முந்தைய படத்திற்கும் அடுத்த படத்திற்கும் இடைவெளி கொஞ்சம் அதிகமாக விட்டிருந்தாலும் கதையையும்,தமிழ் ரசிகர்களையும் நம்பி ஒரு அற்புதமான படைப்பை கையிலெடுத்து திரும்ப வந்திருக்கின்றார் பாலாஜி சக்திவேல். நிச்சயம் அவரது முயற்சியில் வென்றிருக்கின்றார் என்று தான் சொல்ல வேண்டும்.
தமிழ் சினிமாவில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்கையை பற்றி படங்களைத் தந்தவர்கள் வெகு சிலர் பாலா, வசந்த பாலன் (அங்காடித்தெரு).'காதல்' திரைப்படத்தின் மூலம் அந்த வெகு சிலரில் ஒருவரான பாலாஜி சக்திவேல் 'வழக்கு எண் 18/9 ' மூலம் தனக்கான இடத்தை உறுதி செய்திருக்கின்றார்.
வீட்டு வேலை செய்யும் ஜோதி என்ற இளம்பெண் முகத்தில் திராவகம் வீசப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவதில் கதை தொடங்குகின்றது.அதன் பின் காவல்துறையின் விசாரணையில்... நடைபாதைக் கடையில் வேலை செய்யும் வேலு அவன் பிழைப்பு தேடி வந்த கதையையும்,ஜோதியைக் காதலித்த கதையையும் இன்ஸ்பெக்டரிடம் சொல்வதோடு முதல் பாதி முடிகின்றது.திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் ஜோதி வேலை செய்த வீட்டாரின் மகள் ஆர்த்தி இன்ஸ்பெக்டரிடம் தனக்கு இன்னொருவன் மேல் சந்தேகம் இருப்பதையும் அதற்கான காரணத்தையும் தயங்கித்தயங்கி சொன்னபின் கதை கொஞ்சம் வேகமெடுக்கின்றது.. உண்மைக் குற்றவாளி யார்... ஜோதியின் நிலை என்னவானது... இந்த வழக்கு எண் 18/9 -இன் தீர்ப்பு என்னவானது என்பதெல்லாம் மீதிப்படம்.
யதார்த்த சினிமாவென்றால் என்னவென்று இளம் இயக்குனர்களுக்கு டியுஷன் எடுத்திருக்கின்றார் பாலாஜி சக்திவேல்.பாத்திரத்தேர்வு , கதை சூழல், திரைக்கதையில் பாத்திரங்களின் Perspective-ல் பயணிக்கின்ற Non-linear உத்தி..அத்தனையும் பிரமாதம் . வேலுவாகவே வாழ்ந்திருக்கின்றார் ஸ்ரீ...அத்துணை எதார்த்தமான நடிப்பு .கனா காணும் காலங்களில் இவரை பார்த்ததாக ஞாபகம்.
ஜோதியாக நடித்திருக்கும் ஊர்மிளா, ஹைக்ளால் ஸ்கூல் பெண் ஆரத்தியாக வரும் மனிஷா, பணக்கார பொறுக்கி விடலையாக வரும் மிதுன்....இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் முத்துராமன்... இப்படி முக்கிய பாத்திரங்களான அனைவருமே தங்கள் பங்கை வெகு சிறப்பாகச் செய்திருக்கின்றார்கள். திரைப்படத்தின் முடிவு நெஞ்சை உலுக்குவதாக இருக்கின்றது. கண்ணீர் விட வைத்து விட்டார் பாலாஜி சக்திவேல். ராஜன் அண்ணன் சொன்னது போல்," கலையின் உச்சபட்ச வடிவம் அந்த ஒரு துளி கண்ணீர் தானே...!!"
துணைப் பாத்திரங்களைப் பற்றி சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம்.. பாலியல் தொழிலாளி ரோசி, இட்லிக்கடை முதலாளி, கூத்துக்கார சின்னச்சாமி ,ஜோதியின் அம்மா...ஒவ்வொருவரும் ஆப்ட்டான தேர்வு. விஜய் மில்டனின் ஒளிப்பதிவு படத்தின் மிகப் பெரிய பலம்.
கூர்மையான வசனங்கள், உறுத்தாத பின்னணி இசை...கார்த்திக்கின் குரலில் இசையில்லாமல் வரும் ஒரு குரல் கேட்குது பெண்ணே,தண்டபாணி எழுதி பாடிய 'வானத்தையே எட்டிப் பிடிப்பேன்' தவிர தனிப்பாடல்கள் எதுவுமில்லை. படம் நெடுக ஒலிக்கும் 'வானத்தையே ' பாடலைக் கேட்கும்போதெல்லாம் ஒரு மாதிரி நெகிழ வைக்கின்றது.
மொத்தத்தில் வழக்கு எண் 18/9 ஒரு அருமையான திரையனுபவம்....!!!இந்த மாதிரி படங்களை திரையரங்கில் சென்று பார்த்து வெற்றி பெற வைப்பது தான் படைப்பாளிகளுக்கு நாம் கொடுக்கும் மரியாதை.
கண்டிப்பாக பாருங்கள்..!!
பின்னூட்டங்களில் உங்கள் கருத்துகளை மறக்காமல் தெரிவியுங்கள்...!!!
Image courtesy: Indiaglitz
கண்டிப்பாக பாருங்கள்..!!
பின்னூட்டங்களில் உங்கள் கருத்துகளை மறக்காமல் தெரிவியுங்கள்...!!!
Image courtesy: Indiaglitz
4 கருத்துகள் :
திரையரங்கில் சென்று பார்ப்பது நான் வசிக்கும் இடத்தில் சாத்தியமில்லை. எப்படியும் டிவிடியில் கட்டாயம் பார்த்துவிடுவேன். இம்மாதிரி முயற்சிகள் நிச்சயம் வரவேற்கப்படவேண்டும். விமர்சனத்திற்கு நன்றி.
படமும் அருமை...உங்களின் விமர்சனமும் அருமை,
@ஹாலிவுட்ரசிகன் நன்றி தல...!! :)
@கோவை நேரம் நன்றி நண்பரே..!! :)
கருத்துரையிடுக