V11 குழும நண்பர்கள் அடுத்த நெடுந்தூரப் பயணம் போக இடம் முடிவு செய்தபோது நாம் பரிந்துரைத்தது இரண்டு இடங்கள். ஒன்று கூர்க்.. மற்றது ஆகும்பே. ஆகும்பே கர்நாடக மாநிலத்தின் ஷிமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி அருகே உள்ள ஒரு மழைக்காடுகள் நிறைந்த மலைப் பகுதி. Land of King Cobras எனவும் Cherapunji of south என்றும் அழைக்கப்படுகிற இடம். பெங்களூரிலிருந்து கிட்டத்தட்ட 360 கிலோ மீட்டர்கள். நாங்கள் தேர்ந்தெடுத்த பாதையே கொஞ்சம் சுத்தலான வழிதான். ரத்தினா அண்ணன், பிரபாகரன், துபாய் சுரேஷ் அண்ணன், அருண்,போபண்ணா சார் ஆகியோர் மட்டும் முதல் நாளே கிளம்பி பெங்களூரு சென்று தங்களுடைய சொந்த வேலைகளை முடித்துக் கொண்டு எங்களுக்காக தொப்பல்லபுராவில் காத்திருந்தார்கள்.
ஆகஸ்ட் 14ஆம் தேதி அதிகாலை 3.30க்கு விருகம்பாக்கம் V11 ஷோரூமிலிருந்து புறப்படுவதாக இருந்தது.முதல் நாள் இரவிலிருந்து எல்லாவற்றையும் தயார் செய்வதிலேயே நேரம் கடந்து விட்ட படியால் சுத்தமாக தூக்கமில்லை 2.30க்கெல்லாம் வண்டியில் saddle bagஐ கட்டிவிட்டு எப்படா விடியுமெனக் காத்திருந்தேன்.இந்த ரைடுக்கு ஹரி தான் லீட் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. அவரும் முன்னதாகவே எந்தெந்த ஊர்கள் வழியாக போகப் போகிறோம் ; எந்த வழியாக திரும்ப வரப்போகிறோம்; என பட்டியல் போட்டு ரூட் மேப்போடு அனுப்பிவைத்திருந்தார். கிட்டத்தட்ட 750 சொச்சம் கிலோமீட்டர்களை கடக்க வேண்டி இருந்ததால் நிறைய திட்டமிடல் அவசியமாக இருந்தது.
ஒருவழியாக எல்லோரும் வந்து சேர்ந்து கிளம்பும்போது மணி 4.30ஐத் தொட்டிருந்தது.குடியாத்தம், சித்தூர் தாண்டி வந்து காலை உணவுக்காக விஜயபுரா வந்து சேர்ந்தோம். காலை உணவை முடித்துவிட்டு கோலார் வழியாக தொட்டபெல்லபுரா தாண்டி தெபஸ்பேட் வந்து சேரும்போது மணி மதியம் 12.00.முந்திய நாள் கிளம்பி வந்த ஐவர் அணி தங்கியிருந்த ஹோட்டல் முன்பு எல்லோருடைய வண்டிகளையும் பார்க் செய்து விட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தோம். அப்போது தான் ஒரு பெரிய ஆப்பு வந்து எங்கள் பயணவேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டது. அருணுடைய desert storm 500ன் இஞ்சின் சிலிண்டரில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. அதற்கான உதிரி பாகங்கள் வந்து வண்டி சரியாகிற நேரத்தில் எல்லோரும் மதிய உணவை அங்கேயே முடித்து விடலாமென திட்டமிட்டோம்.சாப்பிட்டு முடித்து கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டுக் கிளம்பத் தயாராகும்போதும் அருணுடைய வண்டி பிரச்சனை சரியாகாததால் அருணும் சுரேஷ் அண்ணனும் மட்டும் அடுத்த நாள் அதிகாலை கிளம்பிவருவதாக சொன்னார்கள்.மற்றவர்கள் அங்கிருந்து கிளம்பினோம்.
மாலை வெயில் மின்ன ஹிரியூர், சிரா வழியாக நெடுஞ்சாலைகள் அல்லாத அழகான பாதைகளின் ஊடே பயணிக்கத் தொடங்கினோம்.அங்கங்கே நிறுத்தி தேனீர் மட்டும் அருந்திவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். இருட்டுகிற வேலையில் ஹோசதுர்கா தாண்டி பத்ராவதி வந்து சேர்ந்தோம். செக்போஸ்ட்டில் எண்ட்ரி போட்டுவிட்டு ஒரு நீண்ட நெடும் மலைப் பாதை வழியான பயணத்தை எதிர்நோக்கியபடி இஞ்சின்கள் உறும ஆரம்பித்தன
மெலிதாக மழை தூற ஆரம்பித்தவுடனேயே அத்தனை பேரும் ரெயின் கோட்டும் saddle bagக்கான ரெயின் கவரையும் அணிவித்து/அணிந்துகொண்டு கிளம்பினோம். இதற்கு மேல் நிறைய மலைப்பாதைகளை வேறு எதிர்நோக்கியிருந்தோம்.மழை, இருட்டு, மலைப்பாதை அத்தனையும் சேர்ந்து உள்ளுக்குள் மெலிதாக திகிலைக் கிளப்பியிருந்தது எனக்கு. முந்தைய நாள் தூங்காமல் போனதன் விளைவை உடல் காட்ட ஆரம்பித்தது. கண்ணிமைகள் கனக்கத் தொடங்கின.தங்குமிடம் போய்ச் சேர்ந்தால் போதுமென வெறுப்போடு வண்டியோட்ட ஆரம்பித்தேன். பிற ரைடர்களை முன்னே போகவிட்டு நான் வேகம் குறைக்க ஆரம்பித்தேன்.கடைசியாக நான், ரத்தினா அண்ணன், பிரபா, தீன், ஆனந்த் நாயர் ஆகியோர் மட்டும் தான் பின்னே சென்று கொண்டிருந்தோம் . அவ்வப்போது முன் செல்லும் லாரிக்காரர்களிடும் ஹெட்லைட்டில் கெஞ்சி வழி கேட்டு முன்னேற வேண்டியிருந்தது ஒரு கட்டத்தில் எனக்கு முன்னே பின்னே யார் இருக்கிறார்கள் என்றே தெரியாமல் போனது . கழுத்துக் கயிற்றில் இருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொள்ளும் கன்றுக் குட்டிபோல என் வண்டி எனது கட்டுப்பாட்டிலிருந்து மிக மெதுவாகத் தன்னை விடுவித்துக் கொண்டு ஒரு வளைவில் தார்ச்சாலையை விட்டுக் கீழே இடதுபக்க மண்பாதையில் இறங்கியது. நான் அரைமயக்கத்துல் காலூன்றி செய்வதறியாது அப்படியே நின்றேன். பின்னே வந்து கொண்டிருந்த ரத்னாவும் பிரபாவும் பதறியடித்து வண்டியை நிறுத்திவிட்டு என்னை பிடித்தார்கள். வண்டியை சாலையில் ஏற்றிவிட்டு .ஒரு கேன் முழு Redbullஐ அருந்தவைத்தார்கள்.
