நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

கடவுள் - சுஜாதா

உலகிலேயே இன்றளவில் அதிகம் விவாதிக்கப்பட்ட ஒன்று அல்லது ஒருவர் அல்லது ஒரு கருத்து இந்த ’கடவுள்’ என்பதாகத் தான் இருக்க முடியும். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுக்கும் கடவுள் என்பது அவனது நம்பிக்கையின் அடிப்படையில் மாறுபடுகின்றது. இந்த நம்பிக்கை நம்மைச் சுற்றியுள்ளவர்களால் சிறுவயதிலிருந்து ஊட்டப்பட்டதாக இருக்கலாம். அல்லது நாமே வளர்த்துக் கொண்டதாகவும் இருக்கலாம்.மேலும் பலருக்கு இந்தகடவுள்என்ற நம்பிக்கை அவர்கள் சார்ந்த மதத்தின் அடிப்படையிலும் இருக்கலாம்.
  • உண்மையாகவே ‘கடவுள்என்றால் என்ன ?
  • எது கடவுள் என்று நம்பப்படுகின்றது ?
  • இன்ன மதத்திற்கு இன்ன கடவுளென்று நிர்ணயித்தது யார் ?
  • கடவுளுக்கு உருவம் உண்டா ? இல்லையா?
  • இந்த பிரபஞ்சம் தோன்றி, இயங்கிக் கொண்டிருப்பதற்கு கடவுள் தான் காரணமா ?
  • உயிர்களைப் படைத்தது கடவுளா ?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தத்துவரீதியாகவோ அல்லது அறிவியல்ரீதியாகவோ ஒரு முழுமையான விடையை யாரும் அளித்துவிடக்கூடுமா என்ன ??

நிச்சயமாக முடியாது..!!


முடிந்தவரையில், நம்மிடமுள்ள நிரூபிக்கப்பட்ட உண்மைகளை ஒரு புறமும் அனுமானங்களை மற்றொரு புறமும் வைத்துக்கொண்டு வெவ்வேறு கோணங்களில் விவாதிக்கலாமேயன்றி இன்னது கடவுளென்று வரையறுப்பது கடினமே.

சரி… கடவுள் இருப்பதாகவே வைத்துக் கொண்டால் மனிதர்களாகிய நமக்கு அதனால் என்ன பலன் ?

பொதுவாகவே நம்மில் பெரும்பாலானோர் மனதளவில் மென்மையானவர்கள். என்னதான் தேர்வுக்கு விடிய விடிய படித்தாலும் வீட்டை விட்டுக் கிளம்புமுன் கும்பிடு போட்டு வேண்டிக்கொண்டு செல்ல ஒரு கடவுள் தேவைப்படுகின்றார். ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று தெரிந்தாலும் “எல்லாத்தையும் மேல இருக்குறவன் பாத்துப்பான்என்று கடவுள் மீது பாரத்தைப் போடுகிறவர்கள் நாம்.

”நமக்கும் மேலே சக்தி படைத்த ஏதோ ஒன்று/ ஒருவர் இருக்கின்றார்.அவர் நம்மை வழிநடத்துவார்” என்கிற நம்பிக்கை ஏதோவொரு வகையில் ஒவ்வொருவருக்கும் தேவையாயிருக்கின்றது.நமது பொறுப்புகளையும் மனச்சுமையையும் குறைத்துக்கொள்ள இந்த நம்பிக்கை உதவுகின்றது.

நிற்க…

இப்படி எல்லாவற்றுக்கும் கடவுள் தான் காரணம்மென்றும்… அவரை மீறி இங்கு எதுவுமில்லை என்றும் மனிதகுலம் கண்மூடித்தனமாக நம்பியிருந்தால் அறிவியல்ரீதியான இந்த முன்னேற்றம் சாத்தியப்பட்டிருக்காது அல்லவா ?

நமக்குத்தான் எல்லாவற்றையும் கேள்வி கேட்கச் சொல்லித் தந்திருக்கிறார்களே…! முன்பே சொன்னது போல் வெவ்வேறு கோணங்களில் சிந்தித்து… கேள்விகளை எழுப்பினால் நமக்கு குத்துமதிப்பாய் தெளிவு (என்ன ஒரு முரண்..!!)  பிறக்கலாம்.
விஷயத்துக்கு வருகின்றேன்…

என்னைப் பொருத்தவரையில் 2013-ம் ஆண்டில் நான் படித்த புத்தகங்களிலேயே ஆகச்சிறந்ததாக சுஜாதாவின் ‘கடவுள்தொகுப்பைச் சொல்லுவேன். வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வார/மாத இதழ்களில் வெளியான கடவுள், மதம், பிரபஞ்சம், உயிரின் தோற்றம்.. ஆகியவை தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பே இந்த புத்தகம். ஒட்டுமொத்தமாய் ஒரே மூச்சில் படித்து முடிப்பது கொஞ்சம் கடினம் தான்.

ஆனாலும் நீங்கள் கொஞ்சம் அறிவியல் விரும்பியாய்.. கேள்விப் பிசாசாய் இருக்கும்பட்சத்தில் இது உங்களுக்கு செம்ம ட்ரீட்…!! நிச்சயமாக நவீன அறிவியலின் கோணத்தில் கடவுள்...மதம்…பிரபஞ்சம் ஆகியவை குறித்த ஒரு பருந்துப் பார்வை கிடைக்கும்.

முடிவாக - ‘உளன் எனில் உளன் அவன் எனில் அவன்’..!!

கடவுள் – சுஜாதா,
உயிர்மை பதிப்பகம்
272 பக்கங்கள் – விலை ரு.200/-

ஆன்லைனில் வாங்க: இங்கு செல்லவும்

வெள்ளி, 27 டிசம்பர், 2013

The Man from Earth (2007) - யார் கடவுள் ???


ஒரு விடுமுறை நாளின் காலை நேரம். உங்களோடு பத்து வருடங்களுக்கு மேல் பணிபுரிந்த சக பணியாளர் / நண்பர் (பெயர் ஜான் என்று வைத்துக்கொள்வோம்) யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் திடீரென ஊரை விட்டு கிளம்புவதாகத் தெரிகின்றது. நீங்களும் இன்னபிற நண்பர்களும் பரிசுப் பொருட்களோடு அவர் வீட்டை நோக்கி செல்கின்றீர்கள். அந்த நண்பர் ஒரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர். முனைவர் பட்டம் பெற்றவர்.

அவரைப் போலவே நீங்களும் சக நண்பர்கள் அத்தனை பேருமே வெவ்வேறு துறைகளில் (Biology, Anthropology, Archaeology, Psychology, Biblical expertise) முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்கள். சுருங்கச் சொன்னால் தத்தமது துறை சார்ந்த அறிவில் வல்லுநர்கள். ஜான் ஒரு அறிவாளி. திறமையான வேலைக்காரன். அவன் இப்படி சட்டென்று எல்லாவற்றையும் உதறிவிட்டுச் செல்வதில் யாருக்கும் விருப்பமில்லை. காரணம் கேட்டு அவனைத் துருவத் தொடங்குகின்றார்கள் எல்லோரும். மேலும், பத்து வருடங்களாக இளமையாகவே இருப்பதன் இரகசியம் என்ன எனவும் கேலியாகக் கேட்கின்றார்கள்.

முதலில் மழுப்பி சமாளிக்கும் ஜான் பின்பு பேச்சை திசை திருப்புகின்றான். கற்காலத்துக்கும் முன்பாக வாழ்ந்த மனிதன் ஒருவன் இன்றும் உயிரோடிருப்பதற்கான சாத்தியம் என்ன என்று கேட்க… ஒவ்வொருவரும் ஆர்வத்தோடு ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளைச் சொல்கின்றார்கள்.
  • அவனுக்கு எந்த நோய் தாக்கத்தையும் தாங்கிக் கொள்ளக் கூடிய எதிர்ப்புசக்தி இருந்திருக்க வேண்டும்.
  • காலத்தை மீறிய அறிவை அவன் கொண்டிருக்க முடியாது.
  •  உலகம் எதையாவது புதிதாக கற்றுக் கொள்ளும்போது தான் அவனும் கற்றுக் கொண்டிருப்பான்.
  • அவனுடைய தற்போதைய வயது கிட்டத்தட்ட 14,000 ஆண்டுகள் இருக்கும்

இப்படி ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வருபவர்கள்… ஜானிடம், “ நீ ஏதும் புத்தகம் எழுதப் போகின்றாயா…அப்படியென்றால் நிச்சயம் எங்களிடம் காட்டு…” என பலவாறாக பேசிக்கொண்டிருக்க.. திடீரென ஜான் அந்த விஷயத்தைச் சொல்கின்றான்.

அந்த 14,000 வயது மனிதன் தான் தானென்று….!!

அதற்குப் பிறகு…!!!!???
கட்…!!


ஐந்து அல்லது ஆறு டாக்ரேட்டுகள் (ஒரு பெண் உட்பட)… ஒரு இளம் மாணவி… ஒரு நடுத்தர வயது பேராசிரியை….! இவர்களனைவரும் ஒரு வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு, மனிதனின் தோற்றம் பற்றியும்…பரிணாம வளர்ச்சி பற்றியும்… மதங்களின் வரலாற்றையும்… உலகின் தோற்றத்தை பற்றியும்… வெறுமனே பேசிக் கொண்டேயிருப்பதை எவ்வளவு நேரம் கேட்டுக் கொண்டிருப்பீர்கள்…!!

