நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

செவ்வாய், 24 மார்ச், 2015

The Invisible Other - தமிழ் சினிமாவில் சாதி - ஆவணப்படம்



நேத்து ரொம்ப முக்கியமான ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்.என்னால முடிஞ்சளவுக்கு என் நண்பர்களையும் வரச்சொல்லியிருந்தேன்.Catalyst Study Circle அமைப்பு ஏற்பாடு செஞ்சிருந்த 'The Invisible Other: Caste in Tamil Cinema' ன்னு ஒரு ஆவணப்பட திரையிடலுக்காக தான் இந்த நிகழ்ச்சி. அதைத் தொடர்ந்து அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் இயக்குனர் ரஞ்சித் பேசுறதாகவும் சொல்லியிருந்தாங்க.

ஆவணப்படம் பேசுற விஷயங்கள்...
  • ஐம்பது ஆண்டு கால தமிழ் சினிமாவுல சாதியின் தாக்கம் எந்தளவு இருக்கு ? 
  • பல்வேறு சாதிகள் திரைப்படம்ங்குற ஒரு கலை வடிவத்தை எப்படி தங்களுடைய சாதிகளை glorify பண்ணி பெருமையடிச்சுக்கறதுக்காக பயன்படுத்தியிருக்காங்க ?
  • இது சமூகத்துல பல்வேறு நிலையில இருக்குற மக்களை எப்படி போய் சேருது ? அதனால ஏற்பட்ற தாக்கம் என்ன ?
  • சாதி தொடர்பான விஷயங்களை திரைப்படங்கள்ல புகுத்துறதுக்கும் பேசுறதுக்கும் சென்சார் போர்ட் என்ன மாதிரியான பாரபட்சமான கெடுபிடிகளைக் கையாளுது ? 
  • அங்க இருக்கிற அதிகாரிகளுடைய அரசியல் பார்வை என்ன ? கொள்கை என்ன ?
  • தேவர்மகன் திரைப்படம் தொடங்கி இதுவரைக்கும் வெளிவந்த சாதி சார்ந்த விஷயங்களைத் தூக்கிப்பிடிக்குற திரைப்படங்கள் சொல்ல வர்ர விஷயம் என்ன?






நான் ஒரு வாரம் முன்னாடி தான் யூட்யூப்ல படத்தப் பாத்திருந்தேன்.இப்போ இருக்குற சூழ்நிலைக்கு இந்த மாதிரியான ஒரு ஆவணப்படம் ரொம்பவே அவசியம்னு தோணுச்சு.படம் சொன்ன விஷயங்கள் போக, இயக்குனர் ரஞ்சித் பேசுனது எல்லாமே ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயங்கள். அவர் பேசுனதுல எனக்கு ஞாபகமிருக்குறது கொஞ்சம்,

 “தலித் அப்டிங்குற வார்த்தையையே சினிமாவுல பயன்படுத்த முடியாது,அதுக்கே அவ்வளவு கெடுபிடிகள் இருக்கு.ஆனா மத்த இடைநிலை சாதிகள் பெயரை படத்துல சொல்றதுக்கோ அல்லது அவங்கவங்க சாதிகளைப் பத்தி பெருமையா பேசுறதுக்கோ எந்தத் தடையுமில்ல.அதனால யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல.”

”அதேமாதிரி ஒரு மதத்துல கல்வி மறுக்கப்படுற ஒருத்தனுக்கு, அந்த கல்வியையும் சமூக அங்கீகாரத்தையும் வேற மதம் குடுக்குதுன்னா அத அவன் மேல வரதுக்கான ஒரு வாய்ப்பா தான் பாக்குறான்.அந்த மதத்தை தேர்ந்தெடுத்துக்குறதுக்கான எல்லா உரிமையும் அவனுக்கு இருக்கு.அதை தப்பா பேசவேண்டிய அவசியம் என்ன இருக்கு?”

”ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவங்களைப் பார்த்து தயவு செஞ்சு பரிதாபப்படாதீங்க.அதே மாதிரி அவங்களுக்கான பிரச்சனையை நீங்க அவங்ககிட்ட தான் பேசனும்னு இல்ல,அவங்களுக்கு அவங்க பிரச்சன என்னன்னு நல்லாவே தெரியும்.அதுக்கான தீர்வுகளை ஒரு அமைப்புக்குள்ள இருக்க நீங்க தான் கொண்டுவர முடியும்.”

"தமிழ் திரை உலகத்துல ஒரு iconic ஸ்டேட்டஸை அடைஞ்சிட்டதா சொல்லப்பட்ற இயக்குனர்கள் பெரும்பாலானவங்க அவங்க படங்களை அப்பட்டமான ஒரு சாதிமத சார்போட தான் எடுக்குறாங்க.தங்களுடைய சாதிப்பெருமையை நேரடியாவே தங்களுடைய படங்கள் மூலமா பேசுறாங்க.அவங்களை எந்த ஊடகமோ பத்திரிக்கையோ எந்தக் கேள்வியும் கேக்குறதில்ல.என்ன மாதிரி இருக்குறவங்க கிட்ட தான் தேடி வந்து கேப்பாங்க. ”

இன்னும் நிறைய முக்கியமான விஷயங்களைப் பேசுனாரு. ’நான் மகான் அல்ல’ படம் வெளிவந்தப்போ கருந்தேள் ராஜேஷ் எழுதுன விமர்சனத்தைப் படிச்சுட்டு அதுக்காக இயக்குனர் சுசீந்திரனுக்கு தான் எழுதுன கடித்தை ராஜேஷுக்கு அனுப்பியதையும் , அதை  ராஜேஷ் அவருடைய தளத்துல வெளியிட்டப்போ அதுக்கு வந்த எதிர்வினைகளையும் பத்தி குறிப்பிட்டு சொன்னாரு.பெரும்பாலானவங்க ‘நீங்க தலித்தா இருக்குறதனால எல்லாத்தையும் அதே கண்ணோட்டத்துல பாக்குறீங்க’ன்னு குறை சொன்னதாக சொன்னாரு.

நேரம் கிடைச்சா அந்த ஆவணப்படத்தை யூட்யூப்ல பாத்துடுங்க. எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம், இயக்குனர் ஜனநாதன், நடிகர் நாசர், அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள், சில பேராசிரியர்கள், அரசு அதிகாரிகள்னு பல்வேறு தரப்பு மக்களுடைய கருத்துகள், திரைப்படக் கல்லூரி மாணவர்களுடைய விவாதம், தமிழ் திரைப்படங்கள்ல இதுவரைக்கும் வந்த சாதி தொடர்பான க்ளிப்பிங்க்குகள்னு நிறைய தகவல்களை கோர்வையா சொல்லியிருக்காரு இந்த ஆவணப்படத்தை இயக்கிய சுரேஷ். அவருடைய வலைத்தளம் இங்கே.
Catalyst Study Circle அமைப்புடைய ஃபேஸ்புக் பக்கம் இங்கே.

'The Invisible Other: Caste in Tamil Cinema'




வியாழன், 19 மார்ச், 2015

புல்லட்டுப் பாண்டியின் கதை


பெரும்பாலானவங்களுக்கு மோட்டர்பைக் மேல ரொம்ப சின்ன வயசுலயே ஒரு விருப்பமும் ஆர்வமும் வந்துடும்.அதுக்குக் காரணமா நம்ம அப்பாவுடைய ஸ்கூட்டரோ, இல்ல மாமாவுடைய  யமஹாவோ எதுவா வேணா இருக்கலாம். எனக்கு அப்டி மொத மொதல்ல அறிமுகமானது ராஜ்தூத் வண்டிதான். (வழக்கம்போல) என் தாய் மாமாவுடைய வண்டி அது. சாவித்துவாரம் ஹெட்லைட் மேல இருக்கும். சாவி சின்னதா சுத்தியல் மாதிரி தலைல ஒரு கொண்டையோட இருக்கு. சின்ன வயசுல, டேங்க்ல பெட்ரோல் வாசனைய மோப்பம் பிடிக்கிறது, ஸ்டாண்ட் போட்ட வண்டி மேல ஏறி போஸ் குடுக்குறதுன்னு எல்லா கிறுக்குத் தனமும் பண்ணிருக்கேன்.வித்தியாசமான சத்தம் அந்த வண்டியோடது.மாமாவுடைய மொத்த குடும்பத்துக்கு எமோஷனலி வெரி அட்டாச்டு வண்டி.

 அப்புறம் ரொம்ப கவர்ந்த வண்டின்னா அது யமஹா தான்.80கள், 90கள்ல பிறந்தவங்கள்ல யமஹா RX 100ஐ பிடிக்காதுன்னு இதுவரைக்கும் யாரும் சொல்லிக் கேட்டதில்ல.அந்த இஞ்சின் சத்தமும், உறுமலும்...! வாய்ப்பேயில்ல. நான் மொத மொதல்லப் பாத்தது எங்க ஊர்ல ஒரு மெடிக்கல் ஷாப் ஓனர் பையன் ஓட்டிதான். சும்மா தாறுமாறா பறப்பாப்ள.

இதுல அந்த பைலட் வண்டிங்க இல்ல :( :(
புல்லட் எனக்கு அறிமுகமானது ரொம்ப லேட்டுதான்.ஆனாலும் எல்லாரையும் போல அந்த வண்டியை தனியா கவனிக்க வெச்சது அந்த ’டுப்...டுப்..டுப்..’சத்தம் தான். திருவாரூர் அல்லது சுத்துவட்டார மக்களுக்கு அங்க நடக்குற காணும் பொங்கல் மோட்டார்சைக்கிள் ரேஸ் பத்தி கண்டிப்பா தெரிஞ்சிருக்கும் .100சிசி மொபெட்டுகளுக்கான பந்தயம் நடக்கும் போது அந்த வண்டிகள்லாம் வர்ரதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி ரோட்ல ரெண்டு பக்கம் நிக்கிற கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் ஒரு பாதுகாப்புக்காகவும் ரெண்டு பேர் புல்லட்ல செம்ம வேகமா வருவாங்க. அந்த வண்டிகளுக்கு பைலட் வண்டின்னு பேரு.அது வந்தா பின்னாடி ரேஸ் வண்டி வரப்போகுதுன்னு புரிஞ்சுக்கலாம்.அந்த ரெண்டு புல்லட்டும் சும்மா அதிர அதிர வரதப் பாத்து ஊரே வாயப் பொளக்கும். அத ஓட்டுறதுக்கு உள்ளூர் அரசியல்வாதிகளுடைய ஜம்போ பாடிகார்ட்ஸ் மத்தியில செம்ம போட்டி நடக்கும். அப்படியாப்பட்ட ஒரு காணும் பொங்கல் ரேஸ்ல தான் நான் மொத மொதல்ல புல்லட்டப் பாத்தது. அப்போ எங்கப்பாட்ட இருந்தது வெஸ்பா ஸ்கூட்டரு.Obviously மனசு புல்லட் பக்கம் சாய்ஞ்சுடுச்சு.இப்படியாக என் வாழ்க்கைல நான் மூனாவதா பாத்து அசந்த புல்லட்டு.. என் மனச முழுசா ஆக்கிரமிக்க ஆரம்பிச்சுது.

ஸ்டாப் ப்லாக்ல... நான் இப்போ பெரிய பையன் ஆயிட்டேன்.காலேஜ் போக ஆரம்பிச்சாச்சு.ஆனாலும் வண்டி வாங்கவுமில்ல ஓட்டவும் கத்துக்கல.என் தோஸ்த்து சிவாவுடைய கேலிபர்ல தான் வண்டியோட்டிக் கத்துகிட்டதெல்லாம்.அப்போ சிவராஜ்னு இன்னொரு பங்காளி ஒரு யமஹா RX100 வாங்குனான்.என் வாழ்க்கைல மறுபடி வந்துச்சு யமஹா.வண்டிய வாங்குன அசல் விலைய விட 23 மடங்கு அதிகமா செலவு பண்ணிருப்பான் அதுக்கு.அத்தன ஆக்சிடண்ட். அத்தன் ரீமாடல்.அந்த வண்டிய அப்போ எனக்கு ஸ்டார்ட் மட்டும் தான் பண்ண முடியும். கியர் போட்டு க்ளட்ச்ச விட்டா வண்டி ஆஃபாயிடும்.கருமம்...!அவ்ளோ சென்சிடிவ் அது.செம்ம பிக்கப் வேற. எல்லாரும் தாறுமாறா கலாய்ப்பானுக.வண்டிய நீ ஒரு பத்தடி மூவ் பண்ணிட்டேன்னா ஒரு நாள் பூரா உங்கிட்டயே குடுத்துடுறேன்னு எம்மேல நம்பிக்கையா பெட்டு வேற கட்டுவான் சிவராஜ்.நமக்கு... ஊஹும்... ஸ்டார்ட்டு....கியரு..க்ளட்ச்சு... டுஜுக்; ஸ்டார்ட்டு....கியரு..க்ளட்ச்சு... டுஜுக்; போகாது ஜீவாஆஆஆ தான்.

அப்போ எங்க க்ருப் பசங்கள்ல புல்லட் ஓட்னவங்க ரெண்டே பேர் தான்.ஒருத்தன் திலீபன்.இன்னொருத்தன் விஜய். திலீபன் ஸ்கூல் படிக்கும்போதே புல்லட்ல போறவன்.பட்டைய கெளப்புவான்.அப்போ அவ்வளவா பழக்கமில்ல.ஆனா ஏரியால அடிக்கடி பாப்பேன். விஜய் ஓட்டுனது அவன் ஃப்ரெண்டோட புல்லட்டு; 86 மாடல் - சும்மா ரதம் மாதிரி இருக்கும்.அப்பப்போ பசங்க தங்கியிருந்த ரூம்க்கு எடுத்துட்டு வருவான்.அவன்கிட்டேயும் கெஞ்சுவேன் ஒரு ரவுண்டு டா ன்னு. இந்தான்னு வண்டிய கைல குடுத்துட்டு.. செண்டர் ஸ்டாண்ட் போட்டுடு.சாவியக் குடுத்துர்ரேன்னு சொல்லுவான்.அப்போ நா இருந்த பாடி கண்டிஷனுக்கு  (56 கிலோ) வண்டிய என்னால தாங்கிப் பிடிக்கவே முடியாது.சோ.. மூஞ்ச தொங்கப்போட்டுட்டு வண்டியக் குடுத்துடுவேன்.


அடுத்த ஸ்டாப் ப்லாக்...!காலேஜ் முடிஞ்சு சென்னைப் பயணம்...மொதல் வேல... வேற வேல... வீடு மாற்றம்..ஏரியா மாற்றம்... ஃபேமிலி ஷிஃப்டிங்.எல்லாம் ஆச்சு.அப்பவும் நான் வண்டி வாங்கல.MTC அண்ட் எலெக்ட்ரிக் ட்ரெய்ன் துணைன்னு பொழப்பு போச்சு.அப்போ எங்க அத்தாச்சிக்கு கல்யாணமாகி எங்க வீட்டுக்கு பக்கத்து தெருவுல குடிவந்தாங்க. எங்க அண்ணன் புது மாப்பிள்ளை, அது வரைக்கும் பேச்சுலரா தங்கியிருந்த வீடு அது. அவர் ஒரு வண்டி வெச்சுருந்தாரு. கறுப்புக் கலர்..ஷார்ட்டா.. கொஞ்சம் பழசா.. வேறென்ன.. சாட்சாத் யமஹாவேதான். ஆனா RX-135.சரி அண்ணன் வண்டிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டீங்கன்னா.. கனெக்‌ஷன் இருக்கு. அண்ணன் ஃபேமிலிமேன் ஆகிட்டதால புது வண்டி வாங்க வேண்டிய peer pressure. So, ஒரு புது பச்சை passion வந்து எறங்குச்சு.அப்புறம் யமஹாவை யாரும் சீண்டல. எங்க வீடு பக்கம்ங்குறதுனால அண்ணன்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி அடிக்கடி ஒட்டிட்டு போய்டுவேன். என் மச்சான் சென்னை வரும்போது மட்டும் நானும் அவனும் சேந்து சுத்துவோம்.மத்த நேரத்துல எங்க வீட்லதான் இருக்கும். 

இந்த RX135யா நான் ஓட்டுன அந்த டைம் பீரியட் ஒரு மிக மிக முக்கியமான காலகட்டம் எனக்கு. சென்னைய நெறைய சுத்தவேண்டியிருந்துச்சு.மறக்க முடியாத சில அதிகாலை ரைடெல்லாம் அதுல தான்.அதனால அந்த வண்டி கூட ஒரு மாறி எமோஷனலா அட்டாச் ஆகியிருந்தேன். அப்புறம் வேற காரணங்களால அந்த வண்டி சொந்த ஊரான பாண்டிச்சேரிக்கே பயனமாச்சு.நான் மறுபடியும் பைக்கில்லாத பக்கியா.. தனிமரமா நின்னேன்.லவ் ஃபெயிலியரானவங்க கொஞ்ச நாள் எந்த ஜோடியப் பாத்தாலும் கடுப்பாகுற மாதிரி எந்த வண்டியப் பாத்தாலும் உக்கிரமா மொறச்சுட்டு மூஞ்ச திருப்பிக்குவேன்.அப்புடியே சில வருஷங்கள் போச்சு.வேற ஆஃபிஸ் மாற வேண்டிய நேரம்.

