நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

வியாழன், 16 மே, 2013

’ஒன்று’ - ரா.கண்ணன், ராஜுமுருகன் - விகடன்



கொஞ்சம் விறுவிறுப்பும் கொஞ்சம் காதலுமாய் அவ்வப்போது சிரிக்கவும் வைக்கின்ற வகையிலான சிறுகதைகள் எப்போதுமே என்னைக் கவரத் தவறியதேயில்லை. முதன் முதலில் சிறுவர்மலரில் தான் தொடங்கியது என் வாசிப்பு. பின் குமுதத்தில் தொடர்கதை (’பிளஸ் ஒன்’ தொடர்கதை– பிரியா கல்யாணராமனின் எழுத்துக்கு அடிமை நான்.) படித்து அப்படியே விகடுனுக்கு மாறி ‘சுஜாதா’வை அடையாளங்கண்டு நூலகம் சென்று தனி புத்தகங்கள் அதிகம் வாசிக்கத்தொடங்கிய நேரமது. எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் அப்போது.

இன்று வணிக எழுத்து என்று ‘இலக்கிய’வாதிகளால் பெரும்பாலும் ஒதுக்கப்படுகின்ற அங்கீகரிக்கப் படாத ராஜேஷ்குமார், ஆர்னிகா நாசர், ப்ரியா கல்யாணராமன் (’சுஜாதா’வையும் இப்பட்டியலில் சேர்ப்போரும் உண்டு) உள்ளிட்ட எழுத்தாளர்களின் படைப்புகளே பெரும்பாலானோருக்கு வாசிக்கும் பழக்கத்தைத் தொடங்கி வைத்திருக்கும் அல்லது ஆர்வமேற்படுத்தியிருக்கும். இதற்கு நானும் விதிவிலக்கல்ல. என் அம்மா எனக்கு மு.வ அவர்களையும் தி.ஜா வையும் அறிமுகப்படுத்தினாலும் நானென்னவோ குமுதத்தையும் விகடனையும் தான் அதிகம் விரும்பினேன்.

 நிற்க. எதற்காக இவ்ளோ பெரிய பில்டப் என்று கேட்கலாம். விஷயத்துக்கு வருகின்றேன். ’லைட் ரீடிங்’ (light reading) என்று விளிக்கப்படுகின்ற ‘மென் வாசிப்பு’க்கு நான் எப்போதுமே பெரிய ரசிகன். வார இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளையும், தொடர்கதைகளையும் பெரும்பாலும் அவை தருகின்ற சின்ன சின்ன சஸ்பென்ஸுக்காகவும், திடீர் திருப்பங்களுக்காகவும்,கொஞ்சம் இளமைக்காகவும்,பொங்கும் காதலுக்காகவும் நிறையவே ரசித்திருக்கின்றேன்.அந்த வகையில் சமீபத்தில் அண்ணன் யுவகிருஷ்ணா அவர்கள் பேஸ்புக்கில் பரிந்துரைத்ததன் பேரில் விகடனில் தொடராக வெளிவந்த ‘ஒன்று’ கதைத் தொகுப்பை வாங்கியிருந்தேன். தொடராக வந்தபோதே பட்டையை கிளப்பியது ஆதலால் ஒரு மினிமம் கேரண்டி நம்பிக்கை இருந்தது.
 அப்போது எழுத்தாளரின் அடையாளத்தை வெளியிடாமல் ‘இருவன்’ என்று பெயர் மட்டும் வந்தது. யார்ரா அந்த ‘இருவன்’ இப்படி எழுதுகிறாரென்று நினைப்பேன். புத்தகமாய் வெளிவரும்போது தான் தெரிந்தது ‘வட்டியும் முதலும்’ ராஜுமுருகனும், ரா.கண்ணன் அவர்களும் தான் அந்த ’இருவன்’ என்று. மிகவும் மோசமான மனநிலையில் வாசிக்கத் தொடங்கிய நான் கொஞ்சம் கொஞ்சமாய் ரசிக்கத் தொடங்கி அப்படியே மூழ்கிப்போனேன். எனக்குள்ளே நிறைய சிரித்துக் கொண்டேன். என் முன்னே நின்ற பிரச்சனைகள் மறந்து போயின. கொஞ்சம் காதலும் கவிதையுமாய் கனநேர கிறுக்கொன்று பிடித்தது. ஒவ்வொரு கதையாய் படித்து முடித்தவுடன் ”அடச்சே..அதுக்குள்ள முடிச்சுப்புட்டானுவளே’ என்று வருந்தவும் செய்தேன்.

எழுத்துநடையில் துள்ளலும் எள்ளலுமாய் தட தடவென பக்கத்து வீட்டு அழகு தேவதைகளினூடாகவும்… காதலில் சொதப்பிய காதல் மன்னர்களினூடாகவும்… அழைத்துச் செல்லும் ஒரு வேகமான ரயில் பயண அனுபவம். அவ்வப்போது நெகிழவும் முகிழவும் சிரிக்கவும் வைக்கத் தவறவில்லை இந்தக் கதைகளின் எழுத்தாளர்களான இருவர்(ன்).

