“எதிர்காலத்தில் முளைப்போம் என்பதற்காக விதைக்கப்பட்ட இறந்த காலத்தின் துகள்கள் என்பதல்லாமல் நாம் அனைவரும் யார் ? அதிலொரு துகளான நான் என் எண்ணங்களை எழுதுகிறேன்.”
- ஜஹானரா பேகம் (பெருவலி, சுகுமாரன்)
முகலாய மன்னர் ஷாஜஹானுடைய மகளான ஜஹானரா பேகம் பற்றி பெயரளவில் தான் பரிச்சயம். அவருடைய ஆளுமை குறித்தோ வரலாற்று முக்கியத்துவம் குறித்தோ பெரிதும் யோசித்ததில்லை.
சாரு எழுதிய ஒளரங்கசீப் தொடர் நிறைவடைந்து புத்தகமாக வெளிவருகையில் அவரை வாசகசாலைக்காக நேர்கண்ட போது ஜஹானரா குறித்த கேள்விக்கு அத்தனை உற்சாகத்துடன் பதில் சொன்னார். கிட்டத்தட்ட 30 பக்கங்களுக்கு ஜஹானரா பற்றி அந்த புத்தகத்தில் எழுதியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
பின்னர் ஜஹானரா பேகத்தின் டைரிக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு கவிஞர் சுகுமாரன் எழுதிய ‘பெருவலி’ நாவலைத் தேடித் தெரிந்து கொண்டு வாசிக்கத்துவங்கியிருந்தேன். அதே நேரத்தில் இந்த நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டு வெளிவந்திருந்தது. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு சுகுமாரன் அவர்கள் நேரடியாக இந்தப் புத்தகம் குறித்தும் ஜஹானரா பேகம் பற்றியும் பேசியதைக் கேட்டதும் அற்புதமான அனுபவம்.
பெருவலி நாவல் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. முதல் பகுதி அந்தப்புரத்தில் அரச குடும்பத்துப் பெண்களுக்கு துணையாய் இருந்து பணிசெய்யும் பானிபட் என்னும் (ஹிஜ்ரா) திருநங்கையின் பார்வையில் செல்கிறது. பேரரசர் ஷாஜஹான் , ஷாஜஹானாக மாறுவதற்கு முன் குர்ரமாக இருந்த காலம் தொட்டு, அவருக்கும் அவருடைய தந்தை ஜஹாங்கிருக்குமான உரசல்கள், உள் அரசியல், அதிகாரப் போட்டி பற்றியும் , அப்போதைய முகலாயர்களின் படையெடுப்புகள் பற்றியும் பானிபட்டின் வாயிலாக பேசிக்கொண்டே ஜஹானரா பேகம் பற்றிய அறிமுகமும் நிகழ்கிறது.
அரசியல் அறிவு, சமயோசிதம், எல்லோருக்குமாக சிந்திக்கும் மனப்பாங்கு , தலைமைப் பண்பு என அத்தனையும் ஒருங்கே கொண்ட பெரும் ஆளுமையாகத் திகழும் ஜஹானரா தந்தைக்கும் , சகோதரர்களுக்குமான அதிகாரப் போராட்டத்தின் மத்தியில் சிக்கிக் கொண்டும், முகலாயர்களின் பெண்களுக்கெதிரான அடக்குமுறைகளின் காரணமாக சொந்த விருப்பு வெறுப்புகளையும் கூட வெளிக்காட்ட முடியாத மனப்போராட்டத்துடனும் வாழ்ந்திருக்கிறார்.
ஜஹானராவுக்கும் ராஜபுத்திர குறுநில மன்னன் சத்ரசாலுக்கும் (துலேர்!) இடையேயான அந்த மெல்லிய காதலும் அவனுடைய வருகையையும் இருப்பையும் ஜஹானரா விவரிக்கிற விதமும் காவியத்தன்மை வாய்ந்த இடமாகத் தோன்றியது. முகலாய அரசகுடும்பத்தின் பெண் வாரிசுகள் திருமணம் செய்து கொண்டால் அவர்களின் பிள்ளைகளால் அதிகாரப் போட்டி ஏற்படக் கூடுமென மாமன்னர் அக்பரின் காலம் தொட்டு அவர்களுக்கு திருமணம் செய்து கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. இதனாலும் ஏனைய பிற அரசியல் காரணங்களாலும் ஜஹானராவின் காதல் கைகூடாமலே போகின்றது.
பானிபட்டின் பார்வையிலிருந்து ஜஹானராவின் பார்வைக்கு கதை நகர்கிற இரண்டாவது பகுதி நிகழ்வுகள் தீவிரமான நிகழ்வுகளால் நிரம்பியிருக்கின்றது. ஒளரங்கசீப் தனது சகோதரன் தாராவையும் தந்தையையும் எதிர்த்து காய் நகர்த்த அதனைத் தொடர்ந்து போர்களும் , படையெடுப்புகளும், மரணங்களுமாய் நகர்கின்றது புத்தகம். பெரும்பாலும் ஜஹானராவின் மனக்குமுறலாய் வெளிப்பட்டிருக்கின்றது. ஒரு கட்டத்துக்கு மேல் ஜஹானராவின் மனப்பாங்கும் அவருக்கு எழும் கேள்விகளும் தற்காலத்திலும் பொருந்தக் கூடியவையாகவும் இப்போதும் யாராலும் பதிலளிக்க முடியாதவையாகவும் தோன்றியது. அது போலவே காலத்தையும் இடத்தையும் பாத்திரங்களின் பெயர்களையும் நீக்கிவிட்டால் வேறெந்த காலத்திலும் பொருந்திவிடக் கூடிய நிகழ்வுகளாகவே இருக்கின்றன. Maybe, history repeats itself…! Maybe not...!
சுகுமாரன் அவர்களுடைய கவிதைகளையும் மொழிபெயர்ப்புகளையும் வாசித்திருக்கிறேன். அவருடைய வெலிங்டன் நாவலை இன்னும் வாசிக்கவில்லை. ’பெருவலி’ நான் வாசிக்கிற அவருடைய முதல் புனைவென்றாலும் அவருக்கான பிரத்யேக மொழிநடையினையும் கவித்துவமான உரைநடையையும் என்னால் அடையாளம் கண்டு உள்வாங்கிக் கொள்ளமுடிந்தது. கவிதை, உரைநடை, வரலாறு, பெண் மனம் என அத்தனையும் சந்திக்கிற மையப்புள்ளியாகத் திகழ்கிறது இந்தப் புத்தகம்.
பெருவலி, சுகுமாரன்
காலச்சுவடு பதிப்பகம்
(முன்னட்டை ஓவியமும் வடிவமைப்பும் அத்தனை அழகு)
புத்தகம் இங்கு கையிருப்பில் இல்லாத போது பதிப்பகத்தாரிடமிருந்து தருவித்து சுகுமாரன் அவர்களிடம் கையெழுத்தும் பெற்றுத்தந்த நண்பர் சாலமனுக்கு நன்றி



