எத்தனை அழகான பெண்ணாக இருந்தாலும் வாழ்வின் ஒரு பருவத்தில் மட்டும்தான் அழகாக இருக்கமுடியும். அப்பருவத்தில் கூட சில தருணங்களில்தான் அவள் அழகு முழுமையாக வெளிப்படும். அத்தருணத்தில் கூட சில கோணங்களில் சில அசைவுகளில்தான் அவள் அழகின் உச்சம் நிகழ்கிறது. ஒவ்வொரு அழகிக்கும் அவள் ஒரு உச்சமுனையைத் தொடும் ஒரு கணம் வாழ்வில் உண்டு. ஒரே ஒரு கணம். அவ்வளவுதான். அந்தக்கணங்களையே நீட்டிக் காலமாக்கினால் அதில் வாழ்பவள் யட்சி – அம்மா சொன்னாள்.
-யட்சி சிறுகதை - ஜெயமோகன் |
யட்சிகளைப் போலத்தான் இரவுகளும். ஒருவனுக்கு அழகு. மற்றொருவனுக்குப் புதிர். வேறொருவனுக்கு திகில். தனியனுக்குத் துணை. ஆரவாரத்தின் முடிவு. அடங்கல்..! துலக்கம்..!
சாதாரணமான வார்த்தைகள்ல அந்த உணர்வை கடத்திட முடியுமான்னு தெரியல. ஆனாலும் வார்த்தைகள் சாதாரணமானவை இல்லையே. நண்பர்களுடனான ஒரு சந்திப்புல விடிய விடிய ஏதேதோ பேசிட்டிருந்தோம். பிடிச்ச எழுத்தாளார். பிடிச்ச புத்தகம். அப்படி இப்படி...எதோ..! ஜெயமோகன் பத்தி பேச்சு வந்துது. அந்த கூட்டத்துல மூனு பேரு ஆசான் பக்தர்கள்ங்குறாதுனால வழக்கம்போல தரிசனம், மரபு, அது இதுன்னு ரசிச்சுப் பேச ஆரம்பிச்சாங்க. என்கிட்ட வந்து ஜெ.மோ படிச்சுருக்கியான்னாங்க. இல்லங்க ஆனா ‘விசும்பு’ தொகுப்புல வந்த கதைகளும் வெண்முரசுல சில பல அத்தியாயங்களும் நண்பர்களோட பரிந்துரையின் பேர்ல படிச்சிருக்கேன்னேன். அட..அதுமட்டுமில்லப்பா அவரு. நீ மொதல்ல ‘இரவு’ படி. அப்புறம் பேசுவோம்னாங்க. அன்னைக்கு மனசுல விழுந்த எண்ணம். பல மாசங்களுக்கு அப்புறம் தேடிப் பிடிச்சு இரவு வாங்குனேன். கொஞ்சம் கொஞ்சமா படிக்கவும் ஆரம்பிச்சேன்.
எதப்பத்தின நாவல்னு கேட்டா பொதுவா விலங்குகள்ல nocturnalனு சொல்லப்பட்ற இரவுலாவிகள் மாதிரி மனுஷங்கள்லயும் ஒரு கூட்டம் இருக்கு. இரவுகள்ல வாழ்ற சமூகம். அவங்களப் பத்தின நாவல்னு மேலோட்டமா பதில் சொல்லிடலாம். ஆனா நாவலுடைய உள்ளடக்கம் இதையும் தாண்டுனது.
