நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

புதன், 15 மே, 2019

இரும்புப் பெண்மணி இரோம் and the streak of hope


ஊர் உலகமே ஆர்வமாய் தேர்தல் முடிவுகளுக்காகக் காத்துக் கிடக்கின்றது. வெற்றியோ தோல்வியோ முடிவு ஏதாகிலும் அது பலரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விடக்கூடும். அவர்தம் கொள்கைகளையும் முடிவுகளையும் சார்புகளையும் நம்பிக்கைகளையும் ஒரு தோல்வி அசைத்துப் பார்துவிடக்கூடும். என்னதான் பொதுநலனோடு மக்களுக்காக போராளியாய்க் குரல் கொடுத்தாலும், தேர்தல் அரசியலின் வழியாகவே பெரும்பாலான அமைப்புரீதியான சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியுமென்பது என் நம்பிக்கை.

நினைவு தெரிந்த நாள் முதலாய் செய்திகளில் கலைந்த தலைமுடியோடும் மூக்கில் சொருகப்பட்ட ப்ளாஸ்டிக் குழாயோடுமே பார்த்துப் பழகியது இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளாவின் முகம். எப்போதுமே கைது செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக உணவு/சத்து ஊட்டப்படும். மறுபடியும் உண்ணா நோன்பிருக்க களம் காணுவார்.வடகிழக்கில் AFSPA குறித்த பின்னணி விவரங்களையெல்லாம் அறிந்து கொண்ட வயதுக்கு முன்பே, ஒவ்வொரு முறை இரோமின் முகத்தை செய்திகளில் காணும்போதும் அதீதமான குற்ற உணர்வுக்கு ஆளாவேன். எதற்காக இத்தனை பிடிவாதம்... யாருக்காக இந்த போராட்டம் என.

2017ஆம் ஆண்டு அவர் தேர்தலில் போட்டியிட்டபோது, அடடா இத்தனை ஆண்டுகளாய் மக்களுக்காக போட்டியிட்டவராயிற்றே; மக்கள் கட்டாயமாய் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்வார்களென திண்ணமாக நம்பினேன். 16 வருடங்களாய் உண்ணா நோன்பிருந்த போராளிக்கு மக்கள் தந்தது 90 வாக்குகள். வெறும் 90 வாக்குகள். நிச்சயமாய் அப்போது இரோமுக்கு ஏதோவொரு பிடிப்பு விட்டுப்போயிருக்கக் கூடும்.

தான் முழுநேர அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார் இரோம்.
7 ஆண்டுகளாய் தனக்காகக் காத்திருந்த சமூக ஆர்வலர் டெஸ்மான்டை, கொடைக்கானலில் எளிமையானதொரு பதிவுத்திருமணத்தில் வாழ்க்கைத் துணைவராய் ஏற்றபோது அப்படியொரு மனநிறைவு எனக்கு. You deserve to have a life, you warrior.For everything you went through; I'm glad you are finding solace என அகமகிழ்ந்தேன்.

இன்று காலை இரோம்-டெஸ்மாண்ட் இணையருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்த செய்திகேட்டு அத்தனை மகிழ்ச்சி.I was elated and almost on tears when I saw the picture. Light at the end of the tunnel , Ray of hope, நம்பிக்கையின் ஒளிக்கீற்றென நாம் கேட்ட கதைகளும் கேள்விப்பட்ட அற்புதங்களும் இரோம் மாதிரி யாருக்கோ எங்கெங்கோ நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது... இல்லையா ❤️ Stoicism சொல்வது போல "sometimes even to live is an act of courage".

More power to you Sharmila... Loads of love to you and your family. May you find the comfort, calmness and the happiness you deserve ❤️❤️❤️❤️

ஞாயிறு, 3 மார்ச், 2019

சுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன்

 
இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச்சூழ்ந்து எப்போதுமுள்ளது. ஏதோ ஒருவகையில் அன்றாடத்தின்மீதான சலிப்பிலிருந்தே புனைவு என்னும் செயல்பாடு தொடங்கியிருக்கிறது. அன்றாடத்தைச் சொல்லும்போதுகூட அன்றாடமல்லாததாக அதை ஆக்குவதே புனைவின் கலை. இது வாழ்க்கையின் முடிச்சுகளைப் பேசும் படைப்பு மட்டுமல்ல, அப்பால் சென்று ஒட்டுமொத்த வினாவில் தலையை ஓங்கி அறைந்துகொள்வதும்கூட. எப்போதும் நான் புனைவில் எதிர்பார்க்கும் கூறு இது.

“எப்பிடிப் பொத்தி வச்சாலும் அவ வந்து கொத்திருவா” என்ற வரியிலிருந்து இந்நாவலை நான் மறுதொகுப்பு செய்யத் தொடங்கினேன். ஒரு தொடுகை. கருவிலிருக்கும் குழந்தையை வந்து தொடும் புறவுலகு போல. அது ஓர் அழைப்பு. ஏவாளை லூசிஃபர் என. தாந்தேயை ஃபியாட்ரிஸ் என. இருண்டபாதைகளினூடாக அழைத்துச் செல்கிறது. விழுந்து எழுந்து புண்பட்டு சீழ்கொண்டு கண்ணீரும் கதறலுமாக ஒரு நீண்ட பயணம்.  ’வட்டத்தின் ஓரமாகத் தவழ்வதைத் தவிர வேறு எதுவும் அப்போது எனக்கு விதிக்கப்படவில்லை” என்னும் பெருந்தவிப்பு. 
- ஜெயமோகன் (சுபிட்ச முருகன் நாவலுக்காக எழுதிய முன்னுரையிலிருந்து)
சரவணன் சந்திரன் எழுதத் தொடங்கி முதல் புனைவு வெளிவந்த போது, நிறைய பேர் அவருடைய எழுத்தில் சாருவுடைய தாக்கம் நிறையவே இருப்பதாகச் சொல்வார்கள். அவரிடமே கேட்கும்போதும், ”அது அந்த ஃபார்ம் தான் தம்பி. ஆனா உள்ளுக்குள்ள மொத்தமா வேற தான்.“ என்று சொல்வார். சாருவும் சரவணன் சந்திரனின் படைப்புகளை அறிமுகப்படுத்தியும் விதந்தோதியும் நிறையவே எழுதியிருக்கிறார். ஆனால், இந்த நாவலுக்கு ஜெயமோகனின் முன்னுரை எனும்போதே நான் யோசித்தேன், இவருடையது முற்றிலும் வேறுபட்ட தளமாயிற்றே என. சுபிட்ச முருகன் வாசித்து முடிக்கையில் அந்த சந்தேகம் தீர்ந்து விட்டிருந்தது.

ச.ச வின் புனைவுகளில் ஒரு பொதுத்தன்மை இருக்கும் .தன்மையில், பெரும்பாலும் கதைசொல்லியின் பார்வையிலேயே நிகழ்கிற கதையில் அவர்களுடைய பெயர் நமக்குச் சொல்லப்படுவதில்லை. அச்சம், வெறுப்பு, வஞ்சம், ஆசை, காமம், சாபம், போதை என ஏதோவொரு உணர்வால் சூழப்பட்டு மனச்சுழலில் தன்னிலை மறந்து வீழ்ந்து கிடப்பார்கள். தூரத்து ஒளிக்கீற்றாய் ஒன்றைப் பற்றிக் கொண்டு தேடல், பயணம் , மீட்சி என மீண்டு வருவார்கள். சுபிட்ச முருகனும் கிட்டத்தட்ட இந்த அமைப்போடு ஒத்துப் போகிற படைப்புதான். ஆனாலும், விவரணையிலும், ஜெயமோகன் முன்னுரையில் சொல்லியிருக்கிற  ’அன்றாடமின்மை’யையும் (ஆங்கில நிகர் சொல் unusualness என வைத்துக்கொள்வோம்),  கையாண்டிருக்கிற அடர்த்தியான மொழிபுமே (narrative) இந்த படைப்பினை தனித்து அடையாளப் படுத்துகின்றன.

அந்த மலையடிவார மண்ணின் வெக்கையை அவன் உணரும்போது, அவனுடைய மனப்பிறழ்வின் போதும், கால்கள் செயலிழந்து உடலை இழுத்துக்கொண்டு அவன் தரையில் தேயும்போதும் , இறுதியாய் ‘சுபிட்ச முருகனை’ கைகளிலேந்தி பெருமழையில் நனைகிறபோதும், தீயில் கருகிய மரத்தில் மஞ்சள் முகம் செதுக்கிய மரப்பாச்சியாய் இளங்கா அத்தையின் மஞ்சள் முகம் அவனைத் துரத்தும்போதும்,  சத்தியமாக நீங்களும் வெக்கையில் வியர்த்து, உடல் சோர்ந்து, பயந்து, மழையில் நனைந்து ஆற்றுப்படுத்திக் கொள்ளக்கூடும்.

எஸ்.ரா எப்போதும் சொல்கிற விஷயமுண்டு.”எத்தனை பெரிய காவியமாக எழுதப்பட்டிருந்தாலும், நம்மாட்களுக்கு அதனுடைய நாலு வரி கதைச்சுருக்கம் வேண்டும்” என. இதுதானே கதை...இதுதான பிரச்சனை...இதுதானே முடிவு..என அத்தனையையும் ஒற்றைப்படையாக அணுக முயல்வது . ஊழ்வினையாலும் பெண் சாபத்தாலும், அவனுக்கு  காமம் சார்ந்து ஏற்படுகிற உடல் தடைக்கும் பிணிக்கும் , பழனி மலையடிவாரத்தில் ஆன்மிகத்தேடலோடும் முருகனின் அருளோடும் தீர்வு கிட்டி அனைத்தும் நீங்கிவிடுகிறதென... ஒற்றைப்படையாய் கதைச்சுருக்கம் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை.

எழுத்து குறித்த விவாதங்களை எப்போதுமே கூர்ந்து கவனிப்பதுண்டு. இன்னது தான் எழுத்து; இப்படித்தான் எழுதப்பட வேண்டும்; இவ்வாறு தொடங்கி இங்கே முடிக்கவேண்டுமென ஏகப்பட்ட வரையறைகள். எல்லாமுமே நமக்கு நாமே வகுத்துக் கொண்டவை. ”நான் ஒரு கதையை மற்றவர்களுக்கு சொல்லும் பொருட்டே எழுத விழைகிறேன்.அது இன்னதென புரியவைப்பதே எனது நோக்கம்” என எழுதுவது ஒரு வகை.

“நான் உணர்ந்த கதையை...அல்லது ஒரு அனுபவத்தை ஏதோவொரு வகையில் வெளிக்கொணர்ந்தேயாக வேண்டும். நான் எழுத முடிவெடுத்து எழுத்துக்களில் உணர்வுகளை வெளிப்படுத்த முயன்றிருக்கிறேன். எதையும் யாருக்காகவும் சொல்ல விழையாமல், கதைசொல்லலுக்கான சராசரி சமரசங்கள் ஏதுமில்லாமல் ,நானுணர்ந்ததை கதையினூடாகவே அதே அடர்த்தியுடன் எழுதியிருக்கிறேன். இதையே வேறு யாரும் உணர்ந்தால் அதுவே இந்த மனப்பதிவின் வெற்றி” என்ற கருதுகோளோடு எழுதுவது இன்னொரு வகை.

