நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

திங்கள், 11 பிப்ரவரி, 2013

Into the wild (2007) - அடையாளங்களைத் துறத்தல்"Two years he walks the earth. No phone, no pool, no pets, no cigarettes. Ultimate freedom. An extremist. An aesthetic voyager whose home is the road. Escaped from Atlanta. Thou shalt not return, 'cause "the West is the best." And now after two rambling years comes the final and greatest adventure. The climactic battle to kill the false being within and victoriously conclude the spiritual pilgrimage. Ten days and nights of freight trains and hitchhiking bring him to the Great White North. No longer to be poisoned by civilization he flees, and walks alone upon the land to become lost in the wild. - Alexander Supertramp May 1992 " 


நீங்கள் யார் ? 

இந்த கேள்விக்கு எத்தனை பதில்கள் இருக்க முடியும். 

என் பெயர் இன்னது… நான் இந்த ஊரைச் சேர்ந்தவன்… இன்னார் என் பெற்றோர்… இந்த இடத்தில் படித்தவன்… இவரின் நண்பன்… இந்த இடத்தில் பணிபுரிகின்றேன்… இந்த படிப்பு படித்திருக்கின்றேன்… 

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் மேற்கண்ட எதுவுமே ‘நீங்கள் யார்?’ என்ற கேள்விக்கான விடையே அல்ல.நமது பிறப்பு, வளர்ப்பு, பெற்றோர், ஊர், தெரு, கல்வி, பதவி, பணியிடம் என பல காரணிகளால் நமக்கு ஏற்பட்ட/ஏற்படுத்தப்பட்ட அடையாளாங்கள்.உண்மையில் சொல்லப் போனால் இந்த கேள்விக்கு நம்மால் பதிலளிக்கவே முடியாது.தத்துவரீதியான விளக்கங்கள் இருக்கலாம்.தர்க்கரீதியான விளக்கங்கள் அளிப்பது கடினம்.

இந்த அடையாளங்கள் எல்லாமே ஒரு வகையில் உங்களை அன்றாட வாழ்வில் இணைத்து வைத்திருக்கும் பிணைப்புகள் (Commitments) என்று சொல்லலாம். திடீரென ஒரு நாள் உங்களை கட்டிவைத்திருக்கின்ற அடையாளங்கள் அனைத்தையும் உதறித்தள்ளிவிட்டு இலக்கில்லாத ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கின்றதா?இந்த எண்ணம் துள்ளலும் துடிப்புமான இருபத்தியோரு வயது இளைஞனுக்கு ஏற்படுகின்றது.அப்படி ஒரு பயணத்தை அவன் நிஜமாகவே மேற்கொள்கின்றான். க்ரிஸ்டோஃபர் ஜான்சன் மெக்கேண்ட்லஸ் (Christopher Johnson McCandles) எமரி பல்கலைக் கழகத்தில் தன்னுடைய பட்டமளிப்பு விழா முடிந்து வந்த அன்று முடிவு செய்கின்றான் இப்படியொரு பயணத்தை தான் மேற்கொள்ள வேண்டுமென்று.வங்கியில் எஞ்சியிருந்த சேமிப்பு மொத்தமும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு எழுதி கொடுத்தாயிற்று. தான் அந்த நாட்டின் குடிமகன் என்பதற்கான அத்தனை அடையாளங்களையும், கையில் உள்ள பணத்தையும் தீயிட்டுக் கொளுத்திவிட்டு… விரும்பிப் படிக்கும் சில புத்தகங்களையும் இயற்கையோடு இணைந்த வாழ்வில் உயிர்பிழைத்து வாழ தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு தன்னுடைய பழைய காரில் கிளம்புகின்றான். தனக்குத்தானே புதிய பெயரை (Alexander Supertramp) சூட்டிக்கொள்கின்றான்.

எந்த திட்டமிடலும் இல்லாத… எந்த கட்டுப்பாடுகளுமில்லாத… தன் வேகத்தையும் பாதையையும் தானே தேர்ந்தெடுக்கும் காட்டாற்று வெள்ளம் போல… நதி போல.. காற்றை போல ஒரு பயணம்…!! எத்தனை ஆச்சர்யங்கள்… எத்தனை சாகசங்கள் நிறைந்ததாக இருக்கும் இப்படி ஒரு பயணம்..??!! அலெக்ஸின் இறுதி குறிக்கோள் அலாஸ்கா செல்வது. காட்டின் நடுவே வாழ்வது.

ஜார்ஜியாவிலிருந்து கிளம்பும் அலெக்ஸ் அரிசோனா மாகாணத்தை அடையும்போது ஒரு திடீர் ஆற்று வெள்ளத்தில் அவனது கார் அடித்துச் செல்லப்பட்டுவிட அதன்பின் கிடைக்கும் வழிகளில்/வாகனங்களில் தனது பயணத்தை தொடர்கின்றான்.அவனுடைய பயணத்தில் அலெக்ஸ் முதலில் சந்திப்பது ஹிப்பி தம்பதிகளான ஜேன் புர்ரே (Jan Burres), ரெய்னி (Rainey) ஆகியோரை.அவர்கள் இருவரிடையேயான உறவுச் சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் அலெக்ஸை அவர்கள் இருவருமே பெரிதும் விரும்புகின்றார்கள். அவர்களோடு கொஞ்சம் நேரம் செலவழித்தபின் மீண்டும் தன் பயணத்தை தொடரும் அலெக்ஸ் பின் தெற்கு டக்கோடா (South Dacota) மாகாணம் வந்தடைகின்றான்.அங்கு வெய்ன் (Wayne) என்ற விவசாயியுடைய வயலில் கொஞ்ச நாள் வேலை செய்கின்றான். வேறொரு குற்றத்திற்காக காவல் துறையினால் அலெக்ஸின் நண்பர் வெய்ன் கைது செய்யப்பட்டுவிட வேறு வழியின்றி மீண்டும் தன் பயணத்தைத் தொடர்கின்றான்.ஆற்றைக் கடக்க சிறு படகில் பயணம், பின் சரக்கு ரயில் என பலவாறாக பயணிக்கும் அலெக்ஸ் மீண்டும் அந்த ஹிப்பி தம்பதிகளை சந்திக்க நேர்கின்றது.அவர்களுடன் சில மாதங்களை கழிக்கும் அலெக்ஸ், தன் மீது காதல் கொண்டு தடுமாறும் ஹிப்பி கூட்டத்து பதின்பருவ பெண், யாருமில்லாமில்லாமல் தனிமையில் வாழ்கின்ற: அலெக்ஸின் மீது மிகுந்த பாசம் கொண்ட ஒரு முதியவர் என பலரையும் தன் பயணத்தில் சந்தித்து கடந்துவரும் அலெக்ஸ் இறுதியாக தனது வாழ்நாள் இலட்சியமாக கொண்டிருக்கும் அலாஸ்கா வந்தடைகின்றான்.

அங்கு ஒரு உடைந்து போன பேருந்தை அவனது வாழ்விடமாக மாற்றிக் கொண்டு அவன் நினைத்தபடி இயற்கையோடு இணைந்து வாழ்கின்றான். சிறிது காலத்துக்குப் பின் இயற்கையோடான அவனது போராட்டம் துவங்குகின்றது.மோசமான வானிலை காரணமாக அலெக்ஸுக்கு உணவு கிடைக்காமல் போகின்றது. கையிருப்பாக இருந்தவையும் தீர்ந்து போக அவனது உடல் வலிமை கொஞ்சம் கொஞ்சமாய் குன்றத் தொடங்குகின்றது.பசியை அடக்க ஒரு தாவரவியல் புத்தகத்தைப் பார்த்து ஒரு காட்டுச் செடியைப் பறித்து உண்கின்றான்.பசி மயக்கத்தில் தான் பறித்தது விஷச் செடி என அறியாமல் அதை உண்டுவிடும் அலெக்ஸ் பின் புத்தகத்தைப் பார்த்தபின்பே அதனை உணர்கின்றான்.அழுது புலம்பும் அலெக்ஸ் கிட்டத்தட்ட அந்த காட்டிற்குள்ளே உடைந்த பேருந்தினுள் தான் சிறை பட்டு போனதாக உணர்கின்றான்.அந்த செடி Slow Poison போல அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக கொல்ல ஆரம்பிக்கின்றது.மகிழ்ச்சி என்பது பிறரோடு பகிர்ந்து கொள்ளும்போது தான் முழுமையடைகின்றது என்பதனை உணர்கின்றான்.


அலெக்ஸ் பிழைத்தானா இல்லையா என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.க்ரிஸ்டோஃபர் மெக்கேண்ட்லஸ் என்ற இளைஞரின் வாழ்க்கையை/உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஜான் க்ராகர் (Jon krakauer) என்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட ‘Into the wild’ என்ற புத்தகமே பின்னாளில் I am Sam புகழ் ஷான் பென் (Sean Penn) திரைக்கதைஅமைத்து இயக்கி 2007ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த திரைப்படம்.படத்தின் ஒளிப்பதிவும் Non-Linear ஆக பயணிக்கின்ற திரைக்கதையும் நிச்சயமாக ஒரு மறக்கவியலா அனுபவத்தை நமக்கு தரும்.படத்தொகுப்பிற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் இது.வசனங்கள் குறிப்பிட்டு சொல்லப்படவேண்டியவை.ஒவ்வொரு வசனமும் ஒரு Quote போலவே மிகுந்த ஆழமான வார்த்தைகளைக் கொண்டிருக்கும். படத்தில் நிஜ க்ரிஸ்ஸாகவே வாழ்ந்திருக்கும் எமைல் ஹிர்ஷ் (Emile Hirsch) பற்றிக் குறிப்பிடாமல் இருக்கவே முடியாது.அத்தனை உணர்வுப் பூர்வமான நடிப்பு...!

இது நிஜம்

இது நிழல்

மொத்தத்தில்

Into the wild – அடையாளங்களைத் துறந்து அலைதலின் அழகியல்

படம் பார்க்காதவர்கள் கட்டாயம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லவும். 

