Pizza வுக்கு முந்தைய கார்த்திக் சுப்புராஜின் குறும்படங்கள் தொடங்கி இப்போதைய web series முயற்சிகள் வரையில் அத்தனையையும் பார்த்திருக்கிறேன். அவருடைய குறும்படங்களிலும் திரைப்படங்களிலும் ஒரு quirky யான நகைச்சுவையும் திடீரென நிகழும் அசட்டுத்தனமான திருப்பங்களுமாக நிறைந்திருக்கும்.
இதுவரையிலும் தனிப்பட்ட முறையில் எனக்கு பீட்சா தவிர்த்து ஜிகர்தண்டா 1 மட்டுமே நிறைவான திரை அனுபவமாக அமைந்தது. பேட்டை முழுக்க முழுக்க ஒரு fanboy சம்பவம் (ஆண்டவர் விசிறிகள் லோகிண்ணாவை கூட்டிக்கொண்டு வர வேண்டாம்) ஏன் எதற்கென தெரியாமல் ஜாலியாக கொண்டாடிய படம். ஆனாலும் அது கார்த்திக் சுப்புராஜின் trademark படமல்ல. மெர்க்குரி படமெல்லாம் பார்க்கவேண்டும் என்கிற ஆவலே இருந்ததில்லை.
இறைவி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவந்து பெரிதாக வெற்றியடையாமல் போன திரைப்படம். நடிகராக SJ.சூர்யாவுக்கான மீள்வருகை சிறப்பாக அமைந்தாலும், ட்ரைலர் ஒரு ஆக்ஷன் திரைப்படம் போல வெட்டப்பட்டிருந்தாலும் படம் முழுக்க முழுக்க ஒரு emotional dramaவாகவே அமைந்திருந்தது. தங்களுடைய egoவின் காரணமாக தங்கள் வாழ்வை அழித்துக்கொள்ளுகிற ஆண்களும் அதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகிற பெண்களும் என ஒரு மாதிரி நன்றாகவே இருக்கும். இன்றும் content ஆக்கப்படுகிற, ‘ஆண் நெடில்’, 'மனிதி வெளியே வா' மாதிரியான குறிப்பிட்டு சொல்லக்கூடிய பல விஷயங்கள் படம் முழுக்க உண்டு.
ஜகமே தந்திரம் கார்த்திக் சுப்புராஜ் மீது ஒரு படைப்பாளியாக வைத்திருந்த நம்பிக்கையை மொத்தமாக உடைத்த படம். இவ்வளவு மேம்போக்காகவும் அலட்சியமாகவும் ஒரு திரைப்படம் இயக்க முடியுமாவென யோசிக்க வைத்தது. மஹான் கொஞ்சம் 50/50. திரையரங்கில் வெளிவந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ என யோசிக்க வைத்த படம்.