கிட்டத்தட்ட 90 நிமிடங்களில் கொஞ்சமும் சலிப்படைய வைக்காமல் அட்டகாசமான..நேர்த்தியான திரைக்கதையோடு..பெரிய ஜிகினா வேலைகள் எதுவுமில்லாமல் ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் எடுக்க முடியும் என்பதற்கு இந்த திரைப்படமே சாட்சி…!! நான் பார்த்தவரையில் 12 Angry Men-க்கு பிறகு பட்டாசான ஒரு conversation movie…!!

If you are fascinated by facts, then please don’t miss to watch this movie..!!!

இந்த படம் பற்றி நண்பர் கருந்தேள் ராஜேஷின் சுவையான அறிமுகத்தைப் படிக்க: இங்கு செல்லவும்

ஜெரோம் பிக்ஸ்பி-யின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்ட இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்: இங்கு

மேலும் திரைப்படம் பற்றிய உருப்படியான ஒரு விவாதம் : இங்கு

படத்தின் ட்ரெய்லர் :


செவ்வாய், 24 டிசம்பர், 2013

படிப்பது சுகமே - தமிழ் ஸ்டூடியோவின் புத்தக அறிமுக நிகழ்வு
கடந்த ஞாயிறு (22/12/2013) மாலையை தமிழ் ஸ்டுடியோவில் ரொம்பவே பயனுள்ளதாகவே கடத்தினேன். புத்தகத் திருவிழா நெருங்குவதையொட்டி, என்ன மாதிரி புத்தகங்களைப் படிக்கலாம் ? என்பது தொடர்பான சிறிய அறிமுகப்படுத்தலுக்கான நிகழ்வு. வெவ்வேறு துறை சார்ந்த ஆளுமைகள் தங்களுக்கு பிடித்தமான, கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்கள் பற்றி பேசினார்கள்.

1.முதலில் பேசிய சண்முகானந்தம் (Wildlife Photographer) அவர்கள் சுற்றுச்சூழல்/இயற்கை/பறவை நோக்குதல் தொடர்பான ஒரு பெரிய புத்தக பரிந்துரை பட்டியலையே வந்திருந்தவர்கள் அனைவருக்கும் வழங்கினார்.(நேரமிருந்தால் ஸ்கேன் செய்து பதிவேற்றுகிறேன்).அவர் பேசும்பொழுது குறிப்பிட்டு சொன்ன சில எழுத்தாளர்களும் புத்தகங்களும் கீழே...

ம.கிருஷ்ணன் - சுற்றுச்சூழல் இலக்கியம், சலீம் அலி - ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி, முகம்மது அலி - வட்டமிடும் கழுகு, முனைவர்.அப்துல் ரகுமான் - பீகிள் கடற்பயணம் (மொழிபெயர்ப்பு), மேலும் ஆதி வள்ளியப்பன், தியோடர் பாஸ்கரன், கோவை சதாசிவம் உள்ளிட்ட எழுத்தாளர்களின் எல்லா புத்தகங்களும்.

2. அடுத்ததாக ஆங்கில புத்தகங்கள் பற்றி பேசியவர் Frontline இதழின் ஆசிரியர் Vijayasankar Ramachandran அவர்கள். கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் பேசியவர் பரிந்துரைத்த அரசியல்/மார்க்ஸியம் தொடர்பான ஆங்கில புத்தகங்களின் பட்டியல் கீழே

Imperialism, the highest stage of capitalism - Lenin
The rise and fall of the third Reich - William L.Shirer
The Age of Revolution, The Age of Capital , The Age of Empire, The Age of Extremes (4 books) - Eric Hobsbawm
A People's History of the United States - Howard Zinn
Open veins of Latin America - Eduardo Galeano
Glimpses of World History - Jawaharlal Nehru
Manufacturing Consent: The Political Economy of the Mass Media - Noam Chomsky, Edward S. Herman
Fidel and Religion - Frei Betto
The Story of Philosophy - Will Durant
The History of India - Romila Thapar
Culture, Ideology, Hegemony - K.M.Panikkar
Indian Atheism - Debiprasad Chattopadhyaya
The economy: an interpretive introduction - C.T.Kurien
An Uncertain Glory: India and Its Contradictions - Jean Dreze and Amartya Sen
Communalism in Modern India - Bipin Chandra
The Kashmir Dispute - A G Noorani
The Image trap - M.S.S.Pandian
பெரியாரின் குடியரசு கட்டுரைகளின் தொகுப்பு - ஈ.வெ.இராமசாமி ஆகிய நான்

3.புதிய தலைமுறை இதழின் ஆசிரியர் மாலன் அவர்கள் குறிப்பிட்ட சில நாவல்களைப் பரிந்துரைத்தார்

அஞ்ஞாடி - பூமணி (தலித்திய பின்னணி - காலமாற்றம் சொல்லும் கதை - ஏகப்பட்ட தகவல்கள்)
செடல் - இமையம்
தனிமைத் தளிர் - ஆர்.சூடாமணி
(கதை சொல்லும் நடைக்காகவும், வார்த்தைப் பயன்பாட்டிற்காகவும் மட்டும்)
உப்பு நாய்கள் - லஷ்மி சரவணக்குமார் (மத்திய சென்னையைப் பின்னணியாகக் கொண்டது, அந்த மக்களின் வாழ்வியல்/இன்பதுன்பம், புனித பிம்பங்களை போற்றுபவர்களுக்கானதல்ல )
முதல் மனிதன் - ஆல்பெர்ட் கேம்யு (Albert Camus) மொழிபெயர்ப்பு

4.பூவுலகின் நண்பர்கள் சார்பாக கலந்து கொண்ட நவீன் அவர்கள் இயற்கையோடிணைந்த வாழ்வியலின் அழகு பற்றி நிறைய பேசிவிட்டு இரண்டு புத்தகங்களை மட்டும் பரிந்துரைத்தார்.

ஒற்றை வைக்கோல் புரட்சி (மொழிபெயர்ப்பு) - பூவுலகின் நண்பர்கள்
சாதியை ஒழிக்கும் வழி - அம்பேத்கர்
புதினங்கள் -சிறுகதைகள் தொடர்பான புத்தகங்களைப் பற்றிப் பேச எழுத்தாளர் தமிழ்மகன் அவர்களும், சினிமா தொடர்பான புத்தகங்கள் பற்றி பேச இயக்குநர்.அம்ஷன் குமார் அவர்களும் கடைசி நேரத்தில் நிகழ்வில் கலந்து கொள்ளமுடியாமல் போய்விட்டது. 

புத்தகங்களுக்கான அறிமுக நிகழ்வு என்று சொன்னாலும் உள்ளார்ந்து பார்த்தால் ஏகப்பட்ட விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்த து இந்த நிகழ்வு...!!

உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும் அருண்..!!!

சனி, 26 அக்டோபர், 2013

Gravity (2013) – விட்டு விலகிச் செல்லாதேபெயர் : ரயன் ஸ்டோன் (Ryan Stone)

தொழில் : மெடிக்கல் இஞ்சினியர்

விண்வெளி பயண அனுபவம்: இதுவே முதல் விண்வெளிப் பயணம். ஆறு மாத ஆயத்த பயிற்சியைத் தவிர வேறு அனுபவம் ஏதுமில்லை. அடிப்படையில் ஒரு ஆராய்ச்சியாளர்.


பெயர் : மாட் கோவால்ஸ்கி (Matthew Kowalski)

தொழில் : விண்வெளி வீரர்

விண்வெளி பயண அனுபவம் : அனுபவஸ்தர். ரஷ்ய விண்வெளி வீரர் அனடோலியின் 82 மணி நேர (மொத்தமாக விண்வெளியில் கடத்திய காலம்) சாதனையை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டவர். அதனைக் கடக்க பெரிதும் விரும்புபவரும் கூட.செம்ம ஜாலி பார்ட்டி..!


பயணத்தின் நோக்கம் : ஹப்பிள் ஸ்பேஸ் (Hubble Space Telescope) விண்-தொலைநோக்கியை பழுது நீக்கும் பொருட்டு.

விண்கலம் : எக்ஸ்ப்ளோரர்

ஆபத்து: அழிக்கும் பொருட்டு ஏவுகனையால் தாக்கப்பட்ட பழுதான ரஷ்ய செயற்கைக்கோளின் வெடித்து சிதறிய பாகங்கள் (சிதை(ந்த)பொருட்கள் – debris) அதிவேகமாய் இவர்கள் (ரயான், மாட்) பணிபுரிந்து கொண்டிருக்கின்ற சுற்றுப்பாதையில் (orbit) இவர்களை நோக்கி வருவது.

என்ன நடந்தது : சிதைபொருட்கள் அதிவேகமாய் தாக்கியதில் எக்ஸ்ப்ளோரர் விண்கலம் சேதமடைகின்றது. சக வீரர் ஷெரிஃப் உயிரிழக்கின்றார். இருவரும் அந்தரத்தில் மிதக்க (!!) நேரிடுகின்றது .

