2013ல் நான் எழுதும் முதல் வலைப்பதிவு இது.அதுவும் புத்தகங்கள் பற்றியே என்பதில் மெத்த மகிழ்ச்சி. அலுவலகத்தின் இடம்/ப்ராஜெக்ட் மாற்றம் காரணமாக நேரமெடுத்து எழுதுவதென்பதே குதிரைக் கொம்பாகிவிட்டது.அது போகட்டும்.சென்ற வருடங்களில் வாங்கிய புத்தகங்கள் ரொம்பக் குறைவு. அவையும் பெரும்பாலும் குறுநாவல்களாகவும், புனைவுகளாகவும் (Fiction) அமைந்துவிட்டபடியால் அவற்றை பற்றி பெரிதாய் எழுத விருப்பமில்லை. இருந்தும் என்னை ரொம்பவே கவர்ந்த மூங்கில் மூச்சு, சொல்லாததும் உண்மை என ஒன்றிரண்டு புத்தகங்கள் பற்றி மட்டுமே எழுதியிருந்தேன். திரைப்படங்கள் ரொம்ப நிறையவே பார்த்துவிட்டாலும் ஒன்றும் எழுத நேரமில்லை.
இந்தாண்டு புத்தகத் திருவிழாவில் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகமே புத்தகங்கள் வாங்கினேன்.புனைவல்லாத புத்தகங்கள் மட்டுமே அதிகளாவில் வாங்கவேண்டுமென முடிவுசெய்துவிட்டபடியால் நிதானமாய் தேர்ந்தெடுத்து நினைத்தபடி வாங்க முடிந்தது.பட்டியல் கீழே
1. வட்டியும் முதலும் - ராஜூ முருகன் - விகடன் பதிப்பகம் - 215
2. விகடன் சுஜாதா மலர் - தொகுப்பு - விகடன் பதிப்பகம் - 165
3. கடவுள் - சுஜாதா - உயிர்மை பதிப்பகம் - 200
4. கிமு-கிபி - மதன் - கிழக்கு பதிப்பகம் - 130
5. ஓடும் நதி - கலாப்ரியா - அந்திமழை பதிப்பகம் - 135
6. மனுஷா மனுஷா - வண்ணதாசன் - சந்தியா பதிப்பகம் - 85
7. பல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி - உயிர்மை பதிப்பகம் - 110
8. ஜாலியா தமிழ் இலக்கணம் - இலவசக் கொத்தனார் - கிழக்கு பதிப்பகம் - 75
9. 60 அமெரிக்க நாட்கள் - சுஜாதா - உயிர்மை பதிப்பகம் - 50
10. இன்னும் சில சிந்தனைகள் - சுஜாதா - உயிர்மை பதிப்பகம் - 85
11. உங்கள் உடல் பேசுகிறேன் - கீதா - புதிய தலைமுறை - 80
12. கண்டோம் கடவுள் துகளை - த.வி.வெங்கடேஸ்வரன் - அறிவியல் வெளியீடு - 40
13. அறிவாளியா? முட்டாளா? - த.வி.வெங்கடேஸ்வரன் - பாரதி புத்தகாலயம் - 10
14. ஆயிஷா - இரா.நடராசன் - பாரதி புத்தகாலயம் - 15
15. கை - சுஜாதா குறுநாவல் வரிசை - உயிர்மை பதிப்பகம் - 40
16. மனைவி கிடைத்தாள் - சுஜாதா குறுநாவல் வரிசை - உயிர்மை பதிப்பகம் - 40
17. ஒரு சிக்கல் இல்லாத காதல் கதை - சுஜாதா குறுநாவல் வரிசை - உயிர்மை - 25
18. விளிம்பு - சுஜாதா குறுநாவல் வரிசை - உயிர்மை பதிப்பகம் - 25
என்னடா ஒரே ‘சுஜாதா’ மயமாக இருக்கிறது என யாவரும் நினைக்கலாம். என்ன செய்வது இலக்கியத்தைப் பொறுத்தவரை நான் ஒரு கத்துக்குட்டியாதலால் வாத்தியாரைத் தவிர மற்ற எவரையும் பெரிதாக வாசித்து பழகவில்லை.புரியாததும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் :) கூடிய விரைவில் அடுத்த நிலைக்கு முன்னேறி தீவிர இலக்கிய வெறியனாகவும், கவிதை பித்தனாகவும் மாற என்னை ஆசிர்வதிப்பீர்களாக.
விகடன் பதிப்பகத்தை பொருத்தவரையில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு புத்தகம் நமது எதிர்பார்ப்பைத் தூண்டும். சென்றாண்டு சுகா அவர்களின் ‘மூங்கில் மூச்சு’, அதற்கு முந்தைய ஆண்டு அண்டன் பிரகாஷ் அவர்களின் ‘வருங்கால தொழில்நுட்பம்’. அவ்வகையில் இந்த வருடம் மிகுந்த எதிர் பார்ப்புடன் வாங்கிய புத்தகம் விகடனில் தொடராக வெளிவந்த ராஜு முருகன் அவர்களின் ’வட்டியும் முதலும்’. வ.மு பற்றி நான் அதிகம் சொல்லத் தேவையில்லை விகடன் படித்தவர்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும்... :) :)
இவைகளில் ‘விகடன் சுஜாதா மலர்’ படித்து முடித்தாயிற்று. இந்த புத்தகம் பற்றி சுருக்கமாகச் சொன்னால் ‘விகடனில் சுஜாதாவின் பல பரிமாணங்கள் வெளிப்பட்டிருக்கின்றன... இலக்கியம், ஆன்மிகம், அறிவியல், கட்டுரைகள், சிறுகதைகள் இப்படி எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம்.பின் ‘சுஜாதா’ அவர்கள் பற்றி மற்றவர்கள் எழுதிய கட்டுரைகள் ஆகியவற்றின் கலவை. என்னை மாதிரியான அன்னாரின் வெறித்தனமான ரசிகர்கள் கட்டாயம் வாங்கிப்படிக்கலாம். :) :) இப்புத்தகம் பற்றி விரிவாகப் பின்னாளில் எழுதுகின்றேன்.இப்போது ‘கடவுள்’ படித்துக் கொண்டிருக்கின்றேன்.
புத்தகக் கண்காட்சிக்கு மூன்று நாட்கள் சென்று வந்ததில் மனதில் தோன்றிய சில எண்ணங்கள் :) :)
- தமிழ்நாட்டின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் ‘நீயா நானா’ கோபிநாத், இறையன்பு IAS, சுகி சிவம் அவர்கள், (அவங்க புக் மட்டும் தான் நெறைய விக்குது)
- சென்னையின் பெரும்பாலான குழந்தைகள் தமிழ் புத்தகங்களே படிப்பதில்லை .தமிழே தெரியாதது காரணமாக இருக்கலாம் ( எல்லா பிள்ளைக கையிலேயும் Only English.. அதுசரி அவுக அப்பாம்மா வாங்கி குடுத்தா தான)
- ரொம்ப தரமான இலக்கிய புத்தகங்கள் யாவும் குறைந்தபட்சம் 150 ரூபாயாவது இருக்கும் (காலக்கொடும... எல்லாம் Hardboundதேன் கொஞ்சம் கூட கட்டுபடியாகல)
- பதின்பருவத்திலுள்ள 50 சதவிகித மாணவர்கள் IAS ஆக விரும்புகின்றார்கள். மீதமுள்ள 50 சதவிகிதத்தினர் எல்லா போட்டித் தேர்வுகளிலும், மேற்படிப்பிற்கான தேர்வுகளிலும் வெற்றி பெற விரும்புகின்றார்கள். (நான் பார்த்தவரை TOEFL, IELTS, GRE, UPSC Prep materials ஜாஸ்தி)
- புத்தகங்களைவிட சாப்பாட்டு கவுண்டர்களில் விற்பனை பெருமளவு அதிகமாக இருந்திருக்கும். (எவ்வளவு வெரைட்டி... என்னா தீனி)
- இன்னும் பத்து வருஷமானாலும் சரி... ‘சுஜாதா’ அப்டிங்குற எழுத்தாளரை யாராலும் ஒன்னியும் அசைச்சுக்க முடியாது. வாத்தியார் வாத்தியார் தான்...!! :) :) :)