியின் மகன்களும் எதற்காகவென இப்போதும் புரியவில்லை.
உண்மையில் ஒரு நூற்றி இருபது பக்க நாவலை (நாற்பது வெற்றுப்பக்கங்களைத் தவிர்த்துவிட்டு) படிக்க மிக அதிக நேரம் எடுத்துக் கொண்டது இதுவே முதல் முறை. சரவணனின் பிற படைப்புக்களைப் போல ஒரு தடையில்லாத கதையோட்டமோ இலகுவான மொழிநடையோ இல்லை என்பது முதல் காரணம். இங்கு அத்தாரோ என்னும் நாவலில் மையம் நிலையான ஒன்றாக இல்லாமல் பல கதைகளையும் தொட்டுச் செல்வதாலும், அனைத்துமே ஒரு மாதிரியான abstract ஆக சொல்லப்பட்டிருப்பதாலும் கொஞ்சம் குழப்பத்துடனேயே படித்து முடித்தேன்.
இறுதியாக...
”அறிந்து திகட்டிப் போன ருசியை விட்டு, அறியாத ருசியை நோக்கிப் போ, இந்த மலை பல ருசிகளைக் காட்டிக் கண்கட்டி வித்தை காட்டும். அதில் எது சிறந்தது எனக் கணக்கிடுவதற்குள் வாழ்நாள் முடிந்துவிடும்”
ஏடனின் இந்த வாக்கியத்தையே எனக்கானதாகவும் எடுத்துக்கொள்கிறேன். இது நான் அறியாத ருசி. எனக்குப் புரியாத களம். சில காலம் கழித்து இந்த நாவல் எனக்கு முற்றிலும் வேறு மாதிரியாகத் தெரியலாம். மறுவாசிப்பின் போது வேறொரு கதையை அறிந்து கொள்ளலாம். உங்களுக்கும் கூட அப்படியே ஆகலாம்.
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இணைப்பு இங்கே
புதன், 23 டிசம்பர், 2020
Hestia - நெருப்பின் தேவதைக்கு
பேரன்பின் ஹெஸ்டியா,
இந்தக் கடிதத்தை நான் எழுதிக்கொண்டிருக்கும் இரவில், உன் நாட்டில் விடியல் வந்திருக்கும்.கடல் கடந்து, பல்லாயிரம் மைல்களுக்கப்பால் நீ இருந்தாலும், கிட்டத்தட்ட பத்தாண்டுகளாய் தொடரும் இந்த உறவின் பொருட்டும் மனதளவில் உணரும் நெருக்கத்தின் பொருட்டுமே, இந்த மின்மடலில் உனக்காக சொற்களைத் தேடித்தேடி எழுதிக்கொண்டிருக்கிறேன்.
இவர்கள் நம் வாழ்வில் நிலைத்து நிற்கப் போகிறவர்கள் என்ற எதிர்பார்ப்பு கொஞ்சமும் இல்லாத மனிதர்களோடு தான், நாம் பல ஆண்டுகள் நிலைத்திருக்கிற உறவுகளை உருவாக்கிக் கொள்ளுகிறோம். அப்படியொரு முற்றிலும் எதிர்பாராத உறவு தான் நம்முடையதும். உனக்கு நானும் எனக்கு நீயும் அறிமுகமான போது நாமும் அப்படித்தான் நினைத்திருப்போம். உன் எண்ணம் அறியேன் எனினும், நான் அப்படித்தான் நினைத்தேன்.
சம்பிரதாய அறிமுகத்தின் போது ஒரு புன்னகையுடன் கடந்து போய்விட்டாலும், நான் உன்னிடம் முதன்முதலில் அதிகம் பேசியது உன் கண்கள் கலங்கிய ஒரு தருணத்தில் தான். கண்ணீருக்கான காரணத்தையும் உன் தரப்பு நியாயத்தையும் விளக்கிச் சொன்னபின் கொஞ்சம் ஆறுதலடைந்தாய் நீ.
