இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச்சூழ்ந்து எப்போதுமுள்ளது. ஏதோ ஒருவகையில் அன்றாடத்தின்மீதான சலிப்பிலிருந்தே புனைவு என்னும் செயல்பாடு தொடங்கியிருக்கிறது. அன்றாடத்தைச் சொல்லும்போதுகூட அன்றாடமல்லாததாக அதை ஆக்குவதே புனைவின் கலை. இது வாழ்க்கையின் முடிச்சுகளைப் பேசும் படைப்பு மட்டுமல்ல, அப்பால் சென்று ஒட்டுமொத்த வினாவில் தலையை ஓங்கி அறைந்துகொள்வதும்கூட. எப்போதும் நான் புனைவில் எதிர்பார்க்கும் கூறு இது.
“எப்பிடிப் பொத்தி வச்சாலும் அவ வந்து கொத்திருவா” என்ற வரியிலிருந்து இந்நாவலை நான் மறுதொகுப்பு செய்யத் தொடங்கினேன். ஒரு தொடுகை. கருவிலிருக்கும் குழந்தையை வந்து தொடும் புறவுலகு போல. அது ஓர் அழைப்பு. ஏவாளை லூசிஃபர் என. தாந்தேயை ஃபியாட்ரிஸ் என. இருண்டபாதைகளினூடாக அழைத்துச் செல்கிறது. விழுந்து எழுந்து புண்பட்டு சீழ்கொண்டு கண்ணீரும் கதறலுமாக ஒரு நீண்ட பயணம். ’வட்டத்தின் ஓரமாகத் தவழ்வதைத் தவிர வேறு எதுவும் அப்போது எனக்கு விதிக்கப்படவில்லை” என்னும் பெருந்தவிப்பு.
- ஜெயமோகன் (சுபிட்ச முருகன் நாவலுக்காக எழுதிய முன்னுரையிலிருந்து)சரவணன் சந்திரன் எழுதத் தொடங்கி முதல் புனைவு வெளிவந்த போது, நிறைய பேர் அவருடைய எழுத்தில் சாருவுடைய தாக்கம் நிறையவே இருப்பதாகச் சொல்வார்கள். அவரிடமே கேட்கும்போதும், ”அது அந்த ஃபார்ம் தான் தம்பி. ஆனா உள்ளுக்குள்ள மொத்தமா வேற தான்.“ என்று சொல்வார். சாருவும் சரவணன் சந்திரனின் படைப்புகளை அறிமுகப்படுத்தியும் விதந்தோதியும் நிறையவே எழுதியிருக்கிறார். ஆனால், இந்த நாவலுக்கு ஜெயமோகனின் முன்னுரை எனும்போதே நான் யோசித்தேன், இவருடையது முற்றிலும் வேறுபட்ட தளமாயிற்றே என. சுபிட்ச முருகன் வாசித்து முடிக்கையில் அந்த சந்தேகம் தீர்ந்து விட்டிருந்தது.
ச.ச வின் புனைவுகளில் ஒரு பொதுத்தன்மை இருக்கும் .தன்மையில், பெரும்பாலும் கதைசொல்லியின் பார்வையிலேயே நிகழ்கிற கதையில் அவர்களுடைய பெயர் நமக்குச் சொல்லப்படுவதில்லை. அச்சம், வெறுப்பு, வஞ்சம், ஆசை, காமம், சாபம், போதை என ஏதோவொரு உணர்வால் சூழப்பட்டு மனச்சுழலில் தன்னிலை மறந்து வீழ்ந்து கிடப்பார்கள். தூரத்து ஒளிக்கீற்றாய் ஒன்றைப் பற்றிக் கொண்டு தேடல், பயணம் , மீட்சி என மீண்டு வருவார்கள். சுபிட்ச முருகனும் கிட்டத்தட்ட இந்த அமைப்போடு ஒத்துப் போகிற படைப்புதான். ஆனாலும், விவரணையிலும், ஜெயமோகன் முன்னுரையில் சொல்லியிருக்கிற ’அன்றாடமின்மை’யையும் (ஆங்கில நிகர் சொல் unusualness என வைத்துக்கொள்வோம்), கையாண்டிருக்கிற அடர்த்தியான மொழிபுமே (narrative) இந்த படைப்பினை தனித்து அடையாளப் படுத்துகின்றன.
அந்த மலையடிவார மண்ணின் வெக்கையை அவன் உணரும்போது, அவனுடைய மனப்பிறழ்வின் போதும், கால்கள் செயலிழந்து உடலை இழுத்துக்கொண்டு அவன் தரையில் தேயும்போதும் , இறுதியாய் ‘சுபிட்ச முருகனை’ கைகளிலேந்தி பெருமழையில் நனைகிறபோதும், தீயில் கருகிய மரத்தில் மஞ்சள் முகம் செதுக்கிய மரப்பாச்சியாய் இளங்கா அத்தையின் மஞ்சள் முகம் அவனைத் துரத்தும்போதும், சத்தியமாக நீங்களும் வெக்கையில் வியர்த்து, உடல் சோர்ந்து, பயந்து, மழையில் நனைந்து ஆற்றுப்படுத்திக் கொள்ளக்கூடும்.
எஸ்.ரா எப்போதும் சொல்கிற விஷயமுண்டு.”எத்தனை பெரிய காவியமாக எழுதப்பட்டிருந்தாலும், நம்மாட்களுக்கு அதனுடைய நாலு வரி கதைச்சுருக்கம் வேண்டும்” என. இதுதானே கதை...இதுதான பிரச்சனை...இதுதானே முடிவு..என அத்தனையையும் ஒற்றைப்படையாக அணுக முயல்வது . ஊழ்வினையாலும் பெண் சாபத்தாலும், அவனுக்கு காமம் சார்ந்து ஏற்படுகிற உடல் தடைக்கும் பிணிக்கும் , பழனி மலையடிவாரத்தில் ஆன்மிகத்தேடலோடும் முருகனின் அருளோடும் தீர்வு கிட்டி அனைத்தும் நீங்கிவிடுகிறதென... ஒற்றைப்படையாய் கதைச்சுருக்கம் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை.
எழுத்து குறித்த விவாதங்களை எப்போதுமே கூர்ந்து கவனிப்பதுண்டு. இன்னது தான் எழுத்து; இப்படித்தான் எழுதப்பட வேண்டும்; இவ்வாறு தொடங்கி இங்கே முடிக்கவேண்டுமென ஏகப்பட்ட வரையறைகள். எல்லாமுமே நமக்கு நாமே வகுத்துக் கொண்டவை. ”நான் ஒரு கதையை மற்றவர்களுக்கு சொல்லும் பொருட்டே எழுத விழைகிறேன்.அது இன்னதென புரியவைப்பதே எனது நோக்கம்” என எழுதுவது ஒரு வகை.
“நான் உணர்ந்த கதையை...அல்லது ஒரு அனுபவத்தை ஏதோவொரு வகையில் வெளிக்கொணர்ந்தேயாக வேண்டும். நான் எழுத முடிவெடுத்து எழுத்துக்களில் உணர்வுகளை வெளிப்படுத்த முயன்றிருக்கிறேன். எதையும் யாருக்காகவும் சொல்ல விழையாமல், கதைசொல்லலுக்கான சராசரி சமரசங்கள் ஏதுமில்லாமல் ,நானுணர்ந்ததை கதையினூடாகவே அதே அடர்த்தியுடன் எழுதியிருக்கிறேன். இதையே வேறு யாரும் உணர்ந்தால் அதுவே இந்த மனப்பதிவின் வெற்றி” என்ற கருதுகோளோடு எழுதுவது இன்னொரு வகை.
இதில் சரவணன் சந்திரனின் ‘சுபிட்ச முருகன்’ இரண்டாவது வகை. இதுவரை நீங்கள் அவருடைய புனைவுகளையோ கட்டுரைத் தொகுப்புகளையோ படித்திருந்து இப்போது ’சுபிட்சமுருகன்’ வாசிப்பீர்களேயானால், அவருடைய முந்தைய படைப்புகளிலிருந்து முற்றிலும் வேறான ஒரு படைப்பாளியாக ’சுபிட்சமுருகன்’ அவரை முன்னிறுத்தக்கூடும்.
மேலும் சுபிட்ச முருகன் குறித்து இரண்டு வெவ்வேறு கோணங்களில் எழுதப்பட்ட முக்கியமான கட்டுரைகளின் இணைப்புகள் கீழே.
நமது நாவல்கள் ஏன் உச்சம் பெறுவது இல்லை? - டி. தருமராஜ்
சுபிட்ச முருகன் - புத்தகம் வாங்க:
https://www.commonfolks.in/books/d/subitcha-murugan