நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

புதன், 29 ஜூலை, 2026

பிரார்த்தனையைப் பின்தொடர்ந்து - சுந்தர் சருக்கை (மொ.பெ - சீனிவாச ராமாநுஜம்) - எதிர் வெளியீடு | Following a Prayer



 

உண்மையில் மொழி என்பது என்ன ? ஒரு சொல்லின் மதிப்பு அதன் பொருளைப் பொருத்ததா அல்லது கேட்பவரின் எதிர்வினையைப் பொருத்ததா ? ஒலிதான் மொழியெனில் மனதுக்குள் பேசுவதெல்லாம் மொழியாகாதா ? பேசுகிறவர்களையும் கேட்கிறவர்களையும் இணைக்கிற கருவிதான் மொழியா ? இசையென்பது மொழியா அல்லது வெறும் ஒலியா ? விலங்குகளின் சப்தங்களும் மொழிதானா ? கடவுள் எங்கிருக்கிறார் ? கடவுள்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழி என்று ஒன்று உண்டா ? நமது பிரார்த்தனைகள் என்னும் சொற்கள் எங்கே செல்கின்றன ?

இப்படியான கேள்விகளுக்கு மூன்று பதின்வயது சிறுமிகளின் தேடலின் வழியே தத்துவார்த்தமாக விடை தேட முயலும் புத்தகம்தான் தத்துவவியலாளர் சுந்தர் சருக்கை எழுதிய ‘Following a Prayer’ என்னும் நாவல். இந்நூலை தமிழில் ‘பிரார்த்தனையைப் பின்தொடர்ந்து ; என்ற பெயரில்  சீனிவாச ராமாநுஜம் அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார் (எதிர் வெளியீடு).

இதற்கு முன்பு நான் வாசித்த ‘ப்ரோஜக்ட் ஹெய்ல்மேரி’ என்னும் அறிபுனைக் கதையில் முதன் முதலில் ஒரு வேற்றுலகவாசியுடன் மனிதன் உரையாடும் பகுதி என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. மொழி பற்றியும் அதன் கட்டமைப்பு பற்றியும், எழுத்து / ஒலி வடிவமாக அது உருப்பெறுவதற்கான சூழல் குறித்தும் விளக்கங்களைக் கொண்ட, நாவலின் ஒரு சிறிய பகுதி அது. அதனைத் தொடர்ந்து மொழி, உரையாடல், மெளனம், புரிதல், தொடர்பாகவே வாசித்துக் கொண்டிருந்த நான், கண்டடைந்த புத்தகம் தான் சுந்தர் சருக்கையின் இந்நூல்.

 கதையின் முதல் அத்தியாயத்தில் , கர்நாடகத்தின் மலைசார்ந்த பகுதியிலுள்ள ஒரு பசுமையான கிராமத்தில் , வாய்த்துடுக்கான பன்னிரண்டு வயது சிறுமி கல்பனா வீட்டிலிருந்து காணாமல் போகிறாள். தன்னுடைய அஜ்ஜி (பாட்டி) பிரார்த்தனைகளைச் சொல்லி சாமி கும்பிடும்பொழுது அதனைக் கேலியாகக் கேள்வி கேட்கிறாள் கல்பனா. “நீங்கள் சொல்லும் இந்த பிரார்த்தனைகள் எங்கே செல்கின்றன ? கடவுள் எங்கிருக்கிறார் ? எங்காவது இருந்து இந்த பிரார்த்தனைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறாரா ?” எனக் கேட்க, கல்பனாவின் கேள்விகளால் துனுக்குற்ற அஜ்ஜி ஏதோ ஒரு பிரார்த்தனையை கண்மூடி சொல்லிவிட்டு , “இதோ இந்த பிரார்த்தனை எங்கே செல்கிறதென் நீயே தேடிப்போய்ப் பார்த்து கண்டுபிடி” எனச் சொல்லிவிட , கல்பனா விளையாட்டாக அஜ்ஜியின் சொற்களைப் பின்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேற , அப்படியாகத்தான் தொலைந்து போகிறாள்.

 அவள் குடும்பமும் ஊரும் அதிர்ந்து போய் அவளைத் தேடும் முயற்சிகளில் இறங்க, மூன்று நாட்களுக்குப் பின் காட்டுவழி மலைப்பாதையில் மயங்கிக் கிடக்கும் அவளை ஒரு பேருந்து ஓட்டுநர் பார்த்து காப்பாற்றி வீட்டிற்கு கொண்டுவந்து விடுகிறார். கல்பனாவுக்கு என்ன நேர்ந்ததோ என அனைவரும் அச்சத்திலிருக்க , அவளோ ஒரு வார்த்தை கூட யாரிடமும் எதுவும் பேசாமல் தவிர்க்கிறாள். பேச மறுக்கிறாள்.  மனம்  முழுக்க கோபமும் வெறுப்புமாக மெளனமாக நாட்களைக் கடத்தும் கல்பனா , தன் தங்கை தீக்‌ஷாவிடம் மட்டும் வாய் திறந்து பேசாமல், எழுத்தின் வழியாக , ஓரிரு சுருக்கமான சொற்களில் பேசுகிறாள் (!) . இதன் பின் கல்பனா, அவள் தங்கை தீக்‌ஷா, தீக்‌ஷாவின் தோழி குமாரி – இந்த மூன்று சிறுமியரைச் சுற்றியே கதை நகர்கிறது.

குழந்தைகளின் அறிவை மெச்சுகிற பெரியவர்களின் பெருந்தன்மை என்பது ,அவர்கள் பதில் சொல்லமுடியாத கேள்விகளை எதிர்கொள்ளும் வரை மட்டுமே. இந்தக் கூற்றை மெய்யாக்கும்படி தொடர்ந்து தங்களுடைய கேள்விகளாலும் , தேடலாலும் , குடும்பத்தினரையும் , ஆசிரியர்களையும் துளைத்தெடுக்கிறார்கள். மொழியைப் புரிந்து கொள்ள நிகழ்த்தும் தேடலும், படிப்படியாக உண்மையை நோக்கிய அவர்களின் பயணமும் தத்துவார்த்தமாக எழுதப்பட்டிருக்கின்றன.   மொழியில் தொடங்கி , ஒலிக்கு நகர்ந்து, பின்பு கடவுளைத் தேடி , பின்பு ஒலிக்கும், இசைக்கும், மொழிக்குமான வேறுபாட்டைப் பேசி இறுதியில் நம்மையும் ஒரு சிந்தனைச் சுழலுக்குள் தள்ளுகிறார் எழுத்தாளர். கதையாகப் பார்த்தால் சாதாரணமாகத் தோன்றினாலும் அந்த கதையின் வழி எழுத்தாளர் முன்வைக்கிற தத்துவார்த்தமான கேள்விகளும் அதற்கான பதில்களுமே வாசகர்களுக்கான பெறுமதி என்பது என் கருத்து.

நான் ஆங்கில மூலத்தையும் , தமிழ் மொழிபெயர்ப்பையும் அடுத்தடுத்து வாசித்திருந்தாலும் மொழிபெயர்ப்பில் இந்நூலின் கருதுகோளும் ஆழமும் மிகச்சரியாக வந்திருப்பதாக உணர்ந்தேன்  இன்னொன்று, தத்துவம் சார்ந்த நூல்களை வாசிக்கிற பொறுமை நமக்கு இல்லை என்னும் அவநம்பிக்கையுடனேயே இந்நூலை வாசிக்கத் துவங்கியினேன். வாசிக்கத் தொடங்கி அதனை முடிக்கிற தருவாயில் என்னுடைய பேச்சின் அளவும் குறைந்துபோய்விட்டதாக, அதற்கான தேவை இல்லாமல் போனதாக உணர்ந்தேன். பெரும்பாலான உரையாடல்களை உள்முகமாகவே நிகழ்த்திக் கொண்டிருந்தேன். இதற்கு முழுமுற்றாக இந்த புத்தகத்தை காரணமாகக் கொள்ளாவிட்டாலும் (அன்றாடத்தில் எதிர்கொண்ட சில சிக்கல்களும் வேறு காரணங்களும்  இருந்தாலும்) உறுதியாக அதன் தாக்கம் இருந்தது.

 கதையின் முடிவில் எனக்கு உவப்பில்லை. ஆனால் அந்த முடிவைப் போலவே முற்றுப்பெறாத , விடைதெரியாத கேள்விகள் நமக்கும் தோன்றலாம். நமது சொற்களின் தேவையற்ற அல்லது தேவைப்படாத இடங்களில், சொற்களால் இட்டு நிரப்பமுடியாத மெளனத்தின் மதிப்பை ,இந்நூல் உறுதியாகக் கூட்டியிருக்கும்.

தத்துவங்களை விரும்பி வாசிக்கிறவர்கள் தவறவிடக்கூடாத புத்தகம்.

 Following a Prayer – Sundar Sarukkai – Tranquebar/Westlandbooks – Rs.599

பிரார்த்தனையைப் பின்தொடர்ந்து – சுந்தர் சருக்கை – மொ.பெ/ சீனிவாச ராமாநுஜம் – எதிர்வெளியீடு – ரூ.569 / 344 பக்கங்கள்




சனி, 16 மே, 2026

வீனஸ் - பா.கண்மணி - எதிர் வெளியீடு

 


 பா.கண்மணி எழுதிய ’வீனஸ்’ பற்றி
**************************************************

பெங்களூரில் வீனஸ் என்ற பெயரில் அழகுநிலையத்தை தொடங்கி நடத்திவரும் ரஞ்சனி, வாடிக்கையாளர்களாக அங்கு வரும் நிஷா என்னும் மாடல் , உயர்நடுத்தர வர்க்க குடும்பத்தலைவி சந்தியா, அழகு நிலையத்துடன் இணைந்த உடற்பயிற்சிக்கூடத்தில் டயட்டீசியனாகப் பணிபுரியும் திலோத்தமா, உடற்பயிற்சியாளன் ப்ருத்வி, ரஞ்சனியின் மனோதத்துவ மருத்துவரும் நண்பருமான டாக்டர் ஆகியோரின் வாழ்வும் கதைகளுமே வீனஸ் என்னும் இந்த கதைத்தொகுப்பு (anthology ?! )

இதனை நாவல் என்றோ குறுநாவல் என்றோ வகைமை செய்ய முடியாததற்கான காரணம் இந்த வடிவமே. பாத்திரங்களின் வாழ்வையும் அவர்களின் குணவார்ப்பையும் மட்டும் சொல்லிவிட்டு பின்பு பெரிய சிக்கலோ தீர்வோ முடிச்சுகளோ எதுவுமின்றி அடுத்தடுத்த பாத்திரத்தின் கதைக்கு/ அத்தியாயத்திற்கு நகர்ந்து விடுவதனால் ஒட்டுமொத்தமாக ஒரு போதாமை அல்லது முடிவின்மையினை உணர முடிந்தது.

