நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

புதன், 24 அக்டோபர், 2018

காத்திருப்பின் முடிவும் பயணத்தின் தொடக்கமும் - Iktsuarpok

Courtesy: http://www.kenig-artwork.com/portfolio/abstract-painting/ - Non-Commerical Usage

பேரன்பின் உனக்கு,

பின்னிரவுகள் பிரத்தியேகமானவை. எத்தகைய அதீத உணர்வையும் இன்னும் தீவிரமாக்கி எவ்வகையிலேனும் நம்மைத் துன்பிக்கிற தன்மை கொண்டவை.
சிவபானம் புகைக்கிறவர்கள் எப்போதும் சொல்கிற விஷயமிது. நீங்கள் எவ்வித மனநிலையில் இருந்தாலும் அப்போது புகைத்தால் அது இன்னும் தீவிரங்கொள்ளுமென. கிட்டத்தட்ட பின்னிரவுகள் அப்படியானவைதான். தனிமை என்றால் உயிர் கொன்று கருந்துளையாய் முற்றும் உறிஞ்சிக்கொள்கிற தனிமையாகும். மென்சோகம் உயிர் உடைக்கிற பெருஞ்சோகமாகும். ஒரு புன்சிரிப்புடன் கூடிய மென்மனம், கூத்தாட வைக்கிற பேரானந்தம் கொள்ளும். கொஞ்சமாய் உன்மீது கொண்ட காதலோ, மொத்தமாய் உன்மத்தங் கொண்டு மோகித்து உருகவைக்கும். ஒற்றை வார்த்தைகள் கவிதைகளாகும். வெற்று வார்த்தைகள் கடிதங்களாகும். முத்தத் தீண்டல்கள் மோக மழையாகும்.

அங்ஙனமாய்க் காதலுற்று கண்மல்கி புன்சிரித்த உன்முகங்கண்ட நாளின் பின்னிரவில்... இக்கடிதத்தை எழுதத்துவங்குகிறேன். வார்த்தைகளிடத்தே தருணங்களும் , தருணங்களிடத்தே வார்த்தைகளுமாய்த் தோற்றுத் துவளுகிற பெருஞ்சுழலாய்க் கடந்தோடுகின்றன நாம் கைகோர்த்து அருகமர்ந்த மாலைகள். எதுவாகினும் எதிர்கொள்ளத் திண்ணம் கொண்டாலும், ஏதும் அவ்வாறு நிகழ்ந்து விடலாகாதென நான் வேண்டித் தொடங்கும் நெடும்பயணங்களுக்கு முன்பான மனநிலையை ஒத்தது தற்போதைய உன் மனநிலை.

இந்த என் இரவை உன் நினைவுத் தொடுகையால் நிறைத்து நிற்கிறாய் நீ. காரிருளில் கைப்பிடித்து காலம் மறந்து பறக்கக் காத்திருக்கிறேன் நான்.
உன் அருகாமையில் எப்போது முகம் பார்த்தாலும் நீ முன்பொருமுறை நாணிக் காண்பித்த உன் குழந்தைப் பருவத்துக் காணொளிக் காட்சி கண்முன்னே வந்து செல்கின்றது. எப்போதும் நீ எனக்காய் எங்காவது காத்திருப்பாயானால், கொஞ்சம் தூரத்திலிருந்தபடியே நீ எனக்காய் காத்திருக்கிருக்கின்ற அந்தக் காட்சியை நின்று நிதானித்து உள்வாங்கிக் கொள்வேன் நான். சுற்றம் முற்றும் மறந்தும், நீ தனித்ததோர் உலகத்தே புன்சிரித்து நகங்கடித்துக் காத்திருப்பாய். காற்றடிக்கும் பருவமாயின், உன் மேல் படர்ந்து  உன் ஃபெரோமோன்களின் வாசம் சுமந்தபடி கடந்து, பின் எனைத் தீண்டி நிறைக்கும் வாகில், திசைபார்த்தே உன்னருகே அமர்ந்துகொள்வேன் நான்.

கேள்விகளும் சிந்தனையும் பொருளற்று, ஒரு நிறைந்த மெளனத்தோடும் அணைப்போடும் கொஞ்சமாய் இடைவெளிவிட்டு நடக்கின்ற சிறுநடையோடுமே கடத்திக் கொண்டிருந்திருக்கிறோம் நமது சந்திப்புகளை. கடிதத்துக்கான வார்த்தைகளை ஒவ்வொன்றாய் தேடித் தேர்ந்து கோர்க்கக் கோர்க்க, வான் இருண்டு பெருமழை பொழியத்தொடங்குகின்றது. இதைப் படிக்கின்ற நொடியில் நீயுமே அந்த மழையில் நனையக்கூடும். முன்பொரு மழையிரவில் அந்த மழையும் குளிரும் எனக்களித்த கதகதப்பைப்பைப் பற்றி உன்னிடத்தில் பேசும்போது, நீ மழையிரவுகளை ஏன் வெறுக்கிறாயென என்னிடம் சொல்லியிருக்கிறாய். என்னை அணைத்ததாய் நானுணர்ந்த மழை, உனக்கு  தனிமையும் வீடுதிரும்பலுக்கான ஏக்கமும் நிறைந்ததான உன் பால்யத்து விடுதிநாட்களை நினைவுபடுத்துவதாக சொன்னாய். இனி வரும் நாட்களில் என்றாவதோர் மழைக்கால இரவில், நீ கண்டடையும் வெம்மை என்னுடைய இருப்பை மட்டுமே நினைவுபடுத்துமாயின் அதுவே போதுமானது எனக்கு.

இது நம்மிருவருக்குமேயான யுகங்களின் காத்திருப்பு. என் எல்லா நெடும் பயணங்களைப் போலவே மிகுந்த எதிர்பார்ப்போடும் தயாரிப்போடுமே நம்முடைய இந்த நீள் நெடும்பயணத்தையும் தொடங்கிக் காத்திருக்கின்றேன் நான்.  

உனக்காய் நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றேயொன்று தான். இங்கு நீயோ நானோ தனிப்பயணிகள் அல்ல...! 
சகபயணிகள்...! 

வாழ்ந்து தீர்ப்போம் வா...!

தீராக்காதலுடன்,
நான்.!! <3 nbsp="" p="">



Related Posts Plugin for WordPress, Blogger...