பிறகு நீ ஓரிடமும் நான் ஓரிடமுமாய் பணிநிமித்தம் விலகிச் சென்றோம். சம்பிரதாய நல் விசாரிப்புகளும் குறுந்தகவல்களும் தவிர்த்து அதிகமாய் ஒன்றும் பேசிக்கொண்டதில்லை நான். காலம் மீண்டும் நம் பாதைகளை ஒன்றிணைத்தது, சில மாதங்களுக்குப் பின் மீண்டும் ஒரே இடத்தில் பணிபுரிந்தோ. அப்போது தொடங்கியது நம் இரண்டாம் அத்தியாயம் . உரையாடல்களும், காஃபிக் கோப்பைகளும், மாலை நேரத்து நடைகளும், புகைப்படங்களும், பாடல்களும்,திரைப்படங்களும், புத்தகங்களுமாய் கழிந்த அற்புதமான நாட்கள் அவை. உன் எதிர்காலம் குறித்த பெரும் அச்சங்கள் ஏதுமற்றவளாகவே இருந்தாய் நீ.
வாழ்வில் உன்னைச்சுற்றி உன்னைக் காயப்படுத்தாத மனிதர்கள் இருந்தால் போதுமானது என்றே சொல்வாய். நானும் உனக்கு அதுவே வாய்க்கட்டுமென விரும்பினேன்..வாழ்த்தினேன். ஒரு வாரயிறுதியில் எதிர்கால வாழ்வு குறித்த பெரும் கனவுகளோடு நீ ஊருக்குக் கிளம்பிச் சென்றிருந்தாய். ஓரிரு நாட்களுக்கும் பின், ஓர் இரவில் என்னைத் தொலைப்பேசியில் அழைத்த நீ வெடித்து அழுதாய். உன்னைத் தேற்ற வார்த்தைகளின்றி ”எல்லாம் சரியாயிடும், நீ அழாத” என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன். பின் நீ ஊர் திரும்பியதும் எதிர்பாராத ஓர் அதிகாலையில் உன்னைப் பார்க்க வந்தேன். வாழ்நாளைக்கும் மறக்கமுடியாத புன்னகையை உன் முகத்தில் கண்டேன் அன்று.
நாம் ஒன்றாகச் சென்று வாங்கிய கிட்டார் நினைவிருக்கிறதா உனக்கு. என்னுடைய கிட்டார் இன்றும் உன்னை நினைவூட்டியபடி என் வீட்டுச் சுவற்றில் தொங்கிக்கொண்டிருக்கிறது. நீ வெளிநாட்டுக்கு பறந்து போவதாய்ச் சொன்ன ஓர் நாளில் என் கிட்டார் இசைப் பயணம் முடிவுக்கு வந்தது. :) விமான நிலையத்தில் உன்னைச் சந்தித்துவிட பெருமுயற்சி செய்தும், அதில் தோற்று எங்கோ நெடுந்தொலைவில் இருந்து உனக்குக் கையசைத்து விடைகொடுத்துவிட்டு வந்தேன் நான்.
அதன் பின் நீ ஊர் வந்து, நாம் சந்திக்கையில் உன் அடுத்த வாழ்க்கைப் பயணத்திற்கான அறிவிப்புடன் வந்தாய். மனம் நிறைந்த வாழ்த்துகளுடன் உன்னிடமிருந்து விடைபெற்றேன் நான். மாதங்கள் உருண்டோடின, நமக்கிடையேயான தொலைபேசி அழைப்புகள் வெகுவாய் குறைந்துவிட்டிருந்த தருணத்தில் , நான் சற்றும் எதிர்பாரா ஓர் நாளில் ஒரு பெரும் துயரிலிருந்து நீ தப்பிப் பிழைத்த வீடு வந்த கதையைச் சொன்னாய். இந்தப் பெண் இன்னும் எத்தனைப் போராட்டங்களைத் தான் தாங்குவாள் என விதியை நொந்து கொண்டேன் நான்.
உனது, ஒரு பயணத்திற்கும் அடுத்த பயணத்திற்கும் இடையேயான நாட்களே நாம் சந்தித்த நாட்களாக மாறிப்போயின. ஒவ்வொரு முறையும் ஒரு புதுமாதிரியான சவாலைக் கடந்து வாழ்வின் அடுத்த கட்டத்தை எதிர்கொள்ளத் தயாராகவே இருந்தாய் நீ. மற்றுமொரு முறை நீ கடல்கடந்து பறந்துவிட ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தாய். பல ஆண்டுகளுக்குப்பின் மீண்டுமொரு முறை சந்தித்தோம். ஒரு தேவதை போல உருமாறியிருந்தாய் நீ. அதே பழுப்பு நிற விழிகளும், சிங்கப்பல் புன்னகையுமாய் உடல் மட்டும் வெகுவாய் மெலிந்திருந்தாய். காய்ச்சல் வந்த தேவதையாக, கடுமையான உடல் உபாதைகளுடன் போராடிக் கொண்டிருந்த உன்னை நான் நேரே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. ஓரளவு நீ சீரான பின், உணவும், உலாவலும், தேநீருமாய் மிச்ச நாளைக் கடத்திவிட்டு பின்பு உன்னைப் பிரிய மனமில்லாமல் ஒரு மென் அணைப்புடனும் , கலங்கிய கண்களுடனும் உன்னிடமிருந்து விடை பெற்றேன்.
இப்போது எண்ணிப்பார்த்தால், எப்போதெல்லாம் நீ ஏதோ ஒரு துன்பத்தில் சிக்குண்டு இருந்தாயே அப்போதெல்லாம் நான் உன்னோடு இருந்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் உன் வாழ்வில் பெரிதாய் என்னால் ஒன்றும் செய்ய முடியாமல் போயிருந்தாலும், உனக்காக செவிசாய்க்கவும் உரையாடவும், முடிந்தவரையில் கூட நடக்கவும் செய்திருக்கிறேன். I was there for you and will continue to be so. நாம் அதிகம் பேசிக்கொள்ளாத, குறுந்தகவல்கள் அனுப்பிக் கொள்ளாத நாட்களில் எல்லாம் நீ கவலைகள் ஏதுமில்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பதாகவே நினைத்துக் கொள்கிறேன்..நம்புகிறேன்...!
இந்த பிரபஞ்சம் உனக்காக இன்னும் எத்தனை ஆச்சரியங்களை வைத்திருக்கிறதோ தெரியாது. ஆனால் அவை உனக்கு மனநிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரும் என உறுதியாக நம்பிகிறேன். உன் வாழ்வின் இந்தப் பகுதி, முழுக்க முழுக்க உனக்கே உனக்கானது. எதிர்கொண்ட அத்தனை போராட்டங்களையும் வெற்றிகரமாகக் கடந்துவந்த உனக்கு, இது அமர்ந்து இளைப்பாற வேண்டிய நேரம். உன் மகிழ்ச்சியைத் தவிற வேறெதையும் முன்னிறுத்தாமல், புன்னகையும் கொண்டாட்டமுமாய் உன் வாழ்வை நிறைத்துக் கொள். உன் விருப்பப்படி இன்னும் உயரமாகவும் , தூரமாகவும் பறந்து திரி. கொண்டாடு...!
இந்தப் பத்தாண்டுகளில் பேசியவை போக,அடுத்த முறை சந்திக்கும்போது உன் பழுப்பு நிற விழிகள் மின்ன இன்னும் நிறைய கதைகளைச் சொல். ஒரு புன்னகையோடு உன் எதிரே அமர்ந்து , உன் பேச்சைக் கேட்க காத்திருக்கிறேன்...!
Loads of love to you...! Love you...!
மனம் நிறைந்த அன்புடன்,
நான் <3

