Cortesy: http://cdn.pcwallart.com/images/abstract-painting-wallpaper-2.jpg |
எதிர்பாராத தருணத்தில் கிடைக்கிற அன்பைவிடவும், விரல்கோர்த்து நடக்கிறபோது உள்ளங்கைகளுக்கிடையே உருவாகிற கதகதப்பைவிடவும் ஒரு உன்னதத்தை, ஒரு வெற்றுத்தனியன் அனுபவித்திடக் கூடுமா என்ன ?
மேல் தளங்களில் காடுகளைக் கொண்டிருந்த விநோதக் கட்டடங்களின் பல நூறு படிக்கட்டுகளில் ஏறி இறங்கினோம் நாம். அடர்வனத்தின் அரசிபோல அடர் பச்சை உடையணிந்திருந்த நீ, ஒரு யானையின் சங்கிலியைப் பிடித்திழுத்துச் செல்கிற குழந்தைபோல என் கரம் பற்றியிழுத்துப் போனாய். எத்தனை தூரம் நடந்திருப்போம்; எத்தனைக் காடுகள் கண்டிருப்போம்..! எதுவும் பதியவில்லை எனக்கு. வலியை ரசித்து அனுபவித்துப் பழகியவனாகையால் இன்பத்தை உணரமுடியாது திணறிக்கொண்டிருந்தேன் நான். தேவதைகளையும் சாத்தான்களையும் போலல்லாது யாருடைய வரையறைக்கும் உட்படாதவர்கள் யட்சிகள். யட்சியின் அன்பை ஒரு எளியவன் பெறுவது அத்தனை சுளுவா ? வரங்களைப்போலவும், சாபங்களைப்போலவும் வழங்கிவிடமுடியாதது உன் அன்பு. தேடித்தேர்ந்து கூடச்சேர்ந்து மூழ்கித் திளைக்கும் ஒரு பெருங்கடலின் பேரலை நீ. உன்னில் தஞ்சமடைந்த, உடைந்த ஒற்றை மூங்கில் நான்.
கொம்பு தேடாத காட்டுக் கொடி போல,
யுகங்களுக்கொருமுறை பூக்கிற ஒற்றைப் பூ போல,
ஒன்றைப் போல மற்றொரு இறகைக் கொண்டிருக்காத தொலைதேசத்துப் பறவை போல,
மழைக்குப் பின்னான பனி சூழ் பிற்பகலின் மென் வெப்பம் போல,
மனிதத்தடம் இல்லாப் பெருவனத்தின் சுனை நீர் போல,
வார்த்தைகளில் அடங்காத பாடல்போல,
யாழின் நரம்புகளால் மீட்ட முடியாத நாதம்போல,
எல்லாவற்றையும் இழுத்துக் கொண்டு சுழித்தோடுகிற காட்டாறு போல,
ஒற்றைக் கண்ணீர்த் துளியுடன் அரும்புகிற புன்னகை போல,
மலைச்சிகரங்களின் பாறைவெடிப்புகளில் விழுந்தோடுகிற கோடை மழை போல,
பகுத்துக் கூற முடியாத வண்ணத்தின் ஒளிக் கீற்று போல,
எந்த வரைமுறைக்குள்ளும் வர்ணனைக்குள்ளும் அடக்கமுடியாத யட்சி நீ.
எனக்கான நிழலை உன் ஒற்றைத் தொடுகையில் உணர்வேனென நினைந்தேனில்லை. எதிர்பாரா முதல் முத்தத்தின் தருணத்தில் சுற்றம் மறக்கிற பேதைக் காதலன்போல உன் முகம் பார்த்து அந்த அடர்கானகத்தில் உருகித் தொலைந்துகொண்டிருந்தேன் நான். இதயம் படபடக்க, உடல் விதிர்த்து, நரம்புகள் அதிர்கிற அந்த ஒற்றைக் கணமே, கனவுலகுக்கும் நினைவுக்குமான சுவற்றை உடைக்கிற நொடி. யட்சியின் அருகாமை வேறென்ன செய்யும் என்னை?
கனவில் நிகழ்கிற நம் உரையாடல்கள் பெரும்பாலும் குரலற்றவைகள்தான். ஆனாலும் காடதிர நீ சிரிக்கிற ஓசையை உணர்ந்துகொள்ளமுடிகிறது. பிரிவும் பிரிவின் நிமித்தமுமாய்க் கடந்து கொண்டிருந்தவனின் நெடும்பயணத்தில் நினைத்துப் பார்த்துச் சிரித்துக் கொள்கிற நொடிப் பொழுதுகளை கனவாய்ப் பெற்றவன் எத்தனை அதிர்ஷ்டசாலி தெரியுமா ? ஒரு பிறவி நீச்சலுக்கிடையேயான இளைப்பாறல் அது. ஈரக்கூந்தலோடு, கண்கள் சிரிக்க, காதுமடல் சிவக்கப் பேசுகிறவளின் முன்பு வார்த்தைகளா தோன்றுமெனக்கு ?
உன் முன் முழந்தாளிட்டு உன் பாதத்திலல்லவா முத்தமிடத் தோன்றும்.
என் கண்ணீரும் புன்னகையும் ஒன்றாய்ச் சந்திக்கிற அற்புதக் கணமது.
யட்சிகளைக் குறித்த வர்ணனைகளைக்காட்டிலும் வசீகரமானவள் நிஜ நீ. சிரித்துச் சிவந்த உன்னையன்றி, சினந்துச் சிவந்தவளைக் கண்டேனில்லை. பறக்க சிறகு வாய்த்தவள் என்னை நடத்தி அழைத்துச் சென்றதேனாம்? அடுத்த கனவிலேனும் என்னைச் சுமந்து பறந்து சென்றுவிடேன்.
கவிஞர்களுக்கும் காவியங்களுக்கும் நடுவே கடிதத்தில் பேசவிரும்புகிறவனுக்கு, யட்சியின் காதலைவிடவும் எழுத உவப்பானது வேறேது...!! இப்போது உணர்கிற நிறைவு என்றென்றைக்குமான முழுமையா எனத் தெரியாவிட்டாலும், வெறுமையை சற்றேனும் இல்லாமல் ஆக்கிய யட்சிக்கு...
முத்தங்கள்...!!
முத்தங்கள்...!!
தேடித் திரிந்தாலும்...
இன்று தீராக் காதலனாய்,