கண்மணியின் மொழி ஒரு மாதிரி அண்மையில் புதுப்பிக்கப்பட்ட பாரம்பரிய வீட்டைப்போல பழமையும் நவீனமும் கலந்தாற்போலான தன்மை கொண்டிருக்கிறது. அதுவே நம்மைத் தொடர்ந்து வாசிக்கவும் வைக்கிறது. புளகம், சிவிறி போன்ற வழக்கிலில்லா அருஞ்சொற்களின் பயன்பாடும்,அழகுக்கலை சார்ந்த கலைச்சொற்களும் ,பன்மொழி பேசும் மக்களைக் கொண்ட பெங்களூரின் தன்மைக்கேற்ப ஆங்கிலம், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி பேசும் பாத்திரங்களின் சொற்றொடர்களை அந்தந்த மொழியிலே தமிழில் ( வோ ஜாத்தீ நயி திதி, கடையினிந்தா ராண்டம் செக்குக்கு பந்திதினி ) எழுதிவிட்டதும் கதைக்களத்திற்கேற்றார்போல பொருந்தி வந்திருக்கிறது. வசீகரமான வர்ணனைகளும், சில இடங்களில் அப்பட்டமான விவரணைகளும் ஆங்காங்கு விரவிக்கிடக்கின்றன . ஸ்டெல்லா ப்ரூஸும் , பாலகுமாரனும், சிவசங்கரியும் , சாரு நிவேதிதாவும் கலந்துகட்டிய மொழியே இந்நூலின் பலம்.

இதில் கதைப்பாத்திரங்களின் மையம் அல்லது கதை/அத்தியாயங்களின் மையம் என்பது இளமை, உடல், காலம், பொறுப்புகள், கடமை, மோகம் இவற்றுக்கிடையேயான போராட்டங்களும் மனசஞ்சலங்களுமாக அமைந்திருக்கிறது.
The characters were introduced and set up in a fantastic manner, hooking us in to get involved and then ending abruptly only for us to be left hanging and wanting more . இதே கதை மாந்தர்களைக் கொண்டு கண்மணி இன்னொரு நாவல் எழுதினாலோ அல்லது இந்தப் புத்தகத்தின் தொடர்ச்சியாக அடுத்த பாகமென வெளியிட்டாலோ அதனையும் உறுதியாக வாசிப்பேன்.

வீனஸ் - பா.கண்மணி - எதிர் வெளியீடு - 128 பக்கங்கள் - விலை ரூ.180





திங்கள், 11 மே, 2026

ரகுராய் நினைவஞ்சலி - சென்னை

 







சனிக்கிழமை மாலை பெசன்ட் நகர் ஸ்பேஸஸ் அரங்கில் பிரபு காளிதாஸ் ஒருங்கிணைத்த , நிழற்படக்கலைஞர் ரகுராய்க்கான நினைவஞ்சலிக் கூட்டம் பற்றி...
 
அண்மையில் மறைந்த இந்தியாவின் மிகச்சிறந்த நிழற்படக்கலைஞர்களுள் ஒருவராகத் திகழ்ந்த ரகுராய் அவர்கள் குறித்து நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளவும் உரையாடவும் ஒவியர் ட்ராட்ஸ்கி மருது, நிழற்படக்கலைஞர் வைட் ஆங்கிள் ரவிஷங்கர், ராய் ஃபவுண்டேஷனில் பயின்ற நிழற்படக்கலைஞர் ஷேக் முகமுகது ஃபைசல் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். 
 
முதலில் பேசிய மருது அவர்கள் ரகுராயை டெல்லியில் முதன் முதலாக கலைக்கண்காட்சிகளின் போது சந்தித்ததில் துவங்கி அவருடைய வாழ்வின் பல நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டார். ரகுராய் எப்போதும் ஒரு பரபரப்புடனேயே காணப்பட்டதாகவும் அவருடைய கண்கள் அவரைச் சுற்றியுள்ள சூழலில் யாருக்கும் புலப்படாத சப்ஜெக்டுகளைத் தேடியபடியே இருந்ததாகவும் சொன்னார்.
 
அதுவரையிலும் ஐரோப்பிய நிழற்டக் கலைஞர்களுக்கு மட்டுமே இருந்த பிரத்யேக பாணியிலிருந்து மாற்றி இந்தியாவின் நிலவமைப்பையும் மக்களையும் முற்றிலும் புதியதொரு கோணத்தில் ரகுராய் காட்சிப்படுத்தியதைக் குறிப்பிட்டார்.
ரகுராய் எப்போதும் அவரது துறைசார்ந்த அடுத்தடுத்த தொழில்நுட்ப பாய்ச்சல்களைப் பற்றி உடனுக்குடன் அறிந்து கொண்டு அவற்றைக் கற்றுக் கொண்டதையும் குறிப்பிட்ட அவர், தொழில்நுட்பம் கலையை வெகுமக்கள் திரளிடம் கொண்டு சேர்த்ததைப் பற்றி சொன்னார். 
 
மருது அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் ஓவியம், அனிமேஷன், கிராஃபிக்ஸ் சார்ந்த தொழிநுட்பங்களைத் தேடியலைந்து கற்றுக் கொண்டது பற்றிக் குறிப்பிட்ட அத்தனையும் பொக்கிஷமான தகவல்கள். இந்தியாவில் ஆப்பிளின் மேக், மைக்ரோசாஃப்டின் பிசி ஆகியவை நுழைவதற்கு முன்பே பிரபலமடைந்த அமிகா என்ற கணினியை செய்தித்தாளில் வரிவிளம்பரம் பார்த்து உடனே வாங்கிவிட முயன்றதையும் , பின்பு அந்த விற்பனையாளர்களின் இடத்துக்கே நேரில் சென்று விசாரித்ததையும் சொல்லி , அவர்கள் அப்போதைய அரசின் இறக்குமதி கெடுபிடிகளின் காரணமாக அதீதமான ரகசியத்தன்மையுடன் செயல்பட்டதையும் குறிப்பிட்டார்.
பின்பு 45000 ரூபாய்களுக்கு (ரெண்டு க்ரவுண்ட் இடம் வாங்கிருப்பேன் அப்போ என்றார் 😃) அமிகா கணினியை வாங்கியவுடன் அதில் 8 பிட் வண்ணங்களில் ஓவியம் வரைந்ததையும் ஒரே க்ளிக்கில் பல அடுக்காக வரையப்பட்ட ஓவியங்களை நகரும்படமாக மாற்ற முடிந்ததையும் சொல்லி அதுவரையிலும் காகிதத்தில் வரைந்து ப்ரேம்களைப் பார்த்து பின்பு ஃபிலிமுக்கு மாற்றி அதனை பெரிய திரையில் ஓடவிட்டுப் பார்க்க பிரசாத் அரங்கில் காத்திருந்த நிலை மாறி உடனுக்குடன் கணினியில் அனிமேஷனை பார்க்க முடிந்தது ஒரு கலைஞனாக பெரும் விடுதலையுணர்வை தந்ததென சொன்னார்.
 
பின்பு அவருடைய பேச்சு திரைத்துறையில் அவர் பணிபுரிந்த திரைப்படங்கள் குறித்து நகர்ந்தது. நாசரின் அவதாரம் திரைப்பட க்ளைமாக்ஸ் காட்சிக்காக கிராபிக்ஸில் நரசிம்ம அவதாரம் செய்ய முயன்று பின்பு அந்த முயற்சி கைவிடப்பட்டதையும், தேவதை படத்தின் போது செய்யப்பட்ட கிராஃபிக்ஸ் முயற்சிகள் குறித்தும், இறுதியாக சங்கரின் ஜெண்டில்மேன் திரைப்படப்பாடலில் (அவர் பணிபுரியவில்லை) செய்யப்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகள் பற்றியும் சொன்னார். செல்போன் பயன்பாடு பரவலாகிவிட்ட இந்த காலத்தில் ஐரோப்பாவைப் போல் இங்கும் காட்சி ஊடகம் / ஒளிப்பதிவு சார்ந்த விஷயங்களை பள்ளிக் கல்வியில் செயல்முறைகளாக புகுத்த வேண்டிய தேவையையும் அவசியத்தையும் குறிப்பிட்டார். 
 
டிஸ்னியின் ‘லயன்கிங்’ (1994) அனிமேஷன் திரைப்படத்தில் இடம்பெற்ற 6 நிமிட Wildebeest stampede காட்சிக்காக ஓவியக்கலைஞர்கள் மூன்று ஆண்டுகள் உழைத்ததையும் , ஒரு வேளை கணினிப் பயன்பாடு இல்லாதிருந்தால் இதற்கு மட்டுமே பத்தாண்டுகள் ஆகியிருக்கும் என்பதையும் சொல்லிவிட்டு, தொழிநுட்பம் எப்போதும் கலையை ஜனநாயகப்படுத்தியதையும் துறைசார்ந்த முன்னேற்றங்களைத் தெரிந்து கொள்ள விரும்பாத கலைஞர்கள் கால ஓட்டத்தில் காணாமல் போனதையும் சொல்லி, ரகுராய் இறுதி வரை தன்னை காலத்திற்கேறார்போல் புதுப்பித்துக் கொண்டே இருந்ததைச் சொல்லி அவருடைய நீண்ட உரையினை முடித்துக் கொண்டார் .
பின்பு ஃபைஸல் , ராய் ஃபவுண்டேஷனில் பயின்ற காலத்தின் நினைவுகளாக சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். ஒவ்வொரு வாரமும் நான்கு நாட்கள் வகுப்புகள் என்றால் மீதம் மூன்று நாட்கள் மாணவர்களை படமெடுக்க வெளியிடங்களுக்கு அனுப்பிவைத்துவிடுவாராம். அப்படி அனுப்பும்பொழுது அவர்கள் செல்லும் இடம் பற்றிய முழு விவரங்கள், அந்நாளின் வானிலை , உள்ளூரில் ஏதேனும் பரப்பான சூழல் இருந்தால் அது பற்றிய விவரங்கள் என அத்தனையும் விசாரித்துவிட்டு கருத்தில் கொண்டே அவர்களை வெளியில் அனுப்புவாராம். டெல்லியில் இருந்ததால் ரகுராய் பெரும்பகுதி டெல்லி அரசியல் சார்ந்த முக்கியத் தருணங்களைப் படம்பிடித்ததையும் வேறு சில நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.
 
அன்னை தெரசாவின் சென்னை சுற்றுப்பயணத்தில் அவரைப் படமெடுக்க உடன் வந்திருந்த ரகுராயை, முதன்முதலில் நேரில் பார்த்தது பற்றி சொன்ன வைட் ஆங்கிள் ரவிஷங்கர் நிழற்படக்கலைஞராக தன்னுடைய வாழ்க்கை துவங்கியதையும், தமிழ்நாட்டின் பிரபலமான ஃபோட்டோ ஏஜன்ஸிகளுடன் பணிபுரிந்ததையும் , கலைஞரை மிக இயல்பாக நெருக்கமாக படம்பிடித்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். கலைஞரின் வீட்டில் புகழ்பெற்ற நிழற்படக்கலைகர் ஹேரி மில்லர் எடுத்த பேரறிஞர் அண்ணாவின் நிழற்படம் பற்றி கலைஞர் பகிர்ந்து கொண்ட தகவல்களையும், கலைஞரின் photo sense பற்றியும் சொல்லி, பின்பு ஒளிப்பதிவாளராக தன்னுடைய தற்கால திரையுலக அனுபவங்கள் வரை சுருக்கமாகப் பேசி தன் உரையை முடித்துக் கொண்டார்.
தனிப்பட்ட முறையில் ரகுராயின் கருப்பு வெள்ளைப் படங்களின் மிகப்பெரிய ரசிகன் நான். அவருடைய செயல்பாடுகள் பற்றி மேலோட்டமாகத் தெரிந்திருந்தாலும் இன்னும் நுணுக்கமான விஷயங்களையும் அனுபவங்களையும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களின் உரையாடல் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது . நிகச்சியை ஒருங்கிணைத்த பிரபுவின் குடும்பத்தினர் அங்கிருந்தவர்களை ஓடி ஓடி கவனித்தபடி இருந்தனர். சுட்டிப் பையனாக பார்த்த அபய் (பிரபுவின் மகன்) இன்று கல்லூரி செல்லும் இளைஞராக வளர்ந்து நிற்கிறார். அவரும் பிரபுவுடன் இந்நிகழ்வினைப் படமெடுத்தபடி இருந்தார். ஒட்டுமொத்தமாக மனதிற்கு நெருக்கமான நிறைவானதொரு நிகழ்வாக அமைந்தது. Thanks for inviting me and for the fantastic evening Prabhu…! 
 
வெளியே நிறுத்திவைத்திருந்த காரை உடனே நகர்த்தும்படி போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் அலைபேசியில் அழைத்துச் சொன்னதால் தனிப்பட்ட முறையில் யாருக்கும் நன்றி சொல்ல முடியாமல் அவசரம் அவசரமாகக் கிளம்ப வேண்டியாதாகிவிட்டது ☹

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி (சிற்றூர் முதல் குரூஸ் பர்ணாந்து வரை) - ஜிரா - அல்புனைவு

 


 
“Nations are not communities and never have been. The history of any country, presented as the history of a family, conceals the fierce conflicts of interest (sometimes exploding, often repressed) between conquerors and conquered, masters and slaves, capitalists and workers, dominators and dominated in race and sex. And in such as world of conflict, a world of victims and executioners, it is the job of thinking people, as Albert Camus suggested, not to be on the side of the executioners.”
― Howard Zinn, A People’s History of the United States:
 
ஒரு நிலத்தின் வரலாறு என்பது உண்மையில் அந்த நிலத்தில் வாழ்ந்த மக்களின் வரலாறே. மாறாக அரசியல் வரலாறு என்பதும் மக்களின் வரலாற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றே. ஓர் ஊரின் வரலாற்றைத் தேடி கடந்த காலத்தின் சுவடுகளைப் பின்தொடர்ந்து பார்ப்போமாயின் அது பெரும்பாலும் மக்களின் உழைப்பையும் ரத்தத்தையும் உயிர்களையும் அடித்தளமாகக் கொண்டு அதன் மேல் அதிகார வெறிகொண்ட தனி மனிதர்களும் அரசர்களும் அரசுகளும் தங்களின் சுயநலத்துக்காக எழுப்பிய கோட்டைகளையே காண முடிகிறது. உண்மையான வரலாற்றுத் தேடல் என்பது கோட்டைச் சுவர்களின் பிரம்மாண்டங்களை அண்ணாந்து பார்ப்பதிலும் கடந்த காலப் பெருமிதங்களில் மிதந்து ,மனதால் அங்கேயே தேங்கிவிடுவதிலும் இல்லை. மக்களின் வாழ்வையும் வலிகளையும் தேடிப்போதலும் அதன் வழியே கிடைக்கிற கதைகளுமே உண்மையான வரலாற்றுத் தேடல் என்பது என் கருத்து. 
 
ஜிரா என்னும் ஜி.ராகவன் எழுதி மின்னங்காடி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நூலான ‘தூத்துக்குடி – சிற்றூர் முதல் குரூஸ் பர்னாந்து வரை’ அப்படியொரு வரலாற்றுத் தேடலை நிகழ்த்தியிருக்கின்றது. புறத்தோற்றத்தில் இது தூத்துக்குடி என்னும் ஊரின் வரலாறு என்பதாகத் தோன்றினாலும் உண்மையில் இது கடல்சார்ந்து பல நூற்றாண்டுகளாகத் தங்கள் வாழ்வினைக் கட்டமைத்துக் கொண்ட பரதவ மக்களின் வரலாறாகவும்,ஒரு பகுதி தமிழகத்தில் கிறிஸ்தவத்தின் வரலாறாகவும், கடல் வணிகத்தின் வரலாறாகவும், வெவ்வேறு காலகட்டங்களில் தங்களின் வாழ்வாதாரத்தின் பொருட்டு ஆட்சியாளர்களுடன் உடன்பட்டும் முரண்பட்டும் வாழ்ந்த பொதுமக்களின் போராட்ட வரலாறாகவுமே உருவாகி வந்திருக்கின்றது.
தமிழ்நாட்டின் தென்பகுதியை ஆண்ட பாண்டியர்களின் தொடக்க ஆட்சிக்காலத்தில் பெரும் வணிக மையமாகவும் முதன்மைத் துறைமுகமாகவும் செயல்பட்ட கொற்கை நகரம் காலப் போக்கில் (சில பல நூற்றாண்டுகளில்) கடல் உள்வாங்கி நிலப்பரப்பானபின் , தென் பகுதியின் பிற துறைமுகங்களாக வெவ்வேறு காலகட்டங்களில் பழையகாயல் , புன்னைக்காயல், முத்துக்குளித்துறை (தற்போதைய தூத்துக்குடி )உள்ளிட்ட ஊர்கள் இருந்திருக்கின்றன. 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டியர்களின் இறுதி ஆட்சிக்காலத்தின் அவர்களுக்குள்ளேயே ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக மதுரை சுல்தான்களிடம் ஆட்சியை இழந்து பின்பு விஜயநகர அரசின் துணையுடன் அவர்களிடம் போராடி தென்காசி தொடங்கி தூத்துக்குடி வரையிலுமான சில பகுதிகளை ஆண்டு வந்த காலகட்டத்தில் துவங்குகிறது இப்புத்தகம். 
 
அதனைத் தொடர்ந்து போர்ச்சுக்கீசியரின் வருகை, கிறிஸ்தவ மிஷனரிக்களின் (ஏசு சபையினர்) செயல்பாடுகள் ,இந்த ஊரின் வளர்ச்சிக்காகவும் மக்களின் வாழ்வை முன்னேற்றவும் பெரும்பங்காற்றிய தூய சவேரியார் பற்றிய தகவல்கள், விஜயநகர அரசின் படையெடுப்பு, கிட்டத்தட்ட 20000 பரதவ குல மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறக் காரணமான காதறுப்பு நிகழ்வு, இதனூடாக முத்து, வணிகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தூத்துக்குடி முதன்மைத் துறைமுகமாக வளர்ந்த கதை என அத்தனையையும் பேசியிருக்கிறார். குறிப்பாக தூத்துக்குடி பனிமயமாதாவின் திருவுரு மனிலாவில் இருந்து சந்தலேனா கப்பலில் இங்கு வருகிற நிகழ்வும் அதற்கும் முன்னும் பின்னுமான விவரணைகளும் சிலிர்ப்பூட்டுபவையாக இருந்தன. 
 
பழைய ஒருங்கிணைந்த தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களில் பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்ட பாளையக்காரர்கள் அடிமைகளாக மலேயாவிற்கு (தற்போதைய மலேசியா) அனுப்பிவைக்கப்பட்ட நிகழ்வு; சுதந்திரத்துக்கு வ.உ.சிதம்பரனார் தலைமையில் கோரல் மில் தொழிலாளர்களான அடிப்படை உரிமைகள் நியாயமான ஊதியம் கோரி நிகழ்த்தப்பட்ட, மொத்த நாட்டின் கவனத்தையும் தம் பக்கம் திருப்பிய மாபெரும் கடையடைப்புப் போராட்டம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் பற்றி இந்தப் புத்தகத்தில் தான் முதன்முதலில் அறிந்துகொண்டேன்.
பாண்டிய மன்னர்கள் துவங்கி, மதுரை சுல்தான்கள், போர்ச்சுக்கீசியர்கள், அஞ்சுவண்ணத்தார் எனப்படும் இஸ்லாமியர்கள்,டச்சுக்காரர்கள், மலபார் சாமூத்திரிகள், விஜயநகர நாயக்கர்கள், சேதுபதி மன்னர்கள், இறுதியாக பிரிட்டிஷார் என 14ஆம் நூற்றாண்டு தொடங்கி 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை காலணியாதிக்கத்தால் விளைந்த தொடர் போர்களையும் அரசியல் மோதல்களையும் அமைதியின்மையையும் கடந்து, கொஞ்சங் கொஞ்சமாய் மீண்டு, வளர்ந்து வந்திருக்கின்றனர் தூத்துக்குடி மக்கள். இத்தனை வரலாற்றுத் தகவல்களையும் வாசிக்கிறவர்களின் ஆர்வம் குன்றாத மொழியில் சிறப்புற எழுதியிருக்கிறார் ஆசிரியர். 
 
முழுக்க கதையாக இல்லாமல் ஆங்காங்கே முக்கிய நிகழ்வுகளை மட்டும் கதை போன்ற மொழியில் சொல்லி அது சார்ந்த தரவுகளைத் தந்திருக்கிறார். 25 அத்தியாயங்களில் இத்தனைத் தகவல்களையும் சொல்லி ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் அதற்கான உசாத்துணையும் (references) தந்திருப்பது நூலாசிரியரின் கடினமான உழைப்புக்கும் தரவுகளில் உண்மைத்தன்மையை ஆய்ந்தறிந்து எழுத அவர் எடுத்துக் கொண்டு பெருமுயற்சிக்குமான சான்று. நான் குறிப்பிடாமல் விட்ட இன்னும் பல நிகழ்வுகள் அரிய தகவல்களும் இந்நூலில் உண்டு . முன்னுரையில் சரவணன் சந்திரன் குறிப்பிட்டது போல இந்த புத்தகம் அகழ்ந்தெடுத்த ஓர் ஆணிமுத்தின் கதை தான். 
 
நீங்கள் வரலாற்று ஆர்வலராக இருந்தாலும் சரி, அல்லது குறுகுறுப்புடன் கதைகேட்கிற, வரலாற்றைத் தேடுகிற சராசரி வாசகரானாலும் சரி, கட்டாயம் தவறவிடாமல் படிக்க வேண்டிய புத்தகம் . ஜி.ரா அவர்களுக்கும், இந்நூலைச் சிறப்புறப் பதிப்பித்திருக்கும் மின்னங்காடி பதிப்பகத்தினருக்கும் என் வாழ்த்தும் நன்றியும்
 
தூத்துக்குடி – சிற்றூர் முதல் குரூஸ்பர்னாந்து வரை | மின்னங்காடி பதிப்பகம் | 221 பக்கங்கள் | ரூ. 300

சனி, 7 பிப்ரவரி, 2026

ஒரு க்ளாஸ் விஸ்கி - கவிதா சொர்ணவல்லி - சிறுகதைகள்

 

தொகுப்பில் மொத்தம் எட்டு சிறுகதைகள். கிட்டத்தட்ட பத்தாண்டு கால இடைவெளிக்குள்ளாக எழுதப்பட்ட கதைகள். 
 
முதல் கதையான காதலடித் தடங்கள் அழகான ஒரு சின்ன தருணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து முன்னும் பின்னுமாய் சில சம்பவங்களைச் சொல்லி மறுபடியும் தொடங்கிய இடத்தில் முடிகிற குறுங்கதை.
அடுத்ததாக வசியக்காரிகள் – பன்னீர்ப் பூக்களின் வாசமும் வசுந்திரா டீச்சரும் காலத்துக்கும் மனதில் நிற்பார்கள். இந்தத் தொகுப்பில் இரண்டு கதைகள் எனக்கு ஜெயமோகனுடைய எழுத்தை நினைவூட்டின. அவற்றில் ஒன்று இந்த ‘வசியக்காரிகள்’ கதை. மற்றது ‘சர்ப்பக்காவு’ கதை. இந்தக் கதைகளில் ஊடுபாவாய் இருக்கிற அமானுஷ்யமும் நாட்டார் வழக்கு சார்ந்த சொல்லாடல்களும் காரணமாக இருக்கலாம்.
சர்ப்பக்காவு கதையை வாசிக்கிற போது நிஜமாகவே கொஞ்சம் சிலிர்ப்பாக இருந்தது. 
 
கடவுளின் ஃப்ளேவர் , மழை ரோஸ் நிறத்தில் வான்காவாக இருந்தது – இரண்டுமே அத்தனை அழகான காதல் கதைகள் – கதையில் உரையாடல்களின் வழியாக நுணுக்கமாக பல விஷயங்களைப் பேசிக் கடந்து செல்கிறார் கவிதா. 
 
உதா:
 
//எழுதிப்பேசுவது மிக எளிதாக இருக்கிறது. எந்த உணர்வுகளையும் அதன் உண்மைத்தன்மையோடு எதிர்கொள்ள வேண்டியதில்லை.உணர்வுகளற்று அல்லது நமக்கேற்ற உணர்வில் வாசித்துக் கொள்ளலாம்//
 
//பொறுப்புகளுக்குள் நுழைவதென்பது பிரிவுகளுக்கும் தயாராவது//
 
//உள் எரிந்த சுடரின் பிரகாசம் காணாமல் ஆகியிருந்தது .யாரிடமும் பகிர்வதற்கு என்னிடம் துளி மகிழ்வு மிஞ்சியிருக்கவில்லை.என்னுடைய இயல்பென்பது எதுவாகினும் அதைத் தூண்டிவிடும் வினையூக்கியாகக் காதல் இருந்திருக்கிறது. அந்தக் காதலை எனக்களித்த ரசவாதியாக அவன் இருந்திருக்கிறான்.//
 
தொகுப்பின் தலைப்புக் கதையான ’ஒரு க்ளாஸ் விஸ்கி’ சிறுகதை புரிதலுள்ள ஒரு தந்தைக்கும் அவருடைய மகளுக்கும் இடையேயான ஒரு அத்தியாயத்தைக் கொண்டது. கச்சிதமான ஒரு குறும்படத்திற்கான கதை இது. 
 
இந்தத் தொகுப்பிலேயே நான் ஒரு மாதிரி அச்சத்துடனும் பதற்றத்துடன் படித்த கதை என்றால் ‘கத்தி’ கதையைத் தான் சொல்வேன். உயிரற்ற ஒரு பொருளின் மீது கொஞ்சம் கொஞ்சமாக ஒருவருக்கு ஏற்படும் பிடிப்பு மிகைவிருப்பாக மாறி பின்பு அவரையே ஆபத்திற்குள்ளாக்குகிற படிப்படியான பித்துநிலையினை அப்படியே எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார். 
 
’பொசல்’ சிறுகதைத் தொகுப்புக்கு பிறகு வெளிவந்திருக்கும் கவிதாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது. ஹாலிவுட் திரைப்படங்களில் ஹால்மார்க் படங்கள் என்று ஒரு வகைமை உண்டு. பெரும்பாலும் அமெரிக்காவின் விடுமுறைக் காலங்களில் வெளிவரும் இவ்வகைப் படங்களும் ஒரு மாதிரி மென்மையான கொண்டாட்டச் சூழலிலேயே எடுக்கப்பட்டிருக்கும். க்றிஸ்த்துமஸ் கால அலங்கரிப்புகள், சூழ்ந்திருக்கும் பனி, டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதங்களில் நிகழும் கதை, மென்மையான கதைப் பாத்திரங்கள், பெரும்பாலும் பெண் மனம் சார்ந்த உணர்வுப்பூர்வமான கதைகள் , ஒரு சிறுநகரமோ அல்லது சிற்றூரோ, இறுதியில் ஒரு நெகிழ்ச்சியான முடிவுடன் திரைப்படம் நிறைவுபெரும் .பார்க்கும் எவரையும் ஆற்றுப்படுத்தி மென் அணைப்புடன் தலை சாய்த்துக் கொள்வது போல உணரவைக்கக் கூடியவை இவ்வகை திரைப்படங்கள். 
 
கவிதா சொர்ணவல்லியின் பெரும்பாலான சிறுகதைகள் அப்படியானவை தான். டிசம்பர் மாத மழையும் , குளிரும், வண்ண வண்ண பூக்களும், சிலிர்ப்புகளும், புன்னகையும், கண்ணீரும், மென் அணைப்புகளும் நிறைந்திருக்கிற கதைகள். பொசலில் சிற்றூரைச் சுற்றி வந்து கதை சொல்லிய ஊர்க்காரப் பெண் ரயிலேறி பெருநகரம் வந்தபின்னும் தனக்குள்ளே கொஞ்சம் ஊரையும் ,நிறைய உணர்வுகளையும் சுமந்து கொண்டு கதை சொல்லியிருக்கிறார்.
 
எளிமையான அழகான சிறுகதைகளின் தொகுப்பு.
❤
ஒரு க்ளாஸ் விஸ்கி, சிறுகதை தொகுப்பு, வான்கோ பதிப்பகம், 108 பக்கங்கள், ரூ.165

பன்றிவேட்டை - லஷ்மி சரவணகுமார்

 

Pandri-Vettai-Novel-LakshmiSaravanakumar

//எல்லா வேட்டைகளின் முடிவையும் காடுதான் தீர்மானிக்கிறது -லஷ்மி சரவணகுமார், பன்றி வேட்டை//
 
//A peculiar virtue in wildlife ethics is that the hunter ordinarily has no gallery to applaud or disapprove of his conduct. Whatever his acts, they are dictated by his own conscience, rather than by a mob of onlookers. It is difficult to exaggerate the importance of this fact." - Aldo Leopold//
 
வேட்டை எனும் சொல், காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்றவாறு முற்றிலும் வேறுவேறான பொருளைத் தரக்கூடியது. ஒரு வேட்டையில் கொல்லும் விலங்கு ஒன்றும் இரையாகும் விலங்கு ஒன்றுமாக இருக்கலாம். ஒரு வேட்டைக்காரனும் ஒரு கொல்லும் விலங்கும் இருக்கலாம். ஒரு வேட்டைக்காரனும் ஒரு இரையாகும் விலங்கும் இருக்கலாம். அந்த வேட்டைக்கான காரணமும் அதில் பங்கெடுத்துக் கொள்கிறவற்றின் / வர்களின் தேவைக்கேற்ப மாறுபடலாம். ஆனால் அந்த வேட்டையின் முடிவென்பதை காடே தீர்மானிக்கிறது.
 
லஷ்மி சரவணகுமாரின் பன்றி வேட்டை நாவலும் அப்படியொரு வேட்டையைச் சுற்றி பின்னப்பட்ட கதைதான். 1970களில் மதுரையைச் சுற்றி அமைந்திருக்கிற மேற்குத்தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகளில், நூறாண்டுகளாக அதிகாரம் செலுத்தி வரும் ஒரு ஜமீன் குடும்பத்தினரால் தங்கள் வாழ்வையும் அமைதியையும், தெய்வத்தையும் (!) இழந்து தவிக்கும் பளியர் இன மலைவாழ் பழங்குடி மக்களின் போராட்டமே இந்த நாவல். எப்பேற்பட்ட கரடியையும், யானையையும் தன் துப்பாக்கியால் வேட்டையாடிய ஜமீன்தார் ஒரு காட்டுபன்றியை வேட்டையாட நினைக்கும் போது காயப்பட்டுப் போகிறார். 
உடலில் பட்ட காயம் தாண்டி அவருடைய மனமும் ,ஆணவமும் காயப்பட்டுவிட ,உடல்நிலை சரியானதும் இன்னும் உக்கிரமாக அதே வேட்டையினை வெற்றிகரமாக முடித்துவிட முயற்சி செய்கிறார். உண்மையில் அவரால் அந்த வேட்டையை தான் நினைத்தபடி முடிக்க முடிந்ததா என்பதே மீதிக்கதை.
லஷ்மியின் முந்தைய படைப்புகளில் காணப்படும் தந்தை-மகனுக்கு இடையேயான அகங்கார மோதல் இந்த நாவலிலும் உண்டு. இந்தக் கதையில் வேட்டைத்துப்பாக்கியே அதிகாரத்தின் சின்னமாகத் தோன்றுகிறது. அப்பாவின் துப்பாக்கிக்கு மகன் ஆசைப்பட, மகனாகவே இருந்தாலும் “அந்தத் துப்பாக்கியைத் தொட உனக்குத் தகுதி இல்லை” என நிராகரிக்கிற வீரணன். அந்த இடத்தில் தொடங்கி ஜமீன்தார் வீரணனுக்கும் அவருடைய மகன் கண்ணனுக்கும் இடையில் தொடரும் அந்த மோதல் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. மேலும் காடு சார்ந்த வர்ணனைகளும், வேட்டை முறை பற்றிய, பளியர் இன மக்களில் வாழ்வியல், வழிபாடுகள் குறித்தான வர்ணனைகளுமே சிலிர்ப்பூட்டுபவையாக இருந்தன.
 
என்னுடைய வருத்தம் கதையின் ஒரு பகுதியாக இது மிகச்சிறப்பாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக ரொம்பவும் மேலோட்டமாக எழுதப்பட்டிருப்பதாகவே தோன்றியது. கிட்டத்தட்ட இதே மாதிரியான களத்தில் எழுதப்பட்ட கானகன் நாவலுடன் தன்னியல்பாக என் மனம் நிகழ்த்தும் ஒப்பீடு காரணமாக இருக்கலாம். அல்லது முதலில் திரைக்கதையாக எழுதப்பட்டு பின்பு நாவலாக மாற்றப்பட்டதாக ஆசிரியரே குறிப்பிட்டிருப்பதால் இந்த வடிவம் வந்திருக்கலாம் என்றும் தோன்றியது. உண்மையில் இந்நாவல் வலைத்தொடராகவோ திரைப்படமாகவோ உருப்பெற்றால் காந்தாரா போலவோ அல்லது ’ஏகம்’ போலவோ காட்சிகளால் நம்மைக் கட்டிப்போடலாம்.
 