Photos Courtesy: Original Uploaders

திங்கள், 4 பிப்ரவரி, 2013

Gran Torino (2008)

                  பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்ட ஹாலிவுட் ஆக்‌ஷன் திரைப்படங்களையும், Adam Sandler வகையறா நகைச்சுவை படங்களையே நான் விரும்பி பார்த்தாலும் அவ்வப்போது நண்பர்களின் பரிந்துரையின் பேரில் சில நல்ல படங்களையும் பார்த்துவிடுவதுண்டு.அப்படியொரு படமாக நான் கருதுவது தான் முரட்டு தாத்தா Clint Eastwood இயக்கி நடித்த ‘Gran Torino’.

    வால்ட் கோவால்ஸ்கி ஒரு முன்னாள் ராணுவ வீரர். போரின் போது செய்த கொலைகளுக்காக உள்ளூர குற்ற உணர்ச்சியோடும்வெளியில் வீராப்பும் வீம்புமாய் தன் வேலைகள் எல்லாவற்றையும் தானே ராணுவ ஒழுங்கோடு செய்துகொள்கின்ற வயதான ‘Korean War’ Veteran. சமீபத்தில் தனது மனைவியின் மறைவிற்குப்பின்  தனிமையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றவர். தன் இரு மகன்களோடும் அவ்வளவாக ஒட்டுதல் இல்லை. அவருடைய கார் தான் படத்தின் பெயரான ‘Gran Torino’. அமெரிக்கர்களின் ‘Muscle’ கார்கள் மீதான மோகம் ஒரு தனிக்கதை. உதாரணம் சொல்வதானால் நம் ஊரில் வெறித்தனமான புல்லட் (Bullet) ரசிகர்களை நீங்கள் கண்டிருக்கக்கூடும் கிட்டத்தட்ட அந்த மாதிரியான ஒரு craze தான் இது.

வால்ட் வசிக்கின்ற பகுதி (Neighborhood) பெரும்பங்கு தெற்காசிய நாடுகளிலிருந்து குடியேறியவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டுவிட அவர்களின் கலாச்சாரம் பிடிக்காமல் அவர்களோடு ஒட்டவும் முடியாமல் ஒதுங்கவும் முடியாமல் வேறு வழியின்றி வசித்துவருகின்றார். வால்ட்-ன் பக்கத்து வீட்டில் ஹ்மாங் (Hmong) என்ற இனத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வாழ்கின்றார்கள். அந்த வீட்டின் பதின்பருவ விடலை  சிறுவன் டாவ்(Tao) அவனைத் தூண்டிவிட்ட  லோக்கல் கேங்க்ஸ்டர் நண்பர்களிடம் தன்னை நிரூபிக்கும் பொருட்டு வால்ட்-ன் காரை திருட முயற்சி செய்ய சத்தம் கேட்டு துப்பாக்கியோடு வருகின்றார் வால்ட். அவரைக் கண்டவுடன் பயந்து ஓடிவிடுகின்றான்.

இப்படியாக வால்ட்-க்கு டாவ்-வின் மீதான ஒரு தவறான பிம்பம் தோன்றுகின்றது. மற்றொரு சந்தர்ப்பத்தில் டாவ்-வின் சகோதரியை ஒரு ரவுடி கும்பலிடமிருந்து காப்பாற்றி தன்னுடைய ட்ரக்கில் அழைத்துவருகின்றார் வால்ட். அந்த பெண்ணின் பெயர் ஸ்யூ (Sue). அவளின் துடுக்குத்தனமான பேச்சால் கவரப்படும் வால்ட் அவளிடன் டாவ் பற்றி கேட்க, அவன் மிக நல்லவன் ஆனால் சரியான வழிகாட்ட யாருமில்லை எனச் சொல்கின்றாள். அவனும் அவர்களின் இனத்தைச் சார்ந்த மற்ற இளைஞர்கள்போல தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து விடுவானோ என தான் அஞ்சுவதாகவும் கூறுகின்றாள்.

அதன்பின் டாவ்-வுக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும் பொறுப்பை தான் ஏற்றுகொள்ளுகின்றார் வால்ட். டாவ்-க்கும் வால்ட்டுக்கும் இடையேயான பழக்கம்… இருவரிடமும் ஏற்படும் மனமாற்றம்…லோக்கல் ரவுடிகும்பலால் டாவ்-வின் குடும்பத்திற்கு ஏற்படும் இடைஞ்சல்கள்…எல்லா பிரச்சனைகளையும் முடிவுக்கு கொண்டுவர வால்ட் எடுக்கும் இறுதி முடிவு என்னானது…?? இவையே படத்தின் மீதிக்கதை. படம் கொஞ்சம் மெதுவாகவே நகர்ந்தாலும் நம்மை உணர்வுப்பூர்வமாக இறுதியில் ஒன்றவைப்பது உறுதி. எனக்கு படம் ரொம்பவும் பிடித்திருந்தது.

படம் பார்த்தவர்கள் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்…! பார்க்காதவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்..! 
Review சுட்டி: http://www.guardian.co.uk/film/2009/feb/20/gran-torino-film-review-clint-eastwood
Images Courtesy: Original Uploader
Related Posts Plugin for WordPress, Blogger...