நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

தேடலின் முடிவு அல்லது அடைதலின் தொடக்கம் - Ineffable Epiphany

Caption: https://minimograph.files.wordpress.com/2013/10/mg_roach1.jpg
பேரன்பின் பார்ட்னருக்கு,

ஓவ்வொருமுறை உனக்கு கடிதமெழுதும் போதும் ஒரு காரணத்தை யோசிப்பது பெரும் அயற்சியைத் தருகிறது பார்ட்னர். இப்போதும் அன்றி இனியெப்போதும் உனக்கு கடிதமெழுத நேர்ந்தால், ஒரு போதும் அதற்கான காரணம் சொல்லப்போவதில்லை நான்.

ஆங்கிலத்தில் 'Hopeless Romantic' என்றொரு சொற்றொடர் உண்டு. பகல் கனவு காண்பவர்களாகவும், எப்போதும் காதல் பற்றிய நினைப்பிலேயே மூழ்கியிருப்பவர்களாகவும், கனவுலாவிகளாகவும், கவிஞர்களாகவும் திரிகிறவர்களை அப்படிச் சொல்வார்களாம் . என்னைப் பற்றிக் கேட்போரிடத்தில் நானும் இப்படிச் சொல்லிக்கொள்ளலாமோ என யோசித்திருக்கிறேன். காதலும், தனிமையும், வலியும் அன்றி கவிதைகள் ஏது பார்ட்னர் ?

அவ்வப்போது ஏதேனும் தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்டு அன்பால் நிறைந்துகிடக்கிற மனத்தினின்று ஒரு போதும் துயரம் தோய்ந்த வார்த்தைகள் வந்து விழுவதில்லை பார்ட்னர்.  அத்தனையும் வடிந்தபின்னான தனிமைசூழ் இரவுகள் தாம் ஆகக் கொடுமையானவை. காதலற்ற வெற்றிடத்தில் ஆழ்மனத்திலிருந்து வார்த்தைகள் தோண்டியெடுக்கப்படுகிற பின்னிரவுகள். வார்த்தைகளின் பாரத்தில் சிக்கி உறக்கமிழந்து மூச்சு திணறத் திணற மெல்ல மெல்லக் கடக்கிற பின்னிரவுகள். கொஞ்ச காலமாய் இந்த வெற்றிடத்தை அவ்வப்போது  ரூமியின் கவிதை கொண்டு இட்டுநிரப்பிக்கொள்ளுகிறேன் பார்ட்னர்.

ஓர் தனிமைசூழ் இரவில் பெய்கிற பெருமழை, ஒன்றுபோல அற்புதமானதாகவும் அதீதமான வலிதரக்கூடியதாகவும் அமைந்துவிடுகின்றது பார்ட்னர்.அப்படியான சூறைக்காற்றோடு பெருமழை பெய்த ஒரு பின்னிரவில் ரூமியின் கவிதைப் புத்தகத்தைக் கையிலேந்தியபடி வீட்டு மாடத்தில் நின்று இந்தக் கவிதையை உரக்கப் படித்தேன் .

’மிதத்தல்’

காதல்
எனது பழக்கங்களைப் பறித்துக்கொண்டு
கவிதையால் 
என்னை நிரம்பிவழியச் செய்தது

’நீயன்றி வேறெந்த பலமும் இல்லை’ 
என மீண்டும் மீண்டும் முனக முயன்றேன்
ஆனால் முடியவில்லை

கைகொட்டிப் பாடவேண்டிய 
நிர்பந்தத்திற்கு ஆளானேன் நான்
கெளரவமாகவும் ஒழுக்கம் தவறாதும்
மனவுறுதியோடும்தான்
இதுவரை இருந்துவந்தேன்
ஆனால் இந்த சூறைக்காற்றில் 
நின்றுகொண்டு
அவற்றையெல்லாம் எவரால்
நினைவூட்டிக்கொள்ள இயலும்?

ஒரு மலை தனது அடியாழத்தினுள்
ஒரு பேரொலியைத் தக்கவைத்திருக்கிறது.
உனது குரலை நான் வசப்படுத்தி வைத்திருப்பதும் 
அவ்வாறே
....

இப்படியாகத் தொடற்கிற அந்தக் கவிதையை வாசித்தபின், தொடர்ந்து மழை பெய்த அந்த இரவில் நான் கொஞ்சமும்  உறங்கவே இல்லை பார்ட்னர்.
இத்தனை ஆண்டுகளில் நான் கடந்து வந்து விட்டதாய் நினைத்த மனங்கள் எதையுமே நான் கடக்கவேயில்லை என உணர்கிறேன் . நான் அவ்விடத்திலேயே தான் நின்று கொண்டிருக்கிறேன். நான் கடந்ததாய் நினைத்த அத்தனை மனங்களும் என்னைக் கடந்து சென்றுவிட்டிருக்கின்றன. மீண்டும் சொல்கிறேன்; நான் அப்படியே அவ்விடத்திலேயேதான் நின்றுகொண்டிருக்கின்றேன் பார்ட்னர்.

அவ்வப்போது என் கூட்டிலிருந்து வெளியே வந்து சக உயிர்களிடத்தே பேச முயற்சி செய்கிறேன் பார்ட்னர். இரவும் பகலும் தேயத் தேய எவ்வளவு பேசினாலும் தீராத அளவு கதைகள் இருந்தாலும், மனம் முழுக்க பாடல்களும் கவிதைகளுமாய் நிறைந்து கிடந்தாலும் , ஏனோ மனமடங்கி  ஒரு புன்முறுவலோடு விடைபெற்று என் கூட்டிற்கே திரும்பிவிடுகிறேன் நான்.
தனிமையென்பது விதிக்கப்பட்டதில்லை பார்ட்னர்... பழக்கப்பட்டது... அவ்வளவே..!அடங்கலும் அலைதலுமாய் மனம் திரிகிறபோதெல்லாம் வாலாட்டியபடி என்னைப் பின் தொடர எனக்கொரு நாய்க்குட்டி இருந்திருக்கலாமெனத் தோன்றும். அல்லது நானே ஒரு நாய்க்குட்டியாய் இருந்திருக்கலாமெனத் தோன்றும்.

இந்தப் பத்தியை நான் எழுதிக்கொண்டிருக்கிற இந்த இரவில் மீண்டுமொரு அசுர மழை. இந்தக் கடிதத்தை நான் எழுதத்தொடங்கியதும் இதே மாதிரியான ஒரு மழைநாளின் இரவில் தான் பார்ட்னர். சக பதர்களை விட்டு விலகி சலனமற்று  உயரப்பறக்கும் ஒற்றைப்பறவைகளுக்கென தனித்துவமாய்ப் படைக்கப்பட்டவை இந்த மழையிரவுகள் . வாதைகளினின்று மீள வார்த்தைகளைத் துணைக்கழைத்துக் கொள்ளுகிற  அற்ப கவிப்பயல்களுக்கானவை இவ்விரவுகள். போய்ச் சேருமிடத்தையோ போகிற வழியையோ முடிவு செய்யாமல் மனம்போலப் பயணிக்கிற ஒரு நாடோடியைப் போல, எந்த முடிவுகளுமின்றி தெளிவுகளுமின்றி வாழ்வைக் கடத்துகிறவனின் கடிதங்களும் அப்படியே மனம்போன போக்கில் தானே இருக்கும்.

உனக்காய் நான் எழுதிய முதல் கடிதம் அன்றி மற்ற அத்தனையும் நான் எனக்காய் எழுதியவை பார்ட்னர். நித்ய பயணியாய் இருந்தவன் சற்றே நின்று நிதானித்து யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.என்னால் எழுதப்படுகின்ற அத்தனைக் கடிதங்களும் எதனை அல்லது யாரை முன்வைத்து எழுதப்படுகின்றன ? நீயெனும் நீ நிஜத்தில் இல்லையெனக் கொண்டால் யார் வாசிக்கும்பொருட்டு நான் எழுதிக்கொண்டிருக்கின்றேன் ?

உலகின் எங்கோ ஒரு மூலையில் புதையல் நிறைந்துகிடக்கிற ஏதோவொரு குகையை திறந்துவிடும் மந்திரத்தை எப்படியோ கற்றுக் கொண்ட ஒரு சிறுவன், தான் கடந்து போகிற பாதையிலுள்ள அத்தனை மலைக் குகைகளின் முன்பும் அந்த மந்திரத்தைச் சொல்லி திறக்க முயற்சிப்பது மாதிரியானது என் செயல். எண்ணக் குமைச்சலின் எழுத்துக் குவியல்களை கடிதக் கற்றைகளாய் கைகளில் சுமந்தபடி, எதிர்படுகிற அத்தனை பேரிடமும் படிக்கச் சொல்லி, ஏதேனும் புரிகிறதாவெனக் கேட்டு முகம் பார்த்தபடி தொடர்ந்து நடக்கிறேன் பார்ட்னர். கண்களில் தேடலும், நாவில் பாடல்களும், மனதில் கவிதைகளும், கைகளில் கடிதங்களும், கால்களில் சோர்வும் கொண்டு நான் தொடர்ந்த/தொடர்கிற என் தனிப்பயணம் கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாய் உணர்கிறேன் பார்ட்னர்.

ஆம். அந்தக் கடைசி வரியை எழுதும்போது இடது கண்ணிலிருந்து உருண்ட ஒற்றைக் கண்ணீர்த் துளியைச் இடதுகை ஆட்காட்டிவிரலால் சுண்டிவிட்டபடி மெலிதாய்ச் சிரித்துக் கொண்டேன் பார்ட்னர்.

ஆனாலும்... இன்னும் முடிவாய் ஏதும் சொல்லாமலேயே விடுகிறேன். இப்போதைக்கு இவ்வளவே செய்தி .

மகிழ்ந்திரு...!

தேடல் தீர்ந்ததென முடிவுசெய்யும் தருவாயில்,
நான்...!
Related Posts Plugin for WordPress, Blogger...