நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

கர்ணன் - கிடாக்குழி மாரியம்மாள் - கண்டா வரச்சொல்லுங்க

இந்தப் பாட்டப் பத்தி ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரி தங்களுடைய கருத்துகளை சொல்லிட்டு இருக்காங்க. சிலருக்கு இது அடி மனசத் தொட்டு பல நினைவுகள கிளறி விடுது..சிலருக்கு தெக்கம்பட்டி சுந்தர்ராஜன் அவர்களுடைய ஐயப்பன் பாட்டத் தாண்டி வர முடியல.. இன்னும் சிலருக்கு ரொம்ப சாதாரணமான பாட்டா தோணலாம்.. நேத்து இன்னொரு நண்பர் ஒருத்தர் Black Panther படத்துல வர்ர Baaba Maal பாடுன Wakanda theme இசைய ஞாபகப்படுத்துதுன்னு எழுதிருந்தாரு...! (what a fantastic comparison this one is) ஆக ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான தாக்கம் இருந்துருக்கு....! 

இப்போதைய internet eraவுக்கு முன்னாடி நாட்டுப்புறப் பாடல்கள்/பாடகர்கள்னு தமிழ்நாடு முழுக்க பரவலா அறியப்பட்ட முகங்கள் ஒரு சிலர் தான். விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் தம்பதியர், புஷ்பவனம் குப்புசாமி மாதிரியானவர்களைத் தவிர்த்து ஒரு பெரிய கூட்டமே வெளிய தெரியாம இயங்கிட்டுதான் இருந்துருக்கு.

மதுரை சந்திரன், ஆந்தக்குடி இளையராஜா, கிடாக்குழி மாரியம்மாள் , சின்னபொண்ணு, இப்படி இவங்களோட பாடல்கள் ஊர் பக்கம் ரொம்ப பிரபலம். கேசட்டுகளாகட்டும், அல்லது திருவிழா பாட்டுக் கச்சேரிகளாகட்டும். எல்லா இடத்திலும் இவர்களுடைய பாடல்கள் உண்டு. எல்லாருக்கும் இவர்களைத் தெரியும். சின்னப்பொண்ணு அவர்கள் பாடி பிரபலமான ‘அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு’ பாட்டை நீங்க கண்டிப்பா எங்கேயாவது கேட்டிருக்கவும் யூட்யூப்ல பாத்திருக்கவும் வாய்ப்பிருக்கு. அத எழுதுனது கவிஞர் திருவுடையான், ஆனா மதுரை சந்திரன் பாடி அவரோட கேசட்ல தான் நான் அந்தப் பாட்ட முதன்முதல்ல கேட்டது. விடுதியில தங்கிப்படிக்கிற ஏழ்மையான சிறுமி அவங்க அம்மாவ நலம் விசாரிச்சு எழுதுற மாதிரி இருக்க அந்தப் பாட்டை எப்போ யார் பாடிக் கேட்டாலும் கண்டிப்பா அழுகை வரும்.

அதே மாதிரி இன்னொரு பாட்டு உண்டு. நான் அந்தப் பாட்டை முதன்முதல்ல கேட்டது பல கல்லூரிகள் கலந்துகிட்ட பல்கலைக்கழக அளவிலான ஒரு போட்டியிலதான். ‘அப்படா என் மகனே என் அருணாசல கண்மணியே’ ன்னு தொடங்குற அந்தப் பாடல், மகனைப் படிக்க வைக்க ஆசைப்பட்ட அம்மா. குடும்பக் கஷ்டத்துக்காக அத வேண்டாம்னு சொல்லிட்டு வேலைக்கு போற பையன், போன இடத்துல அவனுக்கு ஏதோ ஆகிடும். அதப்பத்தி அந்த அம்மா புலம்பி பாடுற மாதிரியான பாட்டு. அன்னைக்கு அந்தப்பாட்டப் பாடுனது ஒரு பையன். வாத்தியம் தப்புல ஒரே ஒரு ஒத்தக்கொட்டு தான்..அவன் பாடி முடிக்கிற வரை மயான அமைதி. அவன் முடிச்ச அடுத்த நொடி அந்த அரங்கமே ரெண்டாகுற மாதிரி கைத்தட்டலும் விசிலும் கேட்டுச்சு. எனக்கெல்லாம் கண்ணு கலங்கி அருவியா அழுதுட்டு இருந்தேன். 

ரொம்ப தேடித்தான் அந்தப் பாட்டு இருந்த கேசட்ட கண்டுபுடிச்சேன். இன்னேரம் கணிச்சுருப்பீங்க யாரு பாடிருந்தாங்கன்னு… ஆமா ‘கர்ணன்’ல கண்டா வரச்சொல்லுங்க பாடுன அதே கிடாக்குழி மாரியம்மாள் தான்….! இன்னைக்கு இத்தன வருஷம் கழிச்சு அதே குரல கேக்கும்போது, பாட்டோட தொடக்கத்துல வர்ர அந்த ஓலமும் பின்னாடி சேர்ர தப்பும் ஒன்னா சேர்ந்து தர்ர உணர்வெழுச்சி இருக்கே..அதெல்லாம் சத்தியமா என்னால வார்த்தைகள்ல சொல்ல முடியாது. கடைசியா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சில செந்தில் கணேஷ் ‘அங்கே இடி முழங்குது’ பாடி நவநீதகிருஷ்ணன் ஐயா எழுந்து ஆடுனப்போ இதே மாதிரி சிலிர்த்துப்போனேன். 

 படத்தோட கதை என்ன , என்ன contextல இந்தப் பாட்டு வரப்போகுது, காட்சிப்படுத்தல் எப்புடி இருக்கும்..எதையுமே நான் யோசிக்கல… இந்த நொடி இந்தப் பாட்டக்கேட்டா மனசு ஒரு மாதிரி விறுவிறுங்குதுல்ல…சிலிர்த்துப் போகுதுல்ல… இத மாறாம, முழுசா அனுபவிச்சா மட்டும் போதும்.<3சந்தோஷ் நாராயணுக்கும், மாரி செல்வராஜுக்கும், தனுஷுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்...! <3 🙏
Related Posts Plugin for WordPress, Blogger...