”நிலம் என்பது வெறும் கண்ணும் மனசுமல்ல.மொத்த உடலும்தான்”இன்றைக்கு தமிழ் சினிமாவில் அதிகம் கொத்துக் கறி போடப்படுகிற விஷயமாகவும், நீயா நானா மாதிரியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் புண்ணியத்தில் ’ஐடி வேலைய விட்டுட்டு ஆர்கனிக் ஃபார்மிங் பண்ணப்போறேன்’ என fashion statementஆகவும் திகழ்கிற ஒன்று ‘விவசாயம்’. உண்மையில், இந்த வீக்கெண்ட் விவசாயிகள் உள்ளிட்டோர் உழவுத்தொழிலை பெருமைக்கு எருமை மேய்க்கிற பாங்கிலேயே அணுகிக்கொண்டிருப்பவர்கள்.
-தீம்புனல், ஜி.கார்ல் மார்க்ஸ்
நிலத்திலேயே உழன்று, உழைத்துக் கொட்டி, நிலத்தைச் சுற்றியே தங்களின் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டு இறுதியில் நிலத்தை நம்பியே உயிரை விடுகிற டெல்டா விவசாயிகளில் யாரேனும் ஒருவரிடம் கேட்டாலே போதும்; அவர்கள் விடுகிற இரத்தக் கண்ணீரில் ‘விவசாயம்’ குறித்து மனதில் நாம் வறித்துக் கொண்டிருக்கிற போலிச் சித்திரங்கள் மொத்தமாய் சிதைந்துவிடக் கூடும்.
தஞ்சை, திருவாரூர், கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு வயலும் விவசாயமும் வாழ்வின் தவிர்க்க முடியாத பகுதிகள். கோடையோ, வாடையோ, வசந்தமோ, எந்த பருவகாலத்தில் நாங்கள் பேருந்து ஏறினாலும் பசுமையின் எதோவொரு நிறம் கண்களில் பட்டபடியே இருக்கும். எங்கள் கதைகளில் வாய்க்கால்களும், ஆற்றுப் பாலங்களும், வரப்புகளும், மதகுகளும், வயல்களும், தோப்புகளும், கட்டாயம் இருக்கும். சொந்தமாகவோ அல்லது குத்தகைக்கோ, பக்கத்து சிற்றூர்களில் எங்கோ கொஞ்சமாவது நிலம் இருந்து மகசூல் பார்த்து, வருடத்திற்கு ஒரு முறை நெல்மூட்டைகள் வீட்டில் வந்து இறங்கியிருக்கும்.
ஆனால் இன்றைக்கு, இவையெல்லாமே பத்திருபது வருடப் பழங்கதைகள். காலமும் மாறி காட்சிகளும் மாறிவிட்டன. மழைவெள்ளம், வறட்சி, காவிரி நீர், நகர்மயமாக்கம், சாலைகள் விரிவாக்கம், மோசமான நீர் மேலாண்மை, நிலத்தடி நீர் அளவு, ஆற்றுமணல் கொள்ளை என விவசாயம் நொடித்துப் போக காரணிகளைப் பட்டியலிட்டால் நீண்டு கொண்டே போகும். இவையத்தனையும் தாண்டியும் விருப்பத்தின் பேரிலோ கட்டாயத்தின் பேரிலோ இன்றும் உழவைக் கைக்கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவ்வாறாக நிலம் குறித்து கண்முன்னே நமக்குப் புலப்படும் அனைத்திற்குப் பின்னாலும், பிறந்து வாழ்ந்து மறைகிற மனிதர்களைப் பற்றிய கதையே தீம்புனல்.
முதலில், இத்தனை பசுமையை எழுத்தில் கொண்டுவந்த படைப்பாக அண்மையில் எதுவுமே நினைவுக்கு வரவில்லை. ஒவ்வொரு முறையும் யாரேனும் படலைத் திறந்துகொண்டு வயலிலோ, தோட்டத்திலோ, கொல்லையிலோ, தோப்பிலோ நுழைகையில் பச்சைக் கொடிகளின் வாசனையை நீங்களும் உணரக்கூடும். அத்தனை உயிர்ப்பான அழகான விவரனைகள் புத்தகம் முழுக்கவும் விரவிக்கிடக்கின்றன. இந்தப் பசுமை இத்தனை நெருக்கமாகிவிடுவதால் தானோ என்னவோ, பின்பு எல்லாம் மாறிப் போகிற போதான வெம்மையையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
வீம்பும், வீராப்பும், வைராக்கியமும், மோடுமுட்டித்தனமுமான எத்தனை மனிதர்கள்; நிலத்தின் மீதான பிடிப்பால் அதன் மீது தனக்கிருக்கிற உரிமையை நிலைநாட்டத் துடிக்கும் சோமு, கசந்து போன திருமணத்தால் தோட்டத்தை வசிப்பிடமாக்கிக் கொள்கிற கலியமூர்த்தியின் வைராக்கியம், எழுத்தாளரின் மொழியில் “தன்னையும் அழித்துக் கொண்டு பிறரையும் சாம்பலாக்கும் பிரத்யேக குணவார்ப்பைக்” கொண்ட கலியமூர்த்தியின் மனைவி விசாலாட்சி...! இன்னும் எத்தனையோ பேர்...! தத்தமது உடல் தளர்வின் பொருட்டும், பிற தேவைகளுக்காகவும் பிள்ளைகளையோ அல்லது ஏனைய மற்றோரையோ சார்ந்திருக்க வேண்டி சர்க்கஸ் கூண்டின் புலிகளாக மாறிவிட்ட பெரியவர்களையே அதிகம் பார்த்துப் பழகிய நமக்கு இத்தனை வைராக்கியமான உறுமலும் சீற்றமுமான வயசாளிகளின் இருப்பே வியப்பூட்டக்கூடிய விஷயம் தான்.
நான் வியந்த மற்றொரு விஷயம் நிலத்தின் மீது எழுத்தாளர் கொண்டிருக்கிற அபரிமிதமான புரிதல். ஒரு இடத்தில் “வேளாண்மையிலிருந்து விலகிச் செல்லும் ஒருவனை நிலம் மீண்டும் தன்னிடம் சேர்த்துக்கொள்வதில்லை.அவனால அதனுடன் ஒன்றிணைய முடிவதில்லை.இழந்துவிட்ட சொர்கத்தின் கனவுடன் நிலத்தைக் கொத்துபவனுக்கு அது இளகிக் கொடுப்பதில்லை.அவனை முழுக்கவும் நிராகரிக்கிறது. அப்படித் தோற்றவர்கள் நிலத்தின் மீது வன்மம் கொண்டவரானார்கள்” என மணல் கொள்ளைக்குத் துணை போகிற வேளாண் குடிமக்களைப் பற்றி சொல்லும்போது குறிப்பிடுகிறார்.
நிலவுடைமையாளனாகப் பிறந்து பின்பு செட்டியாரின் வழக்கால் நிலங்களனைத்தும் துண்டாடப்பட்டு, இருக்கிற சொற்ப நிலத்தில் விவசாயமும் கைவராமல், ஹார்ட்வேர் கடைக்கு வேலைக்குப் போகிற ராஜேந்திரன், அடையாளச் சிக்கலில் உழல்கிற வாழ்ந்துகெட்ட இரண்டாம் தலைமுறை நிலவுடைமையாளனின் பிரதிநிதி. கடை முதலாளியோடு மனதளவில் முரண்பட்டு, பின் வேலை மும்முரத்தில் அத்தனையும் மறத்துப் போகிற இடம் ,பிழைப்புவாதத்தின் சான்று.
ஒவ்வொரு பாத்திரப்படைப்பையும் நான் பார்த்த என் சுற்றத்து மனிதர்களோடு பொருத்திப் பார்த்துக் கொண்டிருக்கையில், ஒரு பாத்திரத்தை மட்டும் என்னால் நான் கடந்து வந்த பெரும்பாலான குடும்பங்களில் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அது சோமுவின் மூத்த மருமகள் ரமணி. ரமணிக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளோ, சுதந்திரமோ இருப்பதாகத் தெரியவில்லை. அல்லது அவள் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. எதைப் பற்றியும் அவளுக்கு கேள்விகளும் இல்லை. தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்காகவும் வீடு தேடி வருபவர்களுக்காகவும் சமைத்துப் போடவே பிறப்பெடுத்ததைப் போல நடந்துகொள்கிறாள். அவளுடைய உலகம் பெரும்பாலும் வீட்டின் உள்ளேயே முடிந்து போகிறது. குடும்பம் பொருளாதாரரீதியாக நலிந்து போகையில் வந்து ஒட்டிக்கொள்கிற பிடிக்காத சொந்தங்களோடு உறவாட வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே, அவளுடைய தனித்தன்மையும் மன வார்ப்பும் வெளிப்படுகிற இடம். அல்லது நமக்கு அப்போதே சொல்லப்படுகிறது.
திருடன் பெரியசாமியின் பாத்திரம் தஞ்சை பிரகாஷின் ஒரு கதையில் வருகிற திருடனை நினைவுபடுத்துவது போலிருந்தது.
அரசியல் தெளிவோடு கட்டுரைகள் எழுதுகிற ஒருவர் புனைவெழுத வந்தால், அவருடைய அரசியல் கட்டாயம் படைப்பிலும் வெளிப்படுமல்லவா. அது தீம்புனலிலும் உண்டு; ராஜேந்திரனின் திராவிடக் கட்சியின் மீதான ஈர்ப்பு, கடைசி மகன் மகேந்திரனின் கடவுள் மறுப்புக் கொள்கை, தமிழ்த் தேசியம் பேசுகிற புலவர், எம்ஜியார் கட்சியின் கோபால், பேராசிரியர் ரத்தினம், இறுதியாக ரஞ்சிதத்தின் காதலைத் தொடர்ந்து சாதியின் பெயரால் நடக்கிற நிகழ்வுகளும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் என அடித்தாடியிருக்கிறார். கேலி கிண்டலுக்கும் குறைவில்லை. இலுப்பைத் தோப்புக்கு போகிற இன்ஸ்பெக்டர் பற்றிய விவரிப்பில் நீங்கள் விலா நோகச் சிரிப்பது உறுதி.
இன்னும் மனதைக் கவர்ந்த பாத்திரங்களையும் அவற்றின் வார்ப்பையும் பற்றிப் பேசுவதானால் மொத்தக் கதையையும் சொல்ல வேண்டியதாய் இருக்கும். ஆகையால் இப்போதைக்கு இது போதும். அவ்வப்போது எனக்குப் பிடித்த மனதில் நின்ற பத்திகளை எடுத்துப் போடுகிறேன். பேச வாய்ப்புக் கிடைத்தால் புத்தகம் குறித்து விரிவாகப் பேசுவேன்.
தமிழ் இலக்கியத்தில், நிலம் சார்ந்து அல்லது நிலத்தின் வழியாக கதை சொல்லப்படுவது நமக்குப் புதிதன்று. பூமணியின் வெக்கை உள்ளிட்ட பல கதைகள் இருந்தாலும், மூன்று தலைமுறை மனிதர்களின் வாழ்க்கையோடு ’தீம்புனலில்’ கார்ல் மார்க்ஸ் ஒட்டுமொத்தமாய்ச் சொல்லிச் செல்கிற கதைகள் அசாத்தியமானவை. உங்களுக்கு நிலவுடைமைச் சட்டம் குறித்தோ, நில உச்சவரம்பு குறித்தோ, வேளாண்மை சார்ந்த வேறு எதுவுமோ, ஒன்றுமே தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ‘தீம்புனல்’ நாவலைப் படித்துவிடுங்கள்; கட்டாயமாய் உங்களுக்கொரு மறக்கமுடியாத வாசிப்பனுபவத்தைத் தரும்...!
வாழ்த்துக்கள் கார்ல்...!
”எல்லோருக்கும் ஏதோ ஒன்று தேவையானதாக இருக்கிறது. அந்த ஏதோ ஒன்று மிகவும் அற்பமானதாக இருக்கிறது. அது கிடைத்துவிடுகிறபோது கண்முன் இருக்கிற இந்த பரந்த வாழ்க்கையே அவர்களுக்கு பொருளற்றதாக மாறிவிடுகிறது. தன்னளவில் அவர்கள் மிகவும் சுருங்கிப் போகிறார்கள். பதட்டமடைந்து விடுகிறார்கள். எல்லாவற்றிலும் இருந்து தங்களைத் துண்டித்துக் கொள்கிறார்கள். பழைய நினைவைத் தூண்டும் மனிதர்களிடம் இருந்து அப்புறப்பட்டுவிடுவது அதன் முதல் நடவடிக்கையாக இருக்கிறது. அது எளிது என்பது மாத்திரம் அல்ல, அதுவொரு சவுகரியமும் கூட”-தீம்புனல், ஜி.கார்ல் மார்க்ஸ்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக