நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

செவ்வாய், 30 ஜூன், 2015

புல்லட் டைரி - காந்தளூர் புல்லட்குமாரன் - 2




இந்த காந்தளூர் என்கிற ஊர் தமிழ் வாசகர்கள் எல்லாருக்கும் நிச்சயம் பரிச்சயமானதாகத்தான் இருக்கும். சுஜாதா எழுதுன வரலாற்று நாவலான ‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை’ கேள்விப்பட்டிருப்பீங்க.நிஜத்துல அந்த காந்தளூர் எங்க இருக்குன்னா  மூனாருக்கு 23 கிலோமீட்டருக்கு முன்னாடி மறையூர் அப்டிங்குற ஊர்லேர்ந்து 16 கிலோ மீட்டர் தூரத்துல இருக்கு.V11 RERC ஜனவரி மாசம் போயிட்டு வந்த கொடைக்கானல் ட்ரிப்புக்கு அப்புறம் லாங் ரைட்ஸ் எதுவும் போகவேயில்ல. அரை நாள் ட்ரிப்பா ECRல இருக்க சத்ராஸ் ஃபோர்ட்டுக்கு மட்டும் போய்ட்டு வந்தோம்.திரும்ப வரும்போது மாமல்லா ரிஸார்ட்ல காலை உணவு.அப்போதான் அடுத்த ட்ரிப் காந்தளூர் போகலாம்னு கிருஷ்ணன் சார் சொன்னாரு.



உடுமலைப்பேட்டைலேர்ந்து மூனாறு போற வழில மறையூர்லேர்ந்து இடது பக்கம் திரும்பி 15 கிலோமீட்டர் போனா காந்தளூர். ரொம்ப அழகான அமைதியான ஊர்.இடுக்கி மாவட்டத்துக்கு கீழ வருது. வழக்கம் போல போக வேண்டிய ரூட்டெல்லாம் முன்னாடியே பேசி முடிவு பண்ணாங்க.
ஏப்ரல் மாசம் 11ஆந் தேதி சனிக்கெழம காலைல 4.30க்கு விருகம்பாக்கம் வேலவன் மோட்டார்ஸ் ஷோரும்லேர்ந்து கிளம்புறதா திட்டம்.அப்டி இப்டின்னு மொத்தம் 17 புல்லட் வந்து சேந்துச்சு அதுல ஒரு வண்டி எங்க புது மாடல் வண்டிக்கெல்லாம் பாட்டன். 1972 மாடல்; Cast Iron இஞ்சின்.வலதுகால் பக்கம் கியர் பாக்ஸ்.இடது கால் பக்கம் ப்ரேக்குன்னு... டிபிக்கல் ரெட்ரோ. புதுசா பெயிண்டிங்கெல்லாம் பண்ணி சும்மா மின்னிக்கிட்டு வந்துச்சு.காலைல 5.00 மணிக்கு சொல்லி வெச்சபடி கெளம்புனோம். கிருஷ்ணகிரி கிட்ட பள்ளிகொண்டாவுல ப்ரேக்ஃபஸ்ட் சாப்புட்றதா ப்ளான். வழக்கம் போல வெயில் வரதுக்கு முன்னாடி எவ்ளோ தூரம் போக முடியுமோ போயிடனும்கிறதுதான் திட்டம். சொல்லிருந்த மாதிரியே கரெக்ட்டா 7.30க்கெல்லாம் பள்ளிகொண்டா வந்தாச்சு. அங்க ஒரு ரோட்சைட் ஹோட்டல்ல ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு கெளம்புனோம். இதுக்கு நடுல 72 மாடல் வண்டி ஏதோ பிரச்சனையால சென்னைக்கு திரும்பிப் போச்சு.




மத்தியான சாப்பாட்டுக்கு கோபிச்செட்டிப்பாளையம் பக்கத்துல இருக்குற ஒரு கடைல சாப்புட்றதா முடிவு பண்ணோம்.தர்மபுரி. சேலம் வழியா கோபிச்செட்டிப்பாளையம் வந்து அங்கிருந்து ஒரு 40கிலோ மீட்டர் ஸ்டேட் ஹைவேஸ்ல  உள்ள போகவேண்டியதா இருந்துச்சு.ஆனா அந்த சாப்பாட்டுக்கு இந்த ட்ராவல் வொர்த்து.’மைவிழி’ உணவகம்னு கடை பேரு. 300 ரூபாய்க்கு அன்லிமிட்டட் அசைவ பஃபே சாப்பாடுஅதுவும் வீட்டு சாப்பாடு மாதிரி. எல்லாரும் சும்மா புகுந்து விளையாடுனோம். சைவ சாப்பாடும் உண்டு.. ஆனா அது கொஞ்சம் விலை குறைவு.சாப்ட்டு முடிச்சு எல்லாரும் வெளில கீற்று கொட்டகைல ஆளுக்கொரு பக்கம் சாஞ்சிட்டோம்.அடுத்து தாராபுரம்..உடுமலைப் பேட்டை வழியா போய் மலை மேல ஏறுறதுதான் திட்டம். அப்பவே மணி நாலு ஆயிடுச்சு. அப்போ தான் வெங்கட் வண்டியில பெட்ரோல் டேங்க் ஓட்டையாகி லீக் ஆனது தெரிஞ்சுது. அப்புறம் டேங்க்கை கழட்டி, காலி பண்ணி, கழுவி, வெல்ட் பண்ணி திரும்ப வரும்போது மணி 5.30க்கு மேல ஆகிடுச்சு. ரெண்டு க்ரூப்பா பிரிஞ்சு மலை ரோடு மேல ஏறுறதா முடிவு பண்ணி கெளம்புனோம்.



உடுமலைப்பேட்டைல வழக்கம் போல சில பேர் வேற ரூட்ல கொஞ்ச தூரம் போயிட்டதனால அவங்க வரதுக்காக கொஞ்சம் காத்திருக்க வேண்டியதாயிடுச்சு.கடைசியா கேரளா செக்போஸ்ட்ல வண்டி நம்பர் குடுத்துட்டு பேரெழுதிட்டு கெளம்பும்போது மணி 8.30க்கு மேல ஆச்சு. ஃபார்ஸ்ட் ஆஃபிஸர்ஸ் முன்னாடியே சொல்லிதான் அனுப்புனாங்க.வழில வண்டிய எங்கேயும் நிறுத்தக்கூடாது , அனிமல்ஸ் வெளில வரும்னு. நாங்களும் எல்லாரும் மொத்தமா போனா சத்தம் ரொம்ப அதிகமா இருக்கும்னு கொஞ்சம் இடைவெளிவிட்டு போக ஆரம்பிச்சோம்.மலை ஏற ஏற செம்ம இருட்டு.நம்ம வண்டி ஹெட்லைட் தவிர  வேற எந்த வெளிச்சமும் இல்ல.கொஞ்சம் பதட்டத்தோட தான் வண்டி ஓட்டிட்டு இருந்தேன்.என் வண்டிக்கு 50 அடி முன்னாடியும் பின்னாடியும் வேற வண்டி எதுவும் இல்ல.
ரோட்டோட ரெண்டு பக்கமும் அவ்வளவு அடர்த்தியா மரங்கள்.  என் வண்டியுடைய இஞ்சின் சத்தமும் காட்டுக்குள்ளிருந்த வந்த விநோத சப்தங்களையும் தாண்டி வேறெதுவும் கேக்கல.

கொஞ்ச தூரம் தள்ளி ரோட்டோட இடது பக்கம் ஒரு பெரிய மரக்கிளை ஆடிட்டு இருந்துச்சு. கிட்டத்தட்ட 600 மீட்டர் இடைவெளில. இது என்னடா எல்லா மரமும் அசையாம இது மட்டும் அசையுதேன்னு வண்டிய கொஞ்சம் லெஃப்ட்ல ஓரங்கட்டி ஹை பீம் போட்டா...!! யானை....!!! சாதுவா கிளைய இழுத்து என்னவோ சாப்டுட்டு இருந்துச்சு. எனக்கு செம்ம பதட்டம். சுத்தியும் வேற யாரும் வரல. என்ன பண்றதுன்னு யோசிச்சுட்டு தார் ரோட்லேர்ந்து இறங்கி வலது பக்கம் கொஞ்சம் கரடு முரடான் மண் தரைல வண்டிய ஓட்டிட்டு போய்ட்டு எஸ்கேப் ஆகிடலாம்னு திட்டம்போட்டு வண்டிய ரைட்ல ஓரம் கட்னேன். பொறுமையா முன்னாடி போக ஆரம்பிச்சேன். ஒரு 200 மீட்டர் போனப்புறம் மறுபடியும் வலது பக்கம் ஏதோ அசைவு.என்னடா இது சோதனைன்னு மறுபடியும் ஹைபீம் போட்டா... ஒரு குட்டியானை...!! ரைட்டுடா... ரெண்டு பக்கமும் ஃபேமிலியோட நின்னுட்டு இருக்கே..என்ன பண்றதுன்னு யோசிச்சுட்டு வண்டிய ஆஃப் பண்ணிட்டேன். அப்புறம் நடுவுல ஒரு சின்ன கேப் இருந்துச்சு அதுலயே போயிடலாம்னு முடிவு பண்ணி ஹெட்லைட்ட ஆஃப் பண்ணிட்டு டைகர் லேம்ப்னு ஒரு சின்ன லைட் இருக்கும் ஹெட்லைட் பக்கத்துல..அத மட்டும் ஆன் பண்ணிட்டு பொறுமையா வண்டிய உருட்டிகிட்டே பக்கத்துல போனேன். ரெண்டு பக்கமும் யானை பக்கத்துல வந்த ஒரு நொடி இருக்கே..யப்பா... யானைய தாண்டிட்டேன்னு தெரிஞ்சதும் லை ஆன் பண்ணி ஒரே திருவு தான் ரெண்டரை கிலோ மீட்டர் தள்ளிப் போய் தான் ஸ்லோ பண்ணேன். செம்ம அனுபவம். மறையூருக்கு முன்னால ஒரு டீக்கடைல எல்லாரும் அசெம்பிள் ஆனோம். இந்த இடைப்பட்ட கேப்ல திரும்பிப்போன அந்த 72 மாடல் வண்டிய சரி பண்ணி திரும்பவும் எங்க கூட அந்த டீக்கடை கிட்ட வந்து சேந்துகிட்டாங்க.


மறையூர் தான் செண்டர் பாயிண்ட். அங்கிருந்து நேராப் போனா மூணாறு.இடது பக்கம் திரும்பி 18 கிலோமீட்டர் போனா காந்தளூர். நாங்க எங்கெங்கேயோ தப்பான வழில கொஞ்ச நேரம் சுத்திட்டு ஒருவழியா நாங்க தங்க வேண்டிய ரிஸார்ட்டுக்கு வந்து சேந்தோம்.கொஞ்ச நேரத்துலேயே எல்லாரும் ரெஃப்ரஷ் ஆய்ட்டு கேம்ப் ஃபயர் சுத்தி உக்காந்து சப்பாத்தி சிக்கன் கறி...அது இதுன்னு வெளுத்துக் கட்டிட்டுப் போய்ப் படுத்தாச்சு. அடுத்த நாள் காலைல நாங்க தங்கியிருந்த ரிஸார்ட்டுக்கு எதிர் பக்கம் கொஞ்ச தூரத்துல ஒரு அருவி இருக்குறதா சொன்னாங்க. அதனால மொத்தமா கெளம்புனோம். ஒரு ரெண்டரை கிலோ மீட்டர் நடந்து போனதுக்கு அப்புறம் அட்டகாசமான ஒரு அருவி வந்துச்சு.ஒரு மணி நேரத்துக்கு மேல செம்ம குளியல் செம்ம ஆட்டம். திரும்பி மேல ஏறி வரும்போது பெண்டு கழண்டுபோச்சு. வந்து கேரளா ஸ்டைல் காலை டிஃபன் புட்டு, தேங்காய்ப் பால், ஆப்பம், கடலை கறி, சிக்கன் கொழம்புன்னு செம்ம மெனு. வெளுத்துக் கட்டிட்டு அப்புறம் மறுபடியும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு சாயந்திரம் டீ அடிச்சுட்டு ஸ்ட்ராபெரி தோட்டம் , கும்க்கி படத்துல வர ஒரு ஸ்பாட்னு ரெண்டு மூனு எடம் சைட் சீயிங் எல்லாம் முடிச்சு 7.00 மணி வாக்குல ரூமுக்கு வந்து சேந்தோம்.




