நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

புதன், 26 மே, 2010

எது அழகு - கருப்பு/சிகப்பு - ஒரு விளம்பர மாயை

சிறிது இடைவெளிக்குப் பிறகு இப்போது தான் பதிவிட நேரம் கிடைத்தது. நான் வெகு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்த ஒரு விஷயத்தைப்பற்றி இன்று  எழுதலாம் என்று இருக்கிறேன்.

இது விளம்பர யுகம். பொங்கித்தின்னும் அரிசியிலிருந்து போட்டு நடக்கும் செருப்பு வரைக்கும் எல்லா பொருட்களுக்குமே விளம்பரம். தகவல் தொடர்பு ஊடகங்களில் தங்கள் திறமைக்கும் வசதிக்கும் ஏற்ற மாதிரி விளம்பரம் செய்கிறார்கள்.குறைந்த நேரத்தில் நம் கவனத்தை நுகர்பொருளின் மீது திருப்ப பல்வேறு யுத்திகளை கையாள்கிறார்கள்.என்னதான் கருத்து சுதந்திரம் இருந்தாலும் சில நிறுவனங்களின் வர்த்தக விளம்பரங்கள் நிச்சயமாக சகிக்க முடியாதவை.

துணி சோப்பு விற்பவர்கள் நமது குடுமபத்தலைவிகளின் புத்திசாலித்தனத்தை குறிவைப்பார்கள்.  உ.ம்        "அறிவாளிகள் எப்போதும் இந்த சோப்பை தேர்ந்தெடுப்பார்கள். நீங்கள் எப்படி..?" இது போல. இதுவே ஒரு தவறான அணுகுமுறை என்பேன் நான்.தனிப்பட்ட ஒருவரின் அறிவு நிலையை மறைமுகமாக
கேலி செய்யும் தந்திரம்.

ஆண்களுக்கான நுகர் பொருட்களாகிய சோப்பு, சென்ட், பாடி ஸ்ப்ரே ஆகியவையின் விளம்பர யுக்தி இன்னும் அநியாயமானது...இவை பெரும்பாலும் "இந்த சோப்பு/சென்ட் உபயோகித்தால் பெண்கள் உங்கள் பின்னால் அலைவார்கள்/தேடி வருவார்கள்", என்ற நோக்கிலேயே எடுக்கப்படுகின்றன.இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.ஆண்களையும், பெண்களையும், அவர்களின் தனி மனித ஒழுக்கத்தையும் சீண்டிப்பார்க்கும் கேவலமான வேலை இது.

இவர்கள் அனைவரையும் விட மோசமானவர்களாகவும் கண்டனத்திற்குரியவர்களாகவும் நான் கருதுவது இந்த சிகப்பழகு கிரீம்கள் விற்பவர்களைத்தான். முதலில் இந்த சிகப்பழகு என்ற வார்த்தையே தவறானது; இவர்களின் பொருளை விற்பதற்காக போலியாக உருவாக்கப்பட்ட ஒரு மாயை. உண்மையில் அழகு என்பது தோலின் நிறத்தில், உடல் அமைப்பில் இல்லவே இல்லை.அழகு என்பதன் அடிப்படை கூறுகள் முற்றிலும் வேறுபட்டவை. தனிப்பட்ட ஒரு ஆணின்/பெண்ணின் அழகு என்பது எதிராளியின் பார்வையைப் பொருத்தது. அழகுக்கு அளவுகோல் வைப்பதே முதலில் தவறான ஒன்று.


ஒவ்வொரு தேசத்திலும் வாழும் மக்களின் உருவ அமைப்பு,தோலின் நிறம், உணவுப்பழக்கம் ஆகியவை தட்பவெப்ப நிலைகளுக்கேற்பவும், பருவ நிலை மாற்றங்களைப் பொறுத்துமே அமைந்தன. இது இன்று நேற்று நிகழ்ந்ததல்ல பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனிதன் பரிணாம வளர்ச்சியில் மாற்றம்(முன்னேற்றம்) அடைந்து உணவுக்காகவும் நீருக்காகவும் இடம் மாற ஆரம்பித்த பொழுதே நிகழத்துவங்கியது. உ.ம் பூமத்திய ரேகைக்கு அருகில் - சூரியனின் நேரடி வெப்பம் படும் - பகுதிகளில் உள்ளவர்களின் கரு நிற தோல்.வெப்பத்தைத் தாங்க மெலனின் அதிகம் சுரப்பதால். துருவ -பனி பிரதேசங்களில் - சூரிய வெப்பம் குறைவான பகுதிகளில் உள்ளவர்களின் வெளிர் நிறத்தோல் - அதிக வெப்பமில்லாமையால் மெலனின் அதிகம் தேவைப்படாது - ஆதலால் வெளிர் நிறம்.
ட்ராப்பிகல் ரீஜியன் எனப்படும் அதிக குளிரும் - அதிக வெப்பமும் அல்லாத மித வெப்ப பகுதியில் வாழும் (நம் நாட்டைப்போன்ற) மக்களின் கருப்பும் வெளுப்புமல்லாத மாநிறம். (தகவல் உதவி : பேராசிரியை.திவ்யா குருநாதன்.)

ஆதலால் ஒருவர் கருப்பாகவோ / நிறக்குறைவாகவோ பிறப்பது அவர்களின் குற்றமல்ல.அது இயற்கை.இதை மாற்ற அந்த க்ரீமாலும் முடியாது.நாலு வாரம்...ஆறு வாரம் என்பதெல்லாம் அவர்களின் பொருள் விற்கும் தந்திரம்.இவற்றை நம்பி யாரும் காசைக்கரியாக்க வேண்டாம்.அழகு என்பதை நாமாக வரையறுத்துக்கொள்ள வேண்டாம்.இந்த பதிவை நான் எழுதக்காரணமே சென்ற வாரம் தொலைக்காட்சியில் கண்ட ஒரு புது ரியாலிட்டி ஷோ தான். கொஞ்சம் நிறக்குறைவாகவும், பருமனாகவும், கருப்பாக இருக்கும் பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை அழகாக மாற்றுகிறேன் என்று கேமரா முன்பு நிற்கவைத்து, " நான் அசிங்கமாக இருக்கிறேன், அழகாக மாற வேண்டும் " என சொல்லவைத்து, அழவைத்து...."நீங்க அதிகம் சாப்பிட்டதுனால தான் இப்படி இருக்கீங்க.அதனால் இனிமே குறைச்சு சாப்பிடுங்க" என அவமானப்படுத்தி... ஸ்ஸ்ஸ்....அப்ப்பா... அவர்கள் செய்த அட்டூழியத்திற்கு அளவே இல்லை.அதில் வந்த எந்த பெண்ணும் என் கண்களுக்கு அசிங்கமாகத் தெரியவில்லை.அழகாய்த்தான் இருந்தார்கள்.சமூகத்தில் கருப்பு என்றால் அசிங்கம் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயலும் இவர்களை எதனால் அடித்தால் தகும்...??

பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளியுங்கள்.
உங்கள் கருத்துகளையும் பின்னூட்டங்களையும் ஆவலுடன் எதிர்நோக்கும்
- சுதர்

3 கருத்துகள் :

வால்பையன் சொன்னது…

மெலனின் குறைபாட்டால் தோல் வியாதி வர வாய்ப்பிருக்கு தல!
அழகு கிரிமெல்லாம் ப்ளீச்சிங் பவுடராம்! தோல் அம்பேல் ஆகிரும்!

மகேஷ் : ரசிகன் சொன்னது…

நல்ல பதிவு!

நிறைய விளம்பரங்கள் ஒரு மார்க்கமாத் தான் இருக்கு. சிகப்பழகு க்ரீம் விளம்பரங்களும் ஆக்ஸ் டியோ விளம்பரங்களும் சுத்த மோசம்

சமுத்ரா சொன்னது…

நல்ல பதிவு!

Related Posts Plugin for WordPress, Blogger...