குருவிக்குக் கூட கூடு இருக்கிறது..உங்களுக்கென்று ஒரு வீடு வேண்டாமா ரேஞ்சுல பார்க்குமிடமெங்கும் நீக்கமற பைக் விளம்பரங்கள்.சரி எதானாலும் ஆச்சு இந்த வருஷம் வண்டி வாங்கியே தீரனும்னு கொஞ்சம் காசு சேக்க ஆரம்பிச்சேன்.அதுவும் புல்லட்டே தான் வாங்கனும்னு முடிவு பண்ணேன்.அம்மா அப்பாவும் உன் இஷ்டம்ப்பான்னு க்ரீன் சிக்னல் குடுத்துட்டாங்க.சில மாதங்கள்...ஓரளவு டீசன்ட் அமவுண்ட் சேந்ததும் வண்டி ரேட் விசாரிக்க ஆரம்பிச்சேன். அடுத்த பகீர்.நான் சேத்த அமவுண்டு வண்டியுடைய மொத்த விலைல 40% தான்.ரைட்டு லோன் போடுவோம்னு முடிவு பண்ணி லோனப் போட்டு, ஒருவழியா துட்டு ரெடி பண்ணிட்டு அம்மாவக் கூட்டிட்டு விருகம்பாக்கம் புல்லட் ஷோரூமுக்கு போனேன். எல்லா மாடலையும் வளைச்சு வளைச்சு பாத்துட்டு..ஆங் இதெவ்ளோ,,, ஓகோ..செல்லாது செல்லாது..ன்னு ஒவ்வொன்னா ஒதுக்கி.. கடேசியா Black Electra ன்னு முடிவு பண்ணி புக் பண்ணா...அடுத்த குண்டு; மூனு மாசம் வெய்ட்டிங்.சரி பரவால்லன்னு புக் பண்ணியாச்சு.நிச்சயதார்த்தம் முடிஞ்சு கல்யாணத்துக்குக் காத்திருக்குற ஃபீலிங்கு.என் அதிர்ஷ்டம் புக் பண்ணி பதினெட்டாவது நாள் ஷோரூம்லேர்ந்து ஒரு ஃபோன் கால்.”சார் உங்களுக்கு முன்னாடி புக் பண்ணவரு லோன் அரேஞ்ச் பண்ணல.நீங்க கேஷ் ரெடியா வெச்சுருந்தீங்கன்னா நாளைக்கே வண்டிய எடுத்துக்கலாம்”னு காதுல தேனை பாய்ச்சுனாங்க. என்ன ஒரு ஆனந்தம் எனக்கு.. தக தகன்னு குதிச்சு ஒடிப்போய் FD போட்ருந்த மொத்த துட்டையும் தொடச்சு எடுத்து.செக் ரெடி பண்ணிட்டு அன்னைக்கு சாய்ந்திரமே ஷோரூம்ல குடுத்துட்டேன்.ரெஜிஸ்ட்ரேஷனுக்கு மூனு நாள் ஆகும்னு சொன்னாங்க. என்னடா இது சுதர்சனுக்கு வந்த சோதனைன்னு நொந்துகிட்டு இன்னொரு மூனு நாள் தானன்னு பல்லக் கடிச்சுகிட்டு வெய்ட் பண்ணேன். 


கடேசியா..அந்த நாளும் வந்திடாதோன்னு ஏங்குன அந்த நாள் வந்துச்சு.எனக்கே எனக்குன்னு நான் வண்டி வாங்குன..அதுவும் புல்லட்டே வாங்குன நாள்.காலைலேயே ஃபோன் பண்ணிட்டாங்க வந்து வண்டிய எடுத்துக்கச் சொல்லி. சாயந்திரமா என் ஃப்ரெண்டு சந்தோஷ கூப்டுகிட்டு அங்க போனேன். இஞ்சியர் சின்னதா ஒரு ஹேண்ட்லிங் இன்ஸ்ட்ரக்‌ஷன் அண்ட் இண்ட்ரோ குடுத்து முடிச்சுட்டு.வண்டி சாவிய என் கைல குடுத்தாரு. நான் அத சந்தோஷ் கைல குடுத்து ‘மாப்ள..வண்டிய எறக்குடா’ன்னேன்.’டேய்.. சும்மா நீயே எறக்குடா.. ஏறு இந்தா’ன்னு திருப்பி என் கைல குடுத்தான். வண்டியில ஏறி உக்காந்து சாவியப் போட்டு ஸ்டார்ட் பண்ணி ஷோரும்லேர்ந்து ரோட்ல எறக்குன அந்த செகண்ட் எனக்கு கண்ணே கலங்கிடுச்சு.

அம்மாவோட கண்டிஷன்னால கோயில் பூஜைன்னு எல்லாத்தையும் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து.அம்மாவ ஒரு ரவுண்ட் கூட்டிட்டுப் போனேன்.ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட்டு காம்ப்ளான் விளம்பரம் பாத்துட்டு மல்லுக்கட்டி அவங்கள சைக்கிள்ள உக்காரவெச்சு டபுள்ஸ் அடிச்சப்போ என்னா ரியாக்‌ஷன் குடுத்தாங்களோ அதே ’கண்ல தண்ணி-ஹமாம் அம்மா’ ரியாக்‌ஷன்.அந்த நாள் தொடங்கி இந்த மூனு மாசத்துல அப்படி இப்படின்னு இன்னையோட வெற்றிகரமா ஐயாயிரம் கிலோ மீட்டர் ஓட்டி முடிச்சுட்டேன். அது குடுக்குற சந்தோஷத்தையும்..நம்ம கஷ்டப்பட்டு வாங்குனதுங்குற தட் மொமன்ட்டையும் ரசிச்சு ரசிச்சு அனுபவிச்சுட்டு இருக்கேன்.அதாகப்பட்டது...நாஞ்சொல்லவந்தது என்னன்னா.... பைக் வாங்குங்க பாஸ்... லைஃப் நல்லாருக்கும். :) :) :)

செவ்வாய், 17 மார்ச், 2015

ஆத்மாநாம், குமாரசாமி, எஸ்.ரா மற்றும் நான்


Pic Courtesy: www.artfire.com
நான் நிறைய கவிதைகள் படிச்சதில்ல. கவிதை படிக்க ஆரம்பிச்சது (வழக்கம் போல) வைரமுத்துல இருந்து தான். “தமிழ்ரோஜா...பொறுக்கி எடுத்த உலக அழகுகளை...நெருக்கித் தொடுத்த நேர்த்தியான சித்திரம் அவள்’ன்னு பேஸ் வாய்ஸ்ல பேத்திகிட்டு திரிஞ்சேன்.அப்புறம் மிஞ்சிப் போனா காலேஜ் படிக்கும்போது தபூசங்கருடைய காதல் கவிதைகள் கொஞ்சம் எளிமையா இருந்ததுனால நெறைய படிச்சிருக்கேன்.அப்புறம் அறிவுமதி எழுதுன ‘நட்புக்காலம்’னு ஒரு கவிதைத் தொகுப்பு என்னுடைய ‘தோழி’களுக்கு பரிசா கொடுக்க அதப் படிச்சு அதுவும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. கட்டக் கடைசியா நா.முத்துக்குமாருடைய ’அணிலாடும் முன்றில்’. படிச்சது பூராவுமே கிட்டத்தட்ட விகடன், வாரமலர் கடைசிப் பக்கம் டைப், கண்ல தண்ணி வெச்சுக்குற கவிதைகள் தான்.

சென்னைக்கு வந்து இலக்கிய படிப்பாளிகள் சகவாசம் ஓவரானதுக்கப்புறம் தான் மனுஷ், ரமேஷ் பிரேதன், பிரமிள், ஆத்மாநாம் னு தினுசு தினுசா கவிஞர்கள் பெயரெல்லாம் பரிச்சயமாச்சு (கவிதைகள் ஆகல).ஏதோ நமக்கு புரியுற அளவுக்கு கொஞ்சமா மடக்கி மடக்கி எழுதியிருந்தா கண்டிப்பா படிச்சுப் பாப்பேன். லதாமகன் அண்ணாத்த அவரோட ப்லாக்ல தினம் ஒரு கவிதைன்னு எழுத ஆரம்பிச்சப்புறம் இந்த ஆர்வம் இன்னும் அதிகமாச்சு.அந்த ருசி புரிய ஆரம்பிச்சுது. (பாதியில கடைய மூடிட்டாப்ல). ஆனாலும் ஸ்பெஷல் தரிசனம் பாக்குற பக்தனாட்டம் கவிதைகள தூரத்துலேர்ந்து பவ்யமா பாத்து கும்புட்டுட்டு பம்மிகிட்டு ஓடிட்டே இருப்பேன்.

இப்போ எதுக்கு இவ்ளோ பில்டப்புன்னா.. அதுக்குக் காரணம் சமீபத்துல படிச்ச ஒரு சிறுகதைதான். யார்ராவன் சரியான ’கேடிகள குறிவெச்சு’ பிடிக்கிறவனா இருப்பாம் போல.. கதையப் பத்தி எழுத வந்துட்டு கவிதைக்கு என்னா பில்டப்பு வேண்டியகிடக்குன்னு காய்ச்சிறாதீங்க.இந்த சிறுகதைக்கும் கவிதைக்கும் கனெக்‌ஷன் இருக்கு. எஸ்.ரா எழுதுன ஆத்மாநாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி’ங்குற  கதைய சில நாட்களுக்கு முன்னாடி படிச்சேன்.ஜோதின்னு ஒருத்தன் ஃப்ளைட்ல போய்ட்டிருக்கும்போது திடீர்னு அவனுடைய காலேஜ் ஜூனியர் குமாரசாமியப் பத்தி நெனச்சுப் பாக்க ஆரம்பிக்கிறான். குமாரசாமி ஒரு கவிதைப் பித்தன். ஆத்மாநாம் உபாசகன். கவிதைகளோடே வாழ்கிறவன்.ஜோதி, கொஞ்சம் ’என் படிப்பு..என் வாழ்க்கை’ டைப்பு.இவங்களுக்குள்ள அடிக்கடி நடக்கிற உரையாடல்கள்.
அப்பப்போ குமாரசாமி மேற்கோள் காட்டுகிற ஆத்மாநாம் கவிதைகள்.அதுக்கு ஜோதியுடைய எதிர்க்கேள்விகள்; அப்புறம் வாழ்க்கையுடைய வெவ்வேற காலகட்டத்துல இவங்க ரெண்டு பேரும் சந்திச்சுக்கிறது; குமாரசாமி குடும்பஸ்தனா மாறுறது;ஆனாலும் கவிதைப் பித்து விடாம இருக்குறது; ஒரு கட்டத்துல ஜோதியுடைய வாழ்க்கைலேர்ந்து குமாரசாமி இல்லாமலே போறது.ஃப்ளைட்ல அவன் ஞாபகம் வந்து ஜோதி திடீர்னு சொல்ல ஆரம்பிக்கிற ஆத்மாநாமின் கவிதையும்.. அதைக் கேட்டுகிட்டு பக்கத்து சீட்ல உக்காந்திருக்குற ஜப்பான் காரரின் அறிமுகமும்.. ஃப்ளைட் விட்டு இறங்கும்போது அவர் ஜோதியிடம் சொல்கிற வார்த்தையும், அதுக்கப்புறம் ஜோதியுடைய மனநிலையும் தான் இந்தக் கதை. (ஒரு வழியா சுருக்கி சொல்லிட்டேன்)

இதுல எனக்குப் பிடிச்சது அல்லது என்னை யோசிக்க வெச்சதுன்னு சில் விஷயங்கள சொல்லலாம்.கீழ இருக்குற கதைல வர்ர உரையாடல்கள பாருங்க


//“நீ பேசுவது புரியவில்லை“


“சராசரிகளின் பேச்சை கேட்டுப் பழகியது உங்கள் தவறு“ என்றான் குமாரசாமி


“சராசரியாக இருப்பது ஒன்றும் சாதாரணமில்லை குமார்“


“கரெக்ட் சீனியர் அது தான் பிழைக்கத் தெரிந்த மனிதனுக்கான பொது அடையாளம். சராசரிகள் பிறப்பதில்லை, உருவாக்கபடுகிறார்கள். “

“இப்படி பேசுவதற்கு ஆத்மாநாம் கற்றுக் கொடுத்திருக்கிறானா“ எனக்கேட்டான் ஜோதி

“சீனியர், கோப்ப்படுகிறீர்களா, சராசரி என்ற வார்த்தையை யார் கேட்டாலும் கோபம் கொண்டுவிடுவார்கள், சராசரியாக வாழ்வதற்கு நிச்சயம் திறமை வேணும் சீனியர், எனக்கும் அப்படி வாழ ஆசையாகத் தானிருக்கிறது“ என்றான்

“இப்போது தான் சராசரிகளுக்கு எதிராகப் பேசினாய், அதுக்குள் என்ன“

“இயலாதவன் அப்படியும் பேசுவான் இப்படியும் பேசுவான்“ எனச்சிரித்தான் குமார் //


//“ஒரு அவசியமில்லை, பெரும்பான்மையினர் இப்படித் தானிருக்கிறார்கள், அப்படியே இருநதுவிட்டால் அதிர்ஷடம். உலகம் அப்படியே இருக்கவிடாது, யோசிக்கச் சொல்லும், பிரச்சனைகளில் தள்ளி யோசிக்க வைக்கும், ஒருவேளை யோசிக்கத் துவங்கிவிட்டால் உருப்படாமல் போய்விடுவாய் என ஒடுக்கவும் செய்யவும்“


“குமார், நீ நிறைய உன்னைப் பற்றி யோசித்துக் குழம்பிப் போயிருக்கிறாய்.இதை எல்லாம் உன் ஐம்பது வயதில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே, இப்போதைக்குப் போய்ப் படிக்கிற வழியைப் பார்“


“சீனியர், ஐம்பது வயசில் ஒருவன் தன்னைப் பற்றி யோசிப்பது பயத்தால், அதுவும் சாவு மீதான பயத்தால், நான் வாழும் போது என்னைப் பற்றிப் புரிந்து கொண்டு வாழ ஆசைப்படுகிறேன். “//

கதைல இருக்குற கவிதை படிக்கிறவன் கடைசி வரைக்கும் பிச்சைக்காரனா திரிவான்ங்குற க்ளிஷேவ விட்டுடுங்க. ஒட்டுமொத்தமா இந்த சிறுகதை தந்த உணர்வு இருக்கே...செம்ம...!! நெறைய யோசிக்க வெச்சுது என்ன. இந்த கதைல வர உரையாடல்கள் எல்லாம் குமாரசாமி, ஜோதிங்குற ரெண்டு தனிப்பட்ட மனுஷங்களோட பேச்சா தெரியல எனக்கு. ஒரே மனுஷனுடைய இரண்டு மனநிலைகள் தான்னு தோணுது. நம்ம எல்லாருக்குள்ளேயுமே கோப்பையில் கனவுகளை நிரப்பித் திரிகிற ஒரு கற்பனாவாதியும்... வியர்த்து வழிய, சோத்துக்காகவும் சர்வைவலுக்காகவும் சுற்றியுள்ள எதையுமே பொருட்படுத்தாமல் ஓடிக்கொண்டிருக்கிற ஒரு பிழைப்புவாதியும் இருந்துகிட்டே இருக்குறதாத்தான் நான் நினைக்குறேன். அந்த ரெண்டு பேருக்குமான போட்டியும்.. வாதமும்.. தர்க்கங்களும்... வேற வேற. சர்வைவலுக்காக கனவுகளையும் கற்பனைகளையும் பொதச்சிட்டு ஓடுறவன உலகம் ஜெயிச்சவனா பாக்குது.ஆன உள்ளுக்குள்ள நிம்மதியில்லாம் திரியுறான் அவன். எதைப்பத்தியும் கவலைப்படாம பொறுப்புகளிலிருந்து தன்னை விடுவிச்சுகிட்டு கவிதையிலயும் கற்பனையிலயும் அது தர்ர போதைலயும் திரியுரவன் உள்ளுக்குள்ள ரொம்ப சந்தோஷமா இருக்கான்.ஆனா வெளில பைசாவுக்கு பிரயோஜனமில்லாத ஒரு உதிரியா பார்க்கப்பட்றான். இந்த contrasting வாழ்க்கையைத் தான் இந்த சிறுகதை சொல்லுதுங்குறது என்னுடைய பார்வை.

கதைய படிச்சுப் பாருங்க: ‘ஆத்மாநாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி உங்களுக்கு என்ன தோணுதோ சொல்லுங்க. இவ்ளோ சொல்லிட்டு ஆத்மாநாமுடைய கவிதைய சொல்லாமப் போனா எப்புடி...?
நீ உலகத்திடமிருந்து மிகவும் எதிர்பார்க்கிறாய்

என்கிறது மனித இனம்
நான்
வேலையைக் கேட்கவில்லை

உணவைக் கேட்கவில்லை

குடியிருப்பைக் கேட்கவில்லை

கேட்பதெல்லாம் ஒன்றுதான்

நான் வேறு நீ வேறு

என்பது பொய்

நானும் நீயும் ஒன்றுதான்

என்பதை உணர்“

இந்த எடத்துல ஆத்மாநாம் பத்தியும் கொஞ்சம் சொல்லிக்கிறேன்...

ஆத்மாநாம் அறிமுகமானது ஸ்டெல்லா ப்ரூஸ் எழுதுன ’என் நண்பன் ஆத்மாநாம்’ங்குற கட்டுரைல இருந்துதான்.அவருடைய கவிதைகள் அப்பவும் தெரியாது. இங்க்லீஷ்ல எட்கர் ஆலன் போ (Edgar Allan Poe) ன்னு ஒரு எழுத்தாளர் இருந்தாரு. ஷெர்லாக் ஹோம்ஸ் எழுதுன ஆர்த்தர் கானன் டாயலுக்கெல்லாம் முன்னோடி. 19 நூற்றாண்டுல இவர் எழுதுன மர்மக் கதைகள்லாம் பட்டாசா இருக்கும்.எல்லா லெஜண்டுகள் மாதிரியே இவரையும் வாழும்போது கண்டுக்காம செத்தப்புறம் உலகம் பூரா கொண்டாடுனாங்க(றாங்க). அவர் பத்தி வந்த ‘The Raven' படத்துல ஒரு வசனம் வரும் 'Every woman he has ever loved have died in his arms. I believe that God gave him a spark of genius and quenched it in misery. But as far as something like this... The only thing he's ever killed is a bottle of brandy.’ அப்டின்னு.எனக்கென்னவோ ஆத்மாநாமும் அவருடைய நெருங்கிய நண்பரான ஸ்டெல்லா ப்ரூஸும் தான் ஞாபகத்துக்கு வந்தாங்க இந்த வசனத்தைக் கேட்டதும்.ரெண்டு பேருமே பூமிங்குற கிரகத்துலேர்ந்து ரொம்ப சீக்கிரமாவே கெளம்பிட்டவங்க.

அப்புறம்.. ரொம்பப் பிடிச்ச இன்னொரு கவிதையோட இந்த போஸ்ட் முடியுது.
இதுவும் லதாமகனுடைய தினம் ஒரு கவிதை தளத்துல படிச்சது தான்


பெண்களுடன் உரையாடுபவன்


பெண்களுடன் உரையாடுவதில்
அலாதிப்பிரியம், அவனுக்கு

அதிலும் குறிப்பாக
திருமணம் ஆகாத இளம் பெண்களுடன்

மணிக்கணக்காகப் பேசுகிறான் அவன்
இடையிடையே
அவர்களை
சிரிக்க வைக்கவும் செய்கிறான்.
தன் வார்த்தை சாதூர்யத்தால்
அவர்களை உற்சாகப்படுத்தும் அவன்
அவர்கள் பேசுவதையும்
கவனமாகவே கேட்டுக் கொள்கிறான்.
அவர்களுடன்
தொடர்ந்து உரையாடலில் ஈடுபடும் அவன்
அவர்களை
வேறு எதுவும் செய்வதில்லை.

தொடுவதில்லை
முத்தமிடுவதில்லை
சாப்பாடு மேசைக்கடியில் காலை விட்டு
காலைச் சுரண்டுவதில்லை
உண்மையிலேயே கம்பீரமான ஆண்மகன்தான்.அவன்

அவனுக்குத் தேவையெல்லாம்
ஒன்றே ஒன்றுதான்
பெண்களுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும்.

கோவில், குளம்
புடவை, நகை
சினிமா, செக்ஸ் ஜோக்
விரதம், விளக்கு பூஜை
சமையல், சானிடரி நாப்கின்..
எது குறித்து வேண்டுமானாலும்
இருக்கலாம் பேச்சு.

பெண்களுடன் பேசும்போது
அவனுக்கு
தூக்கம் கிடையாது
பசி கிடையாது
(சுரணை கிடையாது
என்று நீங்கள் நினைத்தால்,
அது கூட பரவாயில்லை)

கறுப்போ, சிவப்போ
நெட்டையோ, குட்டையோ
அழகியோ அவலட்சணமோ
புத்திசாலியோ புண்ணாக்கோ
பேசுவதற்கு
அவனுக்கு ஒரு பெண் துணை வேண்டும்

உங்களுக்குத் தெரிந்த
பேசுவதில்
ஆர்வமுடைய
பெண் யாரேனும் இருந்தால்
அவனிடம் அனுபி வையுங்கள்

தவசி (குறுவாளால் எழுதியவன் , புதுமைப்பித்தன் பதிப்பகம், விலை ரூ.100)

ஞாயிறு, 8 மார்ச், 2015

இசை சூழ் தனிமை - Playlist#2



இதுக்கு முந்தைய மூனு பாடல்கள் பத்தின போஸ்ட் இங்கே : இசை சூழ் தனிமை Playlist#1

ரொம்ப நாள் முன்னாடி எழுத ஆரம்பிச்ச ப்ளேலிஸ்ட் போஸ்ட்ட தொடரலாமேன்னு... இப்போ மறுபடியும்.

4.இந்த பாட்டும் ஒரு random accidentல கெடச்சது தான்.ரொம்ப பொழுது போகலன்னா சவுண்ட்க்ளவ்ட்ல எதையாவது ரேண்டமா தேடி எடுத்து கேட்டுட்டு இருப்பேன்.அப்போ எதேச்சையா இந்த பாட்டுடைய ஒரு சின்ன ஆடியோ க்ளிப்ப கேட்டேன். கேட்டவுடனே ரொம்பவும் பிடிச்சுப் போய் அந்த ஹிந்தி வரிகள்ல எனக்கு புரிஞ்சளவுக்கு எதோ tune meri jaana.. kabhi nahi jaana ன்னு ரெண்டு வரிய மட்டும் கூகுள்ல தேட ஆரம்பிச்சு ஒரு வழியா பாட்டைக் கண்டு பிடிச்சேன். ஆல்பம் பேரு ‘Emptiness'... பாடுனவரு கஜேந்திர வர்மா. பாதி லிரிக்ஸ் இங்க்லீஷ்லயும் மீதி ஹிந்திலையுமா... ரொம்ப அழகான பாட்டு. விஷுவலாவும் ரசிக்கிற மாதிரி தான் இருக்கும்.வட இந்திய இளைஞர்கள் மத்தியில ரொம்பவே பிரபலம் இந்தப் பாட்டு. காதல் பாட்டு தான்.ஹிந்தி லிரிக்ஸுக்கு மீனிங் இங்க பாத்துக்கோங்க.


Oh! Love of mine

With a song and a wine

You're harsh and divine

Like truth and a lie
But the tale ends not here
I've nothing to fear
For my love is yellow forgiving & hollow
And the bright emptiness
In a room full of heads
Is the cruel mistress... wo ho..
I feel this unrest
That nests a hollowness
For I have no where to go
And I am cold
And I feel so lonely yea..
There's a better place then this, emptiness
And I'm so lonely yea...
There's a better place then this emptiness...
Yei yei yei ye....


Read more: http://www.lyricsmint.com/2011/03/tune-mere-jaana-emptiness-lyrics-rohan.html#ixzz3Tit8Yv8k

இந்தப் பாட்டுக்கு ஒரு reprise வெர்ஷனும் இருக்கு.அதுவும் அட்டகாசமா தான் இருக்கும்.அதையும் கேட்டுடுங்க.

5.இதுவரைக்கும் சொன்ன பாடல்கள் எல்லாமே வரிகள், அது தர்ர உணர்வு, பாடலுடைய mood, காட்சிப்படுத்துன விதம்.... இதெல்லாம் தான் மேலோங்கி இருக்கும். Arrangement wise பாத்தா நான் ரொம்பவே ரசிச்ச, துள்ளலான ஒரு ஆல்பம் பாடல் இது.பெப்பு.. பெப்பு...ன்னு சொல்வாங்கள்ல அத நம்மள அறியாம நமக்குத்தரும்.செம்ம டைனமிக்கான vocals....!! பாட்டுடைய தீம்.. வழக்கம் போல காதல் தான்.நம்ம தமிழ் சினிமா ஹீரோக்களெல்லாம் ஒரு வசனம் சொல்லுவாங்கள்ல.. ’என்னத்தவிர உன்ன வேற எவனும் நல்லா பாத்துக்க முடியாது’ன்னு..கிட்டத்தட்ட அந்த மாதிரி தான்.பாதி ஹிந்தி.. பாதி இங்க்லீஷ். பெங்ளூர்வாசியான ரகு திக்‌ஸித் தான் எழுதியது.. பாடியது.. எல்லாமே...இவர் புகழ் BBC வரைக்கும் பரவியிருக்கு...!!



வீடியோ வெர்ஷன் கொஞ்சம் சவ சவன்னு இருக்குற மாதிரி ஃபீல் பண்ணீங்கன்னா இங்க soundcloudல தெறிக்கிற க்வாலிட்டியோட இருக்கு..இதே பாட்டு... அதக் கேட்டுப் பாருங்க.
               

No man will ever love you, like I do

Ever since this wandering heart of mine, met you
I dismissed the time when we were strangers,
and made you mine on this journey I began My love!

I am a lost cloud in the blue sky
I hum, thunder and shower rain
Infatuated by you My Love
Amidst the stars, on the moon, on the earth and in the sky
My aspirations echo My Love
No man will ever love you, like I do


6.என்னடா ஹிந்தியாவே போய்ட்டு இருக்கேன்னு யோசிக்காதீங்க.ஒரு சேஞ்சுக்கு ஒரு மலையாள ஆல்பத்துல வந்த பாட்டு. நான் காலேஜ் படிக்கும்போது தான் மொத மொதல்ல கேட்டது. ஃப்ரெண்டோட ஃப்ரெண்டோட ஃப்ரெண்டி ரெஃபர் பண்ண பாட்டு.மலையாளமா இருந்தாலும் கிட்டத்தட்ட நமக்கு அர்த்தம் புரியும்னு வைங்க. கொஞ்சம் ‘மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து’ பாட்ட ஞாபகப் படுத்துனா நான் பொறுப்பில்ல.ஆல்பம் பாடல்களுக்கே உரிய அந்த பாட்டுக்குள்ள கத சொல்ற டெக்னிக் ரொம்பவே பொருந்தியிருக்கும்.
அந்த ‘வெள்ளிக் கொலுசிட்ட காலச்சம் கேக்க...காத்திருக்கும் எண்டே ஹ்ருதயமே’ வரியை அப்புடி ரசிச்சேன் நான். இப்பவும் தான் :) :)

தொடரும்...!!
Related Posts Plugin for WordPress, Blogger...