நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

செவ்வாய், 14 ஜூலை, 2020

வைரமுத்து - #MeToo மற்றும் #CancelCulture

(C) - Illustration by Taylor Callery for TIME


அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்கிற ஆஃப்ரிக்க அமெரிக்கர் காவல்துறையால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களில் முக்கியத்துவம் பெற்றது இந்த #CancelCulture என்கிற விஷயம். ஆஃப்ரிக்க அமெரிக்கர்கள் கறுப்பின மக்களை கடந்த காலங்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவமதித்த, அவதூறாக, மதிப்பைக் குறைக்கும் வகையில் சித்தரித்த திரைப்படங்களையும், அவர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்ட நிறுவனங்களையும் எதிர்த்து போராடத் துவங்கினர். விளைவாக hbo சேனலிலிருந்து ‘Gone with the wind’ திரைப்படமும், netflixல் இருந்து ‘the help’ திரைப்படமும் நீக்கப்பட்டன.


#MeToo இயக்கத்தில் தொடங்கி இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் வரை எல்லா தரப்பிலும் இந்த Cancel culture கடைபிடிக்கப்பட்டது/படுகிறது.



ஒரு துறையில் பெரும் புகழ்பெற்ற தனிமனிதர் (சினிமா/விளையாட்டு/அரசியல்/கலை etc) அவருடைய கடந்தகாலத் தவறுகளின் அடிப்படையிலோ அல்லது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலோ பொதுத் தளத்திலும் பிற இடங்களிலும் (அவரின் கலைத்திறம் ஆளுமை உள்ளிட்டவைகளை கணக்கில் கொள்ளாமல்) நிராகரிக்கப்பட்டால், அது தான் #CancelCulture இந்த வரிசையில் காலம் கடந்த புத்தகங்களையும், திரைப்படங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது அந்த படைப்பு உருவான காலகட்டத்தில் சரியான பார்வையோ புரிதலோ இல்லாமல் எடுக்கப்பட்டிருந்தாலும் இன்றைய தேதிக்கு அந்த திரைப்படமோ/புத்தகமோ பேசும் விஷயம் தவறு (irrelevant/incorrect) எனக் கொள்வது.

இது இன்று நேற்று நடக்கிற விஷயம் இல்லை நூறாண்டுகளுக்கு முன்பே ஃபோர்ட் நிறுவனர் ஹென்றி ஃபோர்ட் இதைப் போல நிராகரிக்கப்பட்டிருக்கிறார். ’The Dearborn Herald' என்ற பத்திரிக்கையை நடத்தி வந்த அவர், யூதர்களை மோசமாக சித்தரித்து அவதூறாக எழுதப்பட்ட ஒரு தொடர் கட்டுரையையும் அந்த பத்திரிக்கையில் வெளியிட்டுவந்தார்.பின்பு அமெரிக்கா முழுக்கவும் யூதர்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பாலும், அறப்போராட்டங்களாலும், நீதிமன்ற வழக்குகளாலும் ஒரு கட்டத்தில் ஃபோர்ட் தனது தவறுகளுக்காக பொது மன்னிப்புக் கேட்க வேண்டிவந்தது.அப்படியாக அந்த cancellation campaign முடிவுக்கு வந்தது.

இதே போல் சமகாலத்தில் sexual assault / harassment பாலியல் புகார் காரணமாக cancel செய்யப்பட்டவர்கள் ஹாலிவுட்டின் பெரும் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன், இயக்குநர் வுடி ஆலன், நடிகர் கெவின் ஸ்பேசி உள்ளிட்டோரும் உண்டு.

இந்த #CancelCulture சரியா தவறா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். ஒரு பிரபலத்தை ஆதரிப்பதும் நிராகரிப்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை.
இது இப்படி இருக்க, இந்த sexual assault/harassment allegations ஐப் பொருத்த வரையில், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலே அன்றி பொதுவில் அவர் எப்படி நடத்தப் பட வேண்டுமென்றோ ஊடகம் உள்ளிட்டவற்றில் குற்றம் சாட்டப்பட்டவரை எப்படி அணுக வேண்டும் என்றோ எந்த guidelinesம் இருப்பதாகத் தெரியவில்லை (இருந்தால் தெரியப்படுத்தவும்)

நம்மளால, நம்முடைய மனசாட்சிப்படி, moral compass படி, நமக்குத் தெரிஞ்ச தகவல்களை வெச்சு தான் முடிவெடுக்க முடியும். அப்படிப் பாத்தா benefit of doubtஅ position of powerல இருக்குறவங்களுக்கு குடுக்காம இருக்குறதுதான நியாயம். பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் தானே நிக்கனும்.

வைரமுத்து எழுதுன பாடல்களைக் கேக்குறது guilty pleasure தான்..ஆமாம் அவருடைய எழுத்தைப் புகழத்தோணும் தான் அதே சமயம் அவரால பாதிக்கப்பட்ட இந்த victims பத்தி ஞாபகம் வந்தா நமக்குள்ள ஒரு conflict வரனும். அதான் நியாயம்…! பரவால்ல… இதுக்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கிறவரை, நம்மால முடிஞ்சவரைக்கும் அவரைக் கொண்டாடாம இருந்தாலே போதும்னு நெனைக்கிறேன்.

இவ்வளவு எழுதுறதுக்கு காரணமும் அந்த internal conflict தான்.

வைரமுத்து, தாம்ப்ராஸ் நாராயனன், காஞ்சிபுரம் ஜெயேந்திரன், உள்ளிட்ட எல்லாரையும் ஒரே தட்டுல தான் வெச்சுப் பாக்கனும்..எல்லோர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒரே மாதிரி தான் அணுகனும்… போலவே ஸ்ரீரெட்டி அவர்களுடைய புகாரையும் சின்மயி அவர்களுடைய புகாரையும் ஒரே மாதிரி தான் எடுத்துக்கனும். Partialஆ அறம் பேசக் கூடாது…!


எனக்கு எழுந்த இன்னொரு கேள்வி, இந்த #CancelCulture மாதிரியான விஷயங்களைப் பத்தி இங்க நம்முடைய தமிழ் சமூகத்துல ஏன் பரவலான விவாதங்கள் எதுவும் நடக்கல ? குழப்பத்துல இருக்குறவன் தன்னுடைய referenceக்காக தேடுனா கூட இங்க எந்த ஆய்வுகளோ விவாதங்களோ கட்டுரைகளோ இல்லை…இந்த போஸ்ட் எழுத அதுவும் ஒரு காரணம்.


உங்களுடைய கருத்துகளை சொல்லுங்க. I’m eager to learn, unlearn and listen


(மேற்கண்ட போஸ்ட் நான் ஃபேஸ்புக்கில் எழுதிய. பின்னாட்களில் referenceக்காக இங்கே பதிகிறேன். கூடவே நண்பர்களுடைய கருத்துகளையும்)



திங்கள், 18 மே, 2020

வெறுப்பின் வேர்கள் - The anatomy of hate by Revati Laul



வெறுப்புக்கும் கோபத்திற்குமான வேறுபாடு என்ன ? கோபம் ஒரு நொடிப்பொழுதில் ஒரு குறிப்பிட்ட சூழலில் அப்போதைக்கு நிகழ்கிற உணர்வுப்பூர்வமான எதிர்வினை (emotional response) அல்லது ஒரு உணர்வு வெளிப்பாடு . வெறுப்பென்பது அப்படியல்ல; பல காலமாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டமைப்படுகிற ஒன்று. தவறான முன்முடிவுகள், மதிப்பீடுகள், அருவருப்பு, கோபம், பழி உணர்வு, ஏமாற்றம் உள்ளிட்ட பலவற்றின் கலவைதான் வெறுப்பெனக் கொள்ளலாம்.

மேலும், உளவியல் ரீதியாக தனி மனிதர்களைக் காட்டிலும் ஒரு குழுவின் மீதான வெறுப்பை வளர்த்துக்கொள்வது எளிதென சொல்லப்படுகிறது. நீங்கள் முகந்தெரியாத யாரோ ஒருவர் மீது உடனேயே கோபப்பட முடியும்; ஆனால் அவரை நீங்கள் வெறுப்பதற்கு உங்களுக்கு தொடர்ச்சியாக நிறைய காரணிகளும், நியாயங்களும் தேவைப்படலாம். அப்படி காலம் காலமாக ஒரு மதத்தின் பெயரால் மற்றொரு மதத்தின் மீது வெறுப்பை ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்டவர்களுக்கு , அதை மொத்தமாக வெளிக்காட்டிக் கொள்ள ஒரு வாய்ப்புக் கிடைத்தால் என்ன ஆகும் ? எதிர்படுகிறவர்களின் நிலை என்ன ? அங்கே ஒரு உயிருக்கான மதிப்பு இருக்குமா ?



2002ஆம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பும், அதனைத் தொடர்ந்து குஜராத்தில் வெடித்த மதக்கலவரங்களும் , உயிர்கள், உடைமைகள் என பெரும் சேதம் விளைந்ததையும்,  கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாக (அதிகாரப்பூர்வமான தகவல் மட்டும்)  நாம் கேள்விப்பட்டிருப்போம். இது ஒரே நாளில் நடந்துவிட்ட ஒர் நிகழ்வா ? கலவரங்களைச் செய்தவர்களும், வீடுகளைக் கொளுத்தியவர்களும், கடைகளைச் சூரையாடியவர்களும் , பெண்களை வன்புணர்ந்தவர்களும், வேறு பல குற்றச்செயல்களைச் செய்தவர்களும் ஒரு நாள் கோபத்திலா இத்தனையையும் செய்தார்கள் ? நிச்சயமாக இல்லை.

சுரேஷ் - ச்சர்ரா (Chharas) என்ற இனக்குழுவைச் சேர்ந்தவர். 1871 ல் ப்ரிட்டிஷ் அரசாங்கத்தால் குற்றப்பரம்பரையினராக அடையாளப் படுத்தப் பட்டவர்கள் இந்த ச்சர்ரா மக்கள். திருடுவதையே தங்கள் தொழிலாகக் கொண்டவர்கள். இவர்கள் பெருமளவு குடியிருந்த குஜராத்தின் ச்சர்ரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தான் சுரேஷ். குடும்பத்தின் அடையாளமும் அதனால் எழுந்த பிரச்சனைகளின் காரணமாக பள்ளிப்படிப்பைக் கூட முழுமையாக முடிக்காதவர்.

டங்கர் - பில் (Bhil) என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். கல்லூரி சென்று பட்டப்படிப்பு வரையிலும் பயின்றவர் . இறைச்சி உண்கிற, மது குடிக்கிற தன்னுடைய சொந்த சமூகம் குறித்த ஒரு தாழ்வு மனப்பான்மை டங்கருக்கு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. உண்மையில் தான் பழங்குடி அல்ல; ஒரு ராஜபுத்திர ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்ளவே அவர் எப்போதும் உள்ளூர விரும்பினார்.

ப்ரணவ் - முதுகலை பட்டப்படிப்பு வரை பயின்ற ஓரளவு வசதியான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர். அவர்களுடைய குடும்பத்திற்கென சொந்தமாகக் கொஞ்சம் நிலம் இருந்தது. ப்ரணவ்வின் தந்தை போர்வெல் தொழிலை நடத்திவந்தார். ப்ரணவ்வின் குடும்பத்தில் அனைவருமே சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள்

ஒருவரோடு மற்றொருவருக்குத் தொடர்பில்லாத மூன்று பேர்; மூவருமே சமூகப் பின்னணியிலும் , பொருளாதார நிலையிலும் , கல்வியிலும், வெவ்வேறு படிநிலைகளிலிருந்து வந்தவர்கள். மூவருமே இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். மதத்தைத் தவிற மூவரையும் இணைக்கிற புள்ளி  குஜராத்தின் வெவ்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நிகழ்ந்த கலவரங்கள்  மட்டுமே.இம்மூவரின் வாழ்க்கையையுமே சிறுவயதிலிருந்து  தொடங்கி , குஜராத் கலவரங்களோடு இவர்கள் எந்த வகையில் இணைகிறார்கள் என்பது வரையிலும் விவரித்திருக்கிறார் புத்தகத்தை எழுதிய ரேவதி லால் .

எல்லா எளிய மனிதர்களைப் போலவும் குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களுக்கும் வாழ்க்கை இரண்டாவது வாய்ப்புகளைத் தருகின்றது. அவர்கள் தேர்ந்தெடுக்கிற பாதைகளைப் பொருத்து சிலருக்கு மீட்சியும் சிலருக்கு மீளாத் துயரும் மிஞ்சுகின்றது.
Choice, however, is a vexing word. What part of choice applies when a tidal wave of anger tears through a state What part of it is the moment, the madness, the collective, and what part individual, personal history -Revati Laul, The anatomy of hate

உண்மையில் சிறுவயதிலிருந்தே மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் இவர்களுக்கு ஊட்டப்படுகிற வெறுப்பு அச்சமூட்டுவதாக இருக்கின்றது. ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (RSS), விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) , பஜ்ரங்தள் உள்ளிட்ட அமைப்புகள் சமூகத்தினூடாகவும் மக்களினூடாகவும் அந்தளவு ஊடுருவியிருக்கின்றன. பெஸ்ட் பேக்கரி, பில்கிஸ் பானோ, நரோதா பாட்டியா படுகொலைகள்; இந்தப் பெயர்களையெல்லாம் நாம்செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நிறையவே கேட்டிருப்போம். உண்மையில் அந்த ஒவ்வொரு பெயரின் பின்னாலும் பல ரத்தக் கறையோடான கதைகள் இருக்கின்றன. இங்கு முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் அத்தனை கொடூரமான செயல்களை செய்தவர்களும், செய்யத்தூண்டியவர்களும், அதனை அனுபவித்தவர்களும், மனிதர்கள் என்னும் உண்மையை மட்டுமே. 

இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூவரில் இருவர் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கும் போது, இந்து மதம் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் இவர்களைக் கொண்டு வந்து அந்த மதத்தின் பெயரால் வன்முறைச் செயல்களைச் செய்யத் தூண்டியது எது ? இந்த இணைப்பு எப்படிச் சாத்தியமாயிற்று ? 

சுரேஷ் (ச்சார்ரா) ஆகட்டும் , டங்கர் (பில்) ஆகட்டும் இவர்களுடைய தொடக்கம் என்பது அவரவர்களுடைய பகுதிகளில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைப்பதிலேயே தொடங்கியிருக்கின்றது. ஒரு சிறு குழுவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் தொடங்கி, மதம் சார்ந்த பண்டிகைகளுக்கு கூட்டம் கூட்டுவது, அவர்கள் சார்ந்திருக்கிற அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு ஆட்கள் சேர்ப்பது, தேர்தலுக்காக வேலை செய்வது, எனத் தொடங்கி அவரவர்ககளின் தனிப்பட்ட மேற்பார்வையில் கட்சியோ/இயக்கமோ செய்ய விரும்பும் பெரும் வன்முறைச் செயல்களைச் செய்ய இந்த குழுக்களுக்கு தலைவர்களாக தங்களை வரித்துக் கொள்வது வரை உள்ள உளவியலை நாம் கண்டுணர வேண்டும்.  

VHP, RSS, பஜ்ரங்தள் உள்ளிட்ட அமைப்புகள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூக இளைஞர்களுக்கு போலியானதொரு தலைமைப் பொறுப்பையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் வழங்குவதன் மூலமே அவர்களை மதம் என்ற குடையின் கீழ் ஒன்றுதிரட்டுகின்றார்கள். முறையான கல்வியும், வேலை வாய்ப்பும் மட்டுமே அவர்களுடைய சமூகப் பொருளாதார பின்னணியை மேம்படுத்தி இந்த அடையாளச் சிக்கலிலிருந்து அவர்களை மீட்க வழிவகை செய்யும். இந்த மீட்சியானது தனி மனிதர்களுக்கு மட்டுமான தற்காலிகமான் ஒன்றாக இல்லாமல்  அவர்களுடைய எதிர்காலச் சந்ததியினர் வரையிலும் தொடரக்கூடிய நிரந்தமான , உண்மையான மீட்சியாக இருக்கும். 

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக குஜராத் கலவரங்களில் தொடர்புடையவர்களை நேர்கண்டு, பல ஆவணங்களைச் சேகரித்து, தீர ஆய்ந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கின்றார் பத்திரிகையாளரான ரேவதி லால். மதத்தின் பெயரால் மக்கள் மனதில் விதைக்கப்படுகிற நஞ்சைப் பற்றியும் அரசியல் லாப நோக்கங்களுக்காக பொதுமக்களின் உயிரைக் கொல்லவும் தயங்காத தனி மனிதர்கள் குறித்தும் அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் மிகச்சிறந்த தொடக்கம்.

The Anatomy of Hate Paperback by Revati Laul (Author) - Amazon

திங்கள், 6 ஏப்ரல், 2020

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் - மயிலன் ஜி சின்னப்பன்



Like most human behavior, suicide is a multi causal act. Teasing out the strongest predictive variables is difficult, particularly because such internal cognitive states may not be accessible even to the person experiencing them. We cannot perceive the neurochemical workings of our brain, so internal processes are typically attributed to external sources. Even those who experience suicidal ideation may not understand why or even if and when ideation might turn into action.

-Michael Shermer , Scientific American

இவ்வுலகில் பிறந்த ஒவ்வோர் உயிரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் இயற்கையாகவோ அல்லது வேறு புற காரணிகளின் பொருட்டோ தத்தமது இயக்கத்தை நிறுத்திக் கொள்வதை, அல்லது நின்று போவதை, நாம் மரணம்/மரணித்தல் என்கிறோம். மனிதர்களாக இருக்கும் வகையில் அவர்கள் உருவாக்கிய நினைவுகளின் வாயிலாக, அவர்தம் சுற்றத்தோடு கொண்டிருக்கிற உறவின் வாயிலாக, அவர் கொண்டிருந்த (அல்லது கொண்டிருந்ததாக அனைவரையும் நம்பவைத்த)  பண்புநலன்களின் வாயிலாக, இறந்துபோனவரைக் குறித்த ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளுகிறோம்.

இறந்துபோனவர் குறித்து நாம் உருவாக்கிக் கொள்ளுகிற மனச்சித்திரம் முழுக்கவே நமது பார்வைக் கோணமே அன்றி அவரை இன்னார் என்று விளக்கிச் சொல்கிற வரையறையாகிவிடாது. Our opinion or perception is entirely what we interpret about the deceased person rather than being the definition of their personality.

ஓர் உயிரின் மறைவு, அதை எல்லோராலும் எடுத்தாளப்படுகிற, உரிமை கோரப்படுகிற ஒன்றாகவும் மாற்றிவிடுகிறது. இறந்தவரைப் பற்றி யாரும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்; நல்லவிதமாகவோ அல்லது வெறுப்புடனோ அல்லது தனிபட்ட வெறுப்புக்கு கணக்குத் தீர்க்கும் வகையிலோ; எப்படியானாலும் மறைந்தவர் வந்து கேள்வி கேட்கப் போவதில்லையல்லவா ?

தனிப்பட்ட முறையில் மரணங்களால் வெகுவாக பாதிப்பிற்குள்ளாகும் ஆள் நான்; எந்த ஒரு உயிரிழப்பையும் எளிதாக ஏற்றுக்கொள்ளவே முடியாது.  இது குறித்து நண்பர்களோடு நிறையவே பேசியிருக்கிறேன். தெரிந்தவர்கள் என்று இல்லை; கொஞ்சம் கூட தொடர்பில்லாத யாரோ ஒருவருடைய மரணச் செய்தியைக் கேள்விப்பட்டாலும் அதே உணர்வு தான்.சாலை விபத்துகள், இயற்கை மரணம், தற்கொலை, மூப்பு, நோய் என எப்படி நிகழ்ந்த மரணமாக இருந்தாலும் அதற்கு காரணங்களும் விளக்கங்களும் தேடி மனதை ஆற்றிக் கொள்ளவும் தேற்றிக்கொள்ளவும் முயல்கிற பெரும்பாலானோர் போலவேதான் நானும்.

என் அம்மா அடிக்கடி சொல்கிற விஷயம் ஒன்று உண்டு. ”செத்துப் போறவங்களுக்கு அந்த ஒரு நிமிஷ வலிதான். சுத்தியிருக்குறவங்களுக்கு அவங்களோட வாழ்நாள் முழுக்க அது வலி.” இயற்கை மரணமே இப்படியென்றால், உண்மையில் தற்கொலை முடிவை எடுக்கிறவர்கள் தன்னைச் சுற்றியுள்ளவர்களை வாழ்நாள் முழுமைக்கும் தண்டித்துவிடுகிறார்கள் என்றுதான் பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது.

அப்படியொரு தற்கொலையில் தான் தொடங்குகிறது ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’. நாம் நினைப்பதைப் போல இங்கு கூறாய்வு செய்யப்படுவது அவனுடைய உயிரற்ற உடல் அல்ல. பிரபாகரனுடைய நண்பனாகிய கதைசொல்லியின் பெயர் நமக்குச் சொல்லப்படுவதில்லை. மாறாக அவனுடைய பார்வையில், அவன் வழியாகத் தான் பிரபாகரனைக் குறித்து நாம் அறிந்து கொள்கிறோம். பிரபாகரனின் மரணத்திற்கான /தற்கொலைக்கான காரணத்தை அறியும் பொருட்டே துவங்குகிறது கதைசொல்லியின் தேடல்.

கதைசொல்லியின் ஐயங்களும், முன்முடிவுகளும், தீர்மானங்களும், அற்பத்தனங்களும், கேள்விகளும், மனவுளைச்சலும் நம்முடையதாகிவிடுகின்றன.ஒருகட்டத்தில் வாசிக்கிற நாமே கதைசொல்கிறவராக மாறிவிடுகிறோம்.  நாவலின் முதல் பாதி முழுக்க நாம் சந்திக்கிற உரையாடுகிற ஒவ்வொருவரும் தத்தமது உலகத்தில் தம்மையே முன்னிறுத்தி தங்களுடைய கோணத்தில் சொல்கிற கதைகளில் நாமும் பிரபாகரனும் துணைப் பாத்திரங்களே.

பிரபாகரனின் உற்ற நண்பனாகத் தன்னைக் நிறுவிக் கொள்கிற சதாசிவம் தொடங்கி, செவிலி நாஸியா, மணி, தாமோதரன், பாஸ்கர், லீமா, அன்வர் என அத்தனை பேரும் ஒவ்வொரு முடிச்சைப் போட்டு பிரபாகரனின் மரணத்துக்கு வெவ்வேறு சாயங்களைப் பூசிச் செல்கின்றனர்; காதல் தோல்வி, குடும்பச் சிக்கல், பணி நிமித்தமான மன அழுத்தம், போதைப் பழக்கம்,  அகந்தை, ஏன்.. அமானுஷ்ய சாயமும் கூட. எல்லா தேடல்களையும் போலவே பிரபாகரனின் மரணத்திற்கான விடைதேடலும் இடைநிறுத்தத்திற்குள்ளாகிறது.

புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் ஏழாண்டுகளுக்குப்பின்  மீண்டும் தொடர்கிற தேடலில் ஒவ்வொரு முடிச்சும் கதைசொல்லியின் பார்வையிலேயே அவிழ்க்கப்படுகிறது. இறுதியில் நாம் எதிர்பார்க்கிற விடை கிடைத்ததாவென புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றுமொரு பாத்திரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தலைவராக வருகிற மயில்சாமியுடையது. ஒரு அரசியல் கட்சிக்கு கொஞ்சமும் குறையாத அளவு அதிகாரத்திமிரும், பதவி தருகிற மிதப்பும், உள்ளரசியலும், தனிமனித வஞ்சம் தீர்த்தலும் மருத்துவத்துறையில் (லும்) நிறைந்திருப்பதே நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கிறது

மேலே குறிப்பிட்ட எல்லா பாத்திரங்களுமே சமூகத்தின் வெவ்வேறு பண்புநலன்களைக் கொண்ட வெவ்வேறு முகங்களின் மாதிரிகள் எனச் சொல்லலாம். நாவலின் முதல்பாதியில் அவர்களுடைய தரப்பு நியாயங்களையும் விளக்கங்களையும் கேட்டறிந்து கருத்துருவாக்கம் செய்யும் நாம், இரண்டாம் பாதியில் ஒவ்வொருவர் சொல்கிற தகவலுக்கும் பின்னாலிருக்கிற தரவுகளைப் பகுத்தறிந்து பார்த்து உண்மையை உணர்ந்து கொள்கிறோம். Like a detailed case study or psychoanalysis.

மயிலனின் சிறுகதைகளில் நான் தொடர்ந்து கவனித்து வருகிற கூறு ஒன்றுண்டு. பாத்திரங்களின் வழி தனிமனிதர்களின் ego குறித்தும் அவர்கள் தங்களைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கிற பிம்பம் குறித்தும் நிறையவே பேசப்படும். அந்த ego சிறிதளவேனும் சீண்டப்பட்டாலோ அல்லது காயப்பட்டாலோ, போலி முகமூடிகளைக் கிழித்துக் கொண்டு சில்லறைத்தனங்கள் அத்தனையும் வெளிப்படும். பின்பு சுய பரிசோதனையும், கேள்விகளுமாய்த் தொடர்ந்து இறுதியில் தெளிவடைவதோடு , தன் அற்பத்தனத்தை தானே நொந்துகொள்கிற புரிதலோடு முடியும். இந்த படிநிலைகளின் விரிவான வடிவமாகவே ’பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ நாவலாகப் பார்க்கிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ’மனநலம்’ என்பதே அதிகம் பொருட்படுத்தப் படாத இன்றைய சூழலில், லூசு மெண்ட்டல் மாதிரியான சொற்கள் அத்தனை சுளுவாக புழங்குகிற சமூகத்தில், மருத்துவர்களின் (மாணவர்களின்) மன அழுத்தம் குறித்தும் அதற்கான புற காரணிகளைக் குறித்தும்  விரிவானதொரு  உரையாடலையும் ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ வாயிலாகத் துவக்கி வைத்திருக்கிறார் மயிலன்.

இதுவரை மரணம் குறித்தும் உயிர்வாழ்தல் குறித்தும் இத்தனை விரிவாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பேசிய புத்தகங்கள் எவையெனக் கேட்டால் ஆங்கிலத்தில் Atul Gawande எழுதிய Being Mortal, Paul Kalanithy எழுதிய When breath becomes air ஆகியவற்றைச் சொல்லலாம். இரண்டு புத்தகங்களை எழுதியவர்களுமே மருத்துவர்கள்; நரம்பியல் அறுவை சிகிச்சை வல்லுநர்கள். அன்றாடம் பிறப்பையும் இறப்பையும் ஒர் நாளின் சுழற்சியில் பல முறை கடக்கிறவர்களுக்கு அவற்றின் பின்னாலிருக்கிற உணர்வுகளும் மதிப்பீடுகளும் அற்றுபோய்விடும் என்ற பொது நம்பிக்கையை மாற்றிய புத்தகங்கள் இரண்டுமே. தமிழில் இவ்வகையான எழுத்துக்கு ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ ஒரு துவக்கமாக இருக்குமென நம்புகிறேன்.

An awesome medical-psychoanalysis-thriller in Tamil..and that's a first..! நிச்சயமாகத் தவறவிடக் கூடாத புத்தகம்...!

வாழ்த்துகள் மயிலன்...! :)

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இங்கு க்ளிக்கவும்

புதன், 4 மார்ச், 2020

Half a day for caste ? - பெரியார், ராஜாஜி, காமராஜர் , கல்வி


ஓரிரு மாதங்களுக்கு முன்பு மத்திய அரசால் முன்வைக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை குறித்தும், அதனைத் தொடர்ந்து நாடுமுழுவதும் எழுந்த விவாதங்கள் குறித்தும் ஓரளவு அறிந்திருப்போம். மும்மொழிக் கொள்கை, மூன்று வயது முதலே குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, பல்கலைக் கழகங்களின் உரிமைகளில் மாற்றம், தேசிய அளவிலான திறனறி தேர்வுகள், என நடைமுறைச் சிக்கல் மிகுந்த விஷயங்களை முன்வைத்ததும், கல்வியின் மீது மாநில அரசுகளுக்கு இருக்கிற உரிமைகளை மறுதலிக்கும் வகையிலும் இருப்பதாக சர்ச்சைகளும் கருத்து முரண்களும் எழுந்தன.

ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரின் தொடர் போராட்டங்களுக்குப் பின் இந்தக் கல்விக் கொள்கை வரைவில் சில மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு ஒப்புக் கொண்டதெனினும், எந்தளவு நடைமுறை படுத்தப்படுமோ அறியோம்.

இந்நிலையில் விடுதலைக்குப் பிறகான இந்தியாவில்,  முதன் முதலில் நாடு முழுவதும்  பெரும் எழுச்சிக்கும் அரசியல் மாற்றங்களுக்கும் வித்திட்ட ஒரு கல்விக் கொள்கையைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

1953 ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் ராஜாஜி என்கிற ராஜகோபாலாச்சாரி முன்வைத்ததுதான் ’குலக்கல்வித் திட்டம்’ என்று அறியப்பட்ட ‘மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம்’ (Modified System of Elementary Education - MSEE) .இந்தப் புத்தகம், ராஜாஜி முன்வைத்த கல்வித்திட்டம் குறித்தும் அதற்கு முன்னும் பின்னுமான தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்தும் விரிவாகப் பேசிய (மறைந்த) பேராசிரியர் D.வீரராகவன் அவர்களின் ஆய்வுக் கட்டுரையை மையமாக வைத்து எழுதப்பட்டது. கட்டுரையையும் இன்னபிற தகவல்களையும் அவை வெளியான காலத்தின் பொருட்டு செப்பனிட்டு சரிபார்த்து தொகுத்து வெளியிட்ட திரு.A.R.வெங்கடாசலபதி அவர்கள், மிக விரிவானதொரு முன்னுரையையும் எழுதியிருக்கிறார்

முதலில் காலவரிசையில் சில நிகழ்வுகளையும்  அவை தொடர்பான சில தகவல்களையும் பார்ப்போம். அதன் பின் புத்தகத்தின் மையமான கல்விக் கொள்கை குறித்து பார்க்கலாம்.

1916 ஆம் ஆண்டு - பிராமணரல்லாதோர் கூட்டறிக்கை (Non-Brahmin manifesto) மதராஸ் மாகாணாத்தில் வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ / ’நீதிக் கட்சி’ நிறுவப்படுகிறது

1917 ஆம் ஆண்டு - சேலம் மாவட்டத்தில் வழக்கறிஞர் ராஜாஜி நகராட்சி மன்ற தலைவராகிறார்

1920 ஆம் ஆண்டு - தனது அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ராஜாஜி சென்னைக்கு குடிபெயர்கிறார்

1924 ஆம் ஆண்டு - விருதுப்பட்டியைச் சேர்ந்த இளைஞர் காமராஜ் வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்கிறார்

1930 ஆம் ஆண்டு - காந்தியைப் பின்பற்றி ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட காங்கிரஸ் போராட்டங்களில் தொடர்ந்து முன்நின்று பலமுறை சிறை செல்கிறார் காமராஜர்.

1936 ஆம் ஆண்டு - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சத்தியமூர்த்தி அவர்களும் செயலாளராக காமராஜரும் பதவியேற்கிறார்கள்

1937 ஆம் ஆண்டு -  அப்போதைய மாகாணங்களுக்கு தன்னாட்சி (provincial autonomy) வழங்கும் பொருட்டு நடத்தப்பட்ட சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, ஒருங்கிணைந்த மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராகிறார் (Premier) ராஜாஜி

அடுத்த பத்தாண்டுகளில் இரண்டாம் உலகப் போர், காந்தி முன்நின்று நடத்திய வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் ப்ரிட்டிஷாருக்கு ஆதரவாக முடிவெடுத்ததன் காரணமாக காந்திக்கும் ராஜாஜிக்குமான கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கின்றன; காங்கிரஸ் கட்சிக்குள்ளும் அவருடைய செல்வாக்கு குறைகிறது. அதே வேளையில் கொஞ்சம் கொஞ்சமாக யார் எந்தப் பதவிக்கு செல்ல வெண்டுமென முடிவு செய்கிற அளவுக்கு காமராஜரின் கை ஓங்குகிறது.