ஒரு ஜமீன்தார் கதையென்றால் தேய்வழக்காக என்னவெல்லாம் இருக்கும் என நீங்கள் நினைப்பீர்களோ அத்தனையும் உண்டு. ஊர்மக்களுக்கு கொடுமை இழைத்தல், அதிகார வெறி, பெண்களை மானபங்கப் படுத்துதல், செல்வத்தின் மீதான நிலத்தின் மீதான பேராசை, ஒரு சாபம், பெண் மோகத்தால் அழிதல், அடிமைப்படுத்தப்பட்டவர்கள் வெகுண்டெழுந்து புரட்சி செய்தல் என அத்தனையும் உண்டு. இதில் பெரும்பாலான திருப்பங்கள் யூகித்துவிடக் கூடியதாக இருப்பதால் சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது.
கானகன் நாவல் வாசித்தபோதே படித்திருந்தாலும் இப்போது இந்த நாவல் குறித்து எழுதும்பொருட்டு பளியர் இன மக்களைப் பற்றி தேடிப் படிக்கையில் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. உண்மையில் மலைவாழ் பழங்குடியின மக்களான பளியர் இனத்தாரின் வாழ்வு மிகத் துயரமானது . காலம்காலமாக மலைகளையும் காடுகளையும் தங்களின் வாழ்வாதரத்துக்காக நம்பியிருந்த மக்கள், அரசால் சமவெளிகளுக்குத் தள்ளப்பட்டு அவர்களுக்கு பரிச்சயமில்லாத புதியதொரு வாழ்வினை வாழப் பணிக்கப்பட்டிருக்கின்றனர்.
 
இந்த நாவல் 60 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்கிற கதையென்றாலும் இப்போதும் அவர்களின் வாழ்வில் பெரிய மாற்றங்களில்லை. பொடவு எனப்படும் மலை இடுக்குகளிலும் குகைகளிலும் வாழ்ந்த இவர்களுக்கு அரசாங்கம் குடியிருப்பு வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தந்திருந்தாலும் நிரந்தரமாக அவர்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தக்கூடிய கல்வியையும், பணி வாய்ப்பையும் கூட ஏற்படுத்தித் தரும் என நம்புவோம்
பளியர் இன வாழ்வியலையும் , வழக்கங்களையும், இயற்கைக்கும் அவர்களுக்குமான பிணைப்பினையும் பதிவு செய்த வகையில் ‘பன்றி வேட்டை’ நாவலை வாசிக்க வேண்டிய படைப்பாகக் கருதலாம். போலவே லஷ்மியின் முந்தைய படைப்புகளை வாசித்திராத புதிய வாசகர்களுக்கு ‘ரூஹ்’ நாவலும், ‘பன்றி வேட்டை’யும் நல்லதொரு தொடக்கப் புள்ளியாக இருக்கும். 
 
பன்றி வேட்டை , எழுத்து பிரசுரம் , 170 பக்கங்கள், ரூ.220

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

புத்தகத்திருவிழா - 2026 - இதுவரை வாங்கியவை

 
நாவல்/குறுநாவல்
**********************************
1. பன்றிவேட்டை - லஷ்மி சரவணகுமார் - எழுத்து பிரசுரம் - ஜீரோ டிகிரி - (நண்பரின் பரிசு)
2. மயல்- சிவராமன் கணேசன் - எழுத்து பிரசுரம்
3. நினைவுதிர் காலம் - யுவன் சந்திரசேகர் - எழுத்து பிரசுரம்
4. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி - பால கணேசன் - ஸ்வாசம் புக்ஸ்
 
 
சிறுகதைகள்/ தொகுப்பு
*****************************
5. யுவன் சந்திரசேகர் கதைகள் - 1 - எழுத்து பிரசுரம்
6. இடந்தலைப்பாடு - சேவியர் ராஜதுரை - வாசகசாலை
7. மழைக்கண் - செந்தில் ஜெகன்நாதன்- சொற்றுணை பதிப்பகம்
8. ஒரு க்ளாஸ் விஸ்கி - கவிதா சொர்ணவல்லி - வான்கோ பதிப்பகம்
9. சாட்லா - சத்தியபெருமாள் பாலுசாமி - வேரல் புக்ஸ்
10. சார்வாகன் கதைகள் - நற்றிணை பதிப்பகம்
11.சில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல் - போகன் சங்கர் - யாவரும் பதிப்பகம்
12. பூமர் - செளம்யா - எழுத்து பிரசுரம்
 
 
அபுனைவுகள்/கட்டுரைகள்
********************************************
13. தூத்துக்குடி - ஜி.ரா - மின்னங்காடி பதிப்பகம்
14. தமிழை ஆண்டாள் - ஜி.ரா - மின்னங்காடி பதிப்பகம்
15. ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி - அரவிந்த் சச்சிதானந்தம் - the talkie / ஜீரோ டிகிரி
16. சினிமாவின் அகமும் புறமும் - பிரதீப் பாலு - நீலம் பதிப்பகம்
17. கறுப்புத் திரை - ஜா.தீபா - நீலம் பதிப்பகம்
18. மாதர் திரையுலகு - ஜா.தீபா - the talkie / ஜீரோ டிகிரி
 
 
கவிதைகள்
**************************************************
19. சூனியக்காரியின் பாடல்கள் - அனுராதா ஆனந்த் - சால்ட் பதிப்பகம்
20. விரைவில் சந்திப்போம் விண்மீனே - கடைசி கடிதங்கள் - கீகீ - சால்ட் பதிப்பகம்
21. மஹாபிடாரி - யுகபாரதி - நேர்நிரை
22. உலகை மூடும் ஆடைகள் - யவனிகா ஸ்ரீராம் - வேரல் புக்ஸ்
23. இன்னும் சில வீடுகள் - பா.வெங்கடேசன்- வேரல் புக்ஸ்
24. காதலூறிக் கனியும் காழ்வை - மித்ரா அழகுவேல் - வாசகசாலை
25. பிரபஞ்சத்தின் கடைசி நட்சத்திரம் - அருள்ஜோதி முரளிதரன் - யாவரும்
26. நறுமணத் துயரே நறுமணத் துயரே - இசை - விஷ்ணுபுரம் பதிப்பகம்
 
 
குழந்தைகளுக்கான கதைகள்
*****************************************************
1. குழந்தைகளின் ரகசியம் - உஷா ராஜேந்திரன் - Books for children
2. டடங் - விழியன் - Books for children
3. பென்சில்களின் அட்டகாசம் - விழியன் - Books for children
4. மியாம்போ - விழியன் - Books for children
5. டாலும் ழீயும் - விழியன் - Books for children
6. சகி வளர்த்த ஓகி - விழியன் - Books for children
7. கிச்சா பச்சா - விழியன் - வானம் பதிப்பகம்
8. மட்டில்டாவும் தொப்பிப் பூனையும் - ஆதி வள்ளியப்பன் - வானம் பதிப்பகம்
9. வித்தைக்காரச் சிறுமி - விஷ்ணுபுரம் சரவணன் - வானம் பதிப்பகம்
10. பறக்கும் ஹேர் க்ளிப் - விஜய்பாஸ்கர் விஜய் - வானம் பதிப்பகம்
இவை போக அரசியல், ஆய்வு, பாடநூல் வகைமையில் வாங்கிய புத்தகங்களும், போட்டிகளில் பரிசு பெற்ற நாவல்/தொகுப்பு சிலவும் தனியே வாங்கியிருக்கிறேன். ஆங்கிலப் புத்தகங்கள் தனி.
 
Happy reading...! ❤

செவ்வாய், 4 நவம்பர், 2025

ஆகரம் - சிறுகதை

காலை ஏழு மணி வாக்கில் வீட்டில் யாரும் இன்னும் கண் விழித்திருக்கவில்லை. எனக்குத் தூக்கம் தெளிந்துவிட்டிருந்தது. தலைமாட்டில் இருந்த செல்ஃபோனை கையில் எடுத்துக் கொண்டு அறையிலிருந்து வந்து டிவியை உயிர்ப்பித்து, இருபத்திநாலு மணி நேரம்  பாடல்கள் ஒளிபரப்பும் சேனல்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சத்தத்தைப் பாதியாகக் குறைத்து வைத்துவிட்டு பல்துலக்க நகர்ந்தேன்.

நிழலாக நீ காணும் கானல் நீர்
நிஜமாக உன் தாகம் தீர்க்காது
நினைவாலே எனை எண்ணி வாழ்ந்தாலும்
அது என்றும் நிஜ வாழ்க்கை ஆகாது

கண்ணா உன் கண்ணில்
கண்ணீரோ
பொன்னான உன் நெஞ்சில் யாரோ
உன் தீராத சோகம் இனி வாராது ஓடும்
உன்னை நீங்காத நெஞ்சம் நானே
இது நான் சொல்லும் உண்மைதானே “

வாழைத்தோப்புகளுக்கிடையே ஓடிக்கொண்டிருந்த கார்த்திக்கிற்கு ஸ்வர்ணலதாவின் குரலில் ஏதோ ஒரு மலையாள நடிகை ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க, காலையிலேயே சோகப்பாடல் வேண்டாமென அவசரமாய் வேறு சானலுக்கு மாற்றிவிட்டுப்  போகையில் ஃபோன் விறுவிறுத்தது.

பெரிய புள்ள...நல்லாருக்கியாடி..அம்மாப்பால்லாம் எப்புடியிருக்காவ்வொ...சவுரியமா ? ஒரு சேதிடி..அதான் காலைலங்காட்டியும் போனடிசேன்... “ வடிவு ஆத்தா மூச்சு விடாமல் சொல்லி நிறுத்தினாள்

சொல்லுங்கத்தா...நா நல்லாருக்கேன். அப்பா அம்மாலாம் நல்லா இருக்காங்க. என்னா சேதி ?” ஒரு மாதிரி எரிச்சலான பதட்டத்துடனேயே கேட்டேன்.

இஞ்ச.. மணக்குடியில ஒன் கூட்டாளி ஒருத்தன் இருப்பான்ன.. தெக்குத் தெரு ரேடியோ கட வூட்டு பய.. வைரம்.. அவன் சாணிப்பவுடர கரச்சு குடுச்சுப்டாம்ப்பா..தலைஞாயித்துல வெச்சு பாத்துது அப்புறம் நாவப்பட்டிணம் பெரியாஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போவ சொல்லிட்டாவொ போல...அதான் ஒனக்கு சேதிய சொல்லுவோம்னு

சேரித்தா... நா இப்ப மெட்ராஸ்ல வேலைல இருக்கேன். அடுத்தவாரம் ஊருக்கு வரும்போது வந்து பாக்குறேன். இப்ப வேலக்கி போறேன். அப்புறமா போனடிக்கிறேன்என அவசரமாக அழைப்பைத் துண்டித்தேன்

வைரம் என்கிற வைரமணி . கல்லூரிப்படிப்பை முடித்து வேலை தேடி மெட்ராஸ் வந்த  இந்த இடைவெளியில் அவனைக் கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தேன். மனம் மெட்ராஸிலிருந்து நாகைக்கும் மணக்குடிக்குமாய் அலைபாயத்துவங்கியது.

நாகப்பட்டிணத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு சிறுவயதில் தெரிந்த ஒரே கிராமம் மணக்குடி மட்டுமே. அப்பாவழிச் சொந்தமான லெச்சு தாத்தா என்கிற லஷ்மிபதி தாத்தாவும், வடிவு ஆத்தாவும் மணக்குடியில் இருந்தார்கள். எனக்கு நினைவு தெரிந்து ஒவ்வொரு பள்ளிக்கால கோடை விடுமுறையின் போதும் அப்பா கட்டாயமாய் ஒரு வாரமாவது மணக்குடியில் தங்கும்படி கொண்டுபோய் விட்டுவிடுவார். அப்படியொரு கோடை விடுமுறையில் தான் வைரம் அறிமுகமானான்

அவர்கள் வீட்டு ரேடியோ கடையின் மின்னணு பொருட்களை வைத்து எப்போதும் எதையாவது செய்து கொண்டே இருப்பான். பனையோலைக் காத்தாடியில் ரேடியோ மோட்டாரை இணைத்து பேட்டரியும் ஸ்விட்ச்சும் வைத்து ஓடவிட்டது தான் அவனைப் பார்த்து நான் முதன்முதலில் வியந்தது. அன்றிலிருந்து நாங்கள் நண்பர்களானோம் . வைரத்துக்குத் தெரியாத விஷயங்களே இல்லை கடையில் கற்றுக்கொண்ட எலக்ட்ரானிக் வேலைகள் தவிர்த்து இன்னும் என்னவெல்லாமோ செய்வான். செய்தித்தாளில் பார்க்கிற விளம்பரங்களை நோட்டுப் புத்தகத்தில் வரைந்து அச்சு அசலாக வாட்டர் கலரில் வண்ணமடிப்பான். ஆடு , மாடுகளோடு பேசுவான். இவன் சொன்னால் அவைகள் கேட்டுக்கொள்ளும். அல்லது எனக்கு அப்படித் தோன்றும்.

ஒவ்வொரு முறை விடுமுறைக்கு ஊருக்குப் போகும்போதும் அப்பாவை நச்சரித்து அவனுக்காகக் கதைப்புத்தகங்கள், வண்ணக் குப்பிகள், ப்ரஷ்ஷுகள் என எதையாவது வாங்கித்தரச்சொல்லிக் கொண்டுபோவேன். பதிலுக்கு என்னுடைய நோட்டுப் புத்தகத்தில் படங்கள் வரைந்து தந்தனுப்புவான். அல்லது சின்னதாய் ஏதேனும் ஒரு எலக்ட்ரானிக் பொருளைத் தருவான்நாங்கள் பதின்பருவத்தில் அடியெடுத்து வைக்கையில் வைரத்தின் சித்தப்பா ரேடியோ கடையை வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் கடையாக மாற்றினார். ஆனாலும் பழைய பாசம் விடாமல் அக்கம் பக்கம் ஊர்களுக்கு ஸ்பீக்கர் வாடகைக்குத் தரும் சோழன் சவுண்ட் சர்வீஸையும் ஆரம்பித்தார்.

சவுண்ட் சர்வீஸுக்கான பொருட்களை வைக்க கடைத்தெருவுக்கு வெளியே பாதி தென்னங்கீற்றும் பாதி ஓடுமாய் வேய்ந்த ஒரு பழைய வீட்டையும் பிடித்திருந்தார் வைரத்தின் சித்தப்பா. உண்மையில் அது வீடெல்லாம் இல்லை ஒற்றை ஜன்னல் கொண்ட   ஓர் அறை. அவ்வளவே. வைரம் அந்த அறையைத் தன்னுடைய இடமாக்கிக் கொண்டான். பள்ளி முடிந்து வந்ததும் கடைக்குப் போய்விட்டு நேரே இங்கு வந்துவிடுவான். அந்த அறை முழுக்கவும் பெட்டி ஸ்பீக்கர்கள், பெரிய குழாய் ஸ்பீக்கர்கள், ஆம்ப்ளிஃபையர்கள், பழைய ரேடியோ டேப் ரெக்கார்டர்கள், மைக் செட்டுகள், ஒயர்கள் என அடுக்கிக் கிடக்கும்.இன்னொரு பக்கம் ஒரு பெரிய மரப்பெட்டி முழுக்க பழையதும் புதியதுமாய் தமிழ்த்திரைப்படப் பாடல் கேசட்டுகள் குவிந்து கிடக்கும்

நான் மணக்குடி போகும்போதெல்லாம் ஊரைச் சுற்றிவிட்டுப்  பாட்டுக்கேட்க அறைக்கு வந்துவிடுவோம் .கொட்டாங்குச்சியில் ட்வீட்டர் வைத்து சால்டரிங் செய்து சின்ன ஸ்பீக்கர், மண் பானையில் வைத்து டேப் சுற்றிய வூஃபர் என எல்லாமே வித்தியாச வித்தியாசமாய் எதையாவது செய்து வைத்திருந்தான் வைரம். “ஆளு..இப்ப ஒரு கேசட்டு போடுறேன்.. கொரலு எப்புடி இருக்கு கேட்டுப்பாரு..” என்றபடி ஒரு கேசட்டை எடுத்துப் போட  நூறு வயலின்கள் இசைக்க மெல்லிய குழலிசை பின்தொடர , “மாலையில் யாரோ மனதோடு பேச…மார்கழி வாடை மெதுவாக வீச..” என பாடல் ஒலிக்கத்துவங்கியது. அடுத்த நான்கரை நிமிடங்களுக்கு ஆளுக்கொரு மூலையில் சுவரில் சாய்ந்தபடி அவரவர் மனதுக்குப் பிடித்த பெண்ணொருத்தி எங்கோ ஓர் ஊரில் எங்களுக்காகப் பாடிக்கொண்டிருப்பதாக கனவு கண்டபடி அமர்ந்திருந்தோம்.

 பாடல் முடிந்ததும் வைரம் டேப்பை நிறுத்திவிட்டு கேட்டான், “டேய்..ஆளு… இந்தப்பாட்டு வந்து ஒரு நாலஞ்சு வருசம் இருக்கும். ரேடியாவுல கேட்டத டேப்புல கேக்க எப்புடி இருக்கு பாத்தீல்ல..” “ஆமாடா..அப்டியே சத்தமெல்லாம் மணி மணியா கேக்குது.. பாடுனதும் அப்புடி பாடிருக்கு.. அது யாருடா..பேரென்ன ?”

“பேரு சொர்ணலதா டா.. வேற நெறைய பாட்டு பாடியிருக்கு .. ஒரு 90 கேசட்டு முழுக்க பதிஞ்சு வெச்சுருக்கேன். சொர்ணம்னா சும்மாவா. பேருக்கேத்தாப்ள தங்கமாட்டம் கொரலு ”

அப்படித்தான் ஸ்வர்ணலதா எங்களுடைய வாழ்க்கைக்குள் வந்தார். அதன்பின் எப்போது மணக்குடி போனாலும்,வைரம் அந்த சவுண்ட் சர்வீஸ் கீற்று வீட்டில் ஏதாவது ஒரு ஸ்வர்ணலதா பாடலை திரும்பத்திரும்ப ஒலிக்கவிட்டபடி உட்கார்ந்திருப்பான். “லேய்… வேற பாட்டு எதாவது போட்றா ஆளு..”, என்றால் “நீ கம்முன்னு கேளு… ” என்றபடி அடுத்த பாட்டை ஓடவிடுவான் .

ஊற்றுப் போலவே பாட்டு வந்ததே
உன்னைக் கண்டதாலே
பாவை என்னையே பாட வைத்ததே
அன்பு கொண்டதாலே
உன்னைப் பார்க்கையில் என்னைப் பார்க்கிறேன்
உந்தன் காந்தக் கண்ணில்
நன்றி சொல்லியே என்னைச் சேர்க்கிறேன்..நீ தானே நாள்தோறும்..நான் பாட காரணம்..

பாடல் ஓடிக்கொண்டிருந்த போதே திடீரென, “லேய் ஆளு.. நான் சொர்ணத்த கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்..என்னா சொல்ற ? “  என்றான்.

“எந்த சொர்ணம் டா ? யாரு வூடு ? “ தெரிந்தேதான் கேட்டேன்

எந்த நாளும் மேன்மையில்
என்னை ஏற்றும் ஏணியே
அன்னை நீ அல்லவா
இன்னும் நான் சொல்லவா
நீதான் தெய்வம் நீதான் செல்வம்
கீதம் சங்கீதம்”

பாட்டை நிறுத்திவிட்டு பட்டெனத் திரும்பினான்

“லேய்.ஆளு சொர்ணலதா டா.. இந்தப் பாட்டு பாடுன சொர்ணம்..”

 “ ஆங்..பண்ணுவ பண்ணுவ.. ஒப்பாரையும் ஆத்தாவையும் கூப்டுக்க… அவ பாடுற எடத்துக்கு போயி பரிசம் போட்டுத் தட்ட மாத்திட்டு வந்துருவோம் “ என்னால் இன்னும் சிரிப்பை அடக்க முடியாமல் அவனைச் சீண்டினேன்.

“லேய்…சும்மா சொல்லல நெசம்மா தான்.இப்ப அடுத்து பாலிடெக்னிக் சேரப்போறேன். அப்புறம் மெட்ராசுக்கு வேலக்கி போயிட்டு அவளப்பாத்து கேட்ரலாம்னு இருக்கேன்”

”லேய்..ஒளராதடா ஆளு. அவங்கலாம் சினிமாக்காரங்க .பெரிய பணக்காரங்களா இருப்பாங்க ஒன்னவிட நாலஞ்சு வயசு மூப்பா இருப்பா. ஊர்ல எப்டி ஒத்துப்பானுவோ?  நீ எங்கெயோ கெடக்க. அவ எங்கெயோ கெடக்கா. எப்புடிப் பாத்தாலும் சரியா வராதுடா. உன்னய உள்ளவே உட மாட்டானுவொ” கொஞ்சம் தீவிரமாகவே சொன்னேன்

“வயசாவது காசாவது ஒன்னாவுது. நம்மள புடிச்சா போதாதா. ஏங்க..கல்யாணம் கட்டிக்கங்க ஒங்கள நல்லா பாத்துப்பேன். கூடவே கெடக்கேன்னு கால்ல உளுந்துடுவேன்” அவனும் விடாமல் பேசினான்

”லேய்..வைரம்…அவ மலையாளத்துக்காரியாம்டா பேப்பர்ல போட்ருந்தான். ஆளு போட்டோவப் பாத்தியா..சேப்பா இருந்தாலும் பல்லு வேற எடுப்பா இருக்கு..” இன்னும் சீண்டியதும் சுர்ரென கோபப்பட்டான்

”நம்ம மொவரையெல்லாம் வெச்சுகிட்டு பெரத்தியார பேசக்கூடாது கம்னேட்டி… எந்த பாசையா இருந்தா என்ன ? எப்புடி இருந்தா என்னடா.. நிறுத்தி நாலு வரி அவ பாடுனாக்க கல்லுக்கு உசுரு வந்துரும்டா. நான்லாம் அதுக்கே காலத்துக்கும் அவ கால்ல உளுந்து கெடப்பேன் . நீ ஓன் வேலமயிரப்பாரு “ சொல்லிவிட்டு விடுவிடுவென நடந்தான்

பொறுமையாக அவனைச் சமாதானப்படுத்தி விட்டு ஊர் வந்து சேர்ந்தேன். நான் திருச்சியில் கல்லூரியிலும் அவன் வேதாரண்யத்தில் பாலிடெக்னிக்குமாக சேர்ந்தோம். ஊருக்குப் போவதே குறைந்து போனதால் மணக்குடி பக்கம் போகவே இல்லை. விடுமுறை நாட்களில் அவ்வப்போது விடுதியிலிருந்தோ அல்லது காயின் ஃபோனிலிருந்தோ வைரத்தின் சித்தப்பா கடைக்கு அழைத்துப் பேசுவேன். சம்பிரதாய நல விசாரிப்புகளுக்குப் பின் ஏதாவது ஒரு ஸ்வர்ணலதா பாடிய பாடலைச் சொல்லி , அதைக் கேட்டியா இதைக் கேட்டியா என விசாரிப்பான்.

”வாக்மேன் இருக்கா ? நம்ம கடைல பழசு ஏதும் இருந்தா யார்ட்டயாச்சும் குடுத்தனுப்பவா. கேசட்டோட அனுப்புறேன். “

“மாப்ள..வைரம்…அதுக்கெல்லாம் நேரமே இல்லடா காலேஜ் நேரம்போவ வாலிபால் ஆடவே சரியா இருக்கு. இங்க பயலுவ கொஞ்ச நேரம் சும்மான்னு உடமாட்றனுவோ “ சலித்துக் கொண்டேன்

”சரிடா ஆளு. இஞ்ச வந்தா சொல்லு. பாப்பம்” உரையாடலை முடித்துக் கொள்வோம்.

மனசு நாள் முழுக்க வைரம் பற்றிய நினைவுகளை அசைபோட்டபடியே இருந்தது. ஸ்வர்ணலதாவை நினைக்காமல் வைரத்தை நினைக்கவே முடியாது. கல்லூரி முடித்து நான் வேலை தேடி மெட்ராஸ் வந்ததும், அப்பா அம்மாவையும் கூடவே அழைத்து வந்துவிட்டபடியால் அடிக்கடி ஊருக்குப் போக வேண்டிய அவசியமே இல்லாமல் போனது. கேசட்டுகள் கொஞ்சமாய் மறைந்து சிடிக்கள் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டன. செல்ஃபோன்கள் புழக்கமும் கொஞ்சமாய் பரவலானது. 

திடீரென ஃபோனில் அழைப்பான் .ஏதாவதொரு ஸ்வர்ணலதா பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும்.”.இந்த குளிருது குளிருது பாட்ட கேட்ருக்கியாடா ஆளு.. எப்புடி பாடிருக்கால்ல ? எனக்கு அப்டியே கிர்ருன்னு ஆகிப்போச்சு..”அவன் பேசிகொண்டே போக எனக்கு சலிப்பாக இருக்கும்.

“ஏன்டா ஆளு.. இந்தப்பாட்டுல என்னத்தடா கண்ட…”

“உனக்கு நாஞ்சொல்றது என்னைக்கி புரிஞ்சுருக்கு ? நீ போயி பொளப்பப் பாரு போ”

வைரம் பாலிடெக்னிக் முடித்துவிட்டு ஊரில் கடையைப் பார்த்துக் கொண்டு சித்தப்பாவுக்கு உதவியாக இருப்பதாகவும் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் துபாய்க்கு எலக்ட்ரிக்கல் வேலைக்குச் செல்லப்போவதாகவும் சொல்லியிருந்தான்.

நாட்கள் செல்லச் செல்லக, கொஞ்சம் கொஞ்சமாய் ஊரும் , மணக்குடியும், வைரமும், ஸ்வர்ணலதாவும் மனதிலிருந்து மறைந்து போனார்கள். சில ஆண்டுகள் கழித்து திடீரென ஒருநாள் காலையில் அலுவலகம் கிளம்பிக்கொண்டிருக்கையில் காலைச் செய்திகளில் பாடகி ஸ்வர்ணலதா மறைந்த செய்தி ஒலிபரப்பாக ,மூளை உடனே வைரத்தை நினைவூட்ட அவனுடைய எண்ணுக்கு அழைத்தேன். எடுக்கவில்லையெனக் கடை எண்ணுக்கு அழைக்கச் சித்தப்பா பேசினார். 

“காலைலேர்ந்து சவுண்ட் சர்வீஸ்லயே கெடக்காம்ப்பா..என்னான்னே சொல்ல மாட்டேங்கிறான். சோறு தண்ணி இல்ல. ஒன்னு இல்ல. அவனா வெளிய வந்தான்னா ஃபோனடிக்க சொல்றேன். நீ எப்பையாச்சும் இந்தப் பக்கம் வந்தா ஊட்டுக்கு வா “ சுருக்கமாக முடித்துக்கொண்டார் .  அந்த நாள் முழுக்கவும் எனது சிந்தனை அவனைப் பற்றியதாகவே இருந்தது . எவ்வளவு முயன்றாலும் என்னால் உறங்கவே முடியவில்லை.

வைரம் அந்த சவுண்ட் சர்வீஸ் அறையில் அவனுடைய சொர்ணாவுடன் மனதால் வாழ்ந்து கொண்டிருந்தான். அந்த அறையை அவனாக உருவகித்துக் கொண்டால், அந்த அறைக்கு வெளிச்சமும் காற்றும் அனுமதித்த ஒற்றைச் சாளரம் அவளுடைய பாடல்கள் தான். கண்விழித்தது முதலாய் கண்ணயரும் வரையிலுமாக, விடியல் தொடங்கி இருளும் வரையிலுமாக, அவளுடைய குரலும்  அந்தக் குரல் பாடிய பாடல்களின் சொற்களுமாக அந்த அறையைச் சூழ்ந்து நிறைத்துக் கொண்டிருந்தன. அவனைச் சுற்றியிருக்கிற உலகிற்கும் அவனுடைய மெய்ம்மைக்குமான இடைவெளி நிதானமாய் வளர்ந்து கொண்டேயிருந்தது . தன்னைச் சூழ்ந்து கொண்டிருக்கிற குரலின் துணுக்குகளால், பாடல்களின் சொற்களால், இசையின் சிதறல்களால் தன்னை மூழ்கடித்துக் கொள்ள ஓர் பெருங்கிணற்றை அவன் கட்டிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது

அவன் தன்னையறியாமல் தொலைந்து கொண்டிருக்கின்றானா அல்லது தெரிந்தே விடைபெற்றுக்கொண்டிருக்கிறானா . எனக்கு கொஞ்சமும் புரியவே இல்லை. அவனை அங்கிருந்து மீட்டுவிடும்பொருட்டு நீண்ட ஆயிரம் கரங்களில் அவன் எந்த ஒன்றையும் பற்றிக்கொள்ள விரும்பவில்லை. கலங்கிய கண்களுடனும் ஒரு புன்னகையுடனும் அந்தக் குரலில் லயித்தபடியே அவன் அந்த பெருங்கிணற்றினுள் இறங்கிக் கொண்டிருந்தான். சுற்றியிருந்த கூச்சல்களும் சப்தங்களும் ஓசையற்றுப் போயின. அவன் கைகளில் பற்றிக் கொண்டிருக்கிற பாடல்களின் குரலால் மெல்ல அவன் கழுத்தைச் சுற்றிக் கொண்டிருந்தான் . பாடல் மட்டும் கேட்டுக்கொண்டேயிருந்தது

வாழும் போது ஒன்றாக வாழ வேண்டும் வா வா
விடியும் போது எல்லோர்க்கும் விடியும் இங்கு வா வா
உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது

நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே

தூங்கி எழுகையில் களைப்பாக இருந்தது எனக்கு. இன்னமும் வைரம் பற்றியே சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. ஒருவேளை ஸ்வர்ணலதாவுக்காக அழுதுகொண்டிருப்பானோ. இன்னும் மனதில் அதே எண்ணத்துடன் தான் இருக்கிறானா ? என்ன பைத்தியக்காரத்தனம் இது. எங்கோ இருக்கிற, வாழ்நாளில் ஒரு முறை கூடப்பார்த்திராத, பார்க்க முடியாத பெண்ணின் மீது அப்படியென்ன காதல் ? காதலா இது. சுயத்தை மறந்து, தன்னையே கொஞ்சம் கொஞ்சமாய் அழித்துக் கொண்டு, சுற்றியிருக்கிற உலகம் குறித்தோ மனிதர்கள் குறித்தோ பிரக்ஞை இல்லாமல். பித்துக்குளித்தனம். கிறுக்குத்தனம். என்னவேண்டுமானாலும் சொல்லலாம்.

ஊரை விட்டு வெளியில் வந்தால் தானே உலகம் புரியும். அங்கேயே உட்கார்ந்து குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டிருந்தால் எப்படி உருப்படுவதாம் ? வைரத்தின் மீது கோபமாய் வந்தது எனக்கு. அலுவலகம் கிளம்பிச் சென்றதும் எல்லாம் மறந்து போனது.ஓரிரு வாரங்கள் கழித்து வைரம் ஃபோனில் அழைத்திருந்தான்.

“சொல்றா..எப்புடி இருக்க ? இன்னனும் சொர்ணத்த நெனச்சு ஒப்பாரி வெச்சுட்டு இருக்கியா? “ 

அவனுக்கு சுருக்கென்றிருக்க வேண்டும்

“ஹ்ம்ம்.. என்னமோ நெனைக்கிறேன் என்னமோ பண்றேன்.. ஒனக்கென்ன. சும்மா விசாரிப்பமேன்னு ஃபோனடிச்சா என்னையவே போட்டு தாளிச்சுட்டு இருக்க. கம்னேட்டி. அவ எனக்குதான் சொர்ணம் ஒனக்கில்ல” 

“கோவிச்சுக்காதடா ஆளு.. எப்ப வேலைக்கு போற ? எப்ப கல்யாணம் பண்ற ? சொல்லு ”

”கல்யாணமா..இனிமே நான் எங்க போயி யாரத்தேடி கல்யாணம் கட்ட ? “ ஒரு மாதிரி விரக்தியாக சிரித்தபடி பதில் சொன்னான்

“சாமியாராட்டம் பேசாதடா ஆளு. இஞ்சயாச்சும் கெளம்பி வா. ஊர்லயே கெடக்காம. பாட்டு கேக்குறத நிப்பாட்டு கொஞ்ச நாளக்கி “

அதெல்லாம் நிப்பாட்ட முடியாது. அவள ஒருவாட்டியாச்சும் நேர்ல பாத்துருக்கலாம். ஒரு லெட்டராச்சும் போட்டுருப்பேன். இப்ப எங்க போயி தேட. பாட்டு கேசட்ல தான் கெடக்கா”

அவன் விசும்புவதுபோலத் தோன்றியது. எனக்கு அவனுடைய அறியாமையை நினைத்து வருந்துவதா அல்லது  அவனுக்கு ஆறுதல் சொல்லுவதா எனத் தெரியவில்லை.

”வுடுடா ஆளு. இதெல்லாம் அப்டியே காலப்போக்குல மனசு மாறிடும். நீ போட்டு கொளப்பிக்காத. சித்தப்பாட்ட சொல்லி பொண்ணு தேடுவோம்”

பேச்சை மாற்ற முயன்றேன்

“ஒனக்கு நா சொல்றது புரியாது. நீ ஒன்னும் சொல்ல வேணாம் யார்ட்டயும். நாம் போறேன்”

பேச்சு அப்படியே வழக்கமான விசாரிப்புகளுடன் முடிந்தது. பின்பு நாங்கள் பேசிக்கொள்வது முற்றாக நின்றுபோனது. மணக்குடியிலிருந்து ஆத்தாவோ அத்தையோ ஃபோனில் அழைத்தால் அவனைப் பற்றி விசாரிப்பேன். சுற்றுப்பட்டு ஊர்களில் படித்த பெண்ணாக தேடுவதாகச் சொல்வார்கள். கேட்டுக் கொள்வேன். அதன் பிறகு எங்கெங்கோ பெண் தேடியதாகவும் எல்லாமே ஏதோ ஓர் காரணத்தால் அமையாமல் போனதாக ஆத்தா ஃபோன் பேசும்போது சொல்லியிருந்தார்,  பின்பு ஓரிரு வருடங்களுக்குப் பிறகு வைரத்தின் சித்தப்பா ஃபோனில் அழைத்து அவன் குறித்து சொன்னார்.

”தம்பி... எப்பயும் போல தான்டா பொண்ணு பாக்க இவனக்கூப்டுட்டு தோப்புத்துறைக்கு போயிருந்தோம். பொண்ணு ஊடு பெரிய வசதி ஒன்னும் இல்ல. அரமனசா தான் ஜாதகம் குடுத்ததா ஜோசியர் சொன்னாரு. இந்தப்பயலும் அரமனசா தான் அங்க வந்தான்; பொண்ணுட்ட ஒரு நிமிசந்தான் பேசிருப்பான். பட்டுன்னு வந்து என் காதுல ,கட்டுனா இந்தப் பொண்ண தான் கட்டிப்பேன்னான். யப்பா பயலுக்கு ஒரு வழியா மனசு வந்துச்சேன்னு சந்தோசப்பட்டா , பொண்ணு ஊட்ல கொஞ்சங்கூட புடி குடுக்க மாட்றானுவோ. இவனும் அந்தப் பொண்ண நெனச்சுட்டே கெடக்கான். நீயாச்சும் பேசிப்பாரு” மனதிலிருந்த அத்தனையையும் மடமடவென கொட்டித் தீர்த்தார்

நான் வைரத்தின் எண்ணுக்கு அழைத்தேன் “ஆளு. எப்பிட்றா இருக்க ? பொண்ணு பாக்க போனீங்களாம்ல சித்தப்பா சொன்னாப்ள. என்னா பிரச்சன ?”

“தெரியல டா.. எனக்கு இவ போதும்னு இருந்தது போயி இவதான் வேணும்னு இருக்கு. பொண்ணூட்ல புடி குடுக்காம, பட்டும் படாம பேசுறானுவோ. பொண்ணு கூடவும் பேச உட மாட்றானுவோ. எரிச்ச மசுறா இருக்கு. ஆனா இந்தப் பொண்ணுட்ட பேசி அவ சரின்னுட்டா எல்லாமே சரியாயிடும்னு தோணுது… ஒரு மாதிரி கூடி வந்தாப்ள இருக்கும்”

கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற

காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போல இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமேதான்

பின்னால் சத்தமாக பாடல் ஓடிக்கொண்டிருந்தது

”சரி விட்றா. இது இல்லாட்டா என்ன. ஊர்ல வேற பொண்ணா இல்ல. சித்தப்பாட்ட நான் பேசுறேன். “

“லேய் ஆளு. உனக்கு நான் சொல்றது எப்பவுமே புரிஞ்சதேயில்ல. இனிமேலும் புரியப்போறதில்ல. நீ ஃபோன வெச்சுட்டுப் போயி உன் பொழப்பப் பாரு” பட்டென மொத்தமாகத் துண்டித்துக் கொண்டான்

எனக்கும் அத்தோடு மனசு விட்டுப் போனது. இது நடந்து சரியாக ஆறு மாதம் கழித்து இவன் மருந்து குடித்த செய்தி. பைத்தியக்காரப் பயல் என்ன பண்ணித் தொலைத்தானோ என்றிருந்தது. வெள்ளிக்கிழமைதான் ,முடிந்தால் மாலையில் கிளம்புவோம் என நினைத்தேன்.அலுவலகம் முடிந்து வந்து வீட்டில் சொல்லிவிட்டு ஊருக்குக் கிளம்பினேன். விடியற்காலையில் பேருந்து நிலையத்தில் இறங்கி ஆட்டோ பிடித்து அரசு மருத்துவமனைக்குச் சென்று இறங்குகையில் வைரத்தின் சித்தப்பாவை ஃபோனில் அழைத்தேன். பதிலில்லை. ஒரு மாதிரி குழப்பமாக இருந்தது. என்னசெய்வதெனத் தெரியாமல் வைரத்தின் எண்ணுக்கே அழைத்தேன். அப்போதும் பதிலில்லை. கொஞ்சம் நேரம் எதுவும் புரியாமல், யோசிக்காமல் மருத்துவமனைக்கு உள்ளேயும் வேளியேயுமாய் நடந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.வெளியே எங்கோ டீக்கடையில் இருந்து பக்திப்பாடல் மங்கலாக ஒலித்துக் கொண்டிருந்தது

”ஐயய்யோ… யப்பாடி என் புள்ள பெய்ட்டாண்டி… எம்புள்ளைய வாரிக்குடுத்துட்டனே..” அலறிக்கொண்டு ஓடிவந்து விழுந்து அழுதாள் வைரத்தின் அம்மா… அவரைத் தாங்கிப் பிடித்தபடி வைரத்தின் அப்பாவும், அவரின் பின்னே ஸ்ட்ரெட்சரில் என் வைரமும் .அருகில் சித்தப்பா யாரிடமோ ஃபோனில் பேசியபடி கலங்கிய கண்களுடன் நிற்க, நான் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அம்மாவின் கைகளைப் பிடித்தபடி தரையில் முழங்காலிட்டிருந்தேன். அழவில்லை…! கண் மட்டும் கலங்கியபடியே இருந்தது. பொறுமையாக எனது கைகளை விடுவித்துக் கொண்டு பிணக்கிடங்கின் முன்னே ஸ்ட்ரெச்சரில் கிடத்தப்பட்டிருந்த வைரத்தின் அருகே சென்றேன். சில்லிட்ட அவன் கைகளைப் பற்றிக் கொண்டு அவன் முகத்தையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன் . அவன் இல்லையென்கிற உணர்வை மிஞ்சி அவன் இருக்கும்போதே பேசியிருக்கலாமோ என நெஞ்சம் முழுக்க குற்ற உணர்ச்சி மிகுந்திருந்தது. தொடர்ந்து பேசியிருந்தால் ஏதேனும் சொல்லியிருப்பானோ ? செய்தி கேட்டவுடன் கிளம்பி வந்திருந்தால் நம்மைப் பார்த்திருப்பானோ ? போயிருக்கமாட்டானோ ? நெஞ்சை அறுக்கிற ஆயிரம் கேள்விகள்

”பரிசமும் போடல…பளகவும் இல்ல.. இப்பதானடா புள்ள அந்த பொண்ண பாத்த..அதுக்குள்ள என்னடா அவமேல.. ஊர்ல வேற பொம்பளப்புள்ளயே இல்லயாடா..அப்படி என்னடா அவமேல ..” அம்மா கதறிக் கொண்டிருந்தாள்

அருகில் வந்த சித்தப்பாவிடம் கேட்டேன்.” என்னாச்சு சித்தப்பா ? எப்புடி ? யாரு அந்த பொண்ணு? அந்த தோப்புத்துறையான் ஊட்டு பொண்ணு தானா? இவன்ட்ட பேசி ஏதும் சொன்னானுவளா “

“அடகுக்கட கணேசனோட ரெண்டாவது பொண்ணு தாண்டா தம்பி  சொர்ணவல்லியோ என்னம்மோ பேரு. இவன் அவள முன்னப்பின்ன பாத்தது கூட இல்லடா. அன்னைக்கு பொண்ணு பாக்க போனப்ப தாண்டா பாத்தோம். ரெண்டு நிமிசம் பேசிருந்தான்னா அதிகம். அவனுவோ என்னமோ ஜாதவம் சரியில்ல அது இதுன்னு பதில் சொல்லாம இளுத்தடிச்சானுவோ.. இந்தப்பய மனசுல என்னத்த நெனச்சான்னு தெரியல…இஞ்ச பாருடா தம்பி இவன…” சொன்னபடியே அவன் சட்டை காலரைப் பிடித்து விலக்க இடது தோள்பட்டைக்கு கீழே நெஞ்சுக்கு மேலே ‘வைரம் சொர்ணம்’ என பச்சை குத்தியிருந்தது

எனக்கு சட்டென எல்லாமும் புரிந்தது போல் இருந்தது. கட்டுப்படுத்தவே முடியாமல் வெடித்து அழுதேன். ”ஏன்டா ..வைரம்… ஏன் டா.. ஏன் டா இப்புடிப்பண்ண..ஏன்டா ஆளு…” வேறு எதுவுமே கேட்கத் தோன்றவில்லை. பேசத் தோன்றவில்லை. அவனிடம் கேட்க வேறு எந்தக்கேள்வியும் இல்லை. ஆனாலும் உள்ளுக்குள்ளே ஆயிரம் கேள்விகள். ஆயிரம் சமாதானங்கள்

என்ன நினைத்திருப்பான் ? இவனுடைய சொர்ணத்தை அதே பெயருடைய வேறு பெண்ணிடம் தேடியிருப்பானா ? சாயலா ? குரலா ? அல்லது வெறும் பெயரா ? அதே பெயருக்காகவாடா இத்தனை ஏக்கம் ? கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம். ஊரைவிட்டு வந்திருக்கலாம். திரும்பத்திரும்ப அவளுடைய பாடல்களையே கேட்டு மனதில் அவளையே வறித்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். வேறு யாரையாவது காதலித்திருக்கலாம் . உண்மையில் ஸ்வர்ணலதாவுக்கு ஒரு காதலன் இருந்திருப்பானா ? இருந்திருக்கலாம். அல்லது எங்கோ மணக்குடியில் ஒரு பைத்தியக்காரன் அவளை உருகி உருகி நேசித்ததையாவது அவள் அறிந்திருக்கலாம். வைரத்துக்கு அவனுடைய சொர்ணம் கிடைத்திருக்கலாம். அல்லது ஏதாவதொரு சொர்ணத்துக்கு என் வைரம் கிடைத்திருக்கலாம். இனி இந்த உலகில் தனக்கு எந்த நல்லதும் நடக்கப் போவதில்லையென அவன் நம்பாமல் இருந்திருக்கலாம். துபாய்க்கு வேலைக்குப் போயிருக்கலாம். முப்பத்தியேழு வயதில் திடீரென ஸ்வர்ணலதா சாகாமல் இருந்திருக்கலாம்.

 எதற்கும் பதில்களோ விளக்கங்களோ இல்லை. நானும் இந்த உலகும் என்ன நினைத்தாலும் , வைரம் சொன்னது போல, “ உனக்கு நான் சொல்றது எப்பவுமே புரிஞ்சதேயில்ல. இனிமேலும் புரியப்போறதில்ல “

இனி எனக்கும் அவனுக்கும் எதுவுமில்லை. அவனுடைய உடலுடன் ஊருக்குச் செல்லவோ வழியனுப்பவோ எனக்கு மனமில்லை. யாருடைய கண்ணிலும் படாமல் எந்தப் பேச்சிலும் இல்லாமல் அப்படியே காற்றில் கரைந்து போய்விடலாமெனத் தோன்றியது எனக்கு. வைரத்தை உடற்கூறாய்வுக்காக உள்ளே கொண்டு போனார்கள். நான் விடுவிடுவென மருத்துவமனைக்கு வெளியே வந்து பேருந்து நிலையம் நோக்கி நடக்கத்துவங்கினேன். எங்கோ தொலைவிலிருந்து காற்றில் கலந்து வந்து மெதுவாய் கேட்டது  ஒரு பாடல்.

கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்…!

இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்!

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

 

 

 

 

Related Posts Plugin for WordPress, Blogger...