நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

புதன், 26 மே, 2010

எது அழகு - கருப்பு/சிகப்பு - ஒரு விளம்பர மாயை

சிறிது இடைவெளிக்குப் பிறகு இப்போது தான் பதிவிட நேரம் கிடைத்தது. நான் வெகு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்த ஒரு விஷயத்தைப்பற்றி இன்று  எழுதலாம் என்று இருக்கிறேன்.

இது விளம்பர யுகம். பொங்கித்தின்னும் அரிசியிலிருந்து போட்டு நடக்கும் செருப்பு வரைக்கும் எல்லா பொருட்களுக்குமே விளம்பரம். தகவல் தொடர்பு ஊடகங்களில் தங்கள் திறமைக்கும் வசதிக்கும் ஏற்ற மாதிரி விளம்பரம் செய்கிறார்கள்.குறைந்த நேரத்தில் நம் கவனத்தை நுகர்பொருளின் மீது திருப்ப பல்வேறு யுத்திகளை கையாள்கிறார்கள்.என்னதான் கருத்து சுதந்திரம் இருந்தாலும் சில நிறுவனங்களின் வர்த்தக விளம்பரங்கள் நிச்சயமாக சகிக்க முடியாதவை.

துணி சோப்பு விற்பவர்கள் நமது குடுமபத்தலைவிகளின் புத்திசாலித்தனத்தை குறிவைப்பார்கள்.  உ.ம்        "அறிவாளிகள் எப்போதும் இந்த சோப்பை தேர்ந்தெடுப்பார்கள். நீங்கள் எப்படி..?" இது போல. இதுவே ஒரு தவறான அணுகுமுறை என்பேன் நான்.தனிப்பட்ட ஒருவரின் அறிவு நிலையை மறைமுகமாக
கேலி செய்யும் தந்திரம்.

ஆண்களுக்கான நுகர் பொருட்களாகிய சோப்பு, சென்ட், பாடி ஸ்ப்ரே ஆகியவையின் விளம்பர யுக்தி இன்னும் அநியாயமானது...இவை பெரும்பாலும் "இந்த சோப்பு/சென்ட் உபயோகித்தால் பெண்கள் உங்கள் பின்னால் அலைவார்கள்/தேடி வருவார்கள்", என்ற நோக்கிலேயே எடுக்கப்படுகின்றன.இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.ஆண்களையும், பெண்களையும், அவர்களின் தனி மனித ஒழுக்கத்தையும் சீண்டிப்பார்க்கும் கேவலமான வேலை இது.

இவர்கள் அனைவரையும் விட மோசமானவர்களாகவும் கண்டனத்திற்குரியவர்களாகவும் நான் கருதுவது இந்த சிகப்பழகு கிரீம்கள் விற்பவர்களைத்தான். முதலில் இந்த சிகப்பழகு என்ற வார்த்தையே தவறானது; இவர்களின் பொருளை விற்பதற்காக போலியாக உருவாக்கப்பட்ட ஒரு மாயை. உண்மையில் அழகு என்பது தோலின் நிறத்தில், உடல் அமைப்பில் இல்லவே இல்லை.அழகு என்பதன் அடிப்படை கூறுகள் முற்றிலும் வேறுபட்டவை. தனிப்பட்ட ஒரு ஆணின்/பெண்ணின் அழகு என்பது எதிராளியின் பார்வையைப் பொருத்தது. அழகுக்கு அளவுகோல் வைப்பதே முதலில் தவறான ஒன்று.


ஒவ்வொரு தேசத்திலும் வாழும் மக்களின் உருவ அமைப்பு,தோலின் நிறம், உணவுப்பழக்கம் ஆகியவை தட்பவெப்ப நிலைகளுக்கேற்பவும், பருவ நிலை மாற்றங்களைப் பொறுத்துமே அமைந்தன. இது இன்று நேற்று நிகழ்ந்ததல்ல பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனிதன் பரிணாம வளர்ச்சியில் மாற்றம்(முன்னேற்றம்) அடைந்து உணவுக்காகவும் நீருக்காகவும் இடம் மாற ஆரம்பித்த பொழுதே நிகழத்துவங்கியது. உ.ம் பூமத்திய ரேகைக்கு அருகில் - சூரியனின் நேரடி வெப்பம் படும் - பகுதிகளில் உள்ளவர்களின் கரு நிற தோல்.வெப்பத்தைத் தாங்க மெலனின் அதிகம் சுரப்பதால். துருவ -பனி பிரதேசங்களில் - சூரிய வெப்பம் குறைவான பகுதிகளில் உள்ளவர்களின் வெளிர் நிறத்தோல் - அதிக வெப்பமில்லாமையால் மெலனின் அதிகம் தேவைப்படாது - ஆதலால் வெளிர் நிறம்.
ட்ராப்பிகல் ரீஜியன் எனப்படும் அதிக குளிரும் - அதிக வெப்பமும் அல்லாத மித வெப்ப பகுதியில் வாழும் (நம் நாட்டைப்போன்ற) மக்களின் கருப்பும் வெளுப்புமல்லாத மாநிறம். (தகவல் உதவி : பேராசிரியை.திவ்யா குருநாதன்.)

ஆதலால் ஒருவர் கருப்பாகவோ / நிறக்குறைவாகவோ பிறப்பது அவர்களின் குற்றமல்ல.அது இயற்கை.இதை மாற்ற அந்த க்ரீமாலும் முடியாது.நாலு வாரம்...ஆறு வாரம் என்பதெல்லாம் அவர்களின் பொருள் விற்கும் தந்திரம்.இவற்றை நம்பி யாரும் காசைக்கரியாக்க வேண்டாம்.அழகு என்பதை நாமாக வரையறுத்துக்கொள்ள வேண்டாம்.இந்த பதிவை நான் எழுதக்காரணமே சென்ற வாரம் தொலைக்காட்சியில் கண்ட ஒரு புது ரியாலிட்டி ஷோ தான். கொஞ்சம் நிறக்குறைவாகவும், பருமனாகவும், கருப்பாக இருக்கும் பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை அழகாக மாற்றுகிறேன் என்று கேமரா முன்பு நிற்கவைத்து, " நான் அசிங்கமாக இருக்கிறேன், அழகாக மாற வேண்டும் " என சொல்லவைத்து, அழவைத்து...."நீங்க அதிகம் சாப்பிட்டதுனால தான் இப்படி இருக்கீங்க.அதனால் இனிமே குறைச்சு சாப்பிடுங்க" என அவமானப்படுத்தி... ஸ்ஸ்ஸ்....அப்ப்பா... அவர்கள் செய்த அட்டூழியத்திற்கு அளவே இல்லை.அதில் வந்த எந்த பெண்ணும் என் கண்களுக்கு அசிங்கமாகத் தெரியவில்லை.அழகாய்த்தான் இருந்தார்கள்.சமூகத்தில் கருப்பு என்றால் அசிங்கம் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயலும் இவர்களை எதனால் அடித்தால் தகும்...??

பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளியுங்கள்.
உங்கள் கருத்துகளையும் பின்னூட்டங்களையும் ஆவலுடன் எதிர்நோக்கும்
- சுதர்

வியாழன், 6 மே, 2010

நாங்களும் பத்து வீடும்...எல்லா தெருவும்....


வீடுங்கறது எல்லா மனுஷனுக்கும் அடிப்படைத்தேவைகள்ள ஒன்னு... சொந்தமா ஒரு வீடு கட்டனும் / வாங்கனும்னு ஆசை இருக்கும்... அப்படி இல்லாதவங்க வாடகை வீட்லயோ இல்ல ஒத்திக்கோ வீடு புடிச்சு குடி போவாங்க.குறஞ்சது ஒரு அஞ்சு வருஷமாவது வீடு மாத்த மாட்டாங்க.ஏன்னா அது எவ்வளவு கஷ்டம்னு அவங்களுக்கே தெரியும். ஆனா எங்க வீட்டுக்கு மட்டும் இது வேற மாதிரி.நாங்க சொந்த வீட்ட விட்டு வந்ததுக்கு அப்புறம் ஒன்னு இல்லனா ரெண்டு வருஷத்துல அடுத்த வீடு மாத்துறதுனு..இப்போ ஒன்பதாவது வீட்டுல இருக்கோம்...


முதல்ல எங்க சொந்த வீடு...காரைக்காட்டுத்தெரு, திருமஞ்சன வீதி இந்த வரிசைல வர்ற நகரமட சந்துல இருந்தது...மூணு கட்டு வீடு அது...ரொம்ப பெருசு...அங்கே விளையாடுனது..அடி வாங்குனது... குடும்ப விழாக்கள்... வீட்டுல இருந்த சேகரி அத்தை, பத்மா அத்தை, உஷா சித்தி, வேம்பு சித்தி, பெரிய ஆத்தா, சின்ன ஆத்தா, எங்க சித்தப்பாவும் அவங்களோட தனி ரூமும், வீட்டு பின்னாடி இருந்த குளுந்தான் குளம், எங்களோட பழைய மோரீஸ் மைனர் கார் , என்னோட முதல் பிரெண்டு சிட்டு, அப்பாவோட செடாக் ஸ்கூட்டர், இப்படி எதையுமே மறக்க முடியாது...எங்க பழைய வீட்டை பத்தி எழுத ஆரம்பிச்சா அதையே தனி பதிவா போடலாம்.அப்போ ரொம்ப சின்ன பையன், ஆரூர் வித்யா மந்திர் ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தேன்.
அங்கிருந்து மடப்புரம் வீட்டுக்கு மாறும்போது ஏன் வீடு மாத்துனோம்னே தெரியாது.


மடப்புரம் வீடு அது பெரிய காலனி.எங்க வீடு முன்பக்கம் மடப்புரத்துல இருந்தது.பின்னாடி காலனி நீண்டு போயி ஜவுளிக்காரத்தெருவுல முடியும்.எனக்கு நெறைய நண்பர்கள் கிடைச்ச இடம் இது. சீனு, செந்தில், சின்ன சுதர்சன், ஜெயந்த், சிவா, தியாகு அண்ணன், மூர்த்தி அண்ணன், சுரேஷ் அண்ணன், ஹேமா அக்கா, சுஜா அக்கா, காஞ்சனா அக்கா...இப்படி நிறைய பேர்.சனி ஞாயிறு ஆனா எல்லாரும் சீனு வீட்டுல போயி கூடிடுவோம் சக்திமான், ஸ்ரீ கிருஷ்ணா, கேப்டன் வியோம் எல்லாம் பாக்குறதுக்கு.எங்க வீட்டுல டி.வி இருந்தது, இருந்தாலும் நண்பர்களோட பாக்குற மாதிரி வருமா... லீவு விட்ட கொண்டாட்டம் தான். கிரிக்கெட், ஒளிஞ்சான் புடிச்சான், லாக் அண்ட் கீ... இப்புடி அது தனி லிஸ்டு... அப்போ ஜெயந்த் நெறைய காமிக்ஸ் படிப்பான்...எங்களுக்கு மாயாவி கதை சொல்றது அவன் தான்...சீனு என்ன விட சின்ன பையன்..ஆனா நல்ல விளையாடுவான்...எனக்கு முதல் முதல்ல கிரிக்கெட் சொல்லித்தந்த குரு அவன் தான்.இப்போ வரைக்கும் நானும் கத்துக்கிட்டே தான்  இருக்கேங்குறது வேற விஷயம்...இதைப்பத்தி இன்னொரு பதிவுல சொல்றேன். அப்போ ஜவுளிக்காரத்தெருவுல டி.எம்.சி மருத்துவமனை கட்டிக்கிட்டு இருந்தாங்க...அங்க போயி பெரிய மணல் மேட்டுல குதிச்சு விளையாடுறது ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு எங்களுக்கு...
சாரு மேன்ஷன் காலனி...
இதுக்கு அடுத்ததா நாங்க போனது துர்காலயா ரோடு, சாரு மேன்ஷன் காலனிக்கு...37Mஅதான் எங்க வீட்டு நம்பர்.இங்க மொத்தம் 16 வீடு தான். நாங்க இருந்தது மாடியில.இந்த காலனிக்கு வந்து எனக்கு கிடைச்ச முதல் நண்பன் சதீஷ் ராஜா. அவன் படிச்சது பாய்ஸ் ஹைஸ்கூல்ல...நான் வேலுடையார் ஸ்கூல்... அவனுடைய நண்பர்களோட சேர்ந்து நானும் கிரிக்கெட் விளையாட முயற்சி பண்ணுவேன்...ஆனா எப்பவும் போல
விளையாடத்தெரியாம திட்டு வாங்கிட்டு மொக்கையா உக்காந்துடுவேன்.அப்போ எனக்கு என்ன பிரச்சனையா இருந்தாலும் அவன்கிட்ட தான் சொல்லுவேன். அவனும் நானும் எப்பவும் ஒண்ணா ரெஸ்லிங் (Wrestling) பார்ப்போம்...எப்போதும் ஒன்றாக சுத்துவோம்...இப்பவும் மறக்க முடியாத நாட்கள்....!!!!

காலனில இருந்த ஒவ்வொருத்தரையும் மறக்க முடியாது... அதுல முக்கியமானவர் யாருன்னு பாத்தா எங்க டாக்டர் அங்கிள் (ஜெயசேகர்)... இவர பத்தி பின்னாடி நிறைய சொல்ல வேண்டியது இருக்கு... சே குவேரா , மாசேதுங், மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், இவங்களோட புகைப்படத்தை எல்லாம் நான் முதல்ல பாத்தது இவர் வீட்டுல தான்...ரொம்ப எளிமையானவர்...பகுத்தறிவாளர்... எழுத்தாளர்...
பாரதியை அதிகம் விரும்பியவர்...தமிழ் பற்றாளர்...சத்தியமா இந்த மாதிரி ஒரு டாக்டர யாரும் எங்கயும் பார்த்திருக்க முடியாது... இன்னும் நிறைய சொல்லலாம்...
சாரு மேன்ஷன்ல நாங்க ரெண்டு வருஷம் இருந்தோம்...

அதுக்கப்புறம் திருமஞ்சன வீதி,  கீழ சன்னதித்தெரு, ராஜாத்தெரு, முதலியார் தெரு, மறுபடியும் சாரு மேன்ஷன், திரும்ப ராஜாத்தெரு இப்படியாக மாறி மாறி...கடைசியா இப்போ கே.டி.ஆர் எஸ்டேட்ல இருக்கோம்.... இதுல ஒவ்வொரு தெருவுலயும் நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க...

திருமஞ்சன வீதியில மகதி, வினோத், ராம்குமார்,விக்ரம்,ராஜேஷ்,....
சன்னதித்தெருவுல பாரத், பாரதி, ராம், மணி....இப்படி நிறைய பேர்.. இதுல அதிகமா செட் சேர்ந்தது ராஜத்தெருவுல தான்... சத்யா தான் எல்லாருக்கும் தலைவன் மாதிரி... அவங்க அப்பா எங்க அப்பாவோட ஒண்ணா பாங்க்ல வேலை செஞ்சாங்க... அதனால நானும் என் தம்பியும் சத்யாவோட அறிமுகமாகி நண்பர்கள் ஆயிட்டோம். என் தம்பி, சத்யா தம்பி சூர்யா, லாலா விக்கி, இவங்கல்லாம் ஒரு க்ரூப். நான், சத்யா, இளையராஜா,ரஞ்சித்,மணி, வடை தினேஷ், ராஜேஷ், கோழி சந்தோஷ்  நாங்க எல்லாரும் சேர்ந்தது ரொம்ப பெரிய கூட்டம்... என்னுடைய தெரு நண்பர்களோட அதிகம் சுத்துனதும், ரொம்ப என்ஜாய் பண்ணதும் இங்கே தான்... காகிதக்காரத்தெரு மாரியம்மன் கோவில் பக்கத்துல கிரிக்கெட் விளையாடுறது, கோவில் சாப்பாடு,  விடிய விடிய நியூ இயர் கொண்டாடியது, கண் முழிச்சு கம்ப சேவை பார்த்தது, தீமிதி திருவிழா ஆர்கெஸ்ட்ரா நடக்கும்போது ஆட்டம் போட்டு அழும்பு விடுவது... இப்படி நிறைய உண்டு...  

இரண்டாவது முறை ராஜாத்தெருவிலும், சாரு மேன்ஷனிலும் இருந்தபோது தான் என்னுடைய பெரும்பாலான கல்லூரி நாட்களை கழித்தது... எங்கள் வீட்டிற்கு எப்போதும் என் நண்பர்கள் வந்தபடி இருப்பார்கள்... தேர்வு நேரத்தில்தான் கூட்டம் அதிகமாக இருக்கும்.... விடிய விடிய படிக்க முயற்சி பண்ணுவோம்... ஆனா படிச்சதை விட  டீ போட்டு குடிச்சதுதான் அதிகமா இருக்கும்....

ஒவ்வொரு முறை வீடு மாத்தும்போது அம்மா படும் பாடு தான் பாவமாக இருக்கும்...எல்லாத்துலயும் அடுக்கி, எடுத்து வைத்து, பெட்டியில் கட்டி, சாக்கில் கட்டி, புது வீட்ல போயி திரும்ப எல்லாத்தையும் எடுத்து வச்சு, அடுக்கி....அப்பப்பா... இப்போ நினைச்சாலும் முடியல....எங்களுக்கு வீடு மாத்தி மாத்தி பழகிப்போய் அதுல ஒரு புரோபஷ்ஷனல் டச்சே வந்துடுச்சு...ஒவ்வொரு முறை வீடு மாத்தும்போதும் பொருட்களை குறைத்து கழித்து கட்டி விடுவோம்...எப்போ அடுத்த வீடு மாறப் போறோம்னு தெரியல... எல்லார் மாதிரியும் எதிகாலத்துல வீடு கட்டிடலாம்னு ஒரு கனவு இருக்கு... பார்க்கலாம்...!!!

உங்கள் கருத்துகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்... பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளியுங்கள்....  - சுதர்

சனி, 1 மே, 2010

Dasvidaniya - ஒரு மறக்க முடியாத படம்....

உங்களில் எத்தனை பேர் இந்த படத்தை பார்த்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. நிச்சயமாக இதை ஒரு இந்தி காமெடி படம் என்று நினைத்துதான் பார்க்க ஆரம்பித்தேன்.
ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு சிறந்த, கதையம்சம் உள்ள, உணர்வுப்பூர்வமான படமாக இருக்குமென்று நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

Dasvidaniya - The Best Good bye ever....

தஸ்விதானியா என்றால் ரஷ்ய மொழியில் குட்பை என்று பொருள். ஒரு மருந்து கம்பெனியில் Accounts Manager ஆகப் பணிபுரிகிறவர் நமது கதாநாயகன் அமர் கௌல் (வினய் பதக்). எந்த கெட்ட பழக்கமும் இல்லாத, பொய் வஞ்சம் எதுவும் தெரியாத, கோபப்படாத, எப்போதும் நோகடிக்கும் தனது முதலாளியை எதிர்த்துப்பேச தைரியம் இல்லாத... இப்போதுள்ள வாழ்க்கை முறைப்படி சொல்வதானால் மொத்தத்தில் பிழைக்கத் தெரியாத ஒரு மனிதன். காது கேளாத தனது தாயுடன் தனித்து வாழ்கிற ஒரு 37 வயது பிரம்மச்சாரி.தனக்கு வயிற்றில் அல்சர் இருப்பதாகச்சொல்லிய டாக்டரிடம் ரிப்போர்ட் வாங்கச்செல்லும்போது  தான் தெரிகிறது வயிற்றில் கேன்சர் என்று. மிகுந்த ஆயசத்துடனும் அழுகையுடனும் மருத்துவரிடம்  " எனக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை, சிகரெட் பிடித்ததில்லை, மது குடித்ததில்லை எனக்கு ஏன் கேன்சர் வரவேண்டும் என்று கேட்டுவிட்டு வெளியில் வரும் அவனுக்கு வாழ்க்கையே இருண்டு விடுகிறது.


அடுத்த நாள் காலையில் வழக்கம் போல் அவன் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிடும்போது அவனது மனசாட்சி அவன் முன்னே தோன்றி அவனை கேலி செய்கிறது.இன்னும் எத்தனை நாள் தான் இதே போன்று வழக்கமான வேலைகளையே செய்துகொண்டிருக்கப் போகிறாய் என கேட்கவும் அமர் வெடித்து அழுகிறான்.அதற்காக என்னை என்ன செய்யச்சொல்கிறாய்...ரோட்டில் பொய் துணியை கிழித்துக்கொண்டு போவோர் வருவோரிடமெல்லாம் நான் சாகப்போகிறேன் என சொல்லச்சொல்கிறாயா எனக்கேட்க, கடவுள் கொடுத்தது கொஞ்சம் தான் எனத்தெரிந்து விட்ட பிறகு எதற்காக நீ அழுகிறாய்...வாழ்கையை அனுபவித்துப்பார் எனச்சொல்ல....அமர் தான் சாவதற்குள் செய்ய வேண்டிய பத்து விஷயங்களை பட்டியலிடுகிறான்.


புது கார் வாங்குவது, முதலாளியை எதிர்ப்பது, வெளிநாடு செல்வது, கிடார் வாசிப்பது,
சிறு வயது தோழி நேஹாவிடம் காதலைச்சொல்வது, பால்ய நண்பன் ராஜீவ் ஜூல்காவைச் சந்திப்பது, அம்மாவை சந்தோஷப்படுத்துவது, குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற தன தம்பி விவேக்கை திரும்ப அழைப்பது, பேப்பரின் முதல் பக்கத்தில் தன புகைப்படம் வர வைப்பது என அந்தப்பட்டியல் முடிகிறது.


அமர் தான் சாவதற்குள் அத்தனையையும் நிறைவேற்றினானா என்பது மீதிப்படம்...
படம் நெடுகிலும் நகைச்சுவையுடன் கூடிய எளிமையான, உணர்வுப்பூர்வமான காட்சியமைப்புகளால் நம்மைக் கட்டிப்போடுகிறார் இயக்குனர்.ஏதோவொரு காட்சியில் நம் கண்கள் கலங்குவதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது...உதாரணம், கணவன்.. குழந்தை...
என செட்டில் ஆகி விட்ட தன சிறு வயது தோழியிடம் மழையில் நனைந்தபடி, வார்த்தைகளின்றி வெறும் கை அசைவினாலேயே தன் காதலை சொல்லும் காட்சி...

பால்ய நண்பனை சந்திக்க ரஷ்யா செல்வதும் அங்கே எதிர்பாராத விதமாக அந்த வீட்டை விட்டு வெளியேறுவதும்... அதற்குப்பின் கால் கேர்ல்ஸ் கூட்டத்திடம் ஒரு சச்சரவு ஏற்பட்டு அவர்களிடம் அடி வாங்கி அழும்போதும், பின் பாலத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயல அந்த கால் கேர்ல் கூட்டத்திலிருந்து ஒருத்தி (தத்யானா) வந்து கன்னத்தில் அறைந்து அவனை காப்பாற்ற அவளிடம் குலுங்கி அழும்போதும், அதற்குப்பின் அவர்களுக்குள் ஏற்படும் காதல் என அனைத்து இடங்களில் வினய் பதக்கின் நடிப்பு சத்தியமாய் ஈடு இணையில்லாதது...

அர்ஷத் சையதின் எளிமையான கதையை மிகத்திறமையாக இயக்கியிருக்கிறார் ஷஷாந்த் ஷா...நேஹாவாக வரும் நேஹா தூபியா, நண்பன் ராஜீவ் வாக வரும் ரஜத் கபூர், தீனி பண்டார முதளியாக சௌரவ் சுக்லா,  ரஷ்ய காதலி தத்யானாவாக வரும் ரஷ்ய பெண், கிடார் ஆசிரியர், தம்பி விவேக் என அனைத்து கதாபாத்திரங்களுமே மனதில் நிற்பவை...

படத்தில் கைலாஷ் கேரின் இசை பெரிய பிளஸ்... அமர் இறப்பதற்கு முன் தன் தம்பியோடு சேர்ந்து அம்மாவுக்காக கிடாரோடு பாடும் மேரி மா பாடல் ( கைலாஷ் கேர் குரலிலேயே)டாப் கிளாஸ்... அமர் இறந்த பின் அவனது நண்பனும் தம்பியும் அவனை பற்றி பேசும்போது வரும் பின்னணி இசையும் அதைத்தொடர்ந்து வரும் கிடார் தீமும் நிச்சயம் உங்கள் மனதில் நிற்கும்...  பாரஸ்ட் கம்ப் (Forrest Gump) போல படம் பார்த்த பின் ஒரு மனிதனின் வாழ்க்கையையே பார்த்த நிறைவைத் தருகிறது...நேரமிருந்தால் நிச்சயம் பாருங்கள்...

அந்த பாடல்...இங்கு...!!!


டிரைலர் இதோ.


உங்கள் கருத்துரைகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.... -சுதர்  
Images Courtesy: Original Uploaders
Related Posts Plugin for WordPress, Blogger...