சமீபத்துல ”உரைநடை உலகத்தின் சர்வவிரோதி, இந்தக் கவிதைத் தமிழ்தான்"னு கி.ரா ஒரு பேட்டியில சொல்லியிருந்தாரு. கவித்துவமான வர்ணனைகள் உரைநடையுடைய தீவிரத்தைக் குறைச்சுடும்ங்குறது அவருடைய கருத்து. ஆனா சமயத்துல தான் அனுபவிச்ச ஒரு விஷயத்த அல்ல உணர்ந்த ஒரு விஷயத்த வேற ஒருத்தருக்கோ இல்ல பல பேருக்கோ கடத்தனும்னா அதுக்கு இந்த மாதிரியான வர்ணனைகள் தவிர வேற வழியே இல்லையோன்னு தோணும் எனக்கு. எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு தனித்துவமான கதை சொல்லும் பாணியும் வர்ணிக்கிற தொனியும் இருக்கும். “வெயில் விரிந்த சாலை ஒரு கறுத்து நீண்ட சர்ப்பம் போல..” ன்னு படிச்சாலே உங்க கண்ணு முன்னாடி எஸ்.ரா வராருல்ல ? அதான் அந்த signature..! அப்படி ஜெயமோகனுடைய signature பிடிபட்டது ’இரவு’ படிச்சப்ப தான்.ஒருத்தர் கதை சொல்லும்போது அந்த கதையைவிட அவர் சொல்லுகிற மொழி நடையும் கதை பேசியபடி நாம கடந்து போகிற பாதையும் ரொம்ப அழகா மனசுல பதிஞ்ச மாதிரி இருக்கு.
சரவணனோடு சேர்ந்து நாமும் இரவை ரசிக்கத் தொடங்குறோம். இரவுக்குக் கண்கள் பழகிப் போகுது. பகலை அருவருக்கிறோம். யட்சிகள் பத்தின வர்ணனைகளும், நிசாகந்திப் பூவின் வாசமும், கரிய நெடும் இரவின் பேரழகுமாய் நீலிமா என்னும் யட்சிமேல பைத்தியமா சுத்துறோம். வார்த்தைகள்ல தொடுதலும் நெருக்கமும் உணர்ந்து அவளுடைய அப்பட்டமான அழகைத் தாங்க முடியாம நாமளும் மனப்போராட்டத்துக்கு உள்ளாகுறோம். என்ன ஒரு உலகம்யா...! என்ன ஒரு ரசிப்பு. சர்வ நிச்சயமா சொம்ப அழகான காட்சியமைப்புகள் உங்கள் கண் முன்னே விரியும்.காயல் ஓடுகிற சத்தமும், கேரளத்து ஈரக்காத்தும், பசுமையும் , பரந்து விரிந்த இரவும், கவித்துமான மனிதர்களுமாக உங்களைச் சூழக்கூடும்.
நாவல்ல எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்ச சில பகுதிகளை மட்டு கீழ எடுத்துப் போட்டுருக்கேன்.
என் சொற்களை நான் கண்டுகொண்டேன். ”மனுஷனுக்கு பெரிய விஷயங்கள் வேண்டாம். அதான் அவன் மனசோட இயல்பு. ஒரு நூறுகோடி ரூபாய இல்லாட்டி நாலுகைப்பிடி வைரத்தை மனுஷன் கையிலே குடுத்தா பதறிப்போயிடுவான். பயத்திலே சாவான். அதுமாதிரித்தான். இந்த உலகம் வேற மாதிரி இருக்கு. இங்க எல்லாமே தீயா எரியற மாதிரி, உருகி வழியற மாதிரி இருக்கு. ஒரு சாதாரண கண்ணாடி டம்ளரைப்பாத்தாக்கூட அழகிலே மனசு மலைச்சுபோயிடுது. இது ஒரு கனவு…இந்தக் கனவிலேயே வாழமுடியுமான்னு தோணிட்டுது… கனவிலே இருந்து முழிச்சுக்கலேன்னா ஆபத்து. திரும்பி வரவே முடியாதுன்னு பட்டுது…வெல்…ஆக்சுவலி..”நான் என் வேகத்தை இழந்தேன் ”அதாவது, எனக்கு பைத்தியம் பிடிச்சிடுமோன்னு பயந்துட்டேன்”
அவள் கோணலாகப் புன்னகைசெய்தபடி ”ஏன் புடிச்சாத்தான் என்ன?”என்றாள் ”பைத்தியம்னா என்ன? மூளையிலே ஒரு நாலு ஜன்னலை கூடவே தெறந்து போடறது. இன்னும்கொஞ்சம் காற்றும் வெளிச்சமும் உள்ள வர்ரது. பைத்தியத்துக்கான சான்ஸ் இல்லாத யாருமே இல்லை. உள்ளூர பைத்தியமாகணும்னு கொஞ்சமாவது ஆசைப்படாதவங்களும் இல்லை. ஏன்னா எல்லா உச்சகட்ட அனுபவங்களிலேயும் நாம கொஞ்சம் பைத்தியங்களாத்தான் இருக்கோம்…” நான் மெல்ல மனம் அதிரப்பெற்றேன். அதை நானே உணர்ந்திருந்தேன். ”தேர் இஸ் நோ ஹாப்பினஸ் வென் யூ ஆர் ஸோபர்” என்றாள் அவள். நான் எழுந்து செல்ல விரும்பினேன். ஆனால் என் உடல் அங்கேயே இருந்தது
|
தாமஸ் மேஜைமேல் தாளமிட்டபடியே என்னைப் பார்த்தார். ”உன் குழப்பம் என்ன என்று எனக்கு தெரியவில்லை” என்றார். ”நீ அந்தப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள போவதாக விஜயன் சொன்னார். நல்ல விஷயம் என்று எனக்கும் பட்டது. இப்போது நீ அவளைப் பயப்படுகிறாய். ஒரு பெண் ஆணுக்கு முன் போடக்கூடிய வழக்கமான வேஷங்களை எல்லாம் அவளும் போடுவாளா என்று சந்தேகப்படுகிறாய். அந்தமாதிரி வேடம்போடாத பெண்ணுடன் எப்படி ஒரு ஆண் குடும்பத்தில் வாழமுடியும் என்று நினைக்கிறாய். அந்த வாழ்க்கை சாத்தியமல்ல என்பதனால் திருப்பி பகலுக்கே ஓடிவிடலாம் என்று திட்டமிடுகிறாய்…அதுதானே?”
அவர் மிக எளிமைப்படுத்துகிறார் என்று எனக்குப் பட்டது. ஆனால் அங்கிருந்தே அவர் பேச ஆரம்பிக்கலாமே என்று நினைத்து தலையசைத்தேன். ”அவள் ஒன்றும் அசாதாரணமான பெண் அல்ல. மிக சர்வசாதாரணமான பெண் மட்டும்தான். வெளியே பகலில் வாழும் எந்த ஒருபெண்ணையும் இரவில் கொண்டுவந்து வைத்தால் இப்படித்தான் இருப்பாள். ..” ”யட்சியாகவா?” ”ஆமாம். யட்சியை பகலில் கொண்டுவந்து வைத்தால் வீட்டுவேலை செய்ய வைக்கலாம்…” நான் தலையசைத்தேன்.
”இதோபார் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது சதவீதம் ஆண்கள் பெண்களை கவனிப்பதே இல்லை. இளமையில் அவர்களின் அழகு அவர்களின் பார்வையை திசை திருப்புகிறது. முதுமையில் அவர்களின் அழகின்மை திசை திருப்புகிறது. கவனித்துப் பார்த்த எந்த ஒரு ஆணும் வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் யட்சியைக் கண்டிருப்பான். தப்பவே முடியாது…” ”அவள் என்னை அருவருப்பதாகச் சொன்னாள்…” ”ஆமாம். ஆண்கள் வேறு பாலினம் என்பதற்காகவே பெண்கள் அவர்களை வெறுக்கிறார்கள். ஆண்கள் வேறு பாலினம் என்பதனாலேயே பெண்கள் அவர்களை விரும்பவும் செய்கிறார்கள்..”
|
இந்தப் புத்தகத்தைப் பத்தின முறையான அறிமுகமா இது இருக்கனும்னோ, அல்லது அலசி ஆராய்ஞ்சு காரணம் கற்பிக்கிற ஆய்வுக் கட்டுரையா இருக்கனும்னோ நான் இதப் பத்தி எழுதல. மொத்தமா படிச்சு முடிச்சப்புறம் அந்த உன்மத்தத்தையும் உணர்வுகளையும் கலவையா வார்த்தைகளா கொட்டிப் பேசுனா எப்புடி இருக்குமோ அப்புடி தான் எழுதியும் இருக்கேன்.
முறையான அறிமுகம் வேணும்னா இங்க படிச்சு தெரிஞ்சுக்கங்க.
’இரவு’ நாவலுடைய எல்லா அத்தியாங்களையும் அவரோட தளத்துலயே இங்க போய் படிச்சுக்கங்க.
கண்டிப்பா படிச்சுடுங்க...! ஒரு வாட்டியாவது,,!