கார்த்திக் சுப்புராஜின் திரைப்படங்களில் அரசியல் எனப் பார்த்தால் ஈழ அரசியலை மட்டும் தனது படங்களிலும் வலைத்தொடர்களிலும் பேசி வந்ததைத் தாண்டி வேறெதுவும் இருந்ததில்லை. அது போக அவருடைய படங்களைப் பார்க்கையில் அவர் ஒரு retro-obsessed wannabe Quentin Tarantino ரசிகர் தானோ என்ற வகையில் குறைத்து மதிப்பிட்டிருந்தேன். அத்தனையையும் இந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மாற்றியிருக்கிறது
ஒரு கொடூர கேங்க்ஸ்டரை பிடிக்கும் பொருட்டு காவல்துறையின் துணையுடன் குழுவுக்குள் அனுப்பப்படுகிற ஒரு சராசரி திரைக்கலைஞன், அவன் வந்த நோக்கம் வேறு; இறுதியில் நடப்பது வேறு. இதை கதையின் மையமாக வைத்து ஒரு பரபரப்பான மசாலா திரைப்படமாக எடுக்கப்பட்டது ஜிகர்தண்டா முதல் பாகம். அதே கதைக் கருவை 70/80கள் பின்னணியில் கொஞ்சம் மாற்றி எடுக்கப்பட்டிருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
பிரதமராகும் எண்ணத்துடன் அதிகார வெறிபிடித்துத் திரியும் ஒரு பெண் அரசியல் தலைவர், தன் திரை பிரபலத்தின் மூலம் முதல்வராக முயலும்/விரும்பும் நடிகர், தென் மாவட்டங்களில் ரவுடிகளின் துணையுடன் ஆளுமை செலுத்தும் அரசியல்வாதி, யானைகளைக் கொடூரமாகக் கொல்லும் ஒருவன், அவனை பிடிப்பதற்காக காட்டில் வாழும் பழங்குடி மக்களை அரசாங்கத்தின் துணையுடன் துன்புறுத்தும் காவல்துறை, ஷெட்டானி ஆட்கள் அரசு/காவல்துறை என இரண்டு பக்கமும் மாட்டிகொண்டு தவிக்கும் பழங்குடி மக்கள், இந்த பழங்குடி மக்களுள் ஒருவனாக இருந்தாலும் அவர்களுக்காக போராடாமல் தன்னுடைய வசதிக்காக வாழ்கிற ஒரு கேங்க்ஸ்டர் , அந்த கேங்க்ஸ்டரின் சினிமா ஆசையை பயன்படுத்தி அவனை கொன்று போலீசாகத் துடிக்கும் ஒரு போலி இயக்குநர்..! இவர்களுக்கிடையேயான கதை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
இது போக படம் முழுக்க க்ளிண்ட் ஈஸ்ட்வுட், வீணை பாலச்சந்தர் , ரே தாசன், சத்யஜித் ரே, அலியஸ் சீஸர், க்ளிடீஸ் திரையரங்கம் என ஏகப்பட்ட references/tributes.
கார்த்திக் சுப்புராஜின் முந்தைய படங்களைக் காட்டிலும் இந்தப் படம் கொண்டாடப்படக் காரணம் படத்தின் இரண்டாம் பகுதி தான் என நினைக்கிறேன். இந்திய சினிமாவின் தற்போதைய வழக்கமான ‘க்ளைமாக்ஸ்ல வர்ர பெரிய துப்பாக்கி’ மாதிரி ஒரு காட்சியை வைத்து அல்லியஸ் சீஸர் பழங்குடி மக்களுடன் சேர்ந்து காவல்துறையினரை எதிர்த்து சுட்டு வீழ்த்தியிருந்தாலோ, அல்லது அதே துப்பாக்கியை ரே தாஸன் எடுத்திருந்தாலோ இது KGF போன்ற ஒரு மாஸ் மசாலா திரைப்படமாகியிருக்கும்.
But it was a conscious decision from Karthik Subburaj to not do that, as he mentioned in an interview. ”எனக்கு அத பண்ண வேண்டாம்னு தோணுச்சு. அப்படி இருக்க வேண்டாம்னு விட்டுட்டேன்” என்பது போல சொல்லியிருந்தார்.
அதற்கு பதிலாக ரேதாஸன் சொல்வது கலை தான் என் ஆயுதம். சினிமா தான் என் ஆயுதம் என்பது தான். ஒரு utopian கனவு போலத் தெரிந்தாலும் அதிலிருக்கிற உண்மைத் தன்மையை பாராட்டாமல் இருக்க முடியாது. இது தான் என்னுடைய அரசியல், அதனை இப்படித்தான் என் திரைப்படங்களின் வழியாகப் பேசுவேன் என கார்த்திக் இந்தப் படத்தின் வழியாக அறிவித்திருப்பது போல தோன்றுகிறது. திரைப்படம் அவருடைய சொந்தத் தயாரிப்பு என்பதும் அந்த சுதந்திரத்துக்கான காரணமாக இருக்கலாம்.
ராகவா லாரன்ஸைப் பொருத்த வரையிலும் இது தான் அவருடைய career best எனச் சொல்லலாம். அதுவும் எஸ்.ஜே.சூர்யா மாதிரி ஒருவர் ஃப்ரேமில் இருக்கும்போது அவரைத் தாண்டி தான் ஸ்கோர் செய்வதெல்லாம் பெரிய விஷயம். எஸ்.ஜே.சூர்யா அவருடைய வழக்கமான over the top theatrics எதுவும் இல்லாமல் (ஒரு சில காட்சிகள் தவிர்த்து) ரொம்பவே அடக்கி வாசித்திருக்கிறார். நிமிஷா சஜயனைப் போன்ற ஒரு நடிப்பாற்றல் மிகுந்த திறமையாளருக்கு தமிழில் நல்ல வாய்ப்புகள் தொடர்ச்சியாகக் கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இசையமைப்பாளர் சந்தோஷ் தன் பங்குக்கு பாடல்களிலும் பின்னணி இசையிலும் அடித்து பட்டையைக் கிளப்பியிருக்கிறார். அதிலும் ஜிகர்தண்டா முதல் பாகத்தின் பின்னணி இசைக் கோர்ப்புகளை இந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்த விதம் இடைவேளையின் போதான அசால்ட் சேது இசையும், இறுதியில் ஒலிக்கிற உயிர்ப்பிச்சை இசையும் அவ்வளவு பொருத்தம். ஒரு விஷயத்தை உள்வாங்கிக் கொண்டு internalize செய்து பின்பு வேறு வடிவில் வெளிப்படுத்துவது கலைஞர்களுக்கான/படைப்பாளிகளுக்கான முக்கியமான கூறு. அதனை கார்த்திக் ஒரு வகையில் சிறப்புற செய்திருந்தாலும், சந்தோஷும் இத்திரைப்படத்தின் கதையையும் கார்த்திக் சுப்புராஜின் நோக்கத்தையும் உள்வாங்கிக் கொண்டு இசையில் வெளிப்படுத்தியிருப்பதாகத் தோன்றுகிறது.
இந்த படத்துக்குள் படமெடுக்கிற meta narrative ஐ தமிழில் பலரும் முயன்று பார்த்திருக்கிறார்கள் . இதில் நமக்கு நல்ல உதாரணங்களும் உண்டு (ஜிகர்தண்டா 1) எடுபடாத உதாரணங்களும் உண்டு (உத்தம வில்லன், கதை திரைக்கதை வசனம் இயக்கம்). ஜிகர்தண்டா முதல் பாகத்தில் கூட அந்த அ.குமார் படம் கதையுடன் கொஞ்சம் ஒட்டாமல் ஆனால் முக்கிய பங்கு வகிக்கிற மாதிரி இருக்கும். டபுள் எக்ஸைப் பொருத்த வரையில் இந்த meta narrativeஐ மிகச்சிறப்பாக திரைக்கதையாக்கி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
Everything everywhere all at once திரைப்படம் பார்த்த போது ஒரு மாதிரி நிறைவுடன் கொஞ்சம் புன்னகையுடன் திரையரங்கிலிருந்து வெளியே வந்தேன். அதன் பிறகு அந்த மாதிரியான ஒரு நிறைவைத் தந்தது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தான்.
கார்த்திக் சுப்புராஜ் அவருடைய படங்களில் வைத்த இரண்டு வசனங்கள்
1. நாம பேசக்கூடாது... படம் தான் பேசனும்
2. நான் செஞ்சதுலயே சிறப்பான தரமான சம்பவம்
இதையே இந்தப்படத்துக்கும் பொருத்தமாகச் சொல்லிக் கொள்ளலாம்.
You Don't Choose Art. Art Chooses You <3