அன்னைக்கு நைட் கேம்ப் ஃபயரோட சிக்கன் பார்பெக்யூவும் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. முதல் நாள் பயணக்களைப்பால தூங்கப் போனவங்க எல்லாருமே அன்னைக்கு உற்சாகமா காத்துட்டு இருந்தாங்க. ரைடர்ஸ் எல்லாரும் தங்கள அறிமுகம் செஞ்சுகிட்டு அப்டியே பாட்டு ஆட்டம்னு நடு ராத்திரி வரைக்கும் கொண்டாட்டமாவே போச்சு.அடுத்த நாள் காலைல கொஞ்சம் சீக்கிரம் கெளம்பி மூனாறு வழியா தேனி, போடிநாயக்கனூர் மதுரை வரைக்கும் போறதா திட்டம். ஆனா சதீஷ் அண்ணன் வண்டி பஞ்சர் ஆனதால கொஞ்ச டிலே ஆகி ஒரு வழி 7.00 மணி கிட்ட கெளம்புனோம். மூனாறுல தான் காலை டிஃபன். அதுக்கப்புறம் அங்கிருந்து தேனி போடிநாயக்கனூர் வழியா மதுரைக்கு வந்து சேர்ந்தோம். ரொம்ப ரொம்ப அழகான மலைப் பாதைப் பயணாம் அது. டீ எஸ்டேட்டுகளுடைய பசுமைக்கு நடுவுல... கொஞ்சம் குளிர்.. கொஞ்சம் வெயில்...ரெண்டையும் மாத்தி மாத்தி அனுபவிச்சபடி... ஒரு மாதிரி வெளிர் ஊதா நிற பூக்கள் ரெண்டுபக்கமும் கொட்டிக்கிடந்த ஈரமான சாலைகள்ல வண்டியோட்டுன அனுபவம் இருக்கே.....!! அடடா... கண்டிப்பா வாழ்க்கைல ஒரு முறையாவது அத அனுபவிச்சே தீரனும்.


அங்கிருந்து இறங்கி மதுரைக்கு வெளில மத்தவங்க வர்ரதுக்காக காத்திருக்கும்போது லேசா மழை தூர ஆரம்பிச்சுது.அப்டியே நனைஞ்சபடியே வண்டியோட்டுனோம்.மத்தியான சாப்பாடு திண்டுக்கல் பொன்ராம்ல .ஹரி அவருடை இன்ஃப்ளூயன்ஸ பயன்படுத்தி எங்களுக்காக பிரியாணி ப்ளாக் பண்ணி வெச்சுருந்தாரு. ஒருவழியா சாயந்திரம் 4.30க்கு தான் அங்க வந்து சாப்புடவே ஆரம்பிச்சோம்.சாப்ட்டு முடிச்சு அங்கிருந்து கெளம்பி அப்டியே NH45 பிடிச்சாச்சு. தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை தான்.அங்கங்க டீ சாப்புட நிறுத்திப்போம். திருச்சிக்கு உள்ள போனா ட்ராஃபிக்ல் மாட்டிப்போம்னு முன்னாடியே மனப்பாறைல ஒரு ஸ்டேட் ஹைவேல திரும்புனோம். பொதுவா ஸ்டேட் ஹைவேஸ்னாலே எதிர்பக்க ட்ராஃபிக், மோசமான ரோடுன்னு கடுப்பேத்துற விஷயங்கள் இருக்கும் ஆனா இந்த ரோடு ஏதோ நந்தவனத்துக்குள்ள நுழைஞ்ச மாதிரி ரெண்டுபக்கமும் அடர்த்தியா மரங்களோட ஏதோ கே.கே நகர் நிழல்சாலை மாதிரி இருந்துச்சு. ஒரே ஸ்ட்ரெட்ச்ல மறுபடியும் NH வந்து சேந்தோம். அங்க ஊருக்கு வெளில ஒரு டீ ப்ரேக் எடுத்துகிட்டு கிளம்புனோம். இங்க தான் எங்க லீட் பிரசாத் ஒரு ட்ரிக் ப்ளான் போட்டாரு.”அடுத்து நாம் செங்குறிச்சி டோல் ப்ளாசா தாண்டி தான் நிக்க போறோம்.இங்கிருந்து அது 80 கிலோ மீட்டர். இது நான் ஸ்டாப் லெக்” அப்டின்னு எலார்கிட்டயும் சொல்லிட்டாரு. ஆனா நெஜம்மா அங்கிருந்து 110 கிலோமீட்டருக்கு அப்புறம் தான் செங்குறிச்சி. நான் சும்மா வெரட்டு வெரட்டுன்னு போய்க்கிட்டே இருந்தேன்.வாழ்க்கைல முதல் முறையா 100 கிலோமீட்டருக்கு மேல நான்ஸ்டாப் ரைட் போனது அப்போ தான். மத்த 350 cc வண்டிக்கு முன்னாலயே வந்து சேந்தேன். கொஞ்ச நேரம் மத்தவங்களுக்காக காத்திருந்தோம். அப்புறம் கொஞ்ச தூரம் தள்ளி இருக்குற A2Bல டின்னர் முடிச்சு கரெக்ட்டா கெளம்புற நேரத்துல செம்ம மழை. என்கிட்ட ரெய்ன் கோட் இருந்துச்சு.. டக்குன்னு எடுத்து மாட்டிகிட்டேன். எல்லாரையும் போலாம் போலாம்னு டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சேன். கொஞ்ச பேருக்குத் தயக்கம். எனக்கும் உள்ளுக்குள்ள மழைல வண்டியோட்ட பயந்தான். ஆனாலும் ஒரு ஆசை.

ஒரு வழியா எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணி கிளம்பும்போது மணி 10.30க்கு மேல ஆயிடுச்சு. இன்னும் சென்னைக்கு 273 கிலோ மீட்டர் இருந்துச்சு. மழையினால யாரும் வேகமா போறதில்லன்னும் பொறுமையாவே போய்க்கலாம்னும் பேசி முடிவு பண்ணிகிட்டோம். மழை விட்டு விட்டு தூத்தல் போட்டபடியே இருந்துச்சு. ஹெல்மெட் வைசர்ல தண்ணி ஓடிகிட்டே இருக்கும். எதிர்பக்கத்துல வர்ர வாகனங்களுடைய வெளிச்சம், நம்மள தாண்டி போற பெரிய வாகனங்கள் வாரியிறைக்குற அழுக்கு தண்ணி, சரியான பிடிமான இல்லாம வழுக்க தயாரா இருக்குற சாலைன்னு, ஹெல்மெட் வழியா பின் கழுத்துல இறங்கி உள்ளாடை வரைக்கும் நனைக்குற மழை தண்ணின்னு இத்தனையையும் சமாளிச்சு தான் வண்டியோட்னோம்.மழைக்கு முன்னாடி வரைக்கும் பேயோட்டு ஓட்டிக்கிட்டிருந்த நான் அப்டியே கொஞ்சம் கொஞ்சமா பம்ம ஆரம்பிச்சேன். எந்த லாரியையும் ஓவர்டேக் பண்ணி முன்னாடி போறதுக்கே பயமா இருந்துச்சு. ஹரிஷ் மணி அண்ணாத்த இத கவனிச்சுட்டாரு. என் பக்கத்துல வந்துட்டு என்ன guide பண்ண ஆரம்பிச்சார். ஒவ்வொரு லாரியை ஓவர் டேக் பண்ணும்போதும் பக்கத்துலயே அவரும் வருவார். தாண்டுன உடனே ஒரு thumbs up காட்டுவாரு. இப்டியே பொறுமையா ஒட்டிகிட்டு வந்தோம். மழை கொஞ்சம் விட்டவுடனே பழையபடி விரட்ட ஆரம்பிச்சோம். வண்டி டயர்லயும் கொஞ்சம் பிடிமானம் கிடைக்க ஆரம்பிச்சுது.

ஒருவழியா அதிகாலை 2.30 மணிக்கு மேல்மருவத்தூர் வந்து சேர்ந்தோம். அங்க ஒரு வண்டிக்கு சின்னதா ஒரு fall.அதனால காஃபி ப்ரேக், வண்டி ரெடி பண்ற நேரம், ஈர சட்டைய மாத்திக்கிற நேரம்னு எல்லாம் சேர்த்து ஒரு நேரத்துக்கு மேல ஆச்சு. மழை சுத்தமா விட்டுடுச்சு.ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாலை 4.30 மணி போல கடைசியா எல்லாரும் மதுரவாயல் டோல் கேட்கிட்ட அசெம்பிள் ஆனோம். ஒருத்தருக்கொருத்தர் சொல்லிகிட்டு கைகுலுக்கி பிரியாவிடை சொல்லி அவங்கவங்க வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். V11 ஷோரூம் உடைய மேனேஜிங் பார்ட்னர்ஸ் பிரபுவும், ஹரியும் அவங்க கார்ல எங்ககூட வந்திருந்தாங்க. அவங்களும் கடைசிவரைக்கும் இருந்து எல்லார்கிட்டேயும் சொல்லிட்டு தான் கெளம்புனாங்க. நான் கே.கே நகர் வந்து சேரும்போது மணி 5.30. நிறைய களைப்போடவும் அட்டகாசமான அனுபவங்களோடவும் கிட்டத்தட்ட 1400+ கிலோ மீட்டர் பயணம் செஞ்சுட்டு வீட்டுக்கு வரும்போது மனசுல ஒரு இனம்புரியாத அமைதி. அடுத்த ட்ரிப்பை எதிர்ப்பார்த்தபடி வண்டிய ஏத்தி போட்டுட்டு வந்து படுக்கைல விழுந்தேன்.


அடுத்த ட்ரிப்ல சந்திப்போம்....!!

மேலும் படங்கள் இங்கே

கருத்துகள் இல்லை :

Related Posts Plugin for WordPress, Blogger...