நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

சொல்லாததும் உண்மை - சுடும் உண்மைகள்





உண்மை...!!!
எத்தனை எத்தனை வார்த்தைகளையும் அர்த்தங்களையும் உள்ளடக்கிய சொல் இது...!!


எல்லாருக்குமே வாழ்க்கையில சில கோட்பாடுகள்..நெறிமுறைகள் இருக்கும்.. யாரையும் கஷ்டப்படுத்தகூடாது...பொய் பேசக்கூடாது...கடன் வாங்கக்கூடாது... சாகிற வரைக்கும் சொந்தக்கால்ல நிக்கணும்... யாரையும் நம்பி வாழக்கூடாது....இப்படி எத்தனையோ தனி மனித கொள்கைகள்.
இவற்றில் பெரும்பாலானவை இன்றைய வாழ்க்கைச் சூழலில் எட்டாக்கனியாக இருப்பினும்...இருப்பதிலேயே கடினமான கொள்கையாக நான் கருதுவது உண்மையாக இருத்தல் என்பதைத்தான்.எப்போதும் உண்மையாக இருப்பதென்பது சாத்தியமில்லாத ஒன்றும் கூட.

இப்படியிருக்கையில் ஒரு மனிதன் தன வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை... தனக்கு நேர்ந்த அனுபவங்களை... கடந்து சென்ற பெண்களை.. உலுக்கிப்போட்ட மரணத்தை... வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடங்களை.. செவிட்டிலறையும் உண்மைகளாகச் சொல்வது தான் இந்த 'சொல்லாததும் உண்மை'...!!வெகு சமீபத்தில் படித்து முடித்த புத்தகம்.  

அந்த மனிதர் 'பிரகாஷ்ராஜ்'...!!தென்னிந்தியாவின் ஆகச்சிறந்த நடிப்பாளுமைகளில் ஒருவரான பிரகாஷ்ராஜ் இத்தனை இத்தனை வாழ்வியல் அனுபவங்களையும்... கதைகளையும் தன்னகத்தே கொண்டிருப்பார் என இந்த புத்தகத்தை படிக்கத் தொடுங்குகையில் சத்தியமாக நான் எண்ணியிருக்கவில்லை. விகடனில் தொடராக வெளிவந்தபோது பெரிதாக என்ன இருந்து விடபோகிறதென இந்த அத்தியாயங்களை படிக்காமல் கடந்திருக்கின்றேன்.

ஆனால் இப்போது படிக்க நேர்கையில்  இந்த புத்தகம் என்னுள் ஏற்படுத்திய தாக்கம்...நிச்சயமாக மிகவும் ஆழமானது.வாழ்க்கையை சற்றே கடுமையான படிக்கட்டுகளின் வழி கடந்தவர்களுக்கு/கடந்துகொண்டிருப்பகளுக்கு  இதே தாக்கம் ஏற்படுமென்பது உறுதி.நிச்சயமாக ஒரு தவற விடக்கூடாத புத்தகம் இது...!!!





புத்தகத்தில் என்னை கவர்ந்த/ரொம்பவும் பாதித்த/யோசிக்கவைத்த  வரிகள் சில:


"எல்லாரும் உண்மை தன் பக்கம் இருக்கனும்னு விரும்புவாங்க.நான் உண்மையின் பக்கம் இருக்கனும்னு யோசிச்சதால நிறைய இழப்புகள்.ஆனா பெற்ற அனுபவங்கள் அதிகம்.சொன்ன உண்மைகளின் அளவு கையளவு மழை.சொல்லாத உண்மைகளின் அளவு ஆகாய நட்சத்திரங்கள்."

"நிகழ்காலத்துக்கான வாழ்க்கையைப் பற்றி யோசிச்சு நாம் செய்யும் தவறுகளைத் திருத்திக்க முடியும்.நாளைக்கான பயத்தின் அடிப்படையில் செய்கிற பாவங்கள் பெரும்பாலும் திருத்த முடியாதவை."

"நடிகனுக்கு கிளிசரின் போடாமல் கண்ணீர் வழிகிற தருணம் இருக்கே...அது ரொம்ப துயரமானது.ஏன்னா, அது உண்மையான கண்ணீரான்னு ஒரு சந்தேகம் எல்லார் மனசுலேயும் ஒரு செகன்ட் எட்டிப்பாத்துட்டு போகும்."

"வாழ்க்கையில் நமக்கு அம்மாவோ,அப்பாவோ,காதலனோ,காதலியோ,நண்பர்களோ...யாரோ ஒருத்தர் எப்படி வாழறதுன்னு அவங்க வாழ்க்கை மூலமா சொல்லிக்கொடுக்கிறவங்களா இருந்துட்டா, அந்த வாழ்க்கை உண்மையிலேயே வரம் தான்."

"சில விஷயங்களை வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாது, மரணம் மாதிரி.காதல், காமம் எல்லாமே வாழறதுக்கான காரணங்கள் தான். வாழ்கிற கொஞ்ச நாட்கள்ல கிடைக்கிற எல்லா வலிகளுமே தாங்கிக்கவும், தாண்டவும் வேண்டியவை தான்.அம்மாவுக்கு வலி கொடுத்துட்டு பிறக்கிறவன் தானே ஒவ்வொரு மனுஷனும்.அப்புறம் வன் மட்டும் பலியை எதிர்கொள்ள மாட்டேன்னு தற்கொலைக்குத் தயாராவது நியாயமா? வலி இல்லாம எப்படி வாழ்க்கை?"

"வெற்றிங்கிறது அரண்மனை.அங்கே பாதுகாப்பா இருக்கலாம்.ஆனா,எதையும் கத்துக்க முடியாது.அடர்ந்து விரிந்திருக்கிற காடுகளில்தான் அனுபவங்கள் பசுமையா பூத்திருக்கு."

"ஒருவருக்குள் ஒருவர் தொலையாமல், ஒருவருக்குள் ஒருவர் தேடாமல்,ஒருவரை ஒருவர் அடையணும்னு நினைக்கும்போதுதான் அசிங்கமாகிடுறோம்."

"உண்மை எப்பவுமே எளிமையாதான் இருக்கும்.ஆன, எளிமை தான் எல்லாவற்றையும்விட அழகு...!!"

"இன்னொரு வலுவான நம்பிக்கையைத் தர முடியும்கிற உறுதி இருந்தால்தான், மத்தவங்க நம்பிக்கை மேல் கைவைக்கணும்.இல்லேன்னா அவங்கவங்களும் தங்களோட நம்பிக்கையோட வாழ்ந்துட்டுப் போகட்டும்.அதனால லாபம் இல்லாம இருக்கலாம்.நிச்சயமா நஷ்டம் இருக்காது."

"காதல் என்பது பெறுவது இல்லை;தருவது இல்லை;அடைவதும் இல்லை.அது... நிகழ்வது...!!"

"நம்பிக்கை இல்லாம ஒரு விஷயத்துல வேஷம் போடுறதைவிட,உண்மையா இருக்கிறதைத்தான் கடவுளும் விரும்புவார்.. ஒருவேளை அப்படின்னு ஒருத்தர் இருந்தா..!!"

"வார்த்தையில் வாழ்க்கையைத் தொலைத்த மனிதர்களின் எண்ணிக்கை இருக்கே..அது வானத்து நட்சத்திரங்கள் மாதிரி எண்ணி முடிக்க முடியாததோ..!!"

"பிரச்சனையைப் பேசாமல்,தீர்வையே தேடாமல்..கோபத்தையும்,அது பெத்தெடுத்த குழந்தையான மௌனத்தையும் தோளில் சுமந்துட்டு வாழ்க்கையைத் தொலைக்கலாமா..?"

"எல்லோரும் எல்லோரையும் எல்லா நேரத்திலும் தேடுவதில்லை.ஒவ்வொருத்தருக்கு உள்ளேயும் ஓர் உலகம் இருக்கும்.பெரும்பாலும் தேவைகள் வரும்போதுதான் நட்பு, காதல், உறவு, உணர்வு... எல்லாமே அர்த்தமுள்ளதா இருக்கும்."



------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: 'சொல்லாததும் உண்மை'
ஆசிரியர்: பிரகாஷ்ராஜ் 
எழுத்தாக்கம்: த.செ.ஞானவேல்
வெளியீடு: விகடன் பிரசுரம்
விலை: ரூ.115 
------------------------------------------------------------------------------------------------------------





வெள்ளி, 20 ஏப்ரல், 2012

நெஞ்சக் குளத்தில் நீ கல்லை எறிந்தாய்…!!



பக்கங்கள் படபடத்தபடி

திறந்து கிடக்கும்
புத்தகங்கள்….
தன்னிலை மாறி
ஒழுங்கற்று
கலைந்து கிடக்கும்
துணிகள்..
பாதி பக்கங்கள்
மட்டும் நிரம்பிய
பழைய டைரி..
நில்லாமல் இயங்கும்
கணினி…
நினைவுக் குளத்தில்
கல்லெறிந்தபடி
ஒலிக்கும்
பழைய பாடல்கள்…
முற்று பெற
முரண்டுபிடிக்கும்
வாக்கியங்கள்….
காற்றை சலனப்படுத்தும்
கண்ணீர்த்துளிகள்…
என் அறை முழுதும்…
சிந்திச்சிதறி…
நிரம்பி வழிகிறது…
நீ தவறவிட்ட
உனக்கான என் காதல்…!!!

வியாழன், 19 ஏப்ரல், 2012

மூங்கில் மூச்சு - இது திருநவேலி காவியம்லா

ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இப்போதுதான் எழுத நேரம் கிடைத்தது.முன்பு சென்னை புத்தகக் காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களை ஒன்றன் பின் ஒன்றாக படித்து முடித்துவிட்டு அவற்றைப் பற்றி எழுதலாம் என எண்ணியிருந்தேன்.முதலில் படித்து முடித்த சுகா -வின் 'மூங்கில் மூச்சு'  பற்றிய என் அனுபவம்...

மனிதனாகப் பிறந்த எல்லோருக்குமே அவர்களின் பெற்றோர்,கல்வி, வளரும் சூழல்,நண்பர்கள் என பல காரணிகளின் அடிப்படையில் அவரவர்களின் விருப்பங்களும் ரசனைகளும் மாறுபடும்.ஆனால் சில விஷயங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காக எல்லோருக்குமே பொதுவானதாக அமைந்துவிடுவதுண்டு. அப்படி ஒரு விஷயம் தான் நாம் பிறந்து வளர்ந்த ஊரின் மேல் நாம் கொண்டிருக்கும் 'ஊர்ப்பாசம்'. நீங்கள் யாராக இருந்தாலும் சரி...உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி... சமுதாத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி..ஒரு நிமிடம் நமக்கு மிகவும் பிடித்த இடம் எதுவென்று யோசித்துப் பார்த்தால் அது நிச்சயம் நம் சொந்த ஊராகத்தான் இருக்கும்.

ஏனெனில் நம் ஊரின் ஒவ்வொரு தெருவிற்குப் பின்னும், ஒவ்வொரு இடத்திற்குப் பின்னும் நமக்கு ஒரு மறக்க முடியாத கதை இருக்கும்.ஒரு இனிமையான நிகழ்வு இருக்கும்.ஒரு மறக்க முடியாத மனிதர் இருப்பார். முதன்முதலில் சைக்கிள் ஓட்டிப் பழகிய தெரு, முதன்முதலில் குடிபெயர்ந்த வாடகை வீடு, வெயில் மறந்து விளையாடிய மைதானங்கள், பதின் பருவ காதலிக்காக காத்திருந்த தெருமுனை, திருவிழாக் காலங்களில் தூக்கம் மறந்து சுற்றித்திரிந்த வீதிகள், நண்பர்களோடு கும்மாளமிட்ட ஆற்றங்கரை, நீச்சல் பழகிய கோவில் குளம், பால்வாடியிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த பள்ளிக்கூடம்,வீட்டுக்கு தெரியாமல் படம் பார்த்த சினிமா கொட்டகை, இப்படி நினைத்துப் பார்த்து நெகிழ்ந்து போக எத்தனையோ உண்டு.

அப்படி தான் பிறந்து வளர்ந்த ஊரையும், ஊர் மக்களையும் பற்றி மண் மனம் மாறாமல்...ரசித்து..சிலாகித்து.. 'சுகா' எழுதியது தான் இந்த மூங்கில் மூச்சு. சுகா - சுத்தமான 'திருநவேலி'க்காரர்.இப்போது வசிப்பது சென்னையில்.திரைத்துறையில் பணிபுரியும் இவரின் முதல் படமான 'படித்துறை' விரைவில் வெளிவர இருக்கின்றது.பாலுமகேந்திரா பட்டை தீட்டிய வைரங்களுள் இவரும் ஒருவர்.வேணுவனம் என்ற பெயரில் ஒரு வலைப்பூவும் எழுதிவருகின்றார்.வேணுவனம் - இது அவரது வலைப்பூவின் சுட்டி.இவரது 'மூங்கில் மூச்சு' விகடனில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பினைப் பெற்று, பின்பு விகடன் பிரசுரத்திலேயே புத்தகமாக வெளிவந்தது.


திருநெல்வேலி என்றாலே அல்வா,அறுவா,வாலே போலே நெல்லைத் தமிழ் என்று நமது தமிழ்த்திரையுலகம் அடையாளப் படுத்தியிருக்கின்ற வேளையில் நெல்லைத் தமிழ் மணக்க சுகா ஊர்ப் பெருமைகளை எடுத்தியம்புகையில் நமக்கு ஆச்சரியம் மிகும் என்பது உறுதி.வெறுமனே ஊர்ப்பெருமை மட்டும் பேசாமல் அந்த ஊரில் தன் வாழ்வில் சந்தித்த/கடந்து சென்ற பலதரப்பட்ட மனிதர்களையும் அவர்களின் குணாதிசயங்களையும் அழகுற சொல்லியிருப்பது தான் மூங்கில் மூச்சின் தனிச்சிறப்பு.எப்படி அமரர் 
திரு.சுஜாதா அவர்களின் ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’-இன் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரையும் நம்மால் இன்றளவும் மறக்க முடியாதோ..அதேபோல் கனேசண்ணனையும், குஞ்சுவையும், வரதராஜன் மாமாவையும்,சுந்தரம் பிள்ளை பெரியப்பாவையும் நம்மால் மறக்கவே முடியாது.

தாமிரபரணி (தாம்ரவருணி) பெருமையோடு தொடங்கும் முதல் அத்தியாயம் அப்படியே ஒரு நெடும் பயணமாய்த் தொடங்கி பாலுமகேந்திரா, எம்.ஜி.ஆர்-சிவாஜி;ரஜினி-கமல் கால ரசிகர் மன்ற போட்டிகள்,ஆங்கிலம் படுத்திய பாடு, இலங்கை வானொலியில் எதிர்பார்த்துக் காத்துக்கிடந்த பாடல்கள், பாடல்களுக்கு பின்னாலிருந்த காதல்கள், டூரிங் டாக்கீஸ் சினிமா, திருவிழாக்கால தேவதைகள் துரத்தல்,நெல்லைத்தமிழ், ஐஸ்பால் விளையாட்டு,சென்னையில் வீடு தேடியலைந்த கதை,கேசட்டில் விரும்பி பதிந்த பாடல்கள், நண்பன் குஞ்சு-வின் ரகளைகள்,இளையராஜாவின் இசை, ரிக்‌ஷாக்கார செல்லப்பா மாமா,பாட்டுக் கச்சேரிகள்,குற்றால சீசன்,நெல்லையின் கிளப் கடைகள் (உணவகங்கள்) என பலவாறாகப் பயணித்து காலங்களைக் கடந்து தற்போதைய சுகா-வோடு நம்மை இணைக்கின்றது.

நெல்லை வட்டார வழக்கையும், காலத்தினால் ஏற்பட்ட சமுதாய மாற்றங்களையும், நமக்குத் தெரியாத சென்ற தலைமுறை மனிதர்களையும், இசை-உணவு-உடை என பல்வேறு 
தளங்களில் அவர்களின் விருப்பங்களையும், மிக அழகாகப் பதிவு செய்திருக்கின்றார் சுகா.மெலிதான நகைச்சுவை இழையோடும் 
நடையைக்கொண்டிருந்தாலும் அங்கங்கே நெஞ்சை உலுக்கும் சோகங்களையும் தரத் தவறவில்லை இந்த ’மூங்கில் மூச்சு’.
 
மொத்தத்தில் 'மூங்கில் மூச்சு' படித்து முடித்தவுடன், "சே... நம்ம ஊர்ல கூட இந்த மாதிரி சொல்றதுக்கு நிறைய விஷயம் இருக்கே....எத்தனயோ வித்தியாசமான மனுஷங்க இருக்காங்களே.... கண்டிப்பா நம்ம ஊரப் பத்தியும்..மக்களைப் பத்தியும் நாமளும் எழுதனும்யா " என்று எண்ண வைப்பது தான் சுகாவுக்குக் கிடைத்த வெற்றி.திருவாருர்க்காரனான எனக்கு திருநெல்வேலியைப் பிடிக்கவைத்த/ரசிக்கவைத்த  இந்த 'மூங்கில் மூச்சு'  நிச்சயமாக ஒரு தவறவிடக்கூடாத புத்தகம்.

புத்தகம்: மூங்கில் மூச்சு
ஆசிரியர் : சுகா
வெளியீடு: விகடன் பிரசுரம்
விலை : ரூ.95 



Related Posts Plugin for WordPress, Blogger...