நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

புல்லட் டைரி - அடைமழை... ஆகும்பே... ஆபத்து - 3.1


ஆகும்பே ரைடுக்கு அப்புறம் ப்லாக்ல புல்லட் டைரிஸ் பத்தி பெருசா எதுவும் எழுதமுடியல. கொல்லிமலை, நெல்லையம்பதி, கூர்க்னு மூனு ட்ரிப் போய்ட்டு வந்தாச்சு அதுக்கப்புறம்.ஆனாலும் ஆகும்பே ட்ரிப் பார்ட் 2 எழுதும்போது திரும்ப வரும்போது நடந்த ஒரு விபத்து பத்தி எழுத முடியாம தான் ஒரு மாதிரி அப்டியே மூளை block ஆகி எழுதமுடியாமப் போச்சு.விட்ட எடத்துலேர்ந்து எழுதும்போது பேச்சு வழக்குலேயே தொடர்ந்து எழுதிட்டேன்.. இனி...

======================================================================


நாங்கள் தங்கியிருந்த ரிசார்ட் ஆகும்பேவுக்கு சற்று முன்பு ஊருக்கு வெளியே ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருந்தது.ரொம்பவும் அமைதியான இடம்.நன்றாகத் தூங்கியெழுந்த பின் காலை (மதியம்..??!!) உணவுக்குத் தயாரானோம். குறைந்தது அருகிலுள்ள இடங்களையாவது சுற்றிப் பார்த்துவிட வேண்டுமெனக் கிளம்பினோம். இதற்குள் கொஞ்சம் நண்பர்கள் நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு அருகிலேயே இருந்த 'Cave walk' என்றழைக்கபடுகிற இடத்துக்குச் சென்று திரும்பியிருந்தார்கள். துபாய் சுரேஷ் அண்ணனும் அருணும் தொப்பல்லபுராவிலிருந்து 250 சொச்சம் கிலோமீட்டர்கள் நான்ஸ்டாப்பாக வந்து காலையில் எங்களோடு சேர்ந்தார்கள்.
துபாய் சுரேஷ் அண்ணன், அருண்


நான், ரத்னா அண்ணன், பேய் சுரேஷ் (இது காரணப் பெயர் :) ),மணிப்பூர் சஞ்சீப், கார்த்தி,சதீஷ் அண்ணன், அஷ்வின் மட்டும் அருகிலிருந்த ‘ஜோகிகுந்தி’ அருவிக்குக் கிளம்பினோம், எங்களோடு வழிகாட்டுவதற்காக ரிஸார்ட்டிலிருந்தே ஒரு பெரியவரை கூட அனுப்பியிருந்தார்கள், அவரையும் கூட்டிக் கொண்டு மொத்தம் நாலு வண்டிகளில் பறந்தோம். மெலிதான மழை அப்போதும் நிற்காமல் தூறிக்கொண்டிருந்தது. சாலையிலிருந்து வலது பக்கம் திரும்பி கொஞ்சம் கரடு முரடான பாதையில் போய் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி நடந்தோம். அட்டகாசமான அருவி..! கொஞ்ச நேரம் நின்று படமெடுத்துக்கொண்டு அடுத்த அருவிக்குக் கிளம்பினோம். ’கட்டின மடிகே’ என்று அழைக்கப்படும் அந்த இடத்துக்கு போகும் வழியே செம்ம Off-road ஆக இருந்தது. சாலையின் குறுக்கே ஓடிய ஒரு சிற்றோடையையும் கடந்து இன்னும் கொஞ்ச தூரம் போய்ச்சேர்ந்தோம். அதற்கு மேல் மழை தாறுமாறாக கொட்ட ஆரம்பித்தது.. மண் சாலை சகதியானது மட்டுமல்லாம.. பயங்கர மேடாகவும் இருந்ததால் திரும்பிவிட முடிவு செய்தோம். மழை வலுக்கும் முன்பு ரிஸார்ட்டுக்கு வந்து சேர்ந்தோம்.


அஷ்வின், பேய் சுரேஷ், சஞ்சீப்

போபண்ணாவின் மஞ்சள் குதிரை 
மழையில் கொஞ்ச நேரம் வாலிபால் ஆடிவிட்டு குளியல் போட்டு தூங்கியெழுந்து அடுத்து ஆரவாரமாய் இரவு உணவையும் முடித்து ஆட்டம் போட்டு அடுத்தநாள் அதிகாலை கிளம்பத் தயாரானோம்.மலைப் பாதைகளில் பகலில் இறங்குவது தனி சுகம். அதுவும் ஓரளவு வண்டியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கற்றுக்கொண்ட பின் மிகவும் ரசித்து ஓட்டமுடியும். மதியம்போல சக்லேஷ்பூரில் ஒரு கரடு முரடான off-roadஐ கடந்து மாலை கிட்டத்தட்ட பெங்களூருக்கு முந்தைய நெடுஞ்சாலையை அடைந்தோம்.கொஞ்சம் கொஞ்சமாய் உடல் சோர்வுறத்தொடங்கியது.
பெங்களூர் ட்ராஃபிக்ல நாங்க ஒரு அஞ்சு பேரு மட்டும் மத்தவங்கள விட்டு பிரிஞ்சுட்டோம். மழை வேற செம்ம டார்ச்சரா இருந்துச்சு. பெங்களூரு ஹோசுர் ரூட்ல நெடுஞ்சாலைலேர்ந்து ஊருக்குள்ள போறதுக்கு இடது பக்கம் ஒரு சரிவான சின்ன பாதை அங்கங்க இருக்கும். அது நெடுஞ்சாலைலேர்ந்து ஊருக்குள்ள சர்வீஸ் ரோட்ல இறங்குறதுக்கு மட்டும் தான். ஊர்களுக்கு உள்ளேர்ந்து நெடுஞ்சாலைக்கு வரவங்களுக்கு வேற மாதிரியான, சிக்னலோட இணைப்பு சாலைகள் இருக்கும்.

ஆங்... என்ன சொல்லவந்தேன்னா... இந்த மாதிரி ஊருக்குள்ள இறங்குற சின்ன ரோடு இருக்குல்ல... அதுலேர்ந்து முழுவேகத்துல ஒரு வண்டி ராங் ரூட்ல பறந்துகிட்டு வந்துச்சு.. எனக்கு ஒரு நிமிஷம் என்ன பண்றதுன்னே புரியாம டக்குனு லெஃப்ட்ல வண்டிய சாய்ச்சு கட் பண்ணேன்.கட்டுப்பாட்ட இழந்து வந்த வேகத்துல என் வலது ஹாண்டில்பார்ல இடிச்ச அந்தாளு அப்டியே எனக்கு பக்கத்துல வந்த தீனோட வண்டி இடது ஹாண்டில்பார்ல ஒரு இடி இடிச்சாரு.. தீன் அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குங்குறதனால அவரும் சுதாரிச்சு ரைட்ல ஒரு ஷார்ப் கட் பண்ணி தப்பிச்சாரு. மூனாவது இம்பாக்ட் எங்க ரெண்டு பேருக்கு பின்னாடி வந்த அருண் வண்டில. 1 2 3ன்னு ஒரு zig zag மூவ்மெண்ட்ல.. அருண் சுதாரிக்கல. அருணுடைய இடது கை மணிக்கட்டுல மோதி அந்த ஆள் தனியா அவரோட ஸ்டார் சிட்டி வண்டி தனியா போய் விழுந்தாங்க.


அருண் வண்டி டெஸர்ட் ஸ்டார்ம் 500, so அவன் இருந்த எடத்துலேர்ந்து ஒரு அடி அசையல. ஆனா இடது கை சுண்டு விரல் மூட்டு ஒடஞ்சு ரெண்டு இன்ச் உள்ள போய்டுச்சுன்னு அவனுக்கு தெளிவா தெரிஞ்சுச்சு. ஒரு நிமிஷம் எங்களுக்கு என்ன பண்றதுன்னே புரியல. இருட்டு.. மழை.. ஹைவே வேற... வண்டிய அப்டியே ஸ்டாண்ட் போட்டுட்டு கீழ விழுந்த அந்த ஆள தூக்க கிட்ட போனோம். கைலி கட்டியிருந்ததனால ரெண்டு கால் முட்டியிலயும் சிராய்ப்பு.. செம்ம போதை.. தள்ளாடி தள்ளாடி எழுந்தவன தூக்குனது மணிப்பூர் பையன் சஞ்சீப் தான். அந்தாளு செம்ம குடிச்சிருக்கான்னு தெரிஞ்சதும் சஞ்ஜீப்புக்கு செம்ம கோவம். This fucker is full drunk. Tell me fucker.. Are you drunk..are you drunk னு கேட்டுகிட்டே ரெண்டு அறை விட்டான். நான் என்ன பண்றதுன்னு புரியாம அருண எப்டி கூட்டிட்டு போறதுன்னு தெரியாம பேயறஞ்ச மாதிரி நின்னுட்டு இருந்தேன். அதுக்குள்ள அந்த ஆள் “ டேய் ...**@@யாப் பசங்களா என்ன அடிச்சுட்டீங்கள்ள..இருங்கடா வரேன்னு எறங்கி ஊருக்குள்ள நடக்க ஆரம்பிச்சான். சஞ்சீப் உடனே guys..lets get the fuck outta here.. on the bikes.. come on ன்னு கத்துனான்... அதுக்குள்ள எங்களுக்காக கிருஷ்ணாகிரிக்கு முன்னாடி ஒரு பெட்ரோல் பங்க்ல காத்துகிட்டிருந்த மத்தவங்களுக்கு ஃபோன பண்ணி தீன் விஷயத்த சொல்லியிருந்தாரு. எல்லாரும் அவங்கவங்க வண்டில ஏறுனோம்... என் வண்டி ஸ்டார்ட் ஆகல பேட்டரி டவுன். செல்ஃப் எடுக்கல.. கிக்கரும் வேல செய்யல...நான் காலை உந்தி உந்தி வண்டிய தள்றேன்.. தீன் வண்டி ஸ்டார்ட் ஆகலன்னு கத்துறேன்...


சஞ்சீப் இன்னொரு வண்டி பில்லியன்லேர்ந்து எறங்கி man... put it on second gear and release the clutch.. I'll pushனு கத்திகிட்டே வண்டிய வேகமா தள்ளுனான். தீன் ஒருபக்கம் டோ பண்ற மாதிரி காலால தள்ளிகிட்டே வந்தாரு ஒரு வழிய வண்டி ஸ்டார்ட் ஆகி எல்லாரும் 6கிலோமீட்டருக்கு அடுத்து எங்களுக்காக காத்திருந்த ரைடர்ஸோட வந்து சேர்ந்தோம். அருண் ஒடஞ்ச விரலோடவே வண்டியோட்டிட்டு வந்திருந்தான். ரொம்ப பதட்டமா இருந்தான்.அவன் backup support கார்ல ஏத்திவிட்டுட்டு வேற ஒரு டெக்னீஷியன் அருண் வண்டிய ஓட்டிட்டு வந்தாரு. எல்லாருமே பதட்டத்துல தான் இருந்தாங்க. மழை..குளிர்..பயம்...எல்லாம் சேர்ந்து எனக்கு உடல் நடுங்க ஆரம்பிச்சுது ஆக்ஸிலேட்டரை முறுக்க முடியல.. ஹரி நான் ஸ்வீப் பண்றேன்னு சொல்லிட்டு கடைசில வந்தாரு. ஹெல்மெட் வைசர் வேற condensationனால கண்ண மறைக்க ஆரம்பிச்சுது நான் வைசர தொறந்துட்டு முகத்த தொடச்சபடி பொறுமை ஓட்டிகிட்டே வந்தேன். ஒரு எடத்துல ஹரி வண்டிய ஓரம்கட்டி நிறுத்த சொன்னாரு. நான், ஹரி, ரிஷி மூனு பேரும் மட்டும் ஓரமா நின்னுட்டோம் மத்தவங்க எல்லாம் முன்னாடி போய்ட்டு இருந்தாங்க. ஹரி என் ஹெல்மெட்ட வாங்கி வைசர க்ளீன் பண்ணி மாட்டிக் குடுத்தாரு. உங்களால ஓட்ட முடியுமா சுதர்சன்.. இல்ல கார்ல வரீங்களான்னு கேட்டாரு. ரிஷியும் என்னாச்சு மச்சி முடியலையான்னு கேட்டான். இல்ல.. மழை வேற நான் பொறுமையாவே வரேன்னு சொன்னேன். ரிஷி உடனே ஹரி கிட்ட “நான் இவன கூட்டிட்டு வரேன் நீங்க முன்னாடி போங்கன்னு” ஹரிய அனுப்பி வெச்சான். என்கிட்ட வந்து ”மச்சான்..ஒன்னும் பயப்படாத ஒன்னும் இல்ல.. வண்டிலாம் ஸ்லிப் ஆகாது... காத்து கொஞ்சம் கொறஞ்சு இருக்கும்..அதனால friction கெடைக்கும். நீ என் டெயில் லாம்ப்ப மட்டும் பாத்து ஃபாலோ பண்ணிட்டு வா.. நான் பொறுமையாவே போறேன்”னு சொன்னான்.

நானும் சரின்னு ஒத்துகிட்டு அவன ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன். ஒரு 10-15 கிலோமீட்டர் வரைக்கும் 70கிமீ தாண்டல.அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வேகத்த அதிகரிக்க ஆரம்பிச்சான்.என்னாலையும் அத உணர முடிஞ்சுது. 80..85..90..95..100..ன்னு ஒரு வழியா வேகம் பிடிச்சுது என் வண்டி. மழை கொட்ட ஆரம்பிச்சுது. ரிஷி பின்னாடி வந்து எனக்குப் பக்கத்துல கட்டி விரலை உயர்த்துனான்.அப்டியே கைய காமிச்சு இன்னும் போ மச்சான்..இப்டியே போ..விட்றாதன்னு கத்தி சொன்னான்... முறுக்குனேன் நான் 100..110..115... மழையும் தெரியல ஒன்னும் தெரியல... ஒவ்வொரு வண்டியா 16+ வண்டிகளையும் தாண்டித் தாண்டி லீட் கிட்டவே போய்ட்டேன் ரிஷியும்..ஹரியும் கூடவே வந்து எனக்கு கைய உயர்த்தி செம்மன்னு சிக்னல் காட்னாங்க. மூட் மாறி சிரிப்பு வந்துச்சு. மறுபடியும் ஆக்ஸிலேட்டர ஒரு முறுக்கு மேல்மருவத்தூர் வரைக்கும் அதே formல வந்து சேர்ந்தேன்.

ரிஷி...!!
இந்த எடத்துல ரிஷி பத்தி சொல்லியே ஆகனும்.அவன் ஒரு horse trainer.அதிகம்
பேச மாட்டான்.லாரி ஸ்டியரிங் மாதிரியா ஒரு பெரிய ஹேண்டில்பார் வெச்ச Thunderbird 500 தவிர ஒரு Yamaha R1 (R15 அல்ல..இது 1000cc)ம் வெச்சுருக்கான். ட்ராக் ஓட்ற ப்ரொஃபஷனல் ரேசர்/ரைடர்.எனக்கு மலைப்பாதைகள் மேல இருக்குற பயத்தைப் போக்குனது தொடங்கி..wet road riding... வண்டிய கட்டுப்பாட்டுக்குள்ள வெச்சுருக்குறது... bends போடுறதுன்னு பல விஷயங்கள்ல எனக்கு குரு இவன் தான். ரைட் அப்போ.. பேய் சுரேஷ் தோனின்னா...இவன் சச்சின்... செம்ம classy rider. இந்த ட்ரிப்புக்கு அப்புறம் தான் ரிஷி இன்னும் நெருக்கமானான்.


மழை விட்டுருந்ததனால எல்லாரும் அவங்கவங்க ஈர ஆடைகள மாத்திகிட்டு காஃபி..டீ குடிச்சபடி உக்காந்திருந்தோம். கடைசி 100 சொச்சம் கிலோ மீட்டர்கள். ஒரு வழியா அதிகாலை மூனு மணி வாக்குல சென்னை வந்து சேர்ந்தோம். வழக்கம்போல ஸ்ரீபெரும்புதூர் டோல் கேட்ல எல்லாரும் ஃபோட்டொ எடுத்துகிட்டு ஒவ்வொருத்தரும் அடுத்த ரைட்ல சந்திப்போம்னு ஹக் பண்ணிட்டு தனித்தனியா பிரிஞ்சு கெளம்புனோம். 4.00 மணி வாக்குல கே.கே நகர் வந்து சேர்ந்தேன் நான்,.. மனசு நடந்தத எல்லாம் அசை போட்டபடி இருந்துச்சு..செம்ம களைப்போட அடுத்த ரைட எதிர்பார்த்தபடி தூங்கிப்போனேன் நான்.


Related Posts Plugin for WordPress, Blogger...