Yellowstone பார்த்து முடித்தபின் அதே மாதிரியான வேறு ஒரு நிலப்பகுதி சார்ந்த கதையமைப்பைக் கொண்ட வேறு தொடர்களைத் தேடிக் கொண்டிருந்தேன். அப்படி சிக்கியது தான் இந்த Justified தொடர். யெல்லோஸ்டோன் எப்படி ரெட்னெக் (redneck - slang word ) என்றழைக்கப் படுகிற conservative அமெரிக்கர்கள் அவர்களின் வாழ்வியல் சார்ந்ததோ அதே போல Justified தொடர் ஹில்பில்லி என சுட்டப்படும் அமெரிக்காவின் அப்பலாச்சியன் மலைத்தொடர் சார்ந்த நிலப்பரப்பில் வாழ்கிற வெள்ளையின மக்கள் , அவர்களின் வாழ்வியல் சார்ந்த கதை (என்னத்த பெரிய வாழ்வியல் - மூன்ஷைன்னு ஒரு கள்ளச்சா*ராயம் காய்ச்சுவானுங்க, வேட்டையாடுவாங்க, கன்னாபின்னான்னு க*ஞ்*சா வளர்ப்பு அது சார்ந்த தொழில்கள். இத தான் காட்றாங்க :D )
அமெரிக்க எழுத்தாளரான எல்மோர் லியனார்ட் எழுதிய ஒரு சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த ஜஸ்டிஃபைட் வலைத்தொடர். இவருடைய பல நாவல்கள், கதைகள் திரைப்படங்களாக வெளிவந்திருக்கின்றன. இவருடைய சிறப்பே இந்த நிலவியல் சார்ந்த கதைகளை விறுவிறுப்பாக எழுதுவதுடன் வித்தியாசமான அசலான கதாபாத்திரங்களை உருவாக்கி உலவவிடுவதும் தான்.
கதை நாயகன் ரேலன் கிவன்ஸ் ஒரு மார்ஷல் அதிகாரி. அதாவது சிறையிலிருந்து தப்பியோடிய தண்டனைக் கைதிகளை தேடிப் பிடிப்பது, கைதிகளை சிறைக்கு பாதுகாப்பாக கொண்டு செல்வது, கைதிகளை ஒரு சிறையிலிருந்து மற்றொரு சிறைக்கு இடமாற்றுவது உள்ளிட்ட வேலைகள் இந்த மார்ஷல்களின் பொறுப்பு. ரேலன் ஒரு trigger happy ஆசாமி. எதற்கெடுத்தாலும் துப்பாக்கி தூக்குகிற ஆள். சுடுவதில் அசகாய சூரனும் கூட. இப்படிப்பட்ட ஆளுக்கு அவருடைய சொந்த ஊருக்கே பணிமாற்றலாகி வருகிறார். அங்கிருக்கிற பிரச்சனைகள் அத்தனையும் அவருக்கு அத்துபடி.
அதில் முக்கிய பிரச்சனையாக இருப்பது ரேலனின் பால்ய வயது நண்பனும் , கொடும் குற்றவாளியுமான பாய்ட் க்ரவ்டர். சிறுவயதில் ரேலனும் பாய்டும் நிலக்கரி சுரங்கங்களில் ஒன்றாக வேலை செய்தவர்கள். பாய்ட் வெடிப்பொருட்கள் சார்ந்து வேலை செய்ததால் அதில் நிபுணாத்துவம் பெற்றவன். போதாக்குறைக்கு ஒரு வெள்ளை இனவெறி குழுவையும் தலைமை தாங்கி நடத்தி வருபவன்.எப்படிப்பட்ட சூழலையும் தன்னுடைய பேச்சுத்திறமையால் சமாளித்துவிடக்கூடியவன் (Silver-tongue). கெட்டவனா அல்லது எதிர்நாயகனா என் நமக்கே குழப்பம் ஏற்படுத்தக் கூடிய பாத்திரப்படைப்பு இது.
ரேலனுக்கும் பாய்டுக்கும் இடையேயான மோதலுடன் பல கிளைக்கதைகளுடன் கூடிய சுவாரஸ்யமான க்ரைம் ட்ராமா . ரேலன் கிவன்ஸாக நடித்திருப்பவர் ஹிட்மேன் புகழ் டிமத்தி ஆலிஃபண்ட். அவருடைய உடல்வாகும், கெளபாய் ஸ்டைலும், அலட்சியமான உடல்மொழியும் ரேலன் எனும் பாத்திரத்தை மிகச்சிறப்பான ஒன்றாக மாற்றியிருக்கின்றது. பாய்ட் க்ரவ்டராக நடித்திருக்கும் வால்டன் காக்கின்ஸும் ஒன்றும் சாதாரணமான ஆளில்லை. நடிப்பு ராட்சஸன். இந்த தொடரின் மிகப்பெரிய பலமே வால்டனுடைய நடிப்பு தான்.
உங்களுக்கு கொஞ்சம் மெதுவாக நகர்கிற ஆக்ஷன் க்ரைம்ட்ராமாக்கள் பிடிக்குமென்றால் கட்டாயம் பார்க்கலாம். நிறைய சுவாரஸ்மான பாத்திரங்களும் கதைகளும் உண்டு. கூடவே அட்டகாசமான Bluegrass இசையும் / பாடல்களும் உண்டு. I am particularly huge fan of Bluegrass music.
This show has been celebrated by the viewers as Hillbilly Shakespeare. :D Rightfully so...! Absolutely loved it.
Justified (6 seasons) - Streaming on Sony Liv