இதில் சரவணன் சந்திரனின் ‘சுபிட்ச முருகன்’ இரண்டாவது வகை. இதுவரை நீங்கள் அவருடைய புனைவுகளையோ கட்டுரைத் தொகுப்புகளையோ படித்திருந்து  இப்போது ’சுபிட்சமுருகன்’ வாசிப்பீர்களேயானால், அவருடைய முந்தைய படைப்புகளிலிருந்து முற்றிலும் வேறான ஒரு படைப்பாளியாக ’சுபிட்சமுருகன்’ அவரை முன்னிறுத்தக்கூடும்.

மேலும் சுபிட்ச முருகன் குறித்து இரண்டு வெவ்வேறு கோணங்களில் எழுதப்பட்ட முக்கியமான கட்டுரைகளின் இணைப்புகள் கீழே.

நமது நாவல்கள் ஏன் உச்சம் பெறுவது இல்லை? - டி. தருமராஜ்

மெய்யறிதலின் அபூர்வத் தருணங்கள்! - லஷ்மி சரவணகுமார்

சுபிட்ச முருகன் - புத்தகம் வாங்க:

https://www.commonfolks.in/books/d/subitcha-murugan

வெள்ளி, 25 ஜனவரி, 2019

வீரா, தாரா & யாழினி - Absurd Love

பேரன்பின் வீராவுக்கு,

மிகத் தாமதமானதொரு பிறந்தநாள் வாழ்த்தைச் சொல்லிவிடும் பொருட்டே உனக்காக இந்த கடிதத்தை எழுதத் தொடங்குகிறேன் நான். எல்லோரும் எல்லோரிடத்தும் சொல்லிக் கொள்கிற சம்பிரதாயமான ‘வாழ்த்துகள்’ என்கிற சொல்லோடு நான் சொல்லிக் கடந்துவிடக்கூடியவளல்ல நீ. சாலைகளோடி, ஊர்த்தேடி திரியும்பொருட்டே பிழைத்து வாழ்கிற, என் போலான சக நாடோடிப் பறவையன்றோ நீ.

நான் உட்பட சுற்றியுள்ள யாவரிடத்தும் நிறைய பேச முயற்சி செய்தபடியே இருக்கிறாய் நீ. உன் அழுகைக்கான காரணத்தையும் கூட நீ சொல்கிறாய். யாரும் எந்த விளக்கமும் கேட்பதில்லை உன்னை. எப்போதும் மலையுச்சிகளை நோக்கியே இருக்கிறது உன் மனம். எந்த பயணமும் முடிவுற விரும்புவதில்லை நீ. ”இன்னும் கொஞ்ச தூரம் ”... “இன்னும் கொஞ்ச தூரம்” என்றபடி காலத்தை நீட்டிக்க முயல்கிறாய்.


Kahaan hoon main ab..
Aahein, darr, khushi, raaste
Kachchi baatein, sachche vaaste
Kahin pe in sab mein
Kahaan hoon.. main ?
என சுக துக்கங்களிலும், உறவுகளிலும், பயணங்களிலும் உன்னைத் தேடியபடியே இருப்பவள் நீ.

Main ekaaki de daya ki bheekh rajaKya tujhe aabhaas bhi mera.. என உன்னை நொந்தபடி பெயர் தெரியாத ஊரில் இருளில் ஓடும்போதும் சரி,

Heera para bajaar mein
Raha chhaar laptaaye
keetehi moorakh pachhe mohe
Koi Parakhi Liya Uthaaye
என சந்தையில் கிடக்கும் வைரமான உன்னை தேடிக் கண்டடையும் ஒருவனுக்கான நம்பிக்கையை சொல்லும்போதும் சரி,

உன்னை... இன்னும் கொஞ்சம் அதிகமாகவே காதலிக்கத் தோன்றுகிறது.



 எத்தனை தூரம் பயணித்திருப்பாயோ ? எந்த ஊர் கடல்களில் கால் நனைத்திருப்பாயோ? எந்தெந்த மலைகளின் மீது மேகம் தொட்டிருப்பாயோ ? எந்தெந்த காடுகளின் சுனை பருகியிருப்பாயோ ? அறிந்தேனில்லை. அது எனக்குத் தேவையுமில்லை. நான் சேருமிடம் முந்துமோ... நீ சேருமிடம் முந்துமோ.. யாரிருக்க யார் கடப்பாரோ அறியேன். இந்த இரவின் கடுங்குளிரையும் , இன்னும் சில இரவுகளின் நட்சத்திரங்களையும் , நாளைய விடியலையும் , வெண்பனி மலைகளினூடாய் இன்னும் சில விடியல்களையும்... நாம் கைகோர்த்தபடி, நீ என் மீது சாய்ந்தபடி, நாம் ஒன்றாய் நடந்தபடி... கடக்க வாய்த்திருக்கலாம்.ஆனாலும் இந்தப் பயணத்தின் இந்தத் தருணத்தில் நானுந்தன் சக பயணி.


வெவ்வேறு பயணங்களில் வெவ்வேறு உலகங்களில் நீயும் நானும் வெவ்வேறு பெயர்களில் சந்தித்திருக்கக்கூடும்.  ’தாரா’வாக நீயிருந்த மற்றோர் உலகிலும் உன்னோடு பயணித்திருக்கிறேன் நான். வீராவைக் காட்டிலும் தாரா கொஞ்சம் தெளிவானவள் எனத் தோன்றுமெனக்கு.  எங்கோ ஒரு ஊரில் அடையாளங்களைத் துறந்து கவலைகள் மறந்து பெயர்களற்று போலியான சுயமில்லாது ஆடித் திரிந்திருக்கின்றோம்.பின்பு
கனவுலாவியான நான், இவ்வுலகில் பிழைத்தலின் பொருட்டு சிலகாலம் அணிந்து கொண்ட ’சராசரி ஆள்’ எனும் முகமூடியை அத்தனை ரசிக்கவில்லை நீ.எனது போலி முகமூடியை அடையாளங்கண்டு கிழித்தெறிந்து மீண்டும் என்னைக் கதைசொல்லியாக மாற்றியவள் நீ. 

’இதுவே நான்’ என இவ்வுலகை நம்ப வைத்த விம்பத்தை அத்தனை இலகுவாய் நீ அடித்து நொறுக்கியதை கொஞ்சமும் தாங்க முடியாமல், எனது கையறு நிலையை கோபம் வன்மமுமான வார்த்தைகளால் உன் மீது கொட்டிவிட்டு ஓட முயன்றேன்.
அப்போதும்

pal bhar Theher jaao
dil ye sambhal jaaye
kaise tumhe roka karoon
meri taraf aata
har gham phisal jaaye
aankhon mein tumko bharoon,
bin bole baatein tumse karoon,
gar tum saath ho,
agar tum saath ho..


என என்னோடு பேசி என்னை நிறுத்த முயன்றாய். எனக்கு உன்னோடு போராட எதுவுமேயில்லை. மொத்தமும் என்னோடுதான்...என்னுள்ளேதான். 

wo jise DhoonDha zamaane mein
mujhi mein tha
wo mere saare jawaabon ka
safarnaama..

நமது இந்தப் பயணம் உன்னில் தொடங்கி உன்னில் முடிந்து உன்னோடே தொடர்ந்தது.

Ho.. safarnaama..
sawaalon ka safarnaama
shuru tumse, khatam tumpe
safarnaama

You fell in love with my weirdest self and you only wanted that version of me. 



வேறோர் உலகில்...யாழினியாக உனக்கு இத்தனை குழப்பங்களும் வலிகளும் இல்லை.எளிமையான முடிவுகளையே கொண்ட சின்னச் சின்னச் சிக்கல்கள் நிறைந்தது உன் வாழ்க்கை. 'எனக்கு சில குறிக்கோள் இருக்கு..ஆனா உங்களுக்கு சொன்னா புரியாது ‘ என்றோ ‘உங்கள பாத்தா எனக்கு பயம் வரல’ என்றபடி ஒரு சிறிய அணைப்பிலோ, ‘சும்மா...ஜாலியா’ என்றபடி தலையிலடித்துக் கொள்ளும்போதோ, நீ பேசுவதும், பேசாத மற்றேனையும் இலகுவாய்ப் புரிந்து கொள்வேன். அசட்டுத்தனங்களும் அசட்டுத்தனமான துணிவும் இல்லாத வாழ்க்கை ஏது ? எல்லாவற்றையும் சிறு புன்னகையோடு கடந்துவிட இது மட்டுமே போதுமல்லவா ?

இனி இந்த உலகின் இந்தப் பயணத்தை நீ யாழினியாகவே தொடர விரும்புகிறேன்...!

//
கனவில் நின்னேனே
நான் நான் நானாய் ஆனேனே
மின்மினிப் பூ ஆனேனே

விண்மீன் துள்ளும் அருவியாய் போனேனே
வான் மேகம் பூச்செண்டாய் மாறக் கண்டேனே
கண் காணா பூட்டு ஒன்னு ஒடச்சு வந்தேனே...!

ஏன்னா ராணி நான்
தேன்னா தேனீ நான்...!! //

போ...பற...தீராமல் வாழ்ந்து தீர்,
காதலுடன்,
நான் <3 nbsp="" p="">


புதன், 24 அக்டோபர், 2018

காத்திருப்பின் முடிவும் பயணத்தின் தொடக்கமும் - Iktsuarpok

Courtesy: http://www.kenig-artwork.com/portfolio/abstract-painting/ - Non-Commerical Usage

பேரன்பின் உனக்கு,

பின்னிரவுகள் பிரத்தியேகமானவை. எத்தகைய அதீத உணர்வையும் இன்னும் தீவிரமாக்கி எவ்வகையிலேனும் நம்மைத் துன்பிக்கிற தன்மை கொண்டவை.
சிவபானம் புகைக்கிறவர்கள் எப்போதும் சொல்கிற விஷயமிது. நீங்கள் எவ்வித மனநிலையில் இருந்தாலும் அப்போது புகைத்தால் அது இன்னும் தீவிரங்கொள்ளுமென. கிட்டத்தட்ட பின்னிரவுகள் அப்படியானவைதான். தனிமை என்றால் உயிர் கொன்று கருந்துளையாய் முற்றும் உறிஞ்சிக்கொள்கிற தனிமையாகும். மென்சோகம் உயிர் உடைக்கிற பெருஞ்சோகமாகும். ஒரு புன்சிரிப்புடன் கூடிய மென்மனம், கூத்தாட வைக்கிற பேரானந்தம் கொள்ளும். கொஞ்சமாய் உன்மீது கொண்ட காதலோ, மொத்தமாய் உன்மத்தங் கொண்டு மோகித்து உருகவைக்கும். ஒற்றை வார்த்தைகள் கவிதைகளாகும். வெற்று வார்த்தைகள் கடிதங்களாகும். முத்தத் தீண்டல்கள் மோக மழையாகும்.

அங்ஙனமாய்க் காதலுற்று கண்மல்கி புன்சிரித்த உன்முகங்கண்ட நாளின் பின்னிரவில்... இக்கடிதத்தை எழுதத்துவங்குகிறேன். வார்த்தைகளிடத்தே தருணங்களும் , தருணங்களிடத்தே வார்த்தைகளுமாய்த் தோற்றுத் துவளுகிற பெருஞ்சுழலாய்க் கடந்தோடுகின்றன நாம் கைகோர்த்து அருகமர்ந்த மாலைகள். எதுவாகினும் எதிர்கொள்ளத் திண்ணம் கொண்டாலும், ஏதும் அவ்வாறு நிகழ்ந்து விடலாகாதென நான் வேண்டித் தொடங்கும் நெடும்பயணங்களுக்கு முன்பான மனநிலையை ஒத்தது தற்போதைய உன் மனநிலை.

இந்த என் இரவை உன் நினைவுத் தொடுகையால் நிறைத்து நிற்கிறாய் நீ. காரிருளில் கைப்பிடித்து காலம் மறந்து பறக்கக் காத்திருக்கிறேன் நான்.
உன் அருகாமையில் எப்போது முகம் பார்த்தாலும் நீ முன்பொருமுறை நாணிக் காண்பித்த உன் குழந்தைப் பருவத்துக் காணொளிக் காட்சி கண்முன்னே வந்து செல்கின்றது. எப்போதும் நீ எனக்காய் எங்காவது காத்திருப்பாயானால், கொஞ்சம் தூரத்திலிருந்தபடியே நீ எனக்காய் காத்திருக்கிருக்கின்ற அந்தக் காட்சியை நின்று நிதானித்து உள்வாங்கிக் கொள்வேன் நான். சுற்றம் முற்றும் மறந்தும், நீ தனித்ததோர் உலகத்தே புன்சிரித்து நகங்கடித்துக் காத்திருப்பாய். காற்றடிக்கும் பருவமாயின், உன் மேல் படர்ந்து  உன் ஃபெரோமோன்களின் வாசம் சுமந்தபடி கடந்து, பின் எனைத் தீண்டி நிறைக்கும் வாகில், திசைபார்த்தே உன்னருகே அமர்ந்துகொள்வேன் நான்.

கேள்விகளும் சிந்தனையும் பொருளற்று, ஒரு நிறைந்த மெளனத்தோடும் அணைப்போடும் கொஞ்சமாய் இடைவெளிவிட்டு நடக்கின்ற சிறுநடையோடுமே கடத்திக் கொண்டிருந்திருக்கிறோம் நமது சந்திப்புகளை. கடிதத்துக்கான வார்த்தைகளை ஒவ்வொன்றாய் தேடித் தேர்ந்து கோர்க்கக் கோர்க்க, வான் இருண்டு பெருமழை பொழியத்தொடங்குகின்றது. இதைப் படிக்கின்ற நொடியில் நீயுமே அந்த மழையில் நனையக்கூடும். முன்பொரு மழையிரவில் அந்த மழையும் குளிரும் எனக்களித்த கதகதப்பைப்பைப் பற்றி உன்னிடத்தில் பேசும்போது, நீ மழையிரவுகளை ஏன் வெறுக்கிறாயென என்னிடம் சொல்லியிருக்கிறாய். என்னை அணைத்ததாய் நானுணர்ந்த மழை, உனக்கு  தனிமையும் வீடுதிரும்பலுக்கான ஏக்கமும் நிறைந்ததான உன் பால்யத்து விடுதிநாட்களை நினைவுபடுத்துவதாக சொன்னாய். இனி வரும் நாட்களில் என்றாவதோர் மழைக்கால இரவில், நீ கண்டடையும் வெம்மை என்னுடைய இருப்பை மட்டுமே நினைவுபடுத்துமாயின் அதுவே போதுமானது எனக்கு.

இது நம்மிருவருக்குமேயான யுகங்களின் காத்திருப்பு. என் எல்லா நெடும் பயணங்களைப் போலவே மிகுந்த எதிர்பார்ப்போடும் தயாரிப்போடுமே நம்முடைய இந்த நீள் நெடும்பயணத்தையும் தொடங்கிக் காத்திருக்கின்றேன் நான்.  

உனக்காய் நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றேயொன்று தான். இங்கு நீயோ நானோ தனிப்பயணிகள் அல்ல...! 
சகபயணிகள்...! 

வாழ்ந்து தீர்ப்போம் வா...!

தீராக்காதலுடன்,
நான்.!! <3 nbsp="" p="">



Related Posts Plugin for WordPress, Blogger...