”தம்பி..வண்டிய திருவாத.. என் டெயில் லேம்ப்ப மட்டும் அப்படியே ஃபாலோ பண்ணி வா. பொறுமையாவே போவோம். பசங்க எங்க இருக்காங்களோ அங்க வண்டிய வேற ஆள்ட்ட மாத்திவிட்டுட்டு நீ வேற வண்டியில பில்லியனா வரலாம்.. “ ரத்னா அண்ணன் சொன்னது எங்கோ தொலைவில் கேட்டது எனக்கு. பொறுமையாய் உருட்ட ஆரம்பித்தேன் கிட்டத்தட்ட 18 மணி நேரத்துக்குமேல் வண்டியோட்டிருந்தோம் எல்லோருமே. ஒரு இடத்தில் முன்னே சென்ற நண்பர்கள் எங்களுக்காக காத்திருந்தார்கள்.மணிப்பூர் பையன் சஞ்ஜீப்பிடம் என் பைக்கைக் கொடுத்துவிட்டு நான் சதீஷ் அண்ணன் வண்டியில் பில்லியன் ஏகினேன். என்னைத்தவிர பிரபாவும் சதீஸ் அண்ணனும் மட்டுமே எலெக்ட்ரா வாசிகள். மற்ற எல்லோருமே தண்டர்பேர்ட்/க்ளாசிக் தான். நான் அவர் தோளைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தேன். இன்னும் 20 சொச்சம் கிலோமீட்டர்கள் போக வேண்டுமென பேசிக் கொண்டார்கள்.
எக்சாக்ட்லி இந்தக் காட்சி தான். இந்த இடத்திலிருந்து பாருங்கள்
என் ஹெல்மெட் வைசர் மூடியபடியே இருந்தது. கண்டென்சேஷனால் வைசரின் உட்பக்கம் ஆவி படர்ந்தது. வெளியே மழை.எனக்கு அரைத்தூக்கம். சதீஷ் அண்ணன் வண்டியைக் கிளப்பியதும் சாலையின் மின்விளக்குகளின் ஒளி மட்டும் மங்கலாக பின்செல்ல ஆரம்பித்தது.இஞ்சின் சத்தம் தவிர்த்து வேறெதுவும் காதில் விழவில்லை.ஒவ்வொரு வளைவிலும் வண்டி சாய்ந்து திரும்புவதை உணர முடிந்தது. இண்டர்ஸ்டெல்லார் படத்தில் கூப்பர் தன் விண்கலதோடு கருந்துளைக்குள் புகுந்து தன்னை விடுவித்துக் கொள்வாரில்லையா.. கிட்டத்தட்ட அதே காட்சியை என்னால் உணர முடிந்தது.வண்ணங்கள்.. வெளிச்சம்.. இருட்டு.. மழை.. இஞ்சின் சப்தம்.. சாலையின் வளைவுகள்..அரை மயக்கம்.. வேறெதுவுமில்லை. அந்த 18 கிலோமீட்டர்கள் ஏதோ கருந்துளைக்குள் நுழைந்த யுகப்பயணம் போலத் தோன்றியது.ஒருவழியாக ரிஸார்ட் வந்து சேர்ந்தோம்.
அதிகாலைக்கு கொஞ்சம் முந்திய மூன்று மணி இருள்.வண்டியை பார்க் செய்துவிட்டு ரைடிங் கியர்களைக் களைந்து ட்ராக்ஸ் ஷார்ட்ஸுக்கு மாறி அவரவர்க்கு பிடித்து உணவுப் பதார்த்தங்களோடு காரிடரில் அமர்ந்தோம். கடகடவென உண்டு முடித்து அறைகளில் கட்டிலில் விழும்போது மணி 4.30க்கு கொஞ்சம் அதிகம்.முதுகும் தோள்களும் ”என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா” எனக் கதறின.. ஒருவழியாய் உறங்கினேன்.
திரும்பிவந்ததே தனி கதை - அதனால 3.1ல தொடரும்...
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக