Like most human behavior, suicide is a multi causal act. Teasing out the strongest predictive variables is difficult, particularly because such internal cognitive states may not be accessible even to the person experiencing them. We cannot perceive the neurochemical workings of our brain, so internal processes are typically attributed to external sources. Even those who experience suicidal ideation may not understand why or even if and when ideation might turn into action.
-Michael Shermer , Scientific American
இவ்வுலகில் பிறந்த ஒவ்வோர் உயிரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் இயற்கையாகவோ அல்லது வேறு புற காரணிகளின் பொருட்டோ தத்தமது இயக்கத்தை நிறுத்திக் கொள்வதை, அல்லது நின்று போவதை, நாம் மரணம்/மரணித்தல் என்கிறோம். மனிதர்களாக இருக்கும் வகையில் அவர்கள் உருவாக்கிய நினைவுகளின் வாயிலாக, அவர்தம் சுற்றத்தோடு கொண்டிருக்கிற உறவின் வாயிலாக, அவர் கொண்டிருந்த (அல்லது கொண்டிருந்ததாக அனைவரையும் நம்பவைத்த) பண்புநலன்களின் வாயிலாக, இறந்துபோனவரைக் குறித்த ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளுகிறோம்.
இறந்துபோனவர் குறித்து நாம் உருவாக்கிக் கொள்ளுகிற மனச்சித்திரம் முழுக்கவே நமது பார்வைக் கோணமே அன்றி அவரை இன்னார் என்று விளக்கிச் சொல்கிற வரையறையாகிவிடாது. Our opinion or perception is entirely what we interpret about the deceased person rather than being the definition of their personality.
ஓர் உயிரின் மறைவு, அதை எல்லோராலும் எடுத்தாளப்படுகிற, உரிமை கோரப்படுகிற ஒன்றாகவும் மாற்றிவிடுகிறது. இறந்தவரைப் பற்றி யாரும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்; நல்லவிதமாகவோ அல்லது வெறுப்புடனோ அல்லது தனிபட்ட வெறுப்புக்கு கணக்குத் தீர்க்கும் வகையிலோ; எப்படியானாலும் மறைந்தவர் வந்து கேள்வி கேட்கப் போவதில்லையல்லவா ?
தனிப்பட்ட முறையில் மரணங்களால் வெகுவாக பாதிப்பிற்குள்ளாகும் ஆள் நான்; எந்த ஒரு உயிரிழப்பையும் எளிதாக ஏற்றுக்கொள்ளவே முடியாது. இது குறித்து நண்பர்களோடு நிறையவே பேசியிருக்கிறேன். தெரிந்தவர்கள் என்று இல்லை; கொஞ்சம் கூட தொடர்பில்லாத யாரோ ஒருவருடைய மரணச் செய்தியைக் கேள்விப்பட்டாலும் அதே உணர்வு தான்.சாலை விபத்துகள், இயற்கை மரணம், தற்கொலை, மூப்பு, நோய் என எப்படி நிகழ்ந்த மரணமாக இருந்தாலும் அதற்கு காரணங்களும் விளக்கங்களும் தேடி மனதை ஆற்றிக் கொள்ளவும் தேற்றிக்கொள்ளவும் முயல்கிற பெரும்பாலானோர் போலவேதான் நானும்.
என் அம்மா அடிக்கடி சொல்கிற விஷயம் ஒன்று உண்டு. ”செத்துப் போறவங்களுக்கு அந்த ஒரு நிமிஷ வலிதான். சுத்தியிருக்குறவங்களுக்கு அவங்களோட வாழ்நாள் முழுக்க அது வலி.” இயற்கை மரணமே இப்படியென்றால், உண்மையில் தற்கொலை முடிவை எடுக்கிறவர்கள் தன்னைச் சுற்றியுள்ளவர்களை வாழ்நாள் முழுமைக்கும் தண்டித்துவிடுகிறார்கள் என்றுதான் பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது.
அப்படியொரு தற்கொலையில் தான் தொடங்குகிறது ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’. நாம் நினைப்பதைப் போல இங்கு கூறாய்வு செய்யப்படுவது அவனுடைய உயிரற்ற உடல் அல்ல. பிரபாகரனுடைய நண்பனாகிய கதைசொல்லியின் பெயர் நமக்குச் சொல்லப்படுவதில்லை. மாறாக அவனுடைய பார்வையில், அவன் வழியாகத் தான் பிரபாகரனைக் குறித்து நாம் அறிந்து கொள்கிறோம். பிரபாகரனின் மரணத்திற்கான /தற்கொலைக்கான காரணத்தை அறியும் பொருட்டே துவங்குகிறது கதைசொல்லியின் தேடல்.
கதைசொல்லியின் ஐயங்களும், முன்முடிவுகளும், தீர்மானங்களும், அற்பத்தனங்களும், கேள்விகளும், மனவுளைச்சலும் நம்முடையதாகிவிடுகின்றன.ஒருகட்டத்தில் வாசிக்கிற நாமே கதைசொல்கிறவராக மாறிவிடுகிறோம். நாவலின் முதல் பாதி முழுக்க நாம் சந்திக்கிற உரையாடுகிற ஒவ்வொருவரும் தத்தமது உலகத்தில் தம்மையே முன்னிறுத்தி தங்களுடைய கோணத்தில் சொல்கிற கதைகளில் நாமும் பிரபாகரனும் துணைப் பாத்திரங்களே.
பிரபாகரனின் உற்ற நண்பனாகத் தன்னைக் நிறுவிக் கொள்கிற சதாசிவம் தொடங்கி, செவிலி நாஸியா, மணி, தாமோதரன், பாஸ்கர், லீமா, அன்வர் என அத்தனை பேரும் ஒவ்வொரு முடிச்சைப் போட்டு பிரபாகரனின் மரணத்துக்கு வெவ்வேறு சாயங்களைப் பூசிச் செல்கின்றனர்; காதல் தோல்வி, குடும்பச் சிக்கல், பணி நிமித்தமான மன அழுத்தம், போதைப் பழக்கம், அகந்தை, ஏன்.. அமானுஷ்ய சாயமும் கூட. எல்லா தேடல்களையும் போலவே பிரபாகரனின் மரணத்திற்கான விடைதேடலும் இடைநிறுத்தத்திற்குள்ளாகிறது.
புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் ஏழாண்டுகளுக்குப்பின் மீண்டும் தொடர்கிற தேடலில் ஒவ்வொரு முடிச்சும் கதைசொல்லியின் பார்வையிலேயே அவிழ்க்கப்படுகிறது. இறுதியில் நாம் எதிர்பார்க்கிற விடை கிடைத்ததாவென புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றுமொரு பாத்திரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தலைவராக வருகிற மயில்சாமியுடையது. ஒரு அரசியல் கட்சிக்கு கொஞ்சமும் குறையாத அளவு அதிகாரத்திமிரும், பதவி தருகிற மிதப்பும், உள்ளரசியலும், தனிமனித வஞ்சம் தீர்த்தலும் மருத்துவத்துறையில் (லும்) நிறைந்திருப்பதே நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கிறது
மேலே குறிப்பிட்ட எல்லா பாத்திரங்களுமே சமூகத்தின் வெவ்வேறு பண்புநலன்களைக் கொண்ட வெவ்வேறு முகங்களின் மாதிரிகள் எனச் சொல்லலாம். நாவலின் முதல்பாதியில் அவர்களுடைய தரப்பு நியாயங்களையும் விளக்கங்களையும் கேட்டறிந்து கருத்துருவாக்கம் செய்யும் நாம், இரண்டாம் பாதியில் ஒவ்வொருவர் சொல்கிற தகவலுக்கும் பின்னாலிருக்கிற தரவுகளைப் பகுத்தறிந்து பார்த்து உண்மையை உணர்ந்து கொள்கிறோம். Like a detailed case study or psychoanalysis.
மயிலனின் சிறுகதைகளில் நான் தொடர்ந்து கவனித்து வருகிற கூறு ஒன்றுண்டு. பாத்திரங்களின் வழி தனிமனிதர்களின் ego குறித்தும் அவர்கள் தங்களைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கிற பிம்பம் குறித்தும் நிறையவே பேசப்படும். அந்த ego சிறிதளவேனும் சீண்டப்பட்டாலோ அல்லது காயப்பட்டாலோ, போலி முகமூடிகளைக் கிழித்துக் கொண்டு சில்லறைத்தனங்கள் அத்தனையும் வெளிப்படும். பின்பு சுய பரிசோதனையும், கேள்விகளுமாய்த் தொடர்ந்து இறுதியில் தெளிவடைவதோடு , தன் அற்பத்தனத்தை தானே நொந்துகொள்கிற புரிதலோடு முடியும். இந்த படிநிலைகளின் விரிவான வடிவமாகவே ’பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ நாவலாகப் பார்க்கிறேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக, ’மனநலம்’ என்பதே அதிகம் பொருட்படுத்தப் படாத இன்றைய சூழலில், லூசு மெண்ட்டல் மாதிரியான சொற்கள் அத்தனை சுளுவாக புழங்குகிற சமூகத்தில், மருத்துவர்களின் (மாணவர்களின்) மன அழுத்தம் குறித்தும் அதற்கான புற காரணிகளைக் குறித்தும் விரிவானதொரு உரையாடலையும் ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ வாயிலாகத் துவக்கி வைத்திருக்கிறார் மயிலன்.
இதுவரை மரணம் குறித்தும் உயிர்வாழ்தல் குறித்தும் இத்தனை விரிவாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பேசிய புத்தகங்கள் எவையெனக் கேட்டால் ஆங்கிலத்தில் Atul Gawande எழுதிய Being Mortal, Paul Kalanithy எழுதிய When breath becomes air ஆகியவற்றைச் சொல்லலாம். இரண்டு புத்தகங்களை எழுதியவர்களுமே மருத்துவர்கள்; நரம்பியல் அறுவை சிகிச்சை வல்லுநர்கள். அன்றாடம் பிறப்பையும் இறப்பையும் ஒர் நாளின் சுழற்சியில் பல முறை கடக்கிறவர்களுக்கு அவற்றின் பின்னாலிருக்கிற உணர்வுகளும் மதிப்பீடுகளும் அற்றுபோய்விடும் என்ற பொது நம்பிக்கையை மாற்றிய புத்தகங்கள் இரண்டுமே. தமிழில் இவ்வகையான எழுத்துக்கு ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ ஒரு துவக்கமாக இருக்குமென நம்புகிறேன்.
An awesome medical-psychoanalysis-thriller in Tamil..and that's a first..! நிச்சயமாகத் தவறவிடக் கூடாத புத்தகம்...!
வாழ்த்துகள் மயிலன்...! :)
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இங்கு க்ளிக்கவும்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக