பைசன் - காளமாடன் பார்த்துவிட்டேன். இதுவரையிலும் வந்த மாரி
செல்வராஜின் திரைப்படங்களிலேயே எல்லா வகையிலும் முழுமையான திருப்திகரமான
படம் என உறுதியாகச் சொல்லலாம். எடுத்துக் கொண்ட கதைக்கும்
கதைக்களத்திற்கும் நியாயம் செய்யும் வகையில், படத்தில் கையாளப்
பட்டிருக்கிற தீவிரமான விஷயங்களை சொன்ன விதத்திலும், பாத்திரப்
படைப்பிலும், நடிகர்கள் தேர்விலும் , மிகச் சிறப்பாக
செயல்பட்டிருக்கிறார்கள்.
தென்மாவட்ட உள்ளூர் கபடிப்
போட்டிகள் யூட்யூபில் காணக்கிடைக்கின்றன. அல்லூர் பிரபா, தூத்துக்குடி
க்ளெமண்ட் உள்ளிட்ட கபடி வீரர்களின் பெயர்கள் பரிச்சயமானது அப்படித்தான்.
நேரம் போவதே தெரியாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். உண்மையில் பைசன்
திரைப்படத்தில் இடம்பெற்ற கபடி சார்ந்த காட்சிகள் அத்தனையும் ஏதோ அசலான
உள்ளூர் போட்டிகளை மறைந்திருந்து காட்சிப்படுத்தியது போலத்தான் தோன்றியது .
வீரர்களில் உடல்மொழி, ஆட்ட முறைகள் உட்பட அனைத்திலும் அவ்வளவு
உண்மைத்தன்மை. படக்குழுவினரின் உழைப்பும், நடிகர்களின் அர்ப்பணிப்பும்
வியக்க வைத்தது.அதிலும் துருவ் கபடி வீரராகவே மாறிவிட்டார்.அவர் சொன்னது
போல இது தான் அவருடைய முதல் படம்.
பொதுவாக பரியேறும்
பெருமாள் உள்ளிட்ட மாரியின் படங்களில் அழகியல், குறியீடு சார்ந்த
விஷயங்களில் அதீதமான கவனம் செலுத்தப்பட்டு கதையின் மையத்திலிருந்து விலகிப்
போய்விடும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது . அது பைசனில் இல்லை. இன்னொரு
முக்கியமான விஷயம் ; படம் முழுக்க இரு வேறு சமூக சார்ந்த இரு தனி
மனிதர்களின் பகை அந்தந்த சமூகத்தினருக்கு எதிரான பகையாக (அந்த தனி
மனிதர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் )மாறுவதையும் அதனால் இதற்கு
தொடர்பே இல்லாத கிட்டான் இந்தச் சுழலுக்குள் சிக்கிக் கொண்டு தவிப்பதையும்
அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருந்தார்கள். உண்மைச் சம்பவங்களில்
தொடர்புடையோரின் பாத்திரங்கள் என்பதால் அமீர், லால் ஆகியோரின் பாத்திரப்
படைப்புகளில் மிக மிக கவனமாகவே செயல்பட்டிருக்கிறார் மாரி செல்வராஜ்.
அவர்களின் வழியே பேசப்படவேண்டியவற்றையும் தவறாமல் பேசியாயிற்று.
கறுப்பின
விளையாட்டு வீரர்கள் பற்றிய ஹாலிவுட் திரைப்படங்களில் தவறாமல் இடம்பெறும்
அம்சம் ஒன்று உண்டு. அவர்கள் வாழும் சூழலில் அவர்களைச் சுற்றியிருக்கிற
வன்முறையில் சிக்கிக் கொண்டால் வாழ்வு பாழாய் போகுமென எப்போதும் யாராவது
ஒருவரோ பலரோ அவர்களை பாதுகாத்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு மேலேற்றி விட
முயன்றுகொண்டே இருப்பார்கள். பி.டி வாத்தியாராக வரும் அருவி ‘மதன்’ போல்,
பைசன் திரைப்படத்திலும் அப்படியான பல பாத்திரங்கள் உண்டு .
அமெரிக்காவில்
முதன்முதலில் தொழில்முறை பேஸ்பால் அணியில் இடம்பெற்று விளையாடிய கறுப்பின
வீரரான ஜாக்கி ராபின்சன் பற்றிய திரைப்படம் 42. பின்வருவது அந்தப்படத்தில்
அணியின் உரிமையாளருக்கும் ஜாக்கி ராபின்சனுக்கும் இடையே இடம்பெறும்
முக்கியமான உரையாடல்
Jackie Robinson: You want a player who doesn’t have the guts to fight back?
Branch Rickey: No. No. I want a player who’s got the guts not to fight
back. People aren’t gonna like this. They’re gonna do anything to get
you to react. Echo a curse with a curse and, uh, they’ll hear only
yours. Follow a blow with a blow and they’ll say, “The N**ro lost his
temper.” That “The N**ro does not belong.” Your enemy will be out in
force... and you cannot meet him on his own low ground. We win with
hitting, running, fielding. Only that. We win if the world is convinced
of two things: That you are a fine gentleman and a great baseball
player. Like our Savior... you gotta have the guts... to turn the other
cheek. Can you do it?
Jackie Robinson: You give me a uniform... you give me a number on my back... and I’ll give you the guts.
பைசன்
திரைப்படத்தில் கிட்டானுக்கும் இதே மாதிரியான சூழல் தான்.
சுற்றியிருக்கிறவற்றிலிருந்து அவன் தப்பித்துக்கொள்ளவும், தன்னைச்
சார்ந்தவர்களை பாதுகாக்கவும், எல்லாவற்றிலிருந்தும் வெளியேறவும் அவன்
ஓடிக்கொண்டே இருக்கிறான். அவ்வப்போது விழுகிறான்; கோவப்படுகிறான்;
காயப்படுகிறான்; ஆனாலும் திரும்பவும் எழுந்து தன்னுடைய இலக்கை நோக்கி
ஓடிக்கொண்டேயிருக்கிறான். அவனாக விரும்பாமல் இந்த வன்முறைச் சுழலுக்குள் பல
முறை இழுக்கப்பட்டாலும் அதிலிருந்து மற்றோரால் வெளியேற்றப்படுகிறான்.
தென்மாவட்டங்களின்
சாதீயக் கொந்தளிப்புகளுக்கிடைய ஹாக்கியையும் பிற விளையாட்டுகளையும்
பிடித்துக் கொண்டு மேலேறி வந்த பையன்களைப் பற்றி சரவணன் சந்திரன் நிறைய
எழுதியிருக்கிறார். அவருடைய பார்பி நாவலும் அதில் இடம்பெறும் ‘விளையாடும்
போது கேலரியைப் பார்க்காதே’ எனும் வாசகமும் மனதில் வந்து போயின.
பைசனின்
ஆக்கத்தைப் பொருத்தவரையில் மாரி செல்வராஜின் craftsmanship உச்சம்
தொட்டிருக்கின்றது. ஒவ்வொரு பாத்திரமும் எழுதப்பட்ட விதமும் திரையில்
அந்தந்த பாத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்ட இடமும் ஒட்டுமொத்தமாக
திரைப்படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன. பசுபதிக்கு ‘சார்ப்பட்டா
பரம்பரை’ ரங்கன் வாத்தியாருக்குப் பிறகு காலத்திற்கும் மனதில் நிற்பது போல்
ஒரு பாத்திரம். மனிதர் அப்படியொரு நடிப்பினை தந்திருக்கிறார். சார்ப்பட்டா
பரம்பரை திரையரங்குகளில் வெளிவராத குறையினை இந்தப் படம்
போக்கியிருக்கிறது. அமீர், லால் உள்ளிட்டோரின் நடிப்பைப் பற்றி தனித்தனியே
குறிப்பிட வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். எல்லாருமே அசுரத்தனமாக போட்டி
போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள்.
நிவாஸ் கே
பிரசன்னாவின் இசை பற்றிப் பேசியே ஆக வேண்டும். ஆரம்பத்தில் இந்தப் படத்தில்
சந்தோஷ் நாராயணன் இருந்திருக்க வேண்டுமென நினைத்தவர்களில் நானும் ஒருவன்.
ஆனால் அதை தவறென நிரூபித்திருக்கிறார் நிவாஸ் . தீக்கொளுத்தி, சீனிக்கல்லு,
தென்னாடே, ரெக்க உள்ளிட்ட ஒவ்வொரு பாடலுமே ஒரு தனித்தன்மையுடன்
மிளிர்கிறது. திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். இந்தப் படம்
நிவாஸுக்கான நிரந்தர இடத்தினை தமிழ்த்திரையுலகில் உறுதி செய்யுமென
நம்புவோம்.
அர்ஜுனா விருது வென்ற கபடி வீரரான மணத்தி
கணேசனின் கதையினை எடுத்துக் கொண்டு அதற்கு தென் மாவட்டங்களின் கடந்த கால
தற்கால நிகழ்வுகளை இணைத்து ஒரு திரைக்கதையினை உருவாக்கி சலிக்காத ஒரு
திரையனுபவத்தினை நமக்கு வழங்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். His finest
work or art till date. <3
Bison will stay in ours for a long time <3
நானும் என் உலகும்
எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.
திங்கள், 27 அக்டோபர், 2025
பைசன் - காளமாடன் - 2025
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)

கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக