நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

வெள்ளி, 31 டிசம்பர், 2021

Turning Point : War on terror - Netflix - திருப்புமுனை - 2021

 


 அண்மையில்  அமெரிக்கப் படைகள் ஆஃப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறியதும் , அந்நாட்டின் ஆட்சி அதிகாரம் மீண்டும் மத அடிப்படைவாத தீவிரவாத அமைப்பான தாலிபன்கள் வசம் சிக்கியதும் உலகம் முழுக்க கவனம் பெற்ற ஒரு நிகழ்வு. இருபது ஆண்டுகளுக்கு முன்பு உலகையே உலுக்கிய அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களின் மீதான தீவிரவாதிகளின் தாக்குதலின் பின்னணி என்ன ? அதன் பின்னான தீவிரவாதத்திற்கெதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் என்ன? உண்மையில் அமெரிக்காவின் ஆஃப்கன் உடனான போர் எப்போது, எந்த நோக்கத்திற்காக தொடங்கியது ? தாலிபன்கள் உருவானது எப்படி ? அமெரிக்காவின் ஈராக் மீதான போருக்கு என்ன காரணம் ? இப்படியான இன்னும் பல கேள்விகளுக்கு விடையாக அமைந்திருக்கின்றது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் ’Turning Point: 9/11 and the War on Terror’ ஆவணக் குறுந்தொடர். (Mini - Docu series)

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களின் மீதான தாக்குதலுக்கு முன்பு, நான்கு உள்நாட்டு விமானங்கள் கடத்தப்பட்ட செய்தியில் தொடங்கி பின்பு முதல் விமானம் மோதியதும் மக்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அந்த நூறு மாடிக் கட்டிடத்திலிருந்து இறங்க முயற்சி செய்தது , கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைத்து மக்களை மீட்கப் போராடிய தீயணைப்புத் துறையினர் முயற்சி செய்தது, அடுத்தடுத்த விமானங்கள் இன்னொரு கோபுரத்திலும் பெண்டகன் எனப்படும் அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறை  பெருவளாகத்திலும் மோதியது  என பரப்பான நிகழ்வுகளுடன் தொடங்குகிறது தொடர்.

அமெரிக்க இராணுவத்தின் பெரும் பதவியில் இருந்தவர்கள், சட்ட வல்லுநர்கள்,9/11 சம்பவத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள், அமெரிக்க  முன்னாள் உளவுத்துறையினர்தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர், முன்னாள் தாலிபன் தலைவர்கள், ஆஃப்கன் போர்ப்படைத் தளபதிகள், ஆஃப்கன் அரசியல் தலைவர்கள் என பலருடனான நேர்காணலில் இந்நிகழ்வின் முன்னும் பின்னும் நடந்த பல சம்பவங்களை வெவ்வேறு கோணங்களில் விவரிக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்கு அல்காயிதா தீவிரவாத அமைப்பு தான் காரணம் எனத் தெரியவந்தபின் அவர்கள் எவ்வாறு உருவானார்கள் என்கிற வரலாறும் காட்டப்படுகின்றது.

2021 ஆண்டு வரையிலுமான அமெரிக்காவின் ஆஃப்கன் மீதான இருபது ஆண்டுகால போர் தொடங்குவதற்கு முக்கிய தூண்டுகோளாக  இரட்டைக் கோபுரங்களின் மீதான தீவிரவாதத் தாக்குதலே அமைந்திருக்கின்றது. முன்பு 1979முதல் 89 வரையிலுமாக பத்தாண்டுகள் ஆஃப்கானிஸ்தான்ரஷ்யா இடையிலான போரின் போது ஆஃப்கன் போராளிகளான முஜாஹிதீன்களுக்கு அமெரிக்காவே மறைமுகமாக போர்ப்பயிற்சியும் ஆயுதங்களும் தந்து உதவியதாக சொல்லப்படுகிறது. பின்னாட்களில் இவர்களே தாலிபன்களாக மாறியதாகவும், ஒசாமா பின் லேடன் தலைமையிலான அல்காயிதா தீவிரவாத அமைப்பிலும் சேர்ந்துவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

அமெரிக்க இராணுவம் ஆஃப்கானிஸ்தானிலிருந்து சிறை பிடித்த நூற்றுக்கணக்கான கைதிகளை க்யூபாவில் அமைந்திருக்கிற க்வாண்டனமோ பே ( guantanamo bay) சிறைச்சாலையில் அடைத்து வைத்து enhanced interrogation techniques என்கிற பெயரில் செய்த கொடுமைகளைப் பற்றியும் பேசியிருக்கின்றார்கள். இவர்களில் 9/11 சம்பவத்துடன் நேரடித் தொடர்புடைய குற்றவாளிகள் ஓரிருவர் இருந்திருந்தாலும் , பெரும்பாலானோர் சட்டப்படி எந்தக் குற்றமும் சாட்டப்படாமல் (accused) தீவிரவாதிகளாகவோ அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களாகவோ இருக்கக் கூடும் என்கிற சந்தேகத்தின் பேரிலேயே சிறைபிடிக்கப்பட்டு ஆஃப்கானிஸ்தானிலிருந்தும் இன்னபிற நாடுகளிலிருந்தும்  நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனையையும் அனுபவித்திருக்கிறார்கள்

  பெட்டிச்செய்தி:


ஒரு சர்வதேசக் குற்றவாளியோடு தொடர்பில் இருந்ததாகவும், அமெரிக்காவில் நிகழ்ந்த தீவிரவாத சம்பவங்களுக்குக் காரணமானவர்களுள் ஒருவராகவும் கருதப்பட்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகிறார் மொஹ்மதூ ஸ்லாஹி.அவருடைய நாடான மொரிட்டானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ள க்வாண்டனமோ தீவின் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்ட மொஹ்மதூ, செய்யாத தவறுக்காக 20 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்து, பின்பு பலரின் முயற்சியாலும் சட்டப்போராட்டங்களாலும் விடுதலை அடைந்தார். இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியானது தான் ’The Mauritanian’ திரைப்படம். இத்திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் காணக்கிடைக்கிறது.

 ஆஃப்கானிஸ்தானில் போர் நிகழ்ந்து கொண்டிருந்த அதே நேரத்தில் அமெரிக்க அதிபர் புஷ் தலைமையிலான அரசு, அதிபர் சதாம் உசேன் பேரழிவை விளைவிக்கக் கூடிய ஆயுதங்கள் (Weapons of mass destruction) வைத்திருப்பதாகச் சொல்லி ஈராக் நாட்டின் மீதும் போர் தொடுக்க முடிவெடுக்கிறது. எந்த தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதை அறிந்தால் நாம் மனம் நொந்து போகக் கூடும்.  ஒரு கட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் போர் எந்த இலக்குமின்றி நிகழ்ந்ததைப் பற்றியும், ஆஃப்கனில் அமைந்திருந்த ஹமீது கர்சாய் தலைமையிலான அரசு ஊழலும் லஞ்சமும் நிறைந்த ஒன்றாக இருந்ததையும் அமெரிக்க முன்னாள் அரசு அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள்.

தாலிபன்களைத் தோற்கடிக்க ஆஃப்கானிஸ்தானின் வடக்கு கூட்டணி (Northern alliance) இராணுவக்குழுவுடன் இணைந்து பணியாற்றிய அமெரிக்காவுக்கு, காபூலிலிருந்தும் காந்தஹாரிலிருந்தும் தாலிபன்களை விரட்டியடித்தபின் அந்நாட்டில் என்ன செய்வது என்கிற தெளிவான திட்டம் ஏதும் இல்லை. அத்துடன் மீண்டும் அங்கு இயல்பு வாழ்க்கையை நிலைநிறுத்தவும் உள்கட்டமைப்புகளை சீரமைக்கவும் எதுவுமே செய்யாத ஹமீது கர்சாய் தலைமையிலான மோசமான  அரசாட்சியும்  தாலிபன்கள் புத்துயிர்ப்புடன் மீண்டும் செயல்பட முக்கிய காரணியாக இருந்திருக்கிறது. ஆவணக் குறுந்தொடரின் இறுதிப் பகுதியில் அதிபர் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசின் உத்தரவின் பேரில், பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் சர்வதேசக் குற்றவாளியும் தீவிரவாதியுமான ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட நிகழ்வும் அது தொடர்பான சம்பவங்களும் பேசப்படுகின்றன.

இறுதியாக ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளும், பிற நாட்டு அரசியல்/இராணுவ அதிகாரிகளும் முழுமையாக வெளியேறிபின் தாலிபன்கள் தலைமையிலான அரசு அமைந்திருக்கிற  இவ்வேளையில், இரு தரப்பிலும் லட்சக்கணக்கான உயிர்சேதத்தையும் , பெருமளவிலான பொருட்சேதத்தையும் ஏற்படுத்திய இந்தப் போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது. தீவிரவாத செயல்களால் ஏற்படுகிற பாதிப்புகளையும் இழப்புகளையும் பற்றிப் பேசியிருக்கும்  அதே அளவு நாடுகளுக்கிடையேயான போரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிகழ்கிற பாதிப்புகளையும்  இழப்புகளையும் பற்றி விரிவாகப் பேசியிருக்கின்றது இந்த ஆவணக் குறுந்தொடர் .

’Turning Point: 9/11 and the War on Terror’ ஆவணக் குறுந்தொடர். (Mini - Docu series) நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணக்கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை :

Related Posts Plugin for WordPress, Blogger...