உயிர்பிழைக்க வழி: உடையில் இருக்கிற கொஞ்சம் ஆக்ஸிஜனையும், விண்வெளியில் நகர உதவும் கருவியிலுள்ள கொஞ்சம் வாயுவையும் (விண்வெளி வெற்றிடத்தை கனமான வாயுவால் உந்தி நகர்தல் – moving in space by using thrust) வைத்துக்கொண்டு ISS-ஐ (International Space Station – சர்வதேச விண்வெளி மையம்) அடைதல்.அங்கிருந்து வேறு கலங்களில் தப்பி பூமி திரும்புவது

முடிவு : மாட், ரயான் இருவரும் தப்பித்தார்களா..?? இல்லையா…??கண்களுக்கு விருந்துன்னு சொல்லப்படுற வார்த்தை இப்போ ரொம்ப க்ளிஷேவானது. பொதுவாவே ஆங்கிலப்படங்கள்ல தொழில்நுட்ப விஷயங்களிலும் ஒளிப்பதிவு மற்றும் சி.ஜியிலும் பட்டைய கெளப்புவாங்க. ஆனாலும் ‘செம்ம விஷுவல் ட்ரீட்’-னு நான் வாயைப் பொளந்து பாத்த படங்கள் 

1. அவதார்-2009 (12 வருட உழைப்பை வாங்கிய அசுரத்தனமான டெக்னாலஜி. 3டி-ல பாத்தவங்க கொடுத்து வெச்சவங்க)

2. லைஃப் ஆஃப் பை -2013 (கொஞ்சம் போரடிக்கும் திரைக்கதையானாலும் கடல் பரப்பு அட்டகாசமான அழகு)

3. பஸிஃபிக் ரிம் - 2013 (அந்த படத்துலயே வர வசனம் – 2500 tonnes of awesome. செம்ம விஷுவல்ஸ். 3டி/ஐமேக்ஸ் –ல பாக்க முடியலையேன்னு ரொம்ப வருத்தப்பட்ட படம் )

அடுத்தது க்ராவிட்டி தான். படம் பத்தி படிச்சு பாத்தப்போ இயக்குனர் அல்ஃபோன்ஸோ க்வாரோன் (Alfonso Cuarón) ஏகப்பட்ட உழைப்பைக் கொட்டியிருப்பதாகத் தெரிந்தது. கிட்டத்தட்ட நாலு வருடங்களுக்கு மே லான மேக்கிங்கில் திட்டமிடலுக்காகவும் டெக்னிக்கல் பெர்ஃபெக்க்ஷனுக்காகவும் ரொம்பவே மெனக்கெட்டிருக்கின்றார்கள். திரையரங்கில் பார்த்தவர்கள் நிச்சயம் இந்த பெர்ஃபெக்‌ஷனை உணர்ந்திருக்கலாம்.படத்தில் நிறைய ‘பாயிண்ட் ஆஃப் வியூ’ ஷாட்கள்… படத்தோடு ஒன்றிவிட்டபின் நாமே விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. சப்தங்கள் ஏதுமில்லாத விண்வெளி வெற்றிடத்தை நிச்சயமாய் நம்மால் உணர முடிகின்றது.


சாண்ட்ரா புல்லக், ஜார்ஜ் க்ளூனி ஆகியோரின் நடிப்பைப் பற்றி புதிதாகச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இருவருமே ____________________________ கள் (வழக்கமான பாராட்டு வரி எதையாவது இட்டு நிரப்பிக் கொள்ளவும்). ஆனாலும் Sandra steals the show...!! இந்த மாதிரியான ’யாருமற்ற தனிமையில் தப்பிப்பிழைத்து உயிர்வாழ்தல் -survival’ வகையறா கதைகளில் நிச்சயம் கொஞ்சம் தத்துவார்த்தமான வசனங்களும் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் இருக்கும் (உ.தா : Life of Pi) க்ராவிட்டியிலும் அந்த மாதிரி நிறைய உண்டு (you have to learn to let go, try to detach yourself, க்ளைமாக்ஸில் அனிங்கான்க் உடன் ரயான் ரேடியோவில் பேசுகிற காட்சி ).


மொத்தமே 90 நிமிடப் படம் தான் .இந்த 90 நிமிட கால அவகாசத்துக்குப் பின்னால் ஒரு சுவையான ட்ரிவியா உள்ளது. சர்வதேச விண்வெளி மையம் (ISS) மணிக்கு 17,500 மைல் வேகத்தில் பூமியை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நேரம்… எக்ஸாக்ட்லி 90 நிமிடங்கள்..!!! செம்மை இல்ல..!!? 


படத்தை தியேட்டர்களிலிருந்து தூக்குறதுக்கு முன்னாடி கண்டிப்பா பாத்துடுங்க…!! என்னதான் டவுன்லோட் பண்ணி பாத்தாலும் அந்த அனுபவம் கண்டிப்பா கெடைக்காது…!!


இந்த படம் தொடர்பான அறிவியல் ரீதியான கேள்விகளுக்கும் / சந்தேகங்களுக்கும் :

http://en.wikipedia.org/wiki/Space_debris

http://www.nasa.gov/audience/forstudents/k-4/stories/what-is-a-spacewalk-k4.html#.UmuZp3BHI4M

http://www.physicsclassroom.com/class/newtlaws/u2l1a.cfm


படத்தின் ஏனைய triviaக்கள் :

http://www.imdb.com/title/tt1454468/trivia?ref_=tt_trv_trv

புதன், 23 அக்டோபர், 2013

18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்வெகு நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்ட ஒரு தொலைக்காட்சித் தொடரை நீங்கள் இடையில் திடீரென பார்க்கத் தொடங்குகிறீர்கள். கதை புரிய கொஞ்சம் நாளானாலும் ஓரளவு புரிந்தபின் கதையோடும் கதைமாந்தரோடும் ஒன்றிவிடுகின்றீர்கள். பின் அந்தத் தொடர் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கின்ற தருணத்தில் அதனைப் பார்ப்பதை நிறுத்திவிடுகின்றீர்கள். கிட்டத்தட்ட இந்த மாதிரியான ஒரு உணர்வையே எனக்குத் தந்தது அசோகமித்திரன் அவர்களின் ‘பதினெட்டாவது அட்சக்கோடு’ நாவல்.

சுதந்திரத்திற்குப் பின்னான ஆனால் இந்திய நாட்டுடன் இணையாத - நிஜாம்களால் ஆளப்பட்ட - ஹைதராபாத் – செகந்திராபாத் இரட்டை நகரங்கள் தாம் கதைக்களம். கிரிக்கெட் விளையாட்டில் பேரார்வம் உடைய வெறெதற்கும் துணிய தைரியமில்லாத… குடும்பத்தாரின் பேச்சைக் கேட்டு நடக்கிற எளிதில் உணர்ச்சிவயப்படுகிற ஒரு சராசரியான பதின்பருவப் பையன் சந்திரசேகரின் பார்வையில் தான் (பெரும்பாலும்) கதை சொல்லப் படுகின்றது.
நகரின் குறுகலான வீதிகளைப் பற்றி, நிஜாமின் ஆட்சியிலிருந்த குறை நிறைகளைப் பற்றி, கிரிக்கெட் விளையாட்டு தொடர்பாக, அந்த காலத்தைய அரசியல் சூழல் பற்றி… அந்த ஊர்களிள் குடியிருந்த மக்களைப் பற்றி.. என அத்தனை வர்ணனைகள்..தனித்தனியாய்…!! ஒன்றோடொன்று உரசாமல் கதையினை நகர்த்திச் செல்கின்றன.

பெரும் பிரச்சனை நடந்துகொண்டிருக்கின்ற ஒரு ஊரில் திடீரென கிளம்பிச் சென்று தங்கிவிட்டு.. கொஞ்சநாள் அங்கேயே வாழ்ந்துவிட்டு அந்த பிரச்சனைக்கான தீர்வை அடையும் முன்னரே அந்த ஊரிலிருந்து திரும்பிவிட்ட உணர்வு எத்தகையதோ இந்த புத்தகம் தந்த உணர்வும் அத்தகையதே.

மின்னல் வேகமாய் ஓடப்பழகிக் கொண்ட நமக்கு சாவகாசமான ஒரு நடைபயணம் கொஞ்சம் அலுப்புத்தட்டவே செய்யும். அசோகமித்திரன் அவர்களின் கதை நடை அப்படியானது…! ஒரு தாத்தாவோடு பேசிக்கொண்டே பொறுமையாக அவரோடு நடந்து செல்கிற மாதிரியான ஒரு எழுத்துநடை…!!நிச்சயமாகப் படிக்கவேண்டிய நாவல்..!!

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இங்கு செல்லவும்


சனி, 21 செப்டம்பர், 2013

வட்டியும் முதலும் - ராஜு முருகன்

 

  இது ஒன்றும் தமிழ் வெகுஜன வாசகர்களுக்கு பரிச்சயமில்லாத பெயரல்ல. ஆனந்தவிகடனில் கிட்டத்தட்ட நூறு அத்தியாயங்களுக்கு தொடராக வெளிவந்து வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ‘ராஜுமுருகன்’ அவர்கள் எழுதிய வட்டியும் முதலும் தொடர் அனைவரும் அறிந்ததே. அந்த தொடரின் தொகுப்பாக விகடனில் வெளிவந்த புத்தகமே இது.பொதுவாகவே கொஞ்சம் உணர்வுப்பூர்வமான, நாடகத்தன்மை கலந்த, எழுத்து உட்பட எல்லாமே பகடிக்குள்ளாக்கப் படுகிற இந்த யுகத்திலும் இப்படி ஒரு எமோஷனல் தொடர் பெருவெற்றி பெற்றது சாதனை தான். ஆனாலும் நம்ம ‘டுட்டர்’ மக்கள் #TweetLikeRajuMurugan னு ஒரு ஹாஷ்டேக் போட்டு தாளிக்கத் தவறவில்லை.

நான் ராஜுமுருகனின் எழுத்தால் ஈர்க்கப்பட்டதற்கு நிறைய காரணங்கள் இருந்தன என்னிடம்.சினிமா தொடங்கி எழுத்துலகு வரை ‘என்னா பங்காளி… அம்ம பயலுக இப்புடி பண்ணிபுட்டாய்ங்க…? ...க்காலி போட்றா’ வகையறா மதுரை மொழி வட்டார வழக்கே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காலகட்டத்தில் ‘என்ன மாப்ள.. நம்ம பயலோ.. என்னா சொல்றானோ… கம்னாட்டி செவுட்ட பேத்துபுடுவேன்னு சொல்றா..’ மாதிரியான தஞ்சை வட்டார வழக்கு தமிழை கண்குளிர எழுத்தில் படித்ததே பெரிய ஆனந்தம். அப்புறம் திருவாரூர் தொடங்கி நீடாமங்கலம், அபிவிருத்தீஸ்வரம், வெட்டாத்துப்பாலம், கொரடாச்சேரி, குடவாசல், செல்லூர், ஓகை, மூலங்குடி, கூத்தாநல்லூர், ஒளிமதி, என ராஜுமுருகன் விவரிக்கிற எல்லா சிற்றூர்களும் இடங்களும் திருவாரூர்காரனான  எனக்கு பள்ளி-கல்லூரி காலத்திலிருந்தே ரொம்பவும் பரிச்சயம். ஆக ஒவ்வொரு அத்தியாயத்தையும் சும்மா அனுபவிச்சு ரசிச்சேன்.

சரி அப்புடி என்னத்ததான் எழுதிருக்காருன்னு கேட்டீங்கன்னா… நம்ம ஒவ்வொருத்தருக்கும் ஒரு வகையான ஃப்ளாஷ்பேக் இருக்கும். அது மறக்கவே  முடியாத மகிழ்ச்சியைத் தந்த இளமைக்காலமா இருக்கலாம். அல்லது சொல்ல முடியாத துயரங்களைக் கடந்து இழப்புகளைத் தாண்டி வந்த பதின்பருவமா இருக்கலாம். முட்டி மோதி எல்லா தடைகளையும் உடைத்தெறிந்து சாதித்துக்காட்டிய இருபதுகளின் இறுதியா இருக்கலாம். இப்படியான காலங்களில் அந்தந்த சூழ்நிலைகளில் நாம் எத்தனையோ மனிதர்களைக் கடந்து வந்திருப்போம். மூன்றாம் வகுப்பு பள்ளித்தோழி, பக்கத்து வீட்டு ட்யூஷன் அக்கா, பள்ளிகூட வாசல் ஐஸ்வண்டி அண்ணன், பிள்ளையார் கோவில் பிச்சைக்காரன்,  திருவிழா கடையில் துப்பாக்கி பொம்மை வாங்கித் தந்த மாமா, கிராமத்து கிணற்றில் நீச்சல் கற்றுத்தந்த தாத்தா, ப்ரூஸ்லீ கதை சொன்ன கடைசி பென்ச் நண்பன், வேலை தேடியலைந்த காலத்தில் சோறு போட்ட நண்பன், திருமணப் பத்திரிக்கை அனுப்பிவிட்டு வரவை எதிர்நோக்காத காதலி, பத்து மணி நேர ரயில் பயணத்தில் பல வருட சொந்தம்போல் பழகிவிட்ட குடும்பம், தினமும் ஒரே சிக்னலில் கண்களில் பசியோடு நம்மைக் கடந்து போகிற சிறுமி... இப்படி எத்தனையோ பேரைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இது மாதிரி தன் வாழ்க்கையில் கடந்து வந்த அத்தனை பேரையும் அந்த மனிதர்கள் தந்த மறக்கமுடியாத அனுபவங்களையும் ஒட்டு மொத்தமாக நினைத்துப் பார்த்து உருப்போடுகிற, பொருள் தேடும் பொருட்டு சிற்றூர்களிலிருந்து பெருநகரங்களுக்கு குடிபெயர்ந்த, நம்மோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளக்கூடிய, ஒரு சராசரி முதல் தலைமுறை மத்தியவர்க்க இளைஞனின் ’நாஸ்டால்ஜியா’ நிறைந்த பதிவு தான் இந்த ‘வட்டியும் முதலும்’.

ஆறேழு வரிகளில் பத்து விதமான மனிதர்களையும் அவர்கள் வாழும் சூழலையும் தட தடவென ஸ்டாப் ப்ளாக்கில் வாசிப்பவர்களுக்குக் காட்டிவிடக் கூடிய வசீகர எழுத்துக்குச் சொந்தக்காரர் ராஜுமுருகன். தஞ்சை மண்ணுக்கே உரித்தான கிண்டலுக்கும் கேலிக்கும் கொஞ்சமும் குறைவல்ல. 500 பக்கங்களானாலும் அலுக்காமல் விறுவிறுப்பாகப் படித்து முடிக்க அதுவே காரணம்.ராஜுமுருகனின் எழுத்து பேசாதவைகளையெல்லாம் ஹாசிஃப்கானின் சித்திரங்கள் பேசிவிடுகின்றன. அவ்வளவு உயிரோட்டமான பொருத்தமான ஓவியங்கள். 

மொத்தமாய்ப் படித்து முடித்த பின்னர்… சொல்லாமல் விட்ட நன்றிகளையும், கேட்காமல் விட்ட மன்னிப்பையும், மறந்து போகவே முடியாத முகங்களையும், சிலிர்த்துப்போன தருணங்களையும், இழந்துவிட்ட உறவுகளையும், வெளிப்படுத்தாத காதலையும், தொடர்பு விட்டுப்போன நட்புகளையும், நெகிழ்ந்துபோன நிகழ்வுகளையும், இன்னும் வார்த்தைகளில் அடைக்கமுடியாத எத்தனையோ உணர்வுகளையும் அப்படியே நம் கண்முன்னே கொண்டுவந்து போட்டு நினைவுகளில் மூழ்கடித்துவிட்டுப் போவதே…  ராஜுமுருகனின் எழுத்துக்குக் கிட்டிய ஆகச்சிறந்த அங்கீகாரமாய் / வெற்றியாய்க் கருதுகின்றேன்.   
ராஜுமுருகன்
’வட்டியும் முதலும்’-இல் இருந்து என்னைக் கவர்ந்த வரிகள்....

”அறியாமையைவிடவும் பெரிய சந்தோஷம் எதுவும் இல்லை. இந்த வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவிக்க, அறிவுதானே பெரிய தடையாக இருக்கிறது? கொஞ்சம் யோசித்துப்பார்த்தால், ஜோதி மாதிரி நிம்மதியான வாழ்க்கையை வாழவிடாமல் என்னைத் துரத்தி அடிப்பது இந்த அறிவு முகமூடிதான் எனத் தோன்றுகிறது. எதையேனும் அடையத் துடிக்கிற மனம்தான் இந்த வாழ்வின் சாபம் என நினைக்கிறேன்”

”நிஜமாகவே நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கத்து சாமான்யர்கள் ஹீரோவாகிற தருணங்கள் மிக மிகச் சொற்பம்தான். அதுவும் அதிக நேரம் நீடிப்பது இல்லை. 'நான் கமல்ஹாசன்... நான் கமல்ஹாசன்...’ என நாம் கத்திக்கொண்டு திரிந்தாலும், சமூகம் நம்மைச் 'சப்பாணி... சப்பாணி...’ என்றுதான் பேசுகிறது. வில்லனாக டெரர் முகம் காட்டும்போது, 'ஏய்! மயில்சாமிக்குக் கோவத்தப் பாரு...’ எனக் கைகொட்டிச் சிரிக்கிறது. இந்தச் சமூகத்தில் காமெடியனாக இருக்கும்போதுகூட, நம்மால் கவுண்டமணியாக இருக்க முடிவது இல்லை... செந்திலாகத்தான் இருக்க முடிகிறது”

“பகிர முடியாத விருப்பங்களை, தாளாத உணர்வுகளை, அழுத்தும் சுமைகளைச் சொல்லிவிட சொற்கள் மட்டுமே போதுமா? அந்தச் சொற்களையும் ஏந்திக்கொள்ள இதயங்கள் வேண்டும் இல்லையா? "

“அற்பத்துக்கும் சொற்பத்துக்கும் அரசியல் என்ற பெயரை எதற்குப் பயன் படுத்துகிறோம்...?அவரவரது வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் பெயர்தான் பாலிடிக்ஸ் என்றாகிவிட்டது இந்த தேசத்தில்.”

“பசி… காலத்தையும் கோலத்தையும் அரித்துக்கொண்டு, அழுகைக்கும் சிரிப்புக்கும் நடுவே ஊர்ந்துகொண்டே இருக்கும் நிதர்சனக் கரையான்! பசி என்றால்… வெறும் வயிற்றுப் பசி மட்டும்தானா? இல்லை. பசி உருவாக்கும் புன்னகையும், துயரமும், நன்றியும், துரோகமும் காற்றைப்போல எங்கெங்கும் நிறைந்துகிடக்கின்றன!”

”பசியின் மொழி கண்ணீர் என்பதை உலகுக்கு அறிவித்தபடிதான் பிறக்கின்றன ஒவ்வோர் உயிரும். “உனது பசியை நான் உண்ர்ந்துகொள்கிறேன்” என்ற தாய்மையின் கருணையில்தான் தொடங்குகிறது ஒவ்வொருவருக்குமான உலகம். ஆனாலும், ஏன் பிறர் பசியை பலர் உணர மறுக்கிறோம்? பசி ஏற்படுத்தும் அவமானத்தையும் வலியையும்விட வலியது வேறு இல்லை. பசியைத் தீர்ப்பது ஒரே ஒரு கனிதான்… ஆனால், அதற்காக நாம் கடப்பது ஒரு வனம்!”

”யுகங்களின் காத்திருப்பை ஒரு நொடியின் தரிசனம் துடைத்தெறிவது மனித வாழ்வில் தான் நடக்கும்! காத்திருப்பின் வலியை சுகமாக்கும் உயிர்கள் தான் பிரபஞ்சத்தின் பெருங்கொடை இல்லையா..?”

”கனவு , லட்சியம் , வேட்கை எனத் துரத்தும் வாழ்வில் எங்கேதான் போய் நிற்கப்போகிறோம்?பாழாய்ப்போன மனசு எப்போதும் அடைவதற்கான ஆவேசங்களிலோ, விடுபடுவதற்கான விமோசனங்களிலோதான் இருக்கிறது.அன்புக்கு ஏங்குகிறது. வன்மம் இல்லாத உலகுக்குத் தவிக்கிறது. தளைகள் அற்ற சந்தோஷத்திற்கு காத்திருக்கிறது.. மாடிப்படியின் கீழ் இரவெல்லாம் கத்தும், குட்டிகள் ஈன்ற பூனையைப்போல எப்போதும் பரிசுத்தமான காதலுக்காக பரிதவிக்கிறது”

”ஏதோ நினைவு, பாடல், வருத்தம்.. நமது இரவுக்குள் நம்மை கேட்காமல் நுழைந்து விடுகிறது ! வீட்டுக்கு கொடுக்க முடியாத பணம், அடைய முடியாமல் தவிக்கவைக்கும் இலக்கு, அணையாமல் எரியும் ஓர் அவமானம், பிரிவின் வெக்கை, அன்பின் அவஸ்தை, ஈழம், கூடங்குளம், நெஞ்சறுக்கும் செய்திகள், செரிக்கமுடியாத மனிதர்கள்... ஏதாவது வந்துவிடுகிறது உறக்கத்தைக் கலைத்துப் போட…”

”பறவைகள் தடயங்களே இல்லாமல் போய்விடுகின்றன.. அவற்றின் எச்சங்கள் மரங்கள் ஆவதைப் போலதான் இந்த இசையும் பாடல்களும்.”

”இயலாமை ஒரு கரையிலும் அன்பு மறு கரையிலுமாக ஓடிக்கொண்டே இருக்கிறது காதல் நதி. பிரிவை விடவும் பெரிய பரிசு காதலில் இருக்கிறதா என்ன..??”

”பால்யம் என்ற திரும்பி வாராத பேராற்றின் கரையில் சந்திக்கும் போது,
நினைவுகளின் ருசியும் நிகழ்வுகளின் வலியும் கைகுலுக்கிக்கொள்கின்றன.
விளையாடுவதை நாம் நிறுத்தும் போது, நம்மை வைத்து இந்த உலகம் 
விளையாட ஆரம்பிக்கிறது.”

”வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பது மாதிரி, முகத்தால்... குரலால்... செயல்களால்... சாயல்களால்தான் நம் பிரியங்களையும் பிரிவுகளையும் நிரப்பிக்கொண்டே இருக்கிறோம்! யாராவது வந்து யாருடைய இடத்தையேனும் தங்கள் சாயல்களால் இட்டு நிரப்பிக் கொண்டே இருக்கிறார்கள்!”

_________________________________________________________________________________
வட்டியும் முதலும்
விகடன் பதிப்பகம்
விலை: 215
ஆன்லைனில் வாங்க: http://goo.gl/VU8Jes
வியாழன், 18 ஜூலை, 2013

சிங்கம் 2 - டிட் பிட்ஸ்


சிங்கம்-2 பாத்துட்டு வரேன் இப்போதான்.

1. கதையே இல்லாம ஒரு படம் பண்ண முடியும்னு ஹரி மறுபடியும் நிரூபிச்சுட்டாரு.

2. பாட்டே இல்லாம எடுத்திருக்கலாம் இந்த படத்த... முடியல... DSP சூர மொக்க. ஃபர்ஸ்ட் பார்ட்ல இருந்த பாட்டையே போட்டுருந்தாகூட ஒன்னும் கொறஞ்சுருக்காது. அதுக்குமேல ஃப்ரேமுக்கு ஃப்ரேம் கத்திக் கத்தியே நம்ம உசுர வாங்கிட்டானுக.

3. ஹைக்ளாஸ் போலீஸான அன்புச்செல்வன், இராகவனை விட நம்ம மக்களுக்கு அதிரடி போலீசான ஆறுச்சாமியையும், துரைசிங்கத்தையும் தான் ரொம்ப பிடிக்குது.Hence proved


4.கண்ண உருட்டி..கைய முறுக்கி... பாய்ஞ்சு பாய்ஞ்சு அடிச்சு...ஓடி ஓடி புடிச்சு... சூர்யா குடுத்த காசுக்கு அதிகமாவே முரட்டு சிங்கமா மாறி டெரர் காட்டி பட்டைய கெளப்புறாரு. என்ன ஒன்னு... திடீர்னு கோட் சூட் மாட்டிட்டு வரும்போது.. “வெல்கம் பேக் டு நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி”ன்னோ அல்லது “என்கிட்ட பேசனும்னா ஏர்செல் வாங்குக”ன்னோ சொல்லிடுவாரோன்னு பயத்தோடயே பாத்துட்டு இருந்தேன். டிவில பாத்து அவ்ளோ அலுத்துப் போச்சு அவர் மூஞ்சு.

5.Out of form விவேக் + அல்ரெடி போரிங் சந்தானம் = வேலைக்காகல

6.முதல் பாதி மச மசன்னு போனாலும்... துரைசிங்கம் டி.எஸ்.பி யா போஸ்டிங் எடுத்ததுக்கப்புறம் சும்மா பர பர தான். லாஜிக் எதைப்பத்தியும் யோசிக்கவே விடல...யொசிச்சு முடிக்குறதுக்குள்ள படம் முடிஞ்சு போயிடுது.

7.அஞ்சலி ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக்கும் அனுஷ்கா ரசிகர்களுக்கு ஆனந்தக்கண்ணீரும் வரலாம் :) ;) :P

8. என்னதான் நமக்கு திருப்தி இல்லன்னாலும்....கொஞ்சம் நொள்ளை சொன்னாலும்... படம் ஷ்யூர் ஹிட்டு :)

***கடைசியா...ஒன்னு.. பல மொழி படங்கள்ல கண்டபடி சுட்டு கதை உருவாக்கி படம் பன்ற அப்பாடக்கர் டைரக்டர்களவிட... கதையே இல்லாம பாட்டு...ஃபைட்டு....சேஸிங்...செண்டிமெண்ட்னு டெம்ப்ளேட்ல வெறும் பொழுதுபோக்குக்கு மட்டும் படம் எடுக்குற ஹரி மாதிரியான இயக்குனர்கள் Least dangerous and Harmless
Photos Courtesy: Original Uploaders

ஞாயிறு, 19 மே, 2013

அமெரிக்கன் ஃபுட்பால் - ஹாலிவுட் 'Sports' படங்கள் - ஒரு பார்வை
நம்மூரில் ஸ்போர்ட்ஸை அடிப்படையாக வைத்து வெளிவந்த திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பெரிய பட்ஜெட் மசாலா படங்களில் ஊறுகாயாக (உ.ம் கில்லி – கபடி, M.குமரன் – கிக் பாக்ஸிங்) அவ்வப்போது ஏதாவதொரு விளையாட்டை பயன்படுத்தியதைத் தவிர, முழுமையாக ஒரு விளையாட்டை முன்வைத்து அதில் வெற்றியும் பெற்ற படங்கள் என எடுத்துக்கொண்டால் சென்னை 28 (கிரிக்கெட்), வெண்ணிலா கபடி குழு (கபடி) உள்ளிட்ட படங்களைச் சொல்லலாம்.

 ஆனால் ஹாலிவுட்டைப் பொறுத்தவரையில் இந்த ‘Sports’ வகையைச் சார்ந்த படங்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். பேஸ்பால் (Baseball), அமெரிக்கன் ஃபுட் பால் (American Football), கூடைப்பந்து (Basketball), குத்துச்சண்டை (Boxing) என ஒரு விளையாட்டையும் விட்டு வைக்கவில்லை. அதிலும் Sports-Drama, Sports-Bio-pic, Sports-Comedy, Sports-Family என sub-genreகள் நிறைய உண்டு.

இந்த வகை ஸ்போர்ட்ஸ் படங்களின் கதைகளுக்கென ஒரு பொதுவான டெம்ப்ளேட் இருக்கும். ஏதாவதொரு அணி தங்களுடைய வீரர்களிடையே ஒற்றுமை இல்லாததனாலோ அல்லது வேறு காரணங்களாலோ சரியாக விளையாடாமல் தோல்விமேல் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கும். அணியில் ஒரே ஒரு வீரர் மட்டும் திறமையிருந்தும் பெரிதாய் சோபிக்க முடியாதவராய் இருப்பார். எங்கிருந்தோ ஒரு புதிய பயிற்சியாளர் வருவார். அவருடைய ஊக்கத்தினாலும் உந்துதலினாலும் முன்னேறும் அணி க்ளைமாக்ஸில் ஏதாவதொரு மிகப்பெரிய அணியைத் தோற்கடிக்கும்.சுபம் படம் இனிதே நிறைவுற்றது…!!

சில படங்கள் கொஞ்சம் அப்படி இப்படி மாறினாலும் இந்த வரையறைக்குள் கொஞ்சமாவது அடங்கும்.குழு விளையாட்டை பற்றிய படங்களுக்கு இந்த விதிகள் கட்டாயம் பொருந்தும்.அதுவே தனி ஒரு விளையாட்டு வீரனைப் பற்றிய கதையாக இருந்தால் இந்த டெம்ப்ளேட் கொஞ்சம் மாறும். அந்த குறிப்பிட்ட வீரருடைய வீழ்ச்சியும் எழுச்சியும் (Fall and Rise) சுற்றியே இருக்கும். அவனுடைய குடும்பப் பின்னணியும், குண நலன்களைப் பற்றியும், திறமைகளைப் பற்றியும் கொஞ்சம் டீட்டெய்லிங் இருக்கும்.மற்றபடி இறுதியில் ‘அவருடைய கடுமையான முயற்சியால்/பயிற்சியால் வென்றார்’ வகை கதையாகத்தான் முடியும்.

சரி மேட்டருக்கு வருவோம்… அமெரிக்காவின் தேசிய விளையாட்டு பேஸ்பால்-ஆக இருந்தாலும் இந்த ஃபுட்பால்னா ( நமக்குத் தெரிஞ்ச Football இல்ல. கோழி முட்டை மாதிரி ஒரு பந்தை வெச்சு கிட்டத்தட்ட ரக்பி மாதிரி விளையாடப்படும் (American Football) உயிரையே விட்டுடுவாங்க போல. இந்த விளையாட்டைப் பத்தி எனக்குத் தெரிஞ்சவரைக்கும் சுருக்கமா சொல்ல முயற்சி பன்றேன்.அணிக்கு 11 பேர். எல்லா அணியிலுமே வீரர்கள் Defence – Offense என இரண்டு குழுக்களா இருப்பாங்க. இந்த ஃபுட்பால் கிரவுண்டின் மொத்த நீளம் 120 கெஜம் (yard) கிட்டத்தட்ட 110 மீட்டர். இரண்டு பக்கங்களும் கோல் போஸ்ட்கள் உண்டு.ஆட்டம் வழக்கம் போல ஆடுகளத்தின் மையத்திலிருந்து தான் தொடங்கும். இந்த செண்டர் கோட்டுக்கு ‘Line of Scrimmage’னு பேரு.என்னதான் footballனு சொல்லிக்கிட்டாலும் பெரும்பாலும் பந்தை கையால மத்தவங்ககிட்ட பாஸ் பண்ணியோ, தூக்கி எறிஞ்சோ அல்லது பந்தை தூக்கிட்டு ஒடியோ தான் விளையாடவேண்டியிருக்கு.

நம்முடைய டீமின் Offense க்ரூப் களத்துல இருக்குன்னா அவங்களுடைய குறிக்கோள் எதிரணியின் Defense-இடம் இருந்து எப்படியாவது தப்பிச்சு பந்தை அப்படி இப்படி பாஸ் பண்ணி பந்தை மீட்டு 40மீட்டர் ஓடி இடையில எதிரணி டிஃபன்ஸ் கிட்டயிருந்தும் தப்பிச்சு கோல் போஸ்ட் இருக்குற கடைசி பத்து மீட்டர் (End Zone)-க்கு பந்தை வெற்றிகரமா கொண்டு வந்துட்டா…!! அது ‘Touchdown’ .உங்க அணிக்கு ஏழு பாயிண்ட்கள்.. (உஸ்ஸ்ஸ்ஸப்பா சொல்லி முடிக்கவே மூச்சு வாங்குது.)

Wait…! பந்தை தூக்கிட்டு பூந்து பூந்து ஓடனும். எதிரணி ப்ளேயர்ஸ் வந்தா சிக்காம தப்பிக்கனும். இதுல என்ன பிரச்சனைன்னு நீங்க கேக்கலாம். பிரச்சனையே அதான்.இது ஒரு ‘Contact Sport’.அதாவது நீங்க எப்படி வேணாலும் முட்டி மோதிக்கலாம்.ரொம்ப ரொம்ப மோசமா அடிபட வாய்ப்பிருக்கு. அதனாலதான் Shoulder pad, Thigh Pad, Helmetனு ஏகப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்.எதிரணி Defense டீம்ல இருக்குற ஒவ்வொருத்தரும் சும்மா பீமசேனன் மாதிரி ஆறடி உயரத்துக்கு மேல 150 கிலோ எடைல இருப்பாங்க (Line backers) .அவங்க வேலையே பந்தை தூக்கிட்டு ஒடுற ப்ளேயர தடுக்குறது (Tackle) தான். பந்தை தூக்கிட்டு ஒடுறவர (Running Back) தடுத்து/மோதி பந்தை அவர் தவறவிட்டாத்தான் (Fumble) எதிரணிக்கு அடுத்ததா வாய்ப்பு கிடைக்கும்.இதுல யார்கிட்ட எப்போ பந்தை பாஸ் பண்ணனும்…எதிரணி Defense கிட்டேயிருந்து எப்படி எஸ்கேப்பாகனும்னு எல்லா வியூகங்களையும் வகுக்குறவர் ‘Quarter Back’ (QB). யெஸ்ஸு.. யூ ஆர் ரைட்டு… இந்த QBதான் பெரும்பாலும் அணித்தலைவரா இருப்பாரு.

இங்க கிரிக்கெட்டுக்கு IPL மாதிரி (அந்தளவு லஞ்ச ஊழல்லாம் இல்லீங்கோ.அவிங்கள்லாம் ரொம்ப ரோஷக்காரங்க) அமெரிக்கன் ஃபுட்பாலுக்கு NFL (National Football League) ரொம்ப பிரபலம். அமெரிக்கா முழுவதுமிருந்து 32 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் மோதிக்கொள்கிற Superbowl (உலகக்கோப்பை மாதிரி – ஆனா அது இல்லை) உலகம் முழுக்க கிட்டத்தட்ட 10 கோடி ரசிகர்களால் பார்க்கப்படுது. அவங்கவங்க State டீமுக்காக அப்புடியே உசுரையே விடுறாங்கைய்யா இந்த மக்கள். ஃபுட்பாலை பொறுத்தவரையில் அமெரிக்கர்களுக்கு அது ஒரு ‘National Pride’.

ஹப்பா…!! ஓரளவு கவர் பண்ணிடேன்னு நெனைக்குறேன்…!! :) :) இனிமே இந்த அமெரிக்கன் ஃபுட்பாலை அடிப்படையா வெச்சு வெளிவந்த.. நான் பார்த்த அரை டஜன்+ படங்களைப் பற்றி விரிவா... கொஞ்சம் கொஞ்சமா எழுதுறேன்..!! படங்களின் பட்டியல் கீழே…!

1.   Remember the Titans (2000)
2.   Invincible (2006)
3.   Any Given Sunday (1999)
4.   Friday Night Lights (2004)
5.   The Waterboy (1998)
6.   The Longest Yard (2005)
7.   The Blind Side (2009)
8.   Gridiron Gang (2006)
9.   Varsity Blues (1999)
10. We are marshal (3006)

ஆரம்பத்துல இந்த விளையாட்டு ஒரு மண்ணும் புரியலைன்னாலும் நிறைய படங்கள் பார்த்து அப்புறம் அந்த படங்களை இன்னும் ரசிக்க இந்த விளையாட்டைப் பற்றியும் படிச்சு… இப்போ எனக்கு இந்த ‘American Football’ புடிச்ச கேம் ஆயிடுச்சு. :) :)

கடைசியா ஒரு ஃபினிஷிங் டச் : சிறந்த பத்து டச்டவுன்கள் - வீடியோ
Photos Courtesy: Original Uploaders

டிஸ்க்ளைமர்: இந்த கேம் பத்தி நல்லா தெரிஞ்ச அமெரிக்கவாழ் நண்பர்கள் யாரவது இதை படிக்க நேர்ந்தால் எப்படி எழுதிருக்கேன்னு தயவுசெய்து சொல்லிட்டு போங்க. :) :)

வியாழன், 16 மே, 2013

’ஒன்று’ - ரா.கண்ணன், ராஜுமுருகன் - விகடன்கொஞ்சம் விறுவிறுப்பும் கொஞ்சம் காதலுமாய் அவ்வப்போது சிரிக்கவும் வைக்கின்ற வகையிலான சிறுகதைகள் எப்போதுமே என்னைக் கவரத் தவறியதேயில்லை. முதன் முதலில் சிறுவர்மலரில் தான் தொடங்கியது என் வாசிப்பு. பின் குமுதத்தில் தொடர்கதை (’பிளஸ் ஒன்’ தொடர்கதை– பிரியா கல்யாணராமனின் எழுத்துக்கு அடிமை நான்.) படித்து அப்படியே விகடுனுக்கு மாறி ‘சுஜாதா’வை அடையாளங்கண்டு நூலகம் சென்று தனி புத்தகங்கள் அதிகம் வாசிக்கத்தொடங்கிய நேரமது. எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் அப்போது.

இன்று வணிக எழுத்து என்று ‘இலக்கிய’வாதிகளால் பெரும்பாலும் ஒதுக்கப்படுகின்ற அங்கீகரிக்கப் படாத ராஜேஷ்குமார், ஆர்னிகா நாசர், ப்ரியா கல்யாணராமன் (’சுஜாதா’வையும் இப்பட்டியலில் சேர்ப்போரும் உண்டு) உள்ளிட்ட எழுத்தாளர்களின் படைப்புகளே பெரும்பாலானோருக்கு வாசிக்கும் பழக்கத்தைத் தொடங்கி வைத்திருக்கும் அல்லது ஆர்வமேற்படுத்தியிருக்கும். இதற்கு நானும் விதிவிலக்கல்ல. என் அம்மா எனக்கு மு.வ அவர்களையும் தி.ஜா வையும் அறிமுகப்படுத்தினாலும் நானென்னவோ குமுதத்தையும் விகடனையும் தான் அதிகம் விரும்பினேன்.

 நிற்க. எதற்காக இவ்ளோ பெரிய பில்டப் என்று கேட்கலாம். விஷயத்துக்கு வருகின்றேன். ’லைட் ரீடிங்’ (light reading) என்று விளிக்கப்படுகின்ற ‘மென் வாசிப்பு’க்கு நான் எப்போதுமே பெரிய ரசிகன். வார இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளையும், தொடர்கதைகளையும் பெரும்பாலும் அவை தருகின்ற சின்ன சின்ன சஸ்பென்ஸுக்காகவும், திடீர் திருப்பங்களுக்காகவும்,கொஞ்சம் இளமைக்காகவும்,பொங்கும் காதலுக்காகவும் நிறையவே ரசித்திருக்கின்றேன்.அந்த வகையில் சமீபத்தில் அண்ணன் யுவகிருஷ்ணா அவர்கள் பேஸ்புக்கில் பரிந்துரைத்ததன் பேரில் விகடனில் தொடராக வெளிவந்த ‘ஒன்று’ கதைத் தொகுப்பை வாங்கியிருந்தேன். தொடராக வந்தபோதே பட்டையை கிளப்பியது ஆதலால் ஒரு மினிமம் கேரண்டி நம்பிக்கை இருந்தது.
 அப்போது எழுத்தாளரின் அடையாளத்தை வெளியிடாமல் ‘இருவன்’ என்று பெயர் மட்டும் வந்தது. யார்ரா அந்த ‘இருவன்’ இப்படி எழுதுகிறாரென்று நினைப்பேன். புத்தகமாய் வெளிவரும்போது தான் தெரிந்தது ‘வட்டியும் முதலும்’ ராஜுமுருகனும், ரா.கண்ணன் அவர்களும் தான் அந்த ’இருவன்’ என்று. மிகவும் மோசமான மனநிலையில் வாசிக்கத் தொடங்கிய நான் கொஞ்சம் கொஞ்சமாய் ரசிக்கத் தொடங்கி அப்படியே மூழ்கிப்போனேன். எனக்குள்ளே நிறைய சிரித்துக் கொண்டேன். என் முன்னே நின்ற பிரச்சனைகள் மறந்து போயின. கொஞ்சம் காதலும் கவிதையுமாய் கனநேர கிறுக்கொன்று பிடித்தது. ஒவ்வொரு கதையாய் படித்து முடித்தவுடன் ”அடச்சே..அதுக்குள்ள முடிச்சுப்புட்டானுவளே’ என்று வருந்தவும் செய்தேன்.

எழுத்துநடையில் துள்ளலும் எள்ளலுமாய் தட தடவென பக்கத்து வீட்டு அழகு தேவதைகளினூடாகவும்… காதலில் சொதப்பிய காதல் மன்னர்களினூடாகவும்… அழைத்துச் செல்லும் ஒரு வேகமான ரயில் பயண அனுபவம். அவ்வப்போது நெகிழவும் முகிழவும் சிரிக்கவும் வைக்கத் தவறவில்லை இந்தக் கதைகளின் எழுத்தாளர்களான இருவர்(ன்).

சில நேரங்களில் நாம் வாசிக்க விரும்பும் புத்தகமோ பார்க்க விரும்பும் திரைப்படமோ அது முழுமையான கலைப் படைப்பாய் இருக்க வேண்டிய அவசியமில்லை. நமக்குக் கற்றுக் கொடுக்கிற ஆசானாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஜஸ்ட் நம்முடைய அந்த நேரத்து பிரச்சனைகளிலிருந்தும் கவலைகளிலிருந்தும் கொஞ்சம் விடுபட வைத்தாலே போதுமானது. ‘ஒன்று’ புத்தகம் அந்த வகை.

கதைகளிலிருந்து நான் ரசித்த வரிகள் சில…!!

’தேடித் தேடி வார்த்தைகளும் அர்த்தங்களும் தீர்ந்துவிட்ட பிறகு, கிடைக்கிற மெளனம் எவ்வளவு அழகானது. மெளனத்திலும் தேடினால், ஆழத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் பிய்த்தெறிய முடியாத மச்சம்போல் ஒட்டிக்கிறது பிரியம். ஆமாம்..இதை எல்லாம் பிரியம் என்றே அழைத்தாலென்ன? ஆகவே பிரபஞ்சம் பிரியத்தால் நிரம்பட்டும்.’

‘காதல்… வயசையும் மனதையும் போட்டு விழுங்கும் புதிர் பூதம். ஆதி நெருப்பின் கதகதப்பு. உலகின் முதல் உன்மத்தம். பாதாதிகேசம். கேசாதிப் பாதம். இது கெமிஸ்ட்ரியின் ஹிஸ்டரி.’

’நிச்சயம் கேரளக் குட்டி. அந்தக் கணத்தில் அவளை ஈன்றெடுத்த மலையாளிகளின் கால்களில் விழுந்து கரகரவென அழ சித்தமாக இருந்தேன்’

‘லாலி என் அருகே இருக்க, ஒரே நேரத்தில் என்னைக் காளான் குடையாகவும் குறிஞ்சி மலராகவும் உணர்ந்தேன். அந்த இரவில் அவள் மழையாகவும், நான் ஈசலாகவும் பிறந்து வந்ததாய் தவித்தேன்’

‘ஏ.டி.எம் ஸ்லிப் பின்னால்கூட ஹைக்கூ எழுதும் மனசுக்காரன் நான். சாலையில் சைரன் கேட்டாலே அதில் பயணிக்கும் நோயாளிக்காக ஆண்டவனைப் பிரார்த்திக்கும் ஒருத்தி எனக்குக் கிடைத்திருக்க வேண்டும். கிடைக்கவில்லை’

’அது அந்தாக்‌ஷரி’ அல்ல தோழர்...என் வாழ்வின் வழிப்பாதை. விரல் பிடித்து விழியாக வாழ்ந்து காட்டக் கிடைக்கவிருக்கும் ஒரு வரம். யார் யாரோ கஷ்டப்பட்டு இத்தனை காலம் திரை இசையை எங்களுக்காகவே படைத்ததாய் தோன்றிய கனம் அது தோழர்’

‘காதலி சென்றுவிட்ட பிறகு காதல் பகிர்ந்த இடங்களைப் பார்ப்பது துயரம். நினைவுகள் மீளவும் வழியற்ற பாதையில் நிறைந்துகிடக்கின்றன பிரியங்கள்.’

’நதியைப்போலக் கடந்துவிட்டது காலம். காதலும் பிரியமும் கடல்போல் நிற்கிறது. போய்ப் பார்ப்பதும் கால் நனைப்பதும் அவரவர் விருப்பம். அவரவர் துயரம்.’

’ஒவ்வொரு நினைவும் ஜனனம். ஒவ்வொரு பிரிவும் மரணம். காதல் விதைத்த பார்வையின் முதல் நொடியையும், பிரிவைக் கொடுத்த வார்த்தையின் கடைசிப் புள்ளியையும் யார் அறிவார்.’

மீதியை புத்தகத்தில் படித்துக் கொள்ளுங்கள்:
புத்தகம்: ‘ஒன்று’
எழுதியவர்கள்: ரா.கண்ணன், ராஜு முருகன்
விகடம் பிரசுரம்
விலை:ரூ.85
ஆன்லைனில் வாங்க : http://books.vikatan.com/index.php?bid=2061


திங்கள், 15 ஏப்ரல், 2013

பல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணிஇப்போது இப்படி இருக்கும் ஒரு விஷயம் ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்பு எப்படி இருக்கும் ?? இந்த கேள்வி பொதுவா எல்லோருடைய மனங்களிலும் எல்லா விஷயங்களைப் பற்றியும் இருக்கும். சிலருக்கு பழசைப் பேசுவது பிடிக்காது. ஏனைய சிலருக்கு பழைய நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து அசைபோடுவதில் தனி ஆனந்தம்…! இந்த உணர்வை தான் ஆங்கிலத்தில் ’நாஸ்டால்ஜியா’ (Nostalgia) என்கிறோம். இணையான தமிழ் வார்த்தை எதுவும் தட்டுப்படவில்லை.

இந்த ‘நாஸ்டல்ஜியா’வுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு.தங்கள் வாழ்க்கையின் மகிழ்வான தருணங்களையும், இளமைக் காலத்தில் வசித்த இடங்களையும் நினைத்துப் பார்த்து அசை போடுவது யாருக்குத் தான் பிடிக்காது. இந்த புத்தகமும் கிட்டத்தட்ட தில்லியில் ஐம்பது வருடங்களைக் கழித்த ஒரு தமிழரின் மறக்கவியலா அனுபவங்களும், கடந்து வந்து சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மனிதர்களும், பயணங்களும் நிறைந்த ஒரு நாஸ்டால்ஜிக் புத்தகம் தான்.

ஏற்கனவே சுகா அவர்களின் ’மூங்கில் மூச்சு’ மற்றும் ’தாயார் சன்னதி’ ஆகிய புத்தகங்களை அவை தந்த உணர்வுகளுக்காகவே மிகுந்து ரசித்தவன் நான். சுகா அவர்கள் தனது தளத்தில் இந்த புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்த பின்பே புத்தகத் திருவிழாவில் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’-ஐ வாங்கலானேன். எழுதியவர் திரு.பாரதி மணி அவர்கள். பாரதி திரைப்படத்தில் பாரதியாரின் தந்தையாக நடித்ததே S.K.S.மணி-ஆக இருந்தவர் ‘பாரதி’ மணி ஆகக் காரணம். பாபா உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவரை பார்த்தது நினைவிருக்கலாம் உங்களுக்கு.
உயிர்மையில் பல்வேறு காலங்களில் வெளியான கட்டுரைகள் மற்றும் ‘பாரதிமணி அவர்களைப் பற்றி அவருடைய நண்பர்களின் எண்ணங்கள் ஆகியவற்றின் தொகுப்பாக அமைந்துள்ளது இந்த புத்தகம்.

இன்று உலகறியப்பட்ட எழுத்தாளர் ஒருவரோடு பாரதி மணி அவர்கள் சக நடிகராக நடித்த இன்டோ-ஆங்கிலத் திரைப்படம் ‘தி எலக்ட்ரிக் மூன்பற்றியது முதல் கட்டுரை.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த ஆங்கிலப் படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது இந்தத் திரைப்படம். அந்த எழுத்தாளர் – அருந்ததி ராய் அவர்கள்…!! நாற்பத்தைந்தே நாட்களில் அட்டகாசமான திட்டமிடலோடு தயாரான இந்த திரைப்படத்தின் உருவாக்கம் நிச்சயமாக வியப்பூட்டுகின்றது

பாரதி மணி அவர்கள் பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு சென்று வந்திருப்பதால் பல பயணங்களில் எதிர்பாராதவிதமாக பல பெரும்புள்ளிகளை எதிர்கொண்டிருக்கிறார். உதாரணம்: அன்னை தெரசா அம்மையார், முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி அவர்கள்...! இப்படி ஆச்சரியப்படுத்துகின்றது இந்தப் பட்டியல்.

நாடகங்களைப் பொருத்தவரை S.V.சேகர், க்ரேஸி மோகன், Y.G.மகேந்திரன் ஆகியோர் வாயிலாக மட்டுமே மேடை நாடகம் என்ற விஷயத்தைக் கேள்விப்படும் இந்த தலைமுறையைச் சேர்ந்த நமக்கு டில்லி வாழ் தமிழர்கள் மேடை நாடகங்களுக்குத் தந்த முக்கியத்துவமும் அங்கீகாரமும் பற்றி பாரதி மணி அவர்கள் குறிப்பிடும்போது வியப்பேற்படுவதை தவிர்க்க முடியவில்லை. நாடகங்களின்பால் அவர் கொண்ட ஈடுபாடும் ,அதன் பொருட்டு ஆற்றிய பங்களிப்பும் அளப்பரியவை.

காருக்குறிச்சியாரையும், திருவாவடுதுறை பிள்ளைவாள் அவர்களின் நாதஸ்வர வாசிப்பை சிலாகிப்பதாகட்டும்... செம்மீன் படத்துக்கு எப்படியாவது தேசிய விருது கிடைத்துவிடவேண்டுமென பிரயத்தனப்பட்டதாகட்டும்....வங்கத்தந்தை முஜிபுர் ரஹ்மான் அவர்களின் மகள், கனவரோடு ரகசியமாய் இந்தியாவில் தங்கியிருந்தபோது அவர்களுக்காக ஹீல்ஸா மீன் கொண்டு சென்றதாகட்டும்....!! அத்தனை நிகழ்வுகளையும் அவர் விவரித்திருக்கும் நடை அலாதியானது. அத்தனை ஆச்சரியங்கள்...சுவாரஸ்யங்கள். எழுத்தாளார் சுஜாதா, நடிகர் பூர்ணம் விஸ்வநாதன்,இசை விமர்சகர் சுப்புடு,எதேச்சையாக கூட அமர்ந்து தேனீர் அருந்தும் ஆங்சாங் சூகி (!!), நாடக விழாவுக்கு தலைமை தாங்கிய பிரதமர் நேரு அவர்கள்... எத்தனை மனிதர்கள்... எத்தனை விவரணைகள். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது ‘நிகாம்போத் சுடுகாடு’ கட்டுரை. மரணமும் மரண நிமித்தமுமாய் உதிர்த்திருக்கின்ற வார்த்தைகளைத்தும் அத்தனை நிதர்சனமானவை...உணர்வுப்பூர்வமானவை.

பல நேரங்களில் பல மனிதர்கள்
ஆசிரியர்:பாரதி மணி
பதிப்பகம்: உயிர்மை
விலை: ரூ.100

உயிர்மை தளத்தில் படிக்கக் கிடைக்கும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் சிலவற்றின் சுட்டிகள் கீழே:

வெள்ளி, 29 மார்ச், 2013

இந்த 'கலாச்சாரம்'னா என்னங்க…??பண்பாடு என்பது பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல். ஆங்கிலத்தில் culture (கல்ச்சர்) என்னும் சொல்லுக்கு இணையான பொருளில் இச்சொல் தமிழில் பயன்படுத்தப்படுகிறது. கலாச்சாரம் என்ற சொல்லும் பண்பாட்டுக்கு ஒத்தசொல்லாக பயன்படுகின்றது. இது பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும்; அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது”.

"பண்பாடு ஒரு பலக்கிய கருப்பொருள். அதற்கு பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள்அறிவு பரம்பல்கள்வாழ்வியல் வழிமுறைகள்சமூக கட்டமைப்புஎன்பனவற்றை சுட்டி நிற்கின்றதுமொழிஉணவுஇசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்." இப்படிச் சொல்கிறது விக்கி.

சாதாரணமான வார்த்தைகளில் சொல்லனும்னா ஒரு நாடுன்னு எடுத்துகிட்டா அங்க இருக்கிற மக்களுடைய உணவுப்பழக்கம், உடைகள், இனம், பேசும் மொழி, பழங்கால இலக்கியங்கள்,  வாழ்வியல், இசை, நாகரிகம், ரசனை, தொன்றுதொட்டு கடைபிடிக்கப்படும் வழக்கங்கள், விளையட்டு உள்ளிட்ட பொழுதுபோக்குகள் ஆகியவையே அடிப்படைக் காரணிகள் (Basic Factors). இவை அனைத்தின் அடிப்படையிலேயே இந்த கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவை வரையறுக்கப்படுகின்றன.

உலக அளவில் பல நாட்டு மக்களிடையே பலவகை கலாச்சாரங்கள் பழக்கத்தில் இருந்தாலும் இந்திய நாட்டைப் பொறுத்தவரை இந்த கலாச்சாரத்திற்கான அடிப்படைக் காரணிகளாக நாம் குறிப்பிட்டவை அனைத்துமே மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டவையாகத் திகழ்கின்றன. இன்னும் அணுக்கமாகப் பார்த்தால் நம் தமிழ்நாட்டில் ஓவ்வொரு மாவட்டத்துக்கும் இந்த கலாச்சாரத்திற்கான அடிப்படைக் காரணிகள் வேறுபடும்.(உதாரணம் – பேச்சு வழக்கு, உணவு பழக்கம், இறை வழிபாடு, சடங்குகள்)

இந்த கலாச்சாரத்தின் முக்கியமான கூறாக நான் கருதுவது இதன் மாற்றம் அல்லது வளர்ச்சி. இந்த மாற்றமும் வளர்ச்சியும் காலத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன. இந்த காலத்தினால் ஏற்படும் மாற்றம் என்பது ‘கலாச்சாரம்மட்டுமல்லாது  சமூகத்தில் உள்ள ஏனைய விஷயங்களிலும் எதிரொலிக்கும். உதாரணமாக எண்பதுகளில் மக்களின் இசை ரசனை, பெல் பாட்டம் உடைகள், ஹிப்பி ஹேர்ஸ்டைல், அதன் பிறகு 90களில் ஏற்பட்ட மாற்றங்கள், இப்போது இந்த விஷயங்களில் நாம் அடைந்திருக்கும் வளர்ச்சி முன்னேற்றம் இவைகளே.


இந்த மாற்றங்களைப் பிரதிபலிக்கும் முக்கியமான இரண்டு விஷயங்களாக நான் கருதுவது புத்தகங்களும் ,திரைப்படங்களும் தான். அதனாலேயே வித்தியாசமான கலாச்சாரங்களையும், வெவ்வேறு காலகட்டங்களையும்,அந்தந்த காலகட்டத்தின் ரசனைகளையும், வாழ்வியலையும் பிரதிபலிக்கக்கூடிய புத்தகங்களையும் திரைப்படங்களையும் தேடித்தேடி பார்க்கத் தொடங்கியிருக்கின்றேன்…!!

என்னாலியன்றவரையிலும் எனக்குப் புரிந்தவரையிலும் அவைகளைப் பற்றி பகிர்ந்துகொள்ளவும் முயற்சி செய்கின்றேன்…!! உங்களுக்குப் பிடித்தமான,மேற்சொன்ன வரையரைக்குள் வருகின்ற திரைப்படங்களையும், புத்தகங்களையும் பற்றி பின்னூட்டங்களில் மறக்காமல்  பகிர்ந்து கொள்ளுங்கள்…!!
Images Courtesy: Original uploaders
Related Posts Plugin for WordPress, Blogger...