சில நேரங்களில் நாம் வாசிக்க விரும்பும் புத்தகமோ பார்க்க விரும்பும் திரைப்படமோ அது முழுமையான கலைப் படைப்பாய் இருக்க வேண்டிய அவசியமில்லை. நமக்குக் கற்றுக் கொடுக்கிற ஆசானாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஜஸ்ட் நம்முடைய அந்த நேரத்து பிரச்சனைகளிலிருந்தும் கவலைகளிலிருந்தும் கொஞ்சம் விடுபட வைத்தாலே போதுமானது. ‘ஒன்று’ புத்தகம் அந்த வகை.

கதைகளிலிருந்து நான் ரசித்த வரிகள் சில…!!

’தேடித் தேடி வார்த்தைகளும் அர்த்தங்களும் தீர்ந்துவிட்ட பிறகு, கிடைக்கிற மெளனம் எவ்வளவு அழகானது. மெளனத்திலும் தேடினால், ஆழத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் பிய்த்தெறிய முடியாத மச்சம்போல் ஒட்டிக்கிறது பிரியம். ஆமாம்..இதை எல்லாம் பிரியம் என்றே அழைத்தாலென்ன? ஆகவே பிரபஞ்சம் பிரியத்தால் நிரம்பட்டும்.’

‘காதல்… வயசையும் மனதையும் போட்டு விழுங்கும் புதிர் பூதம். ஆதி நெருப்பின் கதகதப்பு. உலகின் முதல் உன்மத்தம். பாதாதிகேசம். கேசாதிப் பாதம். இது கெமிஸ்ட்ரியின் ஹிஸ்டரி.’

’நிச்சயம் கேரளக் குட்டி. அந்தக் கணத்தில் அவளை ஈன்றெடுத்த மலையாளிகளின் கால்களில் விழுந்து கரகரவென அழ சித்தமாக இருந்தேன்’

‘லாலி என் அருகே இருக்க, ஒரே நேரத்தில் என்னைக் காளான் குடையாகவும் குறிஞ்சி மலராகவும் உணர்ந்தேன். அந்த இரவில் அவள் மழையாகவும், நான் ஈசலாகவும் பிறந்து வந்ததாய் தவித்தேன்’

‘ஏ.டி.எம் ஸ்லிப் பின்னால்கூட ஹைக்கூ எழுதும் மனசுக்காரன் நான். சாலையில் சைரன் கேட்டாலே அதில் பயணிக்கும் நோயாளிக்காக ஆண்டவனைப் பிரார்த்திக்கும் ஒருத்தி எனக்குக் கிடைத்திருக்க வேண்டும். கிடைக்கவில்லை’

’அது அந்தாக்‌ஷரி’ அல்ல தோழர்...என் வாழ்வின் வழிப்பாதை. விரல் பிடித்து விழியாக வாழ்ந்து காட்டக் கிடைக்கவிருக்கும் ஒரு வரம். யார் யாரோ கஷ்டப்பட்டு இத்தனை காலம் திரை இசையை எங்களுக்காகவே படைத்ததாய் தோன்றிய கனம் அது தோழர்’

‘காதலி சென்றுவிட்ட பிறகு காதல் பகிர்ந்த இடங்களைப் பார்ப்பது துயரம். நினைவுகள் மீளவும் வழியற்ற பாதையில் நிறைந்துகிடக்கின்றன பிரியங்கள்.’

’நதியைப்போலக் கடந்துவிட்டது காலம். காதலும் பிரியமும் கடல்போல் நிற்கிறது. போய்ப் பார்ப்பதும் கால் நனைப்பதும் அவரவர் விருப்பம். அவரவர் துயரம்.’

’ஒவ்வொரு நினைவும் ஜனனம். ஒவ்வொரு பிரிவும் மரணம். காதல் விதைத்த பார்வையின் முதல் நொடியையும், பிரிவைக் கொடுத்த வார்த்தையின் கடைசிப் புள்ளியையும் யார் அறிவார்.’

மீதியை புத்தகத்தில் படித்துக் கொள்ளுங்கள்:
புத்தகம்: ‘ஒன்று’
எழுதியவர்கள்: ரா.கண்ணன், ராஜு முருகன்
விகடம் பிரசுரம்
விலை:ரூ.85
ஆன்லைனில் வாங்க : http://books.vikatan.com/index.php?bid=2061


3 கருத்துகள் :

யுவகிருஷ்ணா சொன்னது…

நல்லா எழுதியிருக்கீங்க தோழர். வாழ்த்துகள்!

ungalsudhar சொன்னது…

ரொம்ப நன்றிண்ணா...!! :) :) நீங்க படிச்சதே ரொம்ப சந்தோஷம்..!! :) :)

இரா.ப.இராக்கண்ணன் சொன்னது…

நல்ல விமர்சனம்

Related Posts Plugin for WordPress, Blogger...