நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

ஞாயிறு, 19 மே, 2013

அமெரிக்கன் ஃபுட்பால் - ஹாலிவுட் 'Sports' படங்கள் - ஒரு பார்வை
நம்மூரில் ஸ்போர்ட்ஸை அடிப்படையாக வைத்து வெளிவந்த திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பெரிய பட்ஜெட் மசாலா படங்களில் ஊறுகாயாக (உ.ம் கில்லி – கபடி, M.குமரன் – கிக் பாக்ஸிங்) அவ்வப்போது ஏதாவதொரு விளையாட்டை பயன்படுத்தியதைத் தவிர, முழுமையாக ஒரு விளையாட்டை முன்வைத்து அதில் வெற்றியும் பெற்ற படங்கள் என எடுத்துக்கொண்டால் சென்னை 28 (கிரிக்கெட்), வெண்ணிலா கபடி குழு (கபடி) உள்ளிட்ட படங்களைச் சொல்லலாம்.

 ஆனால் ஹாலிவுட்டைப் பொறுத்தவரையில் இந்த ‘Sports’ வகையைச் சார்ந்த படங்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். பேஸ்பால் (Baseball), அமெரிக்கன் ஃபுட் பால் (American Football), கூடைப்பந்து (Basketball), குத்துச்சண்டை (Boxing) என ஒரு விளையாட்டையும் விட்டு வைக்கவில்லை. அதிலும் Sports-Drama, Sports-Bio-pic, Sports-Comedy, Sports-Family என sub-genreகள் நிறைய உண்டு.

இந்த வகை ஸ்போர்ட்ஸ் படங்களின் கதைகளுக்கென ஒரு பொதுவான டெம்ப்ளேட் இருக்கும். ஏதாவதொரு அணி தங்களுடைய வீரர்களிடையே ஒற்றுமை இல்லாததனாலோ அல்லது வேறு காரணங்களாலோ சரியாக விளையாடாமல் தோல்விமேல் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கும். அணியில் ஒரே ஒரு வீரர் மட்டும் திறமையிருந்தும் பெரிதாய் சோபிக்க முடியாதவராய் இருப்பார். எங்கிருந்தோ ஒரு புதிய பயிற்சியாளர் வருவார். அவருடைய ஊக்கத்தினாலும் உந்துதலினாலும் முன்னேறும் அணி க்ளைமாக்ஸில் ஏதாவதொரு மிகப்பெரிய அணியைத் தோற்கடிக்கும்.சுபம் படம் இனிதே நிறைவுற்றது…!!

சில படங்கள் கொஞ்சம் அப்படி இப்படி மாறினாலும் இந்த வரையறைக்குள் கொஞ்சமாவது அடங்கும்.குழு விளையாட்டை பற்றிய படங்களுக்கு இந்த விதிகள் கட்டாயம் பொருந்தும்.அதுவே தனி ஒரு விளையாட்டு வீரனைப் பற்றிய கதையாக இருந்தால் இந்த டெம்ப்ளேட் கொஞ்சம் மாறும். அந்த குறிப்பிட்ட வீரருடைய வீழ்ச்சியும் எழுச்சியும் (Fall and Rise) சுற்றியே இருக்கும். அவனுடைய குடும்பப் பின்னணியும், குண நலன்களைப் பற்றியும், திறமைகளைப் பற்றியும் கொஞ்சம் டீட்டெய்லிங் இருக்கும்.மற்றபடி இறுதியில் ‘அவருடைய கடுமையான முயற்சியால்/பயிற்சியால் வென்றார்’ வகை கதையாகத்தான் முடியும்.

சரி மேட்டருக்கு வருவோம்… அமெரிக்காவின் தேசிய விளையாட்டு பேஸ்பால்-ஆக இருந்தாலும் இந்த ஃபுட்பால்னா ( நமக்குத் தெரிஞ்ச Football இல்ல. கோழி முட்டை மாதிரி ஒரு பந்தை வெச்சு கிட்டத்தட்ட ரக்பி மாதிரி விளையாடப்படும் (American Football) உயிரையே விட்டுடுவாங்க போல. இந்த விளையாட்டைப் பத்தி எனக்குத் தெரிஞ்சவரைக்கும் சுருக்கமா சொல்ல முயற்சி பன்றேன்.அணிக்கு 11 பேர். எல்லா அணியிலுமே வீரர்கள் Defence – Offense என இரண்டு குழுக்களா இருப்பாங்க. இந்த ஃபுட்பால் கிரவுண்டின் மொத்த நீளம் 120 கெஜம் (yard) கிட்டத்தட்ட 110 மீட்டர். இரண்டு பக்கங்களும் கோல் போஸ்ட்கள் உண்டு.ஆட்டம் வழக்கம் போல ஆடுகளத்தின் மையத்திலிருந்து தான் தொடங்கும். இந்த செண்டர் கோட்டுக்கு ‘Line of Scrimmage’னு பேரு.என்னதான் footballனு சொல்லிக்கிட்டாலும் பெரும்பாலும் பந்தை கையால மத்தவங்ககிட்ட பாஸ் பண்ணியோ, தூக்கி எறிஞ்சோ அல்லது பந்தை தூக்கிட்டு ஒடியோ தான் விளையாடவேண்டியிருக்கு.

நம்முடைய டீமின் Offense க்ரூப் களத்துல இருக்குன்னா அவங்களுடைய குறிக்கோள் எதிரணியின் Defense-இடம் இருந்து எப்படியாவது தப்பிச்சு பந்தை அப்படி இப்படி பாஸ் பண்ணி பந்தை மீட்டு 40மீட்டர் ஓடி இடையில எதிரணி டிஃபன்ஸ் கிட்டயிருந்தும் தப்பிச்சு கோல் போஸ்ட் இருக்குற கடைசி பத்து மீட்டர் (End Zone)-க்கு பந்தை வெற்றிகரமா கொண்டு வந்துட்டா…!! அது ‘Touchdown’ .உங்க அணிக்கு ஏழு பாயிண்ட்கள்.. (உஸ்ஸ்ஸ்ஸப்பா சொல்லி முடிக்கவே மூச்சு வாங்குது.)

Wait…! பந்தை தூக்கிட்டு பூந்து பூந்து ஓடனும். எதிரணி ப்ளேயர்ஸ் வந்தா சிக்காம தப்பிக்கனும். இதுல என்ன பிரச்சனைன்னு நீங்க கேக்கலாம். பிரச்சனையே அதான்.இது ஒரு ‘Contact Sport’.அதாவது நீங்க எப்படி வேணாலும் முட்டி மோதிக்கலாம்.ரொம்ப ரொம்ப மோசமா அடிபட வாய்ப்பிருக்கு. அதனாலதான் Shoulder pad, Thigh Pad, Helmetனு ஏகப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்.எதிரணி Defense டீம்ல இருக்குற ஒவ்வொருத்தரும் சும்மா பீமசேனன் மாதிரி ஆறடி உயரத்துக்கு மேல 150 கிலோ எடைல இருப்பாங்க (Line backers) .அவங்க வேலையே பந்தை தூக்கிட்டு ஒடுற ப்ளேயர தடுக்குறது (Tackle) தான். பந்தை தூக்கிட்டு ஒடுறவர (Running Back) தடுத்து/மோதி பந்தை அவர் தவறவிட்டாத்தான் (Fumble) எதிரணிக்கு அடுத்ததா வாய்ப்பு கிடைக்கும்.இதுல யார்கிட்ட எப்போ பந்தை பாஸ் பண்ணனும்…எதிரணி Defense கிட்டேயிருந்து எப்படி எஸ்கேப்பாகனும்னு எல்லா வியூகங்களையும் வகுக்குறவர் ‘Quarter Back’ (QB). யெஸ்ஸு.. யூ ஆர் ரைட்டு… இந்த QBதான் பெரும்பாலும் அணித்தலைவரா இருப்பாரு.

இங்க கிரிக்கெட்டுக்கு IPL மாதிரி (அந்தளவு லஞ்ச ஊழல்லாம் இல்லீங்கோ.அவிங்கள்லாம் ரொம்ப ரோஷக்காரங்க) அமெரிக்கன் ஃபுட்பாலுக்கு NFL (National Football League) ரொம்ப பிரபலம். அமெரிக்கா முழுவதுமிருந்து 32 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் மோதிக்கொள்கிற Superbowl (உலகக்கோப்பை மாதிரி – ஆனா அது இல்லை) உலகம் முழுக்க கிட்டத்தட்ட 10 கோடி ரசிகர்களால் பார்க்கப்படுது. அவங்கவங்க State டீமுக்காக அப்புடியே உசுரையே விடுறாங்கைய்யா இந்த மக்கள். ஃபுட்பாலை பொறுத்தவரையில் அமெரிக்கர்களுக்கு அது ஒரு ‘National Pride’.

ஹப்பா…!! ஓரளவு கவர் பண்ணிடேன்னு நெனைக்குறேன்…!! :) :) இனிமே இந்த அமெரிக்கன் ஃபுட்பாலை அடிப்படையா வெச்சு வெளிவந்த.. நான் பார்த்த அரை டஜன்+ படங்களைப் பற்றி விரிவா... கொஞ்சம் கொஞ்சமா எழுதுறேன்..!! படங்களின் பட்டியல் கீழே…!

1.   Remember the Titans (2000)
2.   Invincible (2006)
3.   Any Given Sunday (1999)
4.   Friday Night Lights (2004)
5.   The Waterboy (1998)
6.   The Longest Yard (2005)
7.   The Blind Side (2009)
8.   Gridiron Gang (2006)
9.   Varsity Blues (1999)
10. We are marshal (3006)

ஆரம்பத்துல இந்த விளையாட்டு ஒரு மண்ணும் புரியலைன்னாலும் நிறைய படங்கள் பார்த்து அப்புறம் அந்த படங்களை இன்னும் ரசிக்க இந்த விளையாட்டைப் பற்றியும் படிச்சு… இப்போ எனக்கு இந்த ‘American Football’ புடிச்ச கேம் ஆயிடுச்சு. :) :)

கடைசியா ஒரு ஃபினிஷிங் டச் : சிறந்த பத்து டச்டவுன்கள் - வீடியோ
Photos Courtesy: Original Uploaders

டிஸ்க்ளைமர்: இந்த கேம் பத்தி நல்லா தெரிஞ்ச அமெரிக்கவாழ் நண்பர்கள் யாரவது இதை படிக்க நேர்ந்தால் எப்படி எழுதிருக்கேன்னு தயவுசெய்து சொல்லிட்டு போங்க. :) :)

கருத்துகள் இல்லை :

Related Posts Plugin for WordPress, Blogger...