1947 ஆம் ஆண்டு - சுதந்திர நாடாகிறது இந்தியா - பிரிவினைக்குப் பிந்தைய மேற்கு வங்கத்தின் ஆளுநராக நியமிக்கப்படுகிறார் ராஜாஜி

1948 ஆம் ஆண்டு - மவுண்ட்பேட்டன் பிரபுவுக்குப் பின் 1950ல் குடியரசு நாடாகும் வரை, இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பதவி வகிக்கிறார் ராஜாஜி

1950 ஆம் ஆண்டு - தொடங்கி 1952 வரை நேருவின் அமைச்சரவையில் இடம்பிடித்தாலும், உடல் நலத்தை காரணம் காட்டி பதவி விலகுகிறார்

1952 ஆம் ஆண்டு - மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கையும், மதராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி மாநிலமாக்கவும் உச்சகட்டமாக பல போராட்டங்கள் வலுப்பெற்ற சூழல் அது. இந்திய குடியரசின் முதல் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. தேர்தலில் போட்டியிடாத ராஜாஜியை , மேல்சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தபின் முதலமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் பிரகாசா அழைப்பு விடுக்கிறார். பதவியேற்றபின் நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை நிரூபித்து இரண்டாவது முறையாக மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராகப் பதவி ஏற்கிறார் ராஜாஜி.
// A new class of government servants had to be created and groomed, a class, in the words of Macaulay, of 'interpreters between us and the millions whom we govern; a class of persons, Indians in blood and colour, but English in taste, in opinions, in morals and in intellect'. Macaulay dealt the final blow to whatever native institutions of learning existed and planted modern English education instead, to train up a stratum of docile executants of the English cut off from every type of contact with their people.//
p 68 - Half a day for caste? - By D.Veeraraghavan
கல்வி குறித்தும் கிராம பொருளாதாரம் குறித்தும் காந்தி கொண்டிருந்த நம்பிக்கைகளை சுருக்கமாகப் பேசிச் செல்கிறார் வீரராகவன். நவீன தொழில்நுட்பமும், தொழிற்சாலைகளும், மக்களை நுகர்வுக் கலாச்சாரத்தை நோக்கித் தள்ளிவிடும் எனவும், அப்படி இந்திய நாடு தொழில்துறையில் வளார்ச்சி பெற்றால் அது ஏனைய வளரும் நாடுகளை சுரண்ட நேரிடும் எனவும் காந்தி திடமாக நம்பினார். தற்சார்பு கொண்ட கிராம பொருளாதாரத்தை அமைப்பதே சுதந்திர இந்தியாவின் நோக்கம் என்றார். பெண்களுக்கெதிரான அடக்குமுறை,தீண்டாமை, சாதிக் கொடுமைகள், குழந்தைத் திருமணம், இவை ஏதுமற்ற சமூகம் அமைய வேண்டுமெனவும் அவர் விரும்பியதாக வீரராகவன் குறிப்பிடுகிறார்.காந்தி முன்வைத்த கல்விக் கொள்கைகளும் அவருடைய இந்த சமூக-பொருளாதார நம்பிக்கையைச் சார்ந்ததாகவே இருந்தது. காந்தியின் இத்தகைய கல்விக் கொள்கைகள் மீது தீவிர பற்று கொண்டவராக விளங்கினார்  ராஜாஜி.
//His views on Varnashrama dharma were more conservative than even those of Gandhi. He believed in the continuance of the traditional family apprenticeship.However, unlike Gandhi, Rajaji did not believe in institutional education for children. Schools were prison houses, where they were imprisoning the pupils too long in the classrooms; he would be content if he could get the Madras teachers to agree only to that part of his scheme cutting down the school hours even if nothing else was possible//
p-73 - Half a day for caste  - By D.Veeraraghavan                      
1952 ஆம் ஆண்டு ராஜாஜி, மதராஸ் மாகாணத்தின் முதல்வராகப் பதவியேற்றபின், அப்போதைய கல்வி அமைச்சர் M.V.கிருஷ்ணாராவ் அப்போதைய கல்விக் கொள்கையிலுள்ள குறைகளைக் களையவேண்டுமானால ஆரம்பப் பள்ளிகளையும் அவை இயங்கும் முறையையும் ஆராய்ந்து மறுசீரமைப்பு செய்ய வேண்டுமெனவும் சொல்லிவிட்டு ஒரு புதிய திட்டத்தினை முன்வைக்கிறார். அந்த திட்டத்தின் படி ஒரு நாளில் இரண்டு ஷிஃப்டுகளில் பள்ளிகள் இயங்கவேண்டுமெனவும், மாணவர்களுக்கு அரை நாள் மாத்திரம் கல்வி கற்கவும், மீதமுள்ள அரை நாள் அவர்களுடைய பெற்றோரின் தொழிலை பள்ளியிலோ அல்லது பள்ளிடோடு அமைந்த பட்டறையிலோ கற்றுக் கொள்ளவும் ஏதுவாக இருக்குமென சட்டசபையில் கூறுகிறார். பள்ளிகளில் சத்துணவு வழங்கவும் அரசாங்கம் கருத்தில் கொண்டிருந்தது. அப்போது பட்ஜெட் தொடர்பாக அவையில் எழுந்த தொடர் விவாதங்களால் இந்த பிரச்சனை அவ்வளவாக கவனம் பெறவில்லை.

ஆனாலும், முதல்வர் ராஜாஜி அப்போதைய மாநில கல்வித்துறை இயக்குநரைத் (Director of Public Instruction - DPI) தொடர்பு கொண்டு மேற்குறிப்பிட்ட திட்டம் தொடர்பாக தீர ஆராய்ந்து ஒரு திட்ட வரைவை உருவாக்க ஆணையிடுகிறார். அதனைத் தொடர்ந்து கல்வித்துறை இயக்குநர் கோவிந்தராஜுலு அப்போதைய இணை இயக்குநர் சுந்தரவடிவேலுவுக்கு உடனடியாக ஒரு கடிதம் அனுப்புகிறார் . முதலமைச்சரின் ஆணையின் பேரில் கிராமப்புற ஆரம்பப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அரை நாள் கல்வி கற்கவும், அரை நாள் அவர்களுடைய பெற்றோரின் தொழிலைப் பழகவும் ஏற்ற வகையில் ஒரு கல்வித் திட்டத்தை வடிவமைக்கப் பணிக்கப்படுகிறார்.

சுந்தரவடிவேலு கடுமையான மனப்போராட்டத்திற்கு ஆளானாலும் , இதற்கு முந்தைய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு  இதே போன்ற திட்டங்களைச்  சிறிய அளவில் செயல்படுத்த முயன்று தோல்வியுற்ற நிகழ்வுகளை விளக்கி பதில் கடிதம் எழுதுகிறார். ஆனாலும் சில மாதங்களுக்குப் பின் முதல்வர் ராஜாஜியின் வற்புறுத்தலின் பேரில் வேறு வழியே இன்றி ,திட்ட வரைவை உருவாக்குகின்றார்.

Modified Scheme of Elementary Education (MSEE) - மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

1. மாணாக்கர்களுக்கான பள்ளி நேரம் நாளொன்றுக்கு மூன்று மணி நேரங்கள் மட்டுமே.

2. அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களை இரு பிரிவுகளாக பிரிக்க வேண்டும். காலையில் ஒரு பிரிவினரும் மாலையில் ஒரு பிரிவினரும் கல்வி கற்கலாம்

3. இரு பிரிவுகளுக்கும் பொதுவான ஆசிரியர்களே பாடமெடுப்பார்கள்

4. கல்வி நேரம் அல்லாத அரை நாள் வேளையில் மாணவர்கள் அவர்களுடைய பெற்றோரின் தொழிலை கற்றுக்கொள்ளவேண்டும். பெற்றோர்கள் ஒரு குறிப்பிட்ட தொழில் இல்லாமல் இருந்தாலோ அல்லது குடும்பத்தொழில் ஏதுமில்லாமல் இருந்தாலோ, அந்த மாணவர்கள் ஒரு விவசாயியுடனோ அல்லது ஒரு கைத்தொழில் கலைஞருடனோ பணியமர்த்தப் படுவார்கள்

திட்டம், இன்னும் பல கூறுகளைக் கொண்டிருந்தாலும் அவற்றுள் முக்கியமானது , இந்தக் கல்வித்திட்டம் கிராமப்புற தொடக்கக் கல்வி மாணாக்கர்களுக்கு/ பள்ளிக்கூடங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், நகர்ப்புற மாணாக்கர்களுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் பொருந்தாதெனவும் குறிப்பிட்டதே ஆகும்.

கல்வித்திட்டத்தின் வரைவு தயாரானபின் முதலமைச்சரின் ஆணையின் பேரில், சட்டமன்றத்தில் கலந்தாலோசிக்காமல், பிற உறுப்பினர்களுக்கோ, துறை சார் நபர்களுக்கோ (அப்போதைய கல்வி அமைச்சர் உட்பட)  கூட எந்தத் தகவலும் சொல்லப்படாமல் அனைத்து செய்தித்தாள்களுக்கும், நாளிதழ்களுக்கும் இந்தக் கல்வித்திட்டம் குறித்த சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது.

அடுத்த நாளிலிருந்தே சமூகத்தின் பல்வேறு தரப்புகளிலிருந்தும் இத்திட்டத்துக்கு எதிர்ப்புக் குரல்கள் எழத் தொடங்குகின்றது. தென்னிந்திய ஆசிரியர்கள் சங்கம் (South Indian Teacher's Union - SITU) ,தமது எதிர்ப்பை பதிவு செய்தது மட்டுமல்லாமல் இத்திட்டத்தை ஒரு வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தது. ஆசிரியர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இத்திட்டம் குறித்த தங்களுடைய மனக்குறையை வெளிப்படுத்தினர். தமிழகத்தின் அப்போதைய எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட்டுகளும் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை சட்டசபையில் விவாதத்திற்கு கொண்டுவராமல் ஜனநாயகத்துக்கு எதிரான வகையில், தன்னிச்சையாக செயல்பட்டமைக்காக ராஜாஜிக்கு தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர்; இத்திட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.
//Rajaji had always exhibited such supreme confidence in his own wisdom and intellect that he did not even for a moment think it worth consulting stakeholders. J.B Kripalani's remarks on the introduction of Basic Education are relevant here:
"It is not much the matter as the manner of introduction of his schemes that creates misunderstanding and opposition.This process of ushering in before the public. the finished product of one's own labours may be appropriate in art, it is scarcely suited for introducing practical reforms in which merely passive acquiescence is not sufficient but active cooperation and participation are of the essence." //
p-88 - Half a day for caste  - By D.Veeraraghavan
தந்தை பெரியார் தமது ‘விடுதலை’ பத்திரிக்கையில் . சேலம் திராவிட ஆசிரியர்கள் கூட்டமைப்பின் செயலாளர் திரு.A.வையாபுரி, ராஜாஜி முன்வைத்த புதிய கல்வித்திட்டத்தின் தீமைகள் குறித்து எழுதிய மிக விரிவானதொரு கடிதத்தைப் பதிப்பிக்கிறார். தொடர்ச்சியாக இந்தக் கல்வித்திட்டம் குறித்து சமூகத்தில் நிகழ்ந்த முக்கியமான உரையாடல்களையும் பலதரப்பட்ட விமர்சனங்களையும் ‘விடுதலை’யில் பதிவு செய்கிறார். ராஜாஜி முன்வைத்த கல்வித்திட்டத்தை குலக்கல்வித் திட்டம் எனவும் வர்ணாஸ்ரம கல்வித்திட்டம் எனவும் முதலில் குறிப்பிட்டது பெரியார் தான்.  ராஜாஜி தொடர்ச்சியாக பிராமணரல்லாதோருக்கு எதிராகச் செயல்படுவதைச் சொல்லி முதல்வராக இருந்தபோது அவர் செய்த காரியங்களைப் பட்டியலிடுகிறார் பெரியார்.
  • 1937-39 ராஜாஜி மதராஸ் மாகாணாத்தின் ப்ரீமியராக இருந்தபோது கல்விக்கான கூடுதல் வரி நீக்கம் காரணமான தமிழகத்தின் பல மாவட்டங்களில் கல்வித்துறைக்கான நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு 60 மாணாக்கர்களுக்கு குறைவாக இருந்த உயர்நிலைப் பள்ளிக்கூடங்கள் மட்டுமல்லாது 2500 தொடக்கப் பள்ளிகளும் மூடப்பட்டன
  • பொருளாதரப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி வனத்துறை கல்லூரி மூடப்பட்டது
  • கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலின மாணவர்களுக்கான கல்வி மானியங்கள்/சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன
  • 1952-54 ஆண்டுகளில் ராஜாஜி தமிழக முதல்வராக இருந்தபோதும் 6000 தொடக்கப் பள்ளிகளுக்கு மேல் மூடப்பட்டன
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மும்முனைப் போராட்டம் தொடங்கியதும் இதே 1953 வருடத்தில் தான்.

  • மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டத்துக்கான எதிர்ப்பைத் தெரிவிக்க முதல்வர் ராஜாஜியின் வீட்டை முற்றுகையிடுதல்
  • கல்லக்குடி ரயில்நிலையத்துக்கு டால்மியாபுரம் என்ற பெயரை சூட்டுவதற்கான எதிர்ப்பைத் தெரிவித்து ரயில் மறியல்
  • நேரு திமுகவினரின் கோரிக்கைகளுக்கு (ராஜாஜியை முதல்வர் பதவியிலிருந்து நீக்கும்படி கேட்டது) செவிசாய்க்க மறுத்து ,‘நான் சென்ஸ்’ என சொன்னதை எதிர்த்து ரயில் நிறுத்தும் போராட்டம்

இவையே மும்முனைப் போராட்டத்தின் நோக்கங்கள்.

சட்டமன்றத்தில் அத்தனை எதிர்ப்பையும் தாண்டி, எதிர்க்கட்சியின் தீர்மானங்களை மறுதலித்த ராஜாஜி,  இந்தக் கல்வித் திட்டம், மாநில அரசின் கொள்கை சார்ந்த முடிவு என்பதாலும், சட்டம் /சட்டத்திருத்தம் அல்ல என்பதாலும் அதனை உடனடியாக செயல்படுத்த ஆணையிடுவதோடு R.V.பாருலேக்கர் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைத்து இத்திட்டத்தை மறு ஆய்வு செய்யவும் பரிந்துரைக்கிறார். இந்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வியாளர் ஒருவர் கூட சேர்க்கப்படவில்லை என்பது கூடுதல் தகவல். சில மாதங்களுக்குப் பிறகு பாருலேக்கர் கமிட்டி ஆய்வறிக்கையைச் (PCR - Parulekar Committee Report) சமர்ப்பித்தபின் இந்தப் பிரச்சனை இன்னும் பூதாகாரமாக வெடித்தது.

இதன் பிறகு மாநிலம் முழுவதும் எழுந்த கடுமையான எதிர்ப்பலைகளின் காரணமாக ராஜாஜி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய, முதல்வராகப் பதவியேற்கிறார் காமராஜர். முதல் வேலையாக ராஜாஜி கொண்டுவந்த கல்வித்திட்டம் கைவிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அழகப்ப செட்டியார் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைத்து புதிய கல்வித்திட்டம் ஒன்றை உருவாக்க ஆணையிடுகிறார் காமராஜர்.

அழகப்ப செட்டியார் கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு முழு மூச்சாக தொடக்கக் கல்வியை வலுப்படுத்தும் முனைப்பிலிருந்தார் காமராஜர். மத்திய அரசின் முதல் ஐந்தாண்டுத் திட்டம் வழங்கிய நிதியைக் கொண்டு கிராமங்களெல்லாம் ’ஒரு-ஆசிரியர்’ பள்ளிகள் தொடங்கப்பட்டன. 4267 தொடக்கப் பள்ளிகள் புதிதாக திறக்கப்பட்டன. சராசரியாக 4 லட்சம் மாணவர்களுக்கு மேல் புதிதாக பள்ளிக் கூடங்களில் சேர்ந்தனர். இன்றுவரை பேசப்படும் திட்டமான சத்துணவுத் திட்டமும் அறிமுகப் படுத்தப்பட்டது.
//Between 1956-57 and 1971-72, the number of schools increased from 25,268 to 32,021 and the number of pupils from 30.88 lakhs to 65.77 lakhs.
Every child between 6 and 7 years of age was compulsorily enrolled in school. No child was allowed to withdraw before reaching the fifth standard or attaining 12 years of age, whichever was earlier. As a result of this measure, more than 3 lakh children were additionally enrolled , and about 6,600 more teachers employed. //
//  The most spectacular measure was the midday meals scheme. Kamaraj revived the scheme and placed it on a regular footing by subsidizing the costs as part of the Education Plan on a 60:40 basis - 60 percent being the state's share while the rest was covered by local public voluntary contribution. By 1962, an overwhelming 26,406 schools out of 27,135 were covered by the scheme.
11,80,000 pupils were benefited at a cost of Rs.1.15 Crores. In addition to the midday meals scheme, the Scholl Improvement Scheme was launched all over the state, by which local people were involved voluntarily in the development of school facilities and in providing books, slates, uniforms, etc for poor children.//
 p-137-138 - Half a day for caste  - By D.Veeraraghavan 
இன்றைக்கும்  மாநிலத்தின் உரிமைகளுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டாலோ, அமைப்புரீதியான ஒடுக்குமுறை கொண்டு நமது மாணவர்களின் கனவுகளைத் தகர்க்கும் வண்ணம் ஏதும் நடந்தாலோ, அடிப்படைக் கல்வியைக் கூட பெற முடியாதவாறு தடைக்கற்களை அரசுகளே முன்நின்று உருவாக்கினலோ..  இந்த உரிமைகளுக்குப் பின்னே மறைந்து கிடக்கிற பல மாமனிதர்களின் போராட்டங்களையும் , பெருமுயற்சிகளையும், தொலைநோக்குப் பார்வையையும், சிந்தனைத் திறத்தையும் ஒரு பெருமூச்சோடு நினைவு கூர்வதைத் தவிற நம்மால் என்ன செய்து விட முடியும் ?

அதே சமயம் ஒரு மாநிலத்திற்கோ அல்லது நாட்டுக்கோ தலைமைப் பதவியை ஏற்கும் ஒருவர், தனது தனிப்பட்ட கொள்கைகளுக்கும்/நம்பிக்கைகளுக்கும் முன்னுரிமையளிக்காமல், தான் சார்ந்திருக்கிற சாதி/மதம் குறித்த மனச்சாய்வுகள் ஏதுமின்று, சமூகத்தின் அனைத்து படிநிலையில் இருக்கிற மக்களையும் அவர்தம் நல்வாழ்வையும் மட்டுமே கருத்தில் கொண்டு தொலைநோக்குடன் செயல்பட வேண்டுமென்பது தெள்ளத் தெளிவாகப் புலப்படுகின்றது. 

கல்வியாளர்களும், ஆசிரியர்களும், அரசின் கொள்கை முடிவுகள் மாணவர்களின் எதிர்காலத்தை எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து அக்கறை கொண்டவர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்

Half a day for caste ? (Education and Politics in Tamilnadu, 1952-55)
By D.Veeraraghavan | Left Word | Rs.250 | ISBN 9788194357902

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க : https://www.amazon.in/Half-Caste-Education-Politics-Tamil/dp/819435790X
Related Posts Plugin for WordPress, Blogger...