நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

செவ்வாய், 24 மார்ச், 2015

The Invisible Other - தமிழ் சினிமாவில் சாதி - ஆவணப்படம்நேத்து ரொம்ப முக்கியமான ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்.என்னால முடிஞ்சளவுக்கு என் நண்பர்களையும் வரச்சொல்லியிருந்தேன்.Catalyst Study Circle அமைப்பு ஏற்பாடு செஞ்சிருந்த 'The Invisible Other: Caste in Tamil Cinema' ன்னு ஒரு ஆவணப்பட திரையிடலுக்காக தான் இந்த நிகழ்ச்சி. அதைத் தொடர்ந்து அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் இயக்குனர் ரஞ்சித் பேசுறதாகவும் சொல்லியிருந்தாங்க.

ஆவணப்படம் பேசுற விஷயங்கள்...
  • ஐம்பது ஆண்டு கால தமிழ் சினிமாவுல சாதியின் தாக்கம் எந்தளவு இருக்கு ? 
  • பல்வேறு சாதிகள் திரைப்படம்ங்குற ஒரு கலை வடிவத்தை எப்படி தங்களுடைய சாதிகளை glorify பண்ணி பெருமையடிச்சுக்கறதுக்காக பயன்படுத்தியிருக்காங்க ?
  • இது சமூகத்துல பல்வேறு நிலையில இருக்குற மக்களை எப்படி போய் சேருது ? அதனால ஏற்பட்ற தாக்கம் என்ன ?
  • சாதி தொடர்பான விஷயங்களை திரைப்படங்கள்ல புகுத்துறதுக்கும் பேசுறதுக்கும் சென்சார் போர்ட் என்ன மாதிரியான பாரபட்சமான கெடுபிடிகளைக் கையாளுது ? 
  • அங்க இருக்கிற அதிகாரிகளுடைய அரசியல் பார்வை என்ன ? கொள்கை என்ன ?
  • தேவர்மகன் திரைப்படம் தொடங்கி இதுவரைக்கும் வெளிவந்த சாதி சார்ந்த விஷயங்களைத் தூக்கிப்பிடிக்குற திரைப்படங்கள் சொல்ல வர்ர விஷயம் என்ன?


நான் ஒரு வாரம் முன்னாடி தான் யூட்யூப்ல படத்தப் பாத்திருந்தேன்.இப்போ இருக்குற சூழ்நிலைக்கு இந்த மாதிரியான ஒரு ஆவணப்படம் ரொம்பவே அவசியம்னு தோணுச்சு.படம் சொன்ன விஷயங்கள் போக, இயக்குனர் ரஞ்சித் பேசுனது எல்லாமே ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயங்கள். அவர் பேசுனதுல எனக்கு ஞாபகமிருக்குறது கொஞ்சம்,

 “தலித் அப்டிங்குற வார்த்தையையே சினிமாவுல பயன்படுத்த முடியாது,அதுக்கே அவ்வளவு கெடுபிடிகள் இருக்கு.ஆனா மத்த இடைநிலை சாதிகள் பெயரை படத்துல சொல்றதுக்கோ அல்லது அவங்கவங்க சாதிகளைப் பத்தி பெருமையா பேசுறதுக்கோ எந்தத் தடையுமில்ல.அதனால யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல.”

”அதேமாதிரி ஒரு மதத்துல கல்வி மறுக்கப்படுற ஒருத்தனுக்கு, அந்த கல்வியையும் சமூக அங்கீகாரத்தையும் வேற மதம் குடுக்குதுன்னா அத அவன் மேல வரதுக்கான ஒரு வாய்ப்பா தான் பாக்குறான்.அந்த மதத்தை தேர்ந்தெடுத்துக்குறதுக்கான எல்லா உரிமையும் அவனுக்கு இருக்கு.அதை தப்பா பேசவேண்டிய அவசியம் என்ன இருக்கு?”

”ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவங்களைப் பார்த்து தயவு செஞ்சு பரிதாபப்படாதீங்க.அதே மாதிரி அவங்களுக்கான பிரச்சனையை நீங்க அவங்ககிட்ட தான் பேசனும்னு இல்ல,அவங்களுக்கு அவங்க பிரச்சன என்னன்னு நல்லாவே தெரியும்.அதுக்கான தீர்வுகளை ஒரு அமைப்புக்குள்ள இருக்க நீங்க தான் கொண்டுவர முடியும்.”

"தமிழ் திரை உலகத்துல ஒரு iconic ஸ்டேட்டஸை அடைஞ்சிட்டதா சொல்லப்பட்ற இயக்குனர்கள் பெரும்பாலானவங்க அவங்க படங்களை அப்பட்டமான ஒரு சாதிமத சார்போட தான் எடுக்குறாங்க.தங்களுடைய சாதிப்பெருமையை நேரடியாவே தங்களுடைய படங்கள் மூலமா பேசுறாங்க.அவங்களை எந்த ஊடகமோ பத்திரிக்கையோ எந்தக் கேள்வியும் கேக்குறதில்ல.என்ன மாதிரி இருக்குறவங்க கிட்ட தான் தேடி வந்து கேப்பாங்க. ”

இன்னும் நிறைய முக்கியமான விஷயங்களைப் பேசுனாரு. ’நான் மகான் அல்ல’ படம் வெளிவந்தப்போ கருந்தேள் ராஜேஷ் எழுதுன விமர்சனத்தைப் படிச்சுட்டு அதுக்காக இயக்குனர் சுசீந்திரனுக்கு தான் எழுதுன கடித்தை ராஜேஷுக்கு அனுப்பியதையும் , அதை  ராஜேஷ் அவருடைய தளத்துல வெளியிட்டப்போ அதுக்கு வந்த எதிர்வினைகளையும் பத்தி குறிப்பிட்டு சொன்னாரு.பெரும்பாலானவங்க ‘நீங்க தலித்தா இருக்குறதனால எல்லாத்தையும் அதே கண்ணோட்டத்துல பாக்குறீங்க’ன்னு குறை சொன்னதாக சொன்னாரு.

நேரம் கிடைச்சா அந்த ஆவணப்படத்தை யூட்யூப்ல பாத்துடுங்க. எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம், இயக்குனர் ஜனநாதன், நடிகர் நாசர், அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள், சில பேராசிரியர்கள், அரசு அதிகாரிகள்னு பல்வேறு தரப்பு மக்களுடைய கருத்துகள், திரைப்படக் கல்லூரி மாணவர்களுடைய விவாதம், தமிழ் திரைப்படங்கள்ல இதுவரைக்கும் வந்த சாதி தொடர்பான க்ளிப்பிங்க்குகள்னு நிறைய தகவல்களை கோர்வையா சொல்லியிருக்காரு இந்த ஆவணப்படத்தை இயக்கிய சுரேஷ். அவருடைய வலைத்தளம் இங்கே.
Catalyst Study Circle அமைப்புடைய ஃபேஸ்புக் பக்கம் இங்கே.

'The Invisible Other: Caste in Tamil Cinema'
கருத்துகள் இல்லை :

Related Posts Plugin for WordPress, Blogger...