ரெண்டு வாரத்துக்கு முன்னாடி கம்பராமாயண அமர்வுல என்னுடைய முறைக்காக பாடல்களை படிச்சுட்டு இருந்தேன். விசுவாமித்திரர் இராமன் இலக்குவனோடு மிதிலைக்குள் நுழையும்போது சீதையும் இராமனும் ஒருத்தருக்கொருத்தர் முதல் முறை பாத்துக்குறாங்க.அப்புறம் வேற என்ன ‘கண்ணும் கண்ணும் முட்டிக்கிச்சு.. காதல் வந்து ஒட்டிக்கிச்சு…’ தான்.
இராமாயணத்துலயும் most romantic பாடல்கள் இந்த பகுதிகள்ல தான் வருது. நமக்கு பிடிச்ச ஏரியாங்குறதால நானும் ரசிச்சு ரசிச்சு படிச்சேன். ஊர் உலகத்துக்கே தெரிஞ்ச ‘அண்ணலும் நோக்கினான்..அவளும் நோக்கினாள்’ வரியும் இங்கதான்.
அழகோட எல்லை இதுதான்னு மனசால நினைக்கமுடியாத அளவுக்கு அழகுடைய சீதை… அரண்மனை மாடத்துல நின்னுட்டு இருக்கும்போது வீதியில நடந்து போற இராமனை பாக்குறாங்க… அதே நேரத்துல இராமனும் சீதைய பாக்குறாரு (எப்டின்னெல்லாம் கேக்காதீங்க..அதெல்லாம் வசூல்ராஜால வர மாதிரி ஃபீலிங்க்ஸ்… ;) ) அவங்க ரெண்டு பேரோட பார்வையும் ஒன்னை ஒன்னு அப்படியே கவ்விடுச்சாம். அவங்க ரெண்டுபேருடைய மனசும் அதனதன் இடத்துல நிக்காம அப்படியே அலைஞ்சு திரிஞ்சு ஒன்னா கலந்துடுச்சு.
’எண்ணரு நலத்தினாள் இணைய நின்றுழிக் கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றையொன்று உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ |
தமிழ் சினிமாவின் தலையாய கச்சாப்பொருளான காதல்ல அதிக முறை பயன்படுத்தப்பட்டது இந்த ‘கண்ணும் கண்ணும்’ சந்திச்சுக்குற scenario தான்.அதனைத் தொடர்ந்து மெளனமாய் பேசுறது… கண்ணாலேயே பேசுறதுன்னு ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு…
எனக்குத் தெரிஞ்சு தமிழ் சினிமால இந்த themeல வந்த பாடல்களையெல்லாம் சொல்றேன்…
”கண்ணாலே பேசிப் பேசி… கொல்லாதே” – படம்: அடுத்த வீட்டுப் பெண் ” மெளனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும் நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்” - படம்: காதலிக்க நேரமில்லை ”பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா பேசாத கண்ணும் பேசுமா பெண் வேண்டுமா பார்வை போதுமா பார்வை ஒன்றே போதுமே ! ” -படம்: யார் நீ |
இதுக்கு அடுத்து இன்னொரு கம்பராமாயண பாட்டு…இதே படலத்துல.. அதுவும் சாதாரணம் இல்ல…
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து. ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால். வரி சிலை அண்ணலும் வாள் - கண் நங்கையும். இருவரும் மாறிப் புக்கு. இதயம் எய்தினார். |
அதாவது இராமனும் சீதையும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்த (அழகை ரசித்துப் பருகிய ) பார்வை, கயிறு மாதிரி அவங்க ரெண்டு பேரின் உள்ளத்தையும் இணைச்சதனால… அவங்க மனசு இங்கயும்..இவர் மனசு அங்கயும் இடம் மாறி குடியமர்ந்துடுச்சு…. எப்புடீ…??!! :) :)
இந்த பாட்டை படிச்சதும் எனக்கு நினைவுக்கு வந்த திரையிசைப்பாடல்
”விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே” |
வேற எதாவது ரெஃபரன்ஸ் இருக்கான்னு தேடுனா.. திருவள்ளுவர் ஏற்கனவே ரெண்டு மூனு சிக்ஸர் அடிச்சு வெச்சுருக்காரு…
”கண்ணோடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனு மில” |
கண்ணும் கண்ணும் பேசிக்கும்போது அங்க வார்த்தைக்கு (மொழிக்கும்) என்னடா வேலை…?!! :)
”நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்னது உடைத்து” |
நான் பார்த்தவள் பதிலுக்கு என்னைப் பார்க்கும்போது அந்த பார்வை எப்படி இருந்துச்சுன்னா… ஒரு பெரிய படையையே கொண்டுவந்து தாக்குன மாதிரி இருந்துச்சாம். இதுல ’தாக்கணங்கு’ங்குற வார்த்தை அழகால மத்தவங்கள மயக்குற மோகினி மாதிரியானவளைக் குறிக்கும். வெறும் அழகாலேயே நம்மை தோற்கடிக்கக்கூடியவள் ஒரு படையோட வந்து மோதினதுக்கு சமம்.. அந்த ஒற்றைப் பார்வை…!!
இதையே நம்ம பாவேந்தர் இப்படி சொல்லிருக்காரு….!!
"கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒர்கடுகாம்” |
சரி… பார்வை மட்டுந்தானா… வேற ஒன்னுமில்லையா… இந்த சிரிப்பு இருக்கே (புன்)சிரிப்பு… அதையும் கம்பர் எழுதிருக்காரு… ஆனா ஒரு மாறுதலுக்கு பையனோட சிரிப்ப பாத்து பொண்ணு மயங்குறதை சொல்லிருக்காரு.
”இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும். சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்; சுந்தர மணி வரைத் தோளுமே அல; முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே!” |
( ரொம்ப இழுக்காம நம்ம ஸ்லாங்ல சொல்றேன்) சீதை சொல்றாங்க… ”இராமனுடைய ஹேர்ஸ்டைல பாத்தோ…அவனுடைய ஃபேஸ்கட்ட பாத்தோ… இல்ல அவனுடைய ஸ்ட்ராங்கான ஆர்ம்ஸைப் பாத்தோ நான் மயங்கல… அவனுடைய அந்த புன்சிரிப்பு இருக்கே..அது.. அது தான் அப்புடியே வந்து என் உசுரை அள்ளிட்டு போய்டுச்சு..”
பட்டாசுல்ல… :) :) :)
பி.கு: மேற்கண்ட சிச்சுவேஷன்கள் எல்லாத்துக்கும் பொருந்துகிற மாதிரியான திரையிசைப்பாடல்கள்.. அது பத்தின தகவல்கள்.... உங்களுக்கு தெரிஞ்சத..பிடிச்சத சொல்லுங்க…! :) :)
Images courtesy:Original Uploaders
2 கருத்துகள் :
கண்ணாலே காதல் கடிதம் தந்தாளே எனக்காக..
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக..
இந்தப்பாடலும் உங்கள் தலைப்பிற்கு பொருந்தும்.
நல்ல பதிவு. தொடரட்டும் நின் பணி.
- @iThamilachi
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்றே அர்த்தம்
கருத்துரையிடுக