நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

புதன், 24 அக்டோபர், 2018

காத்திருப்பின் முடிவும் பயணத்தின் தொடக்கமும் - Iktsuarpok

Courtesy: http://www.kenig-artwork.com/portfolio/abstract-painting/ - Non-Commerical Usage

பேரன்பின் உனக்கு,

பின்னிரவுகள் பிரத்தியேகமானவை. எத்தகைய அதீத உணர்வையும் இன்னும் தீவிரமாக்கி எவ்வகையிலேனும் நம்மைத் துன்பிக்கிற தன்மை கொண்டவை.
சிவபானம் புகைக்கிறவர்கள் எப்போதும் சொல்கிற விஷயமிது. நீங்கள் எவ்வித மனநிலையில் இருந்தாலும் அப்போது புகைத்தால் அது இன்னும் தீவிரங்கொள்ளுமென. கிட்டத்தட்ட பின்னிரவுகள் அப்படியானவைதான். தனிமை என்றால் உயிர் கொன்று கருந்துளையாய் முற்றும் உறிஞ்சிக்கொள்கிற தனிமையாகும். மென்சோகம் உயிர் உடைக்கிற பெருஞ்சோகமாகும். ஒரு புன்சிரிப்புடன் கூடிய மென்மனம், கூத்தாட வைக்கிற பேரானந்தம் கொள்ளும். கொஞ்சமாய் உன்மீது கொண்ட காதலோ, மொத்தமாய் உன்மத்தங் கொண்டு மோகித்து உருகவைக்கும். ஒற்றை வார்த்தைகள் கவிதைகளாகும். வெற்று வார்த்தைகள் கடிதங்களாகும். முத்தத் தீண்டல்கள் மோக மழையாகும்.

அங்ஙனமாய்க் காதலுற்று கண்மல்கி புன்சிரித்த உன்முகங்கண்ட நாளின் பின்னிரவில்... இக்கடிதத்தை எழுதத்துவங்குகிறேன். வார்த்தைகளிடத்தே தருணங்களும் , தருணங்களிடத்தே வார்த்தைகளுமாய்த் தோற்றுத் துவளுகிற பெருஞ்சுழலாய்க் கடந்தோடுகின்றன நாம் கைகோர்த்து அருகமர்ந்த மாலைகள். எதுவாகினும் எதிர்கொள்ளத் திண்ணம் கொண்டாலும், ஏதும் அவ்வாறு நிகழ்ந்து விடலாகாதென நான் வேண்டித் தொடங்கும் நெடும்பயணங்களுக்கு முன்பான மனநிலையை ஒத்தது தற்போதைய உன் மனநிலை.

இந்த என் இரவை உன் நினைவுத் தொடுகையால் நிறைத்து நிற்கிறாய் நீ. காரிருளில் கைப்பிடித்து காலம் மறந்து பறக்கக் காத்திருக்கிறேன் நான்.
உன் அருகாமையில் எப்போது முகம் பார்த்தாலும் நீ முன்பொருமுறை நாணிக் காண்பித்த உன் குழந்தைப் பருவத்துக் காணொளிக் காட்சி கண்முன்னே வந்து செல்கின்றது. எப்போதும் நீ எனக்காய் எங்காவது காத்திருப்பாயானால், கொஞ்சம் தூரத்திலிருந்தபடியே நீ எனக்காய் காத்திருக்கிருக்கின்ற அந்தக் காட்சியை நின்று நிதானித்து உள்வாங்கிக் கொள்வேன் நான். சுற்றம் முற்றும் மறந்தும், நீ தனித்ததோர் உலகத்தே புன்சிரித்து நகங்கடித்துக் காத்திருப்பாய். காற்றடிக்கும் பருவமாயின், உன் மேல் படர்ந்து  உன் ஃபெரோமோன்களின் வாசம் சுமந்தபடி கடந்து, பின் எனைத் தீண்டி நிறைக்கும் வாகில், திசைபார்த்தே உன்னருகே அமர்ந்துகொள்வேன் நான்.

கேள்விகளும் சிந்தனையும் பொருளற்று, ஒரு நிறைந்த மெளனத்தோடும் அணைப்போடும் கொஞ்சமாய் இடைவெளிவிட்டு நடக்கின்ற சிறுநடையோடுமே கடத்திக் கொண்டிருந்திருக்கிறோம் நமது சந்திப்புகளை. கடிதத்துக்கான வார்த்தைகளை ஒவ்வொன்றாய் தேடித் தேர்ந்து கோர்க்கக் கோர்க்க, வான் இருண்டு பெருமழை பொழியத்தொடங்குகின்றது. இதைப் படிக்கின்ற நொடியில் நீயுமே அந்த மழையில் நனையக்கூடும். முன்பொரு மழையிரவில் அந்த மழையும் குளிரும் எனக்களித்த கதகதப்பைப்பைப் பற்றி உன்னிடத்தில் பேசும்போது, நீ மழையிரவுகளை ஏன் வெறுக்கிறாயென என்னிடம் சொல்லியிருக்கிறாய். என்னை அணைத்ததாய் நானுணர்ந்த மழை, உனக்கு  தனிமையும் வீடுதிரும்பலுக்கான ஏக்கமும் நிறைந்ததான உன் பால்யத்து விடுதிநாட்களை நினைவுபடுத்துவதாக சொன்னாய். இனி வரும் நாட்களில் என்றாவதோர் மழைக்கால இரவில், நீ கண்டடையும் வெம்மை என்னுடைய இருப்பை மட்டுமே நினைவுபடுத்துமாயின் அதுவே போதுமானது எனக்கு.

இது நம்மிருவருக்குமேயான யுகங்களின் காத்திருப்பு. என் எல்லா நெடும் பயணங்களைப் போலவே மிகுந்த எதிர்பார்ப்போடும் தயாரிப்போடுமே நம்முடைய இந்த நீள் நெடும்பயணத்தையும் தொடங்கிக் காத்திருக்கின்றேன் நான்.  

உனக்காய் நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றேயொன்று தான். இங்கு நீயோ நானோ தனிப்பயணிகள் அல்ல...! 
சகபயணிகள்...! 

வாழ்ந்து தீர்ப்போம் வா...!

தீராக்காதலுடன்,
நான்.!! <3 nbsp="" p="">



வெள்ளி, 15 ஜூன், 2018

நாடோடித்தடம் - ராஜ சுந்தர்ராஜன்


புனைவல்லாதவற்றில் இத்தனை ஈர்ப்போடான ஒரு புத்தகத்தைப் படித்தேனில்லை. தனித்தமிழ் மிளிர் கவித்துவ உரைநடை தொடக்கத்தில் சற்றே தடுக்கினாலும், போகப் போக சுவையுணர்த்தி போதையில் கிறங்கடிக்கச் செய்யும். வார்த்தைகளின் கோவையும் உணர்வுகளின் குவியலுமாய் வெவ்வேறு நிலப்பரப்புகளில் வெவ்வேறு தேடல்களோடு திரிந்தலைந்து, கடவுளும், கவிதையும், காமமும் நிறைந்து/நிறைத்துக் கதை சொல்லுகிற நாடோடியின் பெருங்குரல் பாடலெனக் கொள்ளலாம்.

புனைவுகளில் கூட morality தேடுபவர்களாயின் இது உங்களுக்கான புத்தகமன்று. முகத்திலறைகிற நிஜங்கள் எப்போதுமே தனிப்பட்டவர்களின் அரசியல்/ஒழுக்கக் கோட்பாடுகளுக்கும் கட்டமைப்புகளுக்கும் அப்பாற்பட்டவையாகவே இருந்திருக்கின்றன. முன்பொருமுறை இப்புத்தகம் குறித்து  யாரோ கேட்டபோது இப்படிச் சொல்லியிருக்கிறேன், சாருநிவேதிதா முழுமையாய் கவிஞராய் இருந்து பின் பத்தியெழுத வந்திருந்தால் நிச்சயம் இப்படித்தான் இருந்திருக்குமென.

கலைச்சொற்களின் பயன்பாடு, ஆங்காங்கு தனித்தமிழ் அழகியல் அத்தனையையும் தாண்டி தனிக் கட்டுரைகளாய் எழுதப்பட்டவற்றின் தொகுப்பு எப்படி ஒரு பொதுவான மையச்சரடைக் கொண்டிருக்கமுடிந்தது ?
அதை என்னவென்று விளக்கிச்சொல்லக் கேட்பீர்களானால் இன்னதென சுட்டிவிடமுடியாது என்னால். Abstract என்பதற்கு அருவமானது எனப் பொருள் சொல்கிறது இணையம். அதுவே பொருத்தமா எனத் தெரியவில்லை. I'd probably say, what connects these writeups which gives us the feeling of reading a novel; is probably an abstract sense of truth...! And abstracts necessarily need not to anything. It could be physical, metaphysical, poetic, naked, truth, lust, love...! Anything...!

ராஜ சுந்தர்ராஜன் நம்மை வெவ்வேறு களங்களுக்கு அழைத்துச் சென்று கதை சொல்ல பயன்படுத்துகிற வாகனமாக/கருவியாக மொழியையும், சாலையாக/ பாதையாக அவருடைய SPIC பணியையும் உருவகப்படுத்திக்கொள்ளலாம். தோரோவ் (Hendry David Throreau) சொன்னதுபோல after all , "the world is but a canvas to our imagination". Autobiographyயை autofictionஆக எழுதிவிட்டு (taking all the liberty fiction  could offer) புனைவில் படைப்பாளியைத் தேட முற்படாதீர்கள் என அறைகூவும் படைப்பாளிகளைக் கண்ட நமக்கு, “கோழையாகையால் நான் ஓடி ஒளிகிறேன் என்பதல்ல,ஓடி ஒளிவதால் நான் கோழையாகிறேன் என்பதே சரி. இதன்படி, ஒளிவுமறைவற்று வெளிப்பட்டு இருக்கிறது எழுத்து எனது இந்த எழுத்தும்.என்றால் இதில் புனைவே இல்லையா ? மொழிநடையில் இல்லாமல் இல்லை; நிகழ்ச்சிகளில் இல்லை. ஆம்” என தன் முன்னுரையிலேயே சொல்லிவிடுகின்றார் கவிஞர்.

ஒரு நல்ல கவிதை எழுதப்படுவதற்கு முன்போ அல்லது ஒரு மிகச்சிறந்த புகைப்படம் எடுக்கப்படுவதற்கு முன்போ ஒரு leading moment இருக்குமென்றும், அந்த நொடியில் உணர்வுகள் ஏற்படுத்துகிற வெற்றிடத்தை ஒரு புகைப்படத்தாலோ கவிதையாலோ இட்டுநிரப்புகிற முயற்சிதான் படைப்பூக்கம் என்றும் நம்புகிறேன் நான். Also it is at the creator's liberty whether he/she decides to capture a speck of that moment or let it pass. இப்படியான leading moment அல்லது ஒன்றை நோக்கிச் செலுத்துகிற நிகழ்வுகளின் விளைவுகள் , (அவை பொதுவில் வைக்கப்படும்பட்சத்தில்) படைப்பாளிக்கு நிகழ்ந்த அதே உணர்வெழுச்சியை வாசிக்கிறவருக்கும்/பார்க்கிறவருக்கும் கடத்திவிடக்கூடும். ’நாடோடித் தடம்’ முழுக்க முழுக்க அந்த மாதிரியான தருணங்கள் நிறைந்து கிடக்கின்றன. Now that I've identified those moments of creations, I'd love to see those creations now. அவருடைய கவிதைகளை இதுவரை படித்ததில்லை. நிச்சயமாகப் படிக்கவேண்டும்.

எனக்கு மிகவும் விநோதமானதொரு pattern recognition habit இருப்பதாக உணர்ந்திருக்கின்றேன். முகங்கள், அலைப் பேசி எண்கள், குரல்கள், வாசனைகள், சாலைகள் என அனைத்திலுமே மற்றவர்கள் கண்களுக்குப் புலப்படாததொரு symmetry/சீர்மையை அடையாளம் கண்டிருக்கின்றேன். ஏதோவொரு ஒற்றுமை; ஏதோவொரு சாயல்.  ஒரு இடத்தில் இந்த சாயல் குறித்து இப்படிச் சொல்கிறார் கவிஞர்.
"சாயல் என்பது பழமையின் நீழல். எனில் பழஞ்சுவைக்கு மீளும் பயனிலை தானோ மகிழ்ச்சி இன்பம்? பண்டே கண்டு கடக்கப்பட்டது, பழையதென்று கழியாமல், இன்றுக்கும் நாளைக்கும் இலக்குவிதி ஆவதென்ன? இத்தனை கிண்ணங்கள் மாறி மாறி நான் எத்தகு போதையின் சாயலை விழைகிறேன்? கைக்கொள்ளும் ஓரொரு கிண்ணத்திலும் பழமையின் சாயல் படிந்திருக்கிறதா? அல்லது அவ்வாறு நம்பித்தான் புதைகிறோமா? Happiness: a talent or a gift? "
இங்கே மேலே சொல்லப்படுகிற போதையும் கிண்ணங்களும் abstracts. எனக்குப் பயணங்களும் புத்தகங்களுமாயும் வேறொருவருக்கு மற்றொன்றுமாயும் இருந்திருக்கலாம்.

அவருடைய மொழியாளுமையில் நான் ரசித்த மற்றொரு விஷயம் usage of negatives. ஆஃப்ரிக்க அமெரிக்கர்களுக்கென பேச்சுவழக்கில் ஒரு பிரத்தியேகமான double negatives பயன்பாடு உண்டு. உ.ம்: ain't never seen no such thing, nobody ain't never have done that. இது பற்றி உலகம் முழுக்க பல மொழி ஆய்வுகளும் நடந்திருக்கின்றன. கிட்டத்தட்ட அந்த மாதிரியான ஒரு signature பயன்பாடு. நினைக்கவில்லை; பார்க்கவில்லை; செய்யவில்லை என்பதற்குப் பதிலாய் நினைந்தேன் இல்லை; பார்த்தேன் இல்லை; செய்தேன் இல்லை. இலக்கண விளக்கம் அறியாவிடிலும் நான் மிகவும் நுணுக ரசித்த மொழிக்கூறு இது.

சோதிடமும், வானவியலும், மத போதனைகளும், போதையும், காமமும், பெண்களும், வேதியியலும், இயற்பியலும், அரசியலும், மொழிவளமும், இலக்கணமும், சங்க  இலக்கியமும், வேற்று மொழி படைப்புகளும் என எல்லாவற்றைப் பற்றியும் இந்த நெடும்பயணத்தினூடே தன் தனித்துவ மொழியில் பேசிக்கொண்டேயிருக்கிறார். இந்தியாவில் பெரும்பகுதியும் உலகில் கொஞ்சமும் பயணித்திருக்கின்றார்.  கவிஞருடைய அறிவின் விரிவு நிச்சயமாய் நம்மை அயர்த்தி விடுகின்றது. ராமாயணம் குறித்தும் அதன் வரலாற்றுத் தன்மை குறித்து தன் சக ஊழியருக்கு அவர் ஆங்கிலத்தில் எழுதிய மின்னஞ்சலை இப்போது பொதுவில் வைத்தால் பல விவாதங்களைக் கிளப்பக் கூடும்.

கடைசி அத்தியாயமான ‘கனவுக்கதை மனிதன்’ நாடோடித்தடத்தின் ஒட்டுமொத்த சாரம் எனப் பட்டது எனக்கு. Observing one's astral self as a third person and writing it all down in words. பா.வெங்கடேசனின் சிறு(!)கதைகளுள் ஒன்றில் இப்படியான ஒரு narrative உண்டு.

இவை எல்லாவற்றையும் தாண்டி, நிதானமாக நினைவுகளை அசைபோடுகிற திண்ணைப் பெரியவர்களின் மனநிலையிலல்லாது ஆரவாரமாய், கொண்டாட்டமாய்  நம்மோடு நினைவு பகிர்கிறார் கவிஞர்.

It has been an absolute pleasure traveling with you sir..!!

நாடோடித்தடம் - ராஜசுந்தர்ராஜன்
தமிழினி பதிப்பகம்
மறுபதிப்பு: வாசகசாலை பதிப்பகம்
புத்தகம் வாங்க: இங்கு


புதன், 30 மே, 2018

மரணம் - Closure - மறத்தலும் கடத்தலும்



பொதுவாகவே யாருடைய மரணமும் அதீதமான பாதிப்பை ஏற்படுத்தும் எனக்கு. பைக் பயணம் தொடங்கிய நாள் முதல் சாலை விபத்துகளில் உயிரழந்தோர் குறித்தான செய்திகள் மிகையாய் பாதிக்கும்.சாலையில் உயிரிழந்தவர்களை அதுவும் இருசக்கர வாகனமென்றால் ரொம்பவே நெருக்கமாய் உணர்வேன். எந்த வண்டி ? யாருடைய தவறு ? எந்த சாலை ? விபத்தின் காரணிகள் என ? இந்த விபத்து எப்படி நிகழ்ந்திருக்கக் கூடும் ? எப்படித் தவர்த்திருக்கலாம் ? எனப் பலவாறாக யோசித்து மனம் ஒரு முடிவுக்கு வந்து ஆற்றுப்படும் வரையில் சிந்தனையும் செயலும் அளவுக்கதிகமாய் உழலும்.

எதிலும் கவனம் செலுத்த முடியாது. போலவே தற்கொலைகள் குறித்த செய்திகளும், உயிரிழந்தவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தையும் பதிவுகளைக் காண நேர்தலும் ஒரு துன்பியல் அனுபவம். இந்தப் புகைப்படத்தைப் பதிவிடும்போது தன் உயிரை மாய்த்துக் கொள்கிற எண்ணம் இவருக்கு இருந்திருக்குமா ? கடைசியாக யாரோடு பேச வேண்டுமென நினைத்திருப்பார் ? தன்னைச் சார்ந்தவர்கள் குறித்தான கவலை இருந்திருக்குமா ? எல்லா நம்பிக்கைகளுமே அற்றுப்போய் உயிரை மாய்த்துக் கொள்ளமுடிவு செய்யுமளவுக்கு என்ன பிரச்சனை இருந்திருக்க முடியும் ? நம் வாழ்க்கையில் ஏதோவொரு வகையில் குறுக்கிட்டிருந்து பேச நேர்ந்திருந்தால் என்னவென்று கேட்டறிந்திருக்கலாமோ ? இப்படி கேள்விச் சுழல் தொடரும்.

பொதுப் பிரச்சனைகள்; அரசியல் காரணங்கள்: சாதியின் பெயரால் நிகழ்த்தப்படுகிற வன்முறையால் உயிரிழந்தவர்கள்; இந்த ஒட்டுமொத்த அமைப்பின் குறைபாடுகளால் மரணத்தைத் தேர்ந்தெடுக்கிறவர்கள்;இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படியான மரணங்களும் துயரிலாழ்த்தி குற்றவுணர்ச்சியில் தள்ளும். I'll mourn with guilt over the grief of the lives lost even though I absolutely don't have any control over what has happened to the corresponding indivduals.

அனிதாவின் மரணச்செய்தியை அறிந்தபோது குடும்பத்தோடு குற்றாலத்திலிருந்தோம். தம்பி வெளிநாட்டிலிருந்து வந்திருந்ததால் திட்டமிட்ட பயணம் அது. அறையைவிட்டு அருவியில் இறங்க கொஞ்சமும் மனம் ஒப்பவில்லை. அதற்கு முந்தைய நாள்வரை குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களைக் கூட எங்கும் பகிரவில்லை. Guilt, helplesness and incapability..! எவ்வளவு தேடியும் சரியான காரணம் இன்னதென முடிவுக்குவர முடியவில்லை. அந்த closure கிடைக்கவேயில்லை. மறதியும் மற்ற வேலைகளின் ஊடாகவும் மட்டுமே அந்த மரணத்தை என்னால் கடக்க முடிந்தது.

தேனி தீவிபத்தின் போது மரணித்தவர்களில் ஒருவர் கூட நேரடியான அறிமுகம் இல்லை. ஆனாலும் அத்தனை மன அழுத்தத்தில் தள்ளியது அந்த மரணம். மீண்டும் அதே கேள்விகள். தேடல். ஒவ்வொருவரின் பெயரும் அவர்கள் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் (புது மணத்தம்பதிகள் etc), அவர்கள் பயணித்த பாதை; காட்டுத்தீ பரவியிருக்கக் கூடிய சாத்தியங்கள்; அது இதுவென மனம் ஆற்றுப்பட ஏதோவொரு காரணத்தை தொடர்ந்து தேடிக்கொண்டேயிருந்தது. பழிசுமத்தவும், கைகாட்டவும், ஏதோவொன்றைத் தேடிப் பற்றி பாரமிரக்கிவிட்டு தப்பித்தோடுகிறது பாழ்மனம். ஓஹ் இதனாலதான் இப்படியாச்சு..இல்லன்னா கண்டிப்பா தப்பிச்சுருக்கலாம் என பொய்யாகவேனும் உச்சுக்கொட்டி மறந்துதான்..மறைத்துதான் கடக்கவேண்டியிருந்தது.

இப்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொலைச்சம்பவம்...! அதில் கொல்லப்பட்டவர்கள். அவர்களின் பெயர்கள்; புகைப்படங்கள்; குடும்பத்தாரின் அரற்றல்கள்; அரசாங்கத்தை நோக்கி அவர்கள் எழுப்புகிற கேள்விகள். இன்னும் முழுதாக அதிலிருந்து மீளவில்லை. இறந்தவர்களின் எண்ணிக்கை நமக்குச் சொல்லப்படுகின்றது; இந்த கொலைச்சம்பவத்தின் பின்னணியிலிருந்தவர்கள் பற்றிய விவாதங்கள் நிகழ்கின்றன. எல்லா திசையிலிருந்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

அரசாங்கம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அறிவிக்கின்றது. நான் உட்பட எல்லோருக்குமே ஒரு தற்காலிக closure கிடைத்துவிடுகின்றது. ஐபிஎல்’லோ,அடுத்து வெளிவரும் திரைப்படமோ, ஏதோவொன்று மொத்தமாய் கவனம் திருப்பி நம்மை மடைமாற்றிவிடக்கூடும்.
ஆனால்...தொக்கி நிற்கிற மரணங்களையும் பறிக்கப்பட்ட உயிர்களுக்கான நியாயத்தையும் யார் கேட்பார்கள் ? என்னவாகும் அந்த உயிர்கள் ? What is the least I could do ? Forget and Move on ?

எப்போதுமே மேற்சொன்ன மாதிரியான எந்தவொரு நிகழ்வின் போதும் உடனடியாக அதைப் பற்றிய செய்திகளையோ என்னுடைய கருத்தையோ பகிராமல் பேசாமல் கடக்க முயல்வேன். உடனடி எதிர்வினை பெரும்பாலும் emotional outburstஆக மட்டுமே இருக்குமென்பதாலும், உணர்ச்சிவயப்பட்ட மனநிலையில் அடிப்படை அறவுணர்வு மறையக்கூடுமென்பதாலுமே அந்த அழுத்தமான மெளனம். முடிந்தவரையில் அறத்தோடு தர்க்கம் பேசி பிரச்சனை குறித்து எழுதப்படுகிற, என் அலைவரிசைக்கு ஒத்துப் போகிற கருத்துகளை பகிர்வதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாய் மன அழுத்தத்திலிருந்து தப்பித்துக்கொள்ளக் கூடும்.

எதுவும் கையாலாகாதபோது இப்படி மனம்போனபடி எழுதித் தப்பித்துக்கொள்ளலாம். இந்த எல்லா பிரச்சனைகளைக் குறித்தும் தர்க்க நியாயங்களோட எழுதப்படுகிற கட்டுரைகளைப் படித்தும், என் அன்றாட வேலைகளில் எல்லாவற்றையும் மறந்தும் கடந்து போகலாம்.

ஆனாலும்... 


ஹேராம் திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு. சாகேத் ராம் தன்னுடைய இரண்டாவது திருமணத்துக்குப் பின் மறுபடியும் கல்கத்தா வருவான். தான் அபர்ணாவோடு வாழ்ந்த வீட்டைப் பார்த்துவிட்டு அங்கிருந்து அவள் வரைந்த காளி ஓவியத்தை எடுத்துக்கொண்டு கையில் வைத்தபடி சாலையில் நடந்து வருவான். அப்போது ஒரு கூட்டம் சுரவர்த்தி (அப்போதைய கல்கத்தா ப்ரீமியர்/கவர்னர்) ஒழிக என்று கோஷம் போட்டபடி நகரும். சாகேத்ராமையும் தங்களோடு இழுத்துக் கொண்டு ஒரு கட்டடத்தின் முன் சென்று நிற்பார்கள். மாடியிலிருந்து ஜன்னல் கதவைத் திறந்து கொண்டு மகாத்மா காந்தி தோன்றுவார்; கூடவே கவர்னர் சுஹ்ராவர்த்தியும். கவர்னரைக் கண்டதும் சாகேத்ராம் வெகுண்டெழுந்து அவரை நோக்கி “ Were you not responsible for the killings in Calcutta and Bengal last year ?" என்று கேள்வியெழுப்ப, "We all are responsible",என மழுப்பலாக பதில் சொல்லுவார். 

அந்த பதிலில் சமாதானமடையாமல் சாகேத்ராமன் , “ No please, please answer the question. Were you not responsible as the premier of this state ? Were you not directly responsible for making murderers out of ordinary men ?" என குரல் உரக்க, கூட்டமும் அவனோடு சேர்ந்து கொண்டு சுஹ்ராவர்த்தியை பதில் சொல்ல வற்புறுத்தும். கவர்னர் கொஞ்சம் திகைத்து, “Yes. It was my responsibility. And... I was responsible" என தன் தோல்வியை ஒப்புக்கொண்டு தலைகுனிய, உடனே சமாதானமடைகிற கூட்டம் கைதட்டி வாழ்க கோஷம் போட்டு ஆர்ப்பரிக்கத் தொடங்குகிறது. இப்போது சாகேத்ராம் இந்தக் கூட்டம் இவ்வளவு எளிதாக புத்தியை மாற்றிக்கொள்வதைக் கண்டு திகைத்துப் போய் கோபமாக வெளியேறுவான். 

சாகேத்ராம் திரும்பும் வழியில் நீண்டகாலத்துக்குப் பின் எதிர்பாராதவிதமாக எதிர்படும்  நண்பன் அப்யங்கர் மக்களின் இந்த மனப்போக்கைக் குறித்து காந்தியின் மீதான நம்பிக்கை குறித்தும் பேசும்போது சொல்லுவான், "இந்த ஜனங்களுக்கு ஞாபகசக்தியே கெடையாது. உனக்கும் எனக்கும் மட்டுந்தான்”

கிட்டத்தட்ட சாகேத்ராமனின் அப்போதைய மனநிலைதான் எனக்கும்.

I didn't get my closure yet or I'm still feeling guilty about the loss of lives. மறுபடியும் கேட்கிறேன்.

What is the least I could do? Forget and Move on?

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் - தமிழ்மகன்


உங்களுக்கு 70 களில் பதின்பருவத்திலிருந்த ஒரு தாய்மாமன் இருந்திருந்தால் இந்தப் புத்தகத்தில் வருகிற பெரும்பாலான கதைகளையும் நிகழ்வுகளையும் கட்டாயமாய்க் கேட்டிருக்கக் கூடும். இந்த நாவலின் எழுத்தாளர் தமிழ்மகன் செய்திருப்பதும் அம்மாதிரியான ஒரு முயற்சியே.

மனித நாகரிகத்தின் தோற்றம், வளர்ச்சி, தமிழின் தோற்றம்/வரலாறு, தமிழ் மன்னர்களின் கடல்பயணங்கள், கூடவே 60/70 களின் தமிழக அரசியல் சூழல், இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், காங்கிரஸ் மற்றும் ராஜீவ் கொலை பற்றிய தகவல்கள், விடுதலைப்,புலிகள் குறித்த தகவல்கள், தமிழகத்திலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் கல்வெட்டுகள் பற்றிய குறிப்புகள் ...

ஆரிய திராவிட சித்தாந்தங்கள், அவர்களின் வாழ்வியல் குறித்த விளாக்கங்கள், திரமிடா கீழூர் மேலூர் மாதுறை ஆகிய ஊர்கள் பற்றிய விளக்கங்கள், உலகெங்கிலுமுள்ள பிற நாடுகளின் ஊர்களின் தமிழ் பெயர்கள், தமிழ் வார்த்தைகளோட ஒத்துப் போகிற பிற உலக/இந்திய மொழிகள் குறித்த தகவல்கள் என ஆச்சரியமூட்டுகிற சுவாரசியமான விஷயனங்கள் நிறைய உண்டு. மொழி மற்றும் கலாச்சாரம் குறித்த ஒரு நல்ல தேடலுக்கான தொடக்கமாக இந்த நாவல் அமையலாம்.

இத்தனையையும் ஒரு futurology (இணையான தமிழ் வார்த்தை இல்லை) கதையில் புகுத்தி 90களில் பிறந்த தமிழ் young-adultsக்கு (தமிழ் இளையோர் ?!) கதை சொல்ல முயன்றிருக்கிறார். என்ன ஒன்று இந்த அதீதமான தகவல் திணிப்பின் காரணமாக அவ்வப்போது கதையின் போக்கே மறந்து போய் தகவல்களில் மூழ்கி விடுகிறோம் நாம். ‘மிளிர்கல்’ நாவலிலும் எனக்கு இதே பிரச்சனை இருந்தது. ஆனாலும் ஒரு 70s/80s refresher போல நிச்சயம் படிக்கலாம்.

எதிர்காலத்தில் நிகழ்கிற கதையில் வரும் கருவிகளும் சூழலும் நிறையவே சுஜாதாவை ஞாபகப்படுத்தின.
On a whole, this book is like தொ.ப meets சுஜாதா meets சுப.வீ :) :)
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க - இங்கே க்ளிக்கவும்

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

எங்கேயோ கேட்ட குரல்...!!

பிசிறடிக்கிற பெண் குரலுக்கென ஒரு தனித்தன்மை வாய்ந்த வசீகரம் இருப்பதாய் உணர்கிறேன். வழமைபோல மென்மையாகவோ, கீச்சுக் குரலாகவோ, கணீர் வெண்கலக்குரலாகவோ, மொத்தமாய் மிரட்டுகிற முரட்டுக் கடுமையாகவோ அல்லாமல் கொஞ்சம் அங்கும் இங்குமாய் எத்தன்மைக்கும் மையமாய் ஒலிக்கிற குரல்.
முகங்களின் சாயல் தேடுகிற மனிதர்கள் பற்றியோ அல்லது முகங்களின் சாயல் பற்றியோ, வாசனைகளை அடையாளம் காணுபவர்கள் பற்றியோ, கட்டாயமாக மனுஷ்யபுத்திரன் போல யாரேனும் கவிதைகளாகவும், ஜி.ஆர்.சுரேந்திரநாத் போல யாரேனும் கதைகளாகவும், ராஜ சுந்தர்ராஜன் போல யாரேனும் கட்டுரைகளும், எங்கேனும் எப்போதேனும்  எழுதியிருக்கக் கூடும்.
இம்மாதிரி குரல் சாயல் தேடுதல் கொஞ்சம் வித்தியாசம். காலங்காலமாய்க் காதறிந்த பாடகிகளின் குரல் சாயலல்ல நான் சொல்வது. பாட்டுப்பாட வாகில்லாத குரல் பதம் அது. என் நினைவில் நிற்கிற சற்று பிசிறடிக்கிற குரல் கொண்ட தேவதைகள் பெரும்பாலும் பாட்டுப் பாட விரும்பாத அல்லது பாடப் பிடிக்காதவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.நிறையவும் பேசப் பிடித்தவர்களாய் இருந்திருக்கலாம். கவிதைகளையோ அல்லது பாடல்வரிகளையோ உரக்க வாசித்துக்க விரும்புபவர்களாய் இருந்திருக்கலாம். குரல்கள் நினைவிருக்குமளவு முகங்களோ குணங்களோ நினைவிலில்லை.
ஆட்டோக்ராஃப் படத்தில் மலையாளத்தில் கொஞ்சுகிற கோபிகாவின் குரல் இந்த வகையறா. அந்தக் குரலுக்காகவே அந்தப் படத்தை நிறைய பார்த்திருக்கிறேன்/கேட்டிருக்கிறேன். பிற்காலத்தில் இதற்கிணையாய் காதுகளில் ஒலித்த பெரும்பான்மை மலையாளக் குரல்களென்பது தற்செயலா தெரியவில்லை.
அதற்கு முன்பு இதே ஒலிச்சாயலில் கேட்டது ஹேராம் திரைப்படத்தில் பெங்காலிக் கவிதை சொல்லும் ராணி முகர்ஜியின் குரல். இப்போதும் ’நீ பார்த்த பார்வை’ பாடல் தொடங்கி நாற்பத்தி ஒன்பதாவது நொடியில் ஜிபோனந்த தாஸின் ஆகாஷ் ஜ்யோத்ஸ்னா கவிதையை ராணி தன் பிசிறடிக்கிற குரலில் பியானோ பின்னிசையோடு உச்சரிக்கத் தொடங்குகையில் சர்வநிச்சயமாய் நமக்குப் பைத்தியம் பிடிக்கும்.
இன்று மாலை காஃபிக் கோப்பையோடு அலுவலகம் அமைந்திருக்கிற பெருவளாகத்தில் வெயில்வாங்கி நடந்து கடக்கையில் தூரத்தில் யாரோ ஒரு பெண் ஒருமாதிரி உடைந்த உத்தரப்பிரதேசத்து இந்தியில் செல்ஃபோனில் கெஞ்சிக் கொஞ்சி பேசியபடி என்னை தாண்டிச் சென்றாள்.
அதே...கொஞ்சமாய்ப் பிசிறடிக்கிற மென்குரல்...!

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

கொமோரா - வெறுப்பின் ஆதி ஊற்று




நானூற்று சொச்சம் பக்கங்களைக் கொண்ட நாவல், ஊதாப் பூக்களின் நீலப் புத்தகமாகவும், ரத்தப் பூக்களின் சிவப்புப் புத்தகமாகவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. “சுண்ணாம்புக் குழிக்குள்ள குதிக்கிறவனத் தான் கட்டிப்பேன்” எனச் சொல்கிற சிறுமியின் பேச்சைக் கேட்டு கொதிக்கிற சுண்ணாம்புக் குழிக்குள் குதிக்கிற அளவுக்கு அதீத குறும்புத்தனமும் வெகுளித்தனமும் கொண்ட சிறுவன் கதிரின் கதையில் தொடங்குகிறது நீலப்புத்தகம். அவனுடைய பால்யமும், குறும்புத்தனங்களும். விடுதி வாழ்க்கையும், விவிலிய வாசகங்களும், அவன் மீது நிகழ்த்தப்படுகிற பாலியல் வன்முறைகளுமாய்த் தொடர்கிற கதை, பொருள் தேடும் பொருட்டு நாடோடியாய் வேவ்வேறு தொழில்கள் செய்து அலைந்தபடி வாழ்கிற கதிர், ஒரு கட்டத்தில் இந்த சமூகத்தால் கீழ்மையாகக் கருதப்படுகிற அத்தனைக் குற்றங்களையும் செய்யத்தொடங்குகிறான். 

கம்போடியாவின் தலைநகர் நோம்ப்பென்-ல் (Phnom Penh) நிகழ்கிற கோவிந்தசாமியின் கதை. இந்தக் கதையினூடாக ஒரு மிகப் பெரிய இனப்படுகொலையின் காட்சிகளும் விவரணைகளும் நம் கண் முன்னே விரிகின்றன. க்மெர் ரோஜ் (Khmer Rouge) என்கிற புரட்சிப்படையும் கம்போடிய ராணுவமும் போரின் பெயரால் செய்த கொடுமைகளும் கொலைகளும் மனிதத்தின் மீதான நமது நம்பிக்கையையே அசைத்துப் பார்க்கக்கூடியவை. இந்த குழப்பங்களுக்கும் வன்முறைக்கும் இடையே சிக்கி அவதிப்படுகிற கோவிந்தசாமியின் குடும்பத்தினர்; இதிலிருந்து எப்படியோ தப்பித்து ஊர்வந்து சேர்கிறான் அவருடைய மகன் அழகர்சாமி.

சிறுவயதில் தன் கண் முன்னே நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களால் மனதளவில் பாதிக்கப்பட்டு, இரக்கமென்றால் என்னவென்றே தெரியாத குரூரமும் சுயநலமும் மிகுந்தவனாக மாறிவிட்ட அழகர்சாமி, கதிரின் தந்தை. செய்த குற்றச்செயல்களுக்காக பல காலம் சிறைச்சாலையில் கடத்துகிறவர். அவர் சார்ந்த கதைப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ள மனிதர்களும், அவர்களின் கதைகளும், அதிகாரத்தின் பெயரால் நடக்கிற அவலங்களும் அரசியலும் நமக்குச் சொல்லப்படுகின்றன. 

தன் தந்தை அழகர்சாமியின் மீது கதிர் கொண்டிருக்கிற அதீத வெறுப்பும், கொலைவெறியும், அதற்கான காரணமும், கதிரின் நோக்கமுமே மீதிக்கதை.
இரத்தம் தெறிக்கிற ஒரு கொலையைக் காட்சிப்படுத்துவதினூடாக மானுட மேன்மையையும் அன்பையும் பேசிச் செல்கிற கொரியப்படங்களுக்கு இணையான கதை சொல்லல் என்பேன். குறிப்பாக ’சாத்தானின் மனவெளிக் குறிப்புகள்’ என்கிற பதினைந்துபக்க அத்தியாயத்தில் அதிகாரங்களாகவும் சிறு சிறு பத்திகளாகவும் எழுதப்பட்டிருக்கிற கதையின் பகுதிகளும் கருத்துகளும் நிச்சமாக ஒரு மாறுபட்ட வாசிப்பனுவத்தை நமக்கு வழங்குகின்றன

”இங்கே எல்லாம் சரியாய் இருக்கிறதென்கிற மாயைகளை, அன்பின் வழியாகத்தான் உலகம் இயங்குகிறதென்கிற பொய் நம்பிக்கைகளை உடைத்து, துரோகமும் சூதும்தான் மனித பரிணாம வளர்ச்சியின் ஆதாரம் என்பதை ஜப்பானின் ஆதி காவியமான கெஞ்சிக் கதை துவங்கி இலியட், மஹாபாரதமென எல்லாப் பெருங்காவியங்களும் குறுங்காவியங்களும் வலியுறுத்துகின்றன. நமக்குள்ளிருக்கும் சக மனிதர்களின் மீதான வெறுப்பைச் சுமந்துகொண்டு அலையக் காரணமாகிவிடுகிறது. அன்பைப் போலவே வெறுப்பையும் வெளிப்படுத்தித்தான் ஆக வேண்டும், அதன் பொருட்டு நாம் எத்தனை இழிவானவர்களாகப் பார்க்கப்பட்டாலும். எல்லோரையும் நேசிக்கச் சொல்லித்தான் கற்றுக்கொடுக்கிறார்கள். நம்மால் அப்படி இருக்க முடிவதில்லை என்பதுதான் வெறுப்பின் தனித்துவம்." 
-லஷ்மி சரவணகுமார் 
முன்னுரையில் இப்படிச் சொல்லித்தான் துவங்குகிறார் எழுத்தாளர். கொமோரா நாவலின் மொத்த அடித்தளமும் இதுதானென இங்கேயே நமக்கு முன்னறிவிக்கப்படுகின்றது.’கொமொரா’ என்பது பைபிளில் சொல்லப்படுகிற ஒரு நகரத்தின் பெயர். அங்கே வாழ்கிற மக்களின் பாவங்களுக்கான கடவுளின் தண்டனையாக முழுமையாய் தீக்கிரையான இரு நகரங்கள் சோதோம் (Sodom) மற்றும் கொமோரா (Gomorrah) ஆகியவை. 

இந்தப் பெயரை நாவலுக்கு வைத்ததன் மூலம் நமக்குச் சொல்லப்படும் செய்தி, இது பொதுவான தேவதைகளின் உலகில் அன்பு ஊற்றெடுக்க நிகழ்கிற நல்லவர்களின் கதை அல்ல என்பதே. இங்கே இவர்களெல்லோரும் நல்லவர்கள்; எங்கிருந்தோ வருகிற ஒரு தீயவன்; அவன் செய்த தீமை; இறுதியில் அன்பால் தீமை தோற்று நன்மை வெல்லுகிற தேய்வழக்கு; இது மாதிரியான பொய்த்தோரணங்கள் எதுவும் எல்லை. நன்மை தீமையை தட்டையாக ஒற்றைப்படையாக அணுகுகிற கதையும் இதுவல்ல. 

வன்முறையும், வஞ்சமும், கோபமும், துரோகமும், பயமும், இரத்தமும், காமமும் நிறைந்து கிடக்கிற மனிதர்களும், அவர்களின் கதைகளின் ஊடாக அவரவர்கள் கண்டடைகிற உண்மைகள் அல்லது ஒளிக்கீற்றுகள் அல்லது நம்பிக்கைகளையும் பற்றிப் பேசுகிற நாவல் இது. 

ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்

புதன், 14 பிப்ரவரி, 2018

பெருங்காதல் தேவதைக்கு - Koi No Yokan

Courtesy: https://thumbs.dreamstime.com/z/pintura-colorida-abstracta-de-los-pares-del-amor-38765203.jpg
பேரன்பின் உனக்கு,

இத்தனை மனநிறைவோடும் பொங்கும் புன்னகையோடும் ஒரு கடிதத்தை எழுதத் தொடங்குவேனென சத்தியமாய் நினைத்தேனில்லை. எப்போதுமே சேருமிடம் குறித்த கவலைகளோடும், போகும் பாதை குறித்த பயங்களோடும், நினைவின் சுமைகளோடும், நீள் நெடுங்கனவுகளோடும் பயணித்துத் திரிந்தவனுக்கு, உன் காதல் எத்தனை பெரிய விடுபடலென வார்த்தைகளில் சொல்லி மாளாது.

எதிர்பாராத நேரத்தில் என் தோள்மேல் வந்தமர்ந்து பின் விலகிப் பறக்க மறந்து என்னையே சுற்றிவருகிற ஒரு பட்டாம்பூச்சியைப் போல, என் தோட்டத்துப் பழங்களின் ருசிக்குப் பழக்கப்பட்டு தினந்தவறாது வரும் சிற்றணில் போல, வழிதவறி வந்தக் காட்டினுள் வாழப்பழகிவிட்டதொரு முயல்குட்டி போல, என்னை உன் நினைவுகளால் எப்போதும் சுற்றிக் கொண்டேயிருக்கிறாய் நீ.

உன் அருகாமையால்,  உன் வியர்வை மணத்தால், உன் சிணுங்கல்களால், உன் மென் தொடுதல்களால்,  உன் முத்தங்களால், உன் புன்னகையால், உன் கண்ணீரால், உன் சொற்களால், உன் உடலால், உன் பேச்சால், உன் நினைவால், உன் வெப்பத்தால், உன் கண்சிமிட்டல்களால்,
உன் இருத்தலால்,
உன்னால்...
என் உலகு நிறைத்து...பிழைத்துக் கிடக்கின்றேன் நான்.

நான் படித்த அத்தனைக் கதைகளும்,ரசித்த அத்தனைக் கவிதைகளும், கேட்ட அத்தனைப்  பாடல்களும், கடந்து வந்த அத்தனை மனிதர்களும், மேற்கொண்ட அத்தனைப் பயணங்களும், காலம் மறந்து, சுற்றம் மறந்து, யாவும் மறந்து, நெடிந்து நீள்கிற நம் உரையாடல்களுக்காயென பிரத்யேகமாய் இத்தனை ஆண்டுகள் காத்திருந்ததாய் உணர்கின்றேன். போலவே உன் கனவுகளைக் காணவும், உன் உலகத்துக் கதைகளைக் கேட்கவும், உன் உலகத்துக் கடவுள்களையும் மனிதர்களையும் சாத்தான்களையும் தேவதைகளையும் சந்தித்துக் கை குலுக்கவும் தயாராய்க் காத்துக் கொண்டிருக்கிறேன் .

இனி நான் பயணிக்கிற எல்லா சாலைவழிகளிலும், எல்லா மலையேற்றங்களிலும், எல்லா விடியல்களிலும், எல்லா பனிக்காலப் பின்னிரவுகளிலும், எல்லா மழைநாள் மதியங்களிலும், உன்னோடும் உன் நினைவோடுமே வாழ்ந்து களிக்க விழைகிறேன்.

வெறும் வார்த்தைகளிலும் பாடல்வரிகளிலுமாய் அன்பைத் தேடித்திரிய விதிக்கப்பட்டவன் நான்; மறுப்புகளின் வாதையை ருசித்துப் பழகியவன்;
திறக்கப்படாத கதவுகளெனத் தெரிந்தே தினமும் பூங்கொத்துகளோடு காத்திருந்தவன்;

கடந்து வந்த அத்தனை மனங்களில் ஒன்றேனும் வார்த்தைகளினூடாய் என்னைப் படித்துணர்ந்துவிடாதாவென கைகளில் எப்போதுமே ஒரு கற்றைக் கடிதங்களைச் சுமந்தலைந்தவனை,
ஒரு தனிமை கொண்டாடியை,
எவ்வித முன்முடிவுமின்றி
எவ்வித தன்னிலைவிளக்கங்களுக்கும் இடங்கொடாது
என் எல்லா பிழைகளோடும் என்னை ஏற்றுகொண்டு
ஆரவாரமாய் எந்தன் கைபிடித்திழுத்துச் சென்று
உன் உலகினுள் சேர்த்துக் கொண்ட பெருங்காதல் தேவதைக்கு...

முத்தங்கள்..!

இந்நாளும் இனி வரும் எந்நாளும் நமக்கே நமக்கானதென வாழ்ந்து தீர்ப்போம் வா..!

தேடித்திரிந்தாலும்
இன்று தீராக்காதலனாய்,

நான் <3 nbsp="" p="">
Related Posts Plugin for WordPress, Blogger...