நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

சனி, 20 அக்டோபர், 2012

பீட்சா - Don't Miss It...!!


’பீட்சா’....

ஏற்கனவே ’நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில பார்த்த இந்த படத்தின் இயக்குனருடைய குறும்படங்கள்...அப்புறம் இந்த படத்துடைய பாடல்களும் ட்ரைலரும் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்புல தான் முதல் நாளே இந்த படத்த பாத்துடனும்னு போனேன்.சும்மா சொல்லக்கூடாது..இயக்குனர் ‘கார்த்திக் சுப்பாராஜ்’ கொஞ்சம் கூட ஏமாத்தல... படம் சும்மா அட்டகாசமா இருக்கு..!
எவ்வளவு நாளாச்சு இப்டி பர பரன்னு ஒரு த்ரில்லர் பார்த்து.படத்தோட கதை என்னான்னா....

வெயிட்...அத சொன்னா படம் பாக்குற ஆர்வம் போயிடும்.அதனால படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. :):) 

ஹீரோ ‘விஜய் சேதுபதி’யை பொருத்தவரையில் இது அவருக்கு கெடைச்ச ஒரு செம்ம ப்ரேக்.அவரும் பெர்ஃபார்மன்ஸ்ல குறை வைக்காம பட்டைய கெளப்பிருக்காரு.குறிப்பா அந்த பேய் பங்களா சீக்வன்ஸ்...வாய்ப்பே இல்ல..ஒளிப்பதிவாளர் ’கோபி அமர்நாத்’ அவரோட முழுத்திறனுக்கும் அந்த ஒரு காட்சித்தொடரே போதும்...Extraordinary..!! 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பத்தியும் சொல்லியே ஆகனும்.’அட்டகத்தி’ல கலக்குனவரு தான் இவரு. இந்த மாதிரி ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்துல படம், பாக்குறவங்களை அப்படியே கட்டி போடுறதுதான் முக்கியம்.அந்த வேலையை திரைக்கதையே பாதி செஞ்சுடும்னாலும் ஒளிப்பதிவும் இசையும் தான்  அதை முழுமையாக்கும். அந்த பின்னணி இசையிலும் சரி... அங்கங்கு ஒலிக்கும் பாடல்களும் சரி...சும்மா அதகளம்.’மோகத்திரை’ பாட்டு மட்டும் தான் படத்துல முழுசா வருது.’ரம்யா நம்பீசன்’ படம் முழுக்க கொஞ்சம் காட்சிகளில் வந்தாலும் அழகா இம்ப்ரெஸ் பண்ணிட்டு போறாங்க.'மோகத்திரை’ பாட்டோட விஷ்வல்ஸ் செம்ம க்யூட். 

மற்ற நடிகர்கள் ஏற்கனவே குறும்படங்கள்ல நமக்கு அறிமுகமான முகங்கள் தான். SS Music பூஜா ஒரு ரோல் பண்ணிருக்காங்க.குறும்படம் எடுத்து அப்புறம் வெள்ளித்திரைக்கு வந்ததுல இந்த பட இயக்குனருக்கு முன்னோடி ‘காதலில் சொதப்புவது எப்படி?’ புகழ் பாலாஜி மோகன்.அந்த படத்துலேயும் பூஜா ஒரு சின்ன ரோல்ல நடிச்சிருப்பாங்க.இது செண்டிமெண்டா..என்னன்னு தெரியலை.. :) :)

படத்துலே ஏதும் குறையிருக்கா அப்டின்னெல்லாம் நீங்க யோசிக்குறதுக்கு இயக்குனர் நேரமே குடுக்கல.ரோலர் கோஸ்டர் ரைட் மாதிரி தட தடன்னு தொடங்கி அதே வேகத்துல படம் முடிஞ்சுடுது.குடுக்குற காசுக்கு படம் ஒர்த்து.
நல்ல Sound System உள்ள தியேட்டர்ல போய் பாருங்க.நல்ல அனுபவமா இருக்கும்.

சப்போர்ட்டிங்கான டெக்னிக்கல் விஷயங்கள் + ஒரு பிரமாதமான திரைக்கதை ரெண்டும் இருந்தா ஒரு கலக்கலான படத்தை தர முடியும்னு நிரூபிச்ச ‘பீட்சா’ படக் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

பீட்சா- Don't miss to get your slice..!!
Photos Courtesy: Original Uploaders

வியாழன், 18 அக்டோபர், 2012

A Millionaire's First Love (2006) - Korean - காதலின் தீபம் ஒன்று...!

முன்குறிப்பு:

உங்களுக்கு காதல் என்ற வார்த்தையே பிடிக்காதா…?? காதல் படங்கள் என்றாலே மொக்கை என்பவரா..?? அப்படியானால் இது உங்களுக்கான படமல்ல.மன்னிக்கவும் J

எனக்கு மிகவும் பிடித்தமான படங்கள் சிலவற்றைப் பற்றி எழுதவேண்டுமென வெகு நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன்.     Blog எழுதாத நேரங்களில் பார்த்த படங்களின் எண்ணிக்கை ரொம்ப அதிகமாகிவிட்டது. ஆகையால் இனி ஒவ்வொன்றாக எழுத வேண்டியது தான். எனக்கு ரொம்பவும் பிடித்த ஒரு கொரியன் (Korean) திரைப்படத்தோடு தொடங்குகின்றேன்.


   நான் பார்த்த முதல் கொரிய திரைப்படம் 'A Millionaire's First Love'.இந்த படம் பார்த்து கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட போதிலும் இப்போதும் எனக்கு ஒவ்வொரு காட்சியும் தெளிவாக நினைவில் நிற்கின்றது.அப்படி ஒரு அற்புதமான காதல் கதை இது...!!!எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காத, அலுக்கவே அலுக்காத காதல்...!!


ஜே-க்யூன் (Kang Jae Kyung) ஒரு மகா கோடீஸ்வரரின் பேரன்.அப்பா அம்மா கிடையாது.இவனுடைய கார்டியன் இவனது தாத்தாவால் பணியமர்த்தப்பட்ட இவர்களின் குடும்ப வக்கீல்.சதா அடிதடி, நண்பர்களோடு பார்ட்டி, என கொண்டாட்டமாய் பொறுப்பில்லாமல் திரிபவன் ’ஜே-க்யூன்’. அல்ட்ரா மாடர்ன் பைக், ஃபெராரி கார்,சொந்தமாக ஐந்து நட்சத்திர ஹோட்டல் என பள்ளிக்குக் கூட ஒழுங்காகச் செல்லாமல் ராஜ வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பவன்.


அன்று அவனுடைய பதினெட்டாவது பிறந்தநாள்..!! நண்பர்களோடு கூத்தும் கும்மாளமுமாய் கொண்டாடி முடித்துவிட்டு தன்னுடைய ஹோட்டலுக்கு திரும்புகின்றான்.மறுநாள் அவர்களின் குடும்ப வக்கீல் அவனுக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தியினை சொல்கின்றார். ஜே-க்யூனின் தாத்தா எழுதி வைத்த உயிலின் படி அவனுடைய பள்ளி மேற்படிப்பை ‘கேங்வாண்டோ’ எனும் கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்து தேறினால் தான் தாத்தாவின் சொத்துகள் அவனுக்கு சேரும் இல்லாவிட்டால் மொத்த சொத்தின் ஒரு சதவிகிதம் மட்டுமே கிடைக்கும் என சொல்கின்றார்கள்.

வேறு வழியில்லாமல் ஜே-க்யூன் அங்கு செல்கின்றான்.அங்கு அவன் சந்திக்கும் ஒவ்வொருவரும் அவனை முன்பே அறிந்திருப்பதை கண்டு வியக்கும் ’ஜே-க்யூன்’ எப்படியாவது அந்த பள்ளியை விட்டு வெளியேறத் துடிக்கின்றான்.அங்கே அவனது வகுப்பில் படிக்கும் சக தோழியாய் அறிமுகமாகின்றாள் ‘யூ-வான்' (Choi Eun whan).பள்ளியை விட்டு வெளியேற/வெளியேற்றப்பட அவன் செய்யும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து போகின்றன.
காரணம் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜே-க்யூனின் தாத்தவுடைய நெருங்கிய நண்பர்.வேறு வழியின்றி படிக்க தொடங்குகின்றான்.

இதற்கிடையில் யூ-வானுக்கும் ஜே-க்யூனுக்கும் இடையில் கொஞ்சம் கொஞ்சமாக காதல் மலரத் தொடங்குகின்றது.ஜே-க்யூனுக்கு அவனுடைய பால்ய பருவம் நினைவில் நிழலாட
சிறு வயதில் அதே ஊரில் யூ-வானோடு விளையாடி சுற்றித்திரிந்தது நினைவுக்கு வருகின்றது.பத்து நாட்களில் திரும்ப வருகின்றேன் என யூ-வானிடம் சத்தியம் செய்துவிட்டு அவனது பெற்றோர்களோடு அந்த ஊரைவிட்டு கிளம்பும் அதே நாளில் ஒரு சாலை விபத்தில் அவனுடைய பெற்றோரை இழக்கும் ஜே அவனது தாத்தாவோடு சென்றுவிடுகின்றான்.கால ஒட்டத்தில் மறந்துபோன இந்த விஷயங்கள் அத்தனையும் நினைவுக்கு வர அவள் மேலான காதல் இன்னும் அதிகமாகின்றது.

இதற்கிடையில் பள்ளி இறுதி நாளன்று நிகழ்த்தும் பொருட்டு ஜே-க்யூனின் வகுப்பு தோழர்கள் அனைவரும் ஒரு நாடகத்தை ஒத்திகை பார்த்தபடி இருக்கின்றார்கள். முதலில் இதில் நடிக்க மறுக்கும் ஜே-க்யூன் பின் யூ-வானுக்காக ஒப்புக்கொள்கின்றான். ஒரு நாள் ஒத்திகையின் போது திடீரென ’யூ-வான்’ மயங்கி விழ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவளுக்கு இதயம் மிகவும் பலவீனமாய் இருப்பதும் அவள் உயிரோடிருக்கப் போவது இன்னும் கொஞ்ச நாட்கள் தான் என்பதும் ஜே-க்யூனுக்கு மிகுந்த மன வருத்ததையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றது.


அதன் பிறகான அவர்களின் நாட்கள்… அவர்களிடையேயான நிகழ்வுகள்... அத்தனையும் கவிதை... அவ்வளவு அழகான மென்மையான காட்சிகள்.ஜே-க்யூன் பள்ளி உயர்படிப்பை வெற்றிகரமாக முடித்து தனது தாத்தாவின் சொத்துகளை திரும்பப்பெற்றானா..?? யூ-வான் உடனான அவனது காதல் என்னவானது…?? அவள் பிழைத்தாளா…? இதையெல்லாம் ‘டவுன்லோட்’ பண்ணி படம் பார்த்து தெரிந்து கொள்க.

ஒரு Arrogant-ஆன கோடீஸ்வர வீட்டுப் பிள்ளையை நம் கண் முன்னே நிறுத்தும் ‘Hyun Bin'-ன்  நடிப்பு வெகு இயல்பாகவே நம்மை கவர்கின்றது.குறிப்பாக கிராமத்து பள்ளி நண்பர்களோடு  Adapt ஆக சிரமப்படுவதும்,படத்தின் பிற்பாதியில் யூ-வான் உடன் காதல் வயப்பட்டபின் அவளின் நோய் தீர்க்க மருந்து எனச் சொல்லி ஒரு பாட்டில் நிறைய (ஆம்..!!) கவிதை எழுதிய சீட்டுகளை அவளிடம் தருகின்ற காட்சியும்... செம்ம Performance.
   
குட்டிக் கண்களோடும் குய்யா முய்யா பாஷையோடும் உள்ள கதாநாயகி ‘Lee yeon Hee’-ஐ பார்த்தவுடனே பிடிக்காது தான்.ஆனால் முழு படமும் முடிந்த பின் கண்டிப்பாக உங்களால் இந்த பெண்ணை மறக்கவே முடியாது. அவ்வளவு அருமையான உணர்வுப் பூர்வமான நடிப்பு. அந்த சின்னக் கண்களில் அவ்வளவு உணர்ச்சிகள்.

இந்த படத்தின் இசையைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.பெரும்பாலான ரொமாண்டிக் படங்களுக்கு அந்த உணர்வதைத் தருவதில் பெரும்பங்கு வகிப்பது பின்னணி இசை தான்.AMFL-ம் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த படத்தில் இடம்பெறும் ஒரு செம்ம சாஃப்ட் மெலடி...!!


முழுப்படமும் யூட்யூபில் காணக்கிடைக்கின்றது.படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லுங்கள்..!!
Disclaimer: கொஞ்சம் ‘தம்பிக்கு எந்த ஊரு + இதயத்தை திருடாதே’ ஞாபகம் வந்தால் நான் பொறுப்பில்லை. J J
 Pictures & Video Courtesy: Original Uploaders
Related Posts Plugin